மஹாத்மாவைப் பற்றி ஒரு ஜீவாத்மா எழுதும் வேளையில்: மாப்ளா கலகம்,இந்து மகாசபையும், பாகிஸ்தானும்

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

கற்பக விநாயகம்



மாப்ளா கலகம்:

“மாப்பிள்ளைமார் கலகத்தையும் அவர் (அதாவது காந்தி) கண்டித்ததில்லை” என்கிறார் மலர்மன்னன்.

ம.ம.வின் எதிர்பார்ப்பு என்ன என்றால் மாப்பிள்ளைமார் கலகத்தை காந்தி கண்டித்திருக்க வேண்டும் என்பதே ஆகும்.

மாப்பிள்ளைமார் கலகம் என்றால் என்ன? அதைக் காந்தி கண்டித்தாரா? அக்கலகம் எத்தகையது? அது கண்டிக்கப்பட வேண்டியதா? என்பனவற்றைப் பார்த்தால்தான் தெரியும், “மாப்பிள்ளைமார் கலகத்தையும் அவர் (அதாவது காந்தி) கண்டித்ததில்லை” எனச் சொன்னதன் லச்சணம்.

சென்னை மாகாணத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே கொச்சி, திருவாங்கூர், புதுக்கோட்டை நீங்கலாக ஏனைய நிலப்பரப்பு முழுவதும் பிரிட்டிஷ் கம்பெனியின் ஆளுகையின் கீழ் வந்து விட்டதெனலாம்.

இம்மாகாணத்தின் கேரளாவின் வடபகுதியும் இணைந்திருந்தது. இந்நிலப் பரப்பில் வரி வசூலிக்கும் முறையைப் பிரிட்டிஷார், பல விதங்களில் வகைப்படுத்தி இருந்தனர். பிரிட்டிஷாரை எதிர்த்துத் தீரமாய்ப் போரிட்டு மாண்ட பாளையக்காரர்களை ஒழிப்பதில் பிரிட்டிஷாருக்கு விபீஷண வேலை செய்த சில பாளையக்காரர்களும், எதிர்ப்பே இல்லாமல் பிரிட்டிஷாருக்கு அடிபணிந்த பாளையக்காரர்களும் ஜமீன்தார்களாக ஆக்கப்பட்டு, வரி வசூல் செய்யும் உரிமை பெற்றனர்.

எட்டையபுரம், சிவகங்கை, குளத்தூர் ஜமீன்கள் இந்த வகையில் அடங்கும். இதெல்லாம் தென் மாவட்டத்தின் நிலை. மலபார் பகுதிகளில் பிரிட்டிஷ்காரர்களுக்கு ராஜ விசுவாசம் காட்டிய, சமூகத்தில் மேலாதிக்கம் புரிந்த நம்பூதிரிப் பார்ப்பனர்களை ஜமீன்தார்களாக நியமித்தனர், பிரிட்டிஷ் காரர்கள்.

ஜமீன் முறைப்படி வரி வசூலிக்கப்பட்ட நிலங்கள் மட்டும் சென்னை மாகாணத்தில், அறுபது லட்சம் ஏக்கர் நிலங்களாகும்.

ஜமீன்கள் தவிர தேவதானம், ஜீவிதம், மடப்புறம் எனும் பெயர்களில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்து மத மடாதிபதிகளின் கீழ் இருந்தன.

இவற்றைத் தவிர ரயத்வாரி முறை மூலம் நேரடி நில வருவாயும் ஏனைய நிலங்களில் இருந்து வந்தன.

ஜமீன்தார்களும், மடாதிபதிகளும் நிலக்குத்தகைதாரர்களான சிறு, நடுத்தர விவசாயிகளைக் கடும் வரிச்சுமையில் வாட்டி எடுத்தனர். வெள்ளம், வறட்சி ஆகிய காலங்களில் கூட கட்டாய வரி முறை இருந்தது. வரி வராத நிலங்கள் பறிக்கப்பட்டு விவசாயி துரத்தப்பட்டான்.
விவசாயிகளிடம் இலவசமாய் ‘வெட்டி’ முறை மூலம் ஜமீன்கள் உழைப்புச் சுரண்டலை நடத்தின.

