தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 4

author
0 minutes, 24 seconds Read
This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


ஆங்கிலத்தில் ஆராய்ச்சிக் கட்டுரைகள், அறிக்கைகளை இணையத்தில் பெறுவது எளிதாக உள்ளது.பல இணையதளங்களில் குறிப்பிட்ட துறைகளில் வெளியாகும் கட்டுரைகள் கிடைக்கின்றன.உதாரணமாக

சமூக அறிவியல் துறைகளில் வெளியாகும் கட்டுரைகளை Social Science Research Network (SSRN)(www.ssrn.com) தளத்திலிருந்து பெறமுடியும்.Social Science Gateway உட்பட பல தளங்களிலிருந்து கட்டுரைகளை பெறமுடியும்.அல்லது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றி

வெளியாகியுள்ள கட்டுரைகள் குறித்த தகவல்களைப் பெறமுடியும்.Ingenta, Project Muse போன்றவற்றிலிருந்து நூற்றுக்கணக்கான journal களில் வெளியாகியுள்ள கட்டுரைகளை படிக்க/பெற முடியும்.தமிழில் இணையத்தில் வெளியாகும் கட்டுரைகள் போன்றவற்றை இப்படி எளிதாகப் பெறமுடியுமா ? இணையத்தமிழ் குறித்து ஒரு தகவல் தொகுப்புத் தளம் உள்ளதா ?. SSRN கட்டுரைகளை பரீசிலித்து வெளியிடுகிறது.அவை வேறொரிடத்தில் வெளியிடப்பட்டிருந்தாலும் இத்தளத்திலும் அவை கிடைக்கும். வேறு சில தளங்கள் கட்டுரைகளை பொருள்/துறை வாரியாகத் தருகின்றன.இவையும் வெளியிடப்பட்ட/வெளியிடப்படாத கட்டுரைகளை பரீசிலித்து தகவல் தொகுப்பில் பதிவு செய்கின்றன.ஒரு சில தளங்களில் பதிவு செய்து கொண்டு கட்டுரை ஆசிரியர்/ஆய்வாளர் தன் கட்டுரையை இத்தளம் மூலம் பலருக்கும் கிடைக்கச் செய்ய முடியும்.இத்தகைய சாத்தியப்பாடுகளை நாம் கவனிக்க வேண்டும்.தகவல் பரவலாக்கம் இணையம் மூலம் எளிது.உதாரணமாக ஆரம்ப காலதமிழ் நாவல்களும், பாலினமும் குறித்த ஒரு கட்டுரை Journal of Womens History ல்வெளியாகியுள்ளது(1) என்ற தகவல் நவீனத் தமிழ் இலக்கியம் குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு கிடைக்கச் செயவது எப்படி ? ஆய்வாளர்களுக்கு மட்டுமின்றி பிறருக்கும் இதை எப்படித் தெரிவிப்பது ? இணையதளம் ஒன்றின் மூலம் இதைச் செய்ய முடியும்.அதில் தகவல் பதிவினை வாசகர்/ஆய்வாளர் செய்வதற்கு வழி இருந்தால் இது சாத்தியம். இது போல் தேவைப்படும் தகவல்கள் குறித்தும் பதிவு செய்ய வழி இருக்கவேண்டும். இணையம் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் நாட்டினைப்

பற்றிய ஆராய்ச்சிகள் குறித்து அறிந்து கொள்ள உதவ முடியும். ஆனால் இணையத்தில் தமிழில் என்னனென்ன உள்ளன, ஆங்கிலத்தில் தமிழ் நாடு, தமிழ்ப்பண்பாடு/கலாச்சாரம் போன்றவை குறித்த

