போட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 1

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

மார்வின் ஹாரிஸ்


(Cows, pigs wars and witches புத்தகத்தின் 5ஆம் அத்தியாயம்)

பழங்குடி வாழ்க்கை ஆராய்ச்சியின் புதிரான வாழ்க்கை வழிமுறைகளில் முக்கியமான ஒன்று ‘கெளரவத்துக்கான போட்டி ‘ (Drive for prestige)

பலர் தன்னுடைய மாமிசப் பசிக்காக போட்டிப்போடுவது போன்று, பலர் அங்கீகாரப் பசியை தீர்த்துக்கொள்ள முனைகிறார்கள். அங்கீகாரத்துக்காக பலர் அலைவது ஆச்சரியமானது அல்ல. ஆனால் பலரும் நிலத்துக்காகவும், புரோட்டானுக்காகவும் பாலுறவுக்காகவும் போட்டி போடுவதைப் போல சக்தி மிகுந்து மற்றவர்களுடன் போட்டி போட்டு அங்கீகாரம் தேட முனைவதுதான் புதிரானது.

ஒரு சில வேளைகளில் இந்த அங்கீகாரப்பசி அளவு கடந்து அதுவே முற்றும் முடிவுமானதாக ஆகிவிடுகிறது. இதற்கு கொடுக்கவேண்டிய பொருளாதார விலையைக் கடந்து அது ஒரு பொருட்டு அல்ல என்ற அளவுக்கு இது ஒரு வெறியாகவே ஆகிவிடுகிறது.

அமெரிக்காவை, அந்தஸ்து தேடும் போட்டிக்காரர்களின் நாடு (Nation of competitive Status seekers) என்று வான்ஸ் பக்கார்ட் வர்ணித்தபோது அது பலரையும் ஒப்புக்கொண்டு தலையாட்ட வைத்தது. மற்றவர்களை புல்லரிக்க வைப்பதற்காகவே பல அமெரிக்கர்கள் தங்களது முழு வாழ்க்கையையும் செலவிட்டு அந்தஸ்தில் முன்னேறுவதை குறிக்கோளாக வைத்துக்கொள்கிறார்கள்.

நமது சொத்தை விட நமது சொத்து இது என்று பலரும் பாராட்டுவதே முக்கிய நோக்கமாக, அதனை நோக்கி உழைப்பதே நமது முக்கிய வேலையாக ஆக்கிக்கொண்டுவிட்டோம். இது தேவையில்லாத குரோமியம் உருண்டைகளையும், உபயோகமற்ற அலங்காரப் பொருள்களையும் நாம் வாங்கி வைக்கக் காரணமாகிவிடுகிறது.

வேலை செய்யவேண்டாத ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாக மற்றவர்கள் நம்மை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பி, அதற்காக எவ்வளவு முயற்சி செய்கிறோம் என்பது தோர்ஸ்டைன் வெம்லென் சொல்வது போலவே மிகவும் ஆச்சரியமான விஷயம்.

வெப்லன் கூறும் பலரறிய செய்யும் அனுபவிப்பு, பலரறியச் செய்யும் வீண் ( conspicuous consumption and conspicuous waste ) ஆகியவை நம் பக்கத்து வீட்டுக்காரருடன் போட்டி போடுவதை தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதுவே தொடர்ந்து நமது கார்களை மாற்றுவதையும், நமது வீட்டில் இருக்கும் பொருட்களை மாற்றுவதையும், சமீபத்திய மோஸ்தர் உடையலங்காரங்களையும் தெளிவுபடுத்துகிறது.

