கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 2

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

அரவிந்தன் நீலகண்டன்


இந்தியாவில் இன்றும் தொடரும் ‘புனித விசாரணை ‘ சூழல்கள்

திரிபுரா:

தொடக்கம்:

ஏறக்குறைய 65 ஆண்டுகளுக்கு முன்னர் திரிபுராவின் பாப்டிஸ்ட் சபை (The Baptist Church of Tripura) திரிபுராவில் கிறிஸ்துவின் வார்த்தைகளைப் பரப்ப உருவாக்கப்பட்டது. 1980 வரை மதமாற்றங்களில் எவ்வித பெரிய வெற்றியையும் அடைந்திராத இந்த கிறிஸ்தவ சபை (சர்ச்) பின்னர் இன ரீதியிலான கலவரங்களைத் தூண்டிவிடத் தயங்கவில்லை. அதன் பின்னர் மதமாற்றத்தில் அது குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்தது. (பி.ஜி.வர்கீஸ், ‘India ‘s North-East Resurgence: Ethnicity, Insurgency and Governance, Development ‘ 1996, பக்.175)

ஆயுத உதவி:

ஏப்ரல் 18 2000 அன்று வெளியான பிபிசி செய்தியின் படி இந்த கிறிஸ்தவ சபைதான் என்.எல்.எஃப்.டி (NLFT) எனும் திரிபுரா தேசிய விடுதலைப்படை என்கிற பயங்கரவாத அமைப்புக்கு ஆயுத உதவி செய்கிறது. உதாரணமாக திரிபுரா காவல் துறையினர் நவப்ராவின் பாப்டிஸ்ட் சர்ச்சின் செயலரான நாக்மன்லல் ஹலம் என்பவரை கைது செய்த போது அவரிடமிருந்து 50 ஜெலாட்டின் குச்சிகளும், 5 கிலோ பொட்டாசியமும், 2 கிலோ சல்பரும், இதர வெடிபொருட்களுக்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. கடந்த இரண்டு வருடங்களாக தாம் என்.எல்.எஃப்.டி அமைப்பிற்கான ஆயுதம் வழங்குதலில் தாம் ஈடுபட்டிருப்பதாக அவர் ஒத்துக்கொண்டார்.

NLFT கிறிஸ்தவத்தை பரப்பும் முறை:

NLFT இன் முக்கிய இலக்கு ஜமாத்தியா சமுதாய மக்கள் ஆவர். பிடிப்புள்ள வனவாசி சமுதாயமான இம்மக்களை மதமாற்றுவது பொதுவான மதமாற்ற முயற்சிகளில் கடினமாக இருப்பதால் NLFT தாக்குதல், படுகொலைகள், தண்டனை படுகொலைகள் மற்றும் கடத்தல்ளாகிய முயற்சிகள் மூலம் இவர்களை புலம் பெயர வைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறது. பொதுவாக பாரம்பரிய வாழ்விடங்களில் வாழும் சமுதாயங்களைக் காட்டிலும் புலம் பெயர்ந்து அகதிகள் முகாமில் வாழவைக்கப்படும் போது மதமாற்றுவது எளிதானது என்பது கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நற்செய்தி பரப்பும் முயற்சிகள் (evangelical efforts) மூலம் மிசிநரிகள் கண்டடைந்துள்ள அறிவியல் பூர்வமான உண்மையாகும்.

NLFT இயக்கம் எவ்விதத்தில் ஆட்களைச் சேர்க்கிறது. அதன் இயக்க அமைப்பினுள் இருக்கும் ஒருவர் எவ்விதம் உணர்கிறார் என்பதனை அந்த இயக்கத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டு பின்னர் வெளியேறிய ரத்தன்சாய்ந் தெபர்மா கூறியுள்ளார்.

ஒரு முன்னாள் NLFT இயக்கத்தவனின் பார்வையில்:

பிப்ரவரி 1997 இல் இந்த இயக்கத்தினரால் வீட்டிலிருந்து வீட்டிலுள்ளோர் எதிர்ப்பையும் மீறி கடத்திச் செல்லப்பட்ட தெபர்மா பின்னர் மூன்று மாதங்கள் ஏகே-47 ஸ்டென்கன் உட்பட பல நவீன ஆயுதங்களில் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ்ஸின் நான்கு மூத்த தலைவர்களை கடத்திச்சென்ற செயல் உட்பட பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட இவர் ஒருமுறை தமது கிராமத்தையே சார்ந்த ஒருவரைக் கொலை செய்ய அவரது விருப்பத்திற்கு எதிராக கட்டாயப்படுத்தப்பட்டார். ‘கிறிஸ்தவத்திற்கு மதமாறுவது இயக்கத்தினுள் கட்டாயமான ஒன்றாகும். நானும் மதம் மாற கடுமையான அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டேன். ஆனால் சாக்குபோக்குகள் சொல்லி நான் தப்பி வந்தேன். ‘ என்கிற தெபர்மாவுக்கு மாதத்திற்கு அவரது செயல்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் ரூபாய் ஐயாயிரம் ஆகும். ஆனால் தாம் யாரைக் கடத்தி வருகிறோம், அவர்களுக்கான மீட்புத்தொகை எவ்வளவு என்பது குறித்து இவர்கள் அறியமுடியாது. ( ‘தி டெலிகிராப் ‘ 20 ஏப்ரல் 2000)

