காக்க… காக்க… சுற்றுச் சூழல் காக்க

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

முனைவர் க.துரையரசன்


உலகம் முழுவதும் சுற்றுச் சூழல் சீர்கேடு நிலவி வருவதை அனைவரும் அறிவோம். ஆயினும் சுற்றுச் சூழல் சீர்கேட்டைக் களைவதைப் பற்றியோ அல்லது அது பற்றிய விழிப்புணர்வோ நமக்கு இருப்பதில்லை. இந்த ஆதங்கத்தின் விளைவாக எழுந்தது இக்கட்டுரை ஆகும். இக்கட்டுரையைப் படிப்பவர்களில் எவரேனும் ஒருவருக்கேனும் சுற்றுச் சூழல் பற்றிய தாக்கம் சிறிதளவேனும் ஏற்பட்டாலும் கூட நான் பெரிதும் மகிழ்வேன்.

உயிரனங்களின் சூழலுக்கேற்ற செயல்பாடுகள் பற்றிய சிந்தனைகளைச் சுற்றுப்புறச் சூழல் சிந்தனை என்று கூறலாம். சூழலியல் என்ற சொல் அய்காஸ் (eicos) என்ற கிரேக்கச் சொல்லை மூலமாகக் கொண்டு தோன்றியது ஆகும்.

மனிதன் தன் உறைவிடத்தையும் உறைவிடத்தின் பண்புகளையும் சிறப்புக் கூறுகளையும் அறிந்து தெரிந்து கொள்ளும் சிந்தனை முறையே சுற்றுப்புறச் சூழல் சிந்தனை என்று ஏர்னெஸ்ட் ஹெகல் குறிப்பிடுகிறார்.

எனவே, சுற்றுச் சூழல் என்பது உயிரினத் தொகுதிகள் வசிக்கும் இடங்களைச் சுற்றி நிலவுகின்ற தன்மை அல்லது சூழ்நிலை. அதாவது நம்மைச் சுற்றி உள்ள இடங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள முயற்சிக்கின்ற போக்கு இன்று சமூகத்தில் பெரிதும் வற்புறுத்தப்படுகின்றது. இதைத்தான் சுற்றுச்சூழல் காப்பு அல்லது சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்றெல்லாம் கூறுகின்றோம்.

சூழலியல் அறிஞர்கள் சுற்றுப்புறச் சூழலைச் சமூகவியல் நோக்கில் சூழலியல், மானிடவியல் சூழலியல், பண்பாட்டுச் சூழலியல் என்று பகுத்துக் காட்டுகின்றனர். இம்மூன்றும் சமூக உருவாக்கத்தை, வாழ்க்கை முறைகளை மையமாகக் கொண்ட நிலையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாகும்.

சமூகவியல் நோக்கில் சூழலியல்

ஒவ்வொரு சமூகத்திலும் சாதி, சமயம், கல்வி, தொழில் போன்ற நிறுவனங்கள் உண்டு. இந்தச் சமூக நிறுவனங்கள் தமக்குள் ஒன்றுக்கொன்று இணக்கமான உறவைப் பெற வேண்டுமெனில், அவை இயற்கையுடன் இணக்கமான தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும். சமூக ஆரோக்கியத்தைப் பற்றிய சிந்தனை சுற்றுப்புறச் சூழலாக மாறியது என்று சமூகவியலார் விளக்குவர்.

மானுடவியல் நோக்கில் சூழலியல்

மானுடச் சமூகத்திற்கும், அவர்களின் சுற்றுப்புறச் சூழலுக்கும் இடையே உள்ள உறவை ஆராய்ந்து விளக்குவது மானுடச் சுற்றுப்புறச் சூழலியல் எனப்படும்.

பண்பாட்டுச் சூழலியல்

ஒரு குறிப்பிட்ட சூழலில், சில குறிப்பிடத்தக்க பண்பாட்டுக் கூறுகளைத் தழுவிக் கொள்ளுதல் அல்லது அச்சூழலுக்கு ஏற்றவாறு தம் வாழ்வியல் முறைகளைப் பொருத்தமுற மாற்றியமைத்துக் கொள்ளுதலை விளக்குவது பண்பாட்டுச் சூழலியல் என்று அழைக்கப்படுகிறது.

சூழலியல் அறிஞர்கள் பல கோணங்களில் சூழ்நிலைக் காரணிகளை அணுகுவதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, ஒல்லும் வகையெல்லாம் சுற்றுச் சூழல் பற்றிய அறிவை நாம் பெற முயல வேண்டும் – சூழலியல் பற்றிய அறிவைப் பொதுமக்களுக்கு அறிஞர்களும் கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் பாமர மக்களுக்கும்கூட சுற்றுச் சூழல் பற்றிய புரிதல் ஏற்படும்.

மனிதன் இயற்கையைச் சார்ந்தே வாழ்கின்றான். இயற்கையைப் பயன்படுத்திக் கொள்ளாமல் அவனால் வாழவே முடியாது. சங்க காலத்திலும் சரி – இன்றும் சரி மனிதர்கள் இயற்கையைப் பயன்படுத்தியே வாழ்ந்து வந்தனர; வாழ்ந்து வருகின்றனர்.

