ஞாநி
ஒரு மனிதர்.. .. ..
பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வி.பி.சிங்கை சந்தித்தேன். கலைஞரின் முத்து விழாவில் பேசுவதற்காக சென்னை வந்திருந்தார்.
1987ல் அவர் ஜன் மோர்ச்சா தொடங்கியதிலிருந்து தேசிய முன்னணி உருவாகி அவர் 1989ல் பிரதமர் ஆகும்வரை தமிழகத்தில் அவருடைய பொதுக் கூட்டங்களில் பெரும்பாலும் நான்தான் அவருடைய பேச்சை மொழிபெயர்த்து வந்தேன். இதற்குக் காரணமாயிருந்த நண்பர் அரசியல் பிரமுகர் ஜெகவீரபாண்டியனுடன் சென்ற வாரம் தாஜ் கொரமேண்டல் ஓட்டலில் தங்கியிருந்த வி.பி.சிங்கை சந்தித்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் நான் சென்ற தேர்தல் பிரச்சாரப் பயணத்தையும் என்னையும் நன்றாக நினைவு வைத்திருந்தார்.
சுமார் எட்டாண்டுகளக வாரம் மும்முறை சிறு நீரக சுத்திகரிப்பு சிகிச்சையில் ( டயாலிசிஸ்) உயிர் வாழ்ந்து வருகிறார் வி.பி.சிங். டெல்லி குடிசைவாசிகள் உரிமை போன்ற பிரச்சினைகளில் குரல் கொடுப்பது, அயோத்தியில் வேறு இடத்தில் ராமர் கோவிலும் மசூதியும் கட்ட ஏற்பாடு செய்வது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அவர் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அணியை ஆதரித்தார்.
பி.ஜே.பி ஆட்சி முடிந்ததில் பெரு மகிழ்ச்சியுடன் இருந்தார். மண்டல் கமிஷனை செயல்படுத்தியதற்காக அவர் ஆட்சியை 1990ல் பி.ஜே.பி கவிழ்த்தது. நானறிந்து ஃபெடரலிசத்தில் மெய்யான அக்கறை காட்டிய இந்திக்காரப் பிரதமர் அவர் ஒருவர்தான்.
தேர்தலினால் இரு மாதங்களாக ஓவியம் தீட்ட முடியவில்லை என்றார். விரைவில் சென்னையிலும் அவருடைய ஓவியக் கண்காட்சியை நடத்த விருப்பம் தெரிவித்தார்.
வி.பி.சிங்கை சந்திக்க வந்திருந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஒரு நிகழ்ச்சிக்காக அவரிடம் தேதி வாங்கினார். ஆகஸ்ட் 12. திருச்சியில் ஒரு நூல் வெளியீட்டு விழா. வி.பி.சிங்கின் ஹிந்திக் கவிதைகளின் தமிழாக்கம் வெளியாகிறது. மொழிபெயர்த்திருப்பவர் தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதத்தின் வாரிசு கண்ணன். நானும் 1990ல் ஜுனியர் விகடனுக்காக அவருடைய ஓரிரு கவிதைகளை ஆங்கில வழியாக மொழிபெயர்த்திருக்கிறேன். கண்ணன் ஹிந்தியிலிருந்து நேரடியாக செய்திருக்கிறார்.
தமிழறிஞர்களின் குடும்பங்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என்று பல மொழி அறிவு பெற்றுத் திகழ்வதும், தாமாக விரும்பி எவரும் எந்த மொழியையும் கற்கும் உரிமையும் வாய்ப்பும் இருப்பதும் வரவேற்கத்தக்கது. எனக்கும் மலையாளம் கற்கவேண்டுமென்று நீண்ட காலமாக நிறைவேறாத ஆசை.
—-
ஒரு சிற்பம்.. ..
இன்னொரு நிறைவேறாத ஆசை சிற்பம் செய்வது. குறிப்பாக சுடுமண் சிற்பங்கள்.
