பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 2

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

ஜேம்ஸ் வில்ஸன் (தமிழில்: ஆசாரகீனன்)


பயங்கரவாதச் செயல்களுக்கு ஆள் சேர்ப்பதில் மையமானது, எந்தக் குழு ஆள் சேர்ப்பு நடத்துகிறது என்பதே. அபு நிதால் அமைப்பைச் சேர்ந்த ஒமார் ரெஜாக் என்ற பயங்கரவாதி ஒரு விமானத்தைக் கடத்தி, எகிப்திய மீட்புப் படையினரால் பிடிக்கப்படுவதற்கு முன், இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பயணிகளைக் கொன்றவர். ஜெரால்ட் போஸ்ட், இவருடன் சுமார் எட்டு மணி நேரம் நேர்காணல் நடத்தினார். குற்றவாளியின் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர், ரெஜாக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான பின்னர் ஏற்படும் ஒரு வகை மன உளைச்சல் உள்ளவர், அதனால் தன் செயலின் தவற்றை சரியாக உணர முடியாதிருந்தார் என்று கூறியதைச் சோதிக்கவே இந்த நேர்காணல் நடந்தது. ஒமார் ரெஜாக்குக்கு இத்தகைய மனப் பிறழ்வு எதுவும் இல்லை என்று போஸ்ட் முடிவு செய்தார்.

[சொல்லப்பட்டதற்கு] மாறாக, ஜெரால்ட் போஸ்ட் சந்தித்த ரெஜாக் மிகவும் அமைதியான, நன்கு பயிற்சி பெற்றுத் தேர்ந்தவராக இருந்தார். வறுமையற்ற மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தைக் கொண்ட ரெஜாக், 1967-ல் நடந்த அரபு-இஸ்ரேலியப் போருக்குப் பின்னர் தன் அம்மாவுடன் அகதிகள் முகாமிற்குச் செல்ல நேர்ந்தது. பள்ளியில் ஒரு தீவிரவாத பாலஸ்தீன ஆசிரியர் அவருள் இஸ்ரேலிய வெறுப்பை விதைத்ததோடு, 12-வது வயதிலேயே ராணுவப் பயிற்சி தரும் முகாம் ஒன்றில் சேரவும் உதவினார். அங்கிருந்து, ரெஜாக் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியால் நடத்தப்பட்ட தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றுக்குச் சென்றார். ஜார்டானின் ராணுவத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே, ரெஜாக் அதை விட்டு ஓடி ஃபடா இயக்கத்தில் சேர்ந்தார். அங்கு ஜயானிஸம்[13] பற்றி அறிந்ததோடு, மேலதிக ராணுவப் பயிற்சியும் பெற்றார். இஸ்ரேலுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் இவர் ஈடுபடுத்தப்பட்டாலும், பணி எதுவும் இல்லாமல் இருந்த காலகட்டங்கள் இவருக்குச் சலிப்பூட்டின. தீவிரமாக ஈடுபட வாய்ப்பைத் தேடிக் கொண்டிருந்த இவர் நாளடைவில் அபு நிதால்[14] அமைப்பில் சேர்ந்தார்.

ஒரு விமானத்தைக் கைப்பற்றி, எகிப்து அரசாங்கம் சில குறிப்பிட்ட தீவிரவாதிகளைச் சிறையிலிருந்து விடுவிக்கும் வரை விமானத்தைப் பிடித்து வைத்திருக்கும்படி அபு நிதால் அமைப்பு ரெஜாக்கிற்குக் கட்டளை இட்டது. அதன்படி கைப்பற்றப்பட்ட விமானம் மால்டாவில் தரை இறங்கிய பின்னர், பயணிகளைக் கொலை செய்யத் தொடங்கினார் ரெஜாக். இரண்டு இஸ்ரேலியர்களையும் (அவர்கள் எதிரிகள் என்பதால்) மூன்று அமெரிக்கர்களையும் (எதிரிக்குத் துணை புரிபவர்கள்) கொன்றார். பிறரைக் கொல்லும் முன், மீட்புப் படையினர் விமானத்துக்குள் பாய்ந்து நுழைந்து ரெஜாக்கைக் பிடித்து விட்டனர்.

பேராசிரியர் போஸ்டிடம் ரெஜாக் அமைதியாகவும், ஒழுங்காகவும், உணர்ச்சி வசப்படாமலும் பேசினார். தன்னை ஒரு சிப்பாயாகவும், தான் சுட்டுக் கொன்றவர்களை எதிரிகளாகவும் கருதினார். தன்னுடைய செயல், குற்றம் என்று அவருக்குப் புரிந்தது – அதனால்தான் அவர் தன் அடையாளத்தை மறைக்க கண்களைத் தவிர முகத்தை முழுவதும் மூடும் முகமூடி (ski mask) அணிந்திருந்தார். அக் கொலைகளை அவர் தவறான செயலாகக் கருதவில்லை: என்ன இருந்தாலும் ஜயானிஸத்திற்கு எதிரான போராட்டம்தானே அது. அவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கருதுவதே அசட்டுத்தனமானது. அவர் அப்படி மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தால், மிகவும் திறமை மிக்க குழுவான அபு நிதால் அமைப்பு ரெஜாக்கை எப்போதோ களைந்திருக்கும். அபு நிதால் ரோம் மற்றும் வியன்னா விமான நிலையங்களில் நடத்திய படுகொலைகளில் பலரைக் கொன்றது, காயப்படுத்தியது, மேலும், பிரிட்டனில் இஸ்ரேலிய தூதுவராக இருந்தவரைத் தாக்கிப் படுகாயப்படுத்தியது: மன நோயாளிகளை வைத்துக் கொண்டு இத்தகைய செயல்களைச் சாதிக்க முடியாது.

தற்கொலைப் படையினருள் சிலர் மிரட்டிப் பணிய வைக்கப்பட்டவர்கள். மேலும் சிலரோ அவர்கள் வாகனங்களில் பொருத்தப் பட்டிருக்கும் குண்டுகள் அவர்கள் இறங்கிப் போன பின்னரே வெடிக்கும் என்று தவறாக நம்ப வைக்கப்பட்டவர்கள். நான் நம்புவது என்னவென்றால், இத்தகைய ஆள் சேர்ப்பு முயற்சி இன்றளவில் சிறு-குழுக்கள் வழியான வற்புறுத்தலையும், அதிகாரத்தனம் மிக்க தலைவர்களையும் நம்பி இருக்கிறது. சமூக-அறிவியலை கல்லூரியில் பயின்ற எவருக்கும், ஸ்டான்லி மில்க்ராமின் புகழ் பெற்ற பரிசோதனைகள் நினைவில் இருக்கும். 1960-களில் யேல் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர் மில்க்ராம்[15], நாளேடுகளில் விளம்பரம் செய்து, நினைவுத் திறனை மேம்படுத்த உதவும் ஒரு பரிசோதனையில் பங்கு பெறுபவர்களுக்குப் பணம் தருவதாக அறிவித்து, சாதாரண மனிதர்களைத் தேர்ந்தெடுத்தார். சில வார்த்தைகளை ஒருவரிடம் படித்துக் காட்டி, அவர் அதைத் திரும்பச் சொல்லாத பட்சத்தில், தண்டனை தருவதன் மூலம் நினைவுத் திறன் மேம்படுத்தப்படும் என்பதாகச் சொல்லப்பட்டது. மில்க்ராமின் ஆள் ஒருவரே நாற்காலியில் பிணைக்கப்பட்டிருப்பார். அவரது மணிக்கட்டில் மின்-முனை பொருத்தப் பட்டிருக்கும். பரிசோதனையில் பங்கு பெற வந்திருப்பவர்களுக்கு அந்தத் தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அவர்கள் ஒரு கட்டுப்பாட்டு முனையத்திலிருந்து படிப்படியாக 15 முதல் 450 வோல்டுகள் மின்சாரத்தைப் பாய்ச்சும் பணியை மேற்கொண்டார்கள். இந்த மின் அளவுகோலின் மிகைப் பகுதியில் ‘அபாயம் – மோசமான மின் அதிர்ச்சி ‘ என்று தெளிவாக எழுதப் பட்டிருக்கும். இந்தப் பணியில் அமர்த்தப் பட்டிருப்பவர்கள் இந்தக் கற்பனையான மின் அழுத்தத்தை அதிகரிக்கும் போதெல்லாம், நினைவு ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள அமர்ந்திருப்பவர், வலியால் அலறித் துடிப்பதைப் போல நடிப்பார்.

மில்க்ராம் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்தவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் 450 வோல்டுகள் வரை மின்சாரத்தைப் பாய்ச்சினர். ஆனால், சோதனையில் அமைக்கப்பட்ட இரு நிலைகள் மட்டுமே வேறுபட்ட முடிவைக் கொடுத்தன: அறையில் தெளிவான அதிகாரம் கொண்ட தலைமை இல்லாத நிலையும், ஒத்த நிலையில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பவராக இருப்பதும். இந்த வேறுபாடுகள் இல்லாத போது கிட்டத்தட்ட அனைவருமே ‘கட்டளைக்குக் கீழ்படிய ‘ முடிவு செய்தனர். சரியாக நிர்வகிக்கப்படும், அதிகாரமுள்ள தலைவரைக் கொண்ட ஒன்றுபட்ட குழுவுக்கு எதையும் செய்யக்கூடிய நபர்களை சேர்ப்பதில் சிரமம் இருக்காது என்பதையே இந்த ஆய்வு காட்டுவதாக நான் கருதுகிறேன்.

