கலைடாஸ்கோப் – ஆகஸ்ட் 26 – இமயமலை ஏரி, ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம், வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

முனைவர் மு சுந்தரமூர்த்தி


இமயமலையில் உருவாகியுள்ள அபாயகரமான ஏரி

இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட நிலச்சரிவால் இமயமலைப்பகுதியில் பெரிய ஏரி ஒன்று உருவாகியுள்ளது. இரு நாடுகளின் அறிவியலாளர்களும், பொறியியல் வல்லுனர்களும் இந்த ஏரியின் கரை உடையும் பேராபத்தை எப்படி தடுப்பது என்று திகைத்துப் போயிருக்கின்றனர். இந்திய ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதிக்குச் செல்ல சீனா அனுமதி மறுத்திருப்பதால் இந்தியத் தரப்பு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்பட இயலாமல் உள்ளன. சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள திபெத் பகுதியில் பாயும் ‘பரெ சூ ‘ என்ற ஆற்றை மறித்து, சுமார் 40 மீட்டர் ஆழமுள்ள, 6 கோடி கனமீட்டர் நீர் நிரம்பிய ஏரியை உருவாக்கியுள்ளது இந்த நிலச்சரிவு. இங்கிருந்து 35 கி.மீ. தூரத்தில் சட்லெஜ் என்ற பெயரில் இந்திய எல்லைக்குள் பாயும் இந்த ஆறு இமாச்சலப் பிரதேசத்தின் பல நகரங்கள் வழியாக ஓடுகிறது. சீனப்பகுதியில் மக்கள் வசிக்கும் பகுதிகள் காலி செய்யப்பட்டுவிட்டன. இந்தியாவையும் இத்தகைய நடவடிக்கை எடுக்கச் சொல்லி சீன அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இதுவரை இந்தியப் பகுதியிலிருந்து 50,000 பேர் அகற்றப்பட்டுள்ளனர்.

இந்த ஏரியில் உடைப்பு ஏற்பட்டால் மிகக் குறுகிய மலைக்குடைவு வழியாக நீர் அசுரவேகத்தில் பாயும் என்று எச்சரிக்கிறார் ரூர்கேலாவின் இந்திய தொழில் நுட்பக் கழகத்து நீரியல் பேராசிரியர் முத்தையா பெருமாள். இது சமவெளிப் பகுதியில் ஏற்படும் வெள்ளம் போலன்றி, குன்றாத உயரத்துடன் நகரும் மாபெரும் நீர்மலை போன்றிருக்கும் என்கிறார். கடந்த ஜுலை வாக்கில் நிலச்சரிவு ஏற்படத் துவங்கியவுடனே சுரங்கவழியமைத்து நீரை வெளியேற்றி அதிக அளவில் தேங்காதவண்ணம் தவிர்த்திருக்கலாம் என்கிறார் டெல்லியின் இந்திய தொழில்நுட்பக்கழகப் பொதுவியல் பொறியாளர் மனோஜ் தத்தா. இப்போது இவ்வணை நிரம்பி வழியும் நிலையில் என்ன செய்ய முயற்சித்தாலும் அது ஆபத்தில் முடியக்கூடும் என்றும் எச்சரிக்கிறார். உரிய காலத்தில் எந்த ஒரு கூட்டுத் திட்டமும் உருவாக்கப்பட முடியவில்லை என்று இந்திய ஆராய்ச்சியாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்திய அறிவியலாளர்களை இப்பகுதிக்குள் அனுப்பும் முயற்சியாக இந்திய அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை நிராகரித்த சீனா, அவ்வப்போது சீன வல்லுனர்கள் கொடுக்கும் தகவல்களை மட்டும் இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

ஆதாரம்: K. S. ஜெயராமன், Nature, 19 August 2004

ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம்

‘நவீன அறிவியலின் தந்தை ‘ என அறியப்படும் சர் ஐசக் நியூட்டனின் இன்னொரு முகம் இப்போது காணக் கிடைக்கிறது. இதுவரை அறிவியல் ஆய்வாளர்களுக்கு மட்டுமே படிக்கக் கிடைத்த நியூட்டனின் மத சம்பந்தமான எழுத்துக்களடங்கிய ஆவணங்கள் இப்போது இலண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த அறிவியல் வரலாற்றாசியர் இராபர்ட் இலைஃப் (Robert Eliffe) என்பாரின் முயற்சியால் இணையத்தில் (http://www.newtonproject.ic.ac.uk/) பதிப்பிக்கப்பட்டு மற்றவர்களும் அறிந்துகொள்ள வழி ஏற்பட்டுள்ளது. கணிதத்திலும், இயற்பியலிலும் ஈடுபாடு கொண்டு அறிவியலுக்கு பெரும்பங்காற்றிய நியூட்டன் மத விஷயங்களிலும் அதே ஈடுபாட்டுடன் செயல்பட்டதாகத் தெரிகிறது. மதத்திலும், ரசவாதத்திலும் நியூட்டன் கொண்டிருந்த ஆர்வத்தை நெடுங்காலமாக அறிவியல் வரலாற்றாசிரியர்கள் அறிந்திருப்பினும் அது எவ்வளவு ஆழமானதும், அதிர்ச்சியூட்டக்கூடியதும் என்பதை சிலர் மட்டுமே உணர்ந்திருப்பார்கள். கிறித்தவ விவிலிய மறையின் புதிய ஏற்பாட்டில் உள்ள ‘வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) ‘ நூலுக்கு மட்டும் மூன்று இலட்சம் சொற்கள் கொண்ட விளக்கத்தை பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதியிருக்கிறார். நியூட்டன் காலத்து இங்கிலாந்தில் கத்தோலிக்க எதிர்ப்பு பரவலாக இருந்ததென்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நியூட்டன் சாதாரண ஆங்கிலேயரின் மத நம்பிக்கையையும் விடத் தீவிரமான கத்தோலிக்க வெறுப்பைக் கொண்டிருந்தார். கத்தோலிக்க மதத்தலைவர் போப்பை கிறித்தவ எதிர்ப்பின் மறு உருவமென நியூட்டன் நம்பியதாகச் சொல்கிறார் இலைஃப்.

