கடிதங்கள்

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

செப்டம்பர் 18, 2003



இந்து இதழ் பற்றி மஞ்சுளா நவநீதன் எழுதிய கட்டுரை நன்றாக இருந்தது . ஒரே ஒரு விஷயம் தவிர. இந்து இதழின் இனக்குழு மனநிலை பற்றி அவர் சொல்லியிருந்தார் .இந்து இதழ்மட்டுமல்ல தமிழகத்தின் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் இனக்குழு மனநிலையே தொடர்கிறது. தினத்தந்தியில் அவர்கள் இனக்குழுவைசேராத எத்தனைபேர் வேலைசெய்கிறார்கள் ? பரிமளம் அவர்கள் எழுதியிருந்த விஷயங்களைத்தான் ஜெயமோகனும் இலக்கிய விமரிசனத்தின் அகவயத்தன்மை என்று சொல்லியிருந்தார். எல்லா இலக்கிய விமரிசனங்களும் அபிப்பிராயங்கள்தான். அந்த அபிப்பிராயம் மூலம் இலக்கிய்த்தை நாம் எப்படி கூடுதலாக அறியமுடிகிறது என்பதே முக்கியம்.

இராமுருகனின் அரசூர் வம்சத்தை இப்போதுதான் படித்தேன். நன்றாக இருந்தது . தமிழ் டான் குவிசாட்

போல. வாழ்த்துக்கள்

சூர்யா


அன்புடையீர்,

துபாயில் எழுத்தாளினி மீனா நவந்ீதகிருஷ்னண் என்ற தலைப்பில் ராமச்சந்திரன் உஷா வரைந்த கட்டுரை (திண்ணை 2003/09/11) தொடர்பாக எழுதுவதாவது:

எழுத்தாளினி, வரவேற்பாளினி, தொழிலாளினி என்றெல்லாம் பெண்பாற் சொற்கள் வெளிவருவது வரவேற்கத் தக்கதே. ஆனால் அவை முறையே எழுத்தாளன், வரவேற்பாளன், தொழிலாளன் ஆகிய (ஆண்பாற்) சொற்களின் பெண்பாற் சொற்களாய் அமைய வேண்டியவை. எழுத்தாளர், வரவேற்பாளர், தொழிலாளர் முதலிய அர்-விகுதிச் சொற்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவை. பெண்கள் தம்மைக் குறித்து அர்-விகுதிச் சொற்களைத் தாராளமாகக் கையாளவேண்டும். எனது அண்ணா ஓர் எழுத்தாளர் என்று குறிப்பிடலாம் என்றால், எனது அக்கா ஓர் எழுத்தாளர் என்று ஏன் குறிப்பிடக்கூடாது ? அதாவது எழுத்தாளினி என்பது எழுத்தாளன் என்பதன் பெண்பால் ஆகுமே ஒழிய, எழுத்தாளர் என்பதன் பெண்பால் ஆகாது. ஏனெனில் எழுத்தாளர் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான சொல். பெண்கள் அர்-விகுதிச் சொற்களை ஆண்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கக் கூடாது.

துபாயில் எழுத்தாளர் மீனா நவந்ீதகிருஷ்னண் என்றே தலைப்பிடவேண்டும்.

மணி வேலுப்பிள்ளை


பாய்ஸ் படம் குறித்த ஞாநியின் கட்டுரையை படித்து சிரிப்பு வந்தது. ஒரு தமிழ் கலாச்சார காவலராக, ஆனால் நேர்மை அது இதென்று டான்ஸ் காட்டியபடி, எழுதி தள்ளியிருந்தார். ஞாநி தனது பெரியார் குறித்த கட்டுரையில், ஜெயமோகனும், சுராவும் இணையும் புள்ளி பற்றி கூறுகிறார். அதற்க்கு முன் இவரும், ஜெயமோகனும் இணையும் புள்ளி குறித்து யோசிப்பது அறிவுடமையாக இருக்கும். முந்தய திண்னையில் அக்னிபுத்திரன் என்பவரால் எழுதபட்ட கட்டுரைக்கும், ஞாநியின் கட்டுரைக்கும் அதிக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.

பாய்ஸை இன்னும் என்னால் பார்க்க இயலவில்லை. பாய்ஸின் தெலுங்கு பதிப்பு குறித்த 1/2மணி நிகழ்ச்சி மட்டும் டிவியில் பார்க்க கிடைத்தது. மீண்டும் தமிழ் மக்களுக்கு இன்பமும், சுவாரசியமும் அளிக்கும் ஒரு மகத்தான படைப்பை அளித்திருப்பதாக தோன்றுகிறது. படம் பார்த்த பிறகு கருத்து மாறலாம். (படம் பார்காமலே கருத்து சொன்ன மும்முடிசோழன் என்பவரின் கருத்தும் எனக்கு கிட்டதட்ட உடன்பாடே.) ஞாநி நேர்மையினமை என்று கூறுவதை பார்போம்.