ஸ்டான்லி மில்க்ராமின் ‘அதிகாரத்துக்குக் கீழ்ப்படிதல் ‘ என்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்களோ இல்லையோ, பயங்கரவாதக் குழுக்கள் இந்த விதிகளைப் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தட்டிக் கேட்கப்படவே முடியாத தலைவர்களுடன் உறுப்பினர்களைப் பேச விடுவதன் மூலம் எதிர்ப்பு காட்டக் கூடியவர்களை எளிதில் களைந்து விடுகிறார்கள். சந்தேகப்படுபவர்களை ஒழித்துவிடுவதன் மூலம் சந்தேகங்களையே ஒழித்துக் கட்டி விடுகிறார்கள்.

இந்த முறை, மிக நெருக்கடியான கட்டத்தில் வீரர்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்க ராணுவம் பயன்படுத்தும் முறைகளில் இருந்து மிகவும் வேறுபட்டது அல்ல. நாயகத் தன்மை தீரச்செயலுக்கான ஆழமான உந்துதலினாலோ, தாய்மாரிடம் பெறும் கருத்துகளாலோ, நாட்டின் விழுமியங்களிலிருந்தோ, மேலும் தேசிய கொள்கையிலிருந்தோ பெறப்படுவதில்லை. மாறாக, அது போராடும் பிறரை உதாரணமாகக் கொள்வதிலிருந்தே வருவது.

மில்க்ராம் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி தந்தவர் அல்ல; மாறாக [மேலே சொன்ன] ஸிந்தியா ஓஜிக் கருத்தில் கொள்ளாது விடுத்த ஓர் உள்ளுணர்வை அவர் இனம் காட்டுகிறார் – குழுவாக இருக்க விரும்பும் உள்ளுணர்வானது பிறரிடம் நயமாக நடந்து கொள்ளச் சொல்லும் உள்ளுணர்வைப் போலவே வலிமையானது என்பதை மில்க்ராம் நிறுவினார். ஒருக்கால், அவர் ஒரு பயங்கரவாதக் குழுவின் தலைவராக இருக்கிறார், தனக்குக் கீழ்ப் படிபவர்களை தன் குழுவில் சேர்த்துக் கொள்கிறார், அவரது குழுவுக்கு ஆதரவாகக் கல்வி நிலையங்களும், மக்கள் நடுவே பெரும் பிரசாரமும் இருக்கிறது என்றெல்லாம் வைத்துக் கொள்வோம். (அப்படிப்பட்ட நிலையில்) அத்தகைய உறுப்பினர்களைக் கொண்டு அவர் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு அனேகமாக ஓர் எல்லையே இல்லை. அவர்கள் மருத்துவ ரீதியில் பாதிக்கப்படாதவர்களாக இருந்தாலும், மனப் பிறழ்வான ஓர் இயக்கத்தினுள் அவர்கள் இழுத்துப் பொருத்திக் கொள்ளப் பட்டிருப்பார்கள்.

பயங்கரவாதிகள் பற்றிய உண்மைகளுள் மையமாக இருப்பது அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பது அல்ல, அவர்கள் தனியானவர்கள் அல்ல என்பதே. பாலஸ்தீனர்களிடையே ஹமாஸ், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத், அல்-அக்ஸா தியாகியர் படை ஆகிய அமைப்புகளே பெரும்பாலும் இவர்களை வளைத்துப் போடுகின்றன. சிங்கப்பூரில், இவர்களைத் திரட்டும் பணி மதப் பள்ளிகளில் தொடங்குகிறது. ஊக்கம் உள்ளவர்களும், பணிந்து நடப்பவர்களும் அங்குள்ள ஜமா இஸ்லாமியா என்ற அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டு, தம்மை ஒத்தவர்களுடன் சேர்ந்து இயங்கும் வாய்ப்புப் பெறுகிறார்கள். ரகசிய உணர்வு, சங்கேதப் பெயர்கள், சிறப்புப் பயிற்சி ஆகியவற்றின் மூலம் குழுவில் தான் இருப்பது பற்றி ஒவ்வொரு உறுப்பினருக்கும் தம்மைப் பற்றிய பெருமிதமும், சாதாரணத்திலிருந்து பிரிந்து உயர்ந்து விட்ட உணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. பின்னர், ஜிஹாதில் பங்கு பெற்று மடிவதன் மூலம் தியாகி ஆகும் வாய்ப்பு அவர்களுக்குத் தரப்படுகிறது. எல்லா குழுக்களிலும், தற்கொலைப் படையினரை ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து அவர்களைப் பிறரிடம் இருந்து தனிமைப்படுத்துவது, தங்களது இறுதி அறிக்கையை எழுத வைப்பது, அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு விடும் பிரிவுச் செய்தியை ஒளிநாடாவில் பதிவு செய்வது ஆகியவற்றின் மூலம் தலைவர்கள் அவர்களின் உறுதியை வலுப்படுத்துகிறார்கள்.

சரி, பயங்கரவாதம் இவ்வளவு நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறதே, அது தனது நோக்கங்களை அடைகிறதா என்பதைப் பார்ப்போம். கொள்கைப் பின்னணி கொண்ட சில பயங்கரவாதிகளுக்கு, அடையப்படக்கூடிய தெளிவான குறிக்கோள்கள் எதுவும் கிடையாது. ஆனால், பல அரசியல் கொலைகாரர்களுக்கும் மத பயங்கரவாதிகளுக்கும், கொடுங்கோலாட்சியை ஒழிப்பது, மதக் கருத்தாக்கங்களைப் பரப்புவது அல்லது ஒரு தேச விரோதியைத் தோற்கடிப்பது போன்ற முக்கியமான குறிக்கோள்கள் இருக்கின்றன.

இந்தத் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், பயங்கரவாதத்தால் எந்தப் பலனும் கிடையாது. அரசியல் படுகொலைகள் பற்றிய தனது நீண்ட வரலாற்றுப் புத்தகத்தின் இறுதியில் ஃப்ராங்க்ளின் ஃபோர்ட், ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர, அரசியல் கொலைகளால் அவற்றைச் செய்பவரின் நோக்கத்துக்குச் சாதகமான எந்த விளைவுகளும் ஏற்பட்டிருக்கவில்லை என்றே முடிவு செய்கிறார். வால்டர் லேக்கர்[16], தனது ஆய்விலும் இதே போன்ற முடிவுக்கே வருகிறார்: 1945 முதல் 1985 வரையில் நடத்தப்பட்ட 50 பிரதம மந்திரிகள் மற்றும் நாட்டுத் தலைவர்களின் படுகொலைகள், ஏதோ ஒரு நாட்டின் கொள்கைகளைக் கூட மாற்றியது எனக் கருத முடியாது.

பெர்னார்ட் லூயிஸ் [அந் நாளைய] அஸாஸின் குழுவினர் தோல்வி அடைந்தார்கள் என்றே கருதுகிறார்: நிலவும் சமூக அமைப்பைத் தூக்கி எறிவதிலோ அல்லது சுன்னிகளின் இடத்தில் ஷியாக்களை மாற்றிப் பொருத்தி விடுவதிலோ அவர்கள் ஒருபோதும் வெற்றி பெறவில்லை என்கிறார். 1983 முதல் 2001 வரையிலான தற்கொலைப் படை பயங்கரவாதம் பற்றிய மிகச் சமீபத்திய ஆய்வு, ‘பயங்கரவாதம் சுமாரான அல்லது மிகக் குறைந்த அளவில் தனது குறிக்கோள்களை அடைந்திருந்தாலும், தாம் தாக்கிய குடியரசுகளை அவற்றின் தேசிய நலன்களையும் பாதுகாப்பிற்கு இன்றியமையாததாக இருக்கும் குறிக்கோள்களையும் கைவிடும்படி மிரட்டுவதில் தோல்வியே அடைந்துள்ளது. ‘

இந்தத் தோல்விக்கான ஒரு காரணத்தை இஸ்ரேலிய மக்கள் கருத்து பற்றிய ஆய்வில் காணலாம். 1979-ஆம் ஆண்டில் இஸ்ரேலிலும், அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலும் 271 பயங்கரவாதச் செயல்கள் நடைபெற்றன. இவற்றில் 23 பேர் இறந்ததோடு 344 பேர் காயமடைந்தனர். இத்தகைய தாக்குதல்கள் இஸ்ரேலியர்களைப் பெரிதும் கவலைக்கு உள்ளாக்கின என்று பொதுக் கருத்துக் கணிப்புகள் சுட்டிக் காட்டின. ஆனால் இந்த அச்சம் அவர்களைச் சமரசம் தேடும் முயற்சிகளை ஆதரிப்பதை நோக்கி இட்டுச் செல்லவில்லை. மாறாக அவர்களின் மனங்களில் கடுமை ஏறியதோடு, குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப் படுவதைக் காணும் விருப்பமும் அதிகரித்தது. தற்போதைய இன்டிஃபாதா வன்முறையும் இத்தகைய விளைவையே இஸ்ரேலில் ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் தீவிரவாதம், அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடைய உற்றாரின் கருத்துகளை மாற்றவில்லை என்றால், அதே போல தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளும், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களின் கருத்துகளை மாற்றுவதில்லை. பல சமூக அறிவியலாளர்களும் இந்த முடிவுக்கே வந்துள்ளனர்.