ஐரோப்பாவிலும் பழைய சோவியத் யூனியனிலும் பொது இடங்களில், தெரு சந்திப்புக்களில் வைத்திருக்கும் விதவிதமான சிற்பங்களைப் படங்களில் காணும்போதேல்லாம் சென்னையிலும் இப்படி நல்ல சிற்பங்கள் வைக்கலாகாதா என்று ஏக்கமாக இருக்கும். சென்னையில் எனக்குப் பிடித்த சிற்பங்கள் மிகச் சில. ராய் சவுத்ரியின் உழைப்பாளர் சிலை. குதிரை வீரன் மன்றோ சிலை. அண்ணா மேம்பாலம் கீழே குட்டியாக உட்கார்ந்து புத்தகம் படிக்கும் அண்ணா சிலை. லலித் கலா அகாதமி வளாகத்தில் முன்பிருந்த பெண் முண்டம் சிலை ( female torso). சோழமண்டலம் ஓவிய கிராமத்தில் நந்தனின் சுடுமண் சிற்பங்கள்.
அண்மையில் ஒரு பழம் சிற்பத்தை புனரமைத்த செய்தி கவனத்தைக் கவர்ந்தது. உலகப்புகழ் பெற்ற சிற்பி மைக்கெல் ஏஞ்சலோ பளிங்குக் கல்லில் வடித்த டேவிட் என்ற சிற்பத்துக்கு இந்த செப்டம்பரில் 500 வயதாகிறது. இது சுமார் 350 வருடங்கள் திறந்த வெளியில் பொது இடத்தில் இருந்தது, பிறகு ஒரு பிரதியை அங்கே வைத்துவிட்டு அசலை ஃப்ளாரன்ஸ் நகரின் அகதமி கேலரியில் வைத்தார்கள். அசல் பழுதுபடாமல் கறைகளை நீக்கி, அழுக்கை சுரண்டி, சுத்தப்படுத்தும் வேலையை செய்தவர் இதில் தேர்ச்சி பெற்ற பெண்கலைஞர் சின்சியா பார்னிகோனி. இரு வருட காலமும் நான்கு லட்சம் யூரோ செலவும் பிடித்த இந்த வேலை முடிந்து சிலையை நிருபர்களுக்குக் காட்டிய சின்சியா ஆனந்தக் கண்ணீரில் அழுதார்.
இந்த சிற்பம் வரலாற்றில் பல சிக்கல்களை சந்தித்து மீண்டிருக்கிறது. ஒரு முறை வெள்ளம் மூழ்கடித்தது. பிறகு கிளர்ச்சியாளர்கள் ஒரு கையை உடைத்தார்கள். கணுக்காலில் சுத்தியால் உடைத்தார்கள். ஒரு முறை சிலையை மின்னல் தாக்கியது. இதற்கெல்லாம் மேல், டேவிட் அம்மணமாக நிற்பதைப் பொறுக்க முடியாத நகர நிர்வாகம் உலோக ஆலிலையை மாட்டியது. பிறகு அது எடுக்கப்பட்டுவிட்டது. சங் பரிவாரங்கள் கையில் டேவிட் சிக்கினால் என்ன ஆவான், யோசித்துப்பாருங்கள்
ஃப்ளாரென்ஸ் நகரம் தன் கலைச் செல்வங்களில் காட்டும் அக்கறையில் ஒரு துளி கூட நம் அரசுகள் காட்டுவதில்லை. குமரி முனை வள்ளுவர் சிலைக்கு விசேட பெயிண்ட் அடிக்காமல் அது நாசமாகிக் கொண்டிருக்கிறதாம். எனினும் எனக்கு அந்த சிலையை பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்த வள்ளுவர் சிலை மயிலை லஸ் செல்லும் வழியில் உள்ளதுதான்.
—-
ஒரு சில மரணங்கள்.. ..
கடந்த சில மாதங்களில் பொது வாழ்க்கையில் இருந்த சில முக்கியமான மனிதர்கள் முடிவெய்தினார்கள்.
