தலித்தலைவர்களின் தலித் துரோகங்கள்!

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

ஜெயக்குமார்


நான் பார்த்த பல வலைப்பதிவுகளில் பார்ப்பனர்க்ளுக்கு எதிரான தாக்குதல்களே அதிகம் இடம் பெறுகிறது. அதாவது தலித் மக்களின் முன்னேற்றதிற்கு தடையாகவும், அவர்களைக்கொடுமைப்படுத்துவதாகவும் இருக்கும் ஒரே இனம், பார்ப்பண இனம் என்று சித்தரிக்கப்படுகிறது.

ஆனால் இப்பொது நடக்கும் பாப்பாபட்டி,கீரிப்பட்டி, கண்டதேவி போன்ற பிரச்சனைகளுக்கும், நேற்று நடந்த மெலவளவு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த சாதிக்கலவரங்களுக்கும், முத்துராமலிங்கத்தேவர்காலத்தில் நடந்த தீவைப்பு சம்பவங்கள் (அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று) மற்றும் கீழ்வென்மனி சம்பவங்களுக்கும் இவர்களா காரணம்?.

தலித் மக்கள் எல்லா சாதிக்காரகளாலும் தான் பாதிக்கப்படுகின்றனர். ஏன் அவர்களுக்குள்ளேயே அவர்கள் பாகுபாடு பார்த்துக்கொண்டுதான் இன்னும் இருக்கின்றனர். சில சாதியினர் மறைமுகமாக இவர்களை தாக்குகிறார்கள் என்றால் மற்ற சில சமூகத்தினர் நேரடியாக தாக்குகின்றனர். எப்படி தாக்கினாலும் “அடி அடி தான்!, வலி வலி தான்!”

இதிலிருந்து விடுபட என்னதான் வழி?. சுதந்திரம் வாங்கி , அம்பேத்காரின் போராட்டத்தால் இடஒதுக்கீடு வாங்கி, 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், பல தலித் தலைவர்கள் பல்வேறு கால கட்டங்களில் வந்தும் போயிம், இன்னும் மற்ற சமூகத்தினரின் பார்வையில் தலித் மக்கள் தீண்டத்தகாதவர்களாக இருக்கக் காரணம் என்ன? அதைப் போக்கும் வழிதான் என்ன? என்பதை அலசும் ஒரு விவாத மேடையாகக்கூட இந்த பதிவை எடுத்துக்கொள்ளலாம்.

நான் சிறுவனாக இருக்கும் போது என்னுடைய தாத்தா மிக வருத்தத்துடன் கூறுவார் “சக்கிலியனைத் தொட்டால்தான் தீட்டு!, ஆனால் சாணானை (நாடார்) கண்டாலே தீட்டு! என்று எங்கள் காலத்தில் கூறுவர், ஆனால் இன்று அவர்களின் நிலை மாறிக்கொண்டிருக்கிறது ஆனால் தலித் சமூகம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது, உங்கள் காலத்திலேயாவது இந்த நிலை மாறவேண்டும்” என்று.

நாடார் சமூகம் எப்படி முன்னேறியது?.

எனக்கு தெரிந்து, அவர்கள் இடஒதுக்கீடு கேட்டு பெரிய அளவில் போராட்டம் எதுவும் செய்யவில்லை, அரசு எங்களுக்கு என்ன செய்தது என்று அரசிடம் சலுகைகளை கேட்டு பெரிய அளவில் போராட்டம் செய்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அப்புறம் எப்படி அவர்களின் முன்னேற்றம்?.

எனக்கு தெரிந்த சிலரிடம் விசாரித்த போது தெரிந்து கொண்ட சில விசயங்களில் இருந்து, நான் அறிந்து கொண்டது என்னவென்றால். அவர்களில் முன்னேற்றத்திற்கு காரணம், அவர்களிடையே உள்ள ஒற்றுமைதான். அந்த ஒற்றுமையைக்கொண்டு பொருளாதாரத்தில் தங்கள் நிலையை உயர்த்த முற்பட்டனர். பல நாடார் சங்கங்கள் அரசியல் ரீதியாக இல்லாமல் தங்கள் மக்களை ஒருங்கினைத்து பொருளாதார ரீதியாக அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயன்றது. அதன் பலன் தான் இன்று தென் மாவட்டங்கள் நீங்கள் எங்கு சென்றாலும் பார்க்ககூடிய “நாடார் பள்ளிகள், நாடார் கல்லூரிகள், நாடார் திருமண மண்டபங்கள் , நாடார் தொழிற்சாலைகள்’ ஏன் தங்களுக்கு என வங்கிகளே வைக்ககூடிய அளவிற்கு அவர்களின் வளர்ச்சியை நீங்கள் காணலாம். இன்று அவர்களின் வளர்ச்சி தென்மாவட்டங்களில் அரசியல் கட்சிகளை வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அளவிற்கு வந்துள்ளது.

தலித் சமூகம் ஏன் அப்படிப்பட்ட வளர்ச்சியை அடையவில்லை?. தலித் சமுகத்தில் அது போன்ற சங்கங்கள் வந்ததில்லையா? அல்லது தலைவர்களுக்கு தான் பஞ்சம் இருந்ததா?.

