வீங்கலை விபரீதங்கள்…. என் அனுபவம் – 2

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

ம.எட்வின் பிரகாஷ்.


டிசம்பர் 26 இரவில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் என்னோடு இருந்த ஆன்றனி செல்வன், குமார், ஜெனார்த்தனன், ரமேஷ், ஆன்றனி, அஜித், பிரகாஷ், மெல்க்கியாஸ், வால்ட்டர் போன்றவர்களின் பணி மகத்தானது. அங்கு பணியில் இருந்த செவிலியர்களும் எவ்வித தயக்கமுமின்றி சிறப்பாக பணிபுரிந்தார்கள். அந்த இரவு அனைவருக்கும் சோகமாகவே அமைந்தது. முதல் நாள் இரவில் தூங்கி எழுந்த பல ர் அந்த இரவில் மீளா உறக்கத்தில் இருந்தார்கள்.

அடுத்த நாள் (டிசம்பர் 27) காலையில் நானும் ஆன்றனி செல்வனும் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு போதுமான ஊழியர்கள் பணியில் இருந்தார்கள். அப்பலோ மருத்துவமனையில் இருந்து வந்திருந்த மருத்துவ குழுவினர் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். முதல் நாள் இரவில் அவசர பிரிவிற்கு மாற்றப்பட்ட மணக்குடி பெரியவரை பார்த்து நலம் விசாரித்தோம். மருத்துவமனை புதிய கட்டிடத்தின் கீழ் தளம் படுக்கைகள் போடப்பட்டு தயாராகிக் கொண்டிருந்தது. குமரி மாவட்ட ஆட்சியர் மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டார். முதலமைச்சர் வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க ஏதுவாக ஆட்சியரின் உத்தரவின் பேரில் கீழ் தளம் தயார் செய்யப்பட்டது. முதல்வரின் வருகைக்காக மருத்துவமனை அசுர வேகத்தில் தயாராகிக் கொண்டிருந்தது.

பேரழிவின் பாதிப்புகளை பார்வையிட நானும், ஆன்றனி செல்வனும் கடற்கரை நோக்கி பயணமானோம். முதலில் முட்டம் கிராமத்திற்கு சென்றோம். நாங்கள் சென்ற போது கடலின் சீற்றத்திற்கு பலியான ஒருவரை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்துகொண்டிருந்தார்கள். முட்டம் தேவாலயத்தின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கட்டப்பட்டிருந்த வீடுகள் அத்தனையும் தரைமட்டமாக இருந்தது. இந்த வீடுகள் அனைத்தும் கடலுக்கு மிக அருகில் இருந்தமையால் பாதிப்பு அதிகமாகவே இருந்தது. முப்பதிற்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கக்கூடும் என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள். குழந்தைகள் மற்றும் பெண்களில் அதிகமானவர்கள் இறந்திருந்தார்கள். தேவாலயத்தின் அருகில் கூடியிருந்தவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் பற்றிய விவரங்களை மனுவாக தயார் செய்து அவ்வூர் நிர்வாகிகளிடம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். கடற்கரையில் மீட்புப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இறந்தவர்களின் உடல்களை மருத்துவமனைகளில் இருந்து கொண்டுவந்த வண்ணம் இருந்தார்கள். முட்டம் பகுதியில் கடலலை மேட்டுப் பகுதிக்கு வரவில்லை என்பதை அப்பகுதியில் நின்ற பெரியவர்களின் பேச்சிலிருந்து அறியமுடிந்தது.

அங்கிருந்து கடியபட்டினம் கடற்கரை கிராமத்திற்கு சென்றோம். இங்கு பெருமளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பாய்ந்து செல்லும் வள்ளியாறு கடியப்பட்டினத்தில் கடலில் சங்கமமாகிறது. ஞாயிற்றுக்கிழமை பகல் வேளையில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அத்தனைபேரும் ஜலசமாதியானார்கள். வள்ளியாற்றின் உட்புகுந்த கடல் நீர் மணவாளக்கு றிச்சி பாலத்தின் மறுபுறம் வரை சென்றிருப்பதற்கான சுவடுகளை காண முடிந்தது. ஆற்றின் இருபுறமும் கடல் நீர் பொங்கிவழிந்துள்ளது. கரையோரம் இருந்த தென்னந்தோப்புகள் வெள்ளக் காடாக காட்சியளித்தது. ஆற்றிற்கு இணையாக மணவாளக்குறிச்சிக்கு செல்லும் சாலையில் நடந்து சென்ற நபர்கள், வாகனங்களில் சென்றவர்கள் பலரும் இன்று நம்மோடு இல்லை. நாங்கள் அங்கு சென்ற போது ஆற்றின் இருபுறமும் இ ருந்த தோப்புகளிலிருந்து டாசல் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றிக்கொண்டிருந்தார்கள். பல உடல்கள் மீட்கப்பட்ட வண்ணம் இருந்தன. வள்ளியாற்றின் உள்ளிருந்தும் பல உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. வீட்டின் மீது வீசியெறியப்பட்ட நிலையில் படகுகள் கிடந்தன. கட்டுமரங்கள் கடற்கரையோரம் சிதறி சின்னாபின்னமாகியுள்ள காட்சியை காண முடிந்தது.

