ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 9

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

பி.கே.சிவகுமார்


கறை படிந்தவர்கள் அமைச்சர்கள் ஆகலாமா ?

கறை படிந்த அமைச்சர்களை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று கூறி பா.ஜ.க.வும் கூட்டணி கட்சிகளும் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்த செய்திகள் கடந்த வாரங்களில் வெளிவந்தன. ஊழல் மற்றும் கிரிமினல் குற்றங்களில் தொடர்புடையதாகக் கருதப்பட்டு நீதிமன்றங்களில் தம் பேரில் வழக்குகள் நிலுவையில் உள்ள அமைச்சர்களைக் கறை படிந்த அமைச்சர்கள் என்று பொதுவாக வரையறுக்கலாம். எந்தக் கட்சிக்கும் இன்னொரு கட்சியை இவ்விஷயத்தில் குறை சொல்கிற அருகதை இல்லை. பொதுவாகப் பார்க்கும்போது இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சிகளில் பொதுவாழ்வில் நேர்மையானவர்கள் அதிகமாகவும், பிற கட்சிகளில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவிலும் இருக்கிறார்கள். பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த பலர் மீது இப்படி வழக்குகள் நிலுவையில் இருந்த போதும் அவ்வழக்குகளில் தொடர்புடையவர்கள் அரசாங்க பதவி வகித்தவர்கள்தான் என்பது ஊரறிந்த ரகசியம். முக்கியமாக, பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய அத்வானி போன்றவர்களும், குஜராத் கலவரங்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்தி அதன் முடிவுகள் வரும்வரை, அக்கலவரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறிய, மைனாரிட்டிகளுக்கெதிரான கலவரங்களை அடக்காமல் வேடிக்கை பார்த்த என்று குற்றம் சாட்டப்படும் நரேந்திர மோடியும் பதவி வகிக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்கிற அறச்சீற்றம் பா.ஜ.க.வுக்கு வராமல் போனது நாம் பார்த்த விஷயமே. அப்போது வாஜ்பாயிலிருந்து பா.ஜ.க.வின் எல்லாப் பரிவாரங்களும் அத்வானி, மோடிக்கு எதிராக எதுவும் பேசவில்லை. எனவே, இப்போது பா.ஜ.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் இப்படிக் கூக்குரலிடுவது நல்ல தமாஷாக இருக்கிறது. அதேபோல, காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் அப்போது கூச்சலிட்டுவிட்டு இப்போது அதே காரியத்தைச் செய்திருக்கின்றன.

புதிய அரசாங்கம் பதவியேற்றவுடனே அதை எதிர்ப்பதற்குக் கிடைத்த ஆயுதமாகவே இப்பிரச்னையை பா.ஜ.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் பயன்படுத்துகின்றன என்பது வெளிப்படை. அந்தக் காலத்தில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றவுடன், அதற்கு கொஞ்ச காலம் கொடுத்தபின்னர், அதன் குறைகளை விமர்சிக்கிற முதிர்ச்சி அந்தக் கால அரசியல் தலைவர்களுக்கு இருந்தது. அதை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருந்து ஜெண்டில்மேன் என்று அனைவராலும் பாராட்டப்பட்டு ஆனால் தன் சொந்தக் கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தெரியாத முன்னாள் பிரதமர் திருமிகு.வாஜ்பாய் போன்றவர்கள் தங்கள் கட்சிக்கு எடுத்துச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும், கறை படிந்தவர்கள் அமைச்சர் பதவிகளை வகிக்கலாமா என்கிற கேள்வி பொதுமக்கள் எழுப்பக்கூடிய தார்மீகக் கேள்வியே.

இந்தப் பிரச்னையை எப்படி அணுகலாம் ? தார்மீக ரீதியாக ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் அவ்வழக்குகள் தீர்ப்பாகும்வரை அரசாங்க பதவி வகிக்கக் கூடாது என்று சொல்வது நிஜத்துக்கு உதவாது. எல்லாக் கட்சிகளும் இந்தத் தார்மீகத்தை அடுத்த கட்சி பின்பற்ற வேண்டும் என்று போராடும். தனக்கென்று வரும்போது வாயடைத்த ஊமையாகி, தான் விரும்பியதைச் செய்யும். அரசியல் கட்சிகளைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. பொதுமக்களில் கணிசமானோர் மனப்பான்மையே அப்படித்தான் இருக்கிறது. எனவே, தார்மீக ரீதியாகவோ விழுமியங்கள் வழியாகவோ இதை அடுத்தவர் செய்ய வேண்டும் என்று போராடுவது சரியாக இருக்காது.

