சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 7. மெய்யியல்

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

குமரிமைந்தன்


மேற்சாதியினர் வினை – விளைவுக் கோட்பாட்டில் ஊறித் திளைத்திருக்கின்றனர். இளமையில் ஆட வேண்டிய ஆட்டமெல்லாம் ஆடித் தீர்த்து விட்டு அவ்வாறு ஆட முடியாது முதுமை வந்தபோது “போகிற இடத்துக்குப் புண்ணியம்” தேடுவதற்காக எத்தனைப் பித்துக்குளித்தனங்கள் உண்டோ அத்தனையும் செய்கின்றனர். இவ்வாறு முன்பு ஆடிய இளமைத் திருவிளையாடல்களை மறு உலகத்திலும் ஆடலாம் என்று அவர்களுக்கொரு நைப்பாசை.

மாறாக நாட்டுப்புறத்துக் கீழ்ச்சாதி மக்களிடையில் விதி, கொடுப்பினை என்ற கோட்பாடுகள் நிலைத்து நிற்கின்றன. ஆண்டவன் தங்களுக்கு விதித்தது தான் கிடைக்கும், தம் கொடுப்பினை இவ்வளவுதான் என்று அமைந்து விடுகின்றனர் அவர்கள். மேலுலகம் பற்றி மேற்சாதியினர் போன்று அவ்வளவு ஆழமான நம்பிக்கை அவர்களுக்கு இல்லை.

