உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 1

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

பரிமளம்


எண்ணங்கள் – டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி

நாற்பத்தி ஒன்றாம் பதிப்பு 1997 கங்கை புத்தக நிலையம்.

முதற் பதிப்பு 1976

இந்நூல் எழுபதுகளின் ஆரம்பத்தில் விகடனில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு. ஏறக்குறைய முப்பதாண்டுகள் பழமையான ஒரு புத்தகத்தை இப்போது திறனாய்வு செய்வது அவசியமா என்ற தயக்கம் ஏற்படவே செய்தது. இருந்தாலும் இந்தப் பதிப்பு வெளிவரும் வரை நூலாசிரியர் இந்நூலில் மாற்றங்கள் எதையும் செய்யவில்லை என்பது இந்நூற் கருத்துகளுடன் அவர் இன்னமும் உடன்படுவதாகவே கருத இடம் தருகிறது. ஆகவே காலம் கடந்தாலும் பரவாயில்லை என்னும் ஆறுதலுடன் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். இதற்கு முன் இந்நூலை நான் படித்ததில்லை என்பதும் தாமதத்துக்கான ஒரு காரணமாகும்.

புத்தகத்தின் ‘என்னுரை’யிலிருந்து ஒரு பகுதி:

{கடந்த பதினைந்து ஆண்டுகாலமாக மனவளர்ச்சி சம்பந்தமான பல புத்தகங்களைப் படித்தேன். சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கினேன். நான் என்னத் திருத்திக்கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சிகளின் முனைப்புத்தான் இது. மனத்தத்துவம் பற்றியும் அதீத மனம் (Para psychology) பற்றியும், உள சிகிச்சை பற்றியும் கிடைத்த தகவல்களை எல்லாம் படித்தேன். படிக்கப் படிக்க, இவை எல்லாம் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இவ் வாழ்க்கையில் கிடைத்ததே என மகிழ்ந்தேன். (என்னுரை பக்.9)}

இதைப் படிக்கும் ஒரு சராசரி வாசகருக்கு நூலாசிரியனின் உழைப்பும், ஆர்வமும், கல்வியறிவும் கண்டிப்பாக மலைப்பை ஏற்படுத்தக்கூடியன. ஆனால் Para psychology அறிவியல் இல்லை என்பதையோ, அறிவியல் உலகம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையோ அந்த வாசகர் அறியமாட்டார். வாசகரின் அறியாமை உதயமூர்த்தியின் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது.

‘அதீத உளவியல் (Para psychology) என்பது நம் வாழ்வில் நிகழும் அசாதாரணமான, இயல்புக்கு மாறான, பகுத்தறிவால் விளக்க இயலாத, காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட, விசித்திரமான சம்பவங்களையும் நிகழ்ச்சிகளையும் பற்றி ஆராயும் ஒரு துறையாகும். விஞ்ஞானம் எல்லாவற்றையும் கண்டுபிடித்து விடவில்லை; விஞ்ஞானத்தால் விளக்க இயலாத பகுதிகள் உலகில் பல உள்ளன. விளக்கம் இல்லாத இவற்றை ஆய்ந்து விளக்குவது அதீத உளவியலின் பணி’ என்பது அதீத உளவியல் அறிஞர்களின் வாதம்.

காகம் கரைந்தால் வீட்டுக்கு விருந்தினர் வருவார்கள் என்பது ஒரு நம்பிக்கை. காகம் கத்திய பல நாட்களில் வீட்டுக்கு விருந்தினர் வந்தும் இருப்பார்கள். இதற்கு அறிவியலிடம் விளக்கம் கேட்டால் விடை கிடைக்காது. ‘இரண்டுக்கும் தொடர்பில்லை; இரண்டும் தற்செயல் நிகழ்வுகள்’ என்றுதான் பதில் கிடைக்கும். இங்குதான் அதீத உளவியல் நுழைகிறது. அறிவியலால் விளக்க இயலாத பகுதி இது. நாங்கள் விளக்கம் தருகிறோம் என்று அதீத உளவியல் விஞ்ஞானிகள் அறிவிக்கின்றர்.

