பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -3

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

வின் டெலோரியா


( Excerpt from the book: God Is Red – A Native View of Religion – by Vine Deloria, Jr.

கடவுள் சிவப்பானவர் – பழங்குடியினர் பார்வையில் மதம் – வின் டெலோரியா- ஜ்னியர் எழுதிய புத்தகத்திலிருந்து.

செவ்விந்தியர்கள் என வெள்ளையரால் அழைக்கப்படும் அமெரிக்கப் பழங்குடியினர்களின் தலையாய சிந்தனையாளர்களில் ஒருவராக வின் டெலோரியா இருக்கிறார். )

இந்தக் கதை வெறும் அமெரிக்க இந்தியர்களின் (செவ்விந்தியர்களின் ) கதை மட்டுமல்ல. கிரிஸ்துவ நாடுகள் உலகமெங்கும் செய்தவை இதைவிட மோசமானவை. இங்கிலாந்தும் பிரான்சும் இந்தியாவை ஆக்கிரமிக்கவும் ஆப்பிரிக்காவை கைப்பற்றவும், வட ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் வியாபார உரிமைகளுக்காக பெரும் போர்களை நிகழ்த்தின. முதலாம் உலகப்போரின் போது கூட தேசங்கள் சக்திவாய்ந்த ஐரோப்பிய தேசங்களுக்கு அடிமைகளாகவும், லீக் ஆஃப் நேஷன்ஸ் கூட்டமைப்பு ‘ ‘mandates ‘ and ‘protectorates. ‘ ஆகியவற்றை அங்கீகரித்தும் இருந்தது. காலனியாதிக்கம் காணாமல் போகவில்லை. அதே விஷயம், இன்றூ அமெரிக்காவின் அரசியல் புனிதப்போராக ஒரு புது உலக நெறிமுறை (நியூ வோர்ல்ட் ஆர்டர்) நோக்கி, உண்மையில் வெள்ளையர்களுக்குச் சொந்தமான பன்னாட்டு தொழில்நிறுவனங்களின் வியாபாரசந்தைக்காக நடத்தப்படுகிறது. மேற்கத்திய தொழில்நிறுவன ஏகாதிபத்தியம் என்பது உலக காட்சியை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும்போது ஜப்பான் சில தீவுகளில் சுயாட்சி அடைவதை கண்டும்காணாமல் இருந்துவிடலாம்.

கனடாவும் ஆஸ்திரேலியாவும் பிரிட்டிஷ் கிரீடத்திடமிருந்து சுதந்திரம் அடைந்ததும், அவை உடனே எலிசபெத் மகாராணி 2இன் செருப்புக்களை அணிந்து கொண்டு பழங்குடியினரின் நிலங்களை தொடர்ந்து அபகரித்துக்கொண்டே வந்தன. கனடாவில் செவ்விந்தியர் நிலங்களுக்கு ராணி தன்னைத்தானே டிரஸ்டியாக நியமித்துக்கொண்டு, பழங்குடி செவ்விந்தியர் நிலங்களை ராணி தன் பெயரில் வைத்துக்கொண்டார். ப்ரிட்டிஷ் நார்த் அமெரிக்கன் சட்டம் உருவானபின்னால், பழங்குடி நில உரிமைகளை கனடா அரசு அங்கீகரிக்கவும், பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் மறுத்துவிட்டது. இன்றும், கனடா பழங்குடி மக்களின் நில உரிமைகளை அங்கீகரிக்க மறுத்தே வருகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தில் இருக்கும் ஒரு முகமூடித்தனமான சட்டம் கொடுக்கும் உரிமைகள் அளவுக்குக்கூட இல்லாமல், கனடாவின் பழங்குடி மக்கள் தங்கள் நிலங்கள் பற்றிய உரிமைகளை இழந்து வாழ்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் இன்னும் மோசமான நிலையில் வாழ்கிறார்கள். சட்டப்படியே கூட அவர்களுக்கு உரிமைகள் ஏதுமில்லை. ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்துவந்த நிலங்களை சொந்தம் கொண்டாடி அவர்கள் அந்த நாட்டு நீதிமன்றம் கூட ஏறமுடியாது. பிரிட்டனிலிருந்து பாரம்பரியமாகப் பெற்றதாக முழு ஆஸ்திரேலிய நிலத்தையும் ஆஸ்திரேலிய அரசு சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், ஆஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து நிலச்சொந்தக்கார பாதுகாப்பை ஆஸ்திரேலியப் பழங்குடியினர் கேட்பதற்கு உரிமைகள் கூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

