இயக்குநர் சங்கர் அவர்களுக்கு! தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பாமரனின் சில கேள்விகள்!

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

அக்னி புத்திரன். சிங்கப்பூர்.


திரு. சங்கர் அவர்களுக்கு வணக்கம்.

ஜென்டில்மேன், முதல்வன், ஜீன்ஸ் போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களைத் தந்தவர் நீங்கள். உங்களின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த ‘பாய்ஸ் ‘ திரைப்படத்தைப் பார்க்கும் பெரும்பேறு கிட்டியது.

தமிழ்கூறு நல்லுலகம் செய்த தவப்பயனாக இப்படம் தங்களின் கைவண்ணத்தில் உருவாகி வெளிவந்துள்ளது.

உங்கள் திரைப்படத்தில் பல காட்சிகள் நம் தமிழ் உலகம் இதுவரை கண்டிராத, பார்த்திராத புதுமைக்காட்சிகள்..வசனங்கள்..ஆஹா..ஓகோ..

அவற்றில் ஒரு சில மிக மிக உச்சம்.. நினைத்து நினைத்து இன்புறத்தக்கவை.அவற்றில் சிலவற்றை இங்கே தங்களுக்கு நினைவுப்படுத்துகின்றேன்.

காட்சி 1

ஐந்து இளைஞர்கள் நண்பர்கள். பெற்றோர் வீட்டில் இல்லாதபோது.. ஒரு விபச்சாரியை வீட்டிற்கு அழைத்து வந்து, ஐந்து பேரும் ஒருவர் மாற்றி ஒருவர் உடலுறவு கொள்ளுவது போன்ற காட்சி..

காட்சிகள் மிகத் தத்ரூபமாக இரசிக்கும்படி ஆபாசமாக.. ஸாரி.. மிகக் கவர்ச்சியாக படம் பிடிக்கப்பட்டு இருந்தன..

காட்சிகள் இப்படி வசனம் எப்படி ? இதோ..சில எடுத்துக்காட்டுகள்..

உடலுறவை முடித்துவிட்டு மூன்றாவதாக அறையை விட்டு வெளியே வருபவன் உதிர்க்கும் ஒரு வசனம் ..

டேய்.. நான் மூனு தடவைடா.. ஆஆஆ..

மற்றொருவன்: டேய் இந்த கொஞ்ச நேரத்தில் மூனு தடவையா ? எப்படிடா ?

விலைமகள் கூறும் ‘நறுக் ‘ வசனம்:

ஐந்தாவதாக உடலுறவு கொள்ள வருபவனிடம்..

டேய்..

நீங்க கொடுத்த பணத்திற்கு நாலு பேரே அதிகம்.இன்னும் ஐநூறு கொடு..அப்பதான் நீ

செய்யலாம்..

என்ன மஞ்சள் புத்தகம் படிக்கிற மாதிரி இருக்கா ? எல்லாம் உங்கள் படக்காட்சி வசனங்கள்தான்..ஐயா..

மேலும் சில அற்புதமான காட்சிகள்..

காட்சி 2

இரண்டு விடலைகள்(டான் ஏஜ்)அருகருகே உட்கார்ந்து பேசிக்கொள்ளும் காட்சி..

இளைஞன்:

ஏய்..உங்களுக்கு அந்த ‘பீலிங் ‘ வந்தால் என்ன செய்வீர்கள்..ப்ளீஸ் சொல்லுப்பா..

இளைஞி: போடா..

இளைஞன்:ப்ளீஸ்..ப்ளீஸ்..என்ன பண்ணுவீங்கப்பா..

இளைஞி: ம்..அந்த பீலிங் வந்தால் காலு மேல காலு போட்டு உட்கார்ந்துக்குவோம்

இளைஞன்:ஏய்இப்பக்கூட..

அப்படித்தானே..காலு மேல காலு மேல போட்டு உட்கார்ந்துஇருக்கே… பீலிங்காஆஆஆ!

இளைஞி: ச்சீ..போ..ஒஒஒஓஓஓஓஸ!!

ஆஹாக.. கருத்தாழமிக்க சத்தான முத்தான வசனங்கள்..

மேலும் ஒரு காட்சி..

நீங்களே படித்து இரசியுங்கள்..

காட்சி 3

பெற்றோர்களால் விரட்டப்பட்ட விடலைகள் தங்க இடமின்றி ஒரு பழைய கார் செட்டில் இரவு

தங்குகின்றனர். அப்போது அவர்களில் ஒருவன் செக்ஸ் புத்தகம் படிக்கின்றான்..திடாரென்று கார் ஆடுகின்றது!

ஒருவன்: என்னடா..காரு திடாரென்று ஆடுது!

மற்றொருவன்:

( செக்ஸ் புத்தகம் வைத்துத்திருந்தவன் பக்கமாகத் திரும்பிப் பார்த்து)

டேய்…. காலு கையா..சும்மா வைத்துக்கொண்டு படுக்கமாட்டே..! (சுய இன்பம் செய்வதாக பொருள்படும்படி)

மேலே கண்டவைகள் அனைத்தும் ஒருசில உதாரணங்கள்தான்..இவை போல படமெங்கும்

அற்புத அசர வைக்கும் காட்சி அமைப்புகள்..

வசனங்கள்..உடைஅலங்காரங்கள் உடம்பையே புல்லரிக்கச் செய்கின்றன..