இவ்விவசாயக் குடிகளின் பெண்கள் பாலியல் ரீதியாய் ஜமீன்களால் சுரண்டப்பட்டனர். (அம்மன்கள் உருவான கதைகள் இக்கொடுமையின் விளைபொருளே) சில ஜமீன்கள் 19ம் நூற்றாண்டிலும் பெண்களைச் ‘சிறை’ எடுக்கும் உரிமையை வைத்திருந்தன. மணப்பெண்ணினைக் ‘கன்னி கழிக்கும்’ உரிமையையும் இந்நிலப்பிரபுக்கள் பெற்றிருந்தனர். கொடுமைகள் கோலோச்சிய அக்காலச் சூழல் 20ம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது.

1920களின் ஆரம்பத்தில் இந்தியா முழுவதும் விவசாயிகள், தங்களை நேரடியாகச் சுரண்டிக் கொண்டிருந்த ஜமீன்தார்களை எதிர்த்துப் போர்க்குணம் மிக்க போராட்டத்தை ஆரம்பித்தனர். பஞ்சாப், வங்காளம், மத்திய மாகாணங்களில் இது பெரும் அளவில் ஆயுதப்போரானது.

பஞ்சாபில் அகாலிகள் எனும் பெயரில் ஒழுங்கமைக்கப்பட்ட உழவர் எழுச்சி, நிலப்பிரபுக்களுக்கு எதிராகத் தொடங்கியது. ஜமீன்களின் நேரடி எஜமான் ஆன பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் இத்தகைய கலகங்களை ஈவிரக்கம் இல்லாமல், ரத்தம் சிந்த வைத்து ஒடுக்கியது.

இதில் ஒரு பகுதி நிகழ்வே மலபார் பகுதியின் ‘மாப்ளா’ விவசாயிகள் எழுச்சி ஆகும்.

வரலாற்று அறிஞர் பிபின் சந்திரா தனது ‘modern india’ நூலில் இவ்வரலாற்று நிகழ்வைக் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.

“In Malabar (northern Kerala), the Moplahs or Muslim peasants, created a powerful anti-zamindar movement”.

இவ்வெழுச்சியை, 1922, 05 டிசம்பரில் நான்காம் கம்யூனிஸ்ட் அகிலம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது.

The struggle to free the land from feudal dues and requisitions thus assumes the character of a national liberation struggle against imperialism and the great feudal landowners (examples are the Moplah rising against the landowners and the British in India in the autumn of 1921 and the Sikh rising in 1922).

1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி மலையாள தேசத்தின் மாப்ளா முஸ்லிம் விவசாயக் குத்தகைதாரர்கள், தங்களை ஒட்டச் சுரண்டி வந்த நம்பூதிரிப் பார்ப்பன ஜமீன்தார்களுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியைத் தொடங்கினர். ஆயுதம் ஏந்திடத் துணிந்திடும் முன்னரே ஏறக்குறைய 80 வருடங்களுக்கும் மேலே, ஜமீன் எதிர்ப்பு, மாப்ளா குத்தகை விவசாயிகளிடையே இருந்துதான் வந்துள்ளது.
1836 முதல் இவ்விவசாயிகள் விட்டு விட்டுப் போராடி இருக்கின்றனர்.

நிலப்பிரபுக்களுக்கும், கந்து வட்டிக்காரர்களுக்கும் எதிரான ஆயுதம் தரித்த போராக இது 1921ல் பரிணமித்தது. மாப்ளா விவசாயிகளும், நாட்டுப்புற முஸ்லிம் மதகுருக்களில் சிலரும் பங்கெடுத்துக்கொண்ட இக்கிளர்ச்சியில், மாப்ளா வர்த்தகர்கள் கலந்து கொள்ளவில்லை. காரணம், நம்பூதிரிகளின் சுரண்டல் இவ்வர்த்தகர்களை நேரடியாகப் பாதிக்கவில்லை என்பதே.

திரூர் அங்காடி எனும் இடத்தில் நம்பூதிரிப் பார்ப்பன ஜமீன்தார்களால் ஒழுங்கமைக்கப்பட்டு மசூதி மீது நடந்த தாக்குதலால், முஸ்லிம் மத குருமார்களும், முஸ்லிம் விவசாயிகளுக்குத் தலைமை தாங்கி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். கொஞ்சம் கொஞ்சமாகக் கிளர்ச்சி மலையாள மாவட்டத்தின் கணிசமான பகுதிக்கும் பரவியது. இது ஜமீன்களுக்கு எதிரான மாப்ளா குத்தகைதாரர்களின் எதிர்த்தாக்குதல் ஆகப் பரிணமித்தபோது நம்பூதிரிகளின் நிலை ஆட்டம் கண்டது.