இனி NLFT மதரீதியில் நிகழ்த்திய பயங்கரவாத செயல்களுக்கு வரலாம். NLFT பாப்டிஸ்ட் சபையினைச் சார்ந்தது. இருபத்தொன்றாம் நூற்றாண்டினது. கோவாவின் புனித விசாரணை கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்பட்டது. 1560-1812 வரை நடத்தப்பட்டது. என்ற போதிலும், இந்த வன்முறைகளில் ஒரு ஒற்றுமையை காணமுடியும். கிறிஸ்தவ இறையியலின் வெறுப்பியல் ஒற்றுமை அது.

வன்முறைக்கொடுமைகள்:

தூங்கிக்கொண்டிருந்த ஒரு ஹிந்து குடும்பத்தை NLFT தீவைத்துக் கொளுத்தியது. (பிபிசி, ஏப்ரல் 14, 2000.)

திரிபுராவில் ஜிரான்சியா பகுதியில் உள்ள கோவிலுக்குள் ஞாயிறு இரவு நுழைந்து அங்குள்ள பூசாரியும் மதத்தலைவருமான சாந்தி காளீயை சுட்டுக்கொன்றனர் NLFT இயக்கத்தினர். அனைத்து வனவாசிகளும் கிறிஸ்தவத்தையே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனக் கூறுகின்றனர் NLFT இயக்கத்தினர். (பிபிசி, ஆகஸ்ட் 28, 2000)

அனைத்து ஹிந்து சேவை மையங்களும் கல்வி நிறுவனங்களும் மூடப்படவேண்டுமென்று NLFT இயக்கத்தினர் எச்சரித்துள்ளனர். கடந்த ஜூலை 8 ஆம் தேதி வடதிரிபுராவின் ஆனந்த பஸார் பகுதியில் உள்ள சேவா-மிஷன் நிறுவனத்தின் மாணவர் விடுதி இந்த இயக்கத்தினரால் தீ வைக்கப்பட்டது. இங்கு இருந்த 32 மாணவர்களும் ஓடி ஒளிந்ததால் உயிர் தப்பினர். (தி டெலிகிராப், செப்டம்பர் 24, 2000)

திரிபுராவின் பிரபல ஹிந்து சமயத்தலைவரான லாப்குமார் ஜமாத்தியாவின் பிணம் காடுகளில் இருந்து கண்டெடுக்கப் பட்டது. NLFT இயக்கத்தினர் கிறிஸ்தவராக வேண்டுமென்று வைத்த கோரிக்கையை மறுத்துவிட்டவர். (பிபிசி: 27, டிசம்பர் 2000)

கிறிஸ்தவ சர்ச் ஆதரவு பெற்ற NLFT இயக்கத்தினர் பாரம்பரிய இசைக்கருவிகளை கீர்த்தனங்களுக்கு பயன்படுத்துவதற்கு ஹிந்து வனவாசிகளுக்கு தடைவிதித்துள்ளனர். ஹிந்து வனவாசிகளிடையே விநியோகிக்கப்பட்ட எச்சரிக்கை பிரசுரங்களில் NLFT இயக்கத்தினர் பாரம்பரிய இசைக்கருவிகளுக்கு தடை விதித்துள்ளனர். இச்செயல் திரிபுராவின் உட்பகுதிகளான போராக்கா, பட்னி, பார்கதால் மற்றும் சோனாய் (சதார் உட்பிரிவு) ஆகிய இடங்களில் வாழும் ஹிந்து வனவாசிகளுக்கு அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக, NLFT இயக்கத்தினர் ஹிந்து வனவாசிகளை கொன்றும் அவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி துப்பாக்கிமுனையில் கட்டாயப்படுத்தியும் வருகின்றனர். இதே காலகட்டத்தில் 35 ஹிந்து வனவாசிகள் (முன்னணி ஹிந்து வனவாசி சாதுக்களான சாந்தி காளீ மகராஜும், வைணவப்பிரிவு தலைவர்களான தாச்சிதாஸ ரியாங்கும், சந்ஜித் ரியாங்கும் இதில் அடக்கம்) NLFT இயக்கதினரால் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர வனவாசிகளால் நடத்தப்படும் ஹிந்து மத ஆசிரமங்கள் மற்றும் சமய நிலையங்கள் பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்டுள்ளன. மார்ச் 26 அன்று ஜமாத்தியாக்கள் வாழும் பந்தர்கத் கிராமத்தில் (அமர்பூர் உட்பிரிவு) ஆறு வனவாசிகளை அவர்களின் பாரம்பரிய மதச்சடங்குகளை பின்பற்றியதற்காக அடித்து நொறுக்கினர். (தி டெலிகிராப்,1 ஏப்ரல், 2001)