மேற்சாதியினரின் மெய்யியல் வினை – விளைவுக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்று மேலே கூறினோம். ஆனால், ஒன்று அதன் எதிரானதாக மாறுதல் என்ற இயங்கியல் விதிக்கு இந்த மெய்யியல் வலிமையான ஒரு சான்றாக விளங்குகிறது. வினையும் விளைவும் என்ற கருத்து புத்த சமயக் கோட்பாட்டிலிருந்து தோன்றியது. ஆன்மா என்று ஒன்று இல்லை என்பதும் சமண, புத்த மதங்களின் அடிப்படை. எனவே அவற்றை ஆன்மா இல்லாத மதங்கள் (அனாத்ம மதங்கள்) என்று வேதியம் (வைதிகம்) கூறும். இந்த அடிப்படையில் தோன்றிய புத்த சமயத்தில் இடைக்காலத்தில் ஒரு முரண்பாடு தோன்றி அதைத் தீர்க்க முடியாமல் தடுமாறியது அம்மதம். உலகிலுள்ள எதுவும் நிலையானதல்ல (மாயையானது, மாயை மாயத்தக்கது) என்ற புத்த சமய முடிவு அனைத்தும் இடைவிடாது மாறுவதால் மாயை என்ற பொருளிலிருந்து அனைத்தும் பொய்த் தோற்றம் என்ற மாயக் கோட்பாட்டுக்கு இட்டுச் சென்றது. இந்த இரண்டுக்கும் இடையிலுள்ள இடைவெளி மிக மெல்லியதாகும். பொருட்களின் மாற்றத்தை எல்லை கடந்து விரிக்கும்போது மாறும் தோற்றத்தையே பொய்த் தோற்றத்துக்குச் சான்றாகக் காட்ட முடியும். இந்த நொடியில் இருக்கும் பொருள் அடுத்த நொடியில் வேறாகி விடுகிறது என்றவாறு மாற்றம் முழுமைப்படுத்தப்பட்டது. நொடிக்கு நொடி மாறும் மேகக் கூட்டத்துக்கும் பன்னூறாண்டுக் காலத்தில் தான் கண்ணுக்குப் புலப்படத்தக்க மாறுதலைக் காட்டும் மலைக்கும் வேறுபாடின்றி இந்த மாற்றக் கோட்பாடு விரிக்கப்பட்டது. பருப்பொருளிய[1] இயங்கியல் அகமை நுண்பொருளியமாக மாறியது. இது ஒரு நிலை. அதைப் போலவே முன் பிறவிகளில் செய்த வினையின் விளைவுகளைப் பின் பிறவிகளில் நுகர வேண்டுமென்ற புத்தமதக் கோட்பாடும், குமுகம் முழுவதையும் எடுத்துக்கொண்டால் முன்பிறவி பின்பிறவி என்பவை ஒன்றுக்கொன்று எல்லை காணப்பட முடியாமல் தொடர்ந்து வரும் தலைமுறைகளைக் குறிப்பதாக அமையும். அப்போது ஆன்மா என்ற ஒன்று இல்லாமலேயே இந்தக் கோட்பாட்டை விளக்க முடியும். ஆனால் தனி மனிதர்களைப் பொறுத்தவரை முன்பிறவி, பின்பிறவி என்பவற்றை ஆன்மா என்ற ஒன்று இல்லாமல் விளக்க முடியவில்லை. இவ்வாறு குமுக முழுமைக்காகக் கூறப்பட்ட கோட்பாட்டைத் தனி மனிதர்களை வைத்து விளக்க முற்பட்ட போது புத்தமதம் பெரும் நெருக்கடிக்குள்ளானது. அதன் விளைவாக அந்த மதம் ஆன்மிகச் சேற்றினுள் மீள முடியாமல் சிக்கிக் கொண்டது. ஆன்மாவை மறுத்த புத்தர் சாதகக் கதைகள் மூலம் எண்ணற்ற பிறப்புகள் எடுத்து உழலும் தண்டனைக்கு ஆளானார். இது இன்னொரு நிலை. நல்வினையால் நன்மையும் தீவினையால் தீமையும் விளையும் என்பதால் நல்லது எது தீயது எது என்று பகுத்தறியும் அறிவு பற்றிக் குறிப்பிடுவது புத்த அறிவுக் கோட்பாடு. புலன்கள், பொறிகள், பூதங்கள், மனம் ஆகியவற்றின் இடைவினைப்பட்டால் அறிவு தோன்றுகிறது என்று கூறகிறது புத்த அறிவுக் கோட்பாடு. மனிதனின் புலனறிவிலும் மனத்திலும் உள்ள பிழைகளைப் போக்கித் தூய உண்மையை அறிவதற்குக் காமம் (விருப்பு). வெகுளி (வெறுப்பு) மயக்கம் (இதுவோ அதுவோ என்ற ஐயமும் ஒன்றை மற்றொன்றாகக் காணும் திரிபும் இருப்பதை இல்லையென்றும் இல்லாததை இருப்பதென்றும் கருதும் மயக்கமும்) ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று கூறகிறது புத்தம். ஆனால் காமம் என்பது பெண்மேல் ஏற்பட்ட காமம் என்றும் (பெண்ணுக்கு ஆண்மேல் ஏற்படும் காமத்தை யாரும் குறிப்பிடுவதில்லை; ஏனென்றால் பெண் தனக்கெனக் காமம் கொள்ளத் தகுதியில்லாத அடிமை) வெகுளியைச் சினம் என்றும் (இது பொதுவான கூற்றாயிலும் கொடுமை கண்டு கொதித்தெழும் நேர்மையாளர்களை அடக்குவதற்காகவும் அவர்களைப் பழிப்பதற்காகவும் பயன்பட்டது, பயன்படுகிறது) மயக்கம் என்பதற்கு நிலையா வாழ்வை நிலையானது என்று ஏங்கும் மயக்கம் என்றும் பொருள் கூறப்பட்டது. இந்த காமம் மற்றும் நிலையாமை பற்றிய கருத்துப் பரப்பலை இடைவிடாது செய்யும் மதவாணர்; குறிப்பாக மடத்தலைவர்கள் (திரு.வி.க. மொழியில் கூறுவதாயின் மடத்தடிகள்) தான் காமத்தை அணு அணுவாகவும் இடைவிடாமலும் இறுதிவரையும் சுவைக்க வேண்டும் என்பதற்காகப் பொன்னீறு (தங்க பற்பம்) உண்பவர்கள் ; அதன் மூலம், அதன் மூலம் மட்டுமே வாழ்வின் நிலையாமையைத் தாங்கள் அறிந்து கொண்டதைக் காட்டிக் கொள்பவர்கள். புத்தம் அதன் தொடக்கத்தில் மார்க்சிய இயங்கியலின் அடிப்படை மூலக்கருத்துகளின் கருவைத் தன்னகத்தே கொண்டிருந்தது. நாளடைவில் அது சீரழிந்து ஆன்மா இல்லாமல் விளக்க முடியாத இழிந்த அகமை நுண்பொருளியமாக மாறியது. எனவே இதிலிருந்து பதி (இறைவன்) – பசு (ஆன்மா) – பாசம் (பற்று அல்லது கட்டு) என்ற சைவக் கோட்பாடு உருவாக அதிகத் தொலைவு செல்ல வேண்டியிருக்கவில்லை.