கேர்ள்ஸ் ஆசையை தணிக்கவும், மார்பகங்களை பெரிதாக்கவும், செய்யும் பயிற்ச்சி குறித்து நேரடியாய் கேட்பதில், என்ன நேர்மையின்மை வெளிப்படுகிரது என்று ஞாநிதான் விளக்கவேண்டும். பஸ்ஸில் உரசுவது பற்றி கூறுகிறார். ஞாநி தொடர்ந்து கொஞ்சம் பஸ்ஸில் பயணித்து இது குறித்து கவனமாய் புள்ளிவிவரம் எடுக்கவும். உரசுவதால் மாமிக்கள் வெளியே வரமட்டார்களா, அல்லது உரசப்படுவதற்க்காகவே வருகிறார்களா, என்று தெரிந்து கொள்ளலாம். தமிழ் கலாச்சாரத்தின் அடிப்படையையே அவர் புரிந்து கொண்டதாய் தெரியவில்லை

மிக மோசமான ஆணதிக்க சித்தரிப்புகளும், பெண்களை கேவலப்படுத்தும் வசனங்களும் (ஆபாசமல்ல) வரும் படங்கள், கன்னத்தில் அரையும் காட்சிகள்(அதை சகஜமானதாய், இயற்கையானதாய் காட்டும் படங்கள்) `பெண்களை நம்பாதே ‘ என்று வரும் பாடல்கள் (விஜயகாந்த், அர்ஜுன் படங்கள், `செந்தமிழ் நாட்டு தமிழச்சியே ‘ பாடல்) etc ..etc.. இதையெல்லாம் விட்டு விட்டு, மக்களுக்கு இன்பம் தரும், மக்களின் அமோக ஆதரவை பெற்ற ஒரு படத்தை திட்டி கட்டுரை எழுதுபவருக்கும், `இதையெல்லாம் கட்டுபடுத்த முடியாது ‘ என்று சொல்லிவந்த பெரியாருக்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை. கடைசியாக `பாய்ஸ் ‘ படம் எடுத்தது போல் `கேர்ள்ஸ் ‘ என்றும் ஒரு படம் எடுக்கப்படவேண்டும் எனபதை தவிர வேறு விமர்சனமிருக்க முடியாது.

ROSAVASANTH, Banglore.


அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்

ஆங்கிலம் பற்றிய மஞ்சுளா நவநீதனின் குறிப்பும் திரு. ஜெயமோகனின் கடிதமும் குறித்து.

முன்னரே தட்டச்சு செய்து வைத்திருந்த என் கட்டுரை(கற்றதனாலாய பயனென்கொல்)யைத் திண்ணைக்கு அனுப்பிய பிறகே இந்த வாரத் திண்ணையைப் பார்த்தேன். ஆங்கிலம் பற்றிய என் கருத்துகள் மஞ்சுளா நவநீதன் அவர்களின் கருத்துகளோடு கிட்டத்தட்ட ஒத்துப் போகின்றன. திண்ணயில் அவரது குறிப்பு முதலில் வெளியாகிவிட்டதால் ‘என் கட்டுரையை வெளியிட வேண்டாம்’ என்று கேட்டுக்கொள்ளலாம் என்று விரும்பினாலும் என் கட்டுரையில் வேறு பல செய்திகளும் இருப்பதால் தயக்கமாக இருக்கிறது. அதே நேரத்தில் என் கட்டுரை அவரது கருத்துகளைத் தழுவி எழுதப்பட்டது என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளாகவும் எனக்கு விருப்பமில்லை. இந்த முதல் சிக்கலை அவிழ்க்கவே எனக்கு வழி தெரியவில்லை.

முதல் நபரின் கருத்து வெளியானதை அறிந்த பிறகும் இரண்டாவது நபர் தன் கருத்தை வெளியிடுவதும், வெளியிட்டாலும் அது பற்றி மெளனம் சாதிப்பதும் நல்லதல்ல என்று கருதுகிறேன். தெரியாமலே வெளியிட்டால் சந்தேகத்துக்கு ஆளாவதிலிருத்து தப்பிக்க முடியாது (நானும்தான்).

