தலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 1

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

கே ஜே ரமேஷ்


‘நான் ஒரு கையில் சமாதானத்தின் சின்னமாக ஆலிவ் கிளையும் மற்றொரு கையில் சுதந்திரப் போராட்ட வீரனின் துப்பாக்கியுடனும் வந்திருக்கிறேன். என் கையிலிருந்து ஆலிவ் கிளையை விழுந்து விடச் செய்யாதீர்கள் ‘ என்று 1974ம் ஆண்டு ஐ நா சபையில் பேசும் போது கூறியவர் சமாதானத்தை நாடும் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட்டதாகச் சொல்ல முடியாது. ஆலிவ் கிளையை எப்போது கீழே போடுவோம் என்று காத்திருந்தது போலவே அவரது செய்கைகள் இருந்தன. ஆனால் ஒன்றை மட்டும் யாராலும் மறுக்க முடியாது. வாழ்நாள் முழுவதும் பாலஸ்தீனிய விடுதலைக்காகப் போராடியவர் என்ற உண்மையை மட்டும் எவராலும் இல்லை என்று கூறிவிடமுடியாது.

சுமார் 50 ஆண்டுகளாக வாழ்க்கைக்கு மீறிய பிரம்மாண்டத்தோடு தன்னை ஆமோதித்து ஆதரித்தவர்களையும், தன்னை பரம எதிரியாக நினைத்து வெறுத்தவர்களையும் தான் ஒரு கட்டளையிட்டால் அடுத்த நிமிடமே மனித வெடிகுண்டாக மாறும் சீடர்களையும் ஒரு சேர ஆட்டிப்படைத்தவர். அராஃபட் என்றாலே பாலஸ்தீனியப் போராட்டம் நினைவுக்கு வரும் அளவுக்கு பாலஸ்தீனிய விடுதலைக்கான குறிக்கோளுடன் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி பாரீஸில் காலமானார். சே குவேராவைப் போலவே யாஸரது புகைப்படம் போஸ்டர்களிலும், டி-சர்ட்டுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளிலுமிருந்து பாலஸ்தீனிய விடுதலைக்கான நியாயங்களையும் உணர்ச்சிகளையும் சிக்கலான காரண காரியங்களையும் நினைவூட்டிக் கொண்டேயிருக்கும். பாலஸ்தீனிய விடுதலையில் அவர் கொண்டிருந்த தீவிரம் அவர் குஃபியா என்றழைக்கப்படும் தலையில் அணியும் ஸ்கார்ஃப்பை அணியும் விதத்திலேயேப் புலப்படும். அவர் அணியும் அந்த கருப்பு வெள்ளை கட்டமிட்ட ஸ்கார்ப்ஃ பாலஸ்தீனின் வரைப்பட உருவத்தையும் அதன் விகிதாச்சாரத்தையும் காட்டுவதாக அமைந்திருக்கும்.