தகவல் தொகுப்புகள் எவை என்பதை அறிய உதவும் ஒரு தகவல் தளம் தேவை.கொஞ்சம் யோசித்தால் இணையம் மூலம் தகவல் பரிமாற்றம் என்பதை எவ்வளவு எளிதாகச் செய்யமுடியும் என்பது புலனாகும்.தொலை நோக்கில் இத்தகைய முயற்சிகளின் பயன் குறித்து சிந்திக்க வேண்டும்.இன்று தமிழில் உள்ள இணைய நூலக முயற்சிகள், வெளியீட்டு முயற்சிகள் குறித்து ஒரு விரிவான ஆய்வு தேவை.இவற்றின் நிறை,குறைகள் குறித்தும், அடுத்தக்கட்ட முயற்சிகள் குறித்த ஒரு விவாதமும் தேவை.அது மட்டுமின்றி ஒரு தளத்தில் உள்ளதை இன்னொரு தளம் மூலம் பெறுவது உட்பட பல நடைமுறை பயன்பாடுகளை சாத்தியமாக்குவது எப்படி என்பதையும் பரீசிலிக்க வேண்டும். திருக்குறள் ஒரு தளத்தில் இருந்தால் இன்னொரு தளத்தில் அதை பயன்படுத்திக் கொண்டு வேறு சில முயற்சிகளில் ஈடுபடுவது குறித்து யோசிக்க வேண்டும்.மீண்டும் திருக்குறளை உள்ளிடுவது வீண். நம் முயற்சிகள் ஒத்திசைவாக இருக்க வேண்டும், synergy என்பது முக்கியம்.

சென்ற பகுதியில் wiki ஐ அடிப்படையாகக் கொண்டு என்ன செய்ய முடியும் என்பதை குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கு ஒரு உதாரணம் http://knowledge-bits.org

இது ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த தகவல்களை,விவாதங்களை இணையத்தில் ஒரு கூட்டு முயற்சியின்

மூலம் செய்யமுடியும் என்பதற்கு ஒரு உதாரணம்.யார் வேண்டுமானாலும் பங்கு பெற முடியும். பெண்ணியம் குறித்த ஒரு தளம் தமிழில் wiki ஐ அடிப்படையாகக் கொண்டிருந்தால் இலக்கியம்,சட்டம்,அரசியல்,அறிவியல் தொழில்நுட்பம் என பலதுறைகளில் வெளியாகும்/வெளியாகிய பெண்ணியம் தொடர்புடையவற்றை பகிர்ந்துகொள்ள முடியும்.மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரை குறித்த தகவல்களை அதில் பதிவு செய்ய முடியும்.இதைப் படிக்கும் ஒரு சிறுபத்திரிகையாசிரியர் அக்கட்டுரையை கட்டுரையாசிரியருடன் தொடர்பு கொண்டு மொழிபெயர்த்து வெளியிடக்கூடும். வேறொரு ஆராய்ச்சி மாணவருக்கு அதிலிருந்து சில தகவல்கள் கிடைக்கலாம். இக்கட்டுரைகள் வெளியாகியுள்ள JOURNAL OF WOMEN ‘S HISTORY போன்ற வெளியீடுகள் எத்தனை பல்கலைகழக நூலகங்களில் கிடைக்கின்றன ?.புஷ்பவனம் குப்புசாமியின் நாட்டுப்புறப் பாடல்கள்,இசை குறித்து பென்சில்வேனியா ஸ்டேட் பல்கலைகழகப் பேராசிரியர் ஒருவர் ஆராய்ந்துள்ளார் என்பது சிறுபத்திரிகை வட்டாரத்தில் எத்தனை பேருக்குத் தெரியும் அல்லது திருப்பூர் நகரின் வளர்ச்சி,தொழில்மயமாதல் குறித்து ஆராய்ந்துள்ள ஷரத் சாரி, விஜயபாஸ்கரின் ஆய்வுகள் குறித்து தமிழில் ஏதாவது எழுதப்பட்டுள்ளதா ?. தமிழ் நாடு பற்றிய செய்யப்பட்ட ஆய்வுகள் பலவற்றைப் பற்றி தமிழில் எதுவுமே, ஒரு குறிப்பு கூட இல்லை என்ற நிலையை மாற்ற வேண்டாமா ?

ஒரு தொழில்நுட்பம் நம்மை எட்டாத போது நமக்கு வேறு வழியேஇல்லையா என்று வருந்துவோம். ஆனால் அதைவிட சிறந்த தொழில் நுட்பம் கிடைக்கும் போது மாறுவது எளிதாக இருக்கும்.உதாரணமாக

தொலை பேசி வசதி தொழில் நுட்ப காரணங்களால் தர முடியாத இடங்களில் கூட செல்போன் வசதி

தர முடிகிறது. ஒரு காலத்தில் தட்டச்சு பயில்வது மத்தியதர வர்க்கத்தினருக்கு தவிர்க்கமுடியாத ஒன்றாக

