முனைவர் அ.கா.பெருமாள்
குமரிமாவட்டத்திலும் தென்நெல்லைமாவட்டத்திலும் பரவலாக வளங்கப்படும் சிறுதெய்வங்கள் பல உண்டு. இவர்களில் பலர் குலதெய்வங்களாக உள்ளனர். சில தெய்வங்களின் கதைகள் விரிவாக கதைப்பாடல்களாகப் பாடப்பட்டுள்ளன. இக்கதைப்பாடல்கள் பெரும்பாலும் வில்லுப்பாட்டாக அத்தெய்வ ஆலயங்களில் பாடப்படுகின்றன. மக்களின் பண்பாட்டையும் ஆன்மீகத்தையும் காட்டும் இப்பாடல்கள் முக்கியமான ஆவணங்கள். இவற்றில் சிலவற்றை நான் ஏற்கனவே நூல்வடிவில் பதிப்பித்திருக்கிறேன். இக்கதைகள் பொது வாசகர்களுக்காக எளிய உரைநடையில் சுருக்கமாக எழுதப்பட்டவை.
கதைநிகழ்ச்சிகளைப் பாடல் வழியே கூறுவது கதைப்பாடல்கள் . மரபுவழிப் பாட்பட்டு வரும் கதைப்பாடல்கள் வாய்மொழி இலக்கியத்தின் கூறுகளுள் அடங்கும். கதைப்பாடல்கள் மக்கள் கூட்டத்துக்கு முன் நடனம் அல்லது இசைக்கருவிகளின் துணை கொண்டோ அல்லது இவை இன்றியோ பாடப்படுகின்றன. அன்றாட வாழ்வின் சாதாரண நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அம்மானைப் பாடலைப்போல எளிய நடையில் அமைந்தும் கதையின் கருத்தை வற்புறுத்தியும் சொல்லையோ சொற்றொடரையோ திரும்பத் திரும்பக் கூறியும் அமைவன இவை .
கோவில்களில் தாழ்த்தப்பட்ட சாதியினரை அனுமதிக்காமை, தெய்வீகக் காப்பியங்களையும் இதிகாசங்களையும் புராணங்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் படிக்கும் உரிமைக்கு மறுப்பு , பெருநெறித் தெய்வங்களை வழிபடவும் அவை தொடர்பான விழாக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் கலந்தகொள்ளவும் அனுமதி மறுப்பு ஆகியன எக்காலத்தில் உருப்பெற்றன என மதிப்பிடமுடியவில்லை. இம்மறுப்பினால் குறிப்பிட்ட இனத்தாரிடையே எழுந்த வேகம் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளில் நாட்டத்தையும் வாய்மொழிக் கதைகளைப் பாடலாக்கும் முயற்சியையும் அதிகரிக்கச் செய்திருக்க வேண்டும். அவர்கள் தாங்கள் நம்பிய ஆவிகளையும் அவை தொடர்பான தெய்வங்களையும் மரபு வழியே கேட்ட இதிகாசம் காவியம் புராணம் குறித்த செய்திகளையும் கதைகளையும் அடிப்படையாகக் கொண்டு கதைப்பாடல்களை புனைந்திருக்கலாம்.
கதைப்பாடல்கள் நாட்டுப்புற இலக்கியப் பரம்பரையைச் சார்ந்தவை . இவற்றின் பாடுபொருட்களாகப் புராணம், இதிகாசம், வரலாற்று நிகழ்ச்சி, வீர சாகசச் செயல், காதல், சாதிக்காழ்ப்பு போன்ற காரணங்களால் ஏற்படும் இறப்புகள் அமையும். கதைப்பாடல்கள் பாடுதற்கு உரியவை. இவற்றைப் பாடும்போது பெரும்பாலும் ஒரே பண்ணில் பாடுவதுபோல் தோன்றினும் அதில் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன.கதைப்பாடல்களின் ஆசிரியர்களின் பெயர்கள் பெரும்பாலும் அறியமுடியாத நிலையில் உள்ளன. இவற்றில் உண்மையும் நேர்மையும் போற்றப்படுவதைக் காணமுடிகிறது. அதர்மம் அழிந்து தர்மம் மேலோங்கவேண்டுமென்ற காவியத்தன்மை கதைப்பாடல்களுக்கும் உண்டு. அதர்மத்தை அழிக்கக் கொடுஞ்செயல்கள் புரிவதைக் கதைப்பாடல்கள் நியாயப்படுத்துகின்றன.