ஆன்மா எனும் ஆதன் உடலிருந்து வேறான தனி இருப்பைக் கொண்டது. எண்ணற்றவையாக ஆதன்கள் அண்டவெளியில் உலவி வருகின்றன. அவற்றை ஐம்பூங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, விண்வெளி ஆகியவை தம் மாயையில் கவர்ந்து உயிர்ப் பொருட்களாக்குகின்றன. ஐம்பூதங்களால் கட்டுண்ட ஆதன் வினைகளைப் புரிந்து கறைபடுகிறது. அக்கறையினால் அதைப் போக்க மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது. இப்பிறப்புச் சுழலிலிருந்து விடுபட்டு ஐம்புலக் கட்டை அறுத்துக் கொண்டு பேராதனாகிய (பரமாத்மாவாகிய) இறைவனிடம் சென்று சேர்ந்து அதனுடன் இரண்டறக் கலப்பதே இப்போது ஆதனின் ஓரே குறிக்கோளாகி விடுகிறது. இதற்கு ஒரே வழி நன்மை, தீமை ஆகிய இரு வினைகளையும் செய்யாமல் வாளாவிருப்பது தான். நல்வினை செய்தால் அதன் நற்பயனை நுகர மீண்டும் பிறவி எடுக்க வேண்டிவரும்; எனவே நல்வினைகளில் கூட ஈடுபடக் கூடாது. ஆனால் இத்தகைய ஒரு பக்குவ நிலையை எய்துவதற்கு எத்தனைப் பிறவிகளின் முயற்சி தேவைப்படும் என்று கூற முடியாது. அதை ஒரே பிறவியில் எய்துவதற்குக் குறுக்கு வழி யோக முறையாகும் என்று கபிலன் வகுத்த சாங்கியத்திலிருந்து இந்த இடைமாற்றம் தொடங்கியது. யோகம், தவம் முதலியவற்றால் உடலை வருத்த வேண்டியதில்லை. நெருப்பு, சிவன், திருமால், காளி, முருகன், பிள்ளையார் போன்ற தெய்வங்களைச் சரணடைந்தாலே பாசமாகிய கட்டிலிருந்து பசுவாகிய ஆதன் விடுபட்டுப் பதியாகிய பேராதனுடன் (அதாவது முறையே மேலே கூறிய தெய்வங்களுடன்) இரண்டறக் கலந்து பேரின்பம் எய்த முடியும் என்று முறையே வேதியம், சிவனியம், மாலியம், சத்தியியம் (சாக்தம்), குமரம், கணபதியம் ஆகிய அறுமதங்கள் கூறின. இந்த அடிப்படையில் தான் மேற்சாதியினர் கோயில்களைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர். முன்பு கூறியது போல், வளமான வாழ்வின் பயனாக நுகர்ந்த, அவர்கள் மொழியில், “சிற்றின்பங்களை” முதுமை தடைசெய்து விட அத்தகைய தடையின்றி அதே சிற்றின்பங்களை பரம்பொருளாகிய இறைவனிடம் இரண்டறக் கலப்பதன் மூலம் நுகரும் “பேரின்பத்துக்கு” எங்கி இவர்கள் தங்கள் சொத்துக்கள் முழுமையும் கோயில்களுக்குக் கொடுத்துவிடக் கூடத் தயங்குவதில்லை.

இதைச் சொல்வதால் கோயிலுக்கு நிலம் எழுதிவைப்போர் அனைவரும் மறுமை (மறு வாழ்வாகிய பேரின்ப வாழ்வு) கருதியே அதனைச் செய்கின்றனர் என்று கருதி விடத் தேவையில்லை. குறிப்பாக மத நிறுவனங்களுக்கு நில உச்ச வரம்பிலிருந்து அளிக்கப்பட்டிருக்கும் விதிவிலக்கைப் பயன்படுத்துவதற்காகத் தம் நிலங்கள் கிடக்கும் பகுதிகளிலெல்லாம் கோயில்கள் எழுப்பி அதன் பெயரில் தன் சொத்துகளை எழுதித் தன்னையும் தன் வழியினரையும் தக்காராக்கித் தப்பித்துக் கொள்வதுடன் ஊர் மக்களிடையில் பத்திமான் என்று பெயரும் பெற்றுவிடுவோர் இன்று ஏராளம், ஏராளம்.