ஒரு சில பழங்குடி இனத்தினரிடம் இருக்கும் பலரறியச் செய்யும் அனுபவிப்பின் அளவும், பலரறியச் செய்யும் வீணின் அளவும், இன்றைய நவீனயுக வியாபார யுகத்தில் இருக்கும் அளவை விட அதிகமானதாக இருப்பதை, இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் (மொ.கு:புத்தகம் வெளிவந்த வருடம் 1978) பழங்குடியினரை ஆராய முனைந்த மானுடவியலாளர்கள் கண்டு அதிசயித்தார்கள். அந்தஸ்து தேடும் ஆண்கள் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு பெரு விருந்து படைத்தார்கள். பெருவிருந்து நடத்தும் போட்டியாளர்கள் எதிராளி எவ்வளவு சாப்பாடு போட்டார் என்பதை வைத்து மதிப்பிட்டார்கள். விருந்தினர்கள் நடக்க முடியாத அளவுக்கு சாப்பிட்டு, தள்ளாடி நடந்து புதருக்குள் சென்று தங்கள் விரல்களை வாய்க்குள் விட்டு வாந்தி எடுத்து மீண்டும் சாப்பிட வருவார்கள்.

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாநிலம், பிரிட்டிஷ் கொலம்பியா, அலாஸ்கா போன்ற இடங்களில் இருக்கும் அமெரிக்க பழங்குடியினரிடம் கண்டறியப்பட்ட அந்தஸ்து தேடும் பழக்கம்தான் இருப்பதிலேயே வினோதமானது. இங்கு இந்த அந்தஸ்து தேடுபவர்கள் ‘போட்லாட்ச் ‘ Potlatch என்னும் பைத்தியக்காரத்தனமான ‘பலரறியச் செய்யும் அனுபவிப்பு, பலரறியச் செய்யும் வீண் ‘ ஆகியவற்றை செய்கிறார்கள்.

போட்லாட்சின் குறிக்கோள் எதிராளியை விட அதிகமான அளவு சொத்து பொருள் ஆகியவற்றை வழங்கவேண்டும் அல்லது அழிக்கவேண்டும். மிகவும் சக்தி வாய்ந்த பழங்குடித் தலைவராக இந்த அந்தஸ்து தேடுபவர் இருக்கும் பட்சத்தில், தன்னைப் பின்பற்றுபவர்களின் பிரமிப்பு வேண்டியும், எதிராளியை அவமானம் அடையச் செய்யவும், உணவு, உடை, பணம் ஆகியவற்றை அழிப்பார். சில வேளைகள் அந்தஸ்து வேண்டி தன்னுடைய சொந்த வீட்டையே கூட எரித்து அழிப்பார்.

ரூத் பெனடிக்ட் அவர்கள் எழுதிய Patterns of Culture என்ற புத்தகத்தில், போட்லாட்ச் வழக்கத்தை பிரபலப்படுத்தினார். இது எவ்வாறு வாங்கூவர் தீவு பகுதியில் இருக்கும் க்வாக்யுடில் Kwakiutl என்ற பழங்குடியினர் இந்த பழக்கத்தை பின்பற்றுகிறார்கள் என்று வெளிக்காட்டினார். க்வாக்யுடில் கலாச்சாரம் தன்னுள் இருக்கும் மெகலோமேனியாக்கல் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு என்று கருதினார். கடவுள் அவர்களுக்கு குடிக்கக் கொடுத்த ‘கோப்பை ‘ என்று கருதினார். அதிலிருந்து, போட்லாட்ச் என்பது , கலாச்சாரம் என்பது கணிக்கமுடியாத சக்திகளின் உருவாக்கம் அல்லது பைத்தியக்காரத்தனமான மக்களின் உருவாக்கம் என்ற நம்பிக்கைக்கு மகத்தான உதாரணமாக போட்லாட்ச் கருதப்பட்டது. Patterns of Culture என்ற புத்தகத்தைப் படித்து விட்டு பல நிபுணர்களும் ‘மக்களின் அந்தஸ்து தேடும் உந்துதல், கலாச்சாரத்தை நடைமுறைரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் விளக்க முயற்சிப்பதை சிதிலப்படுத்திவிடுகிறது ‘ என்று கருத ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் இங்கே, க்வாக்யுடில் கலாச்சாரத்தில் இருக்கும் போட்லாட்ச் முறை பைத்தியக்காரத்தனமான ஆசைகளின் வெளிப்பாடல்ல, மாறாக, அது வரையறுக்கக்கூடிய பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலைகளின் விளைவு என்று காட்ட விரும்புகிறேன். இப்படிப்பட்ட சுற்று நிலைகள் இல்லாமலிருக்கும் பட்சத்தில், அந்தஸ்துக்கான போட்டி மிகவும் வித்தியாசமான முறைகளில் வாழ்க்கை வழிகளில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. மறைவாக பொருள்களை அனுபவிப்பது போய், பகிரங்கமாக பொருள்களை அனுபவிப்பது வருகிறது. பகிரங்கமாக வீணடிப்பது தடுக்கப்படுகிறது. போட்டி போட்டுகொண்டு அந்தஸ்து தேடுபவர்கள் இல்லாமல் ஆகிறார்கள்.