கிராம மக்கள் தங்களுக்குள் வகுத்துக்கொண்ட சமூக நியதிகளை மீறுகின்றவர்களைக் கொல்லுவதைக் கதைப்பாடல்கள் காட்டுகின்றன. தங்களைக் கொல்லுகின்றவர்களபை¢ பழிவாங்கும் நிலை கதைப்பாடல்களில் பொதுவாகக் காணப்படுகிறது. சமூகக் கட்டுப்பாட்டை மீறாத கதைத் தலைவர்களுக்கு இரண்டாம் பிறப்பைக் கொடுத்து புராணத்தன்மை ஏற்றும் நிலையையும் கதைப்பாடல்களில் பரவலாகக் காணமுடிகிறது. கதைத்தலைவர்களின் முடிவு பெரும்பாலும் சோகமாகவே அமைந்திருக்கின்றன. இதனால் இத்தலைவர்களைச் சோகத்தலைவர்கள் என்றும் கூறலாம்.
கதை நிகழ்ச்சியை விளக்கம் கதைப்பாடல்கள் பொதுவான நிலையில் அமையினும் பிற நாட்டார் கலை வடிவங்களையும் தன்னகத்தே ஈர்த்துக்கொண்டதால் கதைப்பாடல்களினின்று அம்மானைப் பாடல்களும் வில்லிசைப் பாடல்களும் தெக்கன் பாட்டுகளும் தனித்தியங்குகின்றன.
ஆரம்ப காலத்தில் புராண, இதிகாசங்களைப் பாடுபொருளாகக் கொண்ட அம்மானையுடன் பிற்காலத்தில் நாட்டார் பாடல்கள், நாட்டார் கலை ஆகியவற்றின் வடிவங்கள் இணைந்தபோது அம்மானை பல்வேறுபட்ட பிற வடிவங்களையும் தனதாக்கிக்கொண்டது.
அம்மானைக்கு இதிகாசம் காவியம், காவியம், புராணம் ஆகியன மட்டுமே பாடுபொருளாக இருந்த நிலை மாறிய பின்பு குறிப்பிட்ட எல்லைக்குள் வாழ்ந்து அரிய செயல்களைச் செய்த வீரன் ,பிறசாதியில் மணம் புரிந்து கொலையுண்டவன் ஆகியோர்களின் சோக முடிவுகளும் பாடுபொருளாயின. இந்நிலையில் அம்மானை தன் தன்மையை இழந்து குறிப்பிட்ட எல்லையில் வாழும் நாட்டார் கலை மற்றும் பாடல் அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்ட நிலை உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வழங்கும் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம் ஆகிய இரண்டைக் கூறலாம்.
வில்லிசை நிகழ்ச்சியில் பாடப்படும் கதைப்பாடல்கள் எல்லாமே வில்லிசைக் கலைக்காக உருவாக்கப்பட்டவை. இதற்கு வில்லிசைப் பாடல்களில் நிறையவே சான்றுகள் உள்ளன. பொதுவாக வில்லிசைப் பாடல்களை அவற்றின் தன்மைகளின் அடிப்படையில் புராணத்தன்மை கொண்டு புராணமாய் அமைபவை, புராணத்தன்மை கொண்டு புராண நிலையினின்று மாறியவை, வரலாறு அடிப்படையில் அமைபவை, சமூகம் தொடர்பாய் அமைபவை எனப் பகுக்கலாம்.