தெற்கு அமெரிக்க நாடுகள் அந்த நாடுகளில் வாழும் பழங்குடியினரை அழிப்பதைப் பற்றி பூசி மெழுகுவதுகூட கிடையாது. பிரேசில் அரசு, பல வருடங்களாக காட்டுக்குள் வாழும் பழங்குடியினரை அமைப்பு ரீதியாக இனப்படுகொலை செய்து வருகிறது. பல குழுக்களாலும் பல அமைப்புகளாலும் இந்த இனப்படுகொலை ஆவணப்படுத்தப்பட்டு வந்தாலும், பிரேசில் அதிகாரிகள் வழக்கம்போல மறுத்துவிடுகிறார்கள். இந்த நாடுகளில் வாழும் பழங்குடியினருக்கு உரிமைகள் இருக்கின்றன என்ற பம்மாத்து கூட கிடையாது. எல்லா தெற்கு அமெரிக்க நாடுகளும் கத்தோலிக்க நாடுகளே. செபுல்வேடா அவர்கள் முன்னால் சொன்ன கருத்துக்களை அடியொற்றியே இந்த நாடுகள் நடந்து கொள்கின்றன. அதாவது இந்த நாடுகளில் இருக்கும் பழங்குடியினர்கள் அடிமைகள் என்றும், அவர்களை அடிமைகளாவதற்கென்றே கடவுள் படைத்திருக்கிறார் என்றும், அவர்கள் அடிமைகளாகாமல் எதிர்ப்பது ஒழுக்க ரீதியின் தவறானது என்றும் செபுல்வேடா சொன்னதை இவர்கள் கூறுகிறார்கள்.

நிலங்களும் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டிருக்கும் சிறு நாடுகள் கூட இந்த விஷயத்தில் பேச்சு எழுப்ப வலிமையின்றி கிடக்கின்றன. ஸ்வீடன் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் லாப்லாந்து நாட்டுக்குள் நுழைந்தது. இன்று லாப் மக்களுக்கு எந்தவிதமான உரிமையும் லாப்லாந்து நாட்டில் இல்லை என்று நிர்தாட்சண்யமாக மறுக்கிறது. கனடாவில் இருக்கும் நிலைமை போலவே, ஸ்வீடிஷ் தேசிய சட்டம் லாப் மக்களுக்கு எந்த உரிமை இருப்பதையும் நில உரிமை இருப்பதையும் அங்கீகரிப்பதில்லை. இன்றைய தேதிக்கு லாப் மக்களின் மீது ஒரு இனப்படுகொலையை நடத்திக்கொண்டிருக்கிறது ஸ்வீடிஷ் அரசாங்கம். இதனை நீதிமன்றம் மூலமாகவே வெற்றிகரமாகச் செய்துவருகிறது.

அழிவின் இறுதி களம் இன்று ‘Trust Territories of the Pacific ‘ என்று அறியப்படும் இடம். முதலாம் உலகப்போருக்குப்பின்னால், இந்த பசிபிக் தீவுகளை ஜப்பான் தன் கட்டுப்பாட்டின் கீழ், இரண்டாம் உலகப்போர் வரை வைத்திருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா இந்தத் தீவுகளின் மீது படையெடுத்தது. படையெடுத்த சில தீவுகளே ஜப்பானின் வசம் இருந்தன. பெரும்பாலும் ஜப்பானின் வசம் இல்லை. போர் தொடர்ந்து நடக்க நடக்க, இந்த அமைதியான தீவுகள் இரண்டு பெரும் சக்திகளுக்கு இடையே பந்தாடப்பட்டன. அமைதியான பசிபிக் வெகு விரைவிலேயே ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பிரிக்கப்பட்டது.

