கோயில்கள், பெண்கள், மொழி,வழிபாடு : சர்ச்சைகளும், புரிதல்களும் -1

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

ரவி ஸ்ரீநிவாஸ்


சமீபத்தில் எழுந்துள்ள சில சர்ச்சைகள் குறித்து பரபரப்பான விவாதங்கள் நடைபெறுகின்றன.ஆனால்
விவாதிக்கும்/எழுதும் பலர் அடிப்படைகளைக் கூடப் புரிந்துகொள்வதில்லை. மேலும் இப்பிரச்சினைகளை
பெண்ணியம்,சமத்துவம் போன்றவற்றைக் கொண்டு அலசி ஆராயும் போது வேறு பரிமாணங்கள் இருப்பதை
அவர்கள் கருத்தில் கொள்வதில்லை.அவர்களது பெண்ணிய,சமத்துவ பார்வைகள் எந்த அளவு சரியானவை
என்பது ஒருபுறம் இருக்கட்டும். இதானல் உடனடி தீர்வுகள், தடலாடித் தீர்வுகள் முன் வைக்கப்படுகின்றன.
அரசு இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வேறு.

உதாரணமாக பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கோயில்களுக்கு செல்லுதல்/செல்லாமல் இருத்தல்.
இதை பெண்களுக்கு எதிரான பாகுபாடு என்று பார்க்கலாம்.ஆனால் ஆண்களுக்கும் சில சந்தர்ப்பங்களில்
கோயில்களுக்கு அல்லது வழிபாட்டுத்தலங்களுக்கு செல்லத் தடை இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
பிராமண அர்ச்சகர்கள் சில சந்தர்ப்பங்களில் பூஜை செய்ய முடியாது, கோயில்களுக்குள் நுழையக் கூடாது
என்று விதிகள் இருக்கின்றன.பல்வேறு குழுக்களில்/ஜாதிகளில்/மதப்பிரிவுகளில் ஏற்பு/விலக்கு என்பது
எதோ ஒரு வகையில் நடைமுறையில் இருக்கிறது. சுத்தம்/அசுத்தம், ஏற்பு/விலக்கு, இவை குறித்த
நம்பிக்கைகள், சடங்குகள் பல்வேறு சமூகங்களில், இனக்குழுக்களில் இருப்பதை மானுடவியலாளர்கள்,
சமூகவியலாளர்கள் விரிவாக ஆராய்ந்திருக்கின்றனர். இவை மத நம்பிக்கை, சடங்குகள் ஆகியவற்றுடனும்,
உறவு முறைகளுடனும் தொடர்புடையவை. மாமா செத்தால் இத்தனை நாள் தீட்டு, தாய் வழி உறவுகளில்
எத்தனை தலைமுறை வரை எத்தனை நாள் தீட்டு/விலக்கு என்பது போன்ற நம்பிக்கைகள், விதிகள்
உள்ளன. இவை எந்த அளவு கடைப்பிடிக்கப்படுகின்றன என்பது வேறு விஷயம். எனவே பெண்களின்
மாதவிலக்கு குறித்த விலக்கு/தீட்டு என்பதை பெண்களுக்கு எதிரானது என்ற அளவில் புரிந்து கொள்வதை
விட அதை ஒரு ஒட்டுமொத்த ஏற்பு/விலக்கு, புனிதம்/அசுத்தம் அல்லது தீட்டு என்ற நம்பிக்கைக்
தொகுப்பின் பகுதியாகப் புரிந்து கொள்ளவது பொருத்தம். பெண் மாதவிலக்கு இல்லாத போதும்
கூட சில சமயங்களில் தீட்டு என்பதால் சிலவற்றைச் செய்யக்கூடாது என்ற தடைகள் இருப்பதையும்
இங்கு கவனிக்க வேண்டும். இவையெல்லாம் பல்வேறு வேறுபாடுகளுடன் இருப்பதால் இந்த மதம்
மட்டும் பெண்ணுக்கு விரோதி அல்லது இதை தீட்டு என்று பார்க்கிறது என்ற அரைகுறை/அரைவேக்காடு
பகுத்தறிவு பார்வைக்கு அப்பாற் சென்று புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஆனால் ஞாநிக்கு இந்தப் புரிதல் இல்லாததால் அவர் ஆதிகாலத்து சமூகம் என்று ஆரம்பித்து
மானுடவியலாளர்கள் கேள்விக்குட்படுத்தி தேறாது என்று கைவிட்ட கோட்பாட்டினை முன்னிறுத்துகிறார்.
அத்துடன் நிற்கவில்லை. அரசு தலையிட வேண்டும் என்கிறார். மதசார்பற்ற அரசு மத விவாகாரங்களில்
எந்த அளவு தலையிட முடியும் என்பதை அவர் யோசிக்கவில்லை. மேலும் கோயில் நிர்வாகம் என்பது
வேறு, தனிப்பட்ட நபர்களின் நம்பிக்கை/பக்தி என்பது வேறு. அரசு ஆணை போட்டாலும் நாங்கள் வர
மாட்டோம் என்று பெண்கள் சொன்னால் இல்லை, மாதவிலக்கு காலத்தில் கட்டாயம் வர வேண்டும்
என்று அரசு சொல்ல முடியுமா. இல்லை இதை அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் என்று
ஆணைதான் இட முடியுமா. கோயில்களைப் பொறுத்தவரையிலும் கூட அரசுக்கு உள்ள அதிகாரம்
குறைவுதான். எனக்கு தீட்டு, காரணம் குடும்பத்தில் சாவு/குழந்தைப் பிறப்பு என்று சொல்லும் அர்ச்சகரை
அதற்காக விடுப்பு தரமுடியாது, பூஜை செய்துவிட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. மேலும்
அப்படிச் செய்வது அரசியல் சட்டம் தந்துள்ள மத வழிப்பாட்டு உரிமை, மத நம்பிக்கை உரிமைகளில்
தலையிடுவதாகும்.

