சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 12. திருநாட்கள்

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

குமரிமைந்தன்திருநாட்கள் எனப்படும் பெருநாட்கள் ஆண்டின் குறிப்பிட்ட நாட்களில் மக்களில் பெரும்பாலோரால் கொண்டாடப்படும் பண்டிகை எனப்படும் திருநாள்களே ஆகும். தமிழ்நாட்டில் இன்று பெருமளவில் கொண்டாடப்படுபவை தைப்பொங்கல். சித்திரைப் பிறப்பு, ஆடிப்பிறப்பு, ஆடி முழுக்கு, பிள்ளையார் சதுர்த்தி, ஆயுத பூசை எனப்படும் பூசையெடுப்பு, திருக்கார்த்திகை, தீபாவளி, மார்கழி நோன்பு மற்றும் மாதந்தோறும் கார்த்திகை, வெள்ளுவா, காருவா நாட்கள் முதலியவாகும். இவற்றில் தமிழகத்தில் உள்ள மேல்சாதியினர் சித்திரைப் பிறப்பு, பூசையெடுப்பு, தீபாவளி, மார்கழி நோன்பு, பிள்ளையார் சதுர்த்தி மாதந்தோறும் கார்த்திகை, வெள்ளுவா, காருவா நாட்கள் முதலியவற்றில் அதிக நாட்டம் செலுத்துகின்றனர். நாட்டுப் புறங்களிலுள்ள கீழ்ச்சாதி மக்கள் தைப்பொங்கல், ஆடிப்பிறப்பு, ஆடி முழுக்கு, திருக்கார்த்திகை ஆகிய திருநாள்களைக் கொண்டாடினாலும் முதன்மை கொடுப்பதில் வேறுபாடு உண்டு. இவை தவிர வேளாளர்கள் போன்ற சில குறிப்பிட்ட சாதியினர் கார்த்திகை நோன்பு போன்ற திருநாட்களைக் கடைப்பிடிக்கின்றனர்.

மேற்சாதியினர் கொண்டாடும் திருநாட்களாகிய சித்திரைப் பிறப்பு பொதுவாக வாணிகர்களுக்குப் பயன்படுகிறது. பழைய கணக்கை முடித்துப் புதுக் கணக்கைத் தொடங்குவதற்கு இந்நாள் பயன்படுகிறது. அதே வேளையில் ஆடி இறுதியை ஆண்டு இறுதியாகக் கணக்கிட்டு துணி வாணிகர்கள் “ஆடிக்கழிவு” விற்பனை என்ற பெயரில் அண்மைக் காலத்தில் தொடங்கி உள்ளனர். கேரளத்தில் உள்ள கொல்லம் ஆண்டு ஆவணி மாதத்தில் பிறப்பதால் அதைப் பின்பற்றி இதைச் செய்கிறார்கள் போலும். மேலும் தமிழர்களுக்கு ஆங்கில ஆண்டு போன்று தொடர்ச்சியான ஓர் ஊழிக் கணக்கு இல்லாமல் வெறும் அறுபதாண்டுச் சுழற்சியே இருப்பதால் புதிதாகத் தோன்றி இருக்கும் இந்து மத இயக்கங்கள் இந்த மலையாளக் கொல்லம் ஆண்டைப் பிடித்துள்ளன. தமிழ்நாட்டுப் புலவர் குழு ஆய்வு செய்து அரசாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தை மாதத்தில் தொடங்கப்படும் திருவள்ளுவர் ஆண்டைக் கடைப்பிடிப்பதை விட வெளியிலிருந்து வரும் ஆண்டே இவர்களுக்கு உகந்ததாய் இருக்கிறது.

இது தவிர ஆடி மாதப் பிறப்பிலும் ஒரு திருநாள் கொண்டாடப்படுகிறது. இது தை மாதம் தொடங்கும் ஆண்டோடு தொடர்புடையதாகும். கதிரவனின் வடபாற் செலவின் தொடக்கத்தையும் ஆண்டுப் பிறப்பையும் தை முதல் நாள் குறிப்பிடுவது போல் அதன் தென்பாற் செலவை இத்திருநாள் குறிக்கிறது.

பூசையெடுப்பு எனவும் நவராத்திரி எனவும் வழங்கப்படும் தொள்ளிரவுப் நாட்டுப் புறங்களில் எளிமையாகவும் நகர்ப்புறங்களில் பார்ப்பனர்களாலும் வேறு சில சாதியாராலும் குறிப்பாகத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியத் தேசிய இயக்கத்தின் தோற்றத்தின் பின் உருவான தொழிற்சங்கங்களைப் பின்பற்றி ஆயுத பூசை என்ற பெயரில் எல்லா அலுவலகங்களிலும் இது அரசு விழாப் போலக் கொண்டாடப்படுகிறது. அலுவலகங்களிலுள்ள அலுவலக உதவியாளர்கள் எனப்படும் கடை நிலை ஊழியர்கள் குறிப்பேடு போட்டு பணம் திரட்டி இவ்விழாவைக் கொண்டாடி மிகுந்த பணத்தைத் தமக்குள் பங்கிட்டுக் கொள்வதால் இப்பணத்துக்காக இவ்விழா விடாமல் ஆண்டுதோறும் அலுவலகங்களில் கொண்டாடப்படுகிறது. அங்கு இது தொள்ளிரவு (நவராத்திரி) என்று வழங்கப்படுவதற்குப் பகரம் பதினிரா (கருநாடகத்தில் தசரா, வங்காளத்தில் விசயதசமி) என அழைக்கப்படுகிறது. ஒரு வேளை இந்தப் பத்தாவது இரவு பின்னால் சேர்க்கப்பட்டதாயிருக்க வேண்டும். சரசுவதி பூசை எனப்படும் கலைமகள் வழிபாட்டோடு துர்க்கை எனப்படும் கொற்றவை வழிபாடும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். விசயநகரப் பேரரசனாகிய கிருட்டினதேவராயரால் இத்திருநாள் சிறப்புப் பெற்றதாகத் தெரிகிறது.

தொள்ளிரவு அல்லது பதினிரா எனப்படும் பூசையெடுப்பு பெண் தெய்வங்களை வழிபடுவதாகவே உள்ளது. பெண்ணாட்சி ஒழிக்கப்பட்டு ஆடவராட்சி நிலைப்பட்ட பின்னரும் அவ்வப்போது பெண் எழுச்சி இயக்கங்கள் உருவாகி உள்ளன. புதிய குமுக இயக்கங்கள் உருவாகும் காலங்களில் மக்கட்தொகையில் சரிபாதியினரான பெண்களின் துணையையும் ஆதரவையும் திரட்டுவதற்காக அவர்களது உரிமைகளை ஏற்றுக் கொள்வதற்கு அறிகுறியாக இவ்வணக்கங்கள் அவ்வப்போது உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன. பெண்பாலரான காரைக்காலம்மையார் எனும் புனிதவதியார் தான் சைவம் எனப்படும் சிவனியத்தின் தாய் எனுமளவிற்கு சிவனியக்குரவர்களில் மூத்தவர். (வாணிகர் குலத்தவரான இவரால் இவ்வியக்கம் வளர்ச்சி பெற்றதும் சம்பந்தர் போன்றோர் பூம்பாவை போன்ற வணிகர் குலத்தாரோடு இணங்கிச் சென்றதும் பின்னர் வாணிகர் சமயம் எனப்படும் சமணத்தை அது அழிக்கக் கிளம்பியதும் ஆன நிகழ்ச்சிகளின் பொருளியல் அரசியல் பின்னணிகளை வரலாற்றாசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.) அதே போல் ஆண்டாள் வைணவம் எனப்படும் மாலியத்துக்குக் கொடுத்த ஊக்கமும் உயர்வும் பெண்கள் அரசியல், குமுக இயக்கங்களில் அவ்வப்போது ஆற்றிய பங்கை நமக்குக் காட்டுகின்றன.

தீபாவளி என்பதற்கு விளக்குகளின் வரிசை என்பது பொருள். எனவே இதனை விளக்கணி விழா எனவும் அழைப்பர். ஆனால் உண்மையில் விளக்குக்கும் இதற்கும் தொடர்பேதும் இல்லை. இவ்விழாவின் தோற்றம் பற்றி பல கதைகள் உண்டு. சமண சமயத் தீர்த்தங்கரரான மகாவீரர் வீடு பேறடைந்த நாள் அது என்று சமணர்கள் கூறுகின்றனர். நரகாசுரன் என்பவனைக் கண்ணன் மனைவியும் நரகாசுரனின் தாயும் நிலத்தாயின் தோற்றரவுமான சத்தியபாமா கொன்ற நாள் என்று “இந்துப்” புராணம் கூறுகிறது. இந்தத் திருநாளில் மேற்சாதியினர். குறிப்பாகப் பார்ப்பனரும் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதோரும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். புத்தாடை புனைவதுடன் எண்ணெய் முழுக்கிட்டு வான வேடிக்கைகள் நடத்துவது இதில் சிறப்புக் கூறு. மேற்கூறிய சாதிகளில் திருமணத்திற்குப் பின்வரும் தலை தீபாவளி அன்று மணமக்களை விருந்துக்கு அழைத்து அவர்களுக்குப் புத்தாடையும் பிற சீர்வரிசைகளும் கொடுப்பது வழக்கம்.

மார்கழி நோன்பும் மேற்சாதிகளிடையில்தான் பெரும்பாலும் கொண்டாடப்படுகிறது. இது முன்பு தை மாதத்தில் கொண்டாடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் தங்களுக்கு வாய்க்கப் பெற வேண்டுமென்று வேண்டி பாவை ஒன்று சமைத்து அதன் முன் நோன்பிருப்பதால் பாவை நோன்பு என்றும் அழைக்கப்படும். வாணிகம், அரசூழியம் ஆகியவற்றின் வளர்ச்சியால் வேணாண்மையிலிருந்து விடுபட்டு வெளிச்சம் போட்டு வாழும் வாழ்க்கை சிலருக்கு வாய்க்கப் பெற்ற காலத்தில்தான் இத்தகைய நோன்பு உருவாகி இருக்க முடியும். எனவே இது மேற்சாதியினரிடம் மட்டுமே இருப்பதில் வியப்பில்லை. பிற்காலத்தில் பெண்கள் கண்ணனைக் கணவனாக அடைவதற்காக நோன்பிருப்பது போலவும் சிவனை அடைய நோன்பிருப்பது போலவும் முறையே திருப்பாவை, திருவெம்பாவை என்ற சமயப் பாடல்களை உருவாக்கினர். அதற்கு முன்பும் பாவைப் பாடல்கள் இருந்திருக்க வேண்டும். அவை இந்தப் பாவைப் பாடல்களால் வழக்கிழந்தனவா என ஆராய வேண்டும்.