தென்தமிழ் மாவட்டத்துக்கே உரிய கலையான வில்லிசை கலைக்குரிய கதைப்பாடல்களின் ஏடுகளும் தென் மாவட்டங்களில் குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருமளவு கிடைக்கின்றன. இதில் உள்ள 21 கதைகளில் சோமாண்டி கதை, கட்டிலவதானம், வன்னியன் கதை, புலமாடன் கதை, காட்டுராஜா கதை, இடைகரை புலை மாடசாமி கதை ஆகிய ஆறுகதைகளும் ஏட்டு வடிவிலும் வாய்மொழி வடிவிலும் உள்ளன. பிற கதைகள் எல்லாமே அச்சில் வந்துவிட்டன. எனினும் அவை அருமையாகவே கிடைக்கின்றன.
பூலங்கொண்டாள் அம்மன் கதை
திருநெல்வேலிப் பகுதியைச் சார்ந்த கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில் வாழ்ந்த மாலைக்குட்டி நாடார் என்பவர் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சார்ந்த பொடியன்விளை என்ற ஊரில் குடியேறினார். அந்த ஊரில் உள்ள காட்டை அழித்து வீடு கட்டினார். அங்கே கருங்கடாக்காரனுக்குக் கோவில் ஒன்றும் கட்டினார். செங்கிடாக்காரன் அவரது குலதெய்வம்
அந்த ஊரில் அவர் செல்வத்தோடும் புகழோடும் வாழ்ந்தபோது அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதற்குப் பண்டாரம் எனப் பெயரிட்டார். மேலும் மாலைக்குட்டி நாடாருக்குத் தொடர்ந்து ஆறு குழந்தைகள் பிறந்தன. கூடவே அவரது செல்வமும் நஞ்சை புஞ்சை எனப் பெருகியது.
ஆனால் அவருக்குப் பெண் குழந்தை மட்டும் பிறக்கவில்லை. ஒருநாள் மாலைக்குட்டி நாடாரின் மனைவியின் கனவில் உக்கிரமான வடிவம் கொண்டு செங்கிடாக்காரன் வந்தார். ‘ ‘ எனக்கு பெண்குழந்தை வரம் வேண்டும் ‘ என்று அவள் வேண்டிக் கொண்டாள். அவளுக்கு பெண்குழந்தைக்கு யோகம் இல்லை என்றான் செங்கிடாக்காரன். அவள் தொடர்ந்து மன்றாடினாள். மனம் கரிந்த செங்கிடாக்காரன் ‘ ‘ பெண்ணே உனக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கும். அதற்குப் பூலங்கொண்டாள் எனப் பெயரிடு. ஆனால் அந்தக் குழந்தை 12 வயதில் இறந்துவிடும் ‘ ‘ என்றார்.
கைலாசநாதர் அருள்படி மாலைக்குட்டி நாடாரின் மனைவி பெண்குழந்தை ஒன்றைப் பெற்றாள். அவளுக்குப் பூலங்கொண்டாள் எனப் பெயரிட்டனர். எல்லா அழகுகளும் கொண்ட பெண்குழந்தையாக அது இருந்தது. மாலைக்குட்டி நாடாரும் மனைவியும் அவளை கொஞ்சி சீராட்டி வளார்த்தனர். அவளது மரணம் பற்றி செங்கிடாக்காரன் சொன்னதெல்லாம் அப்போது அவர்கள் மனதில் எழவில்லை. எல்லா மனித மனங்களையும் போலவே மகிழ்ச்சியான விஷயங்களையே உண்மை என்று நம்பினார்கள் அவர்கல். அவள் ஏழு வயதில் பள்ளிக்கூடத்துக்குப் போனாள். வளர்ந்து பெரியவளாகி பன்னிரண்டு வயதை அடைந்தாள். அப்போதுதான் செங்கிடாய்க்காரனின் வரத்தில் அடங்கியிருந்த விதி அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. மிகுந்த துயரத்துக்கு அளான அவர்கள் பூலங்கொண்டாளுக்கு எந்தவித தீங்கும் வராமல் பாதுகாத்து பொத்திப் பொத்தி வளார்த்தனர்.