அதிகபட்சம் பெண்களிடம் மாதவிலக்கு என்பதை தீட்டு என்று கருத வேண்டாம், அது ஒரு உடல்
சம்பந்தப்பட்ட நிகழ்வு என்று பிரச்சாரம் செய்யலாம்.ஆனால் அதை மறுக்கும் உரிமை பெண்களுக்கு
உண்டு. அது ஒரு உடல் நிகழ்வு என்று தெரிந்தாலும் அப்போது கோயில்லுக்கு/வழிபாட்டுத்தலத்திற்கு
நான் செல்ல விரும்பவில்லை, அதன் மூலம் பிறர் நம்பிக்கையை புண்படுத்த விரும்பவில்லை என்று கூட
பெண்(கள்) நிலைப்பாடு எடுக்கலாம். விதியை மீறிச் சென்றுதான் என் பெண்ணுரிமையை நிலைநாட்ட
விரும்பவில்லை என்றும் கூறலாம். மாத விலக்கான பெண் கோயிலுக்கு வரமாட்டாள் என்று ஒரு நம்பிக்கையில்தான் பெண்(களை) அனுமதிக்கும் போது மாதவிலக்கின் போதும் போய் அவர்கள் முகத்தில் கரியைப் பூச விரும்பவில்லை, எந்தக் கோயிலில் அதற்கு அனுமதி இருக்கிறதோ அங்கு போகிறேன் என்றும் நிலைப்பாடு எடுக்க முடியும்.இப்படி ஒரு விஷயத்தில் பல நிலைப்பாடுகள் எடுக்க முடியும். ஏன் பெண்கள் சேர்ந்து ஒரு கோயிலை எழுப்பி இங்கு அந்த விதி இல்லை, பெண்கள் எந்த நிலையிலும் வரலாம் என்று அறிவித்தால் அவர்களை இந்து மதத்தினை விட்டு யாரும் நீக்க முடியாது.