அம்பேத்கார் இடஒதுக்கீடு சில வருடங்கள் தான் கேட்டார். ஆனால் இன்று ஆண்டுகள் பல உருண்டோடிவிட்ட நிலையிலும் இடஒதுக்கீடு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதன் தேவையும் அவசியமும் சிலருக்கு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இட ஒதுக்கீடை பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்த பலரும் இன்னும் அதை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். பலர் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியடைந்த பின்னர் சாதியைக்குறிப்பிடுவதையே அவமானமா கருதுகின்றனர். ஆனால் சலுகைக்களை மட்டும் பெற்றுக்கொள்கின்றனர். இதன் தலைவர்களும் எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை குறைசொல்லியும், மற்ற சமூகத்தினரை குறைசொல்லியுமே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். சிலர் தங்களுக்கு, தங்கள் சமூகத்தினரிடையே உள்ள செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் ஒருதலைவர் கூட அரசின் உதவியை எதிர்பாராமல், பொருளாதாரத்தில் வளமுடன் இருக்கும் தங்கள் சமூகத்தினரின் உதவியோடு ஒரு சங்கத்தை ஏற்படுத்தி இன்னமும் கிராமத்தில் அடிமை வேலை செய்துகொண்டிருக்கும் தங்கள் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. கட்சிக்காகவும், போராட்டங்களுக்காகவும், மாநாடுகளுக்காகவும் தம்மக்களிடம் வசூலிக்கப்படும் பணத்தை வைத்து தன் மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளை இவர்கள் செய்திருக்கலாம். இதுவரை தங்களுக்கு என ஒரு தரமான பள்ளியைகூட இவர்களால் நிர்மாணிக்க முடியவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குறியது. தன் மக்கள் இன்னும் பல இடங்களில் அடிமைகளாக, சாப்பட்டிற்கே வழியில்லாமல் இருக்கும் போது, இவர்களின் பணத்தை வைத்து தமிழ் பாதுகாப்பு போராட்டங்களும், விடுதலை புலி ஆதரவு போராட்டங்களும் நடத்திக்கொண்டிருக்கிறார் ஒரு தலைவர். பல சங்கங்களும், அமைப்புகளும் ஆரம்பிக்கும்போது இருந்த நோக்கம் கடைசிவரைக்கும் இருப்பதில்லை. சிலர் தடம் மாறி போய்விடுகிறார்கள், சிலர் தடம் தெரியாமலேயே போய்விடுகிறார்கள்.

ஒரு சிலர் கூறுகிறார்கள் “நான் பொருளாதாரத்தில் மிக உயர்வாகத்தானே இருக்கிறேன், ஆனால் இன்னும் என்னை இந்த சமூகம் ஒரு தீண்டத்தகாதவனாகவே பார்க்கிறது” என்று. உண்மைதான்!, ஆனால் இன்னும் உன் சகோதரன் பல கிராமங்களில் அடிமைகளாக தானே இருக்கிறான். உன் சகோதரர்கள் துப்புரவுத்தொழிலாளியாக்கவும், உயர்சாதிக்காரகள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களிடன் அடிமைகளாகவும் தானே இருக்கிறான். இன்னும் நீ எதற்கெடுத்தாலும் அரசிடமும், மற்ற சமூகத்தினரிடமும் உதவியும், அனுமதியும் கேட்டு போராடிக்கொண்டேதானே இருக்கிறாய். (உதாரணமாக அரசு வேலைக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்டம் தோறும் ஒரு சம்பிரதாயமாகவே நடத்தப்படுகின்றன, ஆனால் பல நல்ல அரசு பதவிகளில் உள்ள படித்த தலித் மக்கள் தங்கள் மக்களுக்காக ஒரு தரமான பயிற்சி வகுப்பைக்கூட நடத்தமுடியவில்லையே). எப்போது மற்றவர்களின் உதவியே, அனுமதியோ தேவைப்படாமல் தங்களால் வாழமுடியும் என்ற சூழ்நிலை உருவாகிறதோ!, தங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் மற்றவர்களின் அனுமதியின்றி ஏற்படுத்திக்கொள்ளமுடியும் என்ற நிலை வருகிறதோ!, அப்போதுதான் இந்த சமூக பேதம் ஒழியும். இன்றைக்கு சாக்கடையாகிவிட்ட அரசியல் ரீதியாக கிடைக்கும் வெற்றிகளும் , சமூக மோதல்களால் கிடைக்கும் வெற்றிகளும். சமூகத்தில் பிரிவினையை அதிகரிக்குமே தவிர, பேத வேறுபாடுகள் குறைக்காது. ஆனால் பொருளாதார அடிப்படையில் கிடைக்கும் தீர்வு , இந்த பேதங்களை ஓரளவுக்கு ஒழிக்கும் என்பதை , வரலாற்று நிகழ்வுகளில் இருந்தே நாம் அறிந்துகொள்ளலாம்

தயவு செய்து எந்த சமூகத்தினரின் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோட நான் எழுதவில்லை. அப்படி ஏதும் இருந்தால் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு சமுதாயம், அதற்கு தூக்கமாத்திரை கொடுத்து உறங்கவத்துக் கொண்டிருக்கும் தலைவர்களிடம் இருந்து விடுபட்டு எழவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இங்கு நான் எழுதியுள்ளேன்.

–ஜெயக்குமார்
mjai_kumar@hotmail.com

Series Navigation

author

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

Similar Posts