செத்தார், இறந்தார் என்பது மரியாதைக் குறைவாகக் கருதப்படுகிறது. காலமானார் என்றால் அதற்கு அர்த்தம் என்ன ? ஒருவர் கடவுளாகிவிட்டார் என்பது போல காலம் ஆகிவிட்டார் என்று அர்த்தமா ? காலாவதி ஆவது வேறு. ஒருவர் வாழ்க்கை முடிந்துவிட்டது. எனவே அவர் முடிவெய்தினார். முடிவடைந்தார். அவ்ர் வாழ்க்கை முடிந்தது என்பவைதான் சரியாக இருக்கின்றன. முடிவெய்தினார் என்ற பிரயோகம் பெரியார் உருவாக்கியது என்று ஒரு முறை விடுதலை ராஜேந்திரன் எனக்குச் சொன்னார். அப்படி அண்மையில் முடிவெய்தியவர்களில் சிலரைப்பற்றி.
தமிழில் மூன்று எழுத்தாளர்கள்:
கந்தர்வன் : முற்போக்கு, மார்க்சியம் பேசும் படைப்பாளிகளுக்கு கலை நயம் வராது என்று கட்டப்படும் கதைகளைப் பொய்யென்று தன் சிறுகதைகளால் நிரூபித்தவர். உண்மையான மார்க்சியவாதி எதையும் திறந்த மனதுடன் அணுகவேண்டும் என்று நம்பியவர் அவர். தீம்தரிகிட மீது அன்பும் நம்பிக்கையும் காட்டியவர். ஏப்ரல் ஆண்டு விழாவுக்கு முன் நாள் போனில் பேசியபோது உடல் தளர்வின் விரக்தியை மீறி நம்பிக்கையுடன் ஒலித்தது அவர் குரல்.
தி.சா.ராஜு: ராணுவத்தில் பணியாற்றிய காந்தியவாதி. அகிலன், நா.பார்த்தசாரதி கால எழுத்துக்களில் இருந்த லட்சியவாதத்தை இன்னும் கவித்துவமாகவும் பரந்துபட்டதாகவும் ஆக்க முயற்சித்த இவர் ஹோமியோபதி மருத்துவராகவும் மனிதராகவும் ஆற்றிய தொண்டு பற்றி அ.மார்க்ஸ் எழுதிய அஞ்சலிக் கட்டுரை சிறப்பானது.
காசியபன்: இவருடைய அசடு நாவல் தமிழ் நாவல்களில் நிச்சயம் ஒரு மைல் கல். முஹம்மது கதைகள் யதார்த்த நிகழ்ச்சிகளிலிருந்து மனித மன சிக்கல்களைப் புரிந்து கொள்ளச் செய்யும் படைப்பு.
இரண்டு சமூகப் போராளிகள்:
நீதிபதி வி.எம்.தார்குண்டே: எழுபதின் குழந்தைகளான என் போன்றோருக்கு மனித உரிமைகள் சிவில் உரிமைகள் முதலியன பற்றிய ஆழமான அக்கறையை எழுப்பிய பி.யு.சி.எல்லைத் தோற்றுவித்தவர். நல்ல படிப்பும் வசதியான வாழ்க்கை முறையும் வாய்த்ததும் சமூகத்தில் தீவாக வாழ்ந்துவிட்டுப் போய்விடாமல், ஏதோ ஒரு புள்ளியில் எல்லா மனிதர்களுடனும் தன்னை இணைத்துக் கொள்ளும் மனம் அபூர்வமானது. அந்த மனம் இருந்ததால்தான், தார்குண்டே மதுரையில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் போலீஸ் அடிகளைத் தாங்கிக் கொண்டு மனித உரிமைகளுக்காக அயராமல் உழைக்க முடிந்தது. எஸ்.வி.ராஜதுரை தார்குண்டேவுக்கு எழுதிய அஞ்சலி செறிவானது.