இந்து மதத்தில் பல்வேறு வழிப்பாட்டு முறைகள், வழிபாடு குறித்த நம்பிக்கைகள் இருக்கின்றன. உனது
சிவன் என்னை அனுமதிக்காவிட்டால் எனக்கான சிவன் கோயிலை நான் கட்டிக்கொள்கிறேன் என்று
கோயில் கட்டினால் அங்கு இருப்பது சிவன் இல்லை என்று யாரும் உத்தரவு போட முடியாது.கர்நாடகாவில் ஒரு தலித் பெண் அதிகாரி தன் கணவருடன் ஒரு ஐயப்பன் கோயிலைக் கட்டியுள்ளார். இது அவரதுச்
சொந்தக் கோயில், அவர் அங்கு பூஜைகளும் செய்கிறார். ஐயப்பனை தன் குழந்தைகளில் ஒருவன் என்கிறார். நாளடைவில் அவர் காலத்திற்குப் பின்னும் அங்கு பெண்கள் பூஜை செய்வது சாத்தியமாகலாம். இது போல் வேறு பல கோயில்கள் உருவாகலாம். ராமகிருஷ்ண மடங்களில் பெண் துறவிகள் இருக்கிறார்கள். ஆனால் பல மடங்களில் பெண்கள் அதிகபட்சம் சிஷ்யைகளாகத்தான் இருக்க முடியும், துறவியாக முடியாது, மடாதியாக முடியாது. கிறித்துவத்திலும் பெண்கள் கன்னியா ஸ்தீரிகளாக இருந்து, மதர் சுப்பீரியர் போன்ற நிலைகளை எட்ட முடியும். பிஷப்பாகவோ அல்லது போப்பகவோ ஆக முடியாது. பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லலாம் என்றார் சுவாமி சித்பவானந்தர். இதை எல்லாத் துறவிகளும், மடாதிபதிகளும் ஏற்காவிட்டாலும் அதை தடுக்க முடியாது. அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளி மாணவி முற்காலங்களில் பெண்களும் முப்புரி நூல் அணிந்திருந்தனர், காயத்ரி மந்திரம் சொல்லி மூன்று வேளையும் ஜெபித்தனர். அதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எழுதியிருந்தார். இது சாத்தியமாகது என்று சொல்ல முடியாது.

இந்து மதத்தில் உள்ள பன்வகைத்தன்மை சிலவற்றை சாத்தியமாக்குகிறது. . இந்தப் பன்வகைத்தன்மை வளர்த்தெடுக்கப்பட வேண்டுமே தவிர, மதம் ஒற்றைப்படுத்தப்படக் கூடாது. பன்வகைத்தன்மை இருப்பதால் பிரச்சினைகள் இல்லை என்று சொல்லவரவில்லை. மாறாக இந்தப் பன்வகைத்தன்மையை எப்படி சாதமாக, சமூக,மத சீர்த்திருத்ததிற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும், படைப்பாற்றலுடம் செயல்பட வெளிகளை, களங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று யோசிக்க வேண்டும்.

பெரியாருக்கு இந்தப் புரிதல் சுத்தமாக இல்லை, அவர்களது சீடர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்களுக்கு பல சமயங்களில் இந்த்துவா வேறு, இந்து மதம் வேறு என்பது கூட புரிவதில்லை. அல்லது புரியாதது போல் இந்து மதத்தினை அழிக்க வேண்டும் என்றெல்லாம் பேசுகிறார்கள். அரசு இதைச் செய்ய வேண்டும், இந்து மதத்தில் தலையிட வேண்டும், சமத்துவத்தினை நிலை நாட்ட வேண்டும் என்று சொல்பவர்கள் அனைத்து மதத்திலும் அரசு தலையிடாது, இந்து மதத்தில் மட்டும் தலையிடும் என்பதைத் தெரிந்து கொண்டே சொல்வதால் அவர்களின் நோக்கம் கேள்விக்குறியாகிறது.

பிற மதங்களில் அரசு தலையிடும் போது அது வழிபாட்டு உரிமை, மத நம்பிக்கை உரிமை ஆகியவற்றில்
அரசு அத்துமீறுவது என்பது மட்டுமின்றி சிறுபான்மையினர் உரிமைகளிலும் அத்துமீறுவதாக ஆகி விடுவதால்
அரசு தலையிட வாய்ப்புகள் மிகமிகக் குறைவு, கிட்டதட்ட இல்லை என்றே சொல்லலாம். ஆனால் இந்து
மதத்தில் பல கோயில்கள் அரசின் நிர்வாகத்தில் இருப்பது அரசுக்கு தலையிட அதிக இடமளிக்கிறது.
ஆட்சியாளர்களுக்கு உதவும் மடாதிபதிகளும் இருப்பது நம்பகத்தன்மை உருவாக உதவுகிறது.