பிள்ளையார் சதுர்த்தியைப் பற்றிக் குறிப்பிடும் முன் பிள்ளையாரின் வரலாற்றைக் கூறுவோம். பிள்ளையார் என்ற சொல் முதலில் தமிழகத்தில் முருகனையே குறித்தது. மூத்த தாயாகிய கொற்றவை (கொற்றம் + அவ்வை = கொற்றவை. கொற்றம் = வெற்றி; கொற்றவை = வெற்றியைத் தரும் அல்லது வெற்றி பெறுபவளாகிய தாய்)யின் மகனாகையால் அவனை முதியோள் குழவி என்றனர். இம் முதியொள் பின்னர் மூத்த தேவி எனப்பொருள்படும் மூதேவி எனப்பட்டாள். மூதேவி என்பது சிடுமூஞ்சியாயிருப்பவர்களை குறிக்கும் இழிவான அடைமொழியாக இன்று ஆகிவிட்டது. போர் வெற்றி குமுக மதிப்பிற்கு அடையாளமாக இருந்த காலத்தில் மூதேவி போற்றப்பட்டாள். பணம் மனிதனை இயக்கும் பொருளாகிப் போரில் சினந்து வெல்வதை விடப் பணத்தால் சிரித்து வெல்வது பெருமையுடையதாகக் கருதிய ஒரு குமுகத்தில் வெற்றித்தாய் மூதேவியென்றும் திருமகள் எனப்படும் செல்வத்தாய் சீதேவி என்றும் அழைக்கப்பட்டனர். திருவள்ளுவரும் முதேவியை இழிவாகவே குறிப்பிடுகிறார்.

“அவ்வித்(து) அழுக்காறு (உ)டையானைச்
செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும்”

மனம் கசப்புறும் அழுக்காறு உடையவனைச் செய்யவளாகிய திருமகள் தனக்கு மூத்தவளாகிய மூதேவியிடம் சேர்த்துவிடுவாள் என்பது இதன் பொருளாகும்.
இடைக்காலத்தில், குறிப்பாகப் பிற்காலச் சோழர்களின் காலத்தில் மூதேவி மூத்த தேவி என்ற பெயரில் மீண்டும் வணங்கப்பட்டிருக்கிறாள். அக்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் கையில் மலராத தாமரை மொட்டுடன் அவளது உருவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்பு மனிதனின் மிகப் பழைய ஆயுதமான கல்லாலான குண்டாந்தடி(கதை) உருமாற்றப்பட்டுத் தாமரை மொட்டாகியிருக்கிறது என்பது தெளிவு. ஆனால் நம் “முற்போக்கு” ஆய்வாளர்கள் இத்தாமரை மொட்டு இனப்பெருக்கத்தைக் குறிக்கும்; எனவே மூதேவி வழிபாடு வளமை வழிபாடு என்று கூறிப் பிடிவாதம் பிடிக்கின்றனர்.

இந்த மூத்தோளின் மகனான முருகன் வழிபாடு மகன் வழிபாடு என்று மாந்த நூலில் கூறப்படும் வகையில் அடங்கும். குமுகத்தில் தாய் வழியில் தலைமகனுரிமை, கேரளத்திலிருப்பது போல், தோன்றியமையையும் இவ்வழிபாட்டின் தோற்றம் குறிக்கும், தமிழ்நாட்டில் குறிப்பாகத் தென் மாவட்டங்களில் வணக்கப்படும் இசக்கி எனப்படும் இயக்கியும் தலைமகன் வழிபாட்டின் எச்சமே. ஒரு குடும்பத்திலுள்ள பெண்களில் யாருக்கு முதன்முதல் ஆண்மகவு பிறக்கிறதோ அவள் அடுத்த தலைவனின் தாய் என்ற பெருமைக்குரியவளாய் வணங்கப்பட்டதன் தொடர்ச்சியே இயக்கி வணக்கம்.

இயக்கியைப் பற்றிய கதையைக் காண்போம். இவளைப் பழவூர் இயக்கி என்று தென் மாவட்டங்களில், குறிப்பாகக் குமரி, நெல்லை மாவட்டங்களில் குறிப்பர். பழவூர் என்பது நெல்லை மாவட்டத்திலுள்ள ஓர் ஊர். பிற மாவட்டங்களில் பழையனூர் நீலி என்பர். பழையனூர் தென்னாற்காடு மாவட்டத்திலுள்ளது. இவ்வூர்கள் இரண்டில் ஏதோவொன்றில் இக்கதை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. கதைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் உள்ளன. ஒன்றின் படி ஒரு வாணிகன் தன் காதற்கிழத்திக்கு மனைவி இடையூறாக இருக்கிறாள் என்பதற்காக அவளைக் காட்டு வழியில் அழைத்துச் சென்று கொன்று விட்டான்; இறந்த பெண் பேயாக அக்காட்டில் அலைந்து கொண்டிருந்தாள்; ஒருமுறை அவன் அக்காட்டின் வழியே செல்லும் போது அவள் மனித வடிவில் ஒரு கைக்குழந்தையுடன் அவனைத் தொடர்ந்து சென்றாள். அருகிலிருந்த ஊரை அடைந்தவுடன் அவ்வூராரிடம் தன் கணவன் தன்னைக் குழந்தையுடன் கைவிட்டு வந்து விட்டதாகவும் தன்னை அவனுடன் சேர்த்து வைக்குமாறும் வேண்டுகிறாள். ஊரார் அவ்வாறே அவனை வற்புறுத்துகின்றனர். அவள் பேய் என்று வாணிகன் மறுத்துக் கூறியும் பயனில்லாத நிலையில் தன்னுயிர்க்கு அவ்வூரிலுள்ள 64 தலைக்கட்டு வேளாளர்களும் தம்முயிரைப் பிணையாக்க வேண்டுமென்கிறான். அவ்வாறே அவர்கள் ஒப்புக் கொள்ள அவன் அப்பேயுடன் ஊர் விடுதியில் தங்குகிறான். பேய் அவனைக் கொன்று போட்டு விட்டுப் போய் விடுகிறது. மறுநாள் காலை அவன் இறந்திருப்பதை அறிந்த 64 தலைக்கட்டுக்காரர்களும் தீயில் குதித்துத் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இன்னொரு கதையின்படி நீலி வாணிகனின் மனைவியல்ல; அவனது காதற் கணிகை. அவளிடம் அவள் தன் பொருளனைத்தையும் இழந்து வறியவனாகிவிட்ட நிலையில் நீலியின் தாய் அவனைத் துரத்தி விடுகிறாள். வாணிகனைப் பிரிய மனமில்லாத நீலியும் அவனைப் பின் தொடர்ந்து காட்டு வழியில் அவனை அடைகிறாள். வழியில் இரவில் தன் மடி மீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்த நீலியைத் தரையில் இறக்கிக் கிடத்துகிறான். எதிர்கால வாழ்வை நோக்கி அஞ்சியவனாக அவள் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று தானும் இறந்து போகிறான். மறு பிறவியில் வாணிகனாக அக்காட்டிலுள் வரும் போதுதான் நீலியின் பேய் அவனைத் தொடர்கிறது என்கிறது இக்கதை.

காதல் இதழில் அரு. இராமநாதன் எழுதிய கதையில் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்ட வாணிகனின் மனைவி நீலி நிறை சூலி. அவள் கிணற்றிலுள் முழுகி இறக்கு முன்பே குழந்தையும் பிறந்து அவளோடு இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது. முதல் கதையில் வாணிகனின் மனைவி என்று காட்டிக் கொள்வதற்காகக் கள்ளிச் செடியொன்றின் கொழுந்தைக் கிள்ளிக் குழந்தையாக்கிக் கொண்டது பேய் என்று கூறப்படுகிறது. எனவே குழந்தை இருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் 64 தலைக்கட்டினர் மாண்ட பின்னர் அவ்வூரினர் பல்வேறிடங்களுக்குக் குடிபெயர்ந்து சென்றனர். அவர்கள் இன்றும் இக்கதையைக் கூறுவதுடன் நீலியை வழிபட்டும் வருகின்றனர். எனவே இக்கதையில் ஏதோ ஓர் உண்மை இருக்கக் கூடும். கொல்லப்பட்டவளாகக் கருதப்பட்ட நீலி உயிர் பிழைத்திருந்து தன் கணவனை அப்பிறவிலேயே பழிவாங்கியிருக்கக் கூடும்.

இவ்வாறு கணவனைப் பெண்கள் கொலை செய்வது நம் இலக்கியங்களில் ஒன்றும் புதிதில்லை. மலையிலிருந்து பிடித்துத் தள்ளிக் கொல்ல இருந்த தன் கணவனைத் தானே முந்தித் தள்ளிக் கொன்றாள் தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியின் கதைத் தலைவி.[1] இதனால் அவள் “தற்கொல்லியை முற்கொல்லி” என்ற பட்டமும். பெற்றாள். அதே போல் நீலி என்ற பெயரும் நமக்குப் பழக்கமானதே. நீலி, காளி, துர்க்கை, குமரி எனப்படுபவை கொற்றவையின் பெயர்கள். அத்துடன் சிலப்பதிகாரத்தில் கோவலனின் முற்பிறப்பில் அவனைச் சபித்தவளாகக் கூறப்படுபவள் பெயரும் நீலியே.

பழையனூர் நீலி மறுபிறவியில் பெண்ணாகப் பிறந்து சமணத் துறவியாகி சமயப் பணியாற்றியதாக நீலகேசி காப்பியம் கூறும்.