ஆனால், ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் அவ்வழக்குகள் தீர்ப்பாகித் தாங்கள் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும்வரை அரசாங்கப் பதவிகளை வகிக்கக் கூடாது என்ற சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்தலாம். அப்படி ஒரு சட்டம் இல்லையென்றால் கொண்டு வரலாம். இதில் பிரச்னை என்னவென்றால், முதலில் இப்படிப்பட்டவர்களைத் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க வகை செய்ய வேண்டும். இப்போது நடப்பது என்னவென்றால், இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு வசதியான தொகுதிகளில் போட்டியிட்டு வென்று விடுகிறார்கள். அவர்கள் வென்ற பின்னே, அவர்கள் மந்திரியாகக் கூடாது என்று சொல்வது ஹிப்போகிரஸி. அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதே தடை செய்யப்பட வேண்டும். எனவே, எவர் தேர்தலில் நிற்கலாம் என்கிற விதிகள் கடுமையாக்கப்பட்டு அங்கேயே ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் தடுக்கப்பட்டால் இந்தப் பிரச்சினையை சரி செய்ய முடியும் என்று தோன்றுகிறது.

இப்படிப்பட்ட சட்டம் கொண்டு வரப்பட்டால், பழிவாங்கும் நடவடிக்கையாகவும், எதிர்கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்கிற நினைப்புடனும் ஆளும் கட்சி பிடிக்காதவர்கள் மீது ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளைத் தொடர்ந்து அவர்களைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுத்துவிட்டால் என்ன செய்வது என்பது நல்ல கேள்வி. ஆனால், சட்ட வல்லுனர்கள் இந்த மாதிரியான ஓட்டைகள் இப்படிப்பட்ட சட்டத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும், அப்படி யாரும் பாதிக்கப்படுவதாக நினைக்கப்பட்டால் விரைவில் நிவாரணம் காண வழி செய்யும் வகையிலும் பார்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, முதல் தகவல் அறிக்கை ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். பின்னர், ஒரு மாதத்துக்குள் நீதிமன்றம் அவ்வழக்கில் முகாந்திரம் இருக்கிறது இல்லை என்று சொல்ல வேண்டும். வழக்கில் தொடர்புடையவர் தேர்தலில் நின்றால் அவ்வழக்கின் விவரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட வேண்டும். தேர்தல் ஆணையமும் விவரங்களையும் ஆவணங்களையும் ஆராய்ந்து தொடர்புடையவர் குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லலாம். நான் சட்ட நிபுணன் இல்லை. ஆனால், எம்.பி.யும் எம்.எல்.ஏ.வும் ஆனபின்னே ஒருவரை நீ மந்திரியாகக் கூடாது என்று சொல்வதை விட, நீ எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தேர்தலிலேயே நிற்க முடியாது என்று சொல்வது சரியான வழி என்று நம்புகிறேன். மேலும் தேர்தல் ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு. அது இவ்விஷயத்தில் எழுகிற கேள்விகளையும் பிரச்னைகளையும் ஓரளவுக்கு (தன்னாட்சியுடன் இயங்குகிற அமைப்பைக் கூட ஓரளவுக்கு என்ற அடைமொழியுடனேயே எழுத வேண்டியிருக்கிற துரதிர்ஷ்டத்துக்கு மன்னிக்கவும்) நேர்மையுடன் அணுகித் தீர்ப்பளிக்கும் என்று நம்பலாம்.