1929ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கெய்ரோவில் பிறந்த அராஃபாட் தன் தாய் இறந்தவுடன் தன் தாய்மாமனுடன் நான்கு வருடங்கள் ஜெருசலேம் நகரில் வாழ்ந்தார். பின்னர் அவரைக் கெய்ரோவிற்கு கூட்டி வந்த அவரது தகப்பன் தன்னுடைய மூத்தப் பெண்ணின் பொறுப்பில் அராஃபாட்டை விட்டிருந்தார். தகப்பனுக்கும் பிள்ளைகளுக்கும் நடுவே பாசப்பிணைப்பு இருந்தது என்று கூறிவிட முடியாது. அராஃபாட் அவரது தகப்பனைப் பற்றிப் பேசியதே கிடையாது. அவரது இறுதி சடங்குகளுக்கும் அராஃபாட் செல்லவில்லை. சிறு வயது சம்பவங்களைப்பற்றி அவர் அதிகமாகப் பேசியது கிடையாது. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஜெருசலேம் நகரில் தன் தாய் மாமனுடன் இருந்த போது பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து வீட்டிலிருந்தவர்களை அடித்து, பொருட்களை உடைத்து நாசப்படுத்தியது அவருக்குத் தெளிவாக ஞாபகமிருந்தது. பிரிட்டிஷ் படைக்கெதிராகவும் யூதர்களுக்கு எதிராகவும் போரிட தனது 17வது வயதிலேயே பாலஸ்தீனத்திற்கு ஆயுதங்கள் கடத்தத் தொடங்கிவிட்டார். 1948ம் ஆண்டு அராபியர்களுக்கும் இஸ்ரேலுக்கும் நடந்த போரில் பங்கு கொள்ளும் பொருட்டு தனது பல்கலைக் கழகப் படிப்பை பாதியில் கைவிட்டு பாலஸ்தீனத்திற்குச் சென்றார். ஆனால் போர்ப் பயிற்சியிண்மையைக் காரணம் காட்டி எகிப்து ராணுவம் அவரைத் திருப்பி அனுப்பிவிட்டது. பின்னர் தனது சிவில் இஞ்சினியரிங் படிப்பை முடித்து விட்டு சூயஸ் நெருக்கடியின் போது எகிப்து ராணுவத்தில் செகண்ட் லெஃப்டினண்ட் ஆகச் சேர்ந்தார்.

சூயஸ் போருக்குப் பிறகு குவைத்துக்குச் சென்றவர் அங்கே இஞ்சினியர் வேலையில் சேர்ந்து பின்னர் சுயதொழில் ஒன்றை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார். 1957ம் ஆண்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஃபாட்டா என்ற ஒரு அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்பின் ஒரே குறிக்கோள் இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் பகுதியில் சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிறுவுவது. அந்த காலகட்டத்தில் ஜோர்டான் அராஃபாட்டிற்கு ஆதரவாக இருக்க அதை உள்ளடக்கிய பாலஸ்தீனத்தை நிறுவ ஏன் முயல வேண்டும் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது. இதற்கு ஒரு சிறு பிண்ணணியை அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நானூறு ஆண்டுகளாக துருக்கியின் ஓட்டொமன் பேரரசு ஒரு மிகப்பெரிய அராபிய சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தது. அதன் ஒரு பகுதி இன்றைய சிரியா, லெபனான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளை உள்ளடக்கி இருந்தது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியடைய, அதை ஆதரித்த துருக்கியும் தோல்வியுற்றது. இதனால் 1916ம் ஆண்டு ஓட்டொமன் பேரரசின் தெற்குப் பகுதியை இரண்டாகப் பிரித்து அவற்றை ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சைக்ஸ்-பிகோட் ஒப்பந்தப்படி முடிவு செய்யப்பட்டது. இன்றைய ஜோர்டான், இஸ்ரேல், வெஸ்ட் பாங்க் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய அப்போதிருந்த பாலஸ்தீனப் பகுதி பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பின்னர் 1923ம் ஆண்டு பிரிட்டிஷ் அப்போதிருந்த பாலஸ்தீனப் பகுதியை இரண்டாகப் பிரித்து ஜோர்டான் நதிக்கு கிழக்குப் பகுதியை அராபிய பாலஸ்தீனர்களுக்கும் நதியின் மேற்கு பகுதியை யூதர்களுக்குமாக இருக்குமாறு செய்தனர். ட்ரான்ஸ்-ஜோர்டான் என்று பெயரிடப்பட்ட கிழக்குப் பகுதி 1946ம் ஆண்டு இன்னுமொருமுறை ஜோர்டான் என்று பெயர் மாற்றம் கண்டது. இந்த வரலாற்றின் அடிப்படையில் தான் ஃபாட்டா அமைப்பு பழைய பாலஸ்தீனத்தை மீண்டும் சுதந்திர பாலஸ்தீனமாக மாற்ற உறுதி பூண்டது.