பழையனூர் கதையில் கூறப்பட்டிருக்கும் குழந்தை தென் மாவட்டங்களில் காணப்படும் இயக்கியின் உருவத்தில் காணப்படும் குழந்தை உருவத்துக்கு ஏற்பப் புனையப்பட்டதாக இருக்க வேண்டும். இவ்வுருவங்கள் ஓட்டை உருவங்கள் எனப்படும். மண்ணால் உள்ளே பொள்ளலாகச் செய்யப்பட்டு சுடப்பட்ட இவ்வுருவங்கள் ஆங்கிலத்தில் Terra cotta எனப்படும் சுடுமண் உருவங்களாகும். கையிடுக்கில் ஒரு குழந்தையை இடுக்கிக் கொண்டு மறு கையைத் தலைக்கு மேல் தூக்கியது போல் இது அமைந்திருக்கும். கைகள் மணிக்கட்டோடு முடிந்திருக்கும். தலைமீது தூக்கிய கையில் ஆயுதம் ஒன்றைத் தூக்கிய சாயல் தெரியும். இந்த ஆயுதம் நாம் முன்பு மூதேவியின் கையிலிருப்பதாகக் குறிப்பிட குண்டாந்தடியாக இருக்கவேண்டும். தலையில் மலைவாழ் மக்களைப் போன்ற தலை அலங்காரம் தெரியும். எனவே இது கொற்றவையின் அதாவது தலைமகன் தாயாகிய வெற்றித் தெய்வத்தின் உருவாகவே இருக்க வேண்டும். பழந்தமிழர் இயக்கியைக் கொடியவளாகக் காணவில்லை. “பூங்கண் இயக்கி” என்கிறார் இளங்கோடிகள் (அடைக்கலக்காதை 116). கொற்றவையையும் அவ்வாறே தாய்மையும் கொடுமையும் ஒருங்கே படைத்தவளாகக் காட்டுகிறார் (வேட்டுவ வரி 54-74). பெண் தம் வழியினரைக் காக்கும் தெய்வமாகவும் மாற்றாரையும் எதிரிகளையும் கொன்று இரை ஆக்கும் நரவுண்ணியாகவும் (Cannibal) இருந்தமையையே இது காட்டுகிறது.

மேலும், இவ்வியக்கிக் கோயில்களில் குழந்தை வேண்டி வழிபடுவோர் குழந்தை பிறந்தால் தொட்டில் கட்டுவதாக நேர்ந்து குழந்தை பிறந்த பின் கட்டிய தொட்டில்கள் ஏராளமாகக் காணப்படும். எனவே குழந்தைக்கும் இத்தெய்வத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது புலப்படும். இவ்வாறு தலைமகனையும் தாயையும் ஒருசேரக் குறிப்பிடும் மிகத் தொன்மையான இந்த வழிபாட்டுடன் நீலி வழிபாடும் எப்போதோ இணைந்திருக்க வேண்டும்.

இயக்கி சமண சமயத்தில் நான்கு காவல் தெய்வங்களுள் ஒன்று. எனவே சமண சமயத்தில் பின்னர் தோன்றிய நீலியும் அத்துடன் இணைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு சமயமும் தனக்கு முன்பிருக்கும் மக்கள் தெய்வங்களைத் துணைத் தெய்வங்களாக்கி மக்களை ஈர்ப்பது நடைமுறை. அவ்வாறே இயக்கி, சாத்தன் முதலிய தெய்வங்கள் தமிழகத்தில் ஊன்றிய சமயங்கள் அனைத்திலும் இடம் பெற்றுள்ளன. குழந்தையோடுள்ள தாய்த் தெய்வத்தின் எச்சமாகவே உரோமில் மேரி வணக்கம் உருவாக்கப்பட்டதாகவும் கூறுவர்.

இவ்வாறு தலைமகன் வழிபாட்டைக் குறிப்பிடும் கொற்றவை மகனாகிய முருகன் பின்னர் பெண் தலைமை ஒழிக்கப்பட்டு ஆண் தலைமை ஏற்பட்ட போது சிவன் மகனாக்கப்பட்டான். தாயின் வயிற்றில் அன்றி ஆற்றில் அல்லது பொய்கையில் சிவனின் விந்து சிந்தியதால் பிறந்தான் என்ற கதையும் தாய்மையின் தலைமையை வீழ்த்த எழுந்ததே.

பெண் தலைமை முறியடிக்கப்பட்ட பின் வழிபாட்டு முறைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் சில எச்சங்கள் இன்றும் நிலவுகின்றன. சில கோயில்களில் பூசாரிகள் சேலை உடுத்திக் கொண்டுதான் பூசை செய்கின்றனர். இன்றும் நாட்டுப்புற அம்மன் கோயில்களில் பூசாரிகள் சிவப்பு உடை உடுத்தியே பூசை செய்கின்றனர்.

இந்தச் சிவப்பு ஆடை பெண்களின் மாதவிடாய்க் குருதி பட்ட சேலையைக் குறிக்கும். பெண் தலைமைக் குமுகத்தில் மாதவிடாய் தெய்விகமானதாகவும் மாதவிடாய்க் காலத்தில் பெண் தெய்வத் தன்மையுடையவளாகவும் கருதப்பட்டாள். எனவே தான் இன்றும் இவ்வம்மன் கோயில்களில் அம்மனுக்குச் சிவப்புச் சேலை வாங்கிச் சார்த்தி அதைத் திரும்பப் பெற்று வீட்டில் வைத்து வணங்குகின்றனர். பழங்காலத்தில் இவ்வம்மன்களை மாதவிடாயிலிருக்கும் பெண்களே பூசை செய்தனர். பெண் மாதவிடாயிலிருக்கும் போது தெய்விகமானவளாகக் கருதப்பட்டதால் அவளுடன் உடலுறவு கொள்வதும் தவிர்க்கப்பட்டது; இன்று அதற்கு நேர் எதிரான காரணத்தால் அது தவிர்க்கப்படுகிறது. இன்று ஆண், பெண் வேறுபாடின்றி “இந்துக்கள்” நெற்றியில் இட்டுக் கொள்ளும் குங்குமப் பொட்டு முன்பு மாதவிடாய்க் குருதியை நெற்றியில் இட்டதின் எச்சமே. மஞ்சள் நெய் எனப்படும் சிவப்பான குழம்புக்கும் இதே குறிதகவு தான். புகழ் பெற்ற குமரி மாவட்ட முப்பந்தல் இயக்கிக் கோவிலில் மஞ்சள் நெய் வழங்கப்படுகிறது.

இப்படி மகன் வழிபாட்டைக் குறிக்கும் முருகன் பிள்ளையார் எனப்பட்டான். பின்னர் வாதாபிப் போரின் போது வாதாபிக் கோட்டை வாயிலிலிருந்து பரஞ்சோதியால் கொண்டு வரப்பட்ட ஆனை முகனும் சிவனின் பிள்ளையாகக் கூறப்பட்டதால் அவனை மூத்த பிள்ளையார் என்றும் முருகனை பிள்ளையார் என்றும் அழைத்தனர். பின்னர் பிள்ளையார் என்ற பெயர் முற்றிலும் ஆனைமுகனுக்கே உரிமையானது.

இன்று பிள்ளையார் எனப்படும் வினாயகனுக்கு கணபதி, விக்கினேசுவரன் என்ற பெயர்களும் உண்டு. இப்பெயர்க் காரணங்களையும் அவை காட்டும் வரலாற்றுச் செய்திகளையும் காண்போம்.

கணபதிகள் என்று ஒன்றுக்கு மேற்பட்ட தெய்வங்கள் இருந்திருக்கின்றன. கணங்கள் எனப்படுபவை குக்குலங்களின் உட்பிரிவுகளுக்குரிய பெயராகும். அக்கணங்களின் தலைவர்கள் கணபதிகள் எனப்பட்டனர். கணங்களில் தலைவர்கள் கணங்களின் தோற்றக்குறி (Totem) எனப்படும் விலங்குகளின் வடிவிலும் பின்னர் மனித விலங்கு வடிவிலும் (Theriomorphic) பின்னர் மனித வடிவிலும் (Anthropomorphic) வணங்கப்பட்டனர். இக்குறிகள் அதே வடிவில் அதற்குரியோரின் ஆட்சியில் அவர்கள் கொடியாகவும் பயன்பட்டன. மீன், வேங்கை, பன்றி, காளை, சிங்கம் எனப்படும் அரிமா, யானை, கோழி போன்றவை இக்குறியிலிருந்து தோன்றிய கொடிகளே. உறையூர் எனப்படும் கோழியூரில் யானை ஒன்றைச் சேவல் ஒன்று எதிர்த்து வெற்றி கொண்டது என்று தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகிறது.

“முறஞ்சிறை வாரணம் முன்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம்……….”

என இதைக் குறிக்கிறார் இளங்கோவடிகள்.[2] இவ்விரண்டு உயிரிகளையும் கொடிகளாகக் கொண்ட படைகள் இவ்வூரில் போரிட்டமையே இக்கதையால் குறிக்கப்பட்டது.

மகதப் பேரரசு போன்ற பேரரசுகள் உருவான போது அவற்றின் வளர்ச்சிக்குக் குக்குல வாழ்வு நிலையிலிருந்த கணங்கள் பெரும் இடையூறாயிருந்தன. எனவே அவற்றை அடக்கி ஒடுக்கி அழிப்பது அவர்களது முகாமையான பணியாயிருந்தது. அர்த்தசாத்திரம் எனப்படும் பொருள் நூலை எழுதிய சாணக்கியர் கணங்களை உட்புகுந்து குலைத்து வலுவிழக்கச் செய்யும் உத்திகளைத் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு குக்குலங்களைத் தாக்கிய பேரரசினர் அவர்களது தெய்வங்களாகிய கணபதிகளை விக்கினங்களாக அதாவது தடைகளாகக் கருதினர், எனவே அவற்றை விக்கினேசுவரர் என்று இழிவுபடுத்தினர். இவ்வாறு கணபதிகள் இழிவு படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டனர்.

