சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 8. அறிவியல்

This entry is part [part not set] of 20 in the series 20060721_Issue

குமரிமைந்தன்


தமிழகத்தில் அறிவியலே கிடையாது; இருப்பவையனைத்தும் மூட நம்பிக்கைகளே என்று கூறும் “பகுத்தறிவாளர்”களும் இங்குள்ள அனைத்தும் தூய அறிவியலிலிருந்து தோன்றின என்று கூறும் மயக்கச் சிந்தனையாளர்களும் இங்கு உண்டு. நம்மிடையில் நூல்களின் வடிவிலும் நடைமுறைகளாகவும் நிலவும் பலவேறு அறிவியற் கூறுகளை ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளிவிடுகின்றனர் பகுத்தறிவாளர்கள். அதே நேரத்தில் ஓமம் வளர்ப்பதால் எல்லாமே இயலுமென்று கூறுகின்றனர் ஏமாற்றுக்காரர்கள். உள்நாட்டு அறிவியல் வளர்ச்சியை ஏற்றுக் கொள்ளும் பகுத்தறிவாளரில் பெரும்பான்மையோர் மேல்சாதி மெய்யியலான யோகம் என்பதை ஏற்றுக் கொண்டு சித்தர்களைத் தம் தொடக்கப்புள்ளியாகக் கொள்வர். கடவுள் இல்லை; எனவே உலக நிகழ்ச்சிகளுக்கு கடவுள் காரணமல்ல; மனிதன் அனைத்து ஆற்றல்களும் உள்ளவன்; அவன் மன ஆற்றல் எல்லையற்றது என்ற நுண்பொருளியக் கோட்பாட்டை இவர்கள் கொண்டுள்ளனர். ஐம்புலன்களையும் ஒடுக்கி மனதை இயற்கையாற்றல்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளச் செய்து இயற்கையின் அனைத்து மறைபொருட்களுடன் சித்தர்கள் இரண்டறக் கலந்து அவற்றைப் புரிந்து கொண்டனர்; அவர்கள் எதையுமே கையாலோ கருவியாலோ அளந்து பார்த்ததில்லை என்று கூறும் அளவுக்கு இவர்கள் சென்று விடுகின்றனர். வேதிய மதத்துக்கு எதிராகச் சித்த சமயத்தைப் பிடிப்பதாகக் கருதிக் கொண்டு இப்படி அவர்கள் கூறுகின்றனர். சித்தர்களில் சிலர் தாங்கள் கூறுவன வெற்றூகங்கலிருந்து தோன்றியவையல்ல; செயல்முறையிலும் கருவிகள் (இயந்திரங்கள்) உதவியாலும் சரிபார்க்கப்பட்டவையே என்று கூறியிருப்பதை[1] அவர்கள் அறியவில்லை. இவர்களது இந்த “ஆன்மீக” அணுகு முறையால் சித்த மருத்துவம் போன்ற நம் அரும்பெரும் அறிவியல் படைப்புகளின் உண்மையான அறிவியல் முறையை நம்மால் அறிந்துகொள்ள இயலாமல் இருக்கிறது. இவர்களது இந்தத் தவறான விளக்கத்தால் “மேனிலைத் தியானம்” போன்ற மோசடிகளுக்கு மெய்யியல் சான்று கிடைத்து விடுகிறது. கடவுள் மறுப்புக் கொள்கையிலிருந்து தொடங்கிய பலர் இராமகிருடினர், இரமணர், சாயிபாபா, பங்காரு அடிகள் போன்றோரைக் கடவுள்களாகவே காணத் தொடங்கிவிட்ட இழிநிலை தற்செயலானதல்ல, சித்தர்களைப் பற்றிய தவறான இந்தக் கண்ணோட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவே இது.

மேலே கூறிய “மகான்”களை வழிபடுவோர் வெறும் மெய்யியல் தவறுகளினால் மட்டும் வழிநடத்தப்படவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டுக் காட்ட வேண்டியுள்ளது. இந்த வழிபாட்டில் ஈடுபட்டிருப்போர் பெரும்பாலும் உயர் அதிகாரிகளும் பெரும் வாணிகளர்களும் தொழில் முதலாளிகளுமே. இந்த “மகான்”கள் இவர்களது பொருளியல் வாழ்வின் பாதுகாப்புக்கும் மேம்பாட்டுக்கும் இடைத்தரகர்களாகவும் தொடர்பாளர்களாகவும் செயற்படுகின்றனர். கல்லூரிகளில் பிள்ளைகளுக்கு இடம் பிடித்தல், பதவி உயர்வு, தொழில் – வாணிகத் தொடர்பு, குற்றச் செயல்களின் விளைவுகளிலிருந்து தப்புதல் ஆகியவை இந்த “மகான்”களின் மூலமாகவும் இந்த வழிபாட்டு அமைப்புகளில் கிடைக்கும் நேரடித் தொடர்புகளாலும் நடைபெறுகின்றன. உண்மையில் இந்த வழிபாட்டு அமைப்புகள் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இயங்கும் தம்மூப்பு அமைப்புகளான “மாபியா” போன்றவையே. இந்த அமைப்புகளின் தலைமையிலிருக்கும் “மகான்”களின் “தெய்வீக ஆற்றல்” இதற்கு மூடுதிரையாகப் பயன்படுகிறது. இந்த வகையில் இந்த வழிபாட்டு அமைப்புகள் மேலை நாடுகளின் தம்மூப்பு அமைப்புகளைப் போல் எளிதில் இனங்கண்டு பிடிக்க முடியாதவை; எனவே எளிதில் அழிக்க முடியாதவை.

இந்த மெய்யியலுக்கு அடிப்படை என்ன? மனித மனதில் புறமனம், உள்மனம் என இரண்டு பகுதிகள் உள்ளன. புறமனம் புலனறி புலனங்களைப் (Informations) பகுத்தாய்ந்து தன்னுணர்வுடன் முடிவுகளை எடுக்கிறது. புலன்கள் மூலம் சென்று ஆனால் புற மனத்தில் பதியப் பெறாது நேரடியாக உள் மனத்தில் தங்கிடும் செய்திகள் பல உள்ளிருந்து கொண்டே மனிதனைப் பல வழிகளில் இயக்குகின்றன. இதனை உள்ளுணர்வு என்று நாம் கூறுகிறோம். விலங்குகளின் பெரும்பாலான செயல்கள் உள்ளுணர்வின் தூண்டுதலாலே இயக்கப்படுகின்றன. மனிதனுக்கும் இந்த உள்ளுணர்வு தனது பழைய விலங்குநிலை வாழ்வின் தொடர்ச்சியாகவே உள்ளது.

