தலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 1

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

கே.ஜே.ரமேஷ்


ஒரு சாதாரணத் தச்சுத் தொழிலாளியின் மகன் உலகத்திலுள்ள ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் தலைவனாக, ஆதர்ஷ புருஷனாக ஏன் ஒரு கடவுளாகவே விஸ்வரூபமெடுத்த கதை தெரியுமா ? அவர் இல்லையேல் போலந்து நாட்டின் லெனின் கப்பல் கட்டுமான தொழிலகத்தில் வேலை நிறுத்தம் நடந்திருக்காது. சாலிடாரிடி (Solidarity) என்ற தொழிற்சங்கம் தோன்றியிருக்காது. போலந்து நாட்டில் இராணுவச் சட்டம் அமலுக்கு வந்திருக்காது. இராணுவச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் தொடர்ந்திருக்காது. கம்யூனிஸத்தை வீழ்த்தி ஜனநாயகம் ஆட்சி பீடம் ஏறியிருக்காது. இவ்வளவு ஏன் ? ரஷ்யாவின் கம்யூனிஸக் கோரப்பிடியிலிருந்து மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் விடுபட்டிருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கக் கூடும். அவர் தான் லெக் என்று செல்லமாக அழைக்கப்பட்ட லெக் வலென்சா. ஜனநாயக முறையில் தேர்தலில் வென்று தனது நாட்டின் அதிபராகப் பதவியேற்றதும் பின்னர் அடுத்த தேர்தலிலேயே அவரது அரசாங்க வழிமுறைகள் பிடிக்காததினால் மக்களால் தோற்கடிக்கப்பட்டவருமான லெக் ஒரு அபூர்வப் பிறவி. விடுதலைக்கானப் போராட்டத்தில் தன்னிகரற்று விளங்கிய அவர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தவுடன் பதவிக்குப் பொருந்தாத வழிமுறைகளைப் பின்பற்றி மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானார். அவசரக் காலத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற அவர் போலந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பி ஜனநாயகப் பாதையில் பயணித்தபோது அதே மக்களால் புறக்கணிக்கப்பட்டவர். ஆனால் சரித்திரத்தில் அவருக்கு உண்டான இடத்தை யாராலும் மறுக்கவும் முடியாது அதை அவரிடமிருந்து தட்டிப்பறிக்கவும் இயலாது.

லெக் 1943ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி ஒரு ஏழைத் தச்சரின் குடும்பத்தில் பிறந்த போது போலந்து ரஷ்யாவின் பிடியில் இருந்தது. தனது தொடக்க நிலைப் பள்ளிப் படிப்பையும் தொழிற்கல்வியையும் முடித்த லெக் 1967ம் ஆண்டு லெனின் கப்பல் கட்டுமானத் தொழிற்சாலையில் எலக்ட்ரீஷனாக வேலைக்குச் சேர்ந்தார். தனுடா கோலோஸ் என்பவரை 1969ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அவர் மூலம் 8 குழந்தைகளுக்கு தந்தையானார். ரோமன் கத்தோலிக்க நம்பிக்கையில் ஊறி வளர்ந்த லெக் தொழிலாளர்களுக்கெதிரான அடக்கு முறையைக் கண்டு மிகவும் கொதிப்படைந்தார்.

1970ம் ஆண்டு போலந்து நாட்டில் ஆட்சியில் இருந்த போலிஷ் ஐக்கிய தொழிலாளர் கட்சி (போலிஷ் மொழியில் சுருக்கமாக PZPR என்றழைக்கப் பட்ட கட்சி) அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த முடிவெடுத்தபோது அதற்கெதிரான போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் முயற்சியில் ராணுவம் போராட்ட வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியது. அதில் 44 கப்பல் கட்டுமானத் தொழிலாளர்கள் இறந்து போயினர். சுமார் ஆயிரம் பேர்கள் காயங்களுடனும் அதில் 200 பேர்கள் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். போராட்டத்தை அடக்க முற்பட்டாலும் PZPR அதில் தோல்வியே கண்டது. அதன் விளைவாக PZPRன் ஆட்சித்தலைவரான கொமுல்கா பதவி இழக்க நேரிட்டது. விலை உயர்வுக்கான் ஆணையும் திரும்பப் பெறப்பட்டன. போராட்டத்தை முன்னிருந்து நடத்திய கமிட்டியில் உறுப்பினராக இருந்ததாக லெக் வலென்சாவை அரசாங்கம் கைது செய்து சமூகத்திற்கெதிரான வன்முறை குற்றச்சாட்டின் கீழ் ஓராண்டு காலம் சிறையில் அடைத்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்பும் அதனால் கிடைத்த சிறைத் தண்டனையும் லெக் கப்பல் கட்டுமானத் தொழிலாளர்களின் தலைவனாக உருவெடுக்க உதவியது.