அந்த நிலையில் சிரியாவின் ஆதரவோடு ஃபாட்டா அமைப்பு இஸ்ரேலிய இலக்குகளின் மேல் தீவிரவாதத் தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேல் சிரியாவின் மேல் பதில் தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஃபாட்டா ஜோர்டான், லெபனான் மற்றும் எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்த காஸா ஆகிய பகுதிகளிலிருந்து தனது தாக்குதல்களைத் தொடர்ந்தது. ஆனால் 1966ம் ஆண்டு சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பிற்கான ரகசிய சதி நடந்தேறிய போது ஃபாட்டா அமைப்புக்கு ஒரு புதிய தலைவர் நியமிக்கப்பட்டு அவரும் கொலையுண்டார். அதைத் தொடர்ந்து அராஃபாட் அபு அம்மர் என்ற புனைப் பெயருடன் ஃபாட்டாவின் தலைவராகிவிட அவரை உடனடியாக சிரியா அரசு கைது செய்தது. பின்னர் விடுதலையானவுடன் தனது முக்கிய சகாக்களுடன் பெய்ரூட்டிற்கு இடம் பெயர்ந்தார்.

1964ம் ஆண்டு அராபிய நாடுகள் ஒன்றுகூடி பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் (PLO) என்ற அமைப்பை உருவாக்கி அதை இஸ்ரேலுக்கு எதிரான போரில் கருவியாகப் பயன் படுத்தத் திட்டமிட்டனர். முதலில் PLOஐ தனக்குப் போட்டியாக நினைத்த அராஃபாட்டின் ஃபாட்டா, PLO அமைப்பில் ஆதிக்கம் நிறைந்த பிரிவாக உருவெடுத்தது. இந்த நிலையில்1967ம் ஆண்டு நடந்த அராபிய இஸ்ரேல் போரில் ஆறே நாட்களில் இஸ்ரேல் மாபெறும் வெற்றி பெற்றது. எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக நடந்த மும்முனைப் போரில் அந்த மூன்று நாடுகளையும் வெற்றி கொண்டு எகிப்திடமிருந்து சினாய் பாலைவனத்தையும், சிரியாவிடமிருந்து கோலன் ஹைட்ஸ் பகுதியையும் ஜோர்டானிடமிருந்து வெஸ்ட் பாங்க் பகுதியையும் கைப்பற்றியது. அதில் யூதர்களுக்கு மிக முக்கியமான வெற்றி ஜெருசலேம் புனித நகரம் உள்ளிட்ட வெஸ்ட் பாங்க் பகுதியைக் கைப்பற்றியது தான். அதற்கு முன் 1948ம் ஆண்டு ஜோர்டான் கைப்பற்றிய பிறகு கடந்த 19 ஆண்டுகளாக ஜெருசலேம் நகருக்குள் யூதர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்திருந்தது.