1970-களில் நான் கலந்து கொண்ட ஓர் அறிஞர்களின் மாநாட்டில் பங்கெடுத்தவர்கள், ஜெர்மன் செம்படைக் குழு மற்றும் இத்தாலிய செஞ்சேனையினரின் தீவிரவாத நடவடிக்கைகளை எப்படி நிறுத்துவது என்று விவாதித்தனர். அங்கு நிலவிய பொதுவான கருத்து, எதிர்த் தாக்குதல்கள் எவ் வகையிலும் உதவப் போவதில்லை என்பதே. பயங்கரவாதத்தை முறியடிக்க, அதன் மூல காரணங்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்று என் நண்பர்கள் கருதினர்.

எனக்கு அக் கருத்தில் நம்பிக்கையில்லை. என் உள்ளுணர்வு என்னவென்றால் – குற்றவாளிகளை நேரடியாகப் பிடித்துக் கைது செய்வது உதவும் அளவு குற்றத்தின் மூலம் என்று பழி சுமத்தப்படும் காரணங்களைச் சீர் செய்ய முயல்வது உதவாது என்பதே. அதனால்தான் எனக்கு அப்படி ஓர் அவநம்பிக்கை. ஏனெனில், மூல காரணங்களைப் பற்றி நமக்கு அதிகமாக எதுவும் தெரியாது. மேலும், நாம் அடையாளம் காணும் மூல காரணங்களுள் பெரும்பாலானவற்றை ஒரு சுதந்திர சமூகத்தில் மாற்றுவதென்பது முடியாதது – அல்லது வேறு எந்த சமூகத்திலுமே கூட அத்தகைய மாற்றங்கள் சாத்தியம் இல்லை.

இப்படி அரசியல் ரீதியில் எழுந்துள்ள ஓர் ஆழ்ந்த சிக்கலை எதிர் கொண்ட ஜெர்மன் மற்றும் இத்தாலிய அதிகாரிகள், மூல காரணங்களை மாற்றுவதில்லை என்றும் பயங்கரவாதிகளைக் கைது செய்வது என்றும் முடிவு செய்தனர். அதே நேரத்தில், கிழக்கு ஜெர்மனி வீழ்ச்சியடையவும், பயங்கரவாதிகளுக்கு அங்கிருந்து கிடைத்து வந்த உதவிகளும் நின்று போனதால் இம் முயற்சி வெற்றி பெற்றது. சில ஆண்டுகளிலேயே செம்படைக் குழுவும் செஞ்சேனையும் காலாவதியாகி விட்டன. அமெரிக்காவில், வெதர் தலைமறைவு இயக்கத்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின் அந்த இயக்கமும் மறைந்தது.

ஆனால், இஸ்லாமிய பயங்கரவாதம் இவற்றை விடவும் கடினமான சவாலை முன் வைக்கிறது. இந்த பயங்கரவாதிகள் தங்களிடம் அனுதாபம் கொண்ட மக்களிடையே வாழ்ந்து, இயங்குபவர்கள். கைது செய்யப்படுபவர்களின் இடத்தை நிரப்ப வேறு ஆட்கள் கிடைப்பார்கள்; கொல்லப்படுபவர்கள் கொண்டாடப் படுவார்கள். பல இஸ்லாமிய நாடுகளிலும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எதிரான பயங்கரவாதிகளுக்கு பெரும் ஆதரவு இருப்பதைக் காட்டுகின்றன. பயங்கரவாதிகள் தங்களுக்குச் சாதகமான நதி ஒன்றில் நீந்துகிறார்கள். ஆக, நாம் நதியையே எதிர் கொள்ள வேண்டி இருக்கலாம்[17].

பெரும்பாலான முஸ்லிம் பத்திரிகைகளும் முஸ்லிம் கல்வி நிலையங்களும் இடைவிடாது யூதர்கள், இஸ்ரேல் மற்றும் ஜயானிஸம் ஆகியவற்றின் மீது அவதூறைப் பரப்புகின்றன. இந்த வகை பிரசாரத்தினால் பயங்கரவாதிகளுக்குக் கிட்டியிருக்கும் ஆதரவு, முன்பு அமெரிக்க அல்லது ஐரோப்பிய பயங்கரவாதிகளுக்கு மக்களிடையே கிட்டிய ஆதரவை விட பல மடங்கு பெருத்தது. 75 சதவீதத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் தற்போதைய இன்டிஃபாதாவை ஆதரிப்பதோடு, ஹய்ஃபா நகரில் மேக்ஸிம் என்ற உணவு விடுதியில் 2003-ஆம் ஆண்டு நடந்தப்பட்ட குண்டு வெடிப்பையும் ஆமோதிக்கிறார்கள். தற்கொலைத் தாக்குதலை நடத்துபவர்கள் தியாகிகளாகக் கருதப்படும் போக்கினால், இப் பணியில் சேர முன் வரும் புதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. [ஜெர்மனியின்] பாதெர்-மையின்ஹாஃப் குழுவினருக்குக் கிட்டிய ஆதரவை விட, இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாதத்துக்குக் கிடைத்துள்ள ஆதரவுப் பெருக்கு மிகவும் ஆழமும், அகலமும் உள்ளது.

ஜனநாயகம் என்பதே ஒரு தீமை என்றும், எதிர்காலத்தில் மார்க்ஸிய அலையே வீசப் போகிறது என்றும் பெரும்பாலான மேற்கு ஜெர்மனியர்கள் நினைத்திருந்தாலோ, கொல்லப்படும் அல்லது சிறை பிடிக்கப்படும் இக் குழுவின் உறுப்பினர் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் பெரிய தொகை ஒன்றை சோவியத் யூனியன் வழங்கியிருந்தாலோ, மக்களாட்சியின் தீமைகளையும், பயங்கரவாதிகளைக் நாயகர்கள் என்று சொல்லித் தரும் கல்வி நிலையங்களில் மேற்கு ஜெர்மனி மாணவர்கள் பயின்றிருந்தாலோ, மேற்கு ஜெர்மனியின் பல மாகாணங்கள் அல்-ஃபத்தா போன்ற குழுக்களால் ஆளப்பட்டிருந்தாலோ, காஜாவைப் போன்ற ஒரு பகுதி ஜெர்மனியில் இருந்து, அதில் சினம் கொண்ட ஜெர்மனியர்கள் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து, அவர்கள் தங்களுக்கு ஒரு தாய்நாட்டிற்குத் திரும்பும் உரிமை இருக்கிறது என்று நம்பியிருந்தாலோ, பாதெர்-மையின்ஹாஃப் குழுவை ஒழிப்பது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

ஆனால், போராட்டத்துக்கான ஆதரவு என்பது முடிவற்ற போர் ஒன்றுக்கான ஆதரவு அல்ல. கொள்கை மற்றும் கருத்துக் கணிப்பு ஆய்வுக்கான பாலஸ்தீனிய மையம், நவம்பர் 2002-ல் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில், மேற்குக் கரையிலும் காஜா பகுதியிலும் வாழும் பாலஸ்தீனியர்களில் நான்கில் மூன்று பேர், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் ஆகிய இரு தரப்பினரும் வன்முறையை நிறுத்துவதையும், இஸ்ரேலியருக்கும் புதியதாக உருவாக்கப்படவிருக்கும் ஒரு பாலஸ்தீன அரசுக்கும் இடையில் சமரசம் ஏற்படுவதையும் ஆதரித்தனர். இஸ்ரேலிய மக்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த பாலஸ்தீன ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பதையும் பெரும்பாலானோர் ஆதரித்தனர். பாலஸ்தீனர்களில் பாதி பேர் இன்டிஃபாதாவும், இஸ்ரேலுடனான பேச்சு வார்த்தைகளும் ஒரே நேரத்தில் நடப்பதை விரும்புவதும், 15 சதவீதத்தினர் பேச்சு வார்த்தைகளை மட்டுமே விரும்புவதும் மற்றொரு கருத்துக் கணிப்பில் தெரிய வருகிறது.

