இஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

நேச குமார்


நாகூர் ரூமி இஸ்லாத்தை நமக்கு அறிமுகப் படுத்துமுகமாக, அவரது புத்தகத்தில், பெண்களை தலைமுதல் கால் வரை மூடும் இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரம் பற்றி ஹிஜாப் என்ற ஒரு அத்தியாயம் அமைத்து, அதில் ‘ பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று இறைவன் அமைத்துக் கொடுத்த விதிமுறைகளை ‘ ப் பற்றி [1] விரிவாக எழுதுகின்றார்.

மேலே செல்வதற்கு முன், ஹிஜாப் என்றால் என்னவென்று பார்க்கலாம். இஸ்லாத்தின் அடையாளங்களுள் ஒன்றாக இன்று ஆகிவிட்ட, பெண்களின் ஆடை இது. ஹிஜாப், துப்பட்டி, பர்தா, புர்கா என்றும் இன்னும் பல்வேறு பெயர்களிலும், உலகில் பல முனைகளில் வாழும் இஸ்லாமியப் பெண்டிர், தமது உடலை மறைக்க அணியும் ஆடையே இந்த ஹிஜாப் அல்லது பர்தா. இதில் கண் மட்டுமே தெரிய வேண்டும், கைகளும் முகங்களும் தெரியலாம், எதுவுமே தெரியக் கூடாது, முடியையும் மார்பகங்களையும் மட்டும் மறைத்தால் போதும் என்று பல்வேறு விதமான அபிப்ராயங்கள், விவாதங்கள் முஸ்லீம்களிடையே உள்ளன.

பொதுவில் பர்தா முறை அல்லது ஹிஜாப் என்பது, பெண்களை உடல் முழுவதும் மூடி, அவர்களை (திருமணம் செய்துகொள்ளத்தக்க) ஆண்களுடன் நேரடியாக பேசுவதையோ அல்லது தொடர்பு வைப்பதையோ தடை செய்யும் ஒரு இஸ்லாமிய வழக்கு எனக் கொளலாம்.

இன்று ‘தூய ‘ இஸ்லாத்தின் சின்னமாகி விட்டது இந்த பர்தா! உலகெங்கிலும் முஸ்லீம்கள் மத்தியில் அடிப்படைவாதம் வளர்வதை இந்த பர்தாக்களின் பெருக்கத்தை வைத்து அறிந்து கொள்ளலாம். வெறும் புடவை முந்தானையால் தலையை மறைத்திருக்கும் கீழக்கரை முஸ்லீம் பெண்கள் திடாரென்று, முழு உடலையும் மறைக்கும் அங்கிக்கு மாறினால், அங்கே வகாபியிஸம் தோன்றியிருக்கிறது என்று கணிக்கலாம். நீண்ட வெள்ளை ஆடையை புடவைக்கு மேல் சுற்றிக் கொண்டு சென்ற நாகூர் முஸ்லீம் பெண்கள் கூட இந்த வகாபி வகை இஸ்லாம் பரவியதன் எதிரொலியாக, அரபிப் பெண்களைப் போல கறுப்பு அங்கி அணிந்து செல்வதை இப்போதெல்லாம் காணமுடிகிறது. இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் முதல் தாக்குதல் பெண்களின் மீது தான். அதற்குப் பிறகே, அது மதம் சம்பந்தப் பட்ட விஷயங்களில் தூய்மையை(!) நிலை நாட்ட ஏனைய முயற்சிகளை எடுத்து வைக்கின்றது. தாலிபன் ஆட்சி புரிந்த ஆப்கானிஸ்தானில், அவர்கள் அறிமுகப் படுத்திய முழுவதும் மூடிய புர்காவுக்கு தாலிபன் புர்கா என்ற பெயரே ஏற்பட்டு விட்டது.

இந்த ஹிஜாப் பற்றி விளக்க வந்த ரூமி, திருக்குரானின் அல் அஹ்சாப் சூராவில் அல்லாஹ் முஸ்லீம் பெண்களுக்கு இட்டிருக்கும் , இறைக்கட்டளை பற்றிக் குறிப்பிட்டு, அதை சரி என்று நிரூபனம் செய்வதற்காக, சம்பந்தா சம்பந்தமில்லாமல், செஸ்டர்ட்டனிலிருந்து, நம்மூர் திருவள்ளுவர் வரைக்கும் மேற்கோள்களைக் காட்டி, பெண்களுக்கு ‘நோய் முதல் ‘ அவர்களது உடலே என்றும்[2], ஆதலால் அவ்வுடலை அவர்கள் மறைத்துக் கொள்வது, அவர்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் அளிக்கும், ஆண்களின் கண்களுக்கு விபச்சாரம் புரியும் வாய்ப்பு தவிர்க்கப் படும் [3]என்று வாதிடுகிறார். இதற்கு ஆதாரமாக அல் அஹ்ஸாப் அத்தியாயத்தின் 59வது ஆயத்தையும் மேற்கோள் காட்டுகிறார்.