‘தூரத்திலிருக்கும் உறவினர் தான் இன்று ஊருக்குப் போக வேண்டும் என்று நினைத்ததும் அந்த நினைப்பு, எண்ணம் அவர் மூளையிலிருந்து வெளிவந்து காற்றில் மிதந்தபடியே இந்த ஊருக்கு வருகிறது. அதைக் காகம் தன் மூளையில் வாங்கிக் கொள்கிறது. வாங்கியதை வெளிப்படுத்த காகம் கத்துகிறது. கத்துவதைக் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் விருந்தினர் வருகையை அறிகிறார்கள்.’ இது அதீத உளவியல் விஞ்ஞானிகளின் விளக்கம். இது போன்ற விளக்கத்தைக் கொடுப்பவர்கள் சாதாரண மனிதர்களல்லர். நன்கு படித்து அறிவியலில் டாக்டர் பட்டங்களைப் பெற்றவர்கள். பல்வேறு விதமான ஆராய்ச்சிகளுக்குப் பிறகே இந்த விளக்கங்களை வந்தடைந்ததாகவும் கூறுகிறார்கள். அதீத உளவியல், அறிவியலின் ஒரு பகுதி என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் இது பற்றி ஏராளமான புத்தகங்களையும் எழுதிக் குவிக்கிறார்கள். அதோடு பல பல்கலைக் கழகங்கள் இம்மாதிரியான ஆய்வுகளுக்கு இடம்கொடுப்பதும் பல பல்கலைக் கழகங்களில் இது பாடமாக இருப்பதும் இவர்களுக்கு ஊக்கத்தையும் மக்களிடத்தில் மயக்கத்தையும் ஏற்படுத்துகிறன்றன.

மற்ற அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளைப் போலக் கறாரான, கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நிரூபிக்கப்படுவதில்லை என்பதால் அறிவியல் உலகம் இந்த ஆய்வுகளையும் புத்தகங்களையும் ஏற்றுக்கொள்வதில்லை. பொய்யான அறிவியல் (Pseudo Science) என்று இவற்றை நிராகரிக்கிறது. ஆனால் பகுத்தறிவின் ஆய்வுக் கண் கொண்டு நோக்காமல் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் உதயமூர்த்தி போன்றவர்கள் இவற்றைக் கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

‘எண்ணமாவது, காற்றில் மிதப்பதாவது, காகம் அதை உணர்வதாவது’ என்று ஐயுறுபவர்களுக்குப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் :

{(ரமணர் வாழ்ந்த அறைக்குள் நுழைந்தபோது) பேச முடியாத பேரின்பநிலை என்கிறார்களே, அதன் பொருளை என்னால் உணர முடிந்தது. அவர் இறந்துவிட்டதாக என்னால் கொள்ள முடியவில்லை. அவரது கனிவும் கருணையும், அன்பும், அறிவும் எண்ணங்களாக அங்கே மிதப்பதை – நம்மை ஊடுருவுவதை – நான் உணர்ந்தேன். (பக்.36)}

{(அமெரிக்க நண்பர்களுடன் காஞ்சிப் பெரியவரைப் பார்த்தபோது) கனிவு எனும் எண்ணச்சக்தி எங்களை ஊடுருவிக்கொண்டிருந்தது. (பக்.36)}

{மனிதர்களும் சாகிறார்கள். ஆனால் எண்ணங்கள் சாவதில்லை. அவை காற்றில் மிதக்கின்றன. (பக்.37)}

{நமது எண்ணங்கள் செயல்களாகி, பழக்கங்களாகும்போது, நமது எண்ணங்களே நமக்கு மறந்து போயிருக்கலாம். ஆனால் நமது எண்ணங்கள் நம்மைச் சுற்றிப் பரவுகின்றன. பிறரைப் பாதிக்கின்றன என்பதை மட்டும் மறுக்க முடியாது. எண்ணம் ஒரு சக்தி! (பக்.44)}