புலன்களைச் செயலிழக்கச் செய்வதன் மூலம் உள் மனத்துடன் நேரடித் தொடர்பு கொள்வதும் அதன் மூலம் பிறரது உள் மனத்துடன் தொடர்பு கொள்வதுமே யோகம் போன்றவற்றால் ஏற்படும் விளைவு. புலன்கள் செயலிழப்பதற்கு நேரடியாக பயிற்சியும் இசை, ஆடல் போன்ற துணைச் செயல்களும் உதவுகின்றன. தெய்வமாடுதல், பேயாடுதல் போன்றவற்றில் இவ்வுத்தி பயன்படுகிறது. குறி சொல்வோர் உடுக்கையடிப்பதன் மூலம் ஓரளவு இந்த நிலையை எய்துகின்றனர். இன்றைய அறிவியலில் வசியம் (இப்னாட்டிசம்) இதனையே செய்கிறது. இதிலிருந்து சிறிது மாறுபட்ட அளவில் செப்பிடு வித்தைக்காரன் செயற்படுகிறான். இந்த நோக்கில் பார்க்கும் போது நாம் மேலே கூறியோர் போன்ற “மகான்”கள் பணக்காரர்களின் முன் தொழில் நடத்தும் வெறும் செப்பிடு வித்தைக்காரர்களே. (அண்மையில்[2] மதுரையில் பங்காரு அடிகள் நடத்திய மாநாட்டில் பெருமளவில் மணமான அழகிய இளம் பெண்கள் கலந்து கொண்டனர். அரங்குகளில் வசியம் கையாளப்படுகிறது என்ற பேச்சு அடிப்பட்டதால் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை மிக விழிப்பாகக் கண்காணிக்க வேண்டியிருந்தது என்று பரவலாகப் பேசப்பட்டது).

“இந்து” நாளிதழில் “பேரானந்தம்” பற்றி ஒரு துறவி (அவர் பெயரில் தொடக்கத்தில் “சுவாமி” என்றும் இறுதியில் “ஆனந்தர்” என்றும் அடைமொழிகள் இருந்ததால் “துறவி” என்று குறிப்பிடுகிறேன்) ஒரு சிறு கட்டுரை எழுதியிருந்தார். தன்னை மறந்து பரம்பொருளுடன் ஒன்றி விடுவது தான் உயிருக்குப் பேரின்பம்; அதனை இடைவிடாத யோகப்பயிற்சி மூலம் பெற முடியும். கஞ்சா போன்ற பொருட்களின் மூலமும் பெற முடியும் என்று அவர் கூறியிருந்தார். எனவே அவரது கூற்றுப்படி பார்த்தால் கஞ்சா மூலம் பெறத்தக்க “அறிவியலை”ச் சித்தர்கள் தம் “சித்து விளையாட்டுகள்” மூலம் கஞ்சா இன்றியே (இதிலும் கருத்து வேறுபாடு உண்டு. சித்தர்கள் கஞ்சாவைப் பயன்படுத்தினர் என்று கருதுவாரும் உளர்) எய்தினர் என்று சித்தர்களைக் கொச்சைப் படுத்துவதாக ஆகிவிட்டது. பழங்குடி மக்களிடையில் நோய் தீர்ப்பதற்கென்று ஒருவகைப் பூசாரிகள் உள்ளனர். இவர்களைச் சாமன்கள் (Shamans) என்று அழைப்பர். இவர்களால் மக்களுக்கு நோய்கள் மற்றும் பிற தீமைகளை உண்டாக்கவும் முடியும் என்ற நம்பிக்கை நிலவுவதால் குமுகத்தில் வலிமையான செல்வாக்கு இவர்களுக்கு உண்டு. இந்த சாமனின் பணி நம் நாட்டுப்புறத்தில் தொழிற்பிரிவுக்குட்பட்டு மருத்துவன், குறிசொல்வோன், மந்திரிப்போன், மந்திரவாதி, செப்பிடு வித்தைக்காரன் என்று பிரிந்துவிட்டது. இது ஒரு வகைக் குமுக வளர்ச்சி நிலையைக் காட்டுகிறது. ஆனால் அதே சாமனியம் ஏறக்குறைய தன் பழைய வடிவில் மேற்சாதிகளிடையில் செல்வாக்குச் செலுத்துவதையே நாம் மேலே சுட்டிக் காட்டிய மயக்கங்கள் காட்டுகின்றன.

கீழ்ச்சாதியினரிடையில் இத்தகைய மயக்கங்களுக்கு இடமில்லை. அவர்களது அறிவியல் அவர்களது தொழில் நுட்பங்களினுள்ளும் நம்பிக்கைகளினுள்ளும் மறைந்து கிடக்கிறது. வழி வழியாகத் தொடர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவிலிருந்தும் நம்பிக்கைகளிலிருந்தும் அவர்களது அறிவியல் மண்டலத்தைப் பிரித்து அறிய முடியாமலிருக்கிறது.

அறிவியல் மண்டலம் என்பது ஆங்கிலத்தில் System of Science என்று கூறுவதற்கு இணையானது. ஓர் அறிவியல் மண்டலத்தில் கோட்பாடுகள், கோட்சுட்டு மண்டலங்கள் (Reference Systems) எண் வரிசை, சரிபார்க்கும் முறைகள், கையாளும் முறைகள் போன்ற பிரிவுகள் அடங்கும். இன்றைய அறிவியலில் அளவுகள் புவியின் அளவுகளோடு ஒப்பிடப்படுகின்றன; புவியின் இயக்கம் கோட்பாட்டு மண்டலமாகிறது; பத்தடிமான (Decimal) எண் மண்டலத்திலிருந்து இரண்டடிமான (Binary) எண் மண்டலம் செல்வாக்குப் பெற்று வருகிறது; ஆய்வகச் சரிபார்க்கும் முறை பெரும் பங்கு ஏற்கிறது. நுட்பமான வாய்ப்பாடுகளைக் கையாளும் திறவோர்களால் மட்டும் கையாளத்தக்கனவாக இன்றைய கையாளும் முறைகள் உள்ளன. மாறாக நம் பண்டை அறிவியல் மண்டலத்தில் கோட்பாடுகள் பற்றித் தெளிவாக எதுவும் கூற முடியவில்லை. வான மண்டலத்தை கோட்சுட்டாகக் கொண்டுள்ளதற்குத் தடயங்கள் தென்படுகின்றன. அதனால் தான் ஐம்பூதங்களில் நாம் எளிதில் புலனுணர்ந்து கொள்ளத்தக்க நிலம், நீர், காற்று, தீ ஆகியவற்றுடன் நேரடித் தொடர்பு காணப்படாத வான்வெளியும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது பண்டை மேலை நாட்டுப் பூதப்பிரிவிலும் (Principal elements) வட இந்தியப் பூதப் பிரிவிலும் இல்லாத ஒன்றாகும். இரண்டடிமானமும் பத்தடிமானமும் கலந்த ஓர் எண் வரிசை பயன்பட்டதாகவும் தெரிகிறது; சரி பார்க்கும் முறையைப் பற்றித் தெளிவாக எதுவும் விளங்கவில்லை. சிறிய அளவில் ஆய்வக முறையும் பெருமளவில் களக்கையாளலும் பயன்பட்டிருக்கக் கூடும். ஆனால் எவரும் எளிதில் கையாளத்தக்க ஒரு கையாளும் முறை இருந்திருக்கிறது. இந்தத் தரவுகளை வைத்து நம் பண்டை அறிவியலை மீட்டெடுக்க முயலலாம்.