சங்க கால மக்கள் இயற்கை வளங்களை, ஆற்றல்களை அழிக்கவேயில்லை என்று கூற முடியாது. ஓரளவு அழித்தார்கள். ஆனால் அழித்த ஆற்றலைப் புதுப்பித்தலையும் செய்து கொண்டு இருந்தனர். இன்று ஆற்றலைப் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளங்கள் (Renewable Energy Resources) என்றும் புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்கள் (Non Renewable Energy Resources) என்றும் பிரிக்கின்றனர். சங்க கால மக்கள் புதுப்பிக்க கூடிய ஆற்றலையே அதிகம் பயன்படுத்தினர். மரங்களை அழித்து வீடுகளைக் கட்டிக் கொண்ட மக்கள் வெட்டிய மரங்களையும் வளர்க்கத் தவறவில்லை. வீட்டைச் சுற்றி நொச்சி மரம் வளர்த்தனர் சங்க மக்கள். ஏதோ ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்று எண்ணாமல் மருத்துவப் பண்புகள் நிறைந்த, இதயத்திற்கும், சுவாச உறுப்புகளுக்கும் நலம் தரக் கூடிய தாவரங்களை வளர்த்தனர்.

சங்க காலத்தில் வாழ்ந்த மக்களைக் காட்டிலும் இன்றைய நவீன காலத்தில் வாழும் மக்களுக்கு மிகுந்த சுற்றுச் சூழல் அறிவு இருக்கும் என்று கூறலாம். ஆனால், சங்க கால மக்கள் சுற்றுச் சூழலிடத்துக் கொண்டிருந்த பய பக்தி இன்றைய மக்களிடம் இல்லை என்றே கூற வேண்டும்.

ஏனெனில், இன்றைய மக்கள் வீடுகள் கட்டுவதற்குக் காடுகளையும், விளை நிலங்களையும், ஏரிகளையும் அழிக்கின்றனர். அவற்றில் வீடுகளைக் கட்டிக் கொள்கின்றனர். அதனால் விளைகின்ற சுற்றுச் சூழல் கேடுகள் சொல்லி மாளாது.

சமீபத்தில் செய்தித் தாள்களில் வந்திருந்த செய்திகளை அனைவரும் கண்டிருப்பீர்கள். அரசு அலுவலராக இருந்த சிலர் புறம்போக்கு நிலங்களையும் ஏரி, குளங்களையும் பட்டா போட்டு விற்று விட்டனர். இது போன்று தெரிந்தே செய்கின்ற சுற்றுச் சூழல் கேடுகள் இன்று ஏராளம் … ஏராளம்.

உங்களுக்கு ஆச்சிரியமாக இருக்கிறதா? புறம்போக்கு நிலங்களையும், ஏரி குளங்களையும் பட்டா போட்டது எப்படி சுற்றுச் சூழல் கேடாகும் என்று. சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக சென்னை மாநகரமே மிதந்ததே! இதற்கு என்ன காரணம்?

மழைநீர் செல்லக் கூடிய வடிகால் வசதிகளை அரசு செய்து கொடுத்திருந்தும் அவற்றைச் சரிவர பயன்படுத்திக் கொள்ளாமையே ஆகும்.

மழைநீர் சென்று அடையக் கூடிய ஏரி மற்றும் குளங்களை ஆக்கிரமிப்பு செய்து கொண்டது – மழைநீர் செல்லக் கூடிய பாதைகளை அடைத்து கடைகள், வீடுகள் கட்டிக் கொண்டது – மழைநீர் செல்லக் கூடிய பாதைகளில் வீணான திடப் பொருள்களைப் போட்டமையால் நீரோட்டம் தடைப்பட்டது – இவை போன்ற பலவித காரணங்களால் தான் சென்னை நகரம் மிதக்கக் காரணமாயிற்று.

நான் ஏன் இதை எடுத்துக்காட்டினேன் என்றால் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு என்பது நாம் கண்கூடாகக் காணும் ஒன்று. இதன் விளைவாக சென்னை நகரம் மிதந்ததும் நாம் கண் கூடாகக் கண்ட ஒன்று. இதுபோல் இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

எனவே, சுற்றுச் சூழலைச் சரிவரப் பாதுகாக்கவில்லை என்றால் மனித சமுதாயமே மிகுந்த துன்பத்திற்கு ஆளாகும் நிலை மட்டுமின்றி மனித சமுதாயமே அழிந்து போகின்ற அபாயம்கூட ஏற்படும். தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு.

வேலியில ஓடுற ஓணாண
மேல தூக்கிப் போட்டுக்கிட்டு
குத்துதே குடையுதே

என்பது அப்பழமொழி.

சுற்றுச் சூழல் கவனம் நம் அனைவருக்கும் உடனடியாக ஏற்பட வேண்டும். இல்லை என்றால் மேற்சுட்டிய பழமொழி உண்மையாகி விடும்.
———————–
முனைவர் க.துரையரசன்
உதவி இயக்குநர்
தமிழ் இணையப் பல்கலைக் கழகம்
சென்னை – 113

darasan2005@yahoo.com

Series Navigation

author

முனைவர் க.துரையரசன்

முனைவர் க.துரையரசன்

Similar Posts