ஈ.கே. நாயனார்:
ஒரு இடதுசாரி விதூஷகராகவே மீடியாவால் பெரிதும் சித்தரிக்கப்பட்டுள்ள கேரள முன்னாள் முதல்வர் நாயனாரின் வாழ்க்கை விவரங்களைப் படித்தால், மீடியாவின் அநீதி புரியும். நாயனாரின் தலைமறைவு வாழ்க்கையும் , சாதாரண மக்களுடன் இடைவிடாமல் அவர் கொண்டிருந்த தொடர்பும், ஒரு வறட்டு இடதுசாரி இயந்திரமாக இல்லாமல் மக்கள் தலைவனாக மாறுவது எப்படி என்பதற்கான கைட்புக் மாதிரி இருக்கிறது. நகைச்சுவை உணர்ச்சியையும் இர்ரெவெரென்ஷியல் ஆட்டிட்யூடையும் (புனித மறுப்பு மனநிலை ?) அவரிடமிருந்து எல்லா இடதுசாரிகளும் கற்க வேண்டும்.
ஒரு அமெரிக்க அதிபர்:
ரொனால்ட் ரீகன் : நடிகராக இருந்து முதல்வராகி ஜனாதிபதியானதால், ரீகனை அமெரிக்காவின் எம்.ஜி.ஆர் என்று வர்ணித்தது மீடியா. மற்றபடி ரீகனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் பெரிய ஒற்றுமைகள் இல்லை. அமெரிக்க அரசை மிகவும் பிற்போக்கான, உலக மக்களுக்கு விரோதமான திசையில் தீர்மானமாக இழுத்துச் சென்ற கன்சர்வேட்டிவ் அதிபராகவே ரீகனை நினைவு கூர முடிகிறது. முதுமையும் நோயும் எவருக்கும் அனுதாபத்துக்குரியவைதான்.
—-
dheemtharikida june 2004
dheemtharikida @hotmail.com
- தன்னம்பிக்கை
- தெற்காசியத் திரைப்பட விழா – படங்களை அனுப்ப வேண்டுகோள்
- கடிதம் ஜூன் 17,2004
- ஆட்டோகிராஃப் ‘தலை சாய்ந்து போனால் என்ன செய்யலாம் ‘
- சேதி கேட்டோ..
- பஞ்சத்தின் உண்மை பேசும் புல்லர்களை பொசுக்கிட பொங்கி எழு தோழா, புறப்படு
- வெங்கட் சாமிநாதனுக்கு டொராண்டோ பல்கலைக்கழத்தின் இயல் விருது விழா
- என் பொழுதுகளில் இதுவும்..
- தமிழுக்குப் பெருமை
- நிழல் யுத்தம் பற்றி
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 4
- திரைகடல் நாடியும் தேடு மின்சக்தி! [Energy from The Ocean Waves, Tides & Thermal Power]
- பிறந்த மண்ணுக்கு.. – 6 (கடைசிப் பகுதி)
- விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும்
- அவர்கள்
- கவிதைகள்
- ஆயுட் காவலன்
- வீடு திரும்புதல்
- நிழல் பாரங்கள்
- நிகழ்வெளியின் காட்சிகள்
- உறங்கட்டும் காதல்
- கவிக்கட்டு – 11 : எங்கே மனிதம் ?
- கடலைக்கொல்லை
- அன்புடன் இதயம் – 21 – பிரிகின்றேன் கண்மணி
- மின்மினி பூச்சிகள்
- செல்பேசிகளைத் தெரிந்து கொள்வோம்!
- டயரி
- சித்திரவதை
- பாசமா ? பாசிசமா ?
- மலை (நாடகம்)
- தனக்கென்று வரும் போது..!
- மஸ்னவி கதை — 10 :அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- வெற்றுக் காகிதங்கள்
- தென்னையும் பனையும்
- சாயம்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 24
- அஞ்சலைப் பாட்டி
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 7)
- வாரபலன் – ஜூன் 17,2004 – டில்லிக்குப் போன கவுன்சிலரு , ஆயிரம் இதழ் கண்ட கலா கெளமுதி , வாத்துக்களின் வட்டார வழக்கு , அஞ்சலி : காச
- கவிதைகள்
- நம்பிக்கை
- குழந்தை மனது
- உடன் பிறப்பு…
- தமிழவன் கவிதைகள்-பத்து
- தீர்மானம்
- இல்லம்
- தூரம்
- அப்பாவுக்கு…!!!
- மிராண்டாவைப் பார்த்து மிரண்டவர்கள்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 9
- நெய்தல் நிலத்துக்காாி!