மிக அரிதாகவே அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளிவரும் இந்தத் தகவல்கள், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அராஃபத்தின் மூலம் ஒரு தீர்வு காண்பது தவிர்க்க முடியாதது என்று நம்மிடம் இடைவிடாமல் சொல்லி வரும் பல மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பியத் தலைவர்களின் அறிக்கைகள் எந்த அளவுக்கு அர்த்தமற்றவை என்பதையே உணர்த்துகின்றன. பெரும்பாலும் உள்ளூர் அரசியல் தேவைகளைக் கருதியே எழுப்பப்படும் இத்தகைய கோரிக்கைகள், அராஃபத்தின் சொந்த மக்களே அவரை எவ்வளவு தூரம் வெறுக்கிறார்கள் என்பதையும், மக்களை மதிக்கும், ஊழலைத் தவிர்க்கும் ஒரு ஜனநாயக அரசாங்கம் அமைவதில் அவர்களுக்கு எவ்வளவு ஆர்வம் உள்ளது என்பதையும் கருத்தில் கொள்வதில்லை.

ஒரு நாட்டுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதையோ, பயங்கரவாதம் செயல்பட தம் நாட்டில் இடம் தருவதையோ மற்றொரு நாடு செய்யும்போது, நிலைமை இன்னமும் மோசமாகிறது. அந்த நிலையில், அந்த அரசாங்க ஆதரவை நிறுத்துவது முக்கியமாகிறது. இதற்கு, அத்தகைய ஆதரவின் பின் விளைவாக அந்த நாடுகளின் தலைவர்கள் கடுமையான இழப்புகளை மேற்கொள்ள நேரும் என்பதைத் தெளிவாக்குவது அவசியமாகிறது. பலரும் ஏற்க மறுத்தாலும், அமெரிக்க அதிபர் புஷ் சில நாடுகள் ‘தீமையின் அச்சாக ‘ விளங்குவதைக் கண்டித்தது சரியானது என்றே நான் கருதுகிறேன். சம்மந்தப்பட்ட நாடுகளின் தலைவர்கள் ஹமாஸ், அல்-கய்தா அல்லது ஹெஸ்புல்லா ஆகியவற்றுக்கு நிதி உதவி அளிக்கும், ஊக்குவிக்கும் பட்சத்தில் அதற்குரிய கடுமையான விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும் என்பதை இந்த அறிவிப்பு தெளிவாக்கியுள்ளது. அது எத்தகைய கடுமையான விலையாக இருக்க முடியும் என்பதை இராக் அறிந்திருக்கிறது.

இஸ்ரேலில் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதோடு, அவற்றிற்கு ஆதரவும் தரும் பாலஸ்தீனத் தலைமையை, தக்க கடும் விலையைக் கொடுக்க வைக்க இஸ்ரேலிய அரசாங்கம் முயல்கிறது. இம் முயற்சி வெற்றி பெறுமா என்பதைச் சொல்லப் போதுமான காலம் கடக்கவில்லை. கைதுகளும், தடுப்பு முறைகளும் தற்கொலைத் தாக்குதல்களை உடனடியாகத் தடுக்க முடியாது என்றாலும், சிறந்த உளவு முறையின் மூலம் அவற்றைக் குறைக்க முடியும். மேலும், தலைவர்களைச் சிறை பிடிப்பதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும். அண்மையில் தற்கொலைத் தாக்குதல்கள் குறைந்துள்ளதற்கு நிச்சயம் பாலஸ்தீனப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரைக் காரணமாகக் கருதலாம். இப்படி ஏகப்பட்ட பொருள் செலவில் [பாதுகாப்புப் படையினர்] நிறுத்தப்படுவது மட்டுமே தாக்குதல்களை முற்றிலுமாக நிறுத்தி விடாது. இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனர்களின் வெறுப்பு வளர வளர, அந்த வெறுப்பை ஊட்டி வளர்க்கும் விதமாகப் பாலஸ்தீனக் கல்வி நிலையங்கள் மேலும் வெறுப்பைக் கற்பிப்பதாலும், மனித வெடிகுண்டுத் தற்கொலைப் படைக்குப் புதியவர்களைச் சேர்ப்பது எளிதாகிறது.

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு புதிய அரசியல் ஏற்பாடு தேவைதானா என்பதுதான் முக்கிய கேள்வி. பாலஸ்தீன மக்கள், இஸ்ரேலுக்கு அது ஒரு பாதுகாப்புடன் இருக்கும் உரிமையை வழங்கி அதற்குப் பதிலாகத் தங்களுடைய சொந்த நாட்டைப் பெற்றுக் கொள்வதே நன்மையானது. இத்தகைய ஒரு தீர்வுக்கு இஸ்ரேலியர், பாலஸ்தீனர் ஆகிய இரு தரப்பிலும் பெரும் வரவேற்பு இருக்கக் கூடும். ஆனாலும், இரு தரப்பிலும் இருக்கும் எந்த ஒரு அரசியல் தலைவராவது இத்தகைய எதிர்காலத்துக்கான வழியை முன் மொழிவார்களா என்பது ஐயத்திற்குரியது. பயங்கரவாதமும் [அதற்கு எதிரான] அரசாங்க நடவடிக்கையும் அதிகரிக்க அதிகரிக்க, பேச்சு வார்த்தைக்கான வாய்ப்புகள் மங்குவதோடு, எந்தப் புதிய பேச்சு வார்த்தையும் அர்த்தமுள்ள முடிவைக் கொண்டு வரும் என்பதில் பொதுமக்களுக்கு இருக்கக் கூடிய நம்பிக்கையும் அருகவே செய்யும். இதற்கான தீர்வை இதுவரை எவரும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நன்றி: ஸிட்டி ஜர்னல் Winter 2004 இதழ்

பின் குறிப்புகள் – மொ.பெ.

கட்டுரையாளர் James Q. Wilson பற்றி:

1960களில் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகத் தொடங்கியவர். தற்போது, லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராக இருந்து வருகிறார். இவர் இன்னமும் ஊக்கத்துடன் செயல்படுகிறார் என்பதற்கு ஒரு சான்று – அமெரிக்க அதிபரின் உயிர்-அறம் (bio-ethics) பற்றிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்பது. அண்மையில், உயிர்-அறம் என்பது மேலை நாடுகளில் பெரும் பிரச்சினையாகக் கிளம்பி இருக்கிறது. இவர் குற்றவியல், பொருளாதாரம், அரசியல் துறைகளில் பெயர் பெற்ற ஆய்வாளர். மேல் விவரங்களுக்கான சுட்டி:

http://www.anderson.ucla.edu/admin_dept/media_rel/facultydir/wilson.html

மனித இயல்பும் அறவுணர்வும் என்பது குறித்து ஏராளமாக எழுதியிருக்கிறார். இவற்றில், இவரது நல்லொழுக்க உணர்வு (The moral sense) என்ற 1997-ஆம் ஆண்டுப் பிரசுரம், ‘ஒழுக்கம் பற்றிய சீர் தூக்கல்: வளர்ப்பில் கேடு நேர்ந்ததை ஒரு சாக்காகக் கொள்வது நம் நீதி அமைப்பைக் குலைக்கப் போகிறதா ? ‘ என்ற 1998-ஆம் வருடப் பிரசுரங்களும் அடங்கும்.

இவரது முக்கியப் பிரசுரங்களின் ஒரு பட்டியல்:

http://reason.com/bks.wilson.shtml

மையப் பாதையில் இயங்கும் ஆய்வாளராக இவரைக் கருதலாம். சில நேரம் வலதுசாரியினருக்கு இவர் போன்ற சிந்தனையாளர் ஒரு கேடயமாகப் பயன்படுவர். இடதுகளும் அப்படியே இவரைப் பயன்படுத்தும் வாய்ப்புண்டு. இருதலைக் கொள்ளியாக இவர் சில நேரமாவது உணர்வாரா என்று இவரைச் சந்தித்தால் கேட்க வேண்டும்.

13. Zionism-பற்றி இங்கு ஒரு விரிவான விளக்கம் தர முற்படுகிறேன். கட்டுரையின் மையத்திலிருந்து சிறிது விலகிய இந்த விளக்கம், கட்டுரை வெறுமே சுட்டி விட்டுத் தொடாமல் போன பல கருத்துகளை இங்கு முன்வைக்கிறது. காரணம், கீழே தரப்படும் தகவல்களும், சில மேம்போக்கான விளக்கங்களும் ஓரளவு பின்புலனைத் தெளிவாக்கும் என்ற நம்பிக்கை. மாறாகக் கட்டுரையே தெளிவு, விளக்கம் எதற்கு என்று வாசகர் கருதும் பட்சத்தில், விளக்கத்தைப் படிக்க வேண்டாமே!

இங்கு குறிப்பிடப்படும் ஜயானிசம் என்பது யூத தேசியம். உலகின் பல பகுதிகளிலும் யூத தேசியமும், உலக மயமாகும் இஸ்லாமும் எதிரெதிராக நிற்கின்றன என்பது தெரிந்ததே. இன்று உலக முஸ்லிம் சமுதாயம் தேங்கி இருக்கக் காரணமே யூத தேசியமும், அடிப்படைக் கிருஸ்தவமும், சண்டிக் குதிரையான இந்துக் கூட்டங்களும்தான் என்று கூடத் தீவிரவாத முஸ்லிம்கள் கருதுகிறார்கள். இது வழக்கம் போலத் தமது குறைகளைப் பிறர் குறைகளாகக் காணும் உத்தி. இங்கு யூத – முஸ்லிம் சமூகங்களைப் பற்றி மட்டும் சிறிது பார்ப்போம்.