மணவாளக்குறிச்சியிலிருந்து குளச்சல் செல்லும் கடற்கரை சாலையில் பயணமானோம். பிள்ளையார்கோவில் பகுதி தொடங்கி சாலை முழுவதும் மணல் மூடிக்கிடந்தது. கடல்நீர் சாலையின் மறுபுறமும் தேங்கி நின்றதை கண்டோம். கடலும் நிலமும் சமமாக உள்ளதால் கடல்நீர் வெகுதொலைவு உட்புகுந்திருக்கிறது. இந்தப் பகுதிகளில் இயற்கையாக இருந்த மணல் தேரிகளை பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. இந்திய அரிய மணல் ஆலைக்கு (IRE) இதில் பெரும் பங்கு உண்டு. மணல் தேரிகள் அரணாக அமைந்திருந்தால் கடலின் சீற்றத்தை ஓரளவிற்கேனும் தடுத்திருக்க இயலும். மணல் ஆலையின் உள்ளே குவிக்கப்பட்டுள்ள மணல் மேடுகள்தான் பேரழிவிலிருந்து ஆலையை காத்திருக்கின்றது. உள்நாட்டு பயன்பாட்டிற்காகவும், குடியிருப்புகள் அமைப்பதற்காகவும் கடற்கரையிலிருந்து மணல் பெருமளவில் அகற்றப்பட்டிருக்கின்றது.

மண்டைக்காடு வழியாக பயணத்தைத் தொடர்ந்தோம். குளச்சலுக்கு அருகிலுள்ள மீனவ கிராமமான கொட்டில்பாடு அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது. பெருமளவில் உயிர்ச்சேதம் இங்கு ஏற்பட்டுள்ளது. கடலலையின் அகோரப் பசிக்கு இந்த கிராமமே இரையாகியுள்ளது. கடலின் சீற்றத்திற்கு பயந்து ஓடிய மக்கள் ஏ.வி.எம்.கால்வாயில் வீழ்ந்து மாண்டனர் சுமார் 285-க்கும் அதிகமானவர்கள் இந்த கிராமத்_ beில் மட்டும் பலியாகியுள்ளனர். அதில் 85-க்கும் அதிகமானவர்கள் குழந்தைகள். கடலுக்கும் ஏ.வி.எம். கால்வாய்க்கும் இடையில் குடியிருப்புகள் அமைந்திருந்ததால் உயிரிழப்புகள் அதிகம். காலனி வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகியிருந்தன. இடிபாடுகளை பார்த்தவாரே சென்றுகொண்டிருந்தோம். திடாரென ஒரு இளைஞன் சத்தமிடவே அந்தப் பகுதிக்கு சென்றோம். இடிபாடுகளிடையேயிருந்து முனகல் சத்தம் வந்து  6காண்டிருந்தது. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக தொண்டர்கள் மூதாட்டி ஒருவரை மீட்டுக் கொண்டுவந்தனர். அம்மூதாட்டியின் உடல் வெகுவாக குளிர்ந்திருந்தது. மீட்பு வாகனத்தில் வைத்து அம்மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டுசென்றார்கள். மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் பணி மகத்தானது. கடல்நீர் தென்னந்தோப்புகளில் தேங்கியிருந்தது. ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் படகுகளில் சென்று உடல்களை தேடினார்கள். சாலையை வெட்டி தண்ணீரை ஏ.வி. எம். கால்வாயில் வடியச்செய்தார்கள். இதுபோன்று பல பகுதிகளிலும் சாலை வெட்டப்பட்டிருந்தது.

குளச்சல் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று சாலையின் நடுவே நின்றுகொண்டிருந்தது. பேரலை வந்தபோது இந்த பேருந்து சிக்கிக் கொண்டது. ஓட்டிநர், நடத்துனர், மற்றும் பயணிகள் உயிர் பிழைக்க பேருந்திலிருந்து இறங்கி ஓடியுள்ளார்கள். எங்கள் ஊர் அருகிலுள்ள மேலப் பெருவிளையைச் சார்ந்த பெரியவர் ஒருவர் தன் மனைவி, மகள் மற்றும் இரண்டு பேரக் குழந்தைகளுடன் இந்த பேருந்தில்தான் பய ணம் செய்தார். வீங்கலையின் கோரத்தாண்டவத்தில் இரண்டு குழந்தைகளும் பலியானார்கள். கொட்டில்பாட்டிலிருந்து குளச்சல் செல்லும் சாலை சகதி நிறைந்திருந்ததாலும், பல இடங்களில் சாலை வெட்டப்பட்டிருந்ததாலும், அவ்வழியே குளச்சல் செல்ல இயலாமல் போனது. மாற்றுப் பாதையில் திங்கள் சந்தை வழியாக குளச்சல் செல்ல வேண்டியிருந்தால் பயணத்தை தொடராமல் வீடு திரும்பினோம்.

====

edwin_prakash75@yahoo.com

ம.எட்வின் பிரகாஷ்,

ஆசாரிபள்ளம்,

கன்னியாகுமரி மாவட்டம்,

தமிழ்நாடு.

Series Navigation

author

ம.எட்வின் பிரகாஷ்

ம.எட்வின் பிரகாஷ்

Similar Posts