க்வாக்யுடில் மரவீடுகளில் கடற்கரைக்கு அருகே, சீடர் மற்றும் பிர் மரக்காடுகளினூடே வசிக்கிறார்கள். வான்கூவரின் கரையோரங்களில் பெரிய கனூ எனப்படும் படகுகளில் மீன் பிடித்தும் வேட்டையாடியும் வாழ்கிறார்கள். ‘totem poles ‘ என்று மற்றவர்களால் அழைக்கப்படும் பல சிற்பங்கள் செதுக்கப்பட்ட மரத்தூண்களைக்கொண்டும் உயரமாக அமைக்கப்பட்ட வீடுகளைக்கொண்டும் தங்களை வியாபாரிகளிடம் பிரபலப்படுத்திக்கொள்கிறார்கள். இந்த மரத்தூண்களில் இருக்கும் சிற்பங்கள் அந்த கிராமத்தின் தலைவர்களது மூதாதையரது பட்டங்கள்.

ஒரு க்வாக்யுடில் தலைவர் எப்போதும் தனக்கு தன் பின்னால் இருப்பவர்களிடமிருந்தும் மற்ற சுற்றுப்புற கிராமத்தலைவர்களிடமிருந்தும் கிடைக்கும் மரியாதை போதும் என்று நினைப்பவரல்ல. தனது அந்தஸ்து பற்றிய எப்போதும் ஒரு குறைபாடு உள்ளவராகவே இருக்கிறார். அவருக்கு இருக்கும் குடும்ப பட்டப்பெயர்கள் அவரது மூதாதையர்களிமிருந்து வந்தவைதான். ஆனால், இன்னும் பலர் அதே மூதாதையரிடமிருந்து வந்ததாக சொந்தம் கொண்டாடலாம். தனது தலைமைப்பண்மை நியாயப்படுத்தவும், மற்றவர்களை அங்கீகரிக்க வைக்கவும் அவர் உந்தப்படுகிறார். இப்படி தனக்கு ஒரு அந்தஸ்து ஏற்படுத்திக்கொள்ளும் இஒரு முயற்சியே போட்லாட்ச். இந்த போட்லாட்ச் ஒரு தலைவரால் மற்ற தலைவர்களுக்கும் அவரது பின்பற்றுபவர்களுக்கும் தனது பின்பற்றுபவர்களுக்கும் வைக்கும் பெருவிருந்து. விருந்துக்கு வந்த தலைவரைவிட தான் பெரிய தலைவர் என்று நிரூபிப்பதுதான் இந்த பொட்லாட்சின் முக்கிய நோக்கம். இதை நிரூபிக்க வந்த விருந்தினருக்கு பெரிய விருந்து வைத்து விலைமதிக்க முடியாத பரிசுப்பொருட்களை தருவார். வந்த விருந்தின தலைவர் கொடுக்கப்பட்ட பரிசுப்பொருட்களை குறைத்து மதிப்பிட்டு தான் இதைவிட பிரம்மாதமான ஒரு போட்லாட்ச் வைக்கப்போவதாக சொல்வார். இதைவிட விலையுயர்ந்த பரிசுப்பொருட்களை கொடுக்கப்போவதாகச் சொல்வார்.

