குமரிஉலா 4

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

ஜெயமோகன்


பத்மனாபபுரம் அரண்மனை இப்போது பரவலாக புகழ் பெற்றுவிட்டது. முக்கிய காரணம் திரைப்படங்கள் . ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, வருஷம் பதினாறு, சுவாதிதிருநாள், மணிசித்ரதாழ் போன்ற படங்கள் அதன் கலையழகை விளம்பரப்படுத்தின. இப்போது சினிமாக்கள் எடுக்க அனுமதிக்கப்படுவது இல்லை, காரணம் பிரபுதேவா. அவரது ஒரு படத்தின் படமாக்கலில் பல பெண்களை மரக்கட்டுமானங்கள் மீது அரைநிர்வாணமாக ஏற்றி நிறுத்தி துள்ள விட்டிருக்கிறார்கள். ஊர்க்காரர்கள் கூடி எதிர்ப்புதெரிவித்து அரசுக்கு தெரிவிக்க, படஅனுமதி நிறுத்தப்பட்டுவிட்டது. பொதுவாகவே பத்மநாபபுரத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வு அதிகம். ஊருக்குள் மலையாளிகள்தான் மிகப்பெரும்பாலும். தினசரி தெருக்கூட்டுவதை ஊர்க்காரர்கள் மேற்பார்வை இடுவார்கள் . குளங்களில் அழுக்குத்துணிகளை துவைப்பதற்குக்கூட ஊர்க்கட்டுப்பாடு உண்டு.

அரண்மனை என்று சொல்லும்போது நம் மனத்தில் உருவாகும் பிம்பங்கள் எம்ஜிஆர் சினிமாசெட்டுகளால் வடிவமைக்கப்பட்டவை. அபூர்வமாக சிலருக்கு பிரிட்டாஷ் காலகட்டத்தில் கட்டப்பட்ட குவாலியர் ஜெயவிலாஸ் மாளிகை , மைசூர் சாம்ராஜமாளிகை முதலியவை மனதில் எழலாம் அவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் சிறிய அமைப்பு இது. மரவேலைப்பாடுகள்தான் இதன்முக்கியச்சிறப்பு. எளிமையும் கலையழகும் கொண்ட கட்டிடத்தொகை .1744 ல் மகாராஜா மார்த்தாண்டவர்மா இதை விரிவாக்கி ஏறத்தாழ இன்றுள்ள வடிவில் கட்டி பத்மநாப பெருமாள் கொட்டாரம் என்று பேரிட்டார். அதன் பிறகே கல்குளம் கொட்டாரமாக இருந்த இது இப்பெயர் பெற்றது. ஊரும் பத்மநாபபுரம் என்று அழைக்கப்பட்டது.

பத்மநாபபுரம் அரண்மனைக்கு ஏறத்தாழ எழுநூறு வருட வயது ஆகிறது. கல்குளம் கொட்டாரம் என்ற பேரில் அறியப்பட்ட காலத்தில் மரத்தால் உருவாக்கப்பட்ட சிறிய , ஆனால் அபூர்வமான வேலைப்பாடுகள் கொண்ட அரண்மனை பிற்பாடு பலரால் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டபடியே இருந்திருக்கிறது. மூலக்கட்டுமானம் இப்போதும் தாய்க்கொட்டாரம் என்ற பேரில் இருக்கிறது. கடைசியாக 1942ல் சி பி ராமசாமி அய்யர் திவானாக இருந்த காலம் வரை கட்டுமானங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