இவ்விவசாயிகள் போராட்டத்தை, மதச்சாயம் பூசி இந்து-முஸ்லிம் கலவரமாய்ச் சித்தரித்து, நம்பூதிரிகளைக் காக்கும் முயற்சியில் இறங்கிய பார்ப்பனர்களும், உயர் சாதியினரும், ‘ஹிந்து மஹா சபை’ மூலமாய் ‘இந்துக்களே! ஒன்றுபடுங்கள்’ எனும் முழக்கத்தை முன்வைத்து, அதே நேரத்தில் ‘வர்ணாஸ்ரமம்’ எனும் நால்வர்ணப் பிரிவினையின் கீழ் ஒன்றுபடவேண்டும் என வற்புறுத்தினர்.

ஆனால் ஜமீனின் சுரண்டலில் பாதிக்கப்பட்டிருந்த ஏழை இந்து விவசாயி இதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. இந்து மகா சபையின் பருப்பு அவர்களிடம் வேகவில்லை. இந்து விவசாயிகளும் மாப்ளா முஸ்லிம் எழுச்சியில் அவர்களுடன் கை கோர்த்தனர். முஸ்லிம் உழவரும், இந்து உழவரும் (குத்தகை விவசாயிகள்) இணைந்த ஆயுதப் போர் தொடர்ந்தது.

அக்கிளர்ச்சியில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, காலனி ஆட்சி எதிர்ப்பு ஆகியன வெளிப்பட்டன.

வயநாடு, வல்லவ நாடு தாலுக்காக்களில் பிரிட்டிஷ் காலனி ஆட்சி நிர்வாகத்தின் அதிகாரம் அகற்றப்பட்டது. கிளர்ச்சிக் காரர்கள் தங்களின் ஆட்சியை அங்கே நிறுவினர். வட்டார நிர்வாகத்தின் பொறுப்புகளை ஒரு குழுவும் , அக்குழுவில் முஸ்லிம் மதக் குருமார்களின் பிரதிநிதியும் இருந்து விவசாயிகளின் போரை வழி நடத்தினர். முதலில் அலி முஜப்பர் என்பவரும், பின்னர் குன்ஹாமேது ஹாஜி என்பவரும் தலைமை ஏற்றனர்.

ஜமீன் அதிகாரம் அகற்றப்பட்டு அங்கு குத்தகைதாரர்களின் அதிகாரம் நிறுவப்பட்டதால், ஜமீனும், அதன் நேரடி எஜமானனான பிரிட்டிஷ் அரசும் கடும் சினம் கொண்டனர்.

மாப்ளாக்களை அடக்கி ஒடுக்க, பிரிட்டிஷாரின் ராணுவப்படையும், போலிஸ் படையும் ஏவி விடப்பட்டன. இதற்கென சிறப்புப் படையான ‘மலபார் ஸ்பெஷல் போலீஸ்’ எனும் ஆயுதப்படை உருவாக்கப்பட்டது.

மாப்ளாக்களின் மையங்கள் மலைப்பாங்கான காட்டுப்பகுதிகளில் இருந்தன. அவற்றை அடைய பிரிட்டிஷ் ராணுவத்தால் எளிதில் இயலவில்லை. இந்த இயற்கைச் சூழலைப் பயன்படுத்தி மாப்ளாக்கள் மறைவுப் போர் நடத்தினர். எனினும் ஓராண்டுக்குள் உழவர் எழுச்சி முறியடிக்கப்பட்டு விட்டது. 3,266 விவசாயிகள் இதில் கொல்லப்பட்டனர். பத்தாயிரம் பேருக்கும் மேற்பட்டவர்கள் படு காயமுற்றார்கள். முப்பதாயிரம் விவசாயிகள் சிறைப்படுத்தப்பட்டனர்.

அரசு, மாப்ளா கிளர்ச்சியாளர்களைக் கொடுமையாகத் தண்டித்தனர். போர்க்கைதிகள் பலரை சரக்கு ரயில் வண்டியின் பெட்டிகளில் அடைத்துக் கொண்டு வந்தனர். போத்தனூர் (கோயம்புத்தூர் அருகில் உள்ள ஊர்) ரயில் நிலையத்தில் ஒரு சரக்குப் பெட்டியுள் அடைக்கப்பட்டிருந்த எழுபது (70) மாப்ளாக்கள், குடிக்க நீரின்றியும், சுவாசிக்க வழியின்றியும் இறந்து போனது தெரிய வந்தது. அந்நாளில் இக்கொடூரச் சம்பவம், கொலைச் சிந்தாகப் பாடப்பட்டு, ஜனங்களால் நினைவு கூறப்பட்டது.