ரூமியிடமிருந்து சற்றே விலகி, இந்த பர்தா அணிவது பற்றி திருக்குரான் என்ன சொல்லியது, எந்த வரலாற்றுச் சூழலில் இந்த வசனங்கள் அல்லாஹ்வினால் அருளப் பட்டன என்பதைப் பார்ப்போம். முதலில் திருக்குரான் வசனம் 33:59,

‘ நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராகி அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன். ‘

இதைத்தான் ரூமி மேற்கோளிட்டு, மனித குலமனைத்துக்கும் திருக்குரான் மூலம் வழிகாட்டிய அல்லாஹ், உலகத்திலுள்ள (முஸ்லீம்) பெண்களெல்லாம் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று இறைவன் அனுப்பிய கட்டளையாக இந்த வசனத்தை நமக்கு காட்டுகிறார்.

இந்த வசனம் ‘வஹி ‘ எனப்படும் ‘இறை ஆவேசம் ‘ மூலம் முகமது நபியவர்களுக்கு வந்து இறங்கிய காலத்தைப் பார்த்தோமானால், அப்போது அவர் மிகுந்த சங்கடத்தில் ஆழ்ந்திருந்த காலம் என்பதை பார்க்கலாம். அவர் தமது (வளர்ப்பு) மகனாகிய சைத்-தினுடைய மனைவியான ஜைனப் பை மணந்து கொண்டது குறித்து, அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. நபிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மதீனா வாசிகளும், அவரது மனைவிகளும் கூட இது சம்பந்தமாய் அதிர்ச்சியடைந்து அவருக்கு எதிர்ப்பாயிருந்தனர். ஜைனப்பை அவர் மணந்து கொண்டது குறித்து, அவருக்கு எதிராக பல வித கிசுகிசுக்கள் பரப்பப் பட்டன. அதில் ஒன்று, அவர் ஒரு நாள் ஜைனப்பின் ஆடை விலகியதைக் கண்டு, அவளது அழகில் மயங்கிவிட்டார் என்பது. மிகத்தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதியான மெளதூதி கூட இந்த விஷயம் முஸ்லீம் அறிஞர்களால் கூட அறியாமையினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது என்று தெரிவிக்கிறார்[4].

இந்நிலையிலேயே, இந்த அத்தியாயத்தின் பல வசனங்கள் அல்லாஹ்வினால் அருளப் பட்டன. அதில் அல்லாஹ் யாரை மணந்து கொள்ளச் சொல்கிறாரோ, அந்தப் பெண்ணை முகமது நபிகள் மணந்து கொள்ளலாம் என்றும்[5], அவர் ஒரு நபியாதலால் அவர் யாருக்கும் தந்தை கிடையாது என்றும்[6], யாராவது உறவு முறை வைத்து(மகனே, தாயே என்றெல்லாம்) கூப்பிட்டால், அது உண்மையிலேயே உறவாகிவிடாது[7] என்றெல்லாம் இறைவசனங்கள் அருளப்பட்டன. மேலும், யாரை வேண்டுமானாலும் முகமது நபி மணந்து கொள்ளலாம், (அவருக்கு அடங்கி நடக்காத) மனைவியரை விவாகரத்து செய்து விடலாம்[8], என்றும் அவர் இம்மாதிரி திருமணம் செய்து கொள்வது மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கவே[9] என்றெல்லாம் அல்லாஹ் தெரிவித்தார்.

இதில் ஆடை விலகிய நிலையில் முகமது நபிகள் ஜைனப்பை பார்த்தார் என்ற குற்றச் சாட்டுக்கு பதிலளிக்கு முகமாகவே, இனிமேல் முகமது நபிகளின் மனைவிகளையும், அங்கிருந்த கூட்டத்தாரின் ஏனைய பெண்களையும் தமது ‘தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு ‘ இறைவன் கேட்டுக் கொண்டதைக்[10] கவனிக்க வேண்டும்.