ஒருநாள் பூலங்கொண்டாள் தன் அண்ணன்மார்களிடம் ‘ அண்ணன்மார்களே என்னை ஒத்த பெண்கள் ராட்டு நூற்கிறார்கள். எனக்கு ராட்டை நூற்க ஆசையாய் இருக்கிறது. எனக்கு நல்ல ராட்டு வாங்கித் தாருங்கள் ‘ என்றாள். அவள் எது சொன்னாலும் தட்டாத அண்ணன்மார்களில் இருவர் ராட்டை வாங்கச் சென்றனர். ராட்டை அன்று எல்லாஇடத்திலும் கிடைக்காதாகையால் வெகுதூரம் பயணம் செய்யவேண்டியிருந்தது.
அவர்கள் பல ஊர்களைக் கடந்து பள்ளம் என்ற ஊருக்கு வரும்போது பள்ளத்தூர்காரர்கள் இருவரைச் சந்தித்தனர். பள்ளத்தூர் என்ற ஊர் கண்டியூரை அடுத்து இருந்தது. பள்ளத்தூர்காரர்கள் காளைகள் வாங்கச்சென்று கொண்டிருந்தார்கள்.காவர்களுடன் பூலங்கொண்டாளின் அண்ணன்கள் நட்பானார்கள். எங்களுடன் வாருங்கள் நாங்களும் சந்தைக்குத்தான் போகிறோம் என்று அவர்கள் அழைக்கவே இவர்கள் அவர்களுடன் சென்றார்கள்.
திங்கள்சந்தையில் சென்று அவர்கள் நல்ல ராட்டையை வாங்கினர். கொட்டைவைத்து நூற்கப் பெட்டியும் வாங்கினர். தங்கை மென்று தின்ன களிப்பாக்கும் அதை வைக்க பொன்தகடு பொதிந்த வெற்றிலைப் பெட்டியும் வாங்கினர். பள்ளத்தூராரும் தங்களுக்குத் தேவையான காளைகளை வாங்கி கயிற்றில் பூட்டினர். அவர்கள் சந்தையைவிட்டு வெளியே வந்து வேகமாக நடந்தனர்.
மாலை நேரம் அவர்கள் பள்ளத்தூருக்கு வந்தனர். பள்ளத்தூரார் பொடியன்விளைக்காரர்களைத் தங்கள் வீட்டிற்கு விருந்தினராக வருமாறு வேண்டினர். பள்ளத்தூர்க்காரர்களின் சாதிநிலையை போதுமான அளவுக்கு தெரிந்திருக்காத காரணத்தால் பொடியன்விளையார் விருந்துசெல்ல மறுத்தார்கள். விருந்துண்டு சென்றால் அது உறவுக்கு தொடக்கம் போட்டதுபோன்று ஆகிவிடும் . ஆனால் பள்ளதூரார் விடவில்லை. கட்டாயமாகத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்துண்டு தாம்பூலமும் போட வைத்தார்கள். கிளம்புகையில் பொடியன்விளைக்காரர்கள் தங்கள் குடும்ப வரலாற்றையும் வீட்டின் அடையாளத்தையும் தங்கையையும் பற்றிச் சொன்னார்கள்.
மறுநாள் காலை பொடியன்விளை அண்ணன்மார்கள் பள்ளத்தூரிலிருந்து விடை பெற்றுச் சென்றனர். தங்கள் ஊரை அடைந்தனர். தங்கையிடம் ராட்டைக் கொடுத்தனர். அவள் தோழிகளுடன் ராட்டு நூற்றாள். இப்படியே நாட்கள் கழிந்தன. பூலங்கொண்டாளுக்கு வயது 12 முடிந்தது .அவள் அழகையும் குடும்ப வளத்தையும் கேள்விப்பட்டு அவளைத் திருமணம் செய்யப் பலர் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். மாலைக்குட்டி நாடார் அழகான பெண்ணைப்பெற்ற இறுமாப்புடன் எல்லோரையும் மறுத்து வந்தார்.