இருந்தது, ஏனெனில் அது வேலைவாய்ப்பினை அதிகரித்தது. ஆனால் இன்று கணினி மூலம் எத்தனையோ

வேலைகளை செய்ய முடிகிறது.தட்டச்சு கற்காமல் கணினியை பயன்படுத்த முடியும். தவளைப்பாய்ச்சல்

(leapfrogging) என்ற சொல் முன்னேற்றம் குறித்த நூல்களில்,அறிக்கைகளில் அதிகம் பயன்படுத்தப்படும்

சொல்.தமிழில் ஒரு தவளைப்பாய்ச்சலிற்கு இணையம் உதவும்.அச்சு யுகத்திலிருந்து இணைய யுகத்திற்கு

தமிழை முன்னெடுத்து செல்வதுடன், அச்சு யுகத்தின் நிகழ்த்தப்பட்டவற்றின் அடிப்படையில் அடுத்த

கட்டத்திற்கு செல்ல முடியும்.

தமிழில் இணையம்,கணினியை அடிப்படையாகக் கொண்ட முயற்சிகளுக்கு உதவ ஒரு நிதியம்/அமைப்பு

தேவை.இதன் மூலம் புதிய சோதனை முயற்சிகளுக்கு தேவையான ஆதரவை கொடுக்க வேண்டும். இன்னும்

5 ஆண்டுகளில் தமிழில் இணையம் மூலம், கணினி மூலம் இவையெல்லாம் சாத்தியப்பட வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கு தகுந்தபடி முயற்சி செய்யலாம்.உதாரணமாக இன்னும் 5 ஆண்டுகளுக்குள் தமிழில் செய்யப்பட்ட இலக்கிய ஆய்வுகள், தமிழ் இலக்கியம் பற்றி பிற மொழிகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின்

ஒரு தகவல் தொகுப்பும்,கட்டுரை பரிமாற்றத்திற்கு உதவும் இணையதளமும் தேவை என்று தீர்மானித்து

அதற்கான முயற்சியில் ஈடுபடலாம்.இணையக் கலைக்களஞ்சியம், இணையம் மூலம் அறிவியல் தமிழை

வளர்ப்பது, கலைச்சொல்லாக்கம்,இணையம் மூலம் தமிழ் அகராதியை உருவாக்குவது என்று பலவற்றை திட்டமிட்டு செய்ய முடியும்.உலகெங்கும் உள்ள தமிழர்களின் அறிவு,ஆற்றல்,உழைப்பை நாம் இணையம் மூலம் திரட்ட முடியும்.பல்வேறுவகையான திறன்களை இதில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இக்கட்டுரையின் நோக்கம் ஒரு சில சாத்தியப்பாடுகளை உங்கள் முன்வைத்து, சில கனவுகளையும்,கேள்விகளையும் முன்வைப்பதுதான்.இது ஒரு விரிவான தகவல் அறிக்கையோ அல்லது திட்ட அறிக்கையோ அல்ல.

விரிவாக திட்டங்கள், தேவையான முயற்சிகள், பிற மொழிகளில் செய்யப்பட்டுள்ளவற்றிலிருந்து நாம்

கற்க வேண்டியது குறித்து ஒரு பரந்த விவாதம் தேவை.இணையம் என்பது ஒரு கற்பகத்தரு. அதை

எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம், ஒரு தவளைப்பாய்ச்சல் மூலம் அடுத்த கட்டத்திற்கா இல்லை

துண்டுதுண்டுகாக அங்கிங்கும் செய்யப்படும் முயற்சிகளுடன் நின்றுவிடுவோமா ?.இதற்கான பதில் நம்மிடம்தான் இருக்கிறது.

(1)OLD NORMS IN NEW BOTTLES:Constructions of Gender and Ethnicity in the Early Tamil Novel

Sita Anantha Raman JOURNAL OF WOMEN’S HISTORY, VOL. 12 NO. 3,2000

இன்னொரு கட்டுரை EMOTION, IDENTITY, AND THE FEMALE SUBJECT

Tamil Women’s Magazines in Colonial India, 1890–1940 Mytheli Sreenivas JOURNAL OF WOMEN’S HISTORY VOL. 14 NO. 4 2003

ravisrinivas@rediffmail.com

Series Navigation

Similar Posts