இந்த வசனத்துக்கு முந்தய, பிந்தய வசனங்களைக் கவனித்தோமானால், இதன் பின்னனி விளங்கும்.

திருக்குரான் வசனம் 33:59 க்கு முந்தய வசங்கள்:

33:57 ‘ எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான் மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான். ‘

33:58 ‘ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவது}றையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். ‘

திருக்குரான் வசனம் 33:59 க்கு பிந்தய வசங்கள்:

33:60 ‘ முனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச்செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக (நடவடிக்கைகள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாக சாட்டுவோம். பிறகு அவர்கள் வெகு சொற்ப(கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக (வசித்திருக்க) மாட்டார்கள். ‘

33:61 ‘ அ(த்தகைய தீய)வர்கள் சபிக்கப் பட்டவர்களாவார்கள்ி அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள் இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள். ‘

இங்கே மையமாக காணப்படுவது, நபிகள் நாயகத்தின் வாழ்வில், இந்த இக்கட்டான சூழலில் கடவுளால், நபிகள் நாயகத்தையும், அவரது மனைவிகளையும், கூட இருந்தப் பெண்களையும் பற்றிய அவதூறுப் பிரச்சாரத்தின் சாரமே. ஆடை விலகிய நிலையில் கூட இருந்த ஜைத்தின் மனைவியை முகமது நபிகள் பார்த்து மயங்கியே இம்மாதிரி முடிவெடுத்தார் என்பதும், ஜைனபும் இதற்குக் காரணம் என்பதே. இச்சூழலிலே தான், முகமது நபியவர்களின் மனைவிகள், கூட இருந்தவர்கள் ஆகியோருக்கு இத்தகு வசனங்கள் அறிவுரையாக அல்லாஹ்விடமிருந்து வந்தன.

நேரடியாக முகமது நபியவர்களை எதிர்க்க முடியாத விஷமிகள், அவரது மனைவிகளை ஜைனப்பின் மண விவகாரத்தில் தூண்டிவிடுவதை தடுக்கவே மற்ற பல வசனங்களும் அருளப் பட்டன. உதாரணமாக திருக்குரான் வசனம் 33:32:

‘நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல. நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான் இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். ‘

இது போன்றே வசனங்கள் 33:53,33:55 ஆகியவை, மற்ற ஆண்கள் முகமது நபியவர்களின் வீட்டுக்குள் செல்வதையும் (அக்காலத்தில், நபியவர்களின் வீடும் மசூதியும் சேர்ந்தே இருந்தது), அவரது மனைவிகளிடம் பேசுவதையும் தடை செய்தன.

ரூமி, இந்தப் பிண்ணனி பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. மேலும், இந்த அத்தியாயத்தைத் தவிர, இன்னொரு இடத்தில் திருக்குரானில் பெண்கள் ஆடைகளை ஒழுங்காக அணிந்து கொள்வது பற்றி வருகிறது. அது, சூரா அந்நூர் என்கின்ற இருபத்தினான்காவது அத்தியாயம் ஆகும். அந்த திருக்குரான் வசனங்களுமே, இப்படிப் பட்ட ஒரு இக்கட்டான சூழலிலேயே அல்லாஹ்வினால் அருளப் பட்டன. அவையும், முகமது நபிகளின் மனைவிகளைக் குறித்தே சொல்லப் பட்டவைதாம். அதாவது, சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்பது போல, முகமது நபியவர்களின் மனைவிகள் எந்தவித குற்றச் சாட்டுகளுக்கும் ஆளாகிவிடக் கூடாது என்ற கவலையும், அவர்கள் வேறு யாரையும் மணந்து கொள்ளக் கூடாது என்பதுமே இந்த வசனங்களின் நோக்கமாக இருந்திருக்கிறது.

