தேர்தலும், அதற்கு அப்பாலும்-1

author
0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


1, மத்தியில் ஆளும் கட்சி அல்லது கூட்டணிதான் மாநிலத்தில் ஆள்வது நல்லது என்ற கருத்தை சிதம்பரம்
அடிக்கடி குறிப்பிடுகிறார். இது சரியல்ல.மக்கள் தெரிவின் அடிப்படையில்தான் அரசு அமைய வேண்டும். இன்னும் 3 ஆண்டுகள் மத்தியில் உள்ள கூட்டணி அரசு நீடிக்கும் என்று என்ன நிச்சயம்.அது கவிழ்ந்து பா.ஜ.க தலைமையில் வேறொரு கூட்டணி அல்லது தனிக்கட்சி அரசு ஏற்பட்டால் மாநில அரசும் ராஜினாமா செய்ய வேண்டுமா. ஜெயலலிதா அரசிற்கும் தற்போதைய மத்திய அரசிற்கும் சுமுக உறவு இல்லை என்பதற்காக ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கக் கூடாது என்பது சரியல்ல. கூட்டாட்சித் தத்துவதிற்கு இது முரணானது. மாநில அரசு எதிர்க்கட்சி வசமிருந்தாலும் பாரபட்சமின்றி நடத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. இதைச் செய்ய முடியாதவர்கள் அமைச்சர்களாக இருக்க தகுதியற்றவர்கள்.

2, ஜெயலலிதா அமைச்சரவையில் இஸ்லாமியர் ஒருவர் கூட இப்போது இல்லை என்பதை சுட்டிக்காட்டி
அவரை விமர்சிக்கிறார்கள் சிலர் (உ-ம். தமுமுக,வீரமணி,சிதம்பரம்). இது ஆரோக்கியமான பார்வையல்ல.
அரசியல் சட்டம் எல்லா மதங்களுக்கும் அமைச்சரவையில் இடம் தர வேண்டும் என்று கூறவில்லை. அமைச்சரவையில் யாரை சேர்ப்பது, யாரை நீக்குவது என்பது முதல்வரின்/பிரதமரின் தனி உரிமை. அரசு
மதசார்பற்ற அரசாக இருக்கிறதா, அரசியல் சட்டப்படி நடக்கிறதா என்பதே முக்கியம். ஒரு மதத்தினை
சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லாததால் அந்த அரசு அந்த மதத்தவருக்கு விரோதமான அரசு என்று அர்த்தப்பள்ளிக் கூடாது. அரசு எப்படி செயல்படுகிறது என்பதே முக்கியம், அமைச்சரவையில் எந்த மதத்தினை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள், இல்லை என்பதல்ல. என் மதத்தினைச் சேர்ந்தவர் இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இல்லை ஆகவே இது என் மதத்திற்கு எதிரான நிறுவனம் என்று ஒரு பொதுத்துறை
நிறுவனத்தினை கருத முடியாதோ அது போல்தான் அமைச்சரவையும். பெயரளவிற்கு ஒருவரை அமைச்சராக்கிவிட்டேன் என்று வாக்குவங்கி அரசியலைக் கருதாமல் தன் முடிவின் படி செயல்படும் ஜெயலலிதாவை இந்த விதத்தில் பாராட்ட வேண்டும். ஒரு முதல்வருக்கு இருக்கும் அதிகாரம் அமைச்சரவையில் யார் இடம் பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பது. அங்கும் மத ரீதியாகவே, சாதி ரீதியாகவே
அவர் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

3,ஜெயலலிதா மீது வைக்கபடும் இன்னொரு குற்றச்சாட்டு முஸ்லீம்களின் தொகுதியான வாணியம்பாடியில்
முஸ்லீம்கள் அல்லாத ஒருவரை நிறுத்தியது. இது மிகவும் அபத்தம். அரசியல் சட்டம் மத ரீதியாக தொகுதிகளைப் பிரிக்கவில்லை. மேலும் அப்படி நிறுத்தப்பட்டவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுள்ளார். எனவே முஸ்லீம்களின் தொகுதி, முஸ்லீம் நின்றால்தான் ஒட்டுப் போடுவோம் என்று வாக்காளர்கள் நடந்து கொள்ளவில்லை. இது அவர்கள் தங்கள் பொறுப்பினை சரியாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. மும்பையில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்து மராட்டியர் அல்லாதோரும், மராட்டியை தாய்மொழியாகக் கொண்டிராதோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது போல் பல உதாரணங்கள் தரலாம். இத்தகைய குற்றச்சாட்டுக்கள் இவ்வாறு கூறுவோரின் குறுகிய மனப்பான்மையினையும், சகிப்புத்தன்மையின்மையும் காட்டுகின்றன. அப்படி ஒருவரை நிறுத்தி வெற்றிக் காணச் செய்த ஜெயலலிதா வாக்களர்கள்
வேட்ப்பாளரின் மதத்தினை மட்டுமே கருதி ஒட்டளிப்பார்கள் என்ற எண்ணம் பொய்யானது என்பதை
நிரூபித்திருக்கிறார்.