இந்த விஷயத்தில் எழுகிற இன்னொரு கேள்வி. ஒருவர் எம்.பி அல்லது எம்.எல்.ஏ ஆனபின்னர் அல்லது அமைச்சராக இருக்கும்போது இத்தகைய புகார்களில் சிக்கிக் கொண்டால் என்ன செய்யலாம் என்பது. அந்த நேரங்களில் அத்தகைய புகார்களை ஆராய்ந்து அவர்கள் பதவியில் நீடிக்கலாமா வேண்டாமா என்று சொல்கிற அதிகாரம் எம்.பி. என்றால் குடியரசுத் தலைவரிடமும் எம்.எல்.ஏ./எம்.எல்.சி என்றால் மாநில ஆளுநரிடமும் இருக்க வேண்டும். மாநில ஆளுநர்கள் கட்சிகளின் ஏஜண்டுகளாகச் செயல்படுகிறார்கள் என்று குற்றம் சொல்லி ஆளுநர் அளிக்கிற தீர்ப்பில் நம்பிக்கை இல்லையென்று யாரேனும் நினைத்தால் குடியரசுத் தலைவரிடம் மேல்முறையீடு செய்கிற வழிமுறை இருக்க வேண்டும். ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையின் மீதான பதிலை கிடப்பிலே போட்டு வைத்திருந்த ஆளுநர்(கள்) மாதிரி இல்லாமல், இந்த மாதிரியான பிரச்னைகளில் குடியரசுத் தலைவரும் ஆளுநரும் ஒரு மாதத்துக்குள் தங்கள் முடிவைத் தெரிவிக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் கொண்டு வரலாம்.

இவ்விஷயத்தில் சரியான சட்டமும் நடைமுறையும் கொண்டுவர ஆழ்ந்த விவாதம் தேவை. அதன் பொருட்டே என் கருத்துகளைச் சொல்லியுள்ளேன். இவற்றை ஒட்டியும், வெட்டியும், மேற்கொண்டு பதப்படுத்தியும் தொடர்ந்து உரையாடல்கள் நடைபெறுமானால் கறை படிந்தவர்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளைச் செயல்படுத்திப் பார்க்க இயலலாம்.

**** **** ****

ரொனால்டு ரீகனும் அவர் ஆக்சிஜன் கொடுத்த குடியரசு கட்சியும்

வாட்டர் கேட் ஊழல் காரணமாக நிக்சன் அமெரிக்க ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தபோது அமெரிக்காவில் குடியரசு கட்சியை ஆதரிப்பவர்கள் 20 சதவீதமாகக் குறைந்து போனது. குடியரசு கட்சி பிழைத்து எழுந்து வருமா என்ற நிலை இருந்தது. நிக்சனுக்குப் பதில் வந்த போர்டும் நிக்சனுக்கு ஜனாதிபதியின் மன்னிப்பை வழங்கி பொதுமக்களின் எரிச்சலையும் கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டார். ஜிம்மி கார்ட்டர் போர்டை சுலபமாகத் தோற்கடித்து ஜனாதிபதியாக அது உதவியது. ஜனநாயகக் கட்சியின் குறையாக எனக்குக் கடந்த காலங்களில் தெரிந்து வருவது, அது தனக்குச் சாதகமான சூழ்நிலைகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை என்பதே. உதாரணமாக, மரணப் படுக்கையில் இருந்த குடியரசு கட்சியை மீண்டும் எழவிடாமல் பார்த்து கொண்டிருந்தாலே போதும். வேறு ஒன்று விசேடமாக செய்ய வேண்டியதில்லை. ஆனால், ஈரான் பிணைக் கைதிகள் விவகாரத்தில் ஜிம்மி கார்ட்டர் தன் பெயரோடு தன் கட்சியின் பெயரையும் கெடுத்துக் கொண்டார். ‘கடந்த நான்கு வருடங்களில் உங்கள் வாழ்க்கை மேம்பட்டதா ? ‘ என்பது போன்ற கவர்ச்சிகரமான எளிய கோஷங்களுடன் ரீகன் 1980ல் அமெரிக்க ஜனாதிபதியானார்.