இருபத்து நான்காவது அத்தியாயத்தின், ஆடைகளைப் பற்றிய வசனங்களைப் பார்ப்போம்:

24:31 ‘ இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்ி தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்ி தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்ி மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாதுி மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்ி மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். ‘

இந்த வசனம் அருளப் பட்டதன் பிண்ணனியைப் அறிவது, இந்த வசனத்தை முறையாக புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். முகமது நபியவர்கள் மதீனாவுக்கு இடம் பெயர்ந்து, சுற்றி இருந்தவர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த காலம் அது(ஆறாம் ஆண்டு என இஸ்லாமிய வரலாற்றறிஞர்களுள் சிலர் கருதுகின்றனர்). அப்போது பனி அல் முஸ்தாலிக் ஜாதியினருடன் சண்டையிட்டு, அவர்களது உடமைகளை கைப்பற்றி வெற்றிகொண்டபோது திடாரென மக்காநகர முஸ்லீம்களுக்கும் (முஹாஜிர்), மதீனா வாசிகளுக்கும் (அன்சாரிகள்) உரசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மதீனாவுக்கு திரும்பியவுடன் முஹாஜிர்கள் விரட்டப் படுவார்கள் என்று அன்சாரிகளுள் சிலர் மிரட்டல் விடுத்தனர். இதனை கேள்விப்பட்ட முகமது நபி அவர்கள், இந்தச் சூழலை தவிர்ப்பதற்காக இரவோடிரவாக மதீனாவுக்கு திரும்ப முடிவெடுத்தார்.

இதற்கிடையில், மல ஜலம் கழிப்பதற்காக டெண்டுக்கு வெளியே பாலைவனத்தில் சென்றிருந்த முகமது நபியவர்களின் மனைவியான ஆயிஷா, தமது கழுத்தில் அணிந்திருந்த ஆபரணம் இருளில் விழுந்து விடவே அதைத் தேடிக் கொண்டிருந்தார். அவசர அவசரமாக முகமது நபியவர்களின் கூட்டம் கிளம்பவே, ஆயிஷா பல்லக்கினுள்ளே இல்லை என்பதைக் கவனிக்காமல் பணியாட்கள் அந்தப் பல்லக்கை ஒட்டகத்தின் மீது தூக்கி வைத்து புறப்பட்டு விட்டனர்.

திரும்பி வந்த ஆயிஷா, தமது கூட்டத்தார் தம்மை மட்டும் பாலைவனத்தில் தனியே விட்டு விட்டுப் போய்விட்டதைக் கண்ணுற்று அழுது கொண்டே , அவ்விடத்திலேயே படுத்து தூங்கிவிட்டார் (அப்போது அவருக்கு ஏறத்தாழ பதினாலு வயது இருக்கலாம்). காலையில் அவ்வழியே சென்ற சஃவான் என்ற முஸ்லீம் ஒருவர், ஏற்கெனவே ஆயிஷாவை கண்டிருந்ததால், அவரை அடையாளம் கொண்டு, முகமது நபியவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு பத்திரமாக அழைத்துக் கொண்டுவந்து விட்டார்.

இந்த சம்பவம், ஆயிஷா மேல் பலர் அவதூறு சொல்ல வழிவகுத்தது. ஆயிஷாவின் மேல் முகமது நபியவர்கள் அளவுகடந்த அன்பு கொண்டிருந்ததால் ஏற்கெனவே பொறாமையில் வெந்து கொண்டிருந்த முகமது நபியவர்களின் உறவுக்காரப் பெண்டிரும், மதீனாவாசிகளில் முஹாஜிர்களைப் பிடிக்காதவர்களுக்கும் இது வெறும் வாய்க்கிட்ட அவலைப் போல் ஆகியது.

இச்சம்பவத்தால் முகமது நபியவர்களும் மனதளவில் நிறைய பாதிக்கப் பட்டார். அவரது நன்பர்கள், அவரைத் தேற்றி, ‘ஆயிஷா இல்லாவிட்டால் என்ன, பெண்களுக்கா பஞ்சம் ‘ என்று கூறினார்கள் என்றும், அப்போது உடல் நிலை சரியில்லாது ஆயிஷா இருந்த நிலையில் கூட அவரிடம் நபி அவர்கள் பேசவில்லை என்றும் ஆயிஷா பிறகு தெரிவித்துள்ளதிலிருந்து, இது முகமது நபியவர்களின் மனதை மிகவும் பாதித்தது தெரிய வருகிறது. பிறகு ஆயிஷா அவர்களின் அடிமைப் பெண்ணை அழைத்து விசாரித்து, உண்மையில் ஆயிஷா தவறு செய்யவில்லை என்று நபிகளார் தெளிந்தார்கள் என்று ஆயிஷாவே சொன்னதாக மெளதூதி குறிப்பிடுகிறார்[11].

