புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

புதுவை ஞானம்


வேர்கள் பட்டுவிட்டால்…..

விதையொன்று ஊன்றப்பட்டது -தகுந்த
வெப்பமும் வெளிச்சமும் ஈரமும் தர
முளையொன்று வெளிவந்தது
வேர் கீழாகக் குருத்து மேலாக.

ஆழமும் அகலமுமாய்க் கீழே
வேர் பிடிக்கப் பிடிக்கத்
தழைத்துக் கிளைத்தது
தாவரமாய் மரமாய்
வானோக்கி மேலோங்கி.

தழைத்துக் குலுங்கித்
தருநிழல் வீழ
ஆடுமாடுகள் இளைப்பாறின
நிழல் தளத்தில்.

பூத்துக்குலுங்குகையில்
தேனருந்திச் சென்றன
தேனீக்கள் வண்டுகள்
காய்த்துப் பழுத்துக்
களைத்து நிற்கையில்
பசியாறிச் சென்றது
பறவைக் கூட்டம்.
கல்லடி பட்டதும்
ஏராளம் ஏராளம்.
மரத்துக்குத்தான்
பூசை பொட்டு
வழிபாடு…..
வேர்களுக்கு ?
வெந்நீர் ஊற்றாமல்
இருந்தாலே போதும்!
.
வேர்கள் வரண்டு விட்டால்
மரம் பட்டுப் போய்க் காய
பட்டமரம் பட்டுப்போச்சு
வெட்டி விறகாக்கு என
விறகாகிப் போய்விடுவீர் !.
ஒரு வேளை விழுதுகள் கூட
வேர் விடலாம் – நீங்கள்
ஆல் போல் வாழ்ந்திருந்து
அருகு போல் வேர் விட்டால் !.
( 6, ஜுன், 2006.)


மிதத்தலும் மோனமும்.

சுழித்துப் பெருக்கெடுத்தோடும் வெள்ளம்
புரட்டிப் போட்டது தெள்ளிய ஆற்றினை
அடியில் கிடந்த அசிங்கங்கள் எல்லாம்
மிதந்து வந்தன மேல் நோக்கி
அடித்துக் கொண்டு போகப்படத்தானே ? !
அமைதி கொள்…….
தெளிவு வரும்
மீண்டும்.
வெள்ளமும்…….. !

பயணத்தின் குறுக்கே வந்த
பாறாங்கல் மனத்தினர்
பாதையை மாற்றினர்.
நன்றி சொல்ல வேண்டும் அந்த
நய வஞ்சகர்களுக்கு – இல்லையெனில்
நசுங்கியன்றோ செத்திருப்பேன்.

கரையோர அலைகளைத் தாண்டிவிட்டால்
ஆர்ப்பரிப்பதில்லை கடல்.
மலையுச்சி எட்டி விட்டால்
சிறகடிப்பதில்லை பறவைகள்.
ஆழத்திலும் உச்சியிலும்
அமைதி மட்டுமா குடி கொண்டுள்ளது ?
தன் முயற்சி அற்ற
மிதத்தலும் மோனமும் கூட !


காக்கையும் இறைவனும்

பறக்கக் கற்கும் வரை
பறந்து தேடி வந்து
பரிந்து ஊட்டும் அலகால்.

உண்ட மயக்கத்தில்
உறங்கிச் சுகம் கண்டு
பறக்க யத்தனிக்காமல்
பம்மாத்து பண்ணினால்
கொத்தித் கொத்தித் துரத்தும்
தன் குஞ்சு பொன் குஞ்சு
என்ற போதிலும்.

காக்கையும் இறைவனும்
தாய் தான் !


தூங்கு மூஞ்சி

நாலு பூ முகிழ்த்திருக்கிறது
தூங்கு முஞ்சி !
நேற்றுப் பெய்த மழைக்கு
நன்றி சொல்லி. ( 23 ஜுன்1997 )


தெம்பளிக்க ஏதாவது ?

ஆன்மீகப் பாதையில்
அழித்தொழிக்கும் புதை குழிகளா ?
சாதனைப் பாதையில்
சோதனைக் குழிகள் !

உபதேசங்கள் வழங்கப் பட்டிருக்கின்றன
ஓராயிரம் வழிகளில்- பல்லாயிரம் சித்தர்களால்.

ஒவ்வொரு குறுக்குச் சாலைகளிலும்
ஒவ்வொரு கைகாட்டி மரம்.

நடக்கவோ தெம்பில்லை
பார்க்கவோ தெளிவில்லை.

வழி காட்டியதும் உபதேசித்ததும்
போதும்……போதும்.
தெம்பளிக்க ஏதாவது……………?
(.7,மார்ச் 1997)


தாக்குண்டால்………

நிழலுக்குக் காயம் படாது
நிஜத்துக்குத்தான் !.
(18 ஜுலை 1997)


ஆழம் எது ?

ஆரவாரம் ஆர்ப்பரிப்பு
இரைச்சல் சலனம்
கரையோரம் மலயோரம்
ஆனால்
கடலை விட
ஆழம் எது….
அமைதி எது ….?
(26 ஆகஸ்ட் 1997)


சிக்கிரி காட்டிய பக்கிரி.
வாழ்க்கை ஒரு பாலம்
அதைக் கடந்து
அப்பால் போ ….!
அதிலேயே…..
வீடு கட்டி வசிக்காதே !.
(19,செப்டம்பர் 1997.)


வார்த்தைகளில் அன்பு
நம்பிக்கை ஊட்டுகிறது.

சிந்தனையில் அன்பு
முழுமையை ஊட்டுகிறது

வழங்குவதில் அன்பு
நேசத்தை ஊட்டுகிறது.

(லாவோட்சு )


கொண்டாட்டத்துக்காகவே படைக்கப் பட்டது வாழ்வு
தனியாக நேரம் ஒதுக்கத் தேவை இல்லை – இந்த
உண்மையை நினைவூட்டிக் கொள்வதற்கு .
ஒவ்வொரு நாளையும் விஷேசமானதென
வரித்துக் கொள்ளக் காரணம் காண்பவன்
வாழத் தெரிந்த அதி புத்திசாலி. ( 6, ஜுன், 2006.)
—————————————————————–
puthuvai_gnanam@rediffmail.com

( லாவோட்சு )

Series Navigation

author

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

Similar Posts