பேரரசுகள் எழுவதும் அழிவதும் வரலாற்றில் நடைபெற்று வரும் தொடர் நிகழ்ச்சி, அவ்வாறு புதிதாகத் தோன்றிய ஒர் அரசை உருவாக்கிய மக்கள் தம் கணபதியாகிய ஆனைமுகத்தானாகிய மனித விலங்கு வடிவக் கடவுளைப் போற்றினர். தக்காணத்தில் தோன்றிய ஒரு பேரரசே அதுவாகும். சாளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசியின் கொடி பன்றியாயிருந்தாலும் அவனது படையில் யானைகளின் எண்ணிக்கையே பெரும் வலிமை. இவ்வாறு கணபதியாக மட்டுமல்ல படைக் கருவியாக, போரில் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி என்ற வகையிலும் யானை வணக்கத்துக்குரியதாகிறது. ஆனை முகத்தானின் இரண்டு கொம்புகளில் ஒன்று ஒடிந்திருப்பதைக் காணலாம். இதற்குப் பல தொன்மச் சாக்குப் போக்குகள் கூறப்படுகின்றன. வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதத் தொடங்கிய ஆனைமுகன் மேருவை ஏடாகக் கொண்டு எழுத்தாணிக்குத் தன் கொம்புகளிலொன்றை ஒடித்தெடுத்துக் கொண்டாராம். போரில் எதிரியின் கோட்டையைத் தாக்கும் போது கொம்பு முறிந்த யானையை இது குறிக்கிறதென்பதே சரியான விளக்கமாகும். கழக இலக்கியத்திலும் கொம்பு முறிந்த யானை பற்றிய இது போன்ற காட்சிகள் பல உண்டு.

இவ்வாறு தான் குதிரையும் இந்தியப் பண்பாட்டில் இடம் பெறுகிறது. உழைப்புக்கு மாட்டையே பயன்படுத்தும் நம் நாட்டில் குதிரையை ஐரோப்பாவைப் போல் உழைப்புக்குப் பயன்படுத்தாமல் போருக்கு மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். முரட்டுத்தனம் மிக்க குதிரை மீதமர்ந்து உயிரைப் பணயம் வைத்து எதிரி மீது பாய்ந்து அழிப்பதற்கு அது நல்ல கருவியாகப் பயன்பட்டது. ஆண்மையையும் வீரத்தையும் வெற்றியையும் குறிப்பதாகக் கருதப்பட்ட அதன் உடலுடன் மகப்பேற்றுக்கான புத்திரகாமேட்டி யாகத்தில் அரசிகள் உடலுறவு கொண்டனர். ஒருவன் பேரரசனாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்காகச் செய்யப்படும் அசுவமேதயாகம், இராச சூய யாகம் முதலியவற்றில் குதிரை மாற்றார் நாடுகளில் அவன் படைகளுக்கு முன்னால் நடத்திச் செல்லப்பட்டது. தேர்களில் பூட்டப்பட்ட இரட்டைக் குதிரைகள் அசுவனி தேவர்கள் என்ற தெய்வ வடிவமும் பெற்றன. இந்த இரட்டைக் குதிரைகளைத் தேவர்களின் மருத்துவர்கள் எனவும் போற்றினர். மாட்டு வேள்வி முறியடிக்கப்பட்ட நிலையில் அரசர்களால் புதுப்பிக்கப்பட்ட வேள்வியைப் பற்றி வடமொழி நூலென்று குறிப்பிடுவதாவது”

“யாகம் ‘நான் இனி உங்களுக்கு உணவாக மாட்டேன்’ என்று கூறிக் கடவுள்களை விட்டகன்றது. ‘கூடாது, நீ எங்கள் உணவாக இருக்க வேண்டும்’ என்றனர் கடவுள்கள். கடவுள்கள் அதனைத் தகர்த்தார்கள்; அவ்வாறு பிய்த்தெடுக்கப்பட்டதால் யாகம் அவர்களுக்குப் போதியதாயிருக்கவிலலை. ‘பிய்த்தெடுக்கப்பட்ட யாகம் நமக்குப் போதியதல்ல் எனவே வாருங்கள், யாகத்தை மீண்டும் ஒன்றாக்குவோம்’ என்றனர் கடவுள்கள். மற்றவர்கள் ‘அப்படியே ஆகட்டும்’ என்றனர். அவர்கள் அதை ஒன்று சேர்த்தனர். ஒன்று சேர்த்த பின் அசுவினிகளைப் பார்த்து ‘இதைக் குணப்படுத்துங்கள்’ என்றனர்; அசுவினிகள் கடவுள்களின் மருத்துவர்களாவர், எனவே அவர்கள் இருவரும் கடாரத்தில் (கொப்பரையில்) அவற்றைத் திரட்டினர், ‘பிரமனே நாங்கள் பிரவர்கியா பலியிடத் தொடங்குகிறோம் ……..’ என்றனர்.[3]

எனவே மாட்டு நாகரிகம், குதிரை நாகரிகம் என்பவற்றை முறையே திராவிட நாகரிகம், ஆரிய நாகரிகம் எனப் பிரிக்க முடியாது. மாறாக இரண்டு நாகரிகக் கட்டங்களைக் குறிப்பனவாகவே அவற்றைக் கொள்ள வேண்டும்.

விக்கினங்கள் எனப்படும் தடைகளை உண்டாக்குபவன் என்று ஒதுக்கப்பட்டு இழிவு படுத்தப்பட்ட கணபதி பின்னர் விக்கினங்களை அகற்றுபவன் என்று புகழ்ந்தேத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி மூதேவியைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு நேர் எதிரானது. அங்கு புகழ்பெற்ற ஒரு தெய்வம் இழித்து ஒதுக்கப்படுகிறது.

சாளுக்கியனான இரண்டாம் புலிகேசியின் தலைநகரான வாதாபியிலிருந்து ஆனைமுகன் கொண்டு வரப்படு முன்பே நம் நாட்டில் ஒருவகை யானை வழிபாடு இருந்தது. இந்திரனின் ஊர்தியான வெள்ளை யானைக்குப் புகார் நகரில் கோயிலிருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. அது மட்டுமல்ல குறிஞ்சித் தெய்வமான முருகனின் ஊர்தி யானையாக இருந்தது.

“பிணிமுக(ம்) மேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம்”
(சிலம்பு, குன்றக்குரவை, செய்யுள் 8, நாட்டார் உரை)

என்ற அடிகளுக்கு உரை எழுதும் போது ‘சேயுயர் பிணிமுகம் ஊர்ந்து (அ)ம(ர்) உழக்கி’ என்புழிப் பரிமேலழகரும், ‘ஓடாப் பூட்கைப் பிணமுகம் வாழ்த்தி’ என்புழி நச்சினார்க்கினியரும் பிணிமுகம் முருகக் கடவுள் வரும் யானை என்பர். முருகற்கு யானையும் ஊர்தியாதல் பரிபாடல், பதிற்றுப்பத்து முதலியவற்றால் அறியப்படும் என்று ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் கூறுகின்றார். ஒரு தெய்வத்துக்கு ஊர்தியாக விளங்கும் ஏதோ ஒரு விலங்கு அத்தெய்வத்தை வணங்கும் மக்களின் தோற்றக் குறியாக இருக்க வேண்டும் அல்லது அம்மக்களால் வெல்லப்பட்ட இன்னொரு மக்களின் தோற்றக் குறியாக இருக்க வேண்டும். கோழியூரைப் பற்றிய கதையில் நாம் குறிப்பிட்டது போல் கோழிக் கொடியைக் கொண்டிருந்த ஒரு படை யானைக் கொடியைக் கொண்டிருந்த இன்னொரு படையை வென்றதன் விளைவாக கோழிக் கொடியை உடைய முருகனுக்கு யானை ஊர்தியாகியிருக்கலாம். இன்னொரு வகையில், வள்ளி திருமணம் பற்றிக் கூறப்படுவதிலிருந்து யானையை முதன்முதல் வசக்கியவன் என்பதற்கு அறிகுறியாக அது அவன் ஊர்தியாகியிருக்கலாம். ஆனால் வாதாபி கணபதி தமிழகத்துக்கு வந்து அவன் சிவனின் மூத்த மகன் என்ற பொருளில் “மூத்த பிள்ளையார்” என்று அழைக்கப்பட்ட பின்னர் தம்பிக்கு அண்ணன் ஊர்தியாயிருக்க முடியாதாகையால் தம்பியின் ஊர்தி மயிலாயிற்று. பிணிமுகம் மயில் என்று உரை கூறப்பட்டது.

இவ்வாறு பிள்ளையார் என்றழைக்கப்பட்ட முருகனிலிருந்து பிரித்தறிவதற்காக மூத்த பிள்ளையார் என்றழைக்கப்பட்டுப் பின்னர் பிள்ளையார் என்ற பெயருக்கு முழு உரிமையும் பெற்றது ஆனைமுகத் தெய்வம். மூத்த பிள்ளையார் இரட்டை மணிமாலை என்றொரு நூலும் கூட இயற்றப்பட்டுள்ளது. நாளடைவில் பிள்ளையார் தமிழகத்தின் புலவர்களைக் கவர்ந்த தெய்வமானார். நூல் எழுதுவோர் அனைவரும் “கணபதி துதி” “வினாயகர் துதி”, “பிள்ளையார் வாழ்த்து”க் கூறியே தம் நூலைத் தொடங்கினர். நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியோரும் “தொந்திக் கணபதி”யை வாழ்த்தியே தம் பாடல்களைப் பாடுகின்றனர். இத்தகைய புகழுக்குக் காரணம் யாது?

ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு. முதலாவது காரணம், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் தொழத் தடை செய்யப்படாத தெய்வம் பிள்ளையார் மட்டும் தான். தெய்வீகமாகக் கருதப்பட்ட மாதவிடாய்க் காலம் ஒதுக்கப்படத்தக்கதாக மாறிய நேரத்தில் பெண்களிடையில் பிள்ளையார் இவ்வாறு செல்வாக்குப் பெற்று கிணற்றின்கரை, குளக்கரை, ஆற்றின்கரை ஆகிய குளியல் துறைகளில் இடம் பெற்றார். இரண்டாவது காரணம், சாதி வேறுபாடின்றி வணங்கத் தக்க தெய்வமாகவும் பிள்ளையார் இருந்தது. மூன்றாவது காரணம் “உள்ளூர் தெய்வத்துக்கும் வெளியூர்க் குளத்துக்கும் அஞ்ச வேண்டும்” என்பதற்கு ஏற்ப வெளிநாட்டிலிருந்து வந்த பிள்ளையார் அச்சந்தரும் தெய்வமல்ல. எனவே கண்ட இடங்களில், குறிப்பாக பொது நிலங்களைக் கைப்பற்றுவதற்காகப் பிள்ளையார் சிலையை நிறுவுவதற்காக இன்னோரிடத்தில் இருந்து சிலையைத் திருடவும் எங்கு வேண்டுமானாலும் வைக்கவும் வழியிருந்தது. பிள்ளையார் எவருக்கும் குல தெய்வமாகவோ குடும்பத் தெய்வமாகவோ இல்லாததால் அவரை இவ்வாறு கையாள்வதில் சிக்கல்கள் எழவில்லை. அத்துடன் கோட்டைகள் எனும் தடைகளாகிய “விக்கினங்களை”த் தகர்த்துப் படைக்கு முன் நடந்து வெற்றியைக் கைப்பற்ற உதவிய யானையை “கணபதி” என்ற கருத்துருவின் வடிவமாகவும் விக்கினங்கள் எனும் தடையாயிருந்து இப்போது அவற்றைத் தகர்த்து வழி காட்டும் விக்கினக் கடவுளாகவும் கொண்டனர். அதனால் தான் ஆனைமுகனை நோக்கி நம் நாட்டுப்புறக் கதைப் பாவலர்கள் “முன் நடவாய்” என்று வேண்டுகின்றனர். எந்த நிகழ்ச்சியிலும் பிள்ளையார் பிடிப்பதும், எழுதும்போது கூட பிள்ளையார் சுழிபோடுவதும் வழக்கமாகி விட்டன. “ஓம்” என்ற வடிவத்துக்குக் கூடப் பிள்ளையார் வடிவத்தை மூலமாக்கிக் கூட்டுகின்றனர்.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிள்ளையார் என்ற பெயரில் சாணியையோ அரைத்த மஞ்சளையோ பிடித்து வைக்கின்றனர். இது ஒருவேளை ஆனைமுகன் வரவுக்கு முந்திய பழக்கமாய் இருக்கலாம். “பிடித்தால் பிள்ளையார், பிடிக்கா விட்டால் சாணி” என்றொரு பழமொழியும் உண்டு. முன்பு இலிங்க வடிவத்தைப் பிடித்து வைத்தது பின்னர் பிள்ளையார் என வழங்கப்பட்டுமிருக்கலாம்.

பிள்ளையார் நான்காம் பிறை நிலவின் நிழலைத் தண்ணீரில் கண்டு உடைத்த தேங்காய் என்று அதை எடுக்க முயலும் போது நிலவு அவரைப் பாhத்துச் சிரித்ததாகவும் பிள்ளையார் சினங்கொண்டு “நான்காம் பிறையைப் பார்ப்பவர்களுக்குத் தீங்கு நேரட்டும்” என்று சாவித்ததாகவும், நிலவு இரந்து வேண்டிக் கொண்டதன் பேரில் “பிள்ளையார் சதுர்த்தியன்று நிலவைப் பார்ப்பவர்களுக்கு நன்மை உண்டாகட்டும்” என்று கூறியதாகவும் ஒரு கதை பிள்ளையார் சதுர்த்தியைப் பற்றிக் கூறப்படுகிறது.
முகம்மதியர்களின் ஆட்சியில் பிள்ளையார் சதுர்த்தியன்று இந்துக்கள் பிள்ளையாரை யாரும் அறியாமல் வழிபட்டு மறுநாட் காலையில் ஆற்றிலோ, கிணற்றிலோ, குளத்திலோ எறிந்துவிடுவது வழக்கமாம். அதன் நினைவாகப் பாலகங்காதர திலகர் என்ற பழமைத் தலைவர் மராத்தி மாநிலத்தில் உயிர்ப்பித்த இந்த இயக்கம் வளர்ந்து இந்தியத் தேசியப் பேராயக் கட்சியாலும் தொழிற் சங்கங்களாலும் தமிழகத்தில் பரவலாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிள்ளையார் சதுர்த்தி ஒரு மேற்சாதிப், பார்ப்பனிய, வெள்ளாளக்கட்டினர் விழாவாக விளங்குகிறது. கீழ்ச் சாதியினர் அதைச் சிறப்பாகக் கொண்டாடுவதில்லை.

மாதந்தோறும் ஒன்றோ பலவோ நோன்புகள் இருப்பது மேற்சாதியினரின் வழக்கம். அவ்வாறு நோன்பிருப்பது உடல் நலனுக்கு உகந்தது என்று கூறப்படுகிறது. நோன்புச் இருப்போர் பகலில் உணவைத் தவிர்த்து இரவில் மட்டும் உண்பர். ஆனால் அவ்வாறு உண்ணும் போது வடை, பாயசம் எனப்படும் அக்கார வடிசில் ஆகியவற்றுடன் பிற நாட்களுக்கும் அதிகமாகவே உண்பர். இவ்வாறு நோன்பு இருப்பவர்கள் எவ்வித நோயில் இருந்தும் விடுபட்டவர்களாகத் தெரியவில்லை. மாறாக அன்றாடம் உழைக்கும் கீழ்ச்சாதி மக்களுக்கு நோன்பு தேவையில்லை. அவர்களது உழைப்பும் வறுமையும் அதிகத் தீனியினால் ஏற்படும் நோய்களாகிய இரத்ததக் கொதிப்பு, இருதய நோய் எனப்படும் நெஞ்சாங்குலை நோய், நீரிழிவு, நீரில் அதிக உப்பு முதலிய நோய்களிலிருந்து அவர்களைக் காக்கின்றன. இருந்தாலும் கோயில்களில் நேர்த்திக் கடன் செலுத்தும் போது மட்டும் புலால் உணவு போன்றவற்றை விலக்கி அவர்கள் நோன்பு இருக்கிறார்கள்.

இவற்றிற்கு மாறாகக் கீழ்ச்சாதி மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் திருநாட்களில் தைப்பொங்கல் முகாமை ஆனது. தமிழகத்தின் பெரும்பான்மை மக்களான நாட்டுப்புற மக்கள் அனைவரும் விதிவிலக்கின்றிக் கொண்டாடும் திருநாள் இது. ஓராண்டில் வேளாண்மை முடிந்து அறுவடை செய்து தவசங்களும் (தானியங்களும்) கரும்பும் மஞ்சளும் இஞ்சியும் களத்துக்கு வந்து வீட்டை அடைந்த நிலையில் புத்தரிசி அல்லது புதுச் சோறு உண்ணும் நாளாக இது அமைகிறது. அத்துடன் கதிரவன் வடபால் பயணத்தைக் குறிக்கும் ஆண்டுப் பிறப்பாகவும் அது முற்காலத்தில் இருந்திருக்கிறது. நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் அப்போது தான் புத்தாடை புனைகிறார்கள்; மாடுகளைக் கொம்பு சீவி வண்ணமிட்டு வண்டிகளைச் சோடித்து மாட்டுவண்டிப் போட்டிகள், சல்லிக்கட்டு முதலியவை நடத்துவர். தெருக்கூத்து, நாடகங்கள், ஆடல்கள், பாடல்கள் நடத்துவர். உறவினர்களையும், நண்பர்களையும் கண்டு வருவர்.

இவ்வாறு கீழ்ச்சாதி மக்களால் கொண்டாடப்படுவதால் நிலக்கிழார்களாகிய மேற்சாதியினரும் அதனைக் கொண்டாட வேண்டியுள்ளது. முற்றிலும் நகர்ப்புறங்களில் வாழும் மேற்சாதியினர், குறிப்பாகப் பார்ப்பனரும் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிறரும்தான் இதைப் பெருமளவில் கொண்டாடுவதில்லை. மாறாகத் தைப்பொங்கலுக்கு முந்திய நாளைச் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். கதிரவனின் தென் பால் பயணத்தின் இறுதி நாள் என்ற பெயரில் அதைக் கொண்டுகிறார்கள். அத்துடன் சிவன் விலைமகள் இல்லம் சென்றதாக ஒரு கதை கட்டி சிவனைப் பழித்து அத்துடன் சங்கராந்தியை இணைத்துள்ளனர். இது புரிந்து கொள்ளத்தக்கதே. தமிழ்நாட்டை வரலாற்றின் இறுதிக் காலத்தில் வெள்ளையருக்கு முன் கைப்பற்றி ஆண்டவர்கள் தெலுங்கர்களான விசயநகரப் பேரரசினரும் அவர்களிலிருந்து கிளைத்த நாயக்கர்களுமே. அவர்கள் வைணவத்தைத் தழுவியவர்களாய் இருந்ததால் இங்கு தேசிய உணர்வுகள் சைவ மத வடிவாக வெளிப்பட்டன. எப்போதும் இங்குள்ள பெரும்பான்மை மக்களுக்கு எதிராக வெளியாருடன் கூட்டுச் சேரத் தயங்காத பார்ப்பனர்களும் வெள்ளாளக்கட்டு மேற்கொள்ளத் தயங்காத பார்ப்பனியர்களும் வெளிப்பண்பாட்டுக் கூறுகளை இறுகத் தழுவி உள்நாட்டுப் பண்பாட்டை இழிவுபடுத்துவது போலவே இதுவும் நடைபெற்றது.

