கலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! – 1

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

விஸ்வாமித்ரா


திண்ணைப்பள்ளியில் 11 வயதில் நான்காம் வகுப்பைத் தட்டுத்தடுமாறித் தேறியதும்

படிப்பை நிறுத்திவிட்டுத் தன் தந்தையாரின் மண்டியில் வேலை செய்யப் போய்விட்ட

கன்னடத்துக்கார ஈ.வே.ராமசாமி நாயக்கர் தன்னைத் திராவிடர் தலைவராக உயர்த்திக் கொண்டது அவரது சுயமுயற்சியாலா ?

நிச்சயம் அல்ல.

சுதந்திர வேட்கையில் ஒன்றுபட்ட இந்தியாவை எப்படியெல்லாம் பிளவுபடுத்தலாம் என்று வெள்ளை அரசின் குள்ளநரிகள் குயுக்தியான வழிகளைத் தேடிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குத் தோதாய் அகப்பட்டவர்தான் ஈ.வே.ரா.

இன்றைய தமிழில் சொன்னால் ரெளடித்தனமாய் பேசிக் கொண்டு ‘பேட்டைதாதா ‘வாய் விளங்கிய ஈ.வே.ரா., ‘திராவிடஸ்தான் ‘ என்ற பெயரில் தென்னிந்தியாவைத் தனியே துண்டாக்கி விடலாம் என்ற பிரிட்டிஷ் திட்டத்துக்குத் துணைபோன தேசத்துரோகியே.

கவியரசு கண்ணதாசன் (ஆதாரம்: நூல் – நான் பார்த்த அரசியல்) கூறுகிறார்:

“பெரியார் ராமசாமி அவர்கள் காங்கிரஸிலே இருந்து பிரிந்த பிற்பாடு, பிராமணர்களை எதிர்க்கிறேன் என்கிற போக்கிலே இந்தியாவையே எதிர்க்கத் தலைப்பட்டார்.

இந்திய விடுதலைக்கு விரோதமாகப் போகவும் தலைப்பட்டார். இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கக் கூடாது என்பதிலே அவர் முன்னணியிலே நின்றார்.

பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கை ஆரம்பமானபோது திராவிடஸ்தான் பிரிவினையையும் அவர் ஆரம்பித்தார். பிராமணர்கள்தான் இந்திய தேசிய காங்கிரஸ்; பிராமணர்களுடைய ஆதிக்கம்தான் இந்தியாவில் இருக்கிறது என்பது போல் ஒரு கற்பனையைச் செய்து கொண்டு தென்னாட்டில் அவர்களை ஒழிப்பதற்காகவே, வெள்ளைக்காரர்கள் இருக்கவேண்டுமென்ற ஆசையை அவர்கள் மக்கள் மனதில் வளர்க்கத் தொடங்கினார்கள்.

இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று தந்தி கொடுத்தவர்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருந்தார்கள்.

பெரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது ‘நான் போய் இந்த வெள்ளைக்காரனைப் பார்த்தேன். அவனிடம் சொன்னேன். என்னய்யா யோக்கியதை இது! நீ பாகிஸ்தான் கொடுத்தது போல திராவிடஸ்தான் கொடுத்து விட்டல்லவா விடுதலை கொடுத்திருக்க வேண்டும் என்றேன். ஆனால் வெள்ளைக்காரனுடைய யோக்கியதையைப் பாருங்கள். அவன் அதைக் கடைசியில் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘ என்று அவரே பேசியிருக்கிறார்.”

கண்ணதாசன் அவர்கள் ஏதோ மயக்கத்தில் எழுதிவிட்டதாக இனி சிலர் மடல் அனுப்புவார்கள்.

அவர்களுக்காகவே மேலும், 1940 களின் விடுதலை இதழ்களில் இந்தத் திராவிடஸ்தான் கொள்கையை பகிரங்கமாய் முன்வைப்பதைச் சுட்டுகிறார் ம.வெங்கடேசன்.

27-8-1944-ல் சேலம் நகரில் கூடிய திராவிடர் கழக மாநாட்டிலே கீழ்வரும் தீர்மானம்

நிறைவேற்றப்பட்டது:

‘திராவிடர் கழகத்தின் முக்கியக் கொள்கைகளில் திராவிடநாடு என்ற பெயருடன்

நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும்

நேரே பிரிட்டிஷ் செக்கரட்டரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டதுமான

ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது. ‘

இங்கே இன்னொரு சுவையான தகவலும் உண்டு. ஆரிய திராவிட இனவாதத்தை

முற்றாய் நிராகரித்த தேசியவாதியான பெருந்தலைவர் அம்பேத்கர் ஆரம்பத்திலிருந்தே

இந்தத் திராவிடஸ்தான் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் அவர் சுதந்திர இந்தியாவின் முதல் மந்திரிசபையிலும் பதவியேற்றவுடன் ஈ.வே.ரா.வுக்குப் பொறுக்கவில்லை.