இந்த சம்பவத்தையொட்டி, முகமது நபியவர்களின் மற்ற நன்பர்களும், அவரிடம் அவரது மனைவிகளை முறையாக நடந்து கொள்ள அறிவுறுத்தும் படி கூறினார்கள். இச்சூழலில், ஆடை-ஆபரணங்கள் பற்றிய வசனங்கள் அல்லாஹ்வினால் முகமது நபியவர்களுக்கு அருளப் பட்டன. இங்கேயும், முகமது நபியவர்களின் மனைவிகளைக் குறித்தும், உடனிருந்தவர்களைக் குறித்துமே இவ்வசனங்கள் அறிவுரைகளை அறிவித்தன. இந்நிலையிலேயே, தகுந்த ஆதாரமில்லாமல் பழி சொல்வது தவறு என்றும், அதற்கு நான்கு சாட்சிகள் வேண்டுமெனவும், அப்படி பொய்யாக குற்றம் சுமத்துபவர்களுக்கு, மற்றவர்கள் பார்க்கும் படியாக என்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் இறைவசனங்கள் அருளப் பட்டன:

24:4 ‘ எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவது}று கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். ‘

24:11 ‘எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறதுி மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு. ‘

24:12 ‘முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் – இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, ‘இது பகிரங்கமான வீண் பழியேயாகும் ‘ என்று கூறியிருக்க வேண்டாமா ? ‘

இது போன்றே, திருக்குரான் வசனங்கள் 24:13,24:14,24:15,24:16 போன்றவையும் அருளப் பட்டன. இவற்றின் சாராம்சம், முகமது நபியவர்களின் மனைவியைப் பற்றி இப்படிப்பட்ட அவதூறு, எவ்வித ஆதாரமும் இல்லாமல் பரப்பப் பட்ட போது ஏன் சும்மா இருந்தீர்கள் என்று அவருடன் கூட இருந்த கூட்டத்தாரை நோக்கி அல்லாஹ் கேட்டதாகும். வசனம் 24:30 முகமது நபியவர்களின் கூட இருந்த ஆண்களுக்கு, அவர்கள் பெண்களைப் பார்க்கும் போது பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதும் இதன் அடிப்படையிலேயே ஆகும்.

திருக்குரானில் இந்த இரு அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள இறைவசனங்களே, பர்தா முறைக்கு அடித்தளமாக திருக்குரானில் காணப்படுகின்றன. இவையும், ஒட்டு மொத்த மனித குலத்திற்கு அல்லாஹ் இடப் பட்ட கட்டளையோ அல்லது எல்லா முஸ்லீம்களுக்குமான இறைவனின் கட்டளையோ அல்ல. முஃமின்கள் என்று இங்கு குறிப்பிடப் பட்டிருப்பது கூட எல்லா இடங்களிலும் இருந்த முஸ்லீம்களை குறிக்கு முகமாக அல்ல, அப்போது முகமது நபிகளின் கூட இருந்த கூட்டத்தாருக்கு அல்லாஹ், இரண்டு குறிப்பிடத்தக்க சம்பவங்களின் போது தெரிவித்த போதனைகளே ஆகும்.