1800களிலேயே கேரள தலைநகரம் பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது . பத்மநாபபுரம் அதன் பிறகு இரண்டாம் தலைநகர்தான். இங்கே 1930களில் கூட நீதிமன்றங்கள் இயங்கிவந்தன. அதற்கான கட்டிடங்கள் பிற்பாடு உருவாக்கப்பட்டன. இது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது சீட்டாட்டக் களமாக சீரழிந்து கிடந்தது. .முப்பதுவருடம் முன்பு பத்மனாபபுரம் மக்கள் போராடி அதை கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் [ நூறுவருட குத்தகை ] கொண்டுவந்தனர். கேரள அரசு அரண்மனையின் பழைமை கெடாமல் சீரமைத்து கடுமையான காவலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து அதை பராமரிக்கிறது . மெல்ல சுற்றுலாவருமானம் பெருகி இன்று பலலட்சம் ரூபாய் வருமானம் இருப்பதனால் இப்போது தமிழக அரசு இதை திரும்பக் கோருவதாகச் சொன்னார்கள். அதேசமயம் இதேகுமரிமாவட்டத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இன்னும் இரு அரண்மனைகள் பலவகையான போராட்டங்களுக்கு பிறகும்கூட சீரழியவிடப்பட்டுள்ளன.

கட்டிடத்தின் முகப்பில் வந்து பணம்கொடுத்து காமிராவை உள்ளே கொண்டுபோனாலும் ஏதோ பழுதினால் புகைப்படங்கள் சரியாக விழவில்லை. 200 ஏக்கர் அளவுள்ளது அரண்மனை வளாகம். மூன்றரை ஏக்கர் அளவுள்ளது அரண்மனை. விசாலமான முற்றத்துக்கு அப்பால் அரண்மனையின் உயர்ந்த பூமுகம் . நுட்பமான மரச்சிற்பவேலைப்பாடுகள் கொண்டது அது. சீனபாணி பகோடாக்களைப்போன்ற வடிவம். இப்பகுதியில் ஆலயங்கள் வீடுகள் அனைத்திலுமே இந்த கூம்புவடிவகூரை உள்ளது. காரணம் கடுமையான மழைதான். சமீபகாலமாக கான்கிரீட் வந்தபோது ஆரம்ப உற்சாகத்தில் சதுரவடிவக்கூரைகளை அமைத்துவிட்டு இப்போது மீண்டும் கூம்புக்கு திரும்பிவிட்டார்கள்

உள்ளே வழிகாட்டி கூடவராமல் செல்ல முடியாது. அரசு நியமித்துள்ள வழிகாட்டிகள் நிரந்தர ஊழியர்கள்.அவர்கள்தான் பாதுகாப்புக்கும் பொறுப்பு என்பதனால் சற்று கண்டிப்பாகவே இருப்பார்கள். இப்போது தமிழ் நாட்டில் இருந்து அதிகளவில் வருகிறவர்கள் அரண்மனையின் முக்கியத்துவம் கலை எதுவுமே தெரியாமல் சத்தம்போட்டு பாடியும் அங்கிங்கு ஓடியும் உணவுபொருட்களை மறைத்து எடுத்துவந்து தின்று வீசியும் மிகவும் சிரமம் அளிப்பதாக எனக்கு நன்குதெரிந்த வழிகாட்டி சொன்னார்.

‘சுத்தமாக வைத்திருக்கிறார்கள் ஜெயன் ‘ என்றார் வசந்தகுமார். ‘முக்கியமான இடங்கள் அளவில் குறைவாகத்தான் இருக்கவேண்டும் போலிருக்கிறது. தமிழ்நாட்டில் இதைவிட பலமடங்கு கலையழகுகொண்ட இடங்கள் பல இருக்கின்றன. தூசியும் குப்பையும் மண்டி பாழடைந்து கிடக்கும்.. ‘

‘இந்த அரண்மனை பாழடைந்து கிடப்பதை நான் கண்டிருக்கிரேன் ‘ என்றார் பெருமாள் ‘ இதேபோல முக்கியமானதுதான் ராமநாதபுரம் சேதுபதி அரண்மனை. அது இருக்கும் நிலையைப்பார்த்தால் மனம் ஆறாது… ‘