கீழ்ச் சாதியினரிடையில் மறுபிறவியைப் பற்றிய நம்பிக்கை ஆழமாகப் பதிந்திருந்தாலும் வினை – விளைவுக் கோட்பாட்டோடு அது அவ்வளவு இறுக்கமாகப் பிணைந்திருக்கவில்லை. அப்படிப் பிணைந்திருந்தாலும் இரு வினையறுப்பு அதாவது செயலற்றிருத்தல் என்னும் பித்துக்குளித்தனத்தின் எல்லைக்கு அது செல்லவில்லை. நன்மை செய்தால் மறு பிறவியில் நன்றாக வாழலாம் என்ற வகையில் அவர்களிடம் அது நிலவுகிறது. ஆனால் தம்மால் அறிய முடியாததாகிய விதியே தம்மையும் தமது வாழ்வையும் ஆட்டிப் படைத்து நன்மை தீமைகளுக்குக் காரணமாகிறது என்ற நம்பிக்கையே அவர்களிடம் பெரும் ஆட்சி புரிகிறது. தமக்கு விதித்த பங்கு தான் கிடைக்கும் என்பது அவர்களது மெய்யியல். இது குமுகக் கூட்டு விளைப்பு முறையில் முன்பு சீட்டுக் குலுக்கல் அல்லது தாயக்கட்டை (தாயம் = தாயின் சொத்திலுள்ள உரிமை. இச்சொல் தாயபாகம் என்று இந்தியா முழுவதும் வழங்கப்பட்டு இந்துச் சட்டத்திலும் ஏறியுள்ளது) முறையில் நிலப்பங்கு நடைபெற்ற மிகத் தொல்பழங்கால நடைமுறையிலிருந்து எழுந்த நம்பிக்கையாகும். பாக்கியம் என்ற சொல் கூட பகு → பாக்கு → பாக்கியம் என்று பங்கையே குறிக்கிறது. அத்துடன் பிரம்மன் ஒவ்வொருவரையும் படைக்கும் போது தன் முதுகுக்குப் பின்னால் வைத்துக் கொண்டு அவர்கள் தலையில் அவன் எழுதுவது போல் அவர்களது வாழ்வு அமையும்; தான் எழுதியது என்னவென்பதை அவனே அறியான்; அப்படி அறிந்தால் கூட அவனால் அதை மாற்றி எழுத முடியாது என்பது அவர்களிடையிலுள்ள ஒரு நம்பிக்கை. கட்டுக்கடங்கா குமுக விதிகளின் செயற்பாடும் அடக்கியாள முடியா இயற்கை ஆற்றல்களின் தாக்குதல்களும் அவர்களது முயற்சிகளைப் பயனற்றதாக்கிவிட்ட நிலையில் உருவான கையறு நம்பிக்கை இதுவாகும். ஆனால் இந்தக் கையறு நிலையிலும் அவர்கள் சோம்பியிருப்பதில்லை. இருக்கவும் முடியாது. மேற்சாதியினர் போல் அவர்கள் நாளும் கோளும் பார்த்துக் கொண்டிருப்பதுவுமில்லை; இருக்கவும் முடியாது. மழை பெய்தால் அடுத்த நாள் உழவு செய்தாக வேண்டும். கோயில் திருவிழாக்களை இதற்காகத் தள்ளிப் போடுவதற்கு அவர்கள் தயங்குவதில்லை. அவர்களது மெய்யியல் இவ்வாறு முற்றிலும் இவ்வுலக வாழ்வைப் பற்றியதே. குமுக விதிகளைப் பற்றிப் புரிந்து கொண்டு தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும் நோய்நொடிகளிலிருந்து பாதுகாப்பளிக்கும் குமுகத்தை அமைத்துக் கொள்வதற்கும் இயற்கையின் சீற்றங்களால் எளிதில் தாக்குதலுக்குள்ளாகும் தனிமை வாழ்வினை[2] ஒழிப்பதற்கும் பயிற்சி பெறுந்தோறும் இருக்கின்ற மூடநம்பிக்கைகளிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும். சுரண்டலுக்கெதிரான போராட்டமே இந்த அறிவை, ஒற்றுமையை, பாதுகாப்பு முயற்சியை உருவாக்கும்.

மேற்சாதியினரின் மெய்யியலில் மறுபிறப்பு பற்றிய கருத்துகளை நாம் அறிவியல் வெளிச்சத்தில் அலசிப் பார்க்கலாம். அறிவியலாரில் பொரும்பாலோர் மறுபிறப்பென்பது மனிதனுக்கு இல்லை என்றே கூறுகின்றனர். ஆனால் அதுவல்ல உண்மை. மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் மறுபிறப்பு உண்டு. ஆனால் இந்த மறுபிறப்பு ஆதனோடு (ஆன்மாவோடு) தொடர்புடையதல்ல, முற்றிலும் உடலுடனும் உயிருடனும் தொடர்புடையது. உலகிலுள்ள உயிர் ஒவ்வொன்றுக்கும் பிறப்பு, வாழ்வு, இறப்பு என்பவை உண்டு; அவை பிறந்து இறப்பதற்கு முன் தம் வாழ்நாளில் தமக்குத் தொடர்ச்சியாகத் தம் போன்ற ஒன்றோ பலவோ புதிய உயிர்களை உருவாக்குகின்றன. முந்திய உயிர் அழிந்து போனாலும் அது படைத்த பிறங்கடைகளாகிய (வாரிசுகளாகிய) உயிர்கள் தொடர்ந்து வாழ்கின்றன. புல் பூண்டுகள் சில வகை மீன்கள் போன்ற கீழ்நிலை உயிர்கள் தம் பிறங்கடைகளாகிய விதைகள், முட்டைகள் ஆகியவற்றை உருவாக்கிய உடனேயே கூட இறந்து விடுகின்றன. ஆனால் அவை ஒரே நேரத்தில் எண்ணற்ற பிறங்கடைகளை உருவாக்கி விடுகின்றன. அதே நேரத்தில் மேல்நிலை உயிர்கள் தொடர்ந்து தம் வித்துக்களை உருவாக்கி நீண்ட காலம் வாழ்கின்றன. இவ்வாறு மறுபிறவி எடுக்கும் போதே இறப்பனவும் மறுபிறவி எடுத்தபின் இறப்பனவுமாகத் தான் உயிர்கள் உள்ளனவேயன்றி நம் மதவாணர்கள் குறிப்பிடுவது போன்று இறந்த பின் மறுபிறவி எடுப்பதில்லை. காடுகளில் வளரும் புல்பூண்டுகள் பூத்துக் காய்த்த பின் கோடை காலத்தில் செத்தழிந்து விடுகின்றன. அடுத்த மழையில் விதைகள் முளைக்கின்றன. குளங்குட்டைகளில் வாழும் மீன்கள் கோடையில் குளத்தில் நீர் வற்றும் முன் முட்டையிட்டு விட்டு நீர் வற்றும்போது செத்து மடிந்து விடுகின்றன. மழை பெய்து குளத்தில் நீர் பெருகியதும் அம்முட்டைகள் பொரித்து மீண்டும் மீன்களாகின்றன. இத்தகைய சிற்றுயிர்களுக்கே,