வான் வெளியிலுள்ள கோள்கள், நாள்மீன்கள், மேகத்தின் தன்மை, பறவைகள், விலங்குகளின் நடத்தைகள் ஆகியவற்றிலிருந்து மழை வரவை முன்னறிவது, திட்டவட்டமான சூத்திரங்களிலிருந்து எழுந்த விகிதங்களின் அடிப்படையில் கட்டிடத்தின் பரிமாணம் என்ற வரையளவின் துணை கொண்டு தனித்தனியாகச் சுவரையும் கூரைப் பணியையும் செய்து பொருத்தல், வண்டிகள், தேர்கள் சமைத்தல், கூர்மையும் தி(நு)ட்பமும் உடைய கருவிகளைச் செய்தல் பல்வேறு வகை மருத்துவ முறைகளையும், மருந்துகளையும் கையாளல் என்று அன்றாட வாழ்வில் அவர்களது அறிவியல் புதைந்து கிடக்கிறது. இன்று மேனாட்டுக் கல்வி முறையில் நம் நாட்டில் அறிவியல் பயில்வோர் நம் நாட்டில் நிலவும் தொழில்நுட்பத்திலிருந்து நம் அறிவியலை இறுத்தெடுக்கும் எண்ணம் சிறிதும் இல்லாதவர். மாறாகப் பள்ளியினுள் நுழைந்தவுடன் இம்மாணவர்களின் சிந்தனை தம் சுற்றுச் சூழலிலிருந்து அயற்படுத்தப்பட்டு மேற்சாதிப் பார்ப்பனிய, அதாவது வெள்ளாளப் பண்பாட்டினுள்ளும் மேலை நாட்டுத் தரகுச் சிந்தனையுள்ளும் சிறைப்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக வேளாண்மையில் வெள்ளைக்காரர்களின் உத்திகள் நம் நாட்டுக் கற்றோரின் மூலம் புகுத்தப்பட்டபோது உள்நாட்டு முறைகளின் உண்மையான தன்மைகள் சிறிதும் ஆராயப்படாமல் அவை தூக்கியெறியப்பட்டன. ஆனால் இம்மேனாட்டு உத்திகள் வைரசுத் தாக்குதல் போன்ற சில நிலைமைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போனபோது மீண்டும் வேப்பம் பிண்ணாக்கைத் தேடி ஓடி வர வேண்டியிருக்கிறது. இருந்தாலும் இன்றும் உள்நாட்டு மரபு வேளாண்மை பற்றிய ஒரு தெளிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் எந்த “அறிவியல் அறிஞரு”க்கும் தோன்றவில்லை. அதுபோன்றே நச்சு முறிவுக்கு மந்திரித்தல், பேயாட்டுதல் போன்ற செயல்முறைகளைப் பற்றியும் ஆற்றல் மிக்க எண்ணற்ற மருந்துகளைப் பற்றியும் எவரும் முறைப்படியான ஆய்வுகள் செய்ததில்லை.

இதைக் கூறும் போது தமிழகத்தில் இருந்தவற்றை எல்லாம் அப்பழுக்கற்ற அறிவியல் தன்மையுடையவை என்று நாம் கட்சி கட்டுவதாகப் பொருளில்லை. நம் நாட்டில் நாம் பெருமைப்படத்தக்க அறிவியலும் தொழில் – நுட்பமும் இருந்தன என்பதை நம்மால் மெய்ப்பிக்க முடியும். நீர், நீராவி, மின்சாரம், அணு ஆகிய ஆற்றல் மூலங்களைக் கையாள்வதே நமக்கு முற்றிலும் புதியவையாக இருக்கக்கூடும். இந்த வகையில்தான் மேலை அறிவியல் வேறுபடுகிறது; இதனாலேயே மேம்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டைச் சுட்டிக் காட்ட முடியும். காவிரியில் (உண்மையில் காவிரியின் குறுக்கே இவ்வணை கட்டப்படவில்லை. காவிரி நீர் வடக்குக் கரையில் உடைத்துக் கொண்டு உள்ளாறு வழியாகக் கொள்ளிடத்தினுள் போய் விடுவதைக் கட்டுப்படுத்தவும் அதே நேரத்தில் தேவையான சமயங்களில் தேவையான அளவு அவ்வாறே அந்த நீரை வெளியேற்றவும் வடக்குக் கரையில் அந்த அணை கட்டப்பட்டுள்ளது) கட்டப்பட்டுள்ள கல்லணை நேர்கோட்டில் கட்டப்படவில்லை. பாம்பு போல் வளைந்து நெளிந்து அது கிடக்கிறது. இப்படி ஏன் வளைத்துக் கட்டப்பட்டது என்ற கேள்வியே யாருக்கும் எழவில்லை. இதைப் புரிந்து கொள்வதற்கு அண்மைக் கால அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று உதவும். ஆறுகளில் அணைக்கட்டுகள் கட்டி (மேட்டூர் போன்ற நீர்த் தேக்கங்கள் அல்ல, சோடர்பாளையம் போன்ற திருப்பு அணைகள்) அவற்றிலிருந்து மதகுகள் மூலம் வாய்க்கால்கள் எடுக்கும் போது ஆற்றின் அடிப்பரப்பில் நகர்ந்து வரும் மணல் வாய்க்காலினுள் புகுந்து விடுவது இன்று வரை பாசனப் பொறியாளர்களுக்குப் பெரும் தலைவலியாக இருக்கிறது. இதைத் தடுப்பதற்கு முழுமையான ஒரு தீர்வை உலகிலுள்ள பொறியாளர்களால் உருவாக்க முடியவில்லை. இந்நிலையில் சோவியத்திலுள்ள ஆய்வாளர்கள் அணைக்கட்டைக் குதிரைக் காற்பரளை (லாடம்) வடிவத்தில் கட்டி இருமுனைகளிலிருந்தும் வாய்க்கால்கள் எடுத்தால் வாய்க்காலினுள் மணல் செல்லாது என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். நம்நாட்டில் சிற்றோடைகளில் வெள்ளைக்காரர்களுக்கு முன் கட்டப்பட்ட அணைக்கட்டுகளில் பெரும்பாலானவை மேல் நோக்கி வளைத்து அல்லது மடித்துக் கட்டப்பட்டிருப்பதைப் பார்த்தால் சோவியத்து அறிஞர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளதை நம் நாட்டார் முன்பே அறிந்திருந்தனர் என்பது தெரியவரும். ஆனால் கல்லணை கட்டப்படும் போது வளைத்துக் கட்டுவதன் அடிப்படைக் கோட்பாட்டுணர்வு மறைந்து அணைக்கட்டுகளை நேராகக் கட்டக்கூடாது என்ற மரபு மட்டும் நிலவியதால் இப்படி வளைத்து நெளித்துக் கட்டினர். இல்லையானால் ஒரே வளைவாக வில்போலக் கட்டியிருப்பர். அடிப்படை அறிவியல் உணர்வைப் பேணும் சூழல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் அழிந்து போயிற்று என்றும் அதன் சிதைவுகளாகச் சில எச்சங்கள் நம்மிடையில் இன்றும் நிலவி வருகின்றன என்றும் இதிலிருந்து நம்மால் அறிய முடிகிறது. இந்த எச்சங்கள் இன்று அல்லது வெள்ளையர் வரும்போது வெறும் மூடநம்பிக்கைகள் எனக் கருதும் அளவுக்குச் சிதைந்து போய்விட்டன. இந்த எச்சங்களிலிருந்து நம் பழைய அறிவியலை வெளிக்கொணர்வதற்கு மேலை அறிவியலின் துணையின்றி இயலாத அளவுக்கு நம்மிடையில் அறிவியலுணர்ச்சி கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்து போய் விட்டது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