ஆனால் நியூட்டன் தன் மத நம்பிக்கைகளை தன்னோடே வைத்திருந்தார். அவர் எழுதியவற்றுள் பாதிக்கு மேல் மத சம்பந்தமானவை என்றாலும், இத்தகைய எழுத்துக்களை ஒருபோதும் பதிப்பித்ததாகத் தெரியவில்லை. நியூட்டன் தனது ஒழிந்த நேரத்தில் மட்டும்தான் மதவிஷயங்களில் கவனம் செலுத்தினார் என்றும், அவருடைய எழுத்துக்கள் பிறரிடமிருந்து காப்பியடிக்கப்பட்டவை எனவும் இதுவரை பலர் நம்பியிருந்தனர். ஆனால், நியூட்டனின் மத சம்பந்தமான எழுத்துக்கள் கவனமாக திட்டமிடப்பட்டது என்றும், இவ்வெழுத்துக்கள் பெரும்பாலும் அவருடைய கணித, இயற்பியல் எழுத்துக்களோடு தொடர்புடையன என்றும் சாதிக்கிறார் இலைஃப். நியூட்டனின் மதம் மற்றும் அறிவியல் சித்தாந்தங்கள் ஒன்றோடொன்று பிணைந்தவையாகவும் தெரிகின்றன. சோதித்து அறியக்கூடிய கருதுகோள்களைக் கொண்டு இயற்கையைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிய முயன்ற நியூட்டன் தன்னுடைய மதசார்ந்த எழுத்துக்கள் இறைவனைப் பற்றிய உண்மையை விளக்குகின்றன என்று நம்பியதாகக் கூறுகிறார் இலைஃப்.

ஆதாரம்: Geoff Brumfiel, Nature, 19 August 2004

உயிர்தொழில்நுட்பம் — வேலை வெளியனுப்புதலின் அடுத்த அலை

இந்தியா கையொப்பமிட்ட 1995ம் ஆண்டின் உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தப்படி அடுத்த ஆண்டு இந்தியாவிலும் புதிய காப்புரிமை சட்டங்கள் நடைமுறைக்கு வரும். இதனால், இதுவரையில் இந்தியாவிற்குள் வர பயந்துக்கொண்டிருந்த பன்னாட்டு மருந்துத்தொழில் நிறுவனங்கள் எப்போது, எப்போது என்று இந்தியாவிற்குள் நுழையக் காத்திருக்கின்றன. நோவார்டிஸ் (Novartis), ஃபைஸர் (Pfizer), எலை லில்லி (Eli Lilly) போன்ற பெரிய மருந்து நிறுவனங்கள் ஏற்கனவே மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளை இந்தியாவில் நிறுவியிருந்தாலும், மருந்து கண்டுபிடிப்பு, முன்மருந்தகச் சோதனைகள் (preclinical testing) போன்ற ஆராய்ச்சி & மேம்பாட்டுச் செயல்பாடுகளை வேறு நாடுகளில் தாம் நடத்தி வருகின்றன. அந்த நிலை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மாறி, இந்தியாவின் ஆராய்ச்சி & மேம்பாட்டுச் (Research & Development) சேவைகளை பயன்படுத்திக்கொள்ளவிருப்பதாக இந்த மூன்று நிறுவனங்களும் அறிவித்திருக்கின்றன.