ரீகனின் கடந்த கால வரலாறை அறிந்தவர்கள் அவர் எளிமையான ஆனால் கவர்ச்சிகரமான கோஷங்கள் மூலம் மக்களை கவர்பவர் என்று உணர்வார்கள். அவரை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவார்கள். அந்த ஒப்பீடு ஓரளவுக்குச் சரியானது என்றே தோன்றுகிறது. தனக்குப் பிடிக்காதவர்களைக் கூட கவர்கிற தனிமனித குணங்களும் அம்சங்களும் நிறைந்த இனிமையானவர்களாக எம்.ஜி.ஆரும் ரீகனும் இருந்தார்கள் என்று சொல்லலாம். எம்.ஜி.ஆரைப் போலவே எளிமையான குடும்பத்தில் பிறந்து உயர்ந்தவர் ரீகன். ரீகனின் தந்தை காலணிகள் விற்கிற தொழிலில் ஈடுபட்டிருந்தவர். குடித்தே இறந்து போனவர். கருக்கலைப்பை எதிர்க்கிற கட்சியைச் சார்ந்தவரயினும் அந்த எதிர்ப்பை உதட்டளவில் சொல்பவராக மட்டுமே ரீகன் இருந்தார் என்கிறார்கள். அப்படியே, சர்ச், வழிபாடு ஆகிய விஷயங்களில் அவர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வாரம்தோறும் சர்ச்சுக்குச் செல்பவர் அல்லர் என்றும் சொல்கிறார்கள். இவை குடியரசு கட்சியில் சிலருக்கு மிதவாதமாகத் தோன்றினாலும், பல முக்கிய பிரச்னைகளில் ரீகன் பழமைவாதியாகவே (Conservative) இருந்தார் என்பது நிஜம். தொடக்கத்தில் ஜனநாயகக் கட்சியில் அவர் இருந்தது அவருடைய மிதவாதப் போக்கிற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் 1962ல் அவர் குடியரசு கட்சிக்கு மாறியவுடன் அதன் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்பவராக ஆகிப் போனார். தொழிற்சங்கவாதியாக ஆரம்பத்தில் இருந்தபோதும், தொழிற்சங்க வாதிகள் மீது – அவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்கக் கூடும் என்பதால் – அவர் கொண்ட வெறுப்பினால் அவர் குடியரசு கட்சிக்குச் சென்றார். கடைசிவரை கம்யூனிஸ்டுகள் மீதும் தொழிற்சங்கங்கள் மீதும் அவருக்கு இருந்த வெறுப்பை சோவியத் யூனியனை Evil Empire என்று அவர் அழைத்ததிலிருந்து அறிந்து கொள்ளலாம். மேலும் ஹாலிவுட்டில் படங்கள் இல்லாமல் இருந்தபோது அவருக்கு வாழ்க்கை கொடுத்தது ஜெனரல் எலக்ட்ரிக் தியேட்டர். ஜெனரல் எலக்ட்ரிக் என்னும் நிறுவனத்துடன் அவர் கொண்ட இந்த உறவு அவரை முதலாளித்துவ பாதைக்குத் திருப்பியது எனலாம். பின்னர் அவர் குடியரசு கட்சியில் சேர்ந்தது இயல்பான நிகழ்வாகி விட்டது.

திரைப்படத்துறை சார்ந்த தொழிலாளர் சங்கங்களில் கம்யூனிஸ்ட்டுகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் பற்றி எப்.பி.ஐ.க்கு தகவர் சொல்கிற இன்பார்மர் வேலை செய்தவர் ரீகன். கலிபோர்னியாவின் ஆளுநர் பதவிக்குப் போட்டியிட்டபோது, கலிபோர்னியாவின் புகழ்பெற்ற பெர்க்லி பல்கலைக் கழகத்தின் ப்ரீ ஸ்பீச் மூவ்மெண்டை எதிர்த்து அங்கிருக்கிற அசுத்தத்தைச் சுத்தம் செய்யப் போவதாக அறிவித்தவர் ரீகன். கலிபோர்னியாவின் கவர்னராக இருந்தபோது பெர்க்லி பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் எதிர்ப்பை நேஷனல் கார்ட்ஸ் என்று சொல்லப்படுகிற துணைநிலை ராணுவம் கொண்டு அடக்கிய புகழ் பெற்றவர்.