ஜப்பானின் சரணாகதிக்குப் பின்னர், எல்லா பசிபிக் தீவுகளும், இடக்கரடக்கலாக ‘அமெரிக்கா டிரஸ்ட் ‘ கீழ் வந்தன. அதாவது அமெரிக்காவின் கீழ் இவை இருக்கும். எப்போது அமெரிக்கா இவற்றை உதறி எறியலாம் என்று நினைக்கிறதோ அப்போது எறியலாம். இவைகளுக்கு அரசியல் சுதந்திரம் தரும் எண்ணமே அமெரிக்காவுக்குக் கிடையாது. அமெரிக்க டூரிஸ்டுகளுக்கு தடவிவிடும் இடங்களாக இவை ஆக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. இந்த நாடுகளின் குடிமக்கள் அமெரிக்க டூரிஸ்டுகளுக்கு வேலையாட்களாக ஆகி விட்டார்கள். இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் அவர்களிடம் இருந்த அரசியல் சுதந்திரம் இனி அவர்கள் கனவிலும் எதிர்பார்க்க முடியாதது. இதைவிட மோசமான விஷயம், இந்த தீவுகள் ஊழல் மிகுந்த, அக்கறையற்ற அமெரிக்க உள்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட நிலைக்கு கிரிஸ்துவத்தின் பொறுப்பு மிகவும் அதிகம். மற்ற நாடுகள் மீது ஆக்கிரமிப்பு செய்ய கிரிஸ்துவத்தின் கொள்கைகள் மேற்கத்திய நாடுகளுக்கு கொடுத்த உரிமைகள் இல்லாமல் இருந்தால், இப்படிப்பட்ட சுரண்டல் நடந்திருக்காது. இல்லையெனில், மக்களால் மேற்கத்திய பேராசையையும் , மதத் தீவிரவாதத்தையும் இணைத்துக்கொண்டு நடந்த சுரண்டல் இவ்வாறு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்காது. இன்றும் கூட கிரிஸ்தவ மிஷனரிகள் அமேசான் காடுகளில் மதமாற்றம் செய்ய ஏதாவது செவ்விந்திய பழங்குடியினர் கிடைப்பார்களா என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் பின்னாலேயே, இந்த பழங்குடியினரை அழித்தொழிக்க தொழில்முறை கொலைகாரர்கள் வந்துவிடுகிறார்கள். இந்த தொழில்முறை கொலைகாரர்கள் பின்னே அரசாங்க அதிகாரிகளும், சாலை போடுபவர்களும், நிலத்தில் கட்டடம் கட்டவும் அந்த நிலங்களை உலக வியாபாரத்துக்கு உபயோகப்படுத்த வந்துவிடுகிறார்கள்.

ஒவ்வொரு தலைமுறையிலும், வியாபாரமும் மதமாற்றமும் கை கோர்த்துக்கொண்டு மேற்கத்திய நாடுகளின் வியாபாரத்துக்காகவும், கிரிஸ்துவத்துக்காகவும் மற்ற நாடுகளை அழிக்க முனைந்திருக்கின்றன. எங்கெல்லாம் சிலுவை செல்கிறதோ அங்கெல்லாம், இறப்பும், அழிவும், இறுதியில் நம்பிக்கைத் துரோகமுமே கொட்டிக்கிடக்கின்றன. மற்ற நாடுகளையும் பார்த்தால், அமெரிக்க ஐக்கிய நாடுகளே பழங்குடி மக்களை கொஞ்சமாவது சிறப்பாக நடத்தியிருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் சுதந்திரம், மதச்சார்பற்ற நீதித்துறை ஆகியவை சுரண்டலை குறைத்திருக்கின்றன. அமெரிக்க பழங்குடி மக்களுக்கு நிலம் மீதான உரிமை ஓரளவுக்குச் சட்டப்படிஆகியிருக்கிறது. கிளைம்ஸ் கமிஷன் என்ற கோரிக்கை கமிஷன் மூலமாக பழைய ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளை நீக்கவும், அதற்காக ஈட்டுத்தொகை வழங்கவும் முனைந்திருக்கிறது. கனடா அப்படிப்பட்ட ஒரு கமிஷனை உருவாக்குவதை எதிர்க்கிறது. ஆஸ்திரேலியா அப்படி ஒரு கருத்தாக்கத்தையே வெறுக்கிறது.