மேலை அறிவியலார் இன்று தான் ஒத்து கொள்ளத் தொடங்கியிருக்கும் நம் நாட்டாரின் சில “நம்பிக்கைகள்” பற்றியும் நம் அறிவியலார் சிந்திப்பதில்லை. எடுத்துக்காட்டாக முழுநிலா, அமாவாசை ஆகிய உவா நாட்களில் (முழுநிலா = வெள்ளுவா, அமாவாசை = காருவா) மழை வாய்ப்புகள் அதிகமென்பதும் அந்நாட்களில் உடல்நலம், மனநலம் குன்றியோர்க்கு அத்துன்பங்கள் மிகுமென்பதும் நம் நாட்டினரின் நம்பிக்கை மட்டுமல்ல நடைமுறையில் காணும் உண்மை. இவற்றை மேலை அறிவியலார் இப்போதுதான் ஒவ்வொன்றாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். அல்லது மீளக் கண்டுபிடித்துள்ளனர். (காப்பர்நிக்கசின் சூரிய மண்டலம் பற்றிய கண்டுபிடிப்பு முதல் மேலே கூறப்பட்டுள்ளது வரை நம்மைப் பொறுத்தவரை மீளக் கண்டுபிடிப்புகளே). ஆனால் நம் நாட்டிலுள்ள “பகுத்தறிவு”ச் சிந்தனையுள்ள அறிவியலார் பலர் இதனை அப்படியே புறக்கணிக்கின்றனர்; பழமை விரும்பிகளான அறிவியலாரோ சோதிடத்தின் துல்லியத்தன்மை அல்லது வேள்வியின் அனைத்து வல்லமை அல்லது மனுச்சட்டத்தின் மேன்மை இதன் மூலம் நிறுவப்பட்டது எனக் கூறுகின்றனர். உலகும் அதில் வாழும் உயிர்களும் வான்வெளிப் பொருட்களின் இடைவினைப்பாடுகளால், இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், புவிக்கும் நிலவுக்கும் உள்ள இடைவினைப்பாட்டால் பாதிக்கப்படுகின்றன என்ற அறிவியல் உண்மையினடிப்படையில் இதை யாரும் பார்ப்பதில்லை என்றே கூற வேண்டும். உயிரின் தோற்றத்தில் கூட நிலவின் பங்கு பெருமளவு இருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. சிற்றுயிர்களில் பல வெள்ளுவா நாட்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. பேருயிர்களில் பூப்பெய்தல் (மாதவிடாய் தோன்றுதல்) உவா நாட்களில் பொருந்தி வரவில்லையாயினும் அந்த இடைவெளி (ஏறக்குறைய 28 நாட்கள்) கிட்டத்தட்டப் பொருந்தி வருகிறது. ஒருவேளை தொடக்கத்தில் நிலவின் சுழற்சி இந்த 28 நாட்களாகக் கூட இருந்திருக்கலாம் (இப்போது ஏறக்குறைய 29½ நாட்கள்). தென்னை மரம் ஆண்டுக்குப் பதின்மூன்று அதாவது 28 நாட்களுக்கு ஒன்று வீதம் ஓலைகளையும் பூக்களையும் வெளிக் கொணருகிறது. இந்த அடிப்படையிலிருந்து நோக்கினால் பிற கோள்கள், விண்மீன் கூட்டங்கள் ஆகியவற்றால் புவியில் நிகழும் நிகழ்ச்சிகளையும் நம்மால் கணிக்க முடியும். நம் மருத்துவம், இசை, நாட்டியம் போன்ற துறைகள் கோள்கள் மற்றும் விண்மீன்களுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ நூல்கள் எழுதியுள்ள நம் பண்டை அறிஞர்களில் விதிவிலக்கின்றி அனைவரும் கணிய (சோதிட) நூல்களும் இயற்றியுள்ளனர். எனவே இவற்றை அணுகி நுணுகி ஆய்ந்தால் நம் பண்டை அறிவியல் மண்டலத்தின் அடிப்படை அணுகலை கூட அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு.

அதேபோல் மொழியியலிலும் மெய்ப்பாட்டியலிலும் (Aesthetics) இலக்கியத், திறனாய்விலும் மாந்தனியலிலும் தொல்காப்பியம் காட்டுகின்ற வளர்ச்சி நிலையைத் தாண்டி மேலை அறிவியலின் இத்துறைகள் இன்னும் செல்லவில்லை என்ற உண்மையை, அவற்றை ஒப்பிட்டுப் பயில்வோர் நாள்தோறும் கண்டு வருகின்றனர்.