மோகமுள், தழுவல் பற்றிய ஜெயமோகன் அவர்களின் கடிதமும் இதே திண்ணையில் உள்ளது. சந்தேகமில்லாமல் என் சிக்கல், ‘ஒரே மாதிரியான சிந்தனைகள் பலருக்கும், பல நேரங்களில், பல இடங்களில் தோன்றலாம்’ என்னும் ஜெயமோகனின் கருத்துக்கு அரணும் சேர்க்கிறது. எனக்கெதிராக அவர் தொடுத்துள்ள வழக்குக்கு நானே அவரது வலுவான சாட்சியாக நிற்கிறேன்.

இப்போது இரண்டாவது சிக்கலும் சேர்ந்துகொண்டது.

பைபிளிலும் குறளிலும் பல கருத்துகள் ஒன்றுபோலவே இருப்பதை வைத்து வள்ளுவர் ஒரு கிறித்துவர் என்று நிறுவும் நூல் ஒன்றைப் பார்த்ததாக நினைவு. மோகமுள்ளிலும் Humoresque இலும் உள்ள ஒற்றுமையைக் கண்டு மயங்கி இதே போன்றதொரு பைத்தியக்காரத்தனத்தை நானும் செய்கிறேனா என்று நான் மீண்டும் என்னிடமே கேட்டுப் பார்க்கிறேன்.

நான் நிதானத்தோடு எழுதியதாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். (ஏனென்றால் என் கட்டுரையிலிருந்து சுஜாதாவின் ‘அப்பா’ கட்டுரையை அசிமாவின் ‘அப்பா’ கட்டுரையோடு தொடர்புபடுத்தும் ஒரு குறிப்பை நீக்கியிருந்தேன்.) இருந்தாலும் மோகமுள் பற்றி நான் எழுதியது தவறு என்றால் திருத்திக்கொள்வதில் எனக்குத் தடையில்லை

பரிமளம்


இவ்வாரம் முழுக்க கடிதங்கள். ‘ சுஜாதாவை நல்ல எழுத்தாளர் என்று சொல்கிறீர்களே அவர் ‘பாய்ஸ் ‘ படத்துக்கு ஆபாச வசனம் எழுதியிருக்கிறாரே இப்போது என்ன சொல்கிறீர்கள் ? ‘ ‘ என்று

சுஜாதாவை நான் முக்கியமான படைப்பிலக்கியவாதி என்று சொல்லவில்லை . அவர் நல்ல பல கதைகளை எழுதியிருக்கிறார். அதை வெங்கட்சாமிநாதன் முதலிய மூத்த விமரிசகர்கள் இருபதுவருடம் முன்பே அங்கீகரித்திருக்கிறார்கள். அவர் நடை மற்றும் கதைத்தொழிநுட்பம் ஆகியவற்றில் ஒரு விற்பன்னர், முன்னோடி — இதுவே நான் எப்போதும் சொல்வது

**

பாய்ஸ் படம் ஆபாசமா என்பது பற்றி . ஆபாசம் என்றால் பாலுறவுச் சித்தரிப்பு என்றால் அப்படத்தைவிட என்னுடைய நாவல்கள் ஆபாசமானவையே.

ஒழுக்கம் தான் பிரச்சினை என்றால் அதை நான் இவ்வாறுதான் விளக்குவேன். நான் தனிப்பட்ட ஒழுக்கநெறியில் தீவிர நம்பிக்கை உள்ளவன். பாலியல் ஒழுக்கம் இல்லாத ஒருவன் காதலை இழந்துவிடுவான், அது மிகப்பெரிய இழப்பு என்று என் அப்பா நான் 18 வயதாக இருக்கும்போது சொன்னார். ஒழுக்க மீறல் என்பது இன்னொருவரை எப்படியோ அவமதிப்பதி, சுரண்டுவதில், ஏமாற்றுவதில்தான் கொண்டு சென்று சேர்க்கும் . அதை மிக உறுதியாக உணர்கிறேன். என் பிள்ளைக்கும் அதை சொல்லுவேன். அதை அவன் மீது திணிக்கமாட்டேன். என் அப்பா என்னிடம் ‘ உன் இஷ்டம் பாத்துக்க ‘ என்றுதான் சொன்னார் .

நான் ஒழுக்கம் பற்றி எப்போதுமே பேசுவதுண்டு. காந்தியும் , ஈவேராவும், இ எம் எஸ்ஸும் பேசிய அதே ஒழுக்கம் . என் சொந்த ஒழுக்கத்தை முன்வைத்து , அதைப்பற்றி மட்டுமே பேசுவேன். பிறருடைய ஒழுக்கம் பற்றி அல்ல. பிறவகையான ஒழுக்கம் பற்றி விமரிசிப்பதும் இல்லை .