ஒருநாள் பள்ளத்தூரிலிருந்து 9 பேர்கள் பழம் பாக்கு வெற்றிலை பொருட்களுடன் பொடியன்விளை மாலைக்குட்டி நாடாரின் வீட்டிற்கு வந்தனர். தாங்கள் கொண்டு வந்த பொருட்களை இறக்கி வைத்தனர். ‘ ‘ உம் மகளை மணம் பேச வந்தோம் ‘ ‘ என்றனர். மாலைக்குட்டி நாடாருக்குக் கண்கள் சிவந்தன. ‘ ‘நீங்கள் யாரடா ? என் மகளை மணம்பேச பள்ளத்தூரானுக்கு என்ன தகுதி ? ‘ ‘ என்று கேட்டார். அவரது மகன்கள் தங்கள் வீட்டுக்கு வந்து விருந்துண்டு உறவை தொடங்கிச்சென்ற விபரத்தை பள்ளத்தூர்காரர்கள் சொன்னார்கள் .
மாலைக்குட்டி நாடார் கோபத்தால் சமநிலை இழந்தார் .அவர்கள் கொண்டு வந்த பொருட்களை வெளியே வாரி எறிந்தார். வந்தவர்களைப் பழித்து இகழ்ந்து பேசினார். பள்ளத்தூரார் அவமானமடைந்து வெகுண்டு ‘ ‘இந்த பள்ளத்தூரானை என்ன நினைத்தாய் ? இன்னும் எட்டு நாட்களுக்குள் உன் மகளைச் சிறை எடுப்போம் ‘ ‘ என சபதம் செய்துவிட்டு போனார்கள்.
பள்ளத்தூாரின் சபதத்தைக் கேட்ட மாலைக்குட்டி நாடார் தன் மக்களிடம் ‘ பள்ளத்தூரார் சபதம் செய்துவிட்டனர். எட்டு நாட்கள் பூலங்கொடாளை கண்மணிபோலக் காக்கவேண்டும். ஒருவர் மாறி ஒருவர் அவள் அருகே இருக்கவேண்டும் ‘ என்றார். ஏனெனில் பள்ளத்தூர்க்காரர்கள் எதற்கும் துணிந்த வீரர்கள். அவர்களும் அப்படியே காவல் காத்தனர். நாட்கள் இரண்டு கழிந்தன. பள்ளத்தூரார் பூலங்கொண்டாளை எப்படிக் கடத்தி வருவது என சிந்தித்தனர்.
பள்ளத்தூராருக்கு கருஙகடாக்காரன் வழிபாடு உண்டு. அதனால் பெரும் பூசை செய்து கருஙங்கடாக்காரனை வரச்செய்தனர். ‘ பூலங்கொண்டாளை எப்படியாகிலும் கவர்ந்து வா உனக்கு வேண்டிய பலியும் பூசையும் தருவேன் ‘ என்றனர்.
கருங்கடாக்காரன் ஒரு பள்ளத்தூர்காரனைப்போல் உருமாறி மாயம் மூலம் பூலங்கொண்டாள் படுத்திருந்த இடத்துக்கு வந்தான். பூலங்கொண்டாளை மெல்லத் தட்டி எழுப்பி வசியப்படுத்தினான். அருகிலிருந்த அண்ணன்மார்களை மயங்கச் செய்தான். சிந்தை அழிந்த பூலங்கொண்டாள் கருங்கடாக்காரனின் பின்னே சென்றாள்.
அண்ணன்மார்களில் ஒருவன் திடாரென எழுந்தான். தங்கையைக் காணவில்லை என்று அறிந்து அலறினான். எல்லோரும் எழுந்து எரிபந்தம் ஏந்தி பூலங்கொண்டாளைத் தேடி ஊரெல்லாம் சென்றார்கள்.