இப்போது உள்நாட்டு அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் வளர்ப்பது என்ற பெயரில் நம் நாட்டில் சில இயக்கங்கள் தோன்றியுள்ளன. ம.நா.அ.தொ (மக்கள் நாட்டுப் பற்று அறிவியலும் தொழில்நுட்பமும் – P.P.S.T. People’s Patriotic Science and Technology) குழுவினர் இத்தகைய ஓர் இயக்கமாகும். இவர்களில் பெரும்பாலோர், குறிப்பாகத் தமிழ்நாட்டிலுள்ளோர் இரண்டு கோடிகளிலுள்ள நிலைகளில் நிற்கின்றனர். ஒரு புறம் மேலை அறிவியலில் தீங்கான கூறுகள் மட்டுமே உள்ளன என்று கூறுகின்றனர், அதே வேளையில் உள்நாட்டு அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் பற்றி மேலை நாட்டு ஆசிரியர்களிடமிருந்து மேற்கோள்கள் காட்டுவதைத் தவிரத் தாமே இதுவரை ஒன்றைக் கூட இனம் காண இவர்களால் இயலவில்லை. அத்துடன் வெள்ளையர் வருவதற்கு முன் இங்கு எல்லாமே சிறப்பாக இருந்தது எனவும் வெள்ளையன் வந்த பின்னரே எல்லாம் கெட்டுவிட்டன எனவும் இரா.சே.ச. (இராட்டிரிய சுயம் சேவா சங்கம் R.S.S.)-வுக்குப் பக்கமேளம் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? வரலாற்றுக் காலத்துக்கு முன்பும் அல்லது அதன் தொடக்கத்திலும் பின்னர் சில குறுகிய இடைவெளிகளின் போதும் தமிழகத்தில் பெரும் அறிவியல் – தொழில் நுட்ப வளர்ச்சி இருந்தது. ஒட்டுண்ணி வகுப்புகளாகிய அரசும் சமயத் தலைவர்களான பார்ப்பனர்களும் மடத்தடிகளும் நீண்ட நெடுங்காலமாக வலிமையான ஒரு கூட்டணியாகச் செயற்பட்டு அவற்றை அழித்துச் சிதைத்தனர்; அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களைக் கையாணடவர்களை ஒடுக்கினர், கீழ்ச்சாதிகளாக்கி இழிவுபடுத்தினர்; அவ்வாறு ஒடுக்கப்பட்ட தொழில் நுட்பச் சாதியினர் தலைமை தாங்கி நடத்திய வலங்கை இடங்கைப் போராட்டத்தை வெறும் சாதிப் போராட்டமாகத் திசை திருப்பினர். இவ்வாறு இடைவிடாத தாக்குதலுக்குள்ளான நம் அறிவியலும் தொழில்நுட்பமும் சிதைந்து குலைந்து ஊர்ப்புறங்களுக்குள் சென்று பதுங்கி மூடநம்பிக்கைகளாகத் திரிவுண்டன. இவ்வாறு பதுங்கிய அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் நாமாகவே இனம் கண்டு கொள்ளும் நிலையில் இன்னும் கூட நம் “அறிஞர்கள்” இல்லை. அதற்கு வெள்ளையர் வளர்த்தெடுத்துள்ள இற்றை[3] அறிவியலின் துணையும் சரியான வரலாற்றறிவும் கோட்பாட்டுணர்வும் தேவைப்படுகின்றன. இந்த வகையில் வெள்ளையர் இந்தியாவில் ஆற்றிய ஆக்கப் பணி, அதாவது அழிவுப் பணி பற்றிய மார்க்சின் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதே. அந்த அழிவிலிருந்து புதிய ஒன்றைப் படைப்பது நம் நாட்டு அறிவர்களின் பணியாகும். அத்துடன் நம் அறிவியலும் தொழில் நுட்பமும் சீர்குலைவதற்குக் காரணமாயிருந்த குமுக நிலைமைகளை, அதாவது குறிப்பாக உழைப்பையும் உழைப்போரையும் இழிவுபடுத்துவதையும், ஒடுக்குவதையும் முடிவுக்குக் கொண்டுவந்து அவர்களை ஊக்குவது இவை எல்லாவற்றையும் விட முதன்மையானது.