யூதருக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுவாக உள்ள பிரச்சினைகளுள் ஒன்று – மதத்தை அல்லது இறை நம்பிக்கையை அரசியலில் இருந்து எப்படி விலக்குவது என்பதே. கருத்தாக்க அளவில் யூதர் ஓரளவாவது இத்தகைய விலக்கலை ஏற்கிறார்கள். இறை நம்பிக்கையை மையமாகக் கொள்ளாத அரசியல் (Secular politics) சாத்தியம் என்பதை அவர்கள் ஏற்கிறார்கள். முஸ்லிம்கள் இத்தகைய சாத்தியத்தை ஏற்பதில்லை. யூதர்களும் வாய்ப்பிருந்தால் இறை நம்பிக்கையை மையப்படுத்தியே அரசியல் நடத்த விழைவர் என்பது உண்மை. ஆனால் உலகெங்கும் மிகச் சிறுபான்மையாக வாழ்ந்து வரும் ஒரு சமூகக் குழுவுக்குப் பிற மதங்கள் ஆட்சியில் இருப்பதை விட எந்த மதமும் ஆட்சியில் இல்லாத, மதங்கள் தனி நபர் வாழ்வுக்குள் அனுப்பப் பட்டுவிட்ட அரசியலே பரவாயில்லை என்று கருதும் நிலை ஏற்பட்டு விடுகிறது. அப்படி அதிகம் வாழாத முஸ்லிம்களுக்கு இன்னமும் மதம் ஓரம் கட்டப்பட்ட இத்தகைய வாழ்வு பிடிப்பதில்லை. ஆனால், பொதுவாக அவர்கள் ஒரு முரண்பட்ட நிலையைக் கைக் கொள்கிறார்கள்.

காட்டாக, முஸ்லிம்கள் எங்கெங்கும் உள்ள ‘கடவுள் ‘ அரசியலிலும் இருந்தே ஆக வேண்டும் எனவும், வாழ்க்கையின் சகல அம்சங்களையும் இறை நம்பிக்கையும் அதன் வெளிப்பாடாகக் கொடுக்கப்பட்ட முறைமைகளும் கட்டுப்படுத்துவது தகும் எனவும், எனவே அரசையும் மதத்தையும் பிரிப்பது ஏற்புடையதல்ல எனவும் கருதுகிறார்கள். தீவிர மரபுவாதிகளான யூதர்களும் இத்தகைய சிந்தனையையே கொண்டவர்கள். ஆனால், யூதர்கள் நடுவே தாராளவாதிகளும், புரட்சிவாதிகளும், நாத்திகரும், அவநம்பிக்கையாளரும் மதம், சமுகம், அரசியல் மற்றும் அரசு பற்றிய விவாதங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள். தர்க்கமும், அதன் வழியே முடிவுகளை அடைவதும் ஒரு மரபாகவே யூதத்தில் இருக்கிறது. இஸ்லாத்திலும் இப்படிப்பட்ட அல்லது ஓரளவு இதையொத்த வாதங்களின் மூலமாக புதுப் பார்வைகளை அடையும் முறை இருக்கிறது, ஆனால் வெகு காலமாக இது மூலப் புத்தகங்களில் நிபுணர்களாகக் கருதப்படுபவர்கள் கையில் அகப்பட்டு, அரசியலில் பதவியில் இருப்போருக்கு மக்களை அடக்கும் கருவியாகி விட்டது என்றே கருதவேண்டி உள்ளது.

யூதத்தில் வாதம் புரிந்து மரபை எதிர்ப்பவர்களுக்கு எதிராக ‘ஃபத்வா ‘ கத்திகள் உயர்த்தப் படுவதில்லை. பல பத்தாண்டுகள்(decades) முன் வரை மிகவும் அதீதமாகப் பாதை மாறுபவரைச் சமூகத்திலிருந்து வெளித் தள்ளுதல் ஒரு தண்டனையாகக் கையாளப்பட்டது என்று தெரிகிறது. ஆனால் பல நாடுகளிலும் பரவி, நாடோடிகளாகவும் சிறுபான்மையினராகவும் வாழ்ந்த யூதரின் வழிமுறைகளுக்கும், பெரும் சாம்ராஜ்யங்களைப் பல நூறாண்டுகள் ஆண்ட பெருமையை இன்னமும் தம் மனதில் வைத்திருக்கும் அராபிய முஸ்லிம்களுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. நாடோடி – அகதி சமுகமாக பல நூறாண்டுகள் வாழ்ந்த யூத இனக் குழுக்களிடம் நாம் இறுகலை எதிர்பார்த்தால் அது தவறாகாது. ஆனால், நிலைப்யையும் தகர்ப்பையும் மாறி மாறி அனுபவித்த யூதரின் குழு மனப்பாங்கு பல விதமாக அமைகிறது.

ஒற்றுமை என்று பார்த்தால் இரு கூட்டத்தாரும், தமது மதம் ஒன்றுதான் உண்மையான மதம் என்று நம்புகிறார்கள். முஸ்லிம்கள் ஒரு துணைத்தேற்றமாக, மற்ற நம்பிக்கைகள் எல்லாம் தமது ஆளுமையின் கீழ் இருப்பது தகும், ஆனால் தாங்கள் மற்றவரின் ஆளுமையில் இருப்பது தகாது எனவும் பொதுவாக நம்புகிறார்கள். ‘என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நான் ஆளும் போது உன்னை நான் தக்க விதத்தில் நடத்துவேன். ஆனால் உன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, நீ என்னை தக்க விதத்தில் நடத்த மாட்டாய், அதனால் நானே ஆட்சியில் இருப்பேன் ‘ என்ற வகை வாதம் இது. இதை ஒரு தனி நபர் அல்லது குடும்ப உறுப்பினர் சொன்னால் அவரை நாம் ‘கட்டுப்பாட்டுப் பித்து ‘ (control freak) என்று உளவியல் ரீதியாக ஓரம் கட்டுவோம். பெரும் குழுக்கள் இதே மனோபாவத்துடன் வாழ்ந்தால் அது இயல்பானதாக, சாதாரணத்துவம் (normalization) அடைகிறது. உண்மையில், இது எந்த சமூகத்திற்கும் உபயோகமான மனப்பாங்கு அல்ல.

முஸ்லிம்கள் (மத சார்பற்ற ஜனநாயகம் உள்ளிட்ட) பிற சமூகங்களில் சிறுபான்மையினராக இருந்தால், (பொது ஆட்சி பிறர் கையில் இருந்தால்) அவர்கள் தம்மைத் தாமே ஆளும் தனி உரிமை பெற வேண்டும் என்றும் நம்புகிறார்கள். உலகெங்கும் முஸ்லிம் அல்லாதாரின் நாடுகளில் முஸ்லிம்கள் தொடர்ந்து பிரச்சினைகளைச் சந்திப்பதற்கு இத்தகைய நம்பிக்கைகளின் தொகுப்பு ஒரு காரணம். பொதுவாகவே, இன்று அவர்கள் ஏதோ காரணங்களால் பிறரின் கீழ் வாழ்ந்தாலும், விரைவிலேயே பிறரைத் தாம் ஆளும் காலம் வந்து விடும் என்பது அவர்களுடைய ஆழ்ந்த நம்பிக்கை. ஏனெனில் இறைவன் அவர்களுக்கு உலகை ஆளும் உரிமையை வாக்களித்திருக்கிறார் என்பது ஓர் அடிப்படை நம்பிக்கை. இன்னொன்று உலக சமூகத்தை முஸ்லிம் சமூகமாக மாற்றுவது அவர்களது அடிப்படைக் கடமையும், உரிமையும் என்றும் முஸ்லிம்களில் தீவிரவாதிகள் கருதுகிறார்கள். இதர முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இக் கருத்துகள் தம்மிடையே புழங்குவதற்கு எதிர்ப்பேதும் தெரிவிப்பதில்லை, மாறாக அது நல்ல கருத்துதான் என்றே கருதுகிறார்கள் – அதைச் செயல்படுத்தத் முன்வராத போதிலும். இதே கருத்தைப் பிற சமூகங்கள் முன்வைத்தால், அதற்குக் கடும் எதிர்ப்பைக் காட்ட எல்லா முஸ்லிம்களும் முன் வருவார்கள் என்பதுதான் இதில் முரண்.

