தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 3

author
0 minutes, 5 seconds Read
This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


கலைக்களஞ்சியம் என்றால் Encyclopedia Britanica தான் நினைவிற்கு வருமள்விற்கு புகழ் பெற்றது Encyclopedia Britanica. இன்று அதற்கு சவால் விடும்வகையில்Wikipedia என்ற கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது.அதுவும் கூட்டுமுயற்சியினால், இணையம் மூலம். அது மட்டுமல்ல இந்த முயற்சி வேறு பல திட்டங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது.மூன்று ஆண்டுகளுக்குள் 1,50,000 கலைக்களஞ்சியக் குறிப்புகளை வெளியிட்டுள்ள wikipedia யாரும் பங்கேற்கலாம், ஒருவர் எழுதியதை இன்னொருவர் வளப்படுத்தலாம், கூட்டு முயற்சி மூலம் அறிவை பரவலாக்கலாம் என்பதை நீருபித்துள்ளது.இதில் சிறப்பான அம்சம் எனவெனில் இம்முயற்சி பலவிதங்களில் ஒபன் சோர்ஸ் முயற்சிகளுடன் ஒப்பிடத்தக்கது.

இதனைப் பற்றி பெங்க்லர் Coase ‘s Penguin கட்டுரையில் ஆராய்ந்துள்ளார்.உலகெங்கும் தன்னார்வ செயல்பாடுகளால் உருவாக்கப்படும் இக்கலைகளஞ்சியம் குறுந்தகடு வடிவிலும் கிடைக்க உள்ளது. கணினி, இணைய யுகத்தில் peer review முறையை பயன்படுத்தி தரத்தினை மேம்படுத்தி, அதே சமயம் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கலைகளஞ்சியம், ஒரு சிறப்பான வெளியீட்டிற்குத் தேவை அறிவினைப் பகிர்ந்து கொள்ளும் மனோபாவமும், அந்த மனோபாவத்தை சரியாக பயன்படுத்துதலுமே என்பதை நீருபித்துள்ளது. சமர்பிக்கப்படும் ஒவ்வொரு கட்டுரையும் முறையாக பரீசிலிக்கப்பட்டு விவாதிக்ப்பட்டு வெளியிடப்படுகிறது.இதில் தகவல்களை சேர்ப்பது அல்லது update செய்வது எளிது. எழுதப்பட்டுள்ளதில் இது விடுபட்டிருகிறது என்றோ அல்லது இதுவும் பொருத்தமானது என்றோ உலகின் எந்த மூலையிலுள்ள ஒருவரும் சுட்டிக்காட்ட முடியும்.கூட்டு முயற்சி என்பதால் இதில் ஒரு சிலர் மட்டுமே எழுத முடியும் அல்லது எழுத அனுமதிக்கப்படுவர் என்ற வரையரை இல்லை.

விகி(wiki) என்ற ஒபன் சோர்ஸ் வடிவமப்பு மென்பொருளை அடிப்படையாகக் கொண்டது இம்முயற்சி. இப்போது பிரிட்டானிக்கா இணைய தளத்தைவிட இதை நாடுவோரின் எண்ணிக்கை அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.விகியை அடிப்படையாகக் கொண்டு எதைப்பற்றி வேண்டுமானாலும் ஒரு இணைய நூலகம்/தொகுப்பை உருவாக்க முடியும்.உதாரணமாக சமீபத்தில் விகியை அடிப்படையாகக் கொண்டு அறிவுசார் சொத்துரிமை குறித்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.பாட நூல்கள்,அகராதிகள்,கலைக்களஞ்சியங்களை உருவாக்க இது பொருத்தமான முன்மாதிரி.இதை உருவாக்கிய ஜிம்மி வேல்ஸ் தனது முந்தைய முயற்சிகளிலிருந்த கற்ற அனுபவங்களின் அடிப்படையில் இதை வெற்றிகரமாக செயல்படவைத்தார்.