4, திமுகவின் இலவசத் திட்டங்கள் எந்த அளவு சாத்தியம், நிதி எங்கிருந்து வரும், மான்யங்களை மத்திய அரசு குறைக்கும் போது மாநில அரசால் எந்த அளவு மான்யங்களை ஏற்க இயலும் – இப்படி பல கேள்விகள் எழுகின்றன. பொது விநியோகத்தில் அரிசி இலவசமாகத் தரப்படுவது (அதிமுக வாக்குறுதி) அல்லது
மிகக்குறைந்த விலைக்கு தரப்படுவது (திமுக வாக்குறுதி) பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். ரூ 2க்கு வாங்கி சந்தையில் ரூ 10க்கு (ஒரு உதாரணமாக) விற்க முடியும் என்றால் அரிசியை கடத்துவது, நுகர்விற்கு இல்லாமல் அரிசியை விற்பது, விநியோகத்தில் முறைகேடுகள் என்று பல பிரச்சினைகள் ஏற்பட இது வழிவகுக்கும். மேலும் இவை அனைவருக்கும் என்னும் போது அரிசி வாங்காத ரேஷன் கார்டுதாரர்களுக்கும்
வழங்கிவிட்டதாக கணக்கு காண்பித்து அரிசியை வெளிமார்க்கெட்டில் விற்பது அதிகரிக்கும். ரேஷன் கார்டுத்தார்களில் கடந்த காலங்களில் எத்தனை பேர் அரிசி வாங்கியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு இவ்வாறு செய்வது எளிது. 10% பேர் வாங்கவில்லை என்றால் கூட கொள்ளை லாபம் கிடைக்கும்.
இதையெல்லாம் தவிர்க்க அரிசி மற்றும் உணவு பொருள், எரி பொருள் மான்யம் யாருக்கு மிகவும் தேவையோ அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் அரசின் மான்யங்கள் கூடினாலும்
அதன் பயன் யாருக்கோ போய்ச்சேரும்.

5, இரு கழகங்களும் கல்வி குறித்து சிலவற்றை கூறியிருக்கின்றன. முதலில் பொறியியல் கல்லூரிகளில் அரசு நினைத்தபடி கட்டணத்தினை குறைக்க முடியாது. அதை தீர்மானிக்கும் கமிட்டி பரிந்துரைத்தாலும்
குறைப்பது என்பது சாத்தியம் இல்லை. அரசு மான்யத்தினை நிர்வாகங்களுக்கு வழங்கலாம். ஆனால் இது
பெருந் தொகையாக இருக்கும். இதற்கு அரசே ஏன் புதிதாக கல்லூரிகளை திறக்கக் கூடாது என்ற
கேள்வி எழும். இந்திய தொழில் நுட்ப கழகங்களுக்கு நிகரான கல்லூரிகளை நிறுவுவது (அதிமுக
வாக்குறுதி) எளிதல்ல. மேலும் இப்போது பொறியியல் கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான இடங்கள்
காலியாக இருக்கும் போது இவற்றிற்கு என்ன தேவை. முன்னாள் துணைவேந்தர குழந்தைசாமி ஒரு
கட்டுரையில் தமிழ் நாட்டில் கடந்த இருபதாண்டுகளில் துவக்கப்பட்ட பல பல்கலைகழகங்களில் போதுமான ஆசிரியர்கள் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை, ஏன் பல துறைகள் கூட இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதை சரி செய்யாமல், இது போல் ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக் கல்வியில் உள்ள
குறைகளை சீர் செய்யாமல் புதிது புதிதாக திட்டங்களை அறிமுகப்படுத்த தேவையில்லை. இருக்கின்றதை
ஒழுங்காக்கினால் பல பிரச்சினைகள் தீரும். பல பல்கலைகழகங்களில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவது நடந்து கிட்டதட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று அறிகிறேன். இன்றுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கல்வி குறித்த ஒரு முழுனையான ஆய்வு தேவை, பலம், பலவீனம், வாய்ப்புகள், ஆபத்துகள் (SWOT) குறித்த
விரிவான ஆய்வு தேவை. மேலும் எதிர்காலத்தில் இங்குள்ள பல்கலைகழகங்கள் எத்தகைய துறைகளில்
தனிக்கவனம் செலுத்த வேண்டும், எத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து
ஆய்வு செய்யப்பட்டு பல்கலைகழகங்கள் சீரமைக்கப்பட வேண்டும். முதலில் இத்தனை பல்கலைகழகங்கள்
வேண்டுமா அல்லது இவற்றிற்கு பதிலாக தரமான, வசதிகள் கொண்ட பல்கலைகழகங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், போதாதா என்பதையும் யோசிக்க வேண்டும். தமிழக அரசு உலகத்தரமான
பல்கலைகழகங்கள், தொழில் நுட்பகல்வி நிறுவனங்கள் போன்றவை தமிழ் நாட்டில் வளாகங்கள் அமைக்க
முன் வரும் வகையில் கொள்கை வகுக்க வேண்டும். ஆந்திர மாநிலம் பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் வளாகத்தினை அமைக்க உதவியது. அது போல் தமிழக அரசும் செய்ய வேண்டும். ஆனால்
இரு கழகங்களுக்கும் கல்வி குறித்து ஒரு தொலை நோக்குப் பார்வை இருப்பதாகத் தெரியவில்லை.