இங்கு ஒட்டுண்ணிகளுக்கும் சுரண்டுவோருக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைப் பிரித்துணர வேண்டுவது இன்றியமையாதது. ஒரு முதலாளியோ வாணிகனோ ஓர் உழைப்பாளியின் உழைப்பின் பயனில் வரம்பு மீறிய பங்கைப் பெறும் போது அவன் சுரண்டுவோன் ஆகிறான். தொழிலை நடத்துவதற்கு, அல்லது பொருளை விற்பதற்கு உழைப்பாளிக்கு உதவுகிறவன் என்ற வகையில் அதற்குரிய பங்கை மட்டும் பெறும் போது அவனும் உழைப்பாளியாகிறான். தெருவில் காய்கறி விற்கும் ஒரு பெண் வாணிகம் செய்வதால் சுரண்டுபவளாக மாறி விட முடியாது. அதே போல் மிதிவண்டி பழுது பார்க்கும் சிறு கடை வைத்திருக்கும் ஒருவன் தன்னிடம் கூலிக்கு வேலை பார்க்கும் சிறுவனிடம் பெரும் சுரண்டல் நடத்துவதாகக் கூற முடியாது. அதே நேரத்தில் ஒரு பெரும் முதலாளியோ வாணிகனோ தன்னிடம் வேலை பார்க்கும் அல்லது செய்பொருளை விற்கும் உழைப்பாளியைப் போல் பல்மடங்கு வருவாய் பெறும் போது அவன் சுரண்டுவோனாகிறான். அதே நேரத்தில் மக்கள் மீதான வரி விதிப்பிலிருந்து பெறப்படும் சம்பளத்திலும் கையூட்டிலும் வாழும் ஓர் அரசு அதிகாரியையோ அல்லது மக்கள் வழங்கும் காணிக்கை, கோயில் மற்றும் மடங்களின் சொத்துக்களைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் சமயத் தலைவரையோ சுரண்டுவோராகக் கூற முடியாது. அவர்கள் தான் ஓட்டுண்ணிகள். வாணிகர்களை ஓட்டுண்ணிகளாகக் கருதும் போக்கு பல “மார்க்சியர்”களிடம் உள்ளது. அது சரக்குக்கும் வாணிகத்துக்குமுள்ள உறவைப் புரிந்து கொள்ளாமையின் விளைவேயாகும். பண்டம் அல்லது செய்பொருள் எப்போது சரக்காகிறது? அது படைப்போனின் நேரடி நுகர்ச்சிக்காகவன்றி அவனறியாத அவனால் அறிய முடியாத வேறுயாரோ ஒருவனின் நுகர்ச்சிக்காகப் படைக்கப்படும் போதுதான். அவ்வாறு படைப்போன் தான் படைக்கும் பொருளை இன்னொருவன் படைத்த பொருளோடு பண்டமாற்றுச் செய்யும்போது பண்டம் சரக்காகிறது, படைப்போன் வாணிகனாகிறான். கருநிலையில் பண்டமாற்றாக நிலவிய வாணிகம் படைப்பிலிருந்து விடுபட்ட முழுமையான வாணிகனின் தோற்றத்தினால் முழுமை பெறுகிறது. சரக்குப் படைப்பு தெளிவான தோற்றம் பெறுகிறது; முதலில் பண்டமாற்றுக்காவும் பின்னர் விற்பனைக்காகவும் படைக்கப்பட்ட சரக்குக்கு வாணிகன் இன்றி வாழ்வில்லை, இயக்கமில்லை. எனவே வாணிகன் சரக்குப் படைப்பின் பிரிக்க முடியாத உறுப்பாகிறான். எனவே அவனின்றி சரக்குமில்லை. ஆகையால் சரக்கு விளைப்புமில்லை. ஆகவே அவன் சுரண்டுவோனாக முடியுமே தவிர ஒட்டுண்ணியாக முடியாது. சில நிலைமைகளில் ஒட்டுண்ணியின் தன்மையை அவன் கொண்டிருக்கலாம். சரக்கு விளைப்பிலிருந்து குமுகம் வகுப்புகளாகப் பிளவுண்டது என்பது மார்க்சிய நிலைப்பாடு. இதை ஏற்றுக் கொள்வதாயின் இதன் மறுதலையாக வாணிகத்திலிருந்து குமுகம் வகுப்புகளாகப் பிளவுண்டது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாணிகம் இன்றி சரக்கு அதாவது விற்பனைக் கென்றே படைக்கப்பட்ட பண்டம், இருக்க முடியாது. எனவே விற்பனைக்கென்று படைக்கப்பட்ட, அதனால் படைப்போரின் தேவையை மிஞ்சிப் படைக்கப்பட்ட, அதாவது மிகுதியான சரக்கும் அதை வாங்குவோரிடத்திலுள்ள பற்றாக்குறையும் சேர்ந்து உருவானது வாணிகமும் அதன் தொடர்ச்சியான தனி உடைமையும். வெறும் மிகுதி மட்டும் தனிவுடைமையை உருவாக்க முடியும் என்று மார்க்சு கூறியது மீளாய்வுக்குரியது. ஏனென்றால் தனிப்பட்ட ஒரு குமுகத்தின் பொது உழைப்பிலிருந்து, எனவே குமுகத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடாத எவராலும் குமுக உழைப்பைத் தனதாக்கிக் கொள்ள முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட குமுகங்கள் பண்டமாற்று மூலமாகவோ அல்லது போர்களின் மூலமோ இடைவினைப்படும் போது அதிலிருந்து தவிர்க்க முடியாமல் பிறக்கின்ற, எல்லாக் குமுகங்களிலிருந்தும் விடுபட்ட ஒரு குழுவினாலேயே இதைச் செய்ய முடியும். அது படையாக அமைந்த வாணிகக் குழுவாயிருக்கலாம் அல்லது அடக்குமுறையிலிருந்து உருவான படையின் தலைவர்களாயிருக்கலாம். முதல் வகைக்குப் பினீசியர்களையும் இரண்டாம் வகைக்குப் பாரசீகர்களையும் வரலாற்றுச் சான்றுகளாகக் காட்ட முடியும்.

இவ்வாறு சரக்கு விளைப்போடு அதாவது படைப்பு விற்பனை என்ற இரண்டோடும் நேரடித் தொடர்பு கொள்ளாமல் படைப்புச் செயல்முறையிலிருந்து விடுபட்டு குமுகத்திற்கு மேலே நிற்கும் அரசும் சமயமும் தான் ஒட்டுண்ணிகள். இந்த ஒட்டுண்ணிகள் உலகில் எங்கும் காண முடியாத அளவில் நம் நாட்டில் முழுமையான வளர்ச்சியைப் பெற்றுவிட்டனர், எனவே தன்னுணர்வோடு செயற்படுகின்றனர். தமக்கு உலை வைக்கும் ஆற்றல் முதலாளி வகுப்புக்கும் வாணிக வகுப்புக்கும் உண்டென்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்து அவற்றின் வளர்ச்சியை விழிப்பாகக் கண்காணித்து வந்தனர். தமக்கு அச்சமூட்டும் அளவுக்கு அவற்றின் வளர்ச்சி செல்லக் கூடும் என்று தோன்றிய போதெல்லாம் சிறிதும் தயங்காமலும் காலந்தாழ்த்தாமலும் அவற்றை அழிக்க இவ்வொட்டுண்ணிகள் என்றும் தயங்கியதில்லை. நாம் முன்பு கூறியது போல் படைப்புச் செயல்முறையின் எல்லா உறுப்புகளிலிருந்தும் முற்றிலும் அயற்பட்ட இந்த ஒட்டுண்ணிக் கூட்டத்தின் “படைப்பே” “இருவினை நீக்கும்” மெய்யியல்.

வாணிக வகுப்பின் ஆற்றலுக்கு தொழிற் புரட்சியின் முன்பும் அதன் போதும் ஐரோப்பா, குறிப்பாக பிரிட்டன் மறுக்க முடியாத சான்றாக நிற்கிறது. அங்கு அது நல்ல வளர்ச்சி பெற்ற போது வாணிக முதலைத் தொழில் முதலாக்கி முதலாளியத்தை வளர்த்தது. அரசு, சமயம் இரண்டையும் தனக்குப் பணிபுரிய வைத்தது. இங்கு அரசும் சமயமும் தன் முழு ஓட்டுண்ணித் தனத்திலிருந்து வாணிகத்துக்கும், எனவே பண்டப் படைப்புக்கும் உதவும் கருவிகளாக மாறின.