தைப்பொங்கல் கதிரவனை வழிபடுவதாகும்; கதிரவனை வணங்குவோர் ஆரியர்களாகும்; திராவிடர் நிலவை வணங்குவோராகும்; எனவே தைப் பொங்கல் ஆரியர்களுக்குரியது என்று ஒரு சிலர் கூறகின்றனர். என்னவோ நிலவு உலகின் ஒரு பகுதியினர்க்கும் கதிரவன் இன்னொரு பகுதியினர்க்கும் மட்டும் சொந்தமானவை போல் இவர்களுக்குத் தோன்றுவது வியப்பே. முதன் முதலில் தேய்வு வளர்ச்சி என்ற வகையிலும் கண்ணால் எளிதில் பார்க்கத்தக்கதுமான நிலவையே மனிதன் காலக் கணிப்புக்குப் பயன்படுத்தினான். காலத்தைக் கணிக்க, மதிக்கப் பயன்பட்டதாலேயே நிலவு மதி எனப்பட்டது. அது காட்டிய காலம் மாதம் என்றும் திங்கள் என்றும் அழைக்கப்பட்டது. பின்னரே கதிரவனின் இயக்கம் நோட்டமிடப்பட்டு அத்துடன் நிலவு மாதங்கள் ஏதோவொரு வகையில் பிணைக்கப்பட்டு புதிய மதிகதிர் ஆண்டுகள் (Lunar year – நிலவாண்டு; Solar year – கதிராண்டு; Lunisolar year – மதிகதிர் ஆண்டு) உருவாயின. உலகிலுள்ள பெரும்பான்மையான ஆண்டுகள் ஏதோ ஒரு வகையில் மதிகதிர் ஆண்டுகளே. சித்திரை மாதத்தில் பிறக்கும் தமிழாண்டாயிலும் சுமார்த்த ஆண்டெனப்படும் தெலுங்காண்டானாலும், சக ஆண்டானாலும் எல்லாமே ஏதோ ஒரு வகையில் மதிகதிர் ஆண்டுகளே. முகம்மதியர்களின் ஆண்டு மட்டுமே முழுமையான நிலவு ஆண்டாகும். எனவே நாகரிகங்களை நிலவு நாகரிகங்கள், கதிரவ நாகரிகங்கள் எனப் பிரிப்பதற்குப் பகரம் கதிரவ வழிபாட்டுக்கு முற்பட்ட நாகரிகங்கள், அதற்குப் பிற்பட்ட நாகரிகங்கள் என்று பிரிப்பதுதான் முறை. குதிரையை பற்றி முன்போரிடத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆரிய இனக் கோட்பாட்டின் போலிமையை விளக்க இங்கு நாம் முற்படவில்லை. தமிழ்நாட்டில் வேறெந்தத் திருநாளை விடவும் பெரும்பான்மையாகவும் பெருமளவிலும் கொண்டாடப்படுவதால் தைப்பொங்கல் தமிழர் திருநாள் எனும் அடைமொழிக்கு உரிமை பெறுகிறது.

தைப் பொங்கலிலும் ஓரளவு தீபாவளியிலும் வெளிப்படும் சில பழைய பொருளியல் உறவுகளின் வெளிப்பாடுகள் நம் நாட்டுப் பண்பாட்டின் சில தீய கூறுகளாக இன்று நிலவுகின்றன. பொங்கல் இனாம், தீபாவளி இனாம் என இவை வழங்கப்படுகின்றன. ஊர்ப்புறங்களில் இவை பொங்கல்படி, தீபாவளிப்படி என வழங்கப்படுகின்றன. இத்திருநாட்களில் ஊரிலுள்ள பண்ணையார்களிடம் ஏழை மக்கள் வந்து பணமாகவோ, தவசமாகவோ ஏதாவது பெற்றுச் செல்கின்றனர். சில இடங்களில் துணிமணிகளும் வழங்கப்படுகின்றன. கொத்தடிமை அல்லது பண்ணையடிமைகள் (பண்ணையாட்கள்) அறுவடைக் களத்தில் பெறும் அவர்கள் பங்குத் தவசத்துக்குக் கொத்து என்று பெயர். கொத்தடிமை என்ற சொல்லுக்குக் காரணமும் இதுதான். இன்று நாட்டுப்புறத்தில் கூலியாக அளக்கப்படும் தவசத்துக்குக் கொத்து என்ற சொல்லே வழங்கப்படுகிறது. அத்தகைய கொத்தடிமைகளுக்கு வழங்கப்பட்ட பணம் துணிமணி ஆகியவையே இன்று இனாம் என்ற பெயரில் குறிக்கப்படுகிறது. பண்ணையார் அல்லது நிலக்கிழார் வீட்டுத் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள், பண்ணையாட்களின் வீடுகளில் நடைபெறும் அதே வகை நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் போதும் பண்ணையாட்களுக்கு இத்தகைய “சீர்கள்” வழங்கப்படும். மணமாகிக் கணவன் வீடு சென்ற பெண்களுக்குப் பெற்றோர் அல்லது உடன்பிறந்தோரிடமிருந்து இதே போன்று சீர்கள் செய்யப்படும்.

பெண்களுக்கு இவ்வாறு செய்யப்படும் சீர் ஒரு நீண்ட வரலாற்றுப் பின்னணியின் புதைபடிவமாகும். பெண் கணவன் வீட்டுக்குச் செல்லும் போது அவளோடு அசையாச் சொத்துகளாகிய நிலம், வீடு ஆகியவற்றைப் பெயர்த்தெடுத்துச் செல்ல முடியாது. அதனால்தான் அவளுக்கு அசையும் சொத்துக்களாகப் பாத்திரம் பண்டங்கள், நகைகள், பணம் ஆகியவை சீதனமாகக் கொடுக்கப்பட்டன. ஆனால் அவளுக்கு மறுக்கப்பட்ட நிலவுடைமையின் மீது அவளுக்கிருந்த உரிமையின் அடையாளமாகவே தாய் வீட்டிலிருந்து வேளாண் விளைபொருட்களான சீர்கள் வழங்கப்படுகின்றன. தனிக்குடும்பச் சொத்தாக நிலம் நிலவிய காலத்தில் இது பொருத்தமானதே. அதே வேளையில் வேளாண்மை முதலாளிய வடிவத்தை அடைகிறதென்று வைத்துக் கொள்வோம்; அதாவது பெரும்பெரும் வேளாண் பண்ணைகள் பங்கு மூலதனத்தில் நடத்தப்படும் நிலை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது குடும்பங்களின் சொத்து என்பது பங்கு ஆவணங்களாக மாறிவிடும். அந்நிலையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பங்காவணங்களாகப் பிரித்துக் கொடுத்து விடலாம். இப்போது இயற்றப்பட்டிருக்கும் பெண்கள் சொத்துரிமைச் சட்டம் அசையும் பொருளாகிவிட்ட பெண்ணுக்கும் அசையாச் சொத்துகளுக்கும் ஒரு முரண்பாட்டை உருவாக்கியிருக்கிறது.

நாட்டுப்புறங்களில் நிலவும் பொங்கல், தீபாவளி இனாம்களின் எச்சமாக இன்று அலுவலகங்களிலுள்ள கடைநிலை ஊழியர் முதலிய கீழ்நிலை ஊழியர்கள் பொங்கல், தீபாவளிகளின் போது அலுவலகத்தின் பிற ஊழியர்களிடம் இருந்தும் துறைக்குத் தொடர்பான பொதுமக்களிடமிருந்தும் இனாம் தண்டுவதுண்டு. அதிகாரிகளும் மேல்நிலை அலுவலர்களும் துறை “வாடிக்கையாளர்”களிடமிருந்து இனாம் தண்டுவர்-சிலர் கேட்காமலே கொடுப்பர். பெருநாட்களின் போது அலுவலகங்களில் இனாம் பெறுவதும் கொடுப்பதும் தடங்கலின்றி நடைபெறும் ஒரு நிகழ்முறையாகும்.

அண்மைக் காலத்தில் “இனாம்” தண்டுவதில் புதுப் புது உத்திகளெல்லாம் தோன்றியுள்ளன. “சபரிமலைக்கு மாலை போட்டுள்ளேன், செலவுக்கு வேண்டும்” என்று ஐயப்பன் பெயரைக் கூறிப் பெரும் பணம் தண்டிவிடுகின்றனர் சில “திறவோர்”. கொடுப்பவருக்கு ஐயப்பனின் அருள் கிடைக்கவில்லையாயினும் “இரு முடி” தாங்கும் ஐயப்பன் கருணையாவது கிட்டுமே என்ற ஆறுதல். திருப்பதியான் கோயில் செல்வதற்காகவும் இது போல் “காணிக்கை” தண்டுவதுண்டு.

ஊழல் இவ்வாறு நம் குமுகத்திலும் சமயத்திலும் இரண்டறக் கலந்து ஒன்றையொன்று தாங்கி ஒன்றையொன்று ஊக்கி வந்துள்ளது, ஊக்கி வருகிறது. இறைவனுக்குக் காணிக்கை செலுத்தினால் அவன் அருளுவது (என்பது நம்பிக்கை) போல் அதிகாரியும் அருளுவான் (இது நடப்பு); காணிக்கை பெற்றால் அதிகாரி அருளுவது போல் இறைவனும் அருளுவான் என்று இவை ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. (தமக்குள் மறைந்திருக்கும் திறமைகளும் தற்செயல் நிகழ்ச்சிகளுமே தம் வெற்றிக்குக் காரணம் என அறியாத, வாழ்வில் வெற்றி பெற்ற பலர் ஏதோ சில தெய்வங்களின் அருளால் தான் அந்த வெற்றி கிட்டியது என்று மனமார நம்பிக் காணிக்கைகள் செலுத்துவதும் உண்டு.)

ஆடிப் பிறப்பு கதிரவனின் தென்பால் செலவின் தொடக்கத்தைக் குறிப்பிடுகிறது. எனவே இது தைப்பொங்கலோடு தொடர்புடையது. இதைக் கீழ்ச்சாதியினரும் மேற்சாதியினரும் கூட ஏதோ ஒரு வகையில் கொண்டாடுகின்றனர். ஆடி மாதத்தில் கருவுற்ற குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்கும்; சித்திரை வெய்யிலின் கொடுமையால் அம்மை போன்ற நோய்களுக்காளாகிக் குழந்தை தொல்லைப்படும் என்பதால் கணவனும் மனைவியும் பிரிந்திருக்க வேண்டும் என்று மனைவியைத் தாய்வீட்டுக்கு அனுப்புவதும் உண்டு. வெளியூர் சென்று தங்கியிருப்போர் ஆடித் தங்கல் என்ற பெயரில் ஊருக்குத் திரும்பி விட வேண்டும் என்ற நம்பிக்கையும் உண்டு.