உறங்குவது போலும் சாக்காடு (உ)றங்கி
விழிப்பது போலும் பிறப்பு

என்று திருவள்ளுவர் கூறுவது பொருந்தும். ஆனால் மனிதனுக்கும் பிற உயர் உயிர்களுக்கும் இது பொருந்தாது. ஒரு வகையில் மனிதன் இறப்பதேயில்லை. அவனது ஒரு பகுதி இளமை பெற்று வளர்ந்து வரும் போது இன்னொரு பகுதி முதுமை பெற்று மறைகிறது. சாவும் பிறப்பும் ஒன்றோடொன்று பிரித்துப் பார்க்க முடியாதவாறு பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. ஓர் ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையுமாகத் தனித்தனியாக இருந்து ஒன்று கூடி மனித வாழ்வின் தொடர்ச்சி நிகழ்கிறது. எனவே இந்த வகை மறுபிறப்பென்பது ஒரு நாளும் தனிமனிதனின் மறுபிறப்பாக இருக்க முடியாது. குறைந்தது ஓர் ஆணுணும் ஒரு பெண்ணுமாக இணைந்து தான் மறுபிறப்பெடுக்க முடியும்.

ஆணின் விந்திலும் பெண்ணின் முட்டையிலும் உலகில் உயிர் தோன்றிய நாள் தொட்டு தொடர்ந்து செயற்பட்ட திரிவாக்க (பரிணாம) வளர்ச்சியின் போது நடைபெற்ற நிகழ்ச்சிகளும் தாக்கங்களும் பதியப்பட்டு இரண்டு பகுதிகளிலிருந்தும் புதிதான பண்புகளோடு ஒரு குழந்தை பிறக்கிறது. அக்குழந்தையின் உள்ளமைப்பு தன் பெற்றோரிடம் வெளிப்பாடாகாத பல முந்தையப் பிறப்புகளின் பட்டறிவுகளைச் கொண்டுள்ளது. இந்தப் பட்டறிவுகளோடு அக்குழந்தை வாழும் இயற்கைச் சூழல், குமுகச் சூழல்கள் ஆகியவை இடைவினைப்பட்டு ஒரு புதிய ஆட்பண்பு (Personality) உருவாகிறது.

இத்தகைய பிறப்பை மனிதர்கள் அறுக்க வேண்டுமாயின் அவர்கள் எதிர் பாலர் எவரையும் புணரக்கூடாது அல்லது அவர்கள் முழுமையான கருத்தடை உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் தன்பால் புணர்ச்சியைக் (Homosexual and lesbianism) கடைப்பிடிக்க வேண்டும் அல்லது காயடிக்கப்பட வேண்டும் அல்லது பிறவியிலே மலடாயிருக்க வேண்டும். (காயடித்தல் என்பதற்கு நலம்பிடித்தல் என்ற நல்ல ஒரு சொல்வழக்கு குமரி மாவட்டத்தில் உள்ளது). இதனால் தான் போலும் வீடுபேறென்னும் பிறப்பறுப்புக்குத் துறவைச் சிறந்த வழியாக நமது சமயங்கள் வற்புறுத்துகின்றன. ஆனால் துறவு பூண்டவர்களாகக் கூறப்படும் நம் மடத்தடிகள் சட்டப்படி “பிறவி” எடுப்பதில்லையே தவிர பெரும்பாலோர் பல “பிறவி”கள் எடுக்கின்றனர். தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் செல்வாக்குடன் திகழும் ஒரு மடத்தின் மடத்தடிகள் பருவமடையுமுன்பே துறவியாக்கப்பட்டு நலம் பிடிக்கப்படுவதாகவும் கேள்வி. அது உண்மையானால் அம்மடத்தடிகளால் உண்மையிலேயே “பிறப்பறுக்க முடியும். பெண்களோடு சில்லரை விளையாட்டுகளை விளையாடினாலும் அவர்களால் “பிறப்பெடுக்க முடியாது. மொத்தத்தில் “பிறப்பறுப்பு”க் கோட்பாடென்பது ஒரு மலட்டுக் கோட்பாடே.