{எண்ணங்களை, வார்த்தைக்கு அப்பாற்பட்ட ஒரு வித சக்தி மூலம் மிருகங்கள் உணர்ந்து கொள்கின்றன. ஓர் ஊரில் நாய்களைப் பட்டியில் விட்டுவிட்டு சொந்தக்காரர்கள் வெளியூர் சென்றார்கள். அவர்கள் திரும்பி வரும் நாளன்று பட்டியிலிருந்த நாய்கள் மிக சாதாரண முறையில் குரைத்ததையும், பழகியதையும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்ததையும் பட்டிக்காவலர்கள் கண்டார்கள். (பக்.47)}

{மின்காந்த சக்தி புகாத காங்கிரீட் அறைக்குள்ளிருந்து எண்ணங்களை வெளியில் அனுப்ப முடியும். (பக்.48)}

{சோவியத் ரஷ்யாவில்…. மனம் மூலம் மாஸ்கோவிலிருந்து லெனின்கிராடிற்குச் செய்தி அனுப்பினார்கள். இதைப் பற்றி அறியும் போது அமெரிக்க அரசாங்கத்திற்குக் கவலை ஏற்படுகிறது. ஏனெனில் தனது சோதனைச் சாலையில் அமர்ந்த வண்ணம் ஒரு ரஷ்ய மன விஞ்ஞானி, அமெரிக்க ஜனாதிபதியின் மனதில் ரஷ்யாவைப் பற்றி என்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்று எளிதில் அறிந்துகொள்ளக் கூடும். பிறகு மாற்றுக்குத் தன் எண்ணம் ஒன்றைச் செலுத்தி அமெரிக்க ஜனாதிபதியின் மன ஓட்டங்களை மாற்றிவிட முடியும். (பக் 48)}

எண்ணங்களின் சக்தியை இவ்வாறெல்லாம் விளக்கும் உதயமூர்த்தியின் எண்ணம் எப்படிப் பட்டது என்பதை அறிந்துகொள்ள மேற்கண்ட பகுதிகள் உதவும். இறந்துபோனவர்களின் எண்ணங்கள் இன்னும் காற்றில் மிதப்பதாகக் கதை வேறு! பாரதிதாசனின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘மூட நம்பிக்கைகளின் முடைநாற்றம் வீசும்’ இப்படிப்பட்ட குப்பைகள் நிறைந்த ஒரு புத்தகம் இது. ஓரு அறிவியல் ஆராய்ச்சியாளர் பகுத்தறிவுக்கொவ்வாத கருத்துகளை வெளியிடுவது புதுமையானதல்ல என்றாலும் தமிழ்ச் சமூகத்தில் கேள்விக்கிடமில்லாமல் ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பதற்குரிய தகுதி உதயமூர்த்திக்கு இல்லை. தனது வெளிநாட்டு முத்திரையையும் படிப்பையும் பயன்படுத்தி இவர் விற்பனை செய்யும் சரக்கு தெருவோரத்தில் ஆண்மையைப் பெருக்க விற்கப்படும் லேகியத்தைவிடவும் கேவலமானது.

‘இந்த மனச்சக்தியையும், எண்ணச் சக்தியையும் பற்றி நம் ஞானிகளும் யோகிகளும் முன்னரே அறிந்துள்ளனர். நமது மனத்தத்துவம் பழமையானது; நமது ஞானிகள் போற்றற்குரியவர்கள். மேல்நாட்டு விஞ்ஞானிகள் இப்போது இவர்களை வியப்புடன் பார்க்கிறார்கள். நம்முடைய யோகச் சாதனைகளின் விளைவாக இன்று விஞ்ஞானமே மாற்றி எழுதப்படுகிறது.’ என்றெல்லாம் பலவாறாக உதயமூர்த்தி பழம்பெருமை பேசுவதோடு இவற்றையெல்லாம் கேள்விக்குள்ளாக்கும் தமிழ்ப்பகுத்தறிவு இயக்கத்தை அவ்வப்போது குறைசொல்லவும் தயங்கவில்லை.