குடியரசு கட்சிக்கு புத்துயிர் அளித்தவர் ரீகனே. முக்கியமாக, அவர் காலத்தில்தான் ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகள் நுழைந்தன. அதற்கெதிராக ஆப்கன் கொரில்லாப் படைகளுக்கு அமெரிக்கா உதவி செய்ய ஆரம்பித்தது இவர் காலத்தில்தான். இப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷை உலக கருத்துகளுக்கெதிராக தன்னிச்சையாக போர் தொடுக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், ரொனால்டு ரீகன் காலத்தில் அமெரிக்கப் பிணை கைதிகளை விடுவிக்கிறேன் என்று அமெரிக்க காங்கிரஸூக்குக் கூட தெரியாமல் ஈரான் மூலமாக நிகராகுவா வலதுசாரி கொரில்லாக்களுக்குப் நிதியுதவி செய்த ஈரான்-கான்ட்ரா விஷயம் நடைபெற்றது. எனவே, ஜார்ஜ் புஷ்ஷாவது தன் நாட்டு மக்களுக்குச் சொல்லிவிட்டு ஈராக் மேல் படையெடுத்தார். ஆனால் ரீகன் தன் நாட்டு காங்கிரஸூக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் செயல்படுகிற துணிச்சல் மிக்கவர்களைத் தன்னருகில் வைத்திருந்தார். அவ்விஷயம் வெளியில் வந்தபோது இது தனக்குத் தெரியவே தெரியாது என்று ரீகன் சொல்லிவிட, மற்றவர்கள் பலிகடாக்களாக்கப் பட்டார்கள். இப்போது சில நாள்களுக்கு முன்னர் சி.ஐ.ஏ. டைரக்டர் ஜார்ஜ் டெனட் ராஜினாமா செய்தது போல. ஹாரி ட்ரூமேன் சொல்லியது எனப்படும் புகழ்பெற்ற வசனம் ஒன்றுண்டு. அது – The buck stops here. அதன் பொருள் ஜனாதிபதி தன் அரசாங்கத்தின் செயல்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறார் என்பது. ஆனால், ரீகன் ஈரான் – கான்ட்ரா பிரச்னையில் தாமதமாக சில தவறுகள் நிகழ்ந்துள்ளன என்று ஒத்துக் கொண்ட போதும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. அதேபோல இப்போது ஈராக் மீதான போர், ஈராக் சிறைச்சாலைகளில் கைதிகள் நடத்தப்பட்ட விதம் குறித்து ஜார்ஜ் புஷ் பேசி வருகிறார். ரீகன் காலத்திலாவது அவர் கேபினட்டில் சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அமைச்சர்கள் பதவி விலகினர். இங்கே ஜார்ஜ் புஷ் ரம்ஸ்பீல்டுக்கு சான்றிதழ் மேல் சான்றிதழ் வழங்கி வருகிறார். மேலும் ராணுவத்துக்குச் செலவிடுகிற தொகையையும் ராணுவ பலத்தையும் அதிகப்படுத்த பெருமளவு நிதி ஒதுக்கியவர் ரீகன். அதே முறையைத்தான் குடியரசு கட்சியினரிடம் அவருக்கு அப்புறம் தொடர்ந்து பார்க்கிறோம். இப்படி இன்னும் நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும். ரீகனைப் பற்றிப் பேச வந்து இப்போதைய ஜனாதிபதியுடன் ஒப்பிட நேர்ந்ததற்குக் காரணம், ரீகன் ஆரம்பித்து விட்டுச் சென்றதை குடியரசு கட்சியினர் தவறாது பின்பற்றி வருவதாலேயே ரீகன் அவர்களுக்கு ஒரு ஐகான் ஆகிவிட்டார் என்று சொல்வதற்காகவே.

ரீகன் ஆரம்பித்து வைத்த ஸ்டார் வார்ஸ் என்கிற தற்காப்புப் போர் திட்டமும், அவர் காலத்தில் சோவியத் யூனியன் சிதறுண்டு போனதும் ரீகனின் மகத்தான வெற்றிகளாக குடியரசு கட்சியினராலும், அரசியல் தெளிவு இல்லாத அமெரிக்க பொதுஜனத்தாலும் கருதப்படுகிறது. ஈரான் – கான்ட்ரா பிரச்னைக்கு ஒரு வருடத்துக்குப் பிறகு, ரீகன் பதவி முடிந்தபோது அவருக்கான ஆதரவு 63 சதவீதமாக இருந்தது மக்கள் அரசியலில் எதையும் சுலபமாக எடுத்துக் கொள்பவர்கள் அல்லது சீக்கிரம் மறந்து போகிறவர்கள் என்பதற்கு உதாரணம். எனவே, ரீகனின் அமெரிக்க லெகஸி என்று நான் படித்த வரையில் ஒன்றும் தெரியவில்லை. குடியரசு கட்சிக்கு ரீகன் புத்துயிர் கொடுத்த லெகஸியாகவே அது எனக்குத் தெரிகிறது. இப்போதைய ஜனாதிபதியும் குடியரசு கட்சியும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடக்கும் இவ்வருடத்தில் ரீகன் புகழ் பாடி அவருக்கு அரசாங்க இறுதி மரியாதை செய்ததன் பின்னே, ரீகன் வழியிலேயே குடியரசு கட்சி மேலும் தொடர்ந்து செயல்படும் என்கிற அறிவிப்பு இருக்கிறது.