நன்மை தீமை எனும் இருவினையையும் செய்யாமலிருப்பது பிறப்பறுக்க வழி என்பது நம் நாட்டுக்கே உரிய ஒரு மெய்யியலாகும். பிற நாடுகளில் உழைக்காத ஒட்டுண்ணிகள் வாழ்ந்தாலும் நம் நாட்டில் போல் ஒட்டுண்ணித்தனம் வேறு எங்கும் முழுமை பெறவில்லை. குறிப்பாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நின்று நிலைத்துவிட்ட பார்ப்பனர் என்ற ஒட்டுண்ணிச் சாதியின் தவிர்க்கமுடியாத விளைவே இந்த இருவினை மறுப்புக் கோட்பாடு. மக்களிலிருந்து அயற்பட்டு மக்களுக்கெதிராக மக்களை ஒடுக்கும் அரசுக்கு மேலே நிற்கும் இந்த ஒட்டுண்ணி உருவாக்கம் மனித வரலாற்றிலே ஒப்பற்றது (ஆங்கிலத்தில் கூறுவதாயின் Unique ஆனது). எனவே இந்த ஒட்டுண்ணிகளால் உருவாக்கப்பட்ட இருவினை மறுப்புக் கோட்பாடும் உலகில் ஒப்பற்றது.

பெருங்கோயில்களை நிறுவி அவற்றிற்கு முற்றூட்டாக நிலங்களை அளித்து சமயப் பற்றைக் காட்டி மக்களின் ஆதரவைத் திரட்டத் தொடங்கப்பட்ட செயல்முறை பின்னர் ஆளுவோர் குடிமக்களின் அரசியல் பொருளியல் உரிமைகளைக் கைப்பற்றும் நோக்கத்துடன் நிலங்களைக் கவர்வதற்காகவே கோயில்களைக் கட்டி அவற்றிற்கு முழுப் பொருளியல், குமுகியல், படையியல், அரசியல் அதிகாரங்களை அளித்துப் பார்ப்பனரைத் தலைமை தாங்க வைப்பதாக உருமாறியது. கோயில் நிலங்களில் குத்தகையாளராகக் குருதி சிந்தி விளைவித்த மக்களிடமிருந்து வாரமாகப் பெறப்பட்ட தவசங்களையும் தொழில் புரிவோரிடமிருந்து வரியாகப் பெறப்பட்ட செல்வத்தையும் எந்த உழைப்புமின்றி உண்டு செழித்திருந்த ஒட்டுண்ணிப் பூசாரியர் மற்றும் மடத்தடிகளின் இந்த ஒட்டுண்ணி வாழ்க்கையை மேம்பட்டதாகக் காட்டுவதற்கே இந்த வினையறுப்புக் கோட்பாடு பயன்பட்டது. இன்றும் கூட இந்தக் கோட்பாட்டை நேரடியாகவும் மறைமுகமாகவும் உயர்த்திப் பேசும் “கற்றறிந்த” பெருமக்கள் உள்ளனர். பெரும்பாலான தாளிகைகள் இப்பணியைச் செய்கின்றன. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் போன்ற பொதுத் தொடர்புக் கருவிகளும் உள்ளன. ஆனால் இவற்றுக்கு எதிராகச் செயற்படுவோர் யாரும் இல்லை. எளிய மக்களோ இப் “பெரியோர்” போன்று “வினையறுக்க” முடியாத தம் தலைவிதியை நொந்தும் அப்படி “வினையறுத்து” வாழும் பேறு பெற்ற “பெரியோரை” வியந்தும் மயங்கி நிற்கிறார்கள்.