இக்கொலைச் சம்பவத்தை விசாரிக்க மக்கள் பிரதிநிதிக்குழு ஒன்றை காங்கிரஸ் அமைத்தது. வழக்கம் போல உழைக்கும் வர்க்கத்திடம் மட்டும் பேசும் அஹிம்சையையாய், காங்கிரஸ் மாப்ளாக்களின் ஆயுதப் போராட்டத்தைக் கண்டித்தது. மக்கள் தன்னெழுச்சியாக காலனியாதிக்கத்தை ஆயுதம் மூலம் தகர்க்க முனைந்தபோதெல்லாம் அதைத் தடுக்கும் வேலையைத் தான் காங்கிரஸ் செய்தது. சௌரி சௌரா நிகழ்வும், மலபார் உழவர் எழுச்சியும் இவ்வாறுதான் தேசிய இயக்கத்தினால் கண்டிக்கப்பட்டது.

மலர்மன்னன் சொன்ன ‘காந்தி கண்டிக்கவில்லை’ என்பது சரியான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. காந்தியும் இந்த வர்க்கப்போரை வன்மையாகக் கண்டித்தார். தர்மகர்த்தா முறைப்படி, பண்ணையார் மனசு மாறி வந்து, குடியானவர் வாழ்வை மேம்படுத்தும் கனவை விரித்து, உழைப்பாளர்களின் வர்க்கப்போரை மழுங்கடிக்கச் செய்த காந்தியிடம் இருந்து இதைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

மேலும் மலர்மன்னன் எந்த அர்த்தத்தில் மாப்ளா கலகத்தைப் பார்க்கிறார் என்பதும் தெளிவாய்த் தெரிகின்றது. மாபெரும் உழவர் எழுச்சியை முஸ்லிம்-இந்து கலவரமாகச் சுருக்கிப்பார்க்கும் சிறுமைத்தனம், பல வரலாற்று அறிஞர்களால் ஏற்கெனவெ பொய்ப்பிக்கப்பட்டு விட்டது.

அப்போதும் சரி, இப்போதும் சரி, காங்கிரசு எப்போதுமே ஏகாதிபத்திய, நிலப்பிரபுத்துவ நலன்களுக்கானது என்பதால்தான், காலனி/ஜமீன்களுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பைக் கண்டித்தது.

பர்தோலி காங்கிரஸின் தீர்மானங்களில் இரண்டு இவற்றிற்கு ஆதாரமாய் உள்ளன.

தீர்மானங்களில் பிரிவு 6 “ஜமீன்தார்களுக்கு நில வரியைக் கொடுக்காமல் விவசாயிகள் நிறுத்தி வைத்திருப்பதானது தீர்மானத்திற்கு (ஒத்துழையாமைத் தீர்மானம்) எதிரானது என்றும், நாட்டின் மிக நல்ல நலன்களுக்கு ஊறு விளைவிப்பதாகும் என்றும் விவசாயிகளுக்கு அறிவிக்குமாறு காங்கிரஸ் செயற்குழு, காங்கிரஸ் ஊழியர்களுக்கும், அமைப்புகளுக்கும் ஆலோசனை கூறுகிறது.

காங்கிரசின் தீர்மானம் பிரிவு 7, இன்னும் ஒரு படி தாண்டி, “ஜமீன்தார்களுடைய சட்டப்பூர்வ உரிமைகளைத் தாக்குவதை காங்கிரஸ் இயக்கம் எந்த விதத்திலும் தனது நோக்கமாகக் கொள்ளவில்லை என்று ஜமீந்தார்களுக்கு உறுதி அளிக்கிறது” என்றது.

அப்போது காங்கிரஸ் கையில் அதிகாரம் இல்லை. அது வந்த பிறகு, வல்லபாய் படேலின் (இவரை இந்துத்துவாவும் மெச்சிக்கொள்கிறது) இந்திய ராணுவம், தெலங்கானா உழவர் எழுச்சியை எவ்வாறெல்லாம் கொடூரமாய் நசுக்கியது என்பதை வரலாறு அறியும்.