பாய்ஸ் படத்தை ஒழுக்கம் தடைசெய்யப்பட வேண்டியது என்றால் சாரு நிவேதிதா முன்வைக்கும் ஒழுக்கம் என்ன செய்யப்படவேண்டும் ? எனக்கு இரண்டுமே ஏற்புடையவை அல்ல. இரண்டையுமே நிராகரிப்பேன். ஆனால் சீரோ டிகிரி ஒரு முக்கியமான இலக்கிய முயற்சி என்று சொல்ல எனக்கு தயக்கமில்லை. என் ஒழுக்க நெறியை அளவுகோலாகக் கொண்டு சாரு நிவேதிதாவை பொடாவிலெ தள்ளக் கோரமாட்டேன்.

பாய்ஸ் படம் செயற்கையானது, முன்னுக்குபின் முரணானது, கலைத்தன்மை இல்லாதது என்றே நண்பர்கள் சொன்னார்கள். ஞாநி அதை சொல்லலாம். அப்படம் முன்வைக்கும் ஒழுக்கமுறை பற்றிய கடுமையான கண்டனத்தை தெரிவித்து தன் தரப்பை பிரச்சாரம் செய்யலாம். அவரைப்போனற சமூகப்பிரக்ஞை கொண்ட தீவிர இதழியலாளர் அதை செய்யாமலிருந்தால் அதுதான் தவறு. அவரது கருத்துக்களோடு எனக்கும் உடன்பாடுதான். ஆனால் தங்கள் தரப்பை வெளிப்படுத்தியதனால் அவர்களை தண்டிக்க எண்ணுவது சரியல்ல .

பிரச்சினை தத்துவார்த்தமாக பார்த்தால் சிக்கலானது. நமக்குத்தேவை கட்டுப்படுத்தப்பட்ட கருத்துசெயல்பாடா, இல்லை சுதந்திர கருத்து செயல்பாடா ? கட்டுப்படுத்தப்பட்ட கருத்துசெயல்பாடு என்றால் அதை கட்டுப்படுத்துவது ‘ தேர்வு செய்யப்பட்ட ‘ ‘ முதல் தளத்தில் நிற்கிற ‘ ‘அதிகாரம் கொண்ட ‘ ஒரு சிறுபான்மை. அச்சிறுபான்மை அதிகாரத்தின் பக்கத்தில் நிற்பதனாலேயே மையஅதிகாரத்தை ஆதரிக்கும் .அதற்கு எதிரான குரல்களை நசுக்கும் . இம்முறை சமூகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்பது உண்மையே. ஆனால் மரபிலிருந்து மீற அனுமதிக்காது. மாற்றங்கள் நிகழ அனுமதிக்காது. நீண்டகால அடிப்படையில் இது சமூகத்தை தேங்க வைக்கவே செய்யும். இஸ்லாமியநாடுகள் , கம்யூனிஸ நாடுகள் , மத்தியகால கத்தோலிக்க ஐரோப்பா , நமது நிலப்பிரபுத்துவ காலகட்ட கிராமங்கள் ஆகியவை இதற்கு உதாரணம். இதை நான் ஏற்கவில்லை . ஞாநியின் பல கருத்துக்கள் எனக்கு உடன்பாடானவையல்ல, அவர் நான்மிக மதிக்கும் இதழாளர்.

கட்டுப்படுத்தப்படாத கருத்துச்செயல்பாடுகள் ஜனநாயகத்துக்கு மிக அவசியமானவை. பலவகையிலான பயணங்களையும் வளர்ச்சிகளையும் அவை சாத்தியமாக்குகின்றன. அங்கே உரிமைகள் பேணப்படும். ஆனால் அச்சுதந்திரம் வணிக ரீதியாக கையாளப்படும்போது அது அத்து மீறும். சீரழிவை உருவாக்கும் . அது ஒருவகையான சுரண்டல் . எந்த கலாச்சர செய்லாளியும் அதை அருவருப்பாகவே எண்ணுவான். ஹென்றி மில்லரை அனுமதிக்கும் சமூகம் ஹெரால்ட் ராபின்ஸையும் அங்கீகரிக்கவேண்டியிருக்கும். ஹெரால்டு ராபின்ஸை தடைசெய்தால் ஹென்றி மில்லர் எழுதமுடியாது.

ஒன்று மட்டுமே செய்யமுடியும். வணிக ரீதியான அத்து மீறல்களுக்கு எதிரான தொடர்ந்து தீவிரமான எதிர்ப்பை தெரிவிக்கலாம், அதை ஒரு கருத்துப் போராட்டமாக முன்னெடுக்கலாம். ஹென்றிமில்லரையும் ஹெரால்டு ராபின்ஸையும் வேறுபடுத்திக் காட்டலாம்.

அவ்வளவில் ஞாநி எழுதியவற்றுடன் ஒத்துப்போகிறேன் .

ஜெயமோகன்

Series Navigation

author

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

Similar Posts