அதே சமயம் அரசு கோயில்களின் மீது முழு பாத்தியதையையும், சடங்குகளை நினைத்தபடி மாற்றும்
உரிமையும் கொண்டதல்ல. அது நிர்வாகி, அறங்காவலர் என்ற முறையிலும், அரசியல் சட்டம் தரும்
உரிமைகளின் அடிப்படையிலும் சிலவற்றைச் செய்ய முடியும். உதாரணமாக கோயில்களில் இந்துக்கள்
யார் வேண்டுமானாலும் நுழையலாம் , திருவிழாக்களில் எந்த இந்துவும் பங்கேற்கலாம், கோயில்களில்
வழிபாட்டில் ஜாதி ரீதியான பாகுபாடு கிடையாது என்பதை உறுதி செய்யலாம். (இதை முழுமையாக
அரசு செய்திருக்கிறதா, கண்டதேவி பிரச்சினை போன்றவற்றை இங்கு அலசவில்லை). ஆனால் இதைப்
பயன்படுத்திக் கொண்டு மதமரபுகளை முற்றாக மாற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை. உதாரணமாக
திருப்பதியில் சில மரபுகளை அரசு மாற்ற முயன்ற போது, அவை காலங்காலமாக நடைபெறுவதையும்,
கோயில் வழிப்பாட்டுமுறைகளை வகுத்த சான்றோர்கள்தான் இவற்றை ஏற்படுத்தினர் என்பதையும் முன்
வைத்து அரசின் முயற்சி முறியடிக்கப்பட்டது. எனவே அரசின் நடவடிக்கைகள் அரசியல் சட்டம்
25ம் விதியின் கீழ் வழங்கும் மத வழிப்பாட்டு உரிமைக்கு இயைவாக இருக்காத போது, அவ்வுரிமைக்கு
எதிராகவோ அல்லது அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளத் தடையாக இருக்கும் போது அதை
எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியும். நீதிமன்றம் தரும் தீர்ப்பு அரசினைக் கட்டுப்படுத்தும்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதன் பொருள் அரசு கோயில் விதிகளை நினைத்தபடி மாற்றியமைக்க முடியும் என்பதல்ல. மேலும் சிலர் நினைப்பது போல் கோயில் வழிப்பாட்டில் சம்ஸ்கிருத்ததினை துடைத்து எறிவதல்ல. அரசாணைக்கு ஆதாரமான உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஒரு குறிப்பிட்ட கேள்வியைப் பற்றியதே,
தீர்ப்பும் அதைப்பற்றியதே. அந்த தீர்ப்பு கூறாதவற்றை அதை ஆதாரமாகக் கொண்ட ஆணை மூலம்
நிறைவேற்ற முடியாது. ஆனால் இந்த அடிப்படை உண்மையைக் கூடப் புரிந்து கொள்ளாமல் எழுதுபவர்கள் இருக்கிறார்கள், இயக்கங்கள் இருக்கின்றன.

ஆண்-பெண் சமத்துவம், சமத்துவம், வழிபாட்டுரிமை, மத நம்பிக்கை இவற்றிற்கிடையே முரண்பாடு
ஏற்படும் போது அரசு முரட்டுத்தனமாக சமத்துவத்தினை திணிக்க முடியாது.உதாரணமாக அனைத்து
மத வழிப்பாட்டு இடங்களிலும் பெண்களை வழிப்பாட்டினை நடத்துபவர்களாக நியமிக்க வேண்டும்
என்று அரசு ஆணையிட்டாலும் அதை நீதிமன்றங்கள் ஏற்பதற்கான வாய்ப்பு குறைவு. அப்படி நியமிப்பது
மதத்தின் அடிப்படைகளுக்கு விரோதமானது, மத வழிப்பாட்டு சுதந்திரத்தினையும், உரிமையையும்
பாதிக்கிறது என்று வாதிட முடியும். ஒரு மதத்தில் ஒரு பிரிவினர் அரசின் தலையீடு இன்றி இதைச்
செய்தால் அதை நீதிமன்றங்கள் நிராகரிக்கும் என்று சொல்ல முடியாது. அப்பிரிவினரிடையே
கருத்தொற்றுமை ஏற்பட்டு இது போன்ற மாற்றங்களை அவர்கள் கொண்டு வரலாம். அவை
சட்டவிரோதமாக இல்லாத வரை அரசு ஒன்றும் செய்ய முடியாது.

தொடரும்

http://ravisrinivas.blogspot.com

Series Navigation

author

ரவி ஸ்ரீநிவாஸ்

ரவி ஸ்ரீநிவாஸ்

Similar Posts