பி.கு.: இக்கட்டுரையின் சில புள்ளி விவரங்கள், தகவல்கள் டைம், என்பிஆர், தி நேஷன் போன்ற இணைய தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இக்கட்டுரை ரீகனைப் பற்றிய முழுமையான விமர்சனமும் அல்ல. அவரின் சில செயல்பாடுகள், சில கொள்கைகள் பற்றிய என் பார்வையே. நான் வரலாற்றாசிரியன் அல்ல. எனவே, நான் படித்தவற்றின் அடிப்படையிலேயே இக்கட்டுரை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ரீகன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், நான் அமெரிக்காவில் வசிக்கவில்லை என்றும் சொல்லிக் கொள்கிறேன்.

**** **** ****

திண்ணை களஞ்சியம்

படித்து முடித்துவிட்டு வெளியூர்களில் பணிபுரிந்த காலங்களில் வாடகை வீட்டில் குடியிருந்திருக்கிறேன். மாநகரங்களில் வாடகை வீட்டுக்காரனாக இருப்பதற்கு அசாத்திய பொறுமை வேண்டும். வீட்டு சொந்தக்காரர் கீழ் போர்ஷனில் இருக்க நீங்கள் மாடியில் குடித்தனம் இருக்கிறீர்கள் என்றால் பொறுமையுடன் நிறைய பெருந்தன்மையும் வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் வந்து கேட்டைத் திறக்கக் கூடாது என்பது உட்பட நிறைய நிபந்தனைகள் இருக்கும். சென்னை போன்ற நகரங்களில் தண்ணீர் பிரச்னை சொல்லி மாளாது. வீட்டில் கிணறு இருந்தாலும், கிணற்றில் தண்ணீர் வந்தாலும், வீட்டுக்காரர் மோட்டர் போட மாட்டார். நாளுக்கொரு முறை காலையில் அரைமணி நேரம் பாத்ரூம் குழாய்களில் தண்ணீர் வரும். அப்போது குடங்கள் முதல் கிண்ணங்கள் வரை பிடித்து வைத்துக் கொண்டு பின்னர் நாளெல்லாம் அதை யோசித்து யோசித்து செலவு செய்ய வேண்டியிருக்கும். வீட்டுக்காரர் சில விஷயங்களில் மேம்போக்காகவும் நாகரிகமாகவும் நடந்து கொள்ளக் கூடும். அவர் மனைவி எல்லாவற்றிலும் கணக்காகவும், குற்றம் கண்டுபிடிப்பவராகவும் இருப்பது சகஜம். குடித்தனக்காரர்களுக்கு நிறைய இடம் கொடுத்துவிடக் கூடாது என்கிற உளவியல் அது. காலையில் நன்றாகப் பேசுகிற வீட்டுக்காரர் அவர் மனைவி நாள்பொழுதில் அவரிடம் ஏதோ சொல்லிவைக்க மாலையில் முகம் கொடுத்துப் பேச மாட்டார். அல்லது, உங்கள் இரண்டு சக்கர வாகனத்திலிருந்து ஆயில் இரண்டு சொட்டுகள் ஒழுகி வீட்டின் முன்புறத் தரையைப் பாழ்படுத்திவிட்டது என்று குற்றம் கண்டுபிடிப்பார். அவர் வைத்திருக்கிற பழைய காலத்து வண்டியிலிருந்து தினமும் ஆயில் ஒழுகுவது பற்றி அவருக்குக் கவலை இருக்காது. அந்த மாதிரி சமயங்களைப் புன்சிரிப்புடனும், உன்னை நான் புரிந்து கொள்கிறேன் என்பது மாதிரியான் பெருந்தன்மையுடனும் சமாளிக்கக் கற்றுக் கொண்டேன். ஆயில் ஒழுகியது தெரியாமல் சுத்தம் செய்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டுச் செய்து விடுவேன்.