கருங்கடாக்காரனுடன் பூலங்கொண்டாள் நடந்தாள். பல ஊர்களைக் கடந்து கன்னியாகுமரிக்கு வந்தனர். கன்னி பகவதியை வணங்கிவிட்டு சங்கிலித்துறையில் நீராடினர். பின் சக்கரைக் குளத்தைக் கடந்துவரும்போது சிலர் எரியும் பந்தங்களுடன் வருவதைக் கண்டனர். பூலங்கொண்டாள் சற்று நினைவு மீண்டு ‘ ‘என் அண்ணன்மார்கள் என்னைத் தேடிவருகிறார்கள். இங்கேயே நிற்போம் ‘ ‘ என்றாள். கருங்கடாக்காரன் அவளை அவசரமாய் இழுத்துக்கொண்டு ஓடினான். பூலங்கொண்டாளின் அண்ணன்களுடன் செங்கிடாக்காரனும் இருப்பதைக்கண்ட கருங்கிடாக்காரன் அஞ்சி குறுமுனி கோவில் இருந்த ஊரில் உள்ள ஞானாம்பா கிணற்றில் பூலங்கொண்டாளை மூழ்க வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
அண்ணன்மார்கள் அந்தக் கிணற்றின் அருகே வந்ததும் தங்கையின் காலடி தடத்தை அடையாளம் கண்டனர். மூத்த அண்ணன் பண்டாரம் கிணற்றில் இறங்கினான். பூலங்கொண்டாள் கிணற்றுப்படியில் தூங்கிய பாவனையில் உயிரற்றுக் கிடப்பதைக் கண்டான். மனமுடைந்து அலறியபடி அவளை அள்ளினான்.
தங்கையின் உடலைக் கிணற்றின் கரையில் கொண்டு போட்டான் அண்ணன். மாலைக்குட்டி நாடார் மகளின் உடலின்மேல் விழுந்து அழுதார். பின்னால் வந்த உறவினர்களும் செய்தி அறிந்து பதறினர். அவர்களின் அழுகுரல் ப்க்கத்து ஊரில் கேட்டது. ஊர்மக்கள் கிணற்றின் அருகே திரண்டனர். அவர்களிடம் மாலைக்குட்டி நாடார் தன் சோக வரலாற்றைக் கூறினார்.
ஆனால் குறுமுனி கோவிலின் சொந்தக்காரர் சிலர் சற்றும் மனமிரங்காமல் ‘ ‘சவத்தைக் கிணற்றில் போட்டு தீட்டாக்கியது காணாதது என்று நாடார்களும் கிணற்றைத் தொட்டுவிட்டாரே. அதிகாரிக்குப் பிராது எழுதிக் கொடுப்போம். நாளை மீதியைப் பேசிக்கொள்ளுவோம் ‘ ‘ என்று தகராறு செய்தனர்.
மாலைக்குட்டி நாடார் கண்ணீர் வடித்தார். மகளை இழந்ததுமன்றி அரசு பகையும் வந்ததே என ஏங்கினார் மாலைக்குட்டி நாடாரின் மனைவி ‘ ‘கருங்கடாக்காரனுக்கு வேறுபலி கிடைக்கவில்லையோ கோழி பலி ஆடுபலி கேட்டால் தருவோமே. மகளையா நீ எடுக்கவேண்டும் ‘ என கதறி அழுதாள். கருங்கடாக்காரனும் பூலங்கொண்டாளும் காற்றாய் நின்று இதைக் கேட்டனர். உறவினர்களும் சடலத்தைப் புதைத்தனர்.