பொட்லாட்சுக்கான தயாரிப்புகள், ஏராளமான புதிய மற்றும் காய்ந்த மீன்கள், எண்ணெய், பழங்கள், விலங்கு தோல்கள், போர்வைகள், விரிப்புகள் மற்றும் இது போன்ற விலையுயர்ந்த பொருட்களை சேகரிப்பது. குறிப்பிட்ட நாளன்று, விருந்தினர்கள் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டு தலைவரின் வீட்டுக்குக் கூட்டிச் செல்லப்படுவார்கள். அங்கு சால்மன் மீன்கள், பழங்கள் ஆகியவற்றை வயிறு முட்ட உண்ணும் வேளையில் நடனமாடுபவர்கள் தங்களை பீவர் தெய்வங்கள், இடிப்பறவைகள் போன்று வேடமணிந்து ஆடி மகிழ்வூட்டுவார்கள்.

இந்த கிராமத்தின் தலைவர் தனது பரிசுப்பொருட்களை கொடுப்பதற்காக நீண்ட வரிசையில் அலங்கரித்து வைத்திருப்பார். இந்த தலைவர் முன்னும் பின்னும் நடந்து தனதுபரிசுப்பொருட்களை காட்டி எவ்வளவு தான் தானம் பண்ணுவதற்கு தயாராக இருக்கிறேன் என்று பெருமை பேசி நடப்பார். தனது மீன்கள், எண்ணெய், பெட்டிகள் நிறைய பழங்கள், அடுக்கடுக்காக போர்வைகளும் விரிப்புகளும் காட்டி பேசி வந்த விருந்தினர்கள் எவ்வளவு ஏழை என்பதை கேவலமாக பேசுவார். பரிசுப்பொருட்களை வாங்கிக்கொண்டு வந்த விருந்தினர்கள் தங்களது படகுகளில் ஏற்றிக்கொண்டு கிளம்பப்போகும்போதும் இந்த இழிசொல் தொடரும். இதனால் புண்பட்ட வந்த விருந்தினர்கள், இதைவிட பெரிய பொட்லாட்ச் வைக்கப்போவதாகவும், இதைவிட விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் பதிலுக்கு சொல்வார்கள். எல்லா க்வாக்யுடில் கிராமங்களையும் ஒரே ஒரு அலகாக கருதினால், இந்த போட்லாட்ச் இடைவிடாத நீரோட்டம் போன்று, பொருட்களும் அந்தஸ்தும் தொடர்ந்து எதிர்த்திசையில் பயணம் செய்வதை பார்க்கலாம்.

பெரிய அந்தஸ்து தேடும் கிராமத்தலைவருக்கு பல கிராமங்களிலும் ஒரே நேரத்தில் போட்டி தலைவர்கள் இருப்பார்கள். பரிசுப்பொருட்களை கணக்குப் போடும் சிறப்பு கணக்காளர்கள் ஒவ்வொரு கிராமத்துக்கும் என்ன செய்தால் கணக்கு சரியாகும் என்று கணக்குப் போடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். ஒரு தலைவர் தனது போட்டி தலைவர்களிடம் ஒரு இடத்தில் பெரிய ஆளாக ஆகிவிட்டால், மற்ற இடங்களில் தனதுபோட்டியாளர்களிடம் போட்டி போட்டுஇத்தான் ஆக வேண்டும்.