இந்த வினையறுப்புக் கோட்பாட்டின் ஒரு செயல் வடிவம் “குண்டலினி”க் கோட்பாடு. புலித்தோல் அல்லது மான்தோலின் மீது (புலியை அல்லது மானைக் கொன்றால் தானே தோல் கிடைக்கும்? அதைக் கொல்பவர் யார்? அவருக்கு வினையறுப்புக் கோட்பாடு பொருந்தாதா?) சப்பணமிட்டு அமர்ந்து மூச்சுக் காற்றை சுழியறிந்து – வலது, இடது அல்லது இரண்டு மூக்குத் துளைகள் மூலமாக மூச்சு விடுவது – செலுத்தி ஊழ்கத்தில் (தியானத்தில்) இருந்தால் மூலத்திலிருந்து மூலாதாரம் என்ற சூடு கிளம்பி வயிறு, தொப்புள், நெஞ்சகம், தொண்டை வழியாக உச்சந்தலை ஏறி அண்ட வெளியில் கலக்குமாம். அதன் மூலம் இயற்கையின் மறையங்களை எல்லாம் அமர்ந்த நிலையிலேயே அறிந்து கொள்ளலாமாம். இதே விளக்கம் நமசிவாய என்ற ஐந்தெழுத்துக்கும் ஓம் எனும் மந்திர ஒலிக்கும் தோற்றுவாயாகவும் தரப்படுகிறது.

சங்கதத்தில் (சமற்கிருதத்தில்) தலையிலிருந்து வெளிப்படும் ஆற்றலுக்கு ஆக்ஞை (ஆணை என்ற தமிழ்ச் சொல்லின் சங்கத வடிவம்) என்ற சொல் கையாளப்படுகிறது. இச்சொல்லே இந்நிகழ்முறையில் அனைத்து நுணுக்கங்களையும் விளக்கி விடுகிறது. தலையை இருப்பிடமாகக் கொண்ட மூளையிலிருந்து ஆணை பிறந்து செயலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் வகையில் குருதி ஓட்டத்தை மிகுக்க நெஞ்சகத்தை அடைந்து அங்கிருந்து பிறக்கும் ஆற்றல் நுரையீரலை இயக்கி வளியை வெளிப்படுத்திக் கண்டம் குரல்வளை, நாக்கு, உதடு, அண்ணம், மூக்கு ஆகியவற்றின் இயக்கங்களால் ஒலி நாம் விரும்பிய வடிவம் பெற்று வெளிப்படுகிறது. ஒலிக்குத் தேவையான வளியை நெஞ்சகத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியில் வயிறாகிய உந்திப் பகுதியும் மூலமாகிய ஆசனவாயும் கூடச் சுருங்கி உதவுகின்றன.

ஓம் என்றொலித்தாலும் நாம் என்றொலித்தாலும் நமசிவாய என்றாலும் நாயே என்றாலும் நிகழ்முறை இதுதான்.

உந்தி முதலா முந்து வளி தோன்றித்
தலையிலும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற் றமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல
திறம்படத் தெரியுங் காட்சி யான (தொல். எழுத்து. பிறப்பியல்)

இந்தத் தொல்காப்பிய நூற்பாவில் பங்கேற்பதாகச் சொல்லும் உறுப்புகள் தாம் மேலே நாம் விளக்கியவை.

வேதமே முதற்பொருள், அதனைப் பிழையின்றி ஒலிப்பதே வழிபாடு என்பது வேதியக் கோட்பாடு. (எழுதாக் கிளவியான வேதங்களை பிழையின்றி ஒலிப்பது இன்றியமையாததாகும்.) ஒலி வடிவானவனே சிவன் என்பது சிவனியம். ஆக இரண்டும் ஒரே கோட்பாட்டின் இரு வடிவங்கள் தாம். ஆணையாகிய ஒலியை எழுப்புபவனான ஒட்டுண்ணியே முதன்மையானவன் என்பதே இதன் வகுப்புப் பொருளாகும்.

இவ்வாறு மூக்கின் நுனியை அல்லது, லெனின் இந்தியத் துறவிகளைப் பற்றி கிண்டல் செய்வது போல், தொப்புள் குழியைப் பார்த்துத் ‘தனக்குள்’ அடங்கியிருக்கும் சோம்பேறிப் பொய்யர்களே மக்களில் உயர்ந்தவர்கள், பிறரனைவரும் தாழ்ந்தவர், இழி பிறவியினர், மீள முடியாமல் மீள மீளப் பிறந்து அல்லலுற வேண்டியவர் எனப் பெருஞ்சுமையை எளிய உழைக்கும் மக்களின் மனதில் ஏற்றி வைத்திருக்கும் இவ்வொட்டுண்ணிகளையும் அவர்களின் இந்த ஒட்டுண்ணிக் கோட்பாட்டையும் ஒழிக்கும் நாள் தான் நம் மக்களின் உண்மையான விடுலை நாள்.