கடந்த 1970ம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கும் இந்திய காப்புரிமைச் சட்டம், தயாரிப்பு முறையை (process) மட்டும் தான் அங்கீகரிக்கிறது, தயாரிக்கப்பட்டப் பொருளையல்ல (product). இதனால் நம் காப்பியடிக் கலைஞர்கள் அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ புதிதாக வெளியாகும் மருந்தின் தயாரிப்பு முறைகளில் இடையில் ஓரிரண்டு அடிகளை மாற்றி அதே மருந்தை தயாரித்து விற்பதில் எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. இந்தியாவில் இருக்கும் 20,000 நிறுவனங்களில் பெரும்பாலானவை இத்தகைய பொது மருந்துகள் (generic drugs) உற்பத்தியில் தாம் ஈடுபட்டுள்ளன. ஆகையால் மருந்தகச் சோதனைகள் செய்யவேண்டியத் தேவைகள் இல்லாமலிருந்தது. அதன் காரணமாக அத்தகைய செயல்திறன்களும் இந்தியாவில் வளரவில்லை. ஆனால் இந்தியாவிற்கு வெளி நாட்டு நிறுவனங்களின் வரவால் இத்தகைய செயல்திறன்கள் வளரும். உதாரணமாக மும்பையில் உள்ள SIRO Clinpharm என்ற இந்திய ஒப்பந்த ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஏழாண்டுகளாக முன்மருந்தகச் சோதனைகளை நடத்திவருகிறது. இந்நிறுவனத்தின் வியாபாரம் ஆண்டுக்கு 60 முதல் 80 சதவீதம் வரை வளர்வதாகவும், இதில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வியாபாரம் பன்னாட்டு நிறுனங்களால் வழங்கப்படுபவை என்றும் கூறுகிறார் அதன் பொது மேலாளர் சேத்தன் தம்ஹாங்கர் (Chetan Tamhankar). காப்புரிமைச் சட்டங்கள் மாறும்போது தன் நிறுவனத்தின் வியாபாரம் ராக்கெட் வேகத்தில் உயருமென்றும் கூறுகிறார்.

தகவல் தொழில்நுட்பத் துறை வேலைகள் வெளியனுப்புதலுக்கான அதே காரணங்கள் தாம், இந்தியாவிற்கு அனுப்பப்படும் உயிர்த்தொழில் நுட்பம், மருந்துத்தொழில் வேலைவாய்ப்புகளுக்கும் சொல்லப்படுகின்றன. அதாவது, இதனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெருமளவு செலவு மிச்சம். இந்தியாவில் அறிவியல், மருத்துவக் கல்வி ஆங்கித்தில் கற்பிக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள ஏகப்பட்ட காப்பியடித்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட வேதியியலாளர்கள் பல்லாயிரக் கணக்கில் உள்ளனர். இதன் அடுத்த பக்கமாக, இதனால் பாதிக்கப்படும் அமெரிக்கர்களின் அதிருப்திக்கும், அதைத் தொடர்ந்த அரசியல் குறுக்கீடுகளுக்கும் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்படலாம். அமெரிக்காவில் இத்துறையில் வேலை நீக்கங்கள் பெரிய அளவில் இன்னும் நடக்கவில்லையென்றாலும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. இதன் விளைவுகளும், இந்த போக்குக்கு எதிர்ப்பும் வெகுவிரைவில் தெரியவரும்.

ஆதாரம்: Gunjun Sinha, Scientific American, August 2004

பின் குறிப்பு: பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வருவதால் ஆராய்ச்சி & மேம்பாடு, மருந்து கண்டுபிடிப்பு, தயாரிப்பு போன்ற துறைகளில் பெருமளவு வேலை வாய்ப்புகள் பெருகும் என்பது உண்மையே. ஆனால், அச்சம் தரக்கூடிய எதிர்விளைவு என்னவென்றால் புதிய மருந்துகளை சோதிக்கும் கட்டத்தில், சோதனைகளுக்கு தொண்டர்கள் தேவை. இத்தகைய முன்மருந்தகச் சோதனைகளுக்கான விதிமுறைகள் மேற்கத்திய நாடுகளில் மிகவும் கடுமையானவை. புதிய மருந்துகளை தமக்கு செலுத்தி சோதித்துக் கொள்ள முன்வரும் தொண்டர்களுக்கு தேவையான அளவு தகவல்களும், இழப்பீட்டுத் தொகையும் கொடுக்கப்படுகின்றன. சோதனையில் ஈடுபடும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கென்று கடுமையான விதிமுறைகள் உண்டு. இவற்றையெல்லாம் கண்காணிக்க அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (Food and Drug Administration) போன்ற அமைப்புகள் மேற்கத்திய நாடுகளில் உண்டு. இந்திய அரசாங்கம் இத்துறையில் தேவையான நெறிமுறைகளை வகுத்திருக்கிறதா என்று தெரியவில்லை. அவற்றைக் கண்காணிக்க சிறப்பு அரசாங்க அமைப்பு உள்ளதா என்பதும், இந்திய மருத்துவர்களும், மருத்துவப்பணியாளர்களும் உரியமுறையில் தேவையான அளவில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றனரா என்பதும் தெரியவில்லை. அனைத்துக்கும் மேலாக, இச்சோதனைகளில் ஈடுபடுத்தப்படவிருக்கும் சராசரி இந்தியர்கள் இதில் இருக்கும் நுணுக்கங்களையும், சிக்கல்களையும் எவ்வளவு விரைவில் புரிந்துக்கொள்வார்கள் என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறி.

***

Series Navigation

author

மு. சுந்தரமூர்த்தி

மு. சுந்தரமூர்த்தி

Similar Posts