போட்லாட்சின் போது, விருந்து கொடுக்கும் தலைவர் கூறுவார், ‘ நானே மாபெரும் மரம். நான் கொடுக்கும் பரிசை வீணே கணக்கிட முயலும் நீங்கள் உங்கள் பதில் பரிசை எடுத்து வாருங்கள் ‘ பிறகு விருந்து கொடுக்கும் கிராமத்து மக்கள், இவ்வாறு எச்சரிக்கை செய்வார்கள், ‘ சப்தம் போடாதீர்கள். அமைதியாக இருங்கள். இல்லையேல், எங்கள் தலைவரிடமிருந்து மலைபோன்ற பொங்கும் சொத்துப்பொருட்களினால், முழ்கிவிடுவிடுவீர்கள் ‘ ஒரு சில போட்லாட்சுகளில் விரிப்புகள் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் கொடுக்கப்படுவதில்லை. மாறாக எரிக்கப்படுகின்றன. வெற்றிகரமான போட்லாட்ச் தலைவர்கள் ‘எண்ணெய் விருந்துகளை ‘ வைப்பார்கள். மெழுகு மீன் என்னும் கேண்டில் மீனிடமிருந்து பெறப்படும் எண்ணெயை நடு வீட்டில் கொட்டி எரிப்பார்கள். அந்த எண்ணெய் பிசுக்கான புகை வீடெங்கும் புகையும். அப்போது, விருந்தினர்கள் வீடு குளிர்கிறது என்று பொய்யாக புஇகார் கொடுக்கும்போதும், சொத்துக்களை எரிக்கும் விருந்து கொடுக்கும் தலைவர் பெருமை பேசுவார், ‘வந்த விருந்தினர்களுக்காக வருட ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இவ்வாறு எண்ணெயை கொட்டி புகையை மூட்டக்கூடியவன் இந்த பூமியில் இருக்கும் ஒரே ஒரு மனிதன் இருக்கமுடியுமென்றால் அது நானே ‘ என்றுசொல்வார். சில வேளைகளில் அந்த எண்ணெயின் அளவு அதிகமாகப் போய் அந்த வீடே பற்றி எரிந்து போட்லாட்ச்சாக ஆகும்போது, விருந்துக்கு வந்தவர்களுக்கு பெரிய அவமானமாகவும், விருந்து கொடுப்பவர்களுக்கு பெரும் கொண்டாட்டமான மகிழ்ச்சியாகவும்

ஆகும்.

க்வாக்யுடில் தலைவர்களுக்கிடையே நடக்கும் அந்தஸ்துக்கான கட்டுக்கடங்காத போட்டியாக இதனை ரூத் பெனடிக்ட் பார்க்கிறார். ‘மற்ற கலாச்சாரங்களில் இருக்கும் பேச்சுக்களை ஒப்பிட்டு பார்க்கும்போது க்வாக்யுடில் தலைவர்களுக்கிடையே நடக்கும் பேச்சு வெட்கமற்ற மெகலோமேனியா ‘ என்று எழுதினார். ‘தன் போட்டியாளர்களை விட தான் பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளும் ஒரே நோக்கமே இந்த க்வாக்யுடில் முறை ‘ என்றும் எழுதினார். பசிபிக் வடமேற்கில் இருக்கும் இந்த பழங்குடியினரின் பொருளாதார அடிப்படையே இந்த வீண் பந்தாவுக்காக இரையாக்கப்பட்டுவிட்டது என்றும் எழுதினார்.

நான் பெனடிக்ட் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். க்வாக்யுடிலின் பொருளாதார அமைப்பு இந்த அந்தஸ்து போட்டிக்கு சேவை செய்ய உழைக்கவில்லை. மாறாக, இந்த அந்தஸ்து போட்டி க்வாக்யுடிலின் பொருளாதார அமைப்புக்குச் சேவை செய்கிறது.