சரி.. உங்களிடம் இந்த அப்பாவி பாமரன் விடுக்கும் சில கேள்விகள்ஸ

1.தமிழ்க் கலாச்சாரம் பண்பாடு காற்றிலே பறக்கும்படி இப்படி ஒரு மலிவான திரைப்படம் எடுத்து வெளியிட என்ன காரணம் ?

2.பாடுபட்டு வளர்த்த இத்தமிழ்ச்சமுதாயத்தை இப்படிப் பாழ்ப்படுத்தலாமா ?

3.இப்போக்கு நம் இளையர்களை தீயவழிக்கு இட்டுச்செல்லாதா ?

4.தரமான படங்களைத் தந்த தாங்கள், தரம்கெட்டுப் போய் இப்படி ஒரு மஞ்சள் படம் தருவதற்கு பணம்தான் காரணமா ?

5.இத்திரைப்படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்க இயலுமா ?

நான் செய்வது வியாபாரம். இங்கு இலாபம்தான் நோக்கம். நான் அறிவுரை சொல்ல அய்யன் வள்ளுவன் இல்லை என்று கூறி தப்பித்துக்கொள்ள முயல வேண்டாம். முதலில் ஒன்று, நீங்கள் அறிவுரை கூறி யாரையும் திருத்த வேண்டாம். இருப்பதை கெடுக்காமல் இருந்தால் அதுவே போதும். அதுதான் என் ஆதங்கம். நீங்கள் எல்லாம் அறிவுரை கூறித்தான் தமிழ்ச்சமுதாயம் திருந்த வேண்டும் என்ற நிலையும் இல்லை.

நீங்கள் செய்வது வியாபாரம்தான். இலாபம்தான் இலக்கு. மறுக்கவில்லை. ஆனால், உங்கள் வியாபாரம் நுகர்வோனை பாதிக்காமல் இருக்க வேண்டும். இதற்கு சரியான எடுத்துக்காட்டு அண்மையில், குளிர்பானங்கள் விற்கும் நிறுவனங்களுக்கு எதிரான மக்களின் கிளர்ச்சியைக் குறிப்பிடலாம். மேலும் திரைப்பட நடிகை வினிதாவின் விபச்சாரம் கூட வியாபாரம்தான். அவர் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளவில்லையா ? என்ன அவர் மற்றவர்களின் உடலைக் கெடுக்கின்றார். நீங்கள் இளையச்சமுதாயத்தின் மனத்தைக் கெடுக்கிறீர்கள். வேறுபாடு அவ்வளவுதான்..பணம்தான் குறி என்றால், திரைப்படத்துறையில் இருக்கும் உங்களுக்கு ஒரு பத்து வினித்தாக்கள் கிடைப்பது அவ்வளவு சிரமம் அல்ல என்று நினைக்கின்றேன். ஏன்னென்றால், அத்தொழிலில் பாதிக்கப்படுவர்கள் ஏற்கனவே கெட்டுப்போனவர்கள்தான் மீண்டும் மீண்டும் வந்து தங்களை கெடுத்துக்கொள்வார்கள். ஆனால் உங்களின் இத்திரைப்படம் ஒன்றுமறியா அப்பாவிகளை, இளைஞர்களைத் திசை திருப்ப வல்லதாக உள்ளது. உங்களைப் போன்றவர்கள் மக்களின் மனத்தைத் திசை திருப்பாமல் தங்கள் தொழிலை மாற்றிக்கொண்டு தசை வியாபாரத்தில் ஈடுபடலாம் அல்லது இனிவரும் காலங்களில் இது போன்ற திரைப்படங்கைளத் தரக்கூடாது. இதுதான் என் போன்றவர்களின் எதிர்பார்ப்பு.

மேலும் சமுதாயத்தில் நடப்பதைதான் நாங்கள் திரைப்படமாகத் தருகின்றோம் என்று சப்பைக்கட்டு கட்டாதீர்கள். சிலவற்றை நாம் இலைமறை காய் மறையாகத்தான் வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் சமுதாயத்திற்கு நல்லது. இதைதான் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். நாமும் கடைப்பிடிக்க வேண்டும்.

எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டு காட்டுவது நமது கலாச்சாரத்திற்கு, பண்பாட்டுக்கு ஏற்புடையதல்ல. எடுத்துக்காட்டாக.. ஆண் பெண் இனச்சேர்க்கையின் வழிதான் குழந்தை பிறக்கிறது.

இதுஉண்மைதான்..நடப்பதுதான்…ஆகையால் இதை வெளிச்சம் போட்டு காட்டுவதில் தவறு இல்லை என்று கருதி எவரும் எங்கள் பெற்றோர் எங்களை இப்படித்தான் உருவாக்கினார்கள் என்று கூறி உடலுறவு காட்சியைப்படம்பிடித்து தங்கள் வீட்டு வரவேற்பறையில் தொங்க விடுவதில்லை. சங்கரும் செய்யமாட்டார் என்று நம்புகின்றேன்.

திரைப்படம் சக்தி வாய்ந்த மக்கள் தொடர்புச்சாதனம். அதைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். சங்கரிடம் இருந்து இப்படி ஒரு மஞ்சளை எதிர்பார்க்கவில்லை. நல்ல மங்களகரமானவற்றையே எதிர்பார்க்கின்றேன். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு பாமரன்.

இப்படிக்கு

அக்னி புத்திரன்.

சிங்கப்பூர்.

agniputhiran@yahoo.com

Series Navigation

author

அக்னிபுத்திரன்

அக்னிபுத்திரன்

Similar Posts