மாறாக நம் நாட்டில் இன்று இந்த இரு ஒட்டுண்ணிகளும் முதலாளிய மற்றும் வாணிக வகுப்புகளை வளரவிடாமல் செய்ததன் மூலம் அவற்றைத் தரகுத் தன்மையுடையவையாய் நீண்டகாலமாக வைத்திருக்கின்றன. இங்கு ஒட்டுண்ணிகளாகிய இவ்விரு வகுப்புகளுக்கும் படைப்பு வகுப்புகளாகிய இரு வகுப்புகளும் அடிமைப்பட்டு நிற்கின்றன. ஒட்டுண்ணி வகுப்புகளின் நலனைக் காப்பதற்கும் அவற்றை நிலைப்படுத்துவதற்கும் உள்நாட்டு நலனை அடகு வைத்து நாட்டின் வளங்களைச் சுரண்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உதவும் கருவிகளாகி நிற்கின்றன. இந்த இருவகை நிலைமைகளை மார்க்சியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் உருவாகாமல் தீர்ந்து போகின்ற ஆற்றல் மூலங்களாகிய நிலக்கரி, கல்லெண்ணெய் (பெட்ரோல்) அணு எரிபொருள் போன்றவற்றுக்குப் பகரம் (பதிலாக) திரும்பத் திரும்பக் கிடைக்கத் தக்க காற்று, வெயில், நீர்விழ்ச்சி, கடலலை, நிலைத்திணைகள், கால்நடைகள், அவற்றின் கழிவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டுமென்பது காந்திய நிலைப்பாடு. அவற்றில் சிலவற்றை அண்மைக் காலங்களில் மேலை நாடுகள் மீண்டும் கையாளத் தொடங்கியுள்ளன. இதை நாமும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சிலர், குறிப்பாகப் பொறியாளர் இரா. கணேசன் போன்றோர் பழைய கலப்பையையே மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். ஆனால் இந்த முயற்சி வெற்றி பெறப் போவதில்லை. ஏனென்றால் இது வரலாற்று உருளையைப் பின்னோக்கித் திருப்புவதாகும். உழவர்கள், குறிப்பாக புஞ்சைப் பகுதியிலுள்ளோர் உழுவுந்தின் வரவுக்குப் பின்னர் மரபுக் கலப்பையை விரும்புவதில்லை. அதைப் போல் ஆழ உழ முடியாதது மட்டுமல்ல அதிக உழைப்பும் தேவைப்படுகிறது. எனவே மாடுகளால் இழுக்கப்படும் புதிய வகைக் கலப்பைகளை உருவாக்க முடியுமா என்று முயன்று பார்க்கலாம். இரண்டு மாடுகளுக்குப் பகரம் நான்கு, ஆறு அல்லது எட்டு மாடுகளைப் பூட்டிய வண்டியின் அமைப்பினுள்ள இயந்திரத்தின் பின்புறம் கொழு, கலப்பை ஆகியவற்றைப் பொருத்தி உழுவுந்து போல் கையாண்டு பார்க்கலாம். இது போன்று மரபு முறைகளையும் இற்றை அறிவியல் – தொழில்நுட்பங்களையும் இணைக்கும் முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களின் குமுகப் பயன்கள் குமுக, அரசியல், பொருளியல் நிலைமைகளுக்கேற்ப நன்மை தருவனவாகவும் தீமை புரிவனவாகவும் மாறுகின்றன. இன்று தனியுடைமையின் மட்டுமீறிய வளர்ச்சியால் அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே அல்லது குறைந்தது அவ்வறிவியல் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கும் குமுகங்களையாவது அழிக்கும் வகையில் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. தனியுடைமையை அழிக்கும் என்ற நம்பிக்கையில் உருவான சோவியத்தும் நட்பு, பகை பற்றிய தெளிவை இழந்துவிட்டன. சீனமும் கூட அதே விதிக்கு உள்ளாகிவிட்டன. இதன் விளைவாக பொருளுடைமையில் மட்டுமல்ல, அறிவியல் தொழில்நுட்ப அறிவுடைமையிலும் மக்களுக்கிடையில் பெரும் ஏற்றத்தாழ்வு உள்ளது. அதுவே பொருளுடைமை ஏற்றத்தாழ்வை இன்னும் கூர்மையாக்குகிறது. இவ்வாறு ஒரு பகுதியில் உருவாகி விட்ட அச்சந்தரும் வளர்ச்சி அந்தந்த மக்களாலோ அல்லது ஒன்றையொன்றோ மட்டுப்படுத்திக் கொள்ள அல்லது அழித்துக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே இந்த வளர்ச்சியோடு போட்டி போட வேண்டும் என்று முயலாமல் மக்களிடையில் அறிவியல் – தொழில்நுட்ப அறிவில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் உருவாகாதவாறு நமது அறிவியல் எளிமையாக இருக்க வேண்டும். நம் நாட்டின் மரபுத் தொழில்நுட்பத்தில் அத்தகைய ஒரு எளிமை இருந்தாலும் இறுக்கமான சாதியமைப்பினுள் அது சிக்கிக் கொண்டு தானும் சீரழிந்து குமுகத்தின் வளர்ச்சிக்கும் தடையாக நின்றுவிட்டது. இந்த நிலைமையை மாற்றியமைத்து சாதி வரம்புகளின் சிறையிலிருந்து நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மீட்பது பண்பாட்டுப் பணியாளர்களின் மாபெரும் பொறுப்பாகும்.

மரபுத் தொழில்நுட்பத்தை மீட்பது என்ற பெயரில் வல்லரசுகள், போர்டு அறக்கட்டளை போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் உதவியுடன் நம் நாட்டில் செயற்படும் “தொண்டு நிறுவனங்கள்” எனப்படும் தன்னார்வக் குழுவினர் ஒவ்வொரு ஊரிலும் செயற்படுகிறார்கள். இங்கு மக்களிடையில் நிலவும் சடங்குகள், பொருளியல் நடவடிக்கைகள், என்று ஒவ்வோரணுவும் நோட்டமிடப்பட்டு திரட்டப்படுகிறது. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு என்ற பெயரில் பல்கலைக்கழகங்களுக்கு நல்கைகள் அளித்தும் இவ்வொற்றறிதல் நடைபெறுகிறது. அத்துடன் வல்லரசு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்கள் இங்குள்ள பல்கலைக்கழகங்களுக்கு நல்கைகள் வழங்கி தமக்கு வேண்டிய துறைகளில் இங்குள்ள மாணவர்களை ஆய்வு செய்ய ஊக்குகின்றன. அவ்வாறு பெறப்படும் ஆய்வேடுகளிலிருந்து தமக்கு வேண்டிய செய்திகளைத் திரட்டிக் கொள்கின்றன. அவ்வாறு ஆய்வில் ஈடுபடும் உள்ளூர் ஆய்வாளர்களில் நேர்மையும் உழைப்பும் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து இங்குள்ள நிறுவனங்களில் நல்ல பதவிகளைக் கொடுத்தோ அல்லது தனி நிறுவனங்களை உருவாக்கியோ அவர்களின் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நடவடிக்கைகளில் இந்திய அரசு பன்னாட்டு முதலைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது.