க்வாக்யுடிலின் கொடை வள்ளல்தனம் எல்லாமே உலகத்தில் இருக்கும் எல்லா பழங்குடி சமூகங்களிலும் இருக்கும் ஒன்று. அடிப்படையான விஷயத்துக்கு போட்லாச்சை கொண்டு சென்றால், போட்லாட்ச் என்பது போட்டிபோட்டு விருந்து கொடுக்கும் முறை. இது இன்னும் ஒரு ஆளும் வர்க்கத்தை உருவாக்கிக்கொள்ளாத எல்லா சமூகங்களிலும் இருக்கும் அடிப்படையான உற்பத்தி மற்றும் வினியோகம் ஆகியவற்றை உறுதி செய்யும் ஒரு முறை.

மேலனேசியா (பசிபிக் கடல் தீவுகள்), நியுகினியா ஆகிய பிரதேசங்கள் மிகவும் பரிசுத்தமான முறையில் இப்படிப்பட்ட போட்டி விருந்துகளை ஆராய பொருத்தமான இடங்கள். தன் வாழ்நாளில் எவ்வளவு பெரு விருந்து வைத்தான் ஒருவன் என்பதைக்கொண்டு அந்தஸ்து அடையும் தலைவர்களை கொண்ட அமைப்பு இந்த பிரதேசங்களில் காணக்கிடைக்கிறது. ஒவ்வொரு விருந்துக்கு முன்னாலும், தான் விருந்து வைக்க தேவையான அனைத்துப் பொருட்களையும் தீவிரமாக சேகரிக்கும் முறையும் இருக்கிறது.

கவோக்க (Kaoka) மொழி பேசும் சோலமன் தீவு மக்களிடையே அந்தஸ்து தேடும் மனிதர்கள் தன் மனைவியையும் தன் மக்களையும் மிகப்பெரிய சக்கரைவள்ளிக்கிழங்கு தோட்டம் போட தூண்டுவதில் ஆரம்பிக்கிறது. ஆஸ்திரேலிய மானுவவியல் ஆராய்ச்சியாளரான இயான் ஹோக்பின் அவர்கள் விவரிப்பதுபோல, பெரிய மனிதனாக விரும்பும் ஒரு கவோக்க தன் மக்கள் தன் இன மக்கள் உதவியுடன் மீன் பிடிக்க முனைகிறான். பிறகு தன் நண்பர்களிடம் இறைஞ்சி பெண் பன்றிகளை வாங்கி தனது பன்றிக்கூட்டத்தை பெரியதாக ஆக்குகிறான். குட்டிகள் பிறக்க பிறக்க அந்த குட்டிகளை தன் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கொடுக்கிறான். வெகு விரைவில் அந்த மனிதனின் சொந்தக்காரர்களும் நண்பர்களும் இவன் பெரிய ஆளாகிவிடுவான் என்று நம்புகிறார்கள். அவனது பெரிய தோட்டத்தையும் பெரிய பன்றிக்கூட்டத்தையும் பார்க்கும் மக்கள் அவனது வரப்போகும் விருந்து அனைவரின் ஞாபகத்திலும் இருக்க வேண்டும் அது பெரிய சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று அவனுக்கு உதவியை அதிகரிக்கிறார்கள். அவன் பெரிய ஆளாக ஆகும்போது தான் செய்த உதவிகளை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இறுதியாக அனைவரும் ஒன்று சேர்ந்து பெரிய புதிய வீட்டை கட்டித்தருகிறார்கள். ஆண்கள் எல்லோரும் இறுதியாக ஒரு பெரிய மீன்பிடிப்பு வேட்டையில் செல்கிறார்கள். பெண்கள் சர்க்கரைவள்ளிக்கிழங்கு அறுவடை செய்து, எரிவிறகுகள், வாழை இலைகள், தேங்காய்களை சேகரித்து வைக்கிறார்கள். விருந்தினர்கள்

வரும்போது, இவனது சொத்துக்கள் அழகாக அடுக்கப்பட்டு இவை வருபவர்கள் பாராட்டுக்காக காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