ஆடி முழுக்கு எனப்படுவது பதினெட்டாம் பெருக்கு எனவும் வழங்கப்படும். ஆனி, ஆடி மாதங்களில் மேற்கு மலைத் தொடரில் மழை பெய்து அங்கிருந்து புறப்பட்டுக் கிழக்கிலிருக்கும் தமிழ்நாட்டினுள் ஓடி வரும் ஆறுகளில் வெள்ளம் பெருகிக் குளங்களையும், வாய்க்கால்களையும் நிரப்புவதால் உழவு வேலையின் தொடக்கத்தைக் குறிக்கும் விழாவாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இதுவும் உழவுத் தொழில் அடிப்படையானது.
கரிகாலன் மகள் ஆதிமந்தியின் கணவனும் பெரும் ஆடல் வல்லோனும் பின்னாளில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்று புகழ் பெற்றோனுமாகிய ஆட்டனத்தி இத்தகைய பதினெட்டாம் பெருக்கில் காவிரி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு மாருதி எனும் மீனவப் பெண்ணால் மீட்கப்பட்டு ஆதிமந்தியிடம் ஒப்படைக்கப்பட்டான் என்று கழக (சங்க)ப் பனுவல்கள் கூறும்.

சோழ அரசர்கள் பெருங்கொண்ட வேளாண்மையை வளர்த்தவர்கள். எனவே அவர்களும் இப்பதினெட்டாம் பெருக்கு விழாவில் நேரடியாகக் கலந்து கொண்டார்கள். பின்னாளில் அரசர்கள் உழைப்பையும் விளைப்பையும் சிதைக்கும் வெறும் ஒட்டுண்ணிகளாக மாறிவிட்ட காலத்தில் இவ்விழா கீழ்ச்சாதிகளிடம் மட்டும் தங்கிவிட்டது.

ஆடிப்பெருக்கிலிருந்து தொடங்கும் வேளாண்மைச் செயல்முறையைச் சீவகசிந்தாமணியில் நாமகள் இலம்பகம் விரிவாகக் கூறுகிறது. ஊர்ப் பணியாளர்கள் பறை முதலியவற்றை அறைந்து ஊர் மக்களைத் திரட்டி ஆறுகளுக்கும் சிற்றாறுகளுக்கும் சென்று அணை (மட்குரம்புகள்) கட்டி நீரை வயல்களுக்குத் திருப்பிப் பயிர்த்தொழில் செய்வதைக் காப்பியச் சுவையுடன் திருத்தக்கத்தேவர் நமக்கு வடித்துத் தந்துள்ளார்.

ஆடிப் பெருக்கில் ஏட்டுச் சுவடிகளை எறிவதென்ற தீய பழக்கம் இன்று கூடப் பின்பற்றப்படுகிறது. தமக்கு வேண்டிய நூல்களைப் படியெடுத்து விட்டு மீந்தவற்றை ஆற்றில் விடும் இந்தப் பழக்கத்தால் விலை மதிப்புப் பெற்ற பல தமிழ் நூல்கள் அழிந்தன.

திருக்கார்த்திகை, நடைமுறையில் விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி எனும் விளக்கணி விழாவென்றே கருத இடமிருக்கிறது; ஏனென்றால் திருக்கார்த்திகை மாதத்தில்தான் நாள்தோறும் வீட்டின் முன் திண்ணையிலும் வாயிற்படிகளிலும் காரை வீடாயின் கைப்பிடிச்சுவரிலும் மதிற்சுவரிலும் சிறு அகல்களை ஏற்றி வரிசையாக வைக்கிறார்கள். நாட்டுப் புறங்களில் இதை வேறொரு வகையாகவும் கொண்டாடுகிறார்கள். திருக்கார்த்திகை அன்று சொக்கப் பனை கொளுத்தல் என்ற விழா நடைபெறுகிறது. முழுப் பனைகளை வெட்டி நட்டு அதன் உச்சியில் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். இது தவிர குமரி மாவட்டத்தில் வேறொன்றும் நடைபெறுகிறது. புன்செய்க் காடுகளில் வளரும் பொரிஞ்சை எனப்படும் ஒருவகைப் பூண்டுகளை வேரோடு பிடுங்கி நன்றாக உலர்த்தி அதனைக் கழிகளில் சுற்றி முழு நீளத்துக்கும் கட்டி வைத்து அதில் தீ வைக்கிறார்கள். அது படபடவென்று பொரிந்து கொண்டு எரிகிறது. அத்துடன் ஆண் பனை மரத்தின் (அலகுப் பனையின்) உலர்ந்த பாளையைக் கருக்கித் தூளாக்கித் துணியில் கிழியாகக் கட்டி அரளிச் செடியின் முக்கவைக் கணுவொன்றின்[4] நடுவில் வைத்து இறுகக் கட்டி அதன் அடிப்புறத்தில் நீண்ட கயிற்றைக்கட்டிக் கரிக்கிழிக்குத் தீ வைத்துக் கயிற்றைத் தலைக்கு மேல் விசையாகச் சுற்றினால் மத்தாப்புப் போல் பூச்சொரியும். இவ்வகை மாத்தாப்பும் கொளுத்தி விளையாடுகிறார்கள். இவை இரண்டிலும் சிறுவர்கள் முழு மூச்சுடன் ஈடுபடுகின்றனர்.[5]

பொரிஞ்சை போன்ற செடிகளைக் கட்டிக் கொளுத்து தான் உண்மையான சொக்கப் பனை. சொக்கன் என்ற சொல் போலி என்ற பொருளில் குமரி மாவட்டத்தில் வழங்குகிறது. மதுரையில் உண்மையான அதிகாரம் உள்ளவளாகக் கூறப்படும் பெண் தெய்வம் மீனாட்சியின் கணவனான சொக்கனாதனுக்கு அப்பெயர், அவன் அதிகாரமில்லாத போலி என்ற கருத்திலேயே வழங்குகிறது போலும். அல்லது அப்பெயரிலிருந்து சொக்கன் என்ற சொல்லுக்குப் போலி என்ற பொருள் வந்திருக்கலாம்.

கார்த்திகை மாதத்தோடு தமிழகத்தில் வடகிழக்குப் பருவக்காற்று மழை முடிகிறது. காராகிய மழை முடிவதால் அதாவது திகைவதால் (திகைதல் = நிறைவு பெறுதல்) அம்மாதம் கார்த்திகை (கார் + திகை) எனப்பட்டது. “கார்த்திகைக்குப் பின் மழையுமில்லை கர்ணனுக்குப் பின் கொடையுமில்லை” என்பது பழமொழி. கார்த்திகை மாதத்தோடு மழை நின்றுவிடுவதால் அதுவரை கீழேயுள்ள குளங்களுக்குத் தண்ணீர் செல்வதற்கென்று திறந்து வைக்கப்பட்டிருக்கும் மேலேயுள்ள குளங்களின் மறுகால் குத்துக்கல்களையும் மடைகளையும் மார்கழி மாதப்பிறப்பை ஒட்டி வரும் டிசம்பர் 15 அன்று அடைத்து விடலாம் என்பது அரசும் பொதுப் பணித்துறையும் கடைப்பிடித்து வரும் நடைமுறையாகும். அத்துடன் புரட்டாசியின் பருவக் காற்று, தென்மேற்கிலிருந்து வடகிழக்குக்கு மாறி வீசத் தொடங்கும் போது தொடங்கி ஐப்பசி, கார்த்திகை மாதம் முடிய இடைவிடாது பெய்யும் மழையால் கணக்கற்ற புல்பூண்டுகள் வளர்ந்துவிடும். அவற்றோடு பலவகைப் புழுக்களும் பூச்சிகளும் வண்டுகளும் பெருகிவிடும். அதனால்தான் “கார்த்திகை என்றால் கல்லும் புழுக்கும்” என்ற பழமொழியும் தோன்றியுள்ளது. நெற்பயிர் போன்ற உணவுப் பயிர்களில் பொதி எனப்படும் பூத்தோன்றி விதைகளில் பால் பிடிக்கும் போது இப்புழு பூச்சிகள் மற்றும் வண்டுகளால் அவை அழிக்கப்படும். இதனைத் தடுக்கவே அப்பூண்டுகளைப் பிடுங்கித் தீவைக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். இப்படிப் பூண்டுகளைப் பிடுங்கி விட்டால் மட்டுமே சிக்கல் தீர்ந்து விடாது. பூண்டுகளில் தங்கியிருந்த பூச்சிகள் நேரடியாக பயிர்களைத் தாக்கும். எனவே தான் இரவில் தீயை வளர்த்து அதனால் கவரப்படும் பூச்சிகள் அதில் விழுந்து மடியச் செய்யும் விளக்கணி விழாவாகிய தீபாவளியும் திருக்கார்த்திகையும் தோன்றியிருக்க வேண்டும்.

விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி என்ற பெயருக்கும் உண்மையிலேயே விளக்குகளின் வரிசை வைத்துக் கொண்டாடப்படும் திருக்கார்த்திகைக்கும் உள்ள இந்தத் தொடர்பு தவிர இன்னொரு நெருக்கமாக உறவும் இவ்விரு திருநாட்களுக்கும் இடையில் உண்டு. தீபாவளி ஐப்பசி மாதத்தின் காருவா நாளில் வருகிறது. திருக்கார்த்திகை அடுத்த மாதமான கார்த்திகை மாதத்தில் வெள்ளுவா நாளில் வருகிறது. ஐப்பசி மாதத்தில் இரண்டு காருவா நாட்களோ அல்லது கார்த்திகையில் இரண்டு வெள்ளுவா நாட்களோ வரும் ஒரு சில ஆண்டுகள் நீங்கலாகப் பெரும்பாலும் தீபாவளிக்கும் திருக்கார்த்திகைக்கும் இடையில் பதினைந்து நாட்கள்தான் உண்டு. இதிலிருந்து நாம் இன்னொன்றையும் அறிந்துகொள்ள முடிகிறது.