திருக்குரான் தவிர, ஹதீதுகளைப் பார்த்தோமானால் கூட ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன. பர்தா அணிவதை முகமது நபி வலியுறுத்தினார் என்று சிலர் சொல்லியிருக்கின்றனர். அதேபோல், மேலே கண்ட திருக்குரான் வசனங்கள் அருளப் பட்ட பின்னும், மற்ற முஸ்லீம் பெண்கள் சுதந்திரமாக முகமது நபியவர்களின் கூட மசூதியில் அமர்ந்து பிரார்த்தனை செய்தார்கள் என்றும், பர்தா அணியாமல் அவர் முன்வந்து பேசினார்கள் என்றும், சில பெண்களின் அழகில் மயங்கி அவர்களின் முகத்தையே (முகமது நபி அருகில் இருக்கும்போதே) மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று குறிப்பிட்டும் பல ஹதீதுகள் காணப் படுகின்றன. முகமது நபியவர்களின் காலத்தில் அவரது மனைவிகளுக்கு மட்டுமே பர்தா முறை இருந்ததாகவும் , கூட இருந்த ஏனைய பெண்களுக்கு வெறும் முடியையும், மார்பையும் மறைத்துக் கொள்ளவே அவர் அறிவுறுத்தினார் என்றும் பலர் இத்தகைய ஹதீதுகளை மேற்கோளிட்டு வாதிடுகின்றனர். முகமது நபியவர்கள் போரில் பிடித்த பெண்களிலிருந்து தாம் எடுத்துக் கொண்ட பெண்களில் பர்தா அணிவித்தால் அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம் என்றும், மேல் அங்கியை நீக்கி விட்டால், அவளை வெறும் அடிமையாகவே வைத்துக் கொண்டார் என்று அர்த்தம் எனவும் அவருடன் கூட இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதிலிருந்தே, முஸ்லீமான எல்லாப் பெண்களுக்கும் அவர் முகத்தையோ, உடலையோ மூடி, தனிமையில் இருக்க அறிவுறுத்தவில்லை என்று வாதிடுபவர்களும் உள்ளனர். இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பாக அசிரியர்களும், பாரசீகர்களும் இம்முறையைப் பின்பற்றி வந்ததாகக் கூறப் படுகிறது. அவர்களில் உயர் குலத்தோர் தம் பெண்டிரை இம்மாதிரி திரைச் சீலைக்குப் பின் மறைத்து வைப்பதும், மற்ற ஆடவர்களுடன் பழகாமல் தடுத்து வைப்பதும், அவசியம் எனில் வெளியே போகும் போது உடலை மறைக்கும் ஆடைகளை அணிந்து போவதும் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றனர். ஆனால், இதற்கு நேர் மாறாக அரபிப் பெண்டிர் சுதந்திரமாக இருந்திருக்கின்றனர். இஸ்லாம் பரவும் போது, ஈராக் போன்ற பிரதேசங்களில் இருந்த இம்முறை, தாமும் உயர் வகுப்பு என்று காட்டிக் கொள்வதற்காக அரபிக்களாலும், ஏனைய முஸ்லீம்களாலும் பின் பற்றப் பட்டது என்றே பிக்தால் போன்ற இஸ்லாமிய வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.

திருக்குரானில் ஆணும் பெண்ணும் சமம் என்றும் வசனங்கள் காணப் படுகின்றன. ஆண்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளச் சொல்லும் வசனத்தை எந்த இஸ்லாமியரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால், குறிப்பிட்ட சூழலில், அவருடைய மனைவிகளைக் குறித்தும், கூட இருந்த ஏனைய பெண்களைக் குறித்தும் வந்த வசனங்களை ‘மனித குலம் முழுமைக்குமான ‘ ஆடை முறையாக மாற்றுவது, அடிப்படை வாதத்தின் கோர முகம் தான்.

தீவிர வகாபியிஸத்தைப் பின்பற்றும் சவுதி அரேபியாவில், ஒரு பெண்கள் பள்ளியில் சமீபத்தில் ஒரு தீ விபத்து நிகழ்ந்தது. அப்போது தீயிலிருந்து தப்பிக்க முயன்ற பெண்களில் சிலருக்கு பர்தா விலகிவிடவே, தீயணைப்பு வாகனத்தை அருகே செல்ல தடை செய்து விட்டனர். இதன் விளைவாக, பதினைந்து பெண்கள் உயிரிழந்தார்கள்[12]. அங்கு, பெண்கள் காரோட்டுவது கூட அடிப்படைவாதிகளுக்கு இஸ்லாத்துக்கு விரோதமான ஒன்றாகக் கருதப்பட்டு வருகிறது[13 ]. பாகிஸ்தானில் தீவிர பர்தா அமுலிம் இருக்கும் பலூசிஸ்தான், வடமேற்கு மாகானம் போன்ற மாநிலங்களில், ஒரு பெண் திருமணமாகி கணவன் வீட்டுக்குச் செல்வதைத் தவிர வெளியுலகையே பார்ப்பதில்லை. வட இந்தியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதம் மிகுந்து இருக்கும் பகுதிகளில், கொஞ்சம் வெயிலையும், காற்றையும் அனுபவிப்பதற்காகவே உடல் நிலை சரியில்லை என்று கூறி ஆஸ்பத்திரி செல்லுகின்றனர் முஸ்லீம் பெண்கள். இது போன்றே, உலகெங்கிலும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளும் ,அவர்களை ஆதரிப்பவர்களும், பர்தாவுக்குப் பின்னே தமது மதத்தின் மரியாதையும், பிடிமானமும் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு பர்தா முறையை மறுதளிக்கும் நாகரீக சமுதாயங்கள் மீது கோபப் படுகின்றனர். இஸ்லாமிய அடிப்படைவாதம் பெருகிய நிலையில் காஷ்மீரிலும், பர்தா அணியாத பெண்கள் மீது தாக்குதல்கள் நடத்தப் பட்டன.