‘தஞ்சை அரண்மனையும் அப்படித்தான் பாழடைந்து கிடக்கிறது …. சுற்றுலாபயணிகளில் தம்ழிநாட்டுக்கும் கேரளத்துக்கும் பெரியவேறுபாடு இருக்கிறது. தம்ழிநாட்டில் நடுத்தரவற்க மக்களைவிட கீழ்த்தட்டுமக்களே அதிகமாக பயணம் செய்கிறார்கள்.அவர்களுக்கு வரலாறு கலை ஏதும் தெரியாது. பயணம் ஒரு குதூகலம், அவ்வளவுதான். எங்கேயும் கட்டுச்சோறு கொண்டுவந்து தின்ன ஆசைபடுகிறார்கள்… ‘

ஒரு கிராமப்புற தமிழ் மாணவர் கும்பல் உரக்கப் பாடியபடி ஓடியது. வழிகாட்டி பதறிபோய் பின்னால் ஓடி அழைத்தார்.

‘சபரிமலைக்கூட்டம் வேறு எல்லா இடங்களையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது . அவர்கள் ஏதோ வழிபாடு செய்வதுபோல முக்கிய இடங்களிலெல்லாம் போய் மலம் கழித்து செல்கிறார்கள் ‘ என்றேன்

அரண்மனையில் முகப்பில் ஓணவில் என்ற மரவில்லமைப்புகள் உள்ளன. அவை கேரள வரலாற்றாசிரியர்களுக்கு முக்கியமான தடையங்கள். மாடம்பிகள் எனப்படும் குட்டி நிலக்கிழார்கள் மன்னர்களைபார்க்க வரும்போது அதைக் கொண்டுவருவது சடங்காக இருந்துள்ளது. அது விசிட்டிங் கார்டு போல. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான இலச்சினைகள் உண்டு. அது ஏதோ புராதனமான சடங்கு ஒன்றின் நீட்சி. முற்காலத்தில் பழங்குடி மரபு சார்ந்த ஏதோ ஒரு சடங்காக இருந்திருக்கலாம். திருவிதாங்கூர் மன்னரின் பழங்குடி அடையாளத்தை காட்டுபவை அவை. இப்படி சொல்லிப் பார்க்கலாம். அம்மன்னர் ஒரு பழங்குடித்தலைவன். மற்றவர்கள் சின்ன தலைவர்கள். வேட்டைவில்லை தங்கள் அடையாளமாக கொண்டுவந்து காட்டுவது என்றோ சடங்காக இருந்திருக்கிறது!

மேலே அத்தாணி மண்டபம் [ மந்த்ரசாலா] மிக அழகான இடம் . அரச சபை பற்றிய நம் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கும்படி சிறிய எளிய அமைப்பு. நடுவே மன்னரின் ஆசனம். சுற்றி மற்றவர்களுக்கான ஆசனங்கள். மிதமான வெளிச்சம் வரும் மைக்கா பதிக்கப்பட்ட வண்ணச்சாளரங்கள். தரை சுண்ணாம்புச்சாந்தினால் உருவாக்கப்பட்டது. சுண்ணாம்பு விழுதுடன் பதநீர் இளநீர் முதலியவற்றை மட்டும் கலந்து உருவாக்கப்பட்ட சாந்தினால் இன்றைய மொசைக்குக்கு இணையான மெருகுடன் போட்டிருக்கிறார்கள். நூற்றாண்டுகளாகியும் அவை மெருகு குலையாமல் இருப்பதை ஆச்சரியம் என்றே சொல்லவேண்டும் .