கொமுல்கா பதவி நீங்கியவுடன் PZPR புதுப்பொலிவுடன் பொருளாதாரத்தை மீட்கும் பொருட்டு மேலை நாடுகளிடம் அதிக அளவில் கடன் பெற்றது. அவ்வாறு பெற்ற கடனைக் கொண்டு ஏற்றுமதிக்கான உற்பத்தியைப் பெருக்குவதே அதன் திட்டம். அத்திட்டம் குறுகியகால பயனை அளித்தாலும் 1970களின் மத்தியில் போலந்து நாட்டை மிகப்பெரிய கடனாளியாக ஆக்கி பொருளாதார வீழ்ச்சிக்கும் கொண்டு சென்றது. வேறு வழியின்றி 1976ம் ஆண்டு PZPR மீண்டும் விலையேற்றத்தை அறிவித்தது. இந்த முறையும் அதற்கெதிரான போராட்டங்கள் வெடித்து PZPR விலையேற்ற முடிவை திரும்பப் பெறும் கட்டாயத்திற்குள்ளானது. இந்தப் போராட்டத்தின் விளைவாக லெக் வலென்சா தனது வேலையை இழக்க நேரிட்டது. ஆனால் இந்த முறை தொழிலாளர்களுக்கு ஒரு அமைப்பு சார்ந்த ஆதரவு கிடைத்தது. படித்த அறிவாளிகள் ஒன்று சேர்ந்து தொழிலாளர் தற்காப்புக் கமிட்டி (KOR) என்ற அமைப்பை நிறுவியிருந்தனர். மாணவ சமுதாயமும் தங்கள் ஒற்றுமைக்கென மாணவர் ஒருமைப்பாட்டுக் கமிட்டி (Committee for Student Solidarity) என்ற ஒன்றை நிறுவியிருந்தார்கள். இந்த இரு அமைப்புகளும் தொழிலாளர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்ததுடன், முற்போக்கான பரந்த சீர்திருத்தங்களைக் கொண்டு வருமாறு PZPRஐயும் நிர்பந்தப்படுத்தத் தொடங்கினர். ரோமன் கத்தோலிக்க தேவாலயம் தன் பங்குக்கு அரசாங்கத்திற்கு எதிராகவும் மக்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கத் தொடங்கியது.

இதற்கிடையில் லெக் வலென்சா மற்ற தொழிலாளர் தலைவர்களைச் சேர்த்துக் கொண்டு சுதந்திரமாக இயங்கக்கூடிய விதத்தில் தொழிற்சங்கங்களை தோற்றுவித்து அதன் நடவடிக்கைகளில் தீவிரமாகக் கலந்து கொண்டிருந்தார். நிரந்தர வேலையின்றி தன்னை நம்பியிருந்த குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. அதனால் தற்காலிக வேலைகளில் இருந்து கொண்டே தொழிலாளர் நலனுக்காகவும் பாடுபட வேண்டிய சூழ்நிலை. அவரது தீவிர தொழிற்சங்க நடவடிக்கைகளினால் அரசாங்கம் அவரை சதா சர்வகாலமும் கண்காணிப்புக்கு உள்ளாக்கி இருந்தது. அதனால் அவர் பல முறை சிறை செல்ல வேண்டியதாயிற்று. அந்த காலகட்டத்தில் தான் போலந்துப் பிரஜையான கார்டினல் கரெல் வொய்டுவா (Cardinal Karol Wojtyla) போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் சமூக சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகளுக்கு கத்தோலிக்க தேவாலயத்தின் ஆதரவு பலப்பட்டது. 1979ம் ஆண்டு போலந்து நாட்டிற்கு விஜயம் செய்த போப்பாண்டவர் அங்குள்ள தேவாலயங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவும் ஏற்பாடு செய்தார்.