இதே போலவே, ஆனால் பல மடங்கு குறைவான அளவில், பிற சமூகங்களின் ஆட்சியின் கீழ் வாழ்வதில் யூதர்களுக்கும் பிரச்சினை உண்டு. யூதர்களும் தம் சமூகத்தைத் தாமே ஆள விரும்புகிறார்கள். அவர்களுடைய கடவுளும் தனிப்பெரும் கடவுள். பிற கடவுள்கள் பொய்யானவர். அவர்களுக்கும் பிற மதங்கள் மீது அல்லது பிற பண்பாட்டுச் சமூகங்கள் மீது நம்பிக்கை இல்லை. முஸ்லிம்கள் போலவே அவர்களும் உங்கள் நம்பிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம் என்று வெளிப் பேச்சில் சொல்வார்கள். ஆனால், உண்மையில் இத்தகைய மதிப்பு இருக்காது. உங்களைக் கட்டாயப்படுத்தி அல்லது மனம் மாற்றி யூதராக்குவதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் பிற கடவுள்களை நம்புபவர்கள் பதிலிகளை அதாவது பொய்மையைக் கைப்பற்றியவர், கானல் நீரைத் துரத்திப் பாலையில் அலைபவர்களை ஒத்தவர்கள். அடிப்படையில் இதையே இஸ்லாமும் கருதுகிறது. பிரச்சினைகள் இத்தகைய சுய–மையப் பார்வையில் இருந்து எழுவதை இவர்கள் பார்க்கத் தயாராக இல்லை. ஆனால், யூதர்களும், முஸ்லிம்களும், ஓரளவு கிருஸ்தவர்களும் பிற இனங்களை அல்லது அடையாளக் குழுக்களை தன்மயக்-குழுவாதிகள் (ethno-centric) என்று சுலபமாகவே குற்றம் சாட்டத் தயாராக இருப்பார்கள்.

பொதுவாக, தம் சமுகங்களின் நடுவே, (அல்லது உலகிலேயே கூட) உங்களை வாழ விடுவதே தமது சகிப்புத் தன்மையைக் காட்டுகிறது, அதற்காக நீங்கள் என்றென்றைக்கும் அவர்களுக்குக் கடமைப்பட்டவர் என்று எல்லா செமிதிய மதத்தினரும் கருதுகிறார்கள். உங்களை வளர விடுவது அவர்களுக்குச் சாத்தியம் இல்லை. உங்களுக்குக் குடியுரிமை எல்லாம் கொடுத்தால் அது தேவைக்கு அதிகமான பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று வேறு கருதுவார்கள். ஆனால் என்றென்றும் மாற்று அடையாளமுள்ள நீங்கள் சந்தேகத்துக்கு உரியவர்தான் என்பதை அவர்கள் மறுக்கவோ அல்லது மறைக்கவோ போவதில்லை. பொய்மையைத் துரத்தும் உங்களை அவர்கள் வேறெப்படிக் கருத முடியும், இல்லையா ? (இதில் மார்க்ஸியரையும் சேர்த்துக் கொள்வது தவிர்க்க முடியாததாகிறது. அடிப்படையில் அதுவும் ஒரு (செமிதிய) நம்பிக்கை வழி (மதம் ?) தானே.) நீங்கள் உங்களது நம்பிக்கைகளுடன் சக மனிதராகவோ, அல்லது எல்லா உரிமைகளும் உள்ள குடிமகனாக அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் வாழ்வதோ, அல்லது சாதாரண வழியில் ஆட்சியாளராக வருவதோ அனேகமாக நடக்காது. என்றென்றைக்கும் சிறுபான்மையினராக, ஆளப்படுபவராக இருப்பதே உங்களுக்கு சரி. தாம் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் பெரும்பான்மையினரின் கருத்துப்படியான ஆட்சியே சரி என்று வாதிடும் இத்தகைய குழுவினர், தாம் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் பெரும்பான்மையின வாதத்தைக் (majoritarianism) கடுமையாக எதிர்ப்பார்கள். காட்டாக, பிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் பள்ளிகளில் அல்லது அரசு அலுவலகங்களில் முகம் மறைப்பதை அல்லது முக்காடிடுவதை அரசாங்கம் தடுக்கக் கூடாது என்றும், சவுதி அரேபியாவில் பிற முஸ்லிம் அல்லாத பெண்கள் தலையில் முக்காடில்லாமல் வெளியே செல்லக் கூடாது என்பதுதான் சரி என்றும் எதிரும் புதிருமாக வாதிடுவது. இத்தகைய மனப்பாங்கால் அடையாள அட்டைகளுக்குப் புகைப்படம் எடுக்கையில் முழுவதும் முகம் மூடிய படத்தை ஏற்க முடியாது என்று அரசாங்கம் சொன்னால் அதை எதிர்க்கக் கூடத் தயாராகிறார்கள்.

பொதுவாக யூதர்கள் பிற நாடுகளில் தம் மதப் பார்வைகளைச் சற்று அடக்கியே வாசிக்கிறார்கள் என்றாலும், 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யூதர்கள் அடக்கி வாசிப்பது தம்மையே அழித்துவிடும் என்ற முடிவுக்கு வந்து தம் தனித் தன்மையைத் தூலமாக வெளிப்படுத்துவதில் கவனம் காட்டுகிறார்கள். மேலும், யூத எதிர்ப்புப் போக்கை எங்கு கண்டாலும் அதை அம்பலப்படுத்தி அதை மேற்கொள்வோரை நாணப்படுத்துவதன் மூலம் பின்னே தள்ளி நிற்க வைக்க முயற்சிக்கிறார்கள். மேலும், இஸ்ரேலில் அரசாளும் மன்றத்தில், தத்தம் சமூகப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப் படுவதை பிற சமூகங்களுக்கு யூத தேசியம் அனுமதித்திருக்கிறது. அதற்கு மேலே போய், இஸ்ரேலின் ஆட்சியில் தலைமை எடுத்துப் பங்கெடுக்கப் பிற மதத்தினருக்கோ, பிற அடையாள சமூகத்தினருக்கோ இடம் உண்டா என்பது தெரியவில்லை. வாசகரில் யாராவது தெரிவிக்கக் கூடும் என்று நம்புகிறேன். அப்படி சமத்துவத்திற்கு வாய்ப்பு இராது என்று நான் கருதுவதால், அதற்கு மாறாக இருந்தால்தான் வியப்பு ஏற்படும்.

தம் கடவுள், தம் பாதை ஒன்றுதான் சரி என்று வாதிடும் எந்த மதமும், அல்லது அரசியல் கொள்கையும் (பொதுவான மார்க்ஸியம், குறிப்பாக மார்க்ஸிய-லெனினியம் அல்லது மாவோயிஸம்), தேசியமும், மொழிப் பற்றும் இத்தகைய சகிப்பற்ற தன்மையை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும். இதுவன்றி அவர்களிடம் தம் சமூகக் கூட்டத்தை ஒருங்கிணைக்கவும், செயலுக்குத் தயாராக்கவும், போரிடத் தூண்டுவதற்கும் தேவையான கறாரான உளவியல் கருவி வேறெதுவும் இருக்காது. ஒருங்கிணைப்பு, ஊக்கமான செயல்பாடு, போரிடுதல் என்பன இத்தகைய குழுக்களின் பொதுவான மூன்று கால்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் போர்க் குணம் கொண்ட பாதைகளாக இவை இருப்பதன் மூல காரணம், உலகை ஆள்வதில் இப் பாதைகளுக்கு இருக்கும் பேராசை (megalo-mania)யே என்று சொல்லலாம்.

இதனால் இந்த வகை இயக்கங்கள் கொடூரமானவை, வெறி பிடித்துப் பிறரை அடக்கி ஆள்பவை என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், அத்தகைய அடக்கு முறைகளுக்கு இந்த வகைச் சிந்தனையில் வாய்ப்புகள் அதிகம். இன்றைய உலக மதமான, உலக முதலாளியம் இதையே வேறு விதமாகச் செய்கிறது. அதன் முக்கியக் கருவி சற்று வேறுபட்டது. எந்த ஒரு மக்கள் குழுவையும் ஒருங்கிணைப்பது அதற்கு ஆபத்தாகும் என்பதால் அது சகட்டு மேனிக்கு எல்லா நாடுகளிலும் (உலக) மக்களை சில்லுகளாக உடைக்கவே முயல்கிறது. தனித் தனி நபராக மனிதரை ஆக்கிய பின்னர், அவரையே முரண்பட்ட கருத்துகளின் கலவையாக, பல விதமான கட்டுக்கடங்காத ஆசைகளின் தொகுப்பாக ஆக்குவதன் மூலம் சிதைக்கிறது. தொடர்ந்து சிதைக்கப்பட்ட உதிரி மனிதரால் ஒன்றிணைந்து அதற்கு எதிராக ஓர் இயக்கத்தைக் கட்டி, அதன் காட்டு வெள்ளப் போக்கிற்கு அணை போட முடியாமல் ஆக்குவதுதான் அதற்குத் தெரியும் வழி. இதை மிகத் தெளிவாக உணரும் அயதுல்லா கொமெய்னி பொன்ற இஸ்லாமியத் தலைவர்கள் உலக முதலாளியத்தை ‘ஷைத்தான் ‘ என்று அழைப்பது இதனால்தான். இதில் ஆதி கிருஸ்தவத்துக்கும் உடன்பாடு இருக்கும். ஏனெனில், பணத்தையே அது சைத்தான் என்றுதான் கருதியது. மார்க்ஸியமும் பணத்தை, மூலதனத்தை மற்றும் பதிலியை வழிபடும் எந்த முறையையும் (reification) எதிர்ப்பதை நாம் கண்டிருக்கிறோம். இதற்கு அதன் செமிதிய மூலமே காரணம்.

யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள ஓர் அடிப்படை வேறுபாடு என்னவென்றால், யூதர்கள் பிறரைத் தம் நம்பிக்கைக்கு மாற்ற முற்படுவதில்லை. பெரும்பாலும் அதை அவர்கள் விரும்புவதும் இல்லை. திருமணம் போன்ற வகைகளில் மாறி வருபவர்களை அல்லது தன்னியல்பாக மாற விரும்புவர்களை அவர்கள் விலக்குவதில்லை என்றாலும், அதையும் தவிர்க்கவே முயல்கிறார்கள். இது தவிர பெருமளவு நவீனப்பட்டு விட்ட யூத சமுகங்கள் உலகெங்கும் சிறு குடும்பங்களையே கொண்டிருக்கிறார்கள். யூத மக்கள் தொகை அதிகரித்து வரவில்லை, உலகெங்கும் குறைகிறது. இதனால், யூத தேசியம் சிறு நிலப் பரப்பைத்தான் ஆள முடியும் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. அவர்களுடைய தேசியம் பண்பாட்டளவில் உலகளாவியது – பல மொழி, பல நாட்டுப் பின்புலன் கொண்டு யூதர் வாழ்வதால். ஆனால், எதார்த்த அரசியல்படி இது பாதுகாக்கப்பட்ட சிறு தேச (enclave) அரசியல் என்றே கருதவேண்டும். அதாவது யூத தேசியம் பெரும் ஏகாதிபத்தியமாக, உலகளாவியதாக ஆவதற்கு வாய்ப்புகள் இல்லை. மாறாக, முஸ்லிம்களுக்கு உலக ஏகாதிபத்தியமாக ஆகும் பேராசை கிட்டத் தட்ட இயல்பாகவே (natural characteristic), சமூக உள்ளுணர்வாகவே (social instinct) இருக்கிறது என்பது அவர்களுடைய சமுகத்தில் கருத்துப் பரிமாற்றங்களைக் கவனிப்பவர்களுக்குப் புலப்படும். ஆனால் முஸ்லிம் தீவிரவாதிகள், பணத்தின் மூலம், உலக முதல் (global capital) வழியே யூதர்கள் உலகை ஆள்கிறார்கள் என்று பழி சாட்டுகிறார்கள். உலக மூலதனம், அராபிய மற்றும் பன்னாட்டு முஸ்லிம்கள் கையிலும் ஏராளமாக இருக்கிறது என்பதை நாம் மறந்து விடுவோம் என்று கருதுகிறார்கள் போலும். மேலை நாடுகளில் (சீனத்திலும் ஜப்பானிலும் கூட ?) யூத எதிர்ப்பு வலுவாகவே இருக்கிறது என்பதையும் நாம் மறந்து விட வேண்டும் போலும்.

யூத தேசியம் காலம் காலமாக இருந்ததென்று யூதர்களில் மரபுவாதிகள் சொல்கிறார்கள். என்றாவது ஒரு நாள் தம் மண்ணிலிருந்து பண்டைக் காலத்தில் விரட்டப்பட்ட யூத சமுகங்கள், உலகெங்கிலிருந்தும் திரும்பி வந்து, ஒன்று கூடி யூத நாடாக அமைய வேண்டும் என்பது இதன் மரபு உரு என்றாலும், பாலஸ்தினியர்கள் பல நூற்றாண்டுகளாக குடியமைத்து வாழ்கிற அதே மண்ணில் புலம் பெயர்ந்த அல்லது விரட்டப்பட்ட யூதர்கள் திரும்பி வந்து ஒரு யூத நாட்டை உருவாக்குவது எப்படி ? அதுதான் நவீன ஜயானிசத்தின் பிரச்சினை. தலையாய பிரச்சினை. என்ன சொல்லி ஒரு நியதியை இதற்கென்று உருவாக்குவது ? பல விளக்கங்கள் இதற்கு உண்டு. பலவகை மதவெறியர்கள், ஜாதி வெறியர்கள், மொழி/இன தேசியவாதிகளின் இடக்கு மடக்கு வாதங்கள், பன்னாட்டுக் கம்யுனிஸ்டுகளின் வழக்கமான அன்றன்றைக்கான அந்தர்பல்டி வாதங்கள், பன்னாட்டுப் பண முதலைகளின் ‘ஜனநாயக ‘ மாயாஜாலத் தந்திரங்கள் இவற்றோடு ஜயானிசத்தின் மூடத்தனங்களையும் சேர்க்க வேண்டியதுதானா ?

விவரங்களை ஓரளவு தெரிந்து கொள்ள மூன்று சுட்டிகளைத் தருகிறேன். இவை துவக்க கட்ட வாசிப்புகளே.

முதல் சுட்டி அமெரிக்க அரசில் வெளிநாட்டு உறவு வேலைகளில் இயங்கிய பல அனுபவசாலிகளும், அந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற சிந்தனையாளரும் சேர்ந்து கட்டியுள்ள ஒரு வலைமையம். இதில் ஓரளவு இஸ்ரேலுக்கான சாதகமான பார்வை இருக்கும் என்றாலும், அமெரிக்கருக்கே உரிய தன்னலப் பாதுகாப்புப் பார்வையும் இடையோடும். எனவே முழுவதும் ஜயானிசத்தை ஆதரிக்கும் இடம் இல்லை இது.

http://www.wrmea.com/html/focus.htm

அடுத்து ஒரு யூதப் பேராசிரியர் ஜயானிசத்தை ஒரு சுருக்கமான கட்டுரையில் விளக்குகிறார். இது ஓரளவு நடுநிலையானது என்றாலும், யூதரின் நலனை முன்வைத்து எழுதப்பட்டது. யூதரில் ஓரளவு நிதானப் பார்வை கொண்டவர்கள் கூட என்ன நிலை எடுக்கிறார் என்று பார்க்க உதவும்.

http://www.mfa.gov.il/mfa/go.asp ?MFAH00ng0

யூதரில் எல்லாரும் யூத மத வழிப் பார்வை, அல்லது யூத மக்கள் நலனை முன் வைத்த அரசியல் என்று இருப்பதில்லை. தமது ஜாதி அல்லது மதத்தை எதிர்க்கும் இந்துக்கள் இருப்பதில்லையா ? வடவரான ராமனின் படத்தைக் கொளுத்தி தன் கெளரவத்தைப் பச்சைத் தமிழர் மனதில் பெருமளவு உயர்த்திக் கொண்ட இந்து மத எதிர்ப்பாளர் சிலரைப் போல, ஜயானிசம், யூத தேசியம், யூத இன நலன் பார்வை ஆகியவற்றை சுட்டெரிக்க வேண்டும் – அப்படி எதிர்த்து வெளி வந்த சாதாரண யூதர் பாலஸ்தினியருடனும் அராபியருடனும் கூட்டமைப்பு வைத்து ஒரு சோசலிச சமுதாயம் அமைக்க வேண்டும் என்று மனப்பால் குடிக்கும் யூதரும் உண்டு. அதற்கு ஒரு காட்டு அடுத்த வலைச் சுட்டி:

http://www.balkanunity.org/mideast/english/zionism/

இவற்றை எல்லாம் படித்து – ஏற்கனவே தெளிவாக இருந்தால் குழம்புவீர்கள் என்றும், குழம்பியிருந்தால் தெளிவு அடைவீர்கள் என்றும் நம்புகிறேன். குழம்பிய குட்டைதான் தெளியும் என்று பழமொழி சொன்னாலும், தெளிந்த குட்டைதான் குழம்பும் என்பதையும் அவ் வழக்கு கருதியிருக்க வேண்டும். தெளிந்த குட்டையில் கல் வீசுவதுதான் எவ்வளவு வசீகரமானது ?

(தரிசனம் பெற்றபின் குழம்பாது என்று மரபு சார் அழகியலாளர் கருதக்கூடும். புற எதார்த்தமான இந்திய சமூகத்தின் நடுவில் இருந்து கொண்டு இப்படிக் கூட ஒருவரால் கருத முடியும் என்பதே சிரிப்பைத் தூண்டுவதுதான். ஆனால் எதிர் என்பதே ஒரு விதத்தில் புதிர்தானே ?)