6, யார் ஆட்சிக்கு வந்தாலும் பாலறு, முல்லைப் பெரியாறு,காவிரி ஆகிய மாநிலங்களுக்கிடையே
ஆன நீர்ப்பகிவுப் பிரச்சினைகளை எதிர்கொண்டாக வேண்டும். இதில் காங்கிரஸ், கம்யுனிஸ்ட்,பாஜக
கட்சிகள் தமிழகத்திற்காக, தமிழகத்திற்காக உரத்து குரல் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
அவற்றின் மத்திய தலைமைகள் நீக்குப் போக்காக, கண்டதும் காணாததும் போல்தான் நடந்து
கொள்ளும். திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் இப்பிரச்சினைகளை எப்படிக் கையாளும் என்பதை
பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் ஜெயலலிதா முனைப்பாக செயல்பட வாய்ப்புகள்
அதிகம், ஆனால் பிரச்சினைகள் தீரும் என்று உறுதி சொல்ல முடியாது. பாலாற்றில் அணைக் கட்டாதே
என்று காங்கிரஸின் தலைமை ராஜசேகர ரெட்டியிடம் கூறாது. அதற்காக திமுக மத்திய அமைச்சரவையிலிருந்து விலகும் அல்லது ஆதரவை விலக்கிக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்க முடியாது. எனவே ஒருவிதத்தில் பார்த்தால் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவதே நல்லது என்று தோன்றுகிறது. குறைந்தபட்சம் ஒரு பலமான எதிர்ப்பினையாவது அவர் காட்டுவார்.

7, தமிழகம் முன்னேறிய மாநிலம் என்று இரு கழகங்களும் கூறினாலும், அகில இந்திய அளவில் நாம்
பலவற்றில் முதல் இரண்டு அல்லது மூன்று இடங்களில் இல்லை. மானுட வளர்ச்சிக் கண்ணோட்டத்தில்
பார்த்தால் நாம் போக வேண்டிய தூரம் மிக அதிகம். சுகாதாரம், கல்வி போன்றவற்றிலும், சுற்றுச்சூழல்
பாதுகாப்பு,இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்துவது, தொழில்மயமாதல்,நகர்மயமாதல் போன்றவற்றின் எதிர்மறை தாக்கங்களை குறைப்பது ஆகியவற்றிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இனி வரும் சில பத்தாண்டுகளில் நாம் என்ன செய்ய வேண்டும், எத்தகைய இலக்குகளை எட்ட வேண்டும்,
அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற தொலை நோக்குக் கண்ணோட்டம் தேவை. இந்திய அளவில்
மாநிலங்களின் முன்னேற்றத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதால், சராசரிகளை மட்டும் கருத்தில் கொண்டு நாம் முன்னேறி விட்டோம் என்று இருந்து விட முடியாது.

8,மாறனின் ஒன் இண்டியா திட்டத்தினை இடதுசாரி கம்யுனிஸ்ட்கள் பாராட்டுவது வேடிக்கையாக
இருக்கிறது. இதை விமர்சித்து கட்சியின் அதிகார பூர்வ ஏட்டில் கட்டுரை வெளியாகியுள்ளதை
தமிழ்நாட்டில் உள்ள நிர்வாகிகள் படிக்க வில்லையா இல்லை திமுகவை பகைத்துக்கொள்ள வேண்டாம்,
அதுவும் இப்போது என்ற எண்ணமா. பொருளாதார சிறப்பு மண்டலங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெருகும்
என்று திமுக தரப்பில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. முரசொலி மாறனின் திட்டத்தினை அதிமுக அரசு
புறக்கணித்துவிட்டதாக குற்றம் சாட்டபடுகிறது. ஆனால் இந்த மண்டலங்கள் குறித்து இடதுசாரியினரும்,
பிறரும் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளனர். வரி சலுகைகளைப் பயன்படுத்தில் சில நிறுவனங்கள்
லாபம் பெறவே இது உதவும், எதிர்பார்க்கப்படும் அளவிற்கு இவை ஏற்றுமதிகளைப் பெருக்கா என்றும்
கருதப்படுகிறது. இதெல்லாம் இங்குள்ள இடதுகளுக்குத் தெரியாதா இல்லை இந்த எதிர்ப்பெல்லாம்
தில்லியில் மட்டும்தானா.

தொடரும்

Series Navigation

Similar Posts