இனி, ஓம் என்ற சொல்லுக்கு வருவோம். ஓம் என்பது ஆம் என்று பொருள்படும் ஒரு தமிழ்ச் சொல். ஈழத்து வழக்கில் ஆம் என்பது ஓம் என்றும் ஆமாம் என்பது ஓம் ஓம் என்றும் வழங்கப்படுவதை நாம் காணலாம். குமரி மாவட்டத்து மீனவர்கள் ஆமா என்பதை ஓமா என்றே கூறுகின்றனர். மலையாளத்திலும் குமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு வட்டங்களிலும் ஆம், சரி, அப்படியா என்ற பொருளில் ஓ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த ஓம் என்ற சொல்தான் “இந்து” சமயத்தின் அடிப்படை ஒலியாக, குறி ஒலியாகக் கைக்கொள்ளப்பட்டுள்ளது.

கிறித்துவத்தில் வழக்கிலிருக்கும் ஆமென் என்ற சொல்லுக்கு “அப்படியே ஆகட்டும்” என்பது பொருள். இது சரி என்ற சொற்பொருளுக்கு இணையானது. முகம்மதியத்தின் “ஆமின்” என்ற சொல்லும் இப்பொருளுடையதே.

இவ்வாறு தமிழிலுள்ள ஆம் என்ற சொல் நாட்டெல்லைகளைத் தாண்டி கிறித்துவத்துக்கும் முகம்மதியத்துக்கும் வழிபாட்டுக் குறிச் சொற்களாக, அடிப்படையான வழிபாட்டுச் சொற்களாக வடிவம் பெற்றுள்ளது. அதே போன்றே ஓம் என்ற அதே சொல்லின் இன்னொரு வடிவமும் “இந்து” சமயத்தின் அடிப்படைச் சொல்லாக மூலச் சொல்லாக இடம் பெற்றிருக்கிறது.

இந்த “ஓம்” என்ற ஒலியைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் ஆக்கங்களைச் சேர்த்தால் அவை இமயமலையளவு இருக்கும். நம் மெய்யியல் சோம்பேறிகள் வளர்த்துவிட்ட மாயைகள் எத்தனையோ அரும் ஆய்வாளர்களின் சிந்தனையைக் குழப்பி அவர்களது – அருமருந்தன்ன நேரத்தையும் உழைப்பையும் வீணடித்துள்ளமைக்கு இந்த “ஓம்” என்ற சான்றே போதும்.

வினையற்றிருப்பதே மேன்மை என்று மூளைக்குள் அடித்துச் செலுத்தப்பட்டுள்ள இந்த நச்சுக் கருத்து நம் மக்களின் வளர்ச்சியின்மைக்கு மூல காரணமாக நெடுங்காலம் இருந்து வருகிறது. இதைச் சுட்டிக் காட்டி நாட்டின் உள்ளும் புறமும் உள்ள அறிஞர்கள் இடித்துரைத்துள்ளார்கள். ஆனால் இந்த இடித்துரைகள் மக்கள் மன்றத்தில் முறைப்படி வைக்கப்படவில்லை. ஆனால் முழுமை பெற்றுவிட்ட ஒட்டுண்ணிகளின் வினைமறுப்புக் கோட்பாடு புதுப்பொலிவுடன் பரப்பப்படுவது பொதுத் தொடர்புக் கருவிகளின் வாயிலாக முழு மூச்சுடன் நடைபெறுகிறது.

முழுமை பெற்று விட்ட இந்த ஒட்டுண்ணிகளின் வினைமறுப்புக் கோட்பாட்டை மக்கள் மன்றத்தில் வைத்து முறியடிக்க வேண்டிய பொறுப்பு மக்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுபவர்களின் முன்பு உள்ளது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்

[1] பருப்பொருள், நுண்பொருள் என்பவை முறையே ஆங்கிலத்தில் matter, idea என்பவற்றுக்கு இணையாகத் தமிழில் வழங்கும் மரபுச் சொற்கள். எனவே Materialism என்பதைப் பருப்பொருளியம் எனவும் Idealism என்பதை நுண் பொருளியம் எனவும் குறிப்பது பொருத்தமுடையது.

[2] இன்று செல்வமுடையோர் மேட்டுப்பாங்கான இடத்தில் வீடுகள் கட்டிக்கொள்ள. ஏதுமற்ற மக்களோ ஆற்றுப் படுகைகள். குளக்கரைகள் என்று பள்ளங்களில் குடியிருக்கின்றனர். எனவே சிறு மழை பெய்தாலும் அவர்கள் வீடுகள் அடித்து செல்லப்படுகின்றன. கோடை வெய்யிலில் அட்டைகளாலும் செத்தைகளாலும் வேயப்பட்ட குடிசைகள் எளிதாகத் தீப்பிடித்துக் கொள்கின்றன. அரசுக்குத் திடீரென்று வெறிபிடித்தால் அவர்களது வீடுகள் பிய்த்தெறியப்படுகின்றன.

குமரிமைந்தன்
kumarimainthan@sify.com
htpp://kumarimainthan.blogspot.com

Series Navigation

author

குமரிமைந்தன்

குமரிமைந்தன்

Similar Posts