14. அபு நிதால் அமைப்பு பற்றி சுருக்கமாக அறிய:

http://library.nps.navy.mil/home/tgp/abu.htm

விவரமாக அறிய:

http://www.ict.org.il/inter_ter/orgdet.cfm ?orgid=2

15. Stanley Milgram ஒரு புகழ் பெற்ற சமுக உளவியலாளர். எல்லாமே பிரதி என்று வெறுமே கூச்சலிட்டுத் தம் கருத்தை எல்லார் மீதும் திணித்து, நம் அனைவர் காதையும் செவிடாக்கிக் கொண்டிராமல், சோதனைகள் மூலம் தம் கருத்துகளை ‘உண்மை ‘ என நிறுவ முயன்றார். (உளவியலாளர் பலரின் அடிப்படை நம்பிக்கையான) அனைத்து மனிதருக்குமான பொதுவான சில உளப் பாங்குகளை, சார்புகளை, சாய்வுகளை வெளிக் கொண்டுவரப் பாடுபட்டார். இதில் சில சோதனைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதிகாரம் எப்படி அமைப்புகளில் இயங்குகிறது, தனி நபர்கள் எப்படி அமைப்பு வழிப்பட்ட அதிகாரத்துக்கு கேள்விகள் இல்லாமலே அடிபணிகிறார் என்பதை ஆராயப் புகுந்தார். ‘பணிதலும் தனி நபர் பொறுப்பும் ‘ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரை செறிவான மொழியில் எப்படி எழுதுவது என்பதைக் காட்டுகிறது:

http://home.swbell.net/revscat/perilsOfObedience.html

இவரைக் குறித்த இதர சுட்டிகள்:

http://webtext.library.yale.edu/xml2html/mssa.1406.con.html

http://www.stanleymilgram.com/milgram.html

இவை எல்லாம் துவக்க வாசிப்புகளே. ஆழப் படிக்க வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். தற்கால சமூக உளவியல் மில்கிராமின் கருத்துகளை எந்த நிலையில் வைத்திருக்கிறது என்று உளவியலாளர் யாரேனும் இங்கு எழுதித் தெரிவித்தால் நல்லது.

16. பயங்கரவாதம் என்பது இன்றைய கதை அல்ல என்பதுதான் இக்கட்டுரையின் மையம் என்றாலும், ஏராளமான புத்தகங்கள் இது பற்றி வரத் தொடங்கி இருப்பது இப்போதுதான் என்பதென்னவோ உண்மை. அதாவது உலக அரசியலில், அந்தஸ்தின் அடிப்படையில் விளிம்பில் உள்ள லத்தின் அமெரிக்க நாடுகளிலோ, பல ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலோ எத்தகைய பயங்கரவாதத்தாலோ- இடது, வலது, ஏகாதிபத்தியக் கைக்கூலிகள், ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூட்டங்கள், வெறும் கொள்ளையர் கூட்டங்கள், மத/இன/சிறு/பெரும் தேசிய இயக்கங்கள்; ஏதோ ஒரு கொள்ளை நோய், எதுவானால் என்ன – சாதாரண மக்கள் ஈ, எறும்பு, கொசு அல்லது கரப்பான் போல நசுக்கப்பட்டு, பூண்டோடு அழிக்கப்பட்ட போதெல்லாம் கையும், வாயும், கண்ணும் காதும் பொத்திக் கிடந்த மேலை நாட்டுப் பிரசுரங்கள், தற்போதைய உலக சாம்ராஜ்யத்தின் நடு மையத்தில் சுமார் 3000 பேரும், இரு பெரும் கட்டிடங்களும், சில விமானங்களும் ஒரே நேரத்தில் நாசமானவுடன் விழித்துக் கொண்டு பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டியதன் அவசர அவசியம் பற்றி, அன்றும் இன்றும் பயங்கரவாதத்தால் பீடிக்கப்பட்டு அல்லலுறும் அரசியல் அமைப்பில் வாழ்பவர்களிடம் பேசுவது என்பது மிகவும் ஆபாசமானது. ஆனால், இப்போதாவது நாறிப் போன சாக்கடையின் அடைப்பை எடுக்க வருகிறார்களே என்று கூடிய மட்டும் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டிய அவல நிலை நம்முடையது. இரும்புக் கரத்தால் மக்களை ஒடுக்கி ஆளும் நாடுகளான சீனா, ரஷ்யா எல்லாமே பயங்கரவாதத்தில் சற்று ஆடிப் போய் இருக்கையில் என்றுமே பஞ்சையான (ஆனால் ஒப்பீட்டில் குரூரம் சற்றும் குறையாத) அரசைக் கொண்ட இந்தியா எம்மாத்திரம் ? இந்தக் கட்டத்தில் பயஙகரவாதம் பற்றி யார் எழுதினாலும் படிக்க வேண்டிய வலுக் கட்டாயம் – அது உள்ளூர் M.B.ராமனாகவோ, பிரான்ஸின் பெர்னார்ட் லெவியாகவோ, அமெரிக்காவின் வால்டர் லெக்கராகவோ, எவரானாலும் சரி. நமக்கு வேண்டியது தகவல், தகவல்…

வால்டர் லெக்கர் (walter laqueur) யார் ? கீழ்க்கண்ட சுட்டியில்

http://www.laqueur.net/english3.html

அவரைப் பற்றியும் அவர் எழுதிய புத்தகங்கள் பற்றியும் சுருக்கமாக தகவல் உண்டு. சுமார் 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதித் தள்ளியிருக்கிறார். ரஷ்யப் புரட்சியில் இருந்து, உலக யுத்தங்கள், ஹிட்லரின் மாயாஜால அரசியல், யூதருக்கேற்பட்ட இனப் படுகொலை, மத்திய கிழக்கு/மேற்கு ஆசியாவில் அராபியருக்கு ஏற்பட்ட பெரும் குழப்பங்கள் என்று பொதுவாக பெரும் சமூகப் புரட்டல்களும் கடும் குழப்பங்களும் ஏற்படும் சமூகங்கள் அக் காலகட்ட வரலாறு ஆகியன குறித்து எழுதுகிறார். இவர் இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியிலிருந்து தப்பித்த இளம் யூத அகதிகளில் ஒருவர். அண்மைக் காலம் வரை தொலை இலக்குக்கான அரசியல் உத்திகளும் பன்னாடுகளும் பற்றிய ஆய்வுக்கான கூட்டுக் குழுவின் தலைவராக (Research Council of the Center for Strategic and International Studies) அமெரிக்கத் தலை நகரமான வாஷிங்டனில் இயங்கியவர். பிறகு அதே அமைப்பில் ‘தனிப் பெருமை பெற்ற ‘ ஆய்வாளராக (distinguished scholar) இயங்குகிறார். ஜயானிசத்தின் வரலாறு குறித்தும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் எனக் குறிப்பு தெரிவிக்கிறது. இப்புத்தகத்தின் மகிமை என்னவென்றால், யூதரின் முகமூடியைக் கிழித்தெறியப் பாலஸ்தினியர் நடத்தும் ஒரு வலை மையத்தில் இப்புத்தகம் பெருமளவும் கறாரான வரலாற்றுப் பார்வையுடன் எழுதப்பட்டதாக முன் மொழியப் படுகிறது. அந்த வலை இடத்துக்குச் சுட்டி இதோ:

http://www.palestineremembered.com/Acre/Books/Story818.html

இதே வலைக் களத்தின் இன்னொரு இடத்தில் ஜயானிசம் பற்றிய பாலஸ்தினியரின் பார்வை விரிவாகக் கொடுக்கப் படுகிறது. அதையும் படிக்க முடிந்தால் நல்லது.

http://www.palestineremembered.com/Acre/Palestine-Remembered/Story452.html

எல்லாத் தரப்பினரின் வாதங்களையும் கேட்டுக் கொள்ளுதல் உதவும்.

லெக்கரின் வேறு சில புத்தகங்கள் பற்றிய தகவல்கள்:

http://www.nybooks.com/authors/670

http://www.nybooks.com/articles/11987

பயங்கரவாதம் பற்றிய லெக்கரின் சமீபத்திய மூன்று புத்தகங்கள் இவை:

1) A History of Terrorism /by Walter Laqueur /Transaction Books/ March 2001

2) The New Terrorism- Fanaticism and the Arms of Mass Destruction / by Walter Laqueur /Oxford University Press /Published: September 2000

3) No End to War-Terrorism in the Twenty-First Century/ by Walter Laqueur/ Continuum Publishing /Published: May 2003

இவற்றில் இரண்டாவது புத்தகம் பயங்கரவாதம் வெல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் இடுவதாகத் தெரிகிறது. அவையாவன- கவனமான திட்டமிடுதல், திடார் திருப்பங்களுக்கேற்ப அவசர மாற்றுகளைத் தயாரிக்க முடியும் திறமை, சிறு குழுக்களாக இயங்குவது, பெரு நகரங்களின் கூட்டத்தில் கிட்டும் அடையாளமற்ற தன்மை, மேலும் வற்றாது ஊறிக் கொட்டும் பண வசதி.

17. இது பழம் சரக்கு போல இருக்கிறது. மாஒ போன்ற தொலை நோக்குத் திட்டம் தீட்டும் போராளிகள் சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்பே இதையெல்லாம் தமது போர்க்கள உத்திகளில் எழுதிப் போகவில்லை ? முதலாளிய நாட்டில் சிலதெல்லாம் காலம் தாழ்த்தித்தான் சரக்காக மாறும் போலும்!

aacharakeen@yahoo.com

Series Navigation

author

ஆசாரகீனன்

ஆசாரகீனன்

Similar Posts