‘இந்தியநாடு பிரிக்கப்படக் கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தையே இன்றைய நிலையில் அம்பேத்கர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாட்களில் திராவிடநாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்று அஞ்சுகிறேன். ‘

(குடியரசு 8-7-1947)

ஈ.வே.ரா. அஞ்சியபடியே திராவிடஸ்தான் கனவு நனவாகவில்லை. கன்னட பலிஜவார் என்றே தன்னை அடையாளப்படுத்தி வாழ்ந்த ஒருவர் தலைமையில் சில தெலுங்கு பேசும் நாயுடுக்களும், மலையாள நாயர்களும், பிராமணத் துவேஷத்தால் ஈவேராவின் பின்வந்த சில தமிழ் வேளாளர்களும் சேர்ந்து வெள்ளை அரசின் ஆதரவுடன் அமைக்கத் துடித்த இந்தத் திராவிடஸ்தானில் பாதுகாப்பு கிடைக்காதென்று ‘ஆரியர் ‘ என்று முத்திரை குத்தப்பட்ட, தமிழையே தாய்மொழியாகக் கொண்ட அந்தணர் மட்டும் அஞ்சவில்லை. மூளைச்சலவை செய்ய முடியாத, தமிழ்ப்பண்பாட்டை மறக்காத இதர சாதியினர் பலரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாகச் சொல்லப் போனால் தாழ்த்தப்பட்டவர்களே அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

அன்றைய தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக விளங்கிய வி.ஐ.முனுசாமி அவர்கள்

அச்சமயம் ஒரு கோரிக்கை வைத்தார்:

‘இந்தியத் தூதர்கள் பதவிகள் உட்பட எல்லா உயர்பதவிகளிலும் ஆதி திராவிடர்களையே நியமிக்க வேண்டும். தென்னிந்தியாவில் திராவிடஸ்தான் என்று அமைக்கப்பட்டால் ஹரிஜனங்களுக்கு ஆதிதிராவிடஸ்தான் என்று தனியாகக் கொடுக்கப்பட வேண்டும். ‘

அதை ஆத்திரத்துடன் விமர்சித்த ‘விடுதலை ‘ தலையங்கம் சொன்னது என்ன தெரியுமா ?

‘ஆதிதிராவிடஸ்தான் வேண்டும் என்று பிதற்றியிருக்கிறார் …. வெறும் பதவிகள்

மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு இனத்தையோ, சமுதாயத்தையோ உயர்த்திவிட

முடியாது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம்…. எனவே பழங்குடிமக்கள்

முழு உரிமையுடன் வாழ வேண்டுமானால் ஒரு சிலர் பெரிய பதவிகளைப் பெறுவதால்

மட்டுமே முடியாது. அவர்கள் திராவிடர்களுடன் இரண்டறக் கலந்துவிட வேண்டும். ‘

(விடுதலை – 10-7-1947)

திராவிடஸ்தான் கேட்டால் அது கொள்கையாம். ஆதிதிராவிடஸ்தான் கேட்டால்

அது பிதற்றலாம்! ஏக இந்தியாவிற்குப் பதில் திராவிடஸ்தான் தீர்வு என்றால்,

சாதி இந்துக்களின் ஏக திராவிடஸ்தானுக்குப் பதில் ஆதிதிராவிடஸ்தான்தான்

தீர்வாக இருக்க முடியும் அல்லவா ?

எப்படியோ அம்பேத்கர் போன்ற பல தேசியவாதத் தலைவர்களின் ஆதரவில்லாததால்

நாடு துண்டாக்கப் படாமல் தப்பித்தது.

ஈ.வே.ராவின் கோபம் அவருக்கு ஆதரவாக நிற்காத தமிழ்ப் பண்டிதர்களின் மேல்

திரும்பியது. தமிழை நன்கறிந்த பண்டிதர் பலரும் ஆரம்பத்திலிருந்தே இந்தத்

திராவிட இனவாதத்தை ஏற்கவில்லை. ‘திராவிடம் ‘ என்ற சொல்லே சங்ககால முதல்

எங்குமில்லை என்றும், திராவிடம் என்ற பொய்யின் கீழ் தென்னகத்தைச் சேர்ப்பது

இயலாது என்றும் அவர்கள் பல இடங்களில் சுட்டிக்காட்டி வந்தனர்.

அதன் காரணமாகவே தமிழ்மொழி, பழந்தமிழ் நூல்கள், தமிழ்ப்பண்டிதர், பாவலர்

என்று ஒட்டுமொத்தமாய்த் தாக்கி வந்தார் ஈ.வே.ரா. மேலும் தமிழன் என்ற

அடையாளத்துடன் தன்னைப் பிணைத்துக் கொள்வதற்கு, கன்னடரான அவரின்

உள்ளுணர்வும் இடம் கொடுக்கவில்லை என்பதும் மற்றொரு காரணம்.

தொடரும்…

—-

viswamitra12347@rediffmail.com

Series Navigation

author

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா

Similar Posts