தற்போது பிரான்ஸ், இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இது சம்பந்தமாக இந்த பர்தாவே இஸ்லாத்தின் அடித்தளம் என்பது போன்ற பிரச்சாரங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் செய்யப் பட்டு வருகின்றன. பள்ளிகளில் தலையை மறைத்துக்கொள்வதை தடை செய்வது, இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமையை தடை செய்வதாகும் என்று கூக்குரலிடும் இஸ்லாமிய அமைப்புகள், புருனேயில் பள்ளிகளில் முஸ்லீம் அல்லாத பெண்களும் தலையை மறைத்துக் கொள்ள வேண்டும் இல்லாது போனால் பள்ளியை விட்டு வெளியேற வேண்டும் என்ற அச்சுறுத்தலைப் பற்றி எதுவும் கூறுவதில்லை[14].

பர்தா என்பது, இஸ்லாமிய சமூகத்தின் உள் விவகாரம் கிடையாது. பர்தா முறையினால் வெகுவாக பாதிக்கப் படுவது முஸ்லீம் அல்லாத பெண்கள் தாம். உதாரணமாக தீவிர பர்தா முறை அமலில் இருக்கும் பாகிஸ்தானின் பிரதேசங்களில் இந்து, கிறிஸ்துவப் பெண்கள் கடத்தப் படுவது, கற்பழிக்கப் படுவது, வலுக்கட்டாயமாக மதம் மாற்றப் பட்டு திருமணம் செய்து வைக்கப் படுவது ஆகியவை தினம் தினம் நிகழ்கின்றன. பெரும்பாலும், இவற்றைப் பற்றி போலீசில் புகார் செய்யச் செல்லும் அவர்களின் தந்தைமார்கள், கணவர்கள், சகோதரர்கள் ஆகியோர் மீது முகமது நபியவர்களை அவமதித்த குற்றத்தின் கீழ் (Blasphemy Law) வழக்குத் தொடரப் படுவதால் அங்கிருக்கும் முஸ்லீம் அல்லாதவர்கள் இத்தகைய வன்முறைகளிலிருந்து தமது பெண்டிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக , விருப்பம் இல்லாவிட்டாலும் அவர்களையும் பர்தா அணிந்து கொள்ளச் சொல்லி நிர்ப்பந்திக்கின்ற நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.

பர்தாவுக்கும் முஸ்லீம் பெண்களின் முன்னேற்றத்திற்கும் ஒரு எதிர்மறை உறவு உண்டு. தீவிர பர்தா முறை அமலில் இருக்கும் சமுதாயங்களில் எல்லாம், பெண்களின் சமூக, கல்வி முன்னேற்றம் மிகவும் பின் தங்கியே இருக்கின்றது. உதாரணமாக, சோவியத் ருஷ்யாவில், 1920 வாக்கில் பல மத்திய ஆசிய முஸ்லீம் நாடுகளில் அரசின் துணைகொண்டு வலுக்கட்டாயமாக பர்தா முறை நீக்கப் பட்டது. இதை தீவிரமாக அடிப்படை வாதிகள் எதிர்த்தனர். பர்தா நீக்கி தைரியமாக வெளியே வந்த ஏராளமான முஸ்லீம் பெண்களைக் கொல்லவும் செய்தனர். ஆனால், இத்தகு சீர்திருத்தங்களின் விளைவாக இஸ்லாமிய நாடுகளில் அதிக அளவில் பெண்கள் கல்வியறிவு அடைந்த நாடுகளாக தஜிகிஸ்தான் போன்றவை உள்ளன. 2003ம் ஆண்டில் தஜிகிஸ்தானில் பெண்களின் கல்வியறிவு 99 சதவிகிதம்!. அஜர்பெய்ஜானில் 96 சதவிகிதம். தீவிர பர்தா உடைய ஆப்கானிஸ்தானிலோ, பெண்கல்வியறிவு வெறும் 21 சதவிகிதம் தான் . மேலும், இப்பர்தா முறையின் நீட்சியாக ‘கண்ணியக் கொலைகள் ‘ பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெறுகின்றன[15]. ஜோர்டானோ, ஒரு சட்டமே இயற்றி, இப்படி குடும்ப ‘கண்ணியத்தை ‘ காப்பாற்றிக் கொள்வதற்காக பெண்களை கொல்வது சரியே என்று அறிவித்து விட்டது[16]. ‘சதி மாதா கீ ஜெய் ‘ என்று கோஷம் போட்டு 17 வருடங்களுக்கு முன்பு, இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் நடந்த கொலையை மீண்டும் மீண்டும் குறிப்பிடும் நாகூர் ரூமி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் , இங்கு அப்படிப் பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப் படும் அதே வேளையில், இஸ்லாமிய நாடுகளில், சட்ட ரீதியாக அனுமதிக்கப் படும் இந்த கண்ணியக் கொலைகளை(honour killings) குறித்து வாய் திறப்பதில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