இந்த மாபெறும் தோல்வியினால் அராஃபாட்டின் ஆதிக்கத்தில் இருந்த PLO, இஸ்ரேலை அழிக்கும் தனது குறிக்கோளுக்கு அராபிய நாடுகளின் துணையை நாடுவதில் அர்த்தமில்லை என்பதை புரிந்து கொண்டது. அதைத் தொடர்ந்த பத்து ஆண்டுகளில் இஸ்ரேலுக்கு எதிரான பிரம்மாண்டமான தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வந்தது. இதற்கிடையில் ஜோர்டானிய நகரமான ‘காராமே ‘வில் PLO தனது ஆயுதபடைத் தளத்தை நிறுவியது. 1968ம் ஆண்டு PLO பள்ளிச் சிறுவர்கள் பயணித்த வாகனத்தின் மேல் நடத்திய தாக்குதலில் 28 சிறுவர்கள் காயமடைந்தும் 2 சிறுவர்கள் இறந்தும் விட இஸ்ரேல் பழிக்குப் பழி வாங்க துடித்தது. மூன்று நாட்களுக்குப் பிறகுத் துண்டுப்பிரசுரம் மூலம் காராமேவில் தாக்குதல் தொடுக்கப் போவதாகவும் பொது மக்களை ஊரை விட்டு வெளியேறுமாறும் கேட்டுக் கொண்டது. ஆனால் இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியவுடன் அவர்கள் எதிர்ப்பார்த்ததிற்கு மாறாக போர் PLOவுடனல்லாமல் ஜோர்டானியர்களின் நிரந்தர ராணுவத்தை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. ஆயுதங்களை வினியோகம் செய்துவிட்டு அராஃபாட் தரப்பு காராமேவை விட்டுச் சென்றுவிட்டது. அந்தப் போரில் இஸ்ரேல், ஜோர்டான் இரு தரப்பினருமே தங்கள் படையை விட எதிரியின் படைக்கு சேதம் அதிகம் என்று கூறிக்கொண்டன. அப்போரைத் தொடர்ந்து PLO தனது தீவிரவாதத் தாக்குதல்களை அதிகப்படுத்தியது. அதன் விளைவாகவும் இஸ்ரேலின் பதில் தாக்குதல்களாலும் 1968ம் ஆண்டு மட்டும் 177 இஸ்ரேலியர்களும் 681 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டார்கள். மேலும் 700 இஸ்ரேலியர்கள் படுகாயமடைந்தனர். காராமேவில் கிடைத்த வெற்றியின் துணையோடு அராஃபாட் PLOவின் சேர்மனாக பதவியேற்றார். மற்ற தீவிரவாதக் குழுக்களையும் தன்னுடனே இணைத்துக்கொண்டு ஆயுதப்போராட்டம் மூலமாகவே பாலஸ்தீனிய விடுதலையை அடைவது என்ற குறிக்கோளையும் மறு உறுதி செய்து கொண்டார்.

1960களின் இறுதியில் பாலஸ்தீனியர்களுக்கும் ஜோர்டானியர்களுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் தோன்றத் தொடங்கின. ஜோர்டானுக்குள் இருந்து கொண்டு பாலஸ்தீனிய போராளிகள் அஸ் ஸார்க் என்ற இடத்தில் இருக்கும் எண்ணை சுத்திகரிப்பு நிலையம் உட்பட பல முக்கிய இடங்களைத் தங்கள் கட்டுப்பட்டுக்குள் வைத்திருந்தனர். நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடும் என்று கருதிய ஜோர்டானிய அரசு அப்போராளிகளின் ஆயுதங்களைக் களைய முற்பட்டபோது இரு சாராருக்கும் சண்டை மூண்டது. பின்னர் 1970ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி பாலஸ்தீனிய போராளிகள் கடத்தி வந்த மூன்று விமானங்களில் ஒன்றை ஜோர்டானில் வெடி வைத்துத் தகர்த்த போது, அதற்கு மேலும் பொறுக்க முடியாத ஜோர்டானிய அரசர் ஹூசேன் ராணுவ சட்ட அமலாக்கத்தை அறிவித்தார். அதே நாளில் PLO தனது பிரத்யேக ராணுவமாகிய பாலஸ்தீனிய விடுதலைப் போர்ப்படை (PLA) ஒன்றை நிறுவி அதற்கு அராஃபாட்டைக் கமாண்டராக்கியது. அதைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரில் PLOக்கு ஆதரவாக சிரியா ஜோர்டான் மீது படையெடுத்தது. அமெரிக்கா ஜோர்டானுக்கு ஆதரவாக தனது கப்பற்படையையும் இஸ்ரேல் தனது தரைப்படையையும் அனுப்பி வைத்தன. செப்டம்பர் 24ம் தேதியன்று PLOவின் தாக்குதல்களை முறியடித்து ஜோர்டான் வெற்றி கண்டது. அராஃபாட் உட்பட பல PLO தலைவர்களும் மாறுவேடமணிந்து ஜோர்டானை விட்டு தப்பியோடி சிரியாவுக்கும் பின்னர் லெபனானுக்கும் சென்று விட்டனர்.

தொடரும்.

கே.ஜே.ரமேஷ்

Kalelno5@yahoo.com

Series Navigation

author

கே.ஜே.ரமேஷ்

கே.ஜே.ரமேஷ்

Similar Posts