கல்யாணமான புதிதில் இப்படிப்பட்ட ஒரு குடித்தனக்காரனாக சென்னையில் நான் வசித்திருக்கிறேன். ஒரு வருடம் முடிந்ததும் வாடகையில் 50 சதவீதம் ஏற்றி விட்டார். என்ன காரணமென்றால், மார்க்கெட்டிற்கு ஏற்ப என்று சொன்னார். உயர்த்தப்பட்ட வாடகை கொடுத்தும் ஒன்றும் மேம்படவில்லை. எனவே, அதற்கப்புறம் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு அபார்ட்மென்டைத் தேடிப் பிடித்துக் கொண்டு காலி செய்துவிட்டேன். ஆனாலும், அந்த ஒன்றரை வருடங்கள் அந்த வீடு எங்களூக்கு வீடாகவே இருந்தது. வீட்டின் பின்புறம் விசாலமான மொட்டை மாடி. மொட்டை மாடிக்குப் பின்னர் மரங்கள். இரவுகளில் உட்கார்ந்து பேசவும், வானம் பார்க்கவும் என்று அந்த மொட்டை மாடியும் அதன் பின்னர் இருந்த மரங்கள் தருகிற காற்றும் அம்மரங்களின் அணில்களும் என்று அந்த வீடு மிகவும் பிடித்துப் போனது. ஆனாலும், சென்ற முறை இந்தியா சென்றிருந்தபோது தூரத்திலிருந்து அந்த வீட்டைப் பார்த்துவிட்டு வந்தேன். வீட்டுக்காரர் கொடுத்த பிரச்னைகள் கொணர்ந்த காயங்கள் ஆறிப்போய் அந்த வீடு எனக்குள் நல்ல நினைவுகளையே மீட்டித் தந்தது.

அப்படி ஒவ்வொரு குடித்தனக்காரருக்கும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளும், அவ்வீடும் அதன் சுற்றமும் அவர்களுக்குக் கொடுத்த சந்தோஷமான நினைவுகளும் பந்தமும் இருக்கும். இந்தப் பக்கத்தில் உள்ள பாவண்ணனின் ‘வாடகை வீட்டில் வளர்த்த மரம் ‘ என்கிற கவிதை அப்பிரச்னைகளையும் அவற்றை மீறிய பந்தத்தையும் சொல்வதால் எவருடனும் உடனடியாக ஒன்றிவிடக் கூடியது.

விட்டுச் சென்றதும் குடிவைத்துக் கொள்ள

ஆள் கிடைத்த மகிழ்ச்சியில்

நாள்கடந்து போவதை ஞாபகமுட்டுகிறீர்கள்

அன்புக்குரிய உரிமையாளரே

பெட்டிகள் படுக்கை மின்விசிறி

தொலைக்காட்சி அடுப்பு எரிவாயு

முட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம்

வாடகை வண்டி வந்ததும்

ஏற்றிக் கொண்டு கிளம்புகிறோம்

கொண்டுசெல்ல முடியாத சொத்தாக

பின்புறத்தில் நிற்கிறது ஒருமரம்

எங்களை நினைவூட்டினாலும்

எங்களைப் போலிருக்காது அது

குழாயில் தண்ணீரை ஏன் நிறுத்தினீர்கள்

என்று ஒருபோதும் கேட்காது

மின்சார நேரத்தைக் கூட்டச்சொல்லி

முற்றத்தை மறித்துக் குழையாது

மழை புயல் கஷடங்களை முன்வைத்து

பழுது பார்க்கவும் வேண்டாது

நேருக்குநேர் பார்த்தாலும்

எவ்வித சங்கடமும் தராது

வருத்தமோ கசப்போ எங்களோடு போகட்டும்

மரத்துக்காவது கருணை காட்டுங்கள்

– பாவண்ணன்

**** **** ****

http://pksivakumar.blogspot.com

Series Navigation

author

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

Similar Posts