***

அதீத உளவியல் எண்ணங்கள் காற்றில் மிதந்து கொண்டிருப்பதை ஆய்வு செய்வதோடு மனதிலிருந்து மனதுக்குச் செய்தி அனுப்புதல் (Telepathy), எங்கோ நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கூடிய, பேச்சுகளைக் கேட்கக் கூடிய திறமை (clairvoyance & clairaudience), எதிர்கால நிகழ்வுகளை முன்னரே உணரும் திறன் (precognition), எண்ணச்சக்தியைப் பயன்படுத்தி பொருள்களை நகர்த்தும், வளைக்கும் திறமை (psychokinesis – mind over matter), முற்பிறவி பற்றிய எண்ணங்கள் (Reincarnation), நம் உடம்பை விட்டு நாம் அப்பால் செல்வது (Out-of-body experience), எமனிடம் போய் மீண்டுவருவது (Near death experience), அற்புத நிகழ்வுகள் ( Miracles), ஹிப்னாடிசம், சாமியாடுதல் (Trance) போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டுள்ளது. இவற்றை நிரூபிப்பதற்காக அதீத உளவியலாளர்கள் தரும் சான்றுகள் அனைத்தும் சந்தேகத்துக்குரியவை. ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோலைப் போல தரமான அறிவியல் சோதனைக்கு முன் தோல்விகண்டவை. ஆனால் உதயமூர்த்தி இவற்றையெல்லாம் வழக்கம்போல அறிவியல் உண்மைகளாக ஏற்றுக்கொள்கிறார்.

புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:

{எண்ணங்களின் சக்தி அனுபவபூர்வமாகவும், விஞ்ஞானச் சோதனைகள் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்குமுன் ஓர் ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஆகாயத்திலிருந்த கருமேகக் கூட்டங்களை நோக்கி எண்ணங்களைச் செலுத்தினார். தம் சோதனைச் சாலையிலிருந்தவண்ணம் அந்த மேகக்கூட்டம் கலையவேண்டும் என்று எண்ணினார். தொடர்ந்து – உணர்ச்சிவசப்பட்டு ஐந்து நிமிடங்களுக்கெல்லாம் மேகம் கலைந்தது. இதை மீண்டும் மீண்டும் செய்து காட்டினார் அவர். (பக்.27)}

{மனவியல் அறிஞர்கள் சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள், ‘நமது ஆழ்மனத்தில் பழையகால நிகழ்ச்சிகள் மட்டும் அல்ல, நமது முற்பிறப்பு நிகழ்ச்சிகள் – சம்பவங்களும் கூடப் பதிவாகியிருக்கின்றன’ என்று (பக்.82)}

{நமது ஊரில் சிலருக்குச் சில சமயம் சாமி வந்து விடுகிறது. அவர்கள் அப்போது புலன்றிவில் இருப்பதில்லை. அப்போது அவர்கள் கூறும் விஷயங்கள் பிரபஞ்ச அறிவிலிருந்து பெறப்படுகின்றன. (பக். 108)} (சில நேரங்களில் மக்களை ஏமாற்றுவதற்குச் சாமியாட்டம் பயன்படுகிறதென்பதை உதயமூர்த்தி ஒத்துக்கொள்கிறார் என்றாலும் அடிப்படையை மறுக்கவில்லை)

இவ்வாறே ஹிப்னாடிசம் (பக். 87, 88, 92, 93), நம்பிக்கையின் மூலம் குணப்படுத்துதல் (faith healing பக். 29, 30, 69, 70), போன்றவற்றையும் சிறப்பித்துக்கூறுகிறார்.

(தொடரும்)

janaparimalam@yahoo.com

Series Navigation

author

பரிமளம்

பரிமளம்

Similar Posts