பூச்சிகளை அழிப்பதற்கு ஒரு நாள் போதாது. எனவே தீபாவளி தொடங்கி புல் பூண்டுகளைப் பிடுங்கி உலர்த்தும் பணியும் புஞ்சை நிலங்களில் தீ வளர்த்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கும் பணியும் தொடங்கப்பட்டு திருக்கார்த்திகை அன்று அது நிறைவு பெறுவதாகவும் இருக்கும் சொக்கப்பனை கொளுத்தல் முதலியவை நடைபெறுவதாய் இருக்க வேண்டும். சிறுவர் முதல் பெரியவர் வரை விளையாட்டுப் போலவே இவற்றைச் செய்வதால் பெருமளவு மனித உழைப்பு மிக எளிதில் திரட்டப்பட்டு விடுகிறது. புழு பூச்சிகளின் முட்டைகள் இந்த இடைவெளியில் பொரித்து வளர்ச்சியடைந்தால் அவை மீண்டும் முட்டையிடத் தேவைப்படும் காலத்தினுள் அழிக்கப்பட்டு விடுகின்றன. இன்று பல்வேறு வகைக் கடுமையான நச்சுப் பொருட்களை உருவாக்கியும் பூச்சிகள் புழுக்களை அழிக்க முடியாமல் அப்பூச்சி புழுக்கள் அந்நஞ்சுகளை எதிர்த்து வாழும் ஆற்றலைப் பெற்றதுடன் அந்நஞ்சினை உண்டும் வாழப் பழகிவிட்டதைக் கண்டுத் திகைத்து விட்ட மேலை நாட்டு அறிவியலார் மின்சார விளக்குகளால் பூச்சிகளைக் கவர்ந்து கொல்லும் முறையைக் கருத்துரைக்கின்றனர். பல்லாயிரம் ஆண்டுக்காலப் பட்டறிவின் பயனாய் இதை மின்சாரம் இன்றியே நம் நாட்டினர் செய்து வருகின்றனர். அத்துடன் தீயை நோக்கி வரும் பூச்சிகள் அத்தீயிலேயே விழுந்து மடிந்தும் விடுகின்றன. மின்சார மின் விளக்கில் இது முடியாது.

இவ்வாறு ஒரே தொடராக இருந்த ஒரு விழாவில் தொடக்கம் தீபாவளியும் முடிவு திருக்கார்த்திகையுமாக இருந்த நிலைமாறி தீபாவளி மேற்சாதியினர் திருநாளாகவும் திருக்கார்த்திகைக் கீழ்ச்சாதியினர் திருநாளாகவும் மாறியிருப்பது தெரிகிறது. அவ்வளவு செல்வாக்கு இல்லாமாலிருந்த தீபாவளியை இந்தியத் தேசிய விடுதலைப் போராட்டக் காலத்தில் தலைமையேற்ற பார்ப்பனர்கள் பரவலாக்கத் தங்கள் தாளிகைகளை (பத்திரிகைகளைப்) பயன்படுத்தினர். பார்ப்பனியர்கள் எனப்படும் வெள்ளாளக்கட்டினரும் அதனைப் பற்றிப் பிடித்துக் கொண்டனர்.

திருக்கார்த்திகையை மேற்சாதிக்காரர்களும் விட்டு வைக்கவில்லை. திருவண்ணாமலைத் தீபம் என்ற பெயரில் அதைக் கொண்டாடுகிறார்கள். கார்த்திகை நோன்பு என்ற பெயரில் மாதம் முழுவதும் “நோன்பு” இருக்கிறார்கள். அது மட்டுமின்றி மாதந்தோறும் கார்த்திகை நாண்மீன் அன்று வேறு கார்த்திகை நோன்பு கடைப்பிடிக்கிறார்கள். தீபாவளிக்குத் திருமாலைத் தொடர்புபடுத்திக் கதை கூறப்படுவது போல் திருக்கார்த்திகைத் தீபத்துக்குச் சிவனைத் தொடர்புபடுத்தும் கதை ஒன்றும் உண்டு. சிவனின் அடிமுடிகளைத் திருமாலும் பிரமனும் தேடியதாக நாம் கேள்விப்படும் கதைதான் அது.

பழைய இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிடத்திலிருந்து பூசையெடுப்பு (நவராத்திரி) தொடங்கப்படும் நாளில் ஒரு தெய்வத்தின் படிமம் பல மைல்கள் தொலைவிலிருக்கும் இன்னொரு கோவிலுக்குக் கொண்டு சென்று பூசையில் வைக்கப்பட்டு திருக்கார்த்திகை முடிந்த பின் மீண்டும் பழைய கோயிலில் கொண்டு நிறுவப்படும் வழக்கம் உள்ளது. இக்காலம் தென்மேற்குப் பருவக்காற்று முடிந்து வடகிழக்குப் பருவகாலம் தொடங்கியதிலிருந்து முடிவது வரையான காலமாகும்.

அத்துடன் சில சாதியினர் குறிப்பாக வெள்ளாளர்கள் கார்த்திகையை முருகனுடன் தொடர்புபடுத்துவர். கார்த்திகைப் பெண்கள் எனப்படும் ஆறு பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் எனப்பட்டான் முருகன்; எனவே கார்த்திகை நோன்பு முருகனுக்கு உகந்தது என்று இவர்கள் கூறுவர். ஆறு தனித் தனித் தெய்வங்களின் இணைவானவன் ஆறுமுகன் எனப்படும் முருகன். ஒருவேளை இந்த ஆறு தெய்வங்களை வணங்கியோரின் ஒரு கூட்டணி உருவானதை இந்த ஆறுமுகக் கடவுளின் தோற்றம் சுட்டிக் காட்டலாம். கார்த்திகை மாதத்தில் ஆறு விண்மீன்களின் கூட்டமாகிய கார்த்திகை எனப்படும் நாண்மீனில் வெள்ளுவாவன்று நிலவு வருகிறது. எனவே கார்த்திகை (கார் + திகை)யான மாதத்தின் நாண்மீனான ஆறு விண்மீன்களின் கூட்டம் கார்த்திகை எனப்பட்டது. எனவே ஆறு முகங்களைக் கொண்ட தெய்வமும் கார்த்திகையோடு தொடர்பு படுத்தப்பட்டது.

இவ்வாறு கீழ்ச்சாதி மக்கள் கொண்டாடும் திருநாட்கள் முற்றிலும் அவர்களது உழைப்பு மற்றும் விளைப்புச் செயல்முறைகளோடு நேரடியாகத் தொடர்புடையன. மேற்சாதியினர் அவற்றைப் பழித்தோ அல்லது உருமாற்றியோ வந்திருக்கின்றனர். மேற்சாதியினர் கொண்டாடும் திருநாட்களோ ஒட்டுண்ணி வாழ்க்கையிலிருந்து தோன்றியவை அல்லது அதற்கேற்ப உருமாற்றப்பட்டவை என்பது தெரிகிறது.

இன்று பாசனத்துக்கு அமைப்புகள் கட்டவும் நீரை முறைப்படுத்திப் பாய்ச்சவும் நாடு தழுவிய அமைப்பாக பாசனத் துறைச் செயற்படுகிறது. இருந்தாலும் சிறு அமைப்புகளைப் பேண மக்களின் நேரடி நடவடிக்கையாகக் குடிமராமத்து என்று ஒரு முறையும் உள்ளது. இதன்படி நில உடைமையாளர்கள் ஏக்கருக்கு இத்தனை பேர் என்று இப்பணியில் தம் சொந்தச் செலவில் ஆட்களை ஈடுபடுத்துவர். இன்று நிலங்கள், உண்மையில் இல்லையாயினும் ஆவணங்களின்படிப் போலியாகவேனும், பங்கிடப்பட்டுவிட்டதால் இவ்வாறு ஆட்களைத் திரட்ட முடியவில்லை. எனவே இம்முறை இப்போது முறையாகச் செயற்படவில்லை. இருந்தாலும் இன்றியமையா நிலைகளில் மக்கள் இதைச் சிலவிடங்களில் செய்து வருகிறார்கள். சரியான பாசன அமைப்புகள் இன்றும் உருவாகாத இடங்களில் சிற்றாறுகளின் குறுக்கே, சிலவேளைகளில் காவிரி ஆறு போன்ற பேராறுகளின் குறுக்கே கூட, ஊர் மக்கள் பறைகொட்டித் திரட்டப்பட்டு மட்குரம்பு (ஆங்கிலத்தில் இதே சொல் Mud Kurambu என்று அழைக்கப்படுகிறது. தமிழில் மண் + குரம்பு = மட்குரம்பு) கட்டி நீரைத் திருப்புவது இன்றும் நடைமுறையிலிருக்கிறது.

திருக்கார்த்திகை விழாவில் புல் பூண்டுகளைப் பிடுங்கும் பழக்கம் கூட இன்று அருகிவிட்டது. பருவ மழை சிறிது சிறிதாக மாற்றம் பெற்று வருவதும் அடிக்கடி பொய்த்துப் போவதும் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். அதை ஏதோ ஒரு வகையில் மீட்டெடுத்தல் நம் வேளாண்மைக்கு ஆக்கம் தருவதாக அமையும்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] மந்திரிகுமாரி என்ற திரைப்படத்தின் கதைக் கரு இதிலிருந்து பெறப்பட்டதே. காப்பியக் காலத்தில் கணவனைக் கொன்ற பெண் துறவு மேற்கொண்டு சமயப்பணி செய்ததாகக் காட்டப்பட்டாள். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் கலைஞர்களுக்கு அந்தத் துணிச்சல் வரவில்லை. அவளைச் சாகடித்து விட்டனர். இந்நூல் பக். பார்க்க.

[2] சிலம்பு, நாடுகாண் காதை, 247 – 48

[3] Keith A.B., Rig-Veda Brahmanas, P.121, Cambridge 1925, as quoted in Lokayatha, Debiprasad Chattobadhyaya, P. 611s
[4] அரளிச்செடி ஒவ்வொரு கணுவிலும் மூன்று இலைகளைக் கொண்டுள்ளது. அந்த இலைகளின் அடியிலிருந்து கிளைகள் கிளைப்பதுண்டு. அவை மூன்று கவைகளையுடைய கணுக்களாகின்றன.

[5] இன்று மழைவளம் குன்றிய குமரி மாவட்டத்தில் இந்தப் பூண்டும் இல்லை. அதனால் அதைக் கொளுத்தி விளையாடுவதும் இல்லை.

குமரிமைந்தன்
kumarimainthan@sify.com
htpp://kumarimainthan.blogspot.com

Series Navigation

author

குமரிமைந்தன்

குமரிமைந்தன்

Similar Posts