உடனே காங்கிரஸ்தான் அப்படி, மற்றபடி இந்து தேசியவாதிகள்தான் இவர்களுக்கு மாற்று என்று எல்லாம் அர்த்தம் இல்லை. இவர்களும் ஏகாதிபத்திய, நிலப்பிரபுத்துவ சுரண்டலை ஆதரிப்பவர்களே. இதற்கு சான்றாக “மலபார் உழவர் எழுச்சி”யைக் கண்டிக்க விரும்பும் ஜீவாத்மாக்களே சான்று. முன்னாள் சரிகைக்குல்லா ராஜாக்களும், ஜமீன் தார்களும் இந்துத் தேசியக்கட்சியான ஜனசங்கத்தில் திரண்டதும் இதற்கு மற்றொரு சான்று.

முதலாம் உலகப்போரில் காந்தி, இந்திய மக்களை, பிரிட்டிஷ் ராணுவத்தில் சேவை செய்யச் சொன்னால், இந்துத்துவ கட்சியினர் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்யச் சொன்னார்கள்.

கப்பற்படையின் தல்வார் கப்பலில் நடந்த புரட்சியைக் காட்டிக் கொடுத்ததில் மித இந்து வெறிக் காங்கிரசும், தீவிர இந்து வெறி இந்துத்துவாவும் போட்டி போட்டுத் தமது ஏகாதிபத்திய அடிமைத்தனத்தை வெளிப்படுத்தியவர்கள்தான்.

······················································

மாப்ளா கலகத்தின் முடிவில் சரக்கு ரயில் பெட்டியில் அடைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட 70 மாப்ளா விவசாயிகள் குறித்து, 1926 ல் வெளியான குடியரசுப் பத்திரிக்கை தரும் செய்தி ஒன்றைப் பார்ப்போம்.

அப்போது தேசியவாதிகளின்/பார்ப்பனர்களின் ஊதுகுழலாக விளங்கிய சுதேசமித்திரன், 70 பேரைக் கொன்ற விசயத்தில், அரசைப் பார்ப்பனரல்லாதோர் கட்சியான ஜஸ்டிஸ் கட்சி கண்டிக்கவில்லை என எழுதி இருந்தது. அதைப் பெரியார் மறுத்து உள்ளார். பெரியார், காஞ்சிபுரம் காங்கிரசில் கருத்து வேறுபாட்டுடன் வெளியேறிய பிறகான கால கட்டம் அது.

3/10/1926ல் வெளியான குடியரசில் பெரியார் “காங்கிரஸ் விளம்பர சபை” எனும் சிறு கட்டுரையில்

“மலையாள மாப்பிள்ளை கலவரத்தில் மூடுவண்டியில் அகப்பட்டு திக்கு முக்காடி இறந்துபோன சம்பவத்தைக் குறித்து 22/9/26 ஆம் தேதி சுதேசமித்திரனில் பார்ப்பனரல்லாதார் கட்சியாகிய ஜஸ்டிஸ் கக்ஷியார் இதைப்பற்றி ஒன்றும் செய்யவில்லை என்றும், மற்றவர்கள் செய்ததற்கு விரோதமாயிருந்ததாகவும் எழுதியிருக்கிறது.

இது எவ்வளவு பெரிய அக்கிரமம்!

மூடுவண்டி கொலை பாதகம் விஷயமாய் சட்ட சபை நடவடிக்கையை ஒத்தி வைக்க வேண்டுமென்ற தீர்மானம் கொண்டு வந்தவர் அப்போது ஜஸ்டிஸ் கட்சியில் முக்கிய ஸ்தானத்தையும், ஒரு மந்திரிக்கு காரியதரிசியுமாயிருந்த ஸ்ரீமான் ஆர் கே ஷண்முகம் செட்டியாரே ஆவார். அவர் அதற்காக ஏற்பட்ட கமிட்டியில் முக்கிய அங்கத்தினராயிருந்து சர்க்காருக்கு எதிராய் பலமாய் வாதாடியவரும் ஷெ ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினரே ஆவர்.

ஆனால் அக்கமிட்டியில் இருந்து கொண்டு சர்க்காரை ஆதரித்தவர் ஒரு பார்ப்பனரே ஆகும். அவர்தான் ஸ்ரீமான் மஞ்சேரி ராமய்யர். ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர் மலையாள மாப்பிள்ளைகளுக்கு அனுகூலமாயும், சில வெள்ளைக்காரருக்கு விரோதமாயும் அபிப்பிராயம் கொடுத்ததால்தான் அந்த ரிப்போர்ட் வெளியில் வராமல் போய்விட்டது.” என எழுதி உள்ளார்.

இக்குறிப்பில் சுட்டப்படும் ஆர் கே சண்முகம் செட்டியார்தான், பின்னாளில் கொச்சி சமஸ்தானத்துக்கு திவானாகவும், சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகவும் இருந்தவர்.

ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் – அதாவது பார்ப்பனரல்லாதார் கட்சி, மாப்பிள்ளை மாருக்கு ஆதரவாகவும், மஞ்சேரி ராமய்யரும், காங்கிரஸ் கட்சியும் (அதாவது காந்தியும்) பிரிட்டிஷ் மற்றும் நம்பூதிரி நிலப்புரபுக்களுக்கு ஆதரவாயும் இருந்தனர். 1921-22ல்-அதாவது மாப்ளா எழுச்சியின் காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தோன்றி இருக்கவில்லை ஆதலால், அவர்களின் நிலைப்பாட்டை அறிய வாய்ப்பில்லை.

இந்து மகாசபையும், பாகிஸ்தானும்:

“ஜின்னா கடைந்தெடுத்த மதவாதியாக மாற அடிப்படைக் காரணமாக இருந்தது யார் என ஆராய்ந்தால், இறுதிக் கண்ணி காந்தியில்தான் போய் முடியும்” என்று மலர்மன்னன் சொல்லி இருந்தார்.

இதற்கு காந்தி பக்தர்கள் பதில் சொல்லட்டும்.

இறுதிக் கண்ணியைப் பற்றிச் சொன்னவருக்கு, முதற்கண்ணியை நினைவுபடுத்தா விட்டால் அது தர்மமாகாது தானே!

ஜின்னா மட்டும் அல்ல, அவர் இருந்த முஸ்லிம்லீக்கும் 1940ன் ஆரம்பம் வரை தனி நாட்டைப் பற்றி யோசித்ததில்லை. அதன் தலைவர்களில் ஒருவரும், ‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலை எழுதியவருமான கவிஞர் இக்பால், இந்து-முஸ்லிம் பிரச்னை குறித்து

“இந்தியத் துணைக்கண்டத்தின் மிகச் சிக்கலான பிரச்சினை இந்து-முஸ்லிம் பிரச்சினை ஆகும். இச்சிக்கலான பிரச்சினையை முற்றிலும் தீர்ப்பதற்குரிய சிறந்த வழி, கூட்டாட்சித் தத்துவம்தான்” என்றே 30களில் கூறினார்.

சரி. முதலில் இந்திய தேசத்தின் பிரிவினையைப் பற்றிப் பேசியவர்கள்தான் யார்?

முஸ்லிம் லீக்கும் இல்லை. காங்கிரசும் இல்லை.

“இந்தியாவை மத அடிப்படையில் இரண்டு நாடுகளாகப் பிரிக்க வேண்டும்” எனும் பிரிவினைக் கருத்தை முதலில் முழக்கியவர்கள் ‘இந்து மகா சபை’க்காரர்கள்தான்.

இந்து மகாசபையின் தலைவராக இருந்த பாய் பரமானந்தர்தான் அவ்வாறு நாட்டை இரண்டு கூறு போடவேண்டும் எனச் சொன்னவர். “இப்போதைய பாகிஸ்தான் பகுதியை, சிந்துவுக்கு அப்பாற்பட்ட ஆப்கானிஸ்தான் முதலியவற்றோடு இணைத்து ஒரு மாபெரும் முஸ்லிம் பேரரசு உருவாக்கப்பட வேண்டும். அங்குள்ள இந்துக்கள் இங்கே வந்து விடவேண்டும். இங்குள்ள இஸ்லாமியர்கள் அங்கே போய் விட வேண்டும்” என்றார்.

அதன்பிறகு 1937ஆம் ஆண்டு அஹமதாபாத் தில் நடைபெற்ற “ஹிந்து மஹா சபை” மாநாட்டில் “இந்தியா, ஒரே தேசம் அல்ல, இங்கு இரு தேசங்கள் இருக்கின்றன. ஒன்று இந்துக்களின் தேசம்; மற்றது இஸ்லாமியர்களின் தேசம்” என அப்போதைய இந்து மகா சபைத் தலைவர் சாவர்க்கர் (வீர !! சாவர்க்கர்) கூறினார்.

ஆக, தேச ஒற்றுமைக்கு முதற்கொள்ளி வைத்த சிகாமணிகள் யார் என்பது தெரிந்து விட்டதா?

இதெல்லாம் ம.ம.வுக்கும் தெரியும்தான்.

தூங்குபவர்களை எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவர்களை??

******************
vellaram@yahoo.com

Series Navigation

author

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்

Similar Posts