பழங்குடி மக்கள் மீது நடந்த இப்படிப்பட்ட மோசடிகளையும் அழிவுகளையும் நடத்திய தங்கள் மதம் பற்றியும், அப்படிப்பட்ட கிரிஸ்துவர்களையும் பற்றி கேள்விப்படும் சராசரி கிரிஸ்துவர்கள் உடனே, ‘ஆனால் இப்படிப்பட்ட விஷயங்களைச் செய்தவர்கள் உண்மையான கிரிஸ்துவர்கள் அல்லர் ‘ என்று கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால், அவர்கள் உண்மையான கிரிஸ்துவர்கள். அவர்கள் இருந்த அந்த நாட்களில் அவர்கள் கிரிஸ்துவத்தில் இருப்பதன் அனைத்து வசதிகளையும் கெளரவத்தையும் அனுபவித்தார்கள். மதத்தின் ஹீரோக்களாக போற்றப்பட்டார்கள். பாகன் pagan கிராமங்களை அழித்து கிருஸ்துவ சமூகம் வளர்வதற்காக பல கஷ்டங்களை அனுபவித்தவர்கள் தியாகம் புரிந்தவர்கள் என போற்றப்பட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடங்களிலும், மற்றும் கிரிஸ்துவ சர்ச்சிலும் புனிதர்களாகவும் (செயிண்ட்) போற்றப்பட்டார்கள். அவர்களது பெயர்கள் நகரங்களுக்கும் ஆறுகளுக்கும் மலைகளுக்கும் கடல்களுக்கும் வைக்கப்பட்டன.

முன்பு பழங்குடியினரை சுரண்டி அழித்தவர்கள் உண்மையிலேயே கிரிஸ்துவர்களாக இல்லையென்றால், ஏன் அன்றைய உண்மையான கிரிஸ்துவர்கள் தங்களுடைய கிரிஸ்துவ மதத்தையும் பாரம்பரியத்தையும் கெடுத்ததற்காக இவர்களுக்கு எதிராக கொதித்து எழவில்லை ? இன்றைய கனடா பிரதமர் உண்மையான கிரிஸ்துவராக இல்லையென்றால், ஏன் கனடாவின் உண்மையான கிரிஸ்துவர்கள் தங்களது பிரதமருக்கு எதிராக கொதித்து எழவில்லை ? பிரேசில் நாட்டின் தலைவர்கள் உண்மையான கிரிஸ்துவர்கள் இல்லையென்றால், உண்மையான கிரிஸ்துவர்கள் தங்களது தலைவர்களுக்கு எதிராக ஏன் போராடவில்லை ? அமெரிக்க கார்ப்பரேஷன்கள் அமேசான் காடுகளை அழித்து வியாபாரத்துக்காக பயன்படுத்தும்போது, உண்மையான கிரிஸ்துவர்கள் ஏன் தங்களது அமெரிக்கக் கார்ப்பரேஷன்களின் தலைவர்கள் பதவி விலகவேண்டும் என்று கேட்கவில்லை ?

(அடுத்த இதழில் முடியும்)

http://sophiagroup.org/excerptvine.html

Series Navigation

author

வின் டெலோரியா

வின் டெலோரியா

Similar Posts