அடானா என்ற இளைஞன் கொடுத்த விருந்தின் போது ஹோக்பின் கீழ்க்கண்டவற்றை எண்ணினார். 250 பவுண்டுகள் காய்ந்த மீன், 3000 சர்க்கரைவள்ளிக்கிழங்குகளும் தேங்காய் ரொட்டிகளும், 11 பெரிய பாத்திரங்களில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு கடைசல், 8 பன்றிகள். இது நேரடியாக அடானா வேலை செய்தும் நண்பர்களிடம் வேலை வாங்கியும் கொண்டுவந்த பொருட்கள். இந்த முக்கியமான நாளின் பொருட்டு விருந்தினர்கள் இதனை கெளரவிக்கும் பொருட்டு அவர்களும் பரிசுப்பொருட்களை வாங்கிக்கொண்டு வருவார்கள். அவையும் இந்த வரிசையில் சேரும். மொத்தம் 300 பவுண்டுகள் காய்ந்த மீன், 5000 சர்க்கரைவள்ளிக்கிழங்கு தேங்காய் ரொட்டிகள், 19 பாத்திரங்களில் கடைசல், 13 பன்றிகள். இந்த சொத்தை அடானா 257 பிரிவுகளாக பிரித்தான். அவனுக்கு உதவி செய்வதவர்கள், விருந்துக்கு வந்தவர்கள், பரிசுடன் வந்தவர்கள் ஆகியோருக்காக. ஒரு சிலருக்கு அதிகமாகவும் ஒரு சிலருக்கு குறைவாகவும். ‘மீதமிருப்பவை மட்டுமே அடானாவுக்கு ‘ என்று ஹொக்பின் எழுதுகிறார். இது குவாடல்கானல் பிரதேசத்தில் இருக்கும் அந்தஸ்து தேடுபவர்களுக்கும் பொதுவானது. ‘இந்த விருந்தை கொடுப்பவனான நான் எலும்புகளையும் பழைய ரொட்டிகளையும் எடுத்துக்கொள்கிறேன். சதையும் கொழுப்பும் வந்தவர்களுக்கு ‘ என்று அறிவிக்கிறார்கள்.

பெரிய மனிதர்கள் கொடுக்கும் பெருவிருந்து நாட்கள் ஓய்வதே இல்லை. சாதாரண ஆளாகி விடுவோம் என்ற பயத்தின் காரணமாக ஒவ்வொரு பெரிய மனிதனும் அடுத்த விருந்துக்காக ஓயாது உழைக்க வேண்டியிருக்கிறது. ஒரு கிராமத்திலும் ஒரு சமூகத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பெரிய மனிதர்கள் இருப்பதால், இது கூட்டணிகளுக்கும், பலவிதமானபோர்த்தந்திரங்களுக்கும் இட்டுச் செல்கிறது. பெரிய மனிதர்கள் மற்றவர்கலைவிட அதிகம் உழைக்கிறார்கள்; அதிகம் கவலைப்படுகிறார்கள்; மற்றவர்களைவிட குறைவாக எடுத்துக்கொள்கிறார்கள். அந்தஸ்து மட்டுமே அவர்களது ஒரே பரிசு.

இந்த பெரிய மனிதர்களை உழைப்பாளி-தொழில்முனைவர் (worker-entrepreneur) என்று அழைக்கலாம். ருஷ்யர்கள் இவர்களை stakhanovites என்று அழைக்கிறார்கள். இவர்கள் முக்கியமான வேலை செய்வதன் மூலம் பொதுவான உற்பத்தித்திறனை அதிகரிக்கிறார்கள். பெரிய மனிதனின் அந்தஸ்து பசி காரணமாக, அதிகமான மக்கள் அதிகமாக உழைத்து நிறைய உணவையும் விலைமதிப்புள்ளவற்றையும் உருவாக்குகிறார்கள்.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான உழைத்துண்ணும் வாய்ப்பு இருக்கும் போது, இப்படிப்பட்ட போட்டி விருந்துகள், உழைப்பு சக்தி மிகக்குறைந்த அளவுக்குச் சென்று, ஒரு பஞ்சத்தின் போதோ அல்லது ஒரு பயிர் நாசத்தின் போதோ போரின் போதோ தேவையான பாதுகாப்பை இழந்துவிடும் நிலையை தடுக்கும் ஒரு முக்கியமான வேலையை செய்கின்றன