கோவிலுக்கு உரிமையுடையவர்கள் மாலைக்குட்டி நாடாரின் வீட்டிற்குத் தேடி வந்தனர். ‘ ‘பூலங்கொண்டாள் விழுந்து இறந்த கிணறு தீட்டுப்பட்டுவிட்டது. அதற்குப் புண்ணியானம் தெளிக்கவேண்டும். பணம் வேண்டும் ‘ எனக் கேட்டு மிரட்டினார்கள். மாலைக்குட்டி நாடார் அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்தார். அவர்கள் மேலும் ‘ கிணற்றைத் தூர் வாங்கவேண்டும் துலா நடவேண்டும் ‘ என்றனர். பூலங்கொண்டாளின் தாய் ‘ என் தோப்பில் உள்ள பனையை முறித்துத் துலா போடுங்கள் ‘ என்றாள். அவர்கள் ஏராளாமான பணத்தைப்பெற்றுக் கொண்டு சென்றார்கள்
ளப்பணத்தைக் கொண்டு கிணற்றின் கரையில் துலாவை நட்டனர். அதையெல்லாம் ஆவியாக மாறி கருங்கடக்காரன் கூட நின்ற பூலங்கொண்டாள் கண்டாள். அவர்கள் தண்ணீர் இறைக்க ஆரம்பித்தபோது கருங்கடாக்காரன் அவர்களை கிணற்றில் தள்ளி ஐந்துபேரைக் கொன்றான். மற்றவர்கள் தப்பி ஓடினர்.
பூலங்கொண்டாள் அங்குள்ள பாப்பாரப் பெண்களைப் பிடித்து ஆட்டினாள். வேளாளத் தெருவில் அட்டாசம் பண்ணினாள். அவர்கள் பூலங்கொண்டாளுக்கு நிகழ்ந்த நீதியை அறிந்து கொண்டார்கள். அதற்காக மனம் வருந்தி பிராயச்சித்தமாக பூலங்கொண்டாளுக்கு அறம் வளர்த்தஅம்மை எனப் பெயரிட்டு கோவில் எடுத்தனர். பூலங்கொண்டாள் தெய்வமாகி அவர்களுக்கு அருள் புரிய ஆரம்பித்தார்.
***
from jeyamoohannn@rediffmail.com
- குறுந்திரைப்பட விழா
- கடிதம்
- தமிழ் இலக்கியத்தில் மொழிபெயர்ப்பின் இடம் – கருத்தரங்க அழைப்பிதழ்
- கடிதம்
- கடிதம்
- அன்புள்ள திரு.வாசனுக்கு,
- APPEAL – FUND RAISING FOR THE LEGAL BATTLE IN THE SATI CASES
- யார் இந்த தாரிக் அலி ?
- மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை
- கடிதம் -07-12-2004
- யானையப் பற்றிய ஆய்வுக்கட்டுரையும் அதன் எதிர் வினைகளும்!
- ஒரு கனவு துகிலுரிகின்றது
- முகவரி
- பயணம்
- மொழி
- தீர்க்கமும் தரிசனமும்
- ஓட்டம்!
- அன்புடன் இதயம் – 27 – திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள்
- சுட்டெரிக்கும் மனசாட்சி
- அன்புடன் தாய்க்கு
- முன்னேற்றம்
- பெரியபுராணம் – 4
- சிங்காரச் சிங்கை
- வா வா வா…!!!
- ஆட்டோகிராஃப் – 13- மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
- தமிழில் பாப்லோ நெருதா: சில குறிப்பகள்.
- பேரிடர் விழிப்புணர்வுக் கல்வி
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 1
- புதுச்சேரி (புதுவை, பாண்டிச்சேரி) நினைவுகள்
- ஜமாத்தின் அதிகாரம் என்ன ? ஜமாத் தேவைதானா ?
- பொடாவுக்கு ஒரு தடா!
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 32
- றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)
- சொர்க்கத்தில் கல்யாணம்
- கணேஸ்மாமா
- எலிசெபத் ஏன் அழுதாள்
- நீ சொல்லு
- வேடத்தைக் கிழிப்போம்-6 (தொடர் கவிதை)
- உயிர்க்கொல்லி
- திருக்குறள் ஒரு மறை நூலா ?
- மெய்மையின் மயக்கம்-12 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)
- தந்தை இல்லா தலைமுறைகள்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – 6
- அடக்கம்
- ஆற்றுவெள்ளம் ஆசையானால்
- நினைவார்ச்சனை – கவிக்கட்டு 19
- நேர்த்திக்கடன்
- குருவிகள்
- காம்பின் எடையால் பூவின் இடை ஒடியும்!
- மாற மறுக்கும் மனசு