இவ்வாறு மரபுத் தொழில் நுட்பத் தரவுகளைத் திரட்டும் போது சடங்குகளின் வடிவில் கையாளப்படும் தொழில்நுட்பங்களை வளமைச் சடங்குகள் என்றும் மந்திரச் சடங்குகளென்றும் விளக்கம் கூறிப் போய்விடுகின்றனர். இதற்கான கோட்பாட்டு விளக்கங்களை சியார்சு தாம்சன் போன்ற “மார்க்சியர்கள்” வழங்குகின்றனர். கல்வியே சலுகையாய் நிலவும் நம் குமுகத்தில் உயர் கல்வி படித்த சிலருக்கு நம் நாட்டினர் இன்றும் குக்குல நிலையிலேயே இருக்கின்றனர் என்று கூறும் சியார்சு தாம்சன் போன்றோரின் அதுவும், அவர்கள் “மார்க்சியர்கள்” எனப்படும் போது, அதனால் தங்களுக்குக் கிடைக்கவிருக்கும் முற்போக்குப் பெருமையும் சேரும் போது இங்குள்ள படிப்பாளிகளுக்குப் பெரும் மயக்கம் ஏற்பட்டுவிடுகிறது.

இவ்வாறு சடங்குகள் என்ற பெயரில் அல்லது நாட்டார் வழக்காறு என்ற பெயரில் களவாடப்பட்டு நம்மிடமிருந்து பறி போய் நமக்குப் பரவலாக அறியப்பட்டது வேப்பமரப் பொருட்களின் பல்துறை மருத்துவப் பயன்கள். நாமறியாமல் எத்தனை போயினவோ? காட் ஒப்பந்தம் தான் விடை கூற வேண்டும்.

இங்குள்ள படித்தோர், குறிப்பாக அலோபதி மருத்துவர்கள் சித்த மருத்துவத்தை ஒரு போட்டித் தொழிலாக மதிப்பிட்டு இழிவு படுத்துகிறார்களேயன்றி அதிலுள்ள தொழில் நுணுக்கத்தையும் அறிவியல் கூறுகளையும் ஆய வேண்மென்று சிறிதும் நினைப்பதில்லை.

கலைக் கல்லூரிகளில் நிலைத்திணையியல் மாணவர்கள் மனதில் இங்குள்ள மூலிகைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை யாரும் ஏற்படுத்த முயலவில்லை. ஆனால் தனியார்வலர்கள் சிலர் இம்முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அத்துடன் சித்த மருத்துவக் கல்லூரியிலும் பெயருக்கு மூலிகைத் திரட்டும் பயிற்சி வழங்கப்படுகிறது.

வர்மாணியம், வாயுப்பிடிப்பு எடுத்தல் என்று உள்ளூர் மருத்துவ முறைகள் எத்தனையோ உள்ளன. இவையெதுவும் முறையான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இவற்றை ஆய்ந்தால் இன்றைய மேலை அறிவியலுக்கு எட்டாத பல செய்திகள் நமக்குக் கிடைக்கலாம்.

கோயில்களில் கடைப்பிடிக்கப்படும் ஆகம முறைகள் அனைத்தும் அறிவியல் – தொழில்நுட்பங்களின் பிழிவுகளே. அவற்றிலிருந்து பார்ப்பனிய வெள்ளாளக்கட்டு மேற்போர்வையை மட்டும் கிழித்தெறிந்து கட்டுமானம், மண்பொறித்துறை, கூவ(நீல நீர்) நூல், கழிவகற்றுதல், கட்டிடக்கலை, சிற்பக்கலை, சமையல், உணவு பதப்படுத்தல், சிற்பங்களையும் கட்டிடங்களையும் பராமரித்தல், மரச்சிற்பக்கலை, அவற்றைப் பராமரித்தல், ஒப்பனைக்கலை, ஒவியக்கலை, நடனக்கலை, இசைக்கலை என்று வாழ்வின் அனைத்துக் கூறுகளின் தொழில் நுட்பங்களும் அவற்றில் அடங்கியுள்ளன. இவற்றில் கலைகள் என்பவை உண்மையில் தொழில் நுட்பங்களே, ஏனெனில் இக்கலைகளில் ஈடுபடுவோர்க்குத் தம் தனித்தன்மையைக் காட்டும் எல்லை மிகமிகக் குறுகியது. ஆகமங்கள் கூறும் விதிகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. எனவே ஆகமமாக்கபட்ட இக்கலைகள் (Formalised arts) உண்மையில் திட்டவட்டமான விதிகளுக்குட்பட்ட தொழில்நுட்பங்களாக உறைந்து போய்விட்டன. அத்துடன் குறிப்பிட்ட சாதியினர் மட்டும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாலும் இவை குடும்பத் தொழில்களாக நடைமுறையில் உள்ளன.

இவ்வாறு மேலை அறிவியலின் துணையோடு நம் மரபுத் தொழில் நுட்பங்களைத் தோண்டியெடுத்து வகைப்படுத்தி அவற்றிலிருந்து நம் பண்டை அறிவியலை இறுத்தெடுத்து அதனை அதே மேலை அறிவியலுக்கு எதிராக நிறுத்தி நம்மை வல்லரசியத்தின் கொடும்பிடியிலிருந்து விடுவிடுப்பது ஒன்றும் இயலாததல்ல.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] Lokayatha, Devi Prasad Chattobathyaya பார்க்க.
“தியான”த்தின் மூலமே உலகின் மறையங்களனைத்தையும் புரிந்து கொள்ள முடியுமென்ற மெய்யியல் பள்ளிக்கு மயக்கவியம் Mysticism என்று பெயர். தெளிவில்லாமல் தனக்கும் புரியாமல் கேட்பவர்க்கும் புரியாமல் பேசுவதையும் செயற்படுவதையும் கூட இதே சொல்லால் குறிப்பதுண்டு. நாம் இங்கு குறிப்பிடுவது முதல் வகையே. சிலர் மயக்கவியத்தையும் அறிவியலையும் ஒன்றாகக் காண்கிறார்கள். மயக்கவியத்துக்கும் அறிவியலுக்கும் உயிரியக்கமான தொடர்புண்டாயினும் இரண்டும் இரு கோடியிலுள்ளவை; எனவே எதிரெதிரானவை. தனக்குக் கிடைத்த புலனங்களை வைத்து உள்மனம் தனக்குள் அலசிச் சில முடிவுகளை வெளிப்படுத்தும் போது அங்கு மயக்கவியம் செயற்படுகிறது; அவற்றைச் செய்முறைகளால் சரிபார்த்துத் தள்ளத்தக்கன தள்ளப்பட்டுக் கொள்ளத்தக்கன கொள்ளப்படும் போது அது அறிவியலாகிறது.

[2] இது 1980-களின் தொடக்கத்தில் எழுதப்பட்டது.

[3] இற்றை ← இன்றைய → நவீன

குமரிமைந்தன்
kumarimainthan@sify.com
htpp://kumarimainthan.blogspot.com

Series Navigation

author

குமரிமைந்தன்

குமரிமைந்தன்

Similar Posts