மேலும், சுதந்திர கிராமங்களை ஒரே பொருளாதார அமைப்பின் கீழ் கொண்டு வரக்கூடிய அரசியல் அமைப்புச் சாதனங்கள் இல்லாத ஒரு ஆரம்பகால சூழ்நிலையில், இப்படிப்பட்ட போட்டி விருந்துகள், பொதுவான பொருளாதார எதிர்பார்ப்புகளை கொண்ட பரந்த வலையை உருவாக்குகின்றன. இது ஒரே ஒருகிராமம் உருவாக்கக்கூடிய உழைப்புத்திறனை விட பரந்த மக்கள் தொகையை இந்த உழைப்பின் கீழ் கொண்டுவருகின்றன. இறுதியாக, கடற்கரை, லகூன், மலைவாழ் மக்கள் என்று பலதரப்பட்ட இடங்களில் வசிக்கு மக்களுக்கு இடையே ஒரு சமத்துவத்தையும் பொருள் வினியோக முறையையும் கொண்டு வர இந்த விருந்துகள் உதவுகின்றன. இயற்கையாகவே, எந்த கிராமம் நிறைய மழையும், சமச்சீரான வெப்பமும், கொண்டு உற்பத்திக்கு உகந்த சூழ்நிலையைக் கொண்டிருக்கிறதோ அந்த கிராமமே, விருந்து வைக்க முந்தும்.

மேற்கண்ட எல்லா புள்ளிகளுமே க்வாக்யுடில் சமூகத்துக்கு பொருந்துகின்றன. க்வாக்யுடில் தலைவர்கள் மேலனேசிய பெரிய மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள். மேலனேசிய பெரிய மனிதர்களைப் போலவே, தங்கள் கிராமத்துக்கு ஆண்களும் பெண்களும் அடிக்கடி வரவேண்டும் என்று போட்டி போடுகிறார்கள். யார் பெரிய விருந்து வைத்து பெரும் கொடையாளர்களாக இருக்கிறார்களோ அவர்களே சிறந்த தலைவர்கள். இப்படிப்பட்ட பெரிய தலைவர்களின் பின்னால் நிற்கும் கிராமத்தினர் அந்த தலைவரின் பெருமையில் பங்கு கொண்டு அந்த தலைவர் இன்னும் புகழ் பெற வேண்டும் என்று தீவிரமாக உழைக்கிறார்கள். இந்த தலைவர்கள் தங்கள் பெருமையை பறை சாற்ற டோடம் போல்கள் எனப்படும் மர சிற்ப வேலைப்பாடுகளை நிறுவுகிறார்கள். இந்த மர சிற்ப வேலைப்பாடுகள் உண்மையிலேயே விளம்பரங்கள். இந்த விளம்பரங்கள், இக்கிராமத்து தலைவர் பெரும் காரியங்கள் செய்ய வல்லவர், தன் கிராம மக்களை பட்டினி பஞ்சம் வறட்சி நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பவர் என்று அறிவிக்கின்றன. மரத்தூண்களில் செதுக்கப்பட்டிருக்கும் மூதாதையாரான விலங்கு சிற்பங்களின் மூலம் இந்த தலைவர்கள் தங்களை சுகம், உணவு தரும் சிறந்த தலைவர்கள் என்றும், தன் போட்டியாளர்களை செய்து காட்டு இல்லையேல் வாயை மூடு என்றும் சொல்கிறார்கள்.

(இந்த அத்தியாத்தின் அடுத்த பாகம் அடுத்த வாரம்)

Series Navigation

author

மார்வின் ஹாரிஸ்

மார்வின் ஹாரிஸ்

Similar Posts