விசாலமான ஊட்டுபுரைகளில் நூறுவருடம் முன்புவரைக்கூட உணவு போடப்பட்டுள்ளது. பிராமணர்களுக்கு மட்டும் சாதம் புளிக்கறி ஊறுகாய் மோர் உணவு. பிற உயர்சாதியினருக்கு வேறு இடத்தில். அது பட்டைச்சாதம் மோர் ஊறுகாய். அதற்கும் கீழே உள்ளவர்களுக்கு ஊருக்கு வெளியே மதியம்முதல் மாலை வரை கஞ்சியும் கீரைப்புளிக்கறியும் .எல்லாருக்கும் ஏதோ ஒரு இடத்தில் உணவு உண்டு. அந்தக்காலத்தில் படிக்கும் குழந்தைகளை திருவனந்தபுரத்திலோ பத்மனாபபுரத்திலோ கொண்டுவந்து விட்டுவிடுவதுண்டு. இலவச உணவால் ‘தானாகவே ‘ படித்து வளரும் அவை. தங்க ஒரு திண்ணைமட்டும் ஏற்பாடு செய்தால்போதும்.

தாய்க்கொட்டாரம் மரத்தாலான அழகிய பூமுகம் கொண்டது. பலாமரத்தின் அடிமரத்தைக் கடைந்து உருவாக்கப்பட்ட பெருந்தூண் ஒன்று மாபெரும் கலைப்படைப்பு அது. உச்சியில் அழகிய சித்திரப்பூ, கீழே பூக்குலைகள். அது ஒற்றைப்பலாத்தடி என்றால் நம்ப முடியாது .

அரண்மனைக்குள் அக்கால வாழ்க்கையை நம் கற்பனைக்குள் எழுப்பும் பல பொருட்கள் உள்ளன. சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஜாடிகள். குளியலைறைக்கூரை சரிந்து நீரில் இறங்கும் படித்துறைகொண்ட குளங்கள். குளத்துநீருக்குமேல் நீட்டிக் கொண்டிருக்கும் ஓய்வறை. அங்கணமுற்றங்கள். அரை இருள் பரவிய அந்தபுரங்கள்.

தாய்க்கொட்டாரத்தை சுற்றி பிற்கால அரண்மனை மன்னருக்கான படுக்கையறையும் பூஜையறையும் எல்லாம் உள்ளன. அஜிதனுக்கும் சைதன்யாவுக்கும் பத்மநாபபுரம் அரண்மனை மிகவும் பழகியது . வழிகாட்டிகளைவிட தெளிவாக அவர்களால் சொல்லமுடியும். ‘இதுதான் ராஜாவோட படுக்கையறை. இது அவரோட மூலிகைக் கட்டில்…. ‘ என்றான் அஜிதன்.

பொதுவாக அரண்மனை முழுக்கவே சிறிய சாளரங்கள் வழியாக மிதமான வெளிச்சம் பரப்பபட்டிருந்தது .கண்ணுக்கு இதமான குளுமையான சூழலை அது உருவாக்கியது .

‘நம் ஊரில் இந்த முறைதான் சிறந்தது என்று படுகிறது சார்… ‘என்றேன்

‘இந்திய வெயிலுக்கு வீட்டுக்கு இரு விஷயங்கள் தேவை. ஒன்று வீட்டைச்சுற்றி கூரைதாழ்ந்த திண்ணை. அது வெளிவெப்பம் ரேடியேஷன் வழியாக உள்ளே வராமல் செய்துவிடும் . மிதமான வெளிச்சம் அடுத்தது. இப்போது நாம் வெள்ளைக்காரன் வெயில் இல்லாத நாட்டில் கட்டிய பாணியில் வீடுகளைக் கட்டுகிறோம். அதிலும் இந்த ஃப்ரெஞ்சு விண்டோ நமக்கு மிக பிரச்சினையானது. வெயில் உள்ளேயே அடிக்கும் ‘ என்றார் பெருமாள்.