பிரிவினைவாத பயங்கரவாதிகளால் துப்பாக்கிமுனையில் மக்கள் கிறிஸ்தவத்திற்கு மதமாற்றப்படாமல் இருக்க வனவாசி ஹிந்துக்கள் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்தியுள்ளதாக வனவாசி தலைவர்கள் கூறினர். ‘ஆயுதமேந்திய NLFT பயங்கரவாதிகளால் வனவாசி கிராம மக்கள் பலவந்தமாக கிறிஸ்தவத்திற்கு மதமாற்றப்படுவது ஹிந்து மதத்திற்கு ஏற்பட்டுள்ள மிக பயங்கர அபாயம் ‘ என ஜமாத்தியா சமுதாய தலைவரான ராமபாத ஜமாத்தியா கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 5000 வனவாசி கிராம மக்கள் NLFT அமைப்பால் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக அவர் கூறினார். குறைந்தது 20 ஹிந்து வனவாசிகள் கடந்த இரு வருடங்களில் NLFT க்கு பணிய மறுத்தமைக்காக கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.19 சமுதாயங்களின் .சமுதாய தலைவர்களும் சமயத்தலைவர்களுமாக கூடி வனவாசி பண்பாட்டு பாதுகாப்பு அமைப்பினை NLFT-ஆல் ஏற்பட்டுள்ள அபாயத்திலிருந்து பாதுகாக்க உருவாக்கியுள்ளனர். (Indo-Asian News Service (IANS) செய்தி நிறுவனத்திற்காக, சையது ஸாகீர் ஹுசைன், 2-ஆகஸ்ட்-2001)

மகரசங்கராந்திக்கு முந்தைய நாள் அதனை கொண்டாட உள்ளூர் சந்தைக்கு சென்றவர்களில் 16 பேர், NLFT யினர் சுட்டதில் உயிரிழந்தனர். இவர்களில் ஸ்ரீமா என்ற ஏழுவயது குழந்தையும் அவளது பெற்றோர்களும் அடங்குவர். (பிடிஐ செய்தி, 13 ஜனவரி 2002)

கொந்தளிப்பான வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கிறிஸ்தவ பிரிவினைவாத அமைப்பான NLFT யின் பணம் பிடுங்கும் மிரட்டல்களுக்கு தாம் பணியாமல் போராடப் போவதாக ஹிந்து கிராமவாசிகள் கூறினர். நூற்றுக்கணக்கான ஹிந்து வனவாசிகளுக்கு தடை செய்யப்பட்ட NLFT அமைப்பினர் பணம் தரும்படி எச்சரிக்கை மிரட்டல்கள் அனுப்பியுள்ளனர். ‘ஹிந்து வனவாசி கிராம மக்களுக்கு மட்டும் இத்தகைய பணம் தரும் மிரட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன. மறுப்பவர்களுக்கு கொலைத்தண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ என்று ஜமாத்திய ஹோதா எனும் சமுதாய அமைப்பின் தலைமை பூசாரி அஸ்வதாம ஜமாத்தியா தெரிவித்தார். காவல் துறையும் இந்த மிரட்டல்களை உறுதி செய்தது. அரசு பணியிலிருக்கும் அனைவரும் தமது வருடாந்திர ஊதியத்தில் மூன்று சதவிகிதத்தை NLFTக்கு வரியாக அளிக்க வேண்டும். விவசாயிகளும் சுய தொழில் செய்வோரும் ரூபாய் 1800 முதல் ரூ 4000 வரை வரி கட்ட வேண்டும். NLFT அமைப்பினர் துப்பாக்கி முனையில் கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்வதாகவும் வனவாசி ஹிந்துக்கள் புகார் செய்கின்றனர். (Agence France Presse: 31, டிசம்பர் 2002)

திரிபுரா அரசின் ஜூன் 2004 அறிக்கையின்படி இதுவரை 20,000 மக்கள் இவ்வன்முறைகளால் தம் பாரம்பரிய வாழுமிடங்களை இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு திரிபுராவின் பிருந்தாபங்கத் எனும் இடத்தில் இன்று அதிகாலை சந்தேகிக்கப்படும் NLFT இயக்கத்தினர் எட்டு பேரைச் சுட்டுக்கொன்றனர். விவரம்: அமுல்ய தேவநாத், அமர் சரண் தேவநாத், அரபிந்தோ தேவநாத் (4), நிரேத தேவநாத் , பல்குமாரி தேவநாத், நிவா தேவநாத், சபால தேவநாத் மற்றும் பிரேமானந்த தேவநாத் (102) (ரிடிஃப் செய்தி 25, செப்டம்பர் , 2005)

—-

(தொடரும்)

aravindan.neelakandan@gmail.com

Series Navigation

author

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

Similar Posts