1980ம் ஆண்டு ஜூலை மாதம் அரசாங்கம் மறுபடியும் விலையேற்றத்தை அறிவித்தது. அது போதாதென்று தொழிலாளிகளின் ஊதியக் கட்டுப்பாட்டையும் அமல் படுத்தியது. மீண்டும் தொழிலாளர் போராட்டம் – இம்முறை தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். லெக் வலென்சா லெனின் கப்பல் கட்டுமானத் தொழிற்சாலையின் ஊழியராக இல்லாததால் நிர்வாகம் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தது. இதனைப் பொருட்படுத்தாத லெக் வலென்சா வேலியேறி சுற்றுச் சுவரைக் கடந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தொழிலாளர்களுடன் சேர்ந்து கொண்டார். தொழிலாளர்கள் வலென்சாவை வேலைநிறுத்தப் போராட்டக் கமிட்டியின் தலைவராக நியமித்து நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரத்தையும் அவருக்கு வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். மூன்று நாட்கள் கழித்து நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று கொண்டது. ஆனால் மற்ற தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் பொருட்டு கப்பற் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தனர். லெக் வலென்சாவின் புகழும் லெனின் கட்டுமானத் தொழிற்சாலையைக் கடந்து கடான்ஸ்க் முழுவதும் பரவியது. இதனையடுத்து லெக் வலென்சா அனைத்து தொழிற்சாலை வேலை நிறுத்தக் கமிட்டியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் கமிட்டி பால்டிக் கடற்கரை தொடங்கி நிலக்கரி சுரங்க நகரமான சிலேசியா வரை சுமார் 50000 தொழிலாளர்களை ஒன்றிணைத்தது. புதுத் தலைவரைக் கொண்ட கமிட்டி உடனே ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்தது. இந்த பொது வேலை நிறுத்தத்தின் முக்கிய கோரிக்கைகளாக தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்த உரிமை அங்கீகரிக்கப்படவேண்டுமென்றும், சுதந்திரமான தொழிற்சங்கங்கள் நிறுவ உரிமை வழங்க வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது. போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்று கொண்டிருக்க, கோரிக்கைகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டிருந்தது. பேச்சுரிமை, அரசியல் கைதிகளின் விடுதலை, மதச் சார்பான சுதந்திரம், எழுத்துச் சுதந்திரத்திற்கான தணிக்கை நீக்கம் போன்ற 21 அம்சங்கள் கொண்ட கோரிக்கைகள் கையால் எழுதப்பெற்று கப்பற் கட்டுமானத் தொழிற்சாலையின் முன் கதவுகளில் தொங்க விடப்பட்டது. அந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி அரசாங்கம் வேறு வழியின்றி கோரிக்கைகளுக்கு நிபந்தனையற்ற ஒப்புதல் வழங்கியது. தொழிலாளர்கள் சுதந்திரமாகச் செயல்படும் விதத்தில் தொழிற்சங்கங்கள் அமைக்கவும் தங்களது உரிமைகளுக்காக போராட்டம் நடத்தவும் அனுமதித்து ‘கடான்ஸ்க் ஒப்பந்தம் ‘ கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சுமார் 10 மில்லியன் (சுமார் 1 கோடி தொழிலாளர்கள் – இது நாட்டின் மொத்த ஜனத்தொகையில் 25 விழுக்காடு) தொழிலாளர்கள் லெக் வலென்சாவின் தலைமையின் கீழ் அமைந்த அனைத்துத் தொழிற்சாலை வேலை நிறுத்தக் கமிட்டியில் சேர முன்வந்தனர். இந்த கமிட்டி தான் சாலிடாரிடி (Solidarity) என்ற பெயரில் ஒரு தேசிய தொழிற்சங்க சம்மேளனமாக உருமாற்றம் கண்டது.

சாலிடாரிட்டி அதிகாரப்பூர்வமாக அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு அக்டோபர் மாதம் அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்றது. அது இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஏற்பட்ட அதிகாரப்பூர்வமான சுதந்திரமாகச் செயல் படக்கூடிய முதல் தொழிற்சங்கமாக நிலை பெற்றது. கத்தோலிக்க தேவாலயங்களின் ஆதரவாலும் போப்பாண்டவரின் ஆதரவாலும் சாலிடாரிடியின் நிலைப்பாடு மேலும் மேம்பட்டது.

இனி ராணுவ ஆட்சி அமல் படுத்தப்பட்டதையும், அதற்கு எதிராக லெக் வலென்சா எவ்வாறு போராடி மக்களின் உரிமைகளை மீட்டுத் தந்தார் என்பதையும், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியது பற்றியும் இன்னும் மற்ற விவரங்களையும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

தொடரும்….

கே.ஜே.ரமெஷ்

kalelno5@yahoo.com

Series Navigation

author

கே.ஜே.ரமேஷ்

கே.ஜே.ரமேஷ்

Similar Posts