‘பாதிவீட்டில் ஜன்னல்களை திறப்பதேயில்லை.. ‘என்றேன். ‘காற்று இல்லாமல் ஃபேன் போட்டுக் கொள்வார்கள் ‘

அரண்மனையில் கஜானாவுக்குமேலே மன்னரின் படுக்கை அறை [லட்சுமிவிலாசம் ] மேலே உப்பரிகை[சந்திரவிலாசம்] பூஜை அறையில் நிறைய சுவரோவியங்கள் உண்டு. அவற்றை அனுமதிபெற்றபிறகே படம் எடுக்க அனுமதிக்கிறார்கள். முக்கியமான இன்னொரு இடம் நவராத்திரி மண்டபம். மைலாடிசிற்பிகளால் இருநூறு வருடம் முன்பு கட்டப்பட்ட கலைக்கூடம் அது. சரஸ்வதி கோவில் ஒன்றின் முன்னால் நீள் சதுர வடிவ அரங்கு. சுற்றி அமர்ந்து பார்வையாளர் பார்க்கலாம். அரசியர் பார்க்க , பிறர் அவர்களைப்பார்க்கமுடியாத மரத்திரை அறைகள் உண்டு.

அங்கே இருந்த சரஸ்வதி சிலை மிகப்பழைமையானது . கம்பன் அதை வணங்கியதாக ஐதீகம். அது இப்போது வெளியே ஒரு கோவிலில் இருக்கிறது. நவராத்திரி சமயம் அதை பூஜைசெய்து யானைமீது எடுத்துக் கொண்டு திருவனந்தபுரத்தில் நவராத்திரி மண்டபத்தில் வைத்து பூஜை கொண்டாடுவார்கள். கிட்டத்தட்ட மைசூர் தஸரா போல கோலாகலமான விழா. பிறகு சிலை திரும்பிவரும். அதற்கு இன்றும் மன்னர் சார்பாக மன்னர்குலத்தைசேர்ந்த ஒருவர் வருவதுண்டு.

‘இந்த அரண்மனை ஓடு போட்டதெல்லாம் சர் சி பி ராமசாமி அய்யர் காலத்தில்தான்.. ‘என்றார் பெருமாள். ‘அதற்கு முன் இது ஓலைதான் வேயபட்டிருந்தது ‘

‘ஓலைவேயப்பட்ட அரண்மனையா ! ‘ என்றார் வசந்தகுமார்

‘நம் மன்னர்களின் அரண்மனைகள் எல்லாமே இப்படித்தான் மரக்கடிடங்களாக ஓலைவேயப்பட்டு இருந்திருக்கவேண்டும். கற்றளிகள் எல்லாம் கோயில்களுக்குத்தான். ஆகவே தான் மன்னர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி எரித்து அழித்தபோது அரண்மனைகளின் அஸ்திவாரங்கள் மட்டுமே மிஞ்சின கங்கைகொண்ட சோழபுரத்தில்கூட அஸ்திவாரங்கள் தான் இருக்கின்றன. சுவர்கள் கூட குறைவுதான்… ‘

அரண்மனைக்கு வலப்பக்கம் அரண்மனையின் பாணியிலேயே கட்டப்பட்ட அருங்காட்சியகம் உள்ளது. அந்நாள் கேரள முதல்வர் கெ சங்கர் முயற்சி எடுத்து உருவாக்கியது அது. பல முக்கியமான சிலைகள் உள்ளன. முக்கியமானவை போதிசத்துவர்கள் போலவே சிற்ப இலக்கணம் கொண்ட ‘சாஸ்தா ‘ சிலைகள். முக்கியமான பிராமி மொழி கல்வெட்டுகள் , நடுகற்கள் உள்ளன. நான்கு கற்கள் அஞ்சினான் புகலிட எல்லைக்கற்கள்.

பத்மநாபபுரம் ஒரு காலகட்டத்தை ஆல்பம் போல காட்டும் இடம். அங்கிருந்து உதயகிரிக்கோட்டைக்குள் டிலனாயின் சமாதியைபார்க்க கிளம்பினோம்

[தொடரும்]

jeyamohanb@rediffmail.com

jeyamohanb@hotmail.com

Series Navigation

author

ஜெயமோகன்

ஜெயமோகன்

Similar Posts