இஸ்லாமிய வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கேற்ப இறைவனால் அருளப்பட்டதாக சொல்லப் படும் இவ்வசனங்களை வைத்து, இப்பர்தா முறையை நியாயப் படுத்தும் இந்த இஸ்லாமிய அடிப்படை வாதத்தை அதன் பின்புலம் அறிந்த இஸ்லாமிய அறிஞர்களாவது கைவிட வேண்டும்.இஸ்லாத்தின் மிகப் பெரிய பலம் அது 1425 வருடங்களுக்கு முன் பெண்களுக்கு நிறைய உரிமைகளைத் தந்ததுதான் என்றால், அதன் மிகப் பெரிய பலவீனம் 1425 வருடங்களுக்குப் பின்பு, அப்போது நடந்தவைகளை, அவற்றின் பின்புலம் அறியாமல் மூர்க்கத்தனமாக பின்பற்றுவதுதான். இஸ்லாத்தின் மீது தவறான புரிதல் உலகிற்கு இருக்கிறது என்றால், அதை நீக்க வேண்டிய இஸ்லாமிய அறிஞர்கள், மேலும் மேலும் இத்தகைய தவறான பின்பற்றுதல்களை தமது இறைவன் அப்படிக் கட்டளையிட்டுள்ளார் என்று நினைத்து அதனை எப்பாடுபட்டாகிலும் ஆதரிக்கவேண்டும் என்று செயல்படுவது ஏனையோர் இஸ்லாத்தின் மீது வெறுப்பு கொள்ள காரணமாகிவிடுகிறது. நல்லதை ஏற்று அல்லதைப் புறந்தள்ளி, அன்பையும், சகோதரத்தையும், மனித நேயத்தையும் மலரச் செய்ய இத்தகைய நாகரீகத்துக்கு முரணான வழக்குகளை இஸ்லாமிய சமுதாயம் புறக்கணிக்க வேண்டும். அச்சமுதாயத்தின் அறிஞர்கள், படித்தவர்கள், ஆன்றோர்கள், ஆன்மீகவாதிகள் இதை முன்னின்று செய்ய வேண்டும்.

– நேச குமார் –

[1] இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பக் 436.

[2] இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பக் 439.

[3] இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பக் 440.

[4] http://www.islam101.com/quran/maududi/i024.htm

[5] http://www.tamililquran.com/sura33.html#33:37

[6]http://www.tamililquran.com/sura33.html#33:40

[7]http://www.tamililquran.com/sura33.html#33:4

[8]http://www.tamililquran.com/sura33.html#33:51

[9]http://www.tamililquran.com/sura33.html#33:40

[10] http://www.tamililquran.com/sura33.html#33:59

[11 ] http://www.usc.edu/dept/MSA/quran/maududi/mau24.html

[12 ] http://msnbc.msn.com/news/780082.asp ?cp1=1

[13] http://news.bbc.co.uk/2/hi/middle_east/3752989.stm

[14]http://news.bbc.co.uk/2/hi/world/asia-pacific/1804470.stm

[15] http://news.bbc.co.uk/2/hi/south_asia/2567077.stm

[16] Honour Killings in Jordan :

http://news.bbc.co.uk/2/hi/middle_east/2802305.stm

http://news.bbc.co.uk/2/hi/middle_east/3088828.stm

http://www.indiadaily.com/breaking_news/11708.asp

மேலும் படிக்க:

http://www.tamililquran.com/sura33.html

http://www.tamililquran.com/sura24.html

http://islaam.blogdrive.com

 • C.M.Naim on Purdah


  nesa_kumar2003@yahoo.com

  Series Navigation

 • author

  நேச குமார்

  நேச குமார்

  Similar Posts