இத்தகைய முயற்சிகளுக்குத் தேவை ஆர்வலர்களும், அவர்கள் எழுதுவதை ஒழுங்கமைக்க சில விதிகளும். இணையம் மூலமே இது செய்யப்படுவதால் பெரிய அலுவலகம்,பல நூறு பணியாளர்கள் தேவையில்லை. உலகெங்குமுள்ள தமிழர்களின் அறிவை,ஆற்றலை பயன்படுத்திக் கொள்ள இத்தகைய முயற்சிகள் தேவை. தமிழில் ஒரு கூட்டு முயற்சியாக கலைக்களஞ்சியம்,அகராதி,பாட நூல்களை உருவாக்கலாம். உதாரணமாக அறிவியல் குறித்த நூல்களை இம்முறையில் எளிதில் உருவாக்க முடியும். ஒரு வரைதிட்டத்தை முன்வைத்தால் யார் எதை எழுதுவதை என்பதை முடிவு செய்துவிட்டு ஒரு கால வரையறைக்குள் ஒரு நூலை முழுக்க முழுக்க இணையம் சார்ந்தே கொண்டு வரமுடியும்.இணையத்தில் உள்ள இணைப்புத்தரும் வசதியையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். பிற் சேர்க்கைகளை இணைப்பது, திருத்தங்கள் செய்வது எளிது.

தமிழில் கலைச் சொற்களுக்கென இத்தகைய முயற்சி மூலம் புதிய கலைச் சொற்களை உருவாக்க முடியும். அத்துடன் அக்கலைச்சொல் குறித்து ஒரு சிறு குறிப்பினையும் தர முடியும்.இதன் மூலம் கலைச்சொல் அகராதியை உருவாக்க முயற்சி செய்யலாம்.செய்திகளை அலச, பின்ணணித் தகவல்கள் தர இது போன்ற ஒரு தளம் இருந்தால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தம் அறிவைப் பகிர்ந்து கொள்வதும், தமிழை வளப்படுத்துவதும் சாத்தியம்.

உதாரணமாக உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவிற்கு சாதகமாக ஒரு தீர்ப்பு வழங்கப்படுள்ளது.இதை செய்தித் தாளில் படிப்பவர் ஒருவர் இது குறித்த பின்ணனித் தகவல்களை உடனே பெற ஒரு இணைய த் தளம் இருந்தால் எப்படி இருக்கும் ?. சமீபத்தில் நகலாக்கம்(cloning) குறித்த சர்வ தேச ஒப்பந்தம் குறித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் முடிவெடுப்பது என்று வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்பட்டது. இந்தச் செய்தியை பின்ணணித் தகவல்களுடன் செய்தி வெளியான 12/24 மணி நேரத்திற்குள் ஒரு தளம் மூலம் தரமுடியும். உதாரணமாக ஒரு 1000/1500 வார்த்தைகளில் பின்ணணித் தகவல்,அலசல், பிற தளங்களுக்கு இணைப்பு உள்ள ஒரு கட்டுரையை இணையத்தில் தருவது சாத்தியம்..பின்னர் இதை update செய்ய முடியும், வேறு பொருத்தமான செய்திகள்,தகவல்களையும் தரமுடியும். பொருத்தமான கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு, பாடநூல்கள்/நூல்கள் வெளியாகும் வரை காத்திருக்காமல் இது போல் விரைவாக அறிவினைப் பரவலாக்க முடியும்.கொஞ்சம் யோசித்தால் இத்தகைய கூட்டு முயற்சிகளின் பலமும்,தேவையும் புலனாகும்.

திசை எட்டிற்கும் செல்ல வேண்டாம், திசை எட்டிலுமுள்ள தமிழர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்த படி மொழியை வளப்படுத்த முடியும், இத்தகைய முயற்சிகள் மூலம்.இணையம் என்பதை நாம் ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடியும். தொலை நோக்கும், தெளிவான சிந்தனையும், உறுதியும்,ஆதரவும்,பங்கேற்ப்பும் இருந்தால் இணையம் மூலம் ஒரு அறிவுப்புரட்சியை தமிழில் நிகழ்த்த முடியும்.

அடுத்த பகுதியுடன் நிறைவுறும்

ravisrinivas@rediffmail.com

Series Navigation

Similar Posts