கடிதங்கள்

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

செப்டம்பர் 4, 2003ஆசிரியருக்கு,

எந்த இடத்திலும் நான் முனைவர் பட்டத்தைக்கூட போட்டதில்லை. இங்கேபோடக்காரணம் ரவிசீனிவாஸ் இதே கேள்வியைக் கேட்பார் என்பதே. இங்கே எழுதிய நண்பரிடம் பூராசிரமம் ஜாதகம் எல்லாம் கேட்டவ அதே வாயால் இதையும் கேட்பார் என்று தெரியும். ஆய்வேடுகளைப் பற்றி படித்துவிட்டுபேச ஆளிருக்கிறது .எப்படிவேண்டுமானாலும் பேசலாமே.

மீண்டும் சொல்கிறேன், ரவிசீனிவாஸைபுண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.அவர் தன் எல்லைகளை உணர்ந்திடவேண்டும். தன் துறையிலிருந்து பொருத்தமானவற்றையும் பிறதுறைகளில் பொதுவாக நிபுணர்களால் முன்வைக்கப்பட்டவற்றையும் மட்டும் பேசவேண்டும். குறிப்புகளாக எழுதாமல் கட்டுறைகளாக எழுதி நூல்களாக்கவேண்டும். தமிழுக்கு இந்நூல்கள் நிறையவே தேவை . தொடங்கியநிலையிலேயே அவரை புண்படுத்தி துரத்த விரும்பிடவில்லை.

எம் வேதசகாயகுமார்


ஆசிரியருக்கு,

சென்ற இதழில் நான் எழுதிய குறிப்பின் தொனி மேலும் சிலரை வருத்தம் கொள்ள செய்ததாக அறிந்தேன். என் புரிதலில் உள்ள சிக்கலை சம்பந்தப்பட்டவர்கள் சரிசெய்தார்கள் .

நாகார்ச்சுனன் நெல்லையில் பேசியபோது நிகழ்ந்தவற்றை இப்படி என் பார்வையிலே சுருக்கிக் கொண்டேன். அன்று அவர் பேசிய விஷயங்களைப்பற்றிய அடிப்படைப்புரிதல் எனக்கு இருக்கவில்லை என்பதையும் சொல்லவிரும்புகிறேன்., அவை சூழலுக்கே புதிய விஷயங்கள் ஆகும். அவர் அதுவரைக்கும் பிற விமரிசகர்கள் பொதுப்புத்தி சார்ந்து குத்துமதிப்பாகவே பேசினார்கள் அமைப்பியலாளர்களே முறைப்படி இலக்கிய விமரிசனம் செய்தார்கள் என்று சொன்னதாகத் தகவலிருந்தது. க,பூரணசந்திரன் தன் கட்டுரையில் [காலச்சுவடு மலர்] இதை சொல்லியுள்ளார். மேற்படி நிகழ்ச்சியினில் அவரிடம் அவர் படைப்புகளை அலகுகளாகக் கட்டுடைப்பதற்கு தமிழின் அசைபிரிப்பு விதிகள் கொண்டுகூட்டல் மூறை ஆகியவற்றை கடைப்பிடிக்கிறாரா, அதுகுறித்தமொழியியல் விதிகள் தெரியுமா, என்ற வினா எழுப்பட்டது.

அதற்கு அவர் சொன்னபதிலில் அவை பற்றி தனக்கு தெரியாது என்ற பொருளே இருந்தது. மீண்டும் அவரிடம் அவர் கடைப்பிடிக்கும் முறைமை என்ன என்று கேட்கப்பட்டது . தன் ரசனை தேடல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே விமரிசனம் செய்வதாகவும் தனக்கு எந்த திட்டவட்டமான முறைமையும் இல்லை என்றும் சொன்னார். அத்துடன் என்னை பொறுத்தவரை உரையாடல் முடிந்தது . ரசனை சார்ந்த விமரிசனம் எப்படியும் போகலாமே.அதன் பிறகு நிகழ்ந்தது முழுக்க அவரவர் வாசிப்புகளை வெங்கடேஷ் சக்ரவர்த்தி முதிலியோர் முன்வைத்து பேசிக் கொண்டதுதான். நாகார்ச்சுனனால் பதிலளிக்க முடியவில்லை என நான் சொன்னது இதனடிப் படையிலேயே.

நாகார்ச்சுனன் எப்போதுமே முறைமைக்கு அப்பால் செல்லக்கூடிய இலக்கியத்தின் இயல்பையே முன்வைத்துள்ளார் என்றும், இலக்கியத்தின் போக்கு தன்னை இல்லாமலாக்கி இன்மைவரை செல்லக்கூடியது என்று சொல்லிவந்தார் என்றும் அதையே அக்கூட்டத்திலும் சொன்னார் என்றும் இப்போது விளக்கப்பட்டது . நான் அதை தவறாக புரிந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது . அப்படியானால் என் புரிதலுக்காக வருந்துகிறேன். நாகார்ச்சுனனிடமும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாகார்ச்சுனனின் நூலுக்கு மிக விரிவான கடுமையான விமரிசனங்கள் வந்தன. அவை எதற்கும் பதில் அளிக்கப்படவில்லை . அந்நூல் திரும்பபெறப்பட்டது என்றும் விரிவான நூல் வரவிருக்கிறது என்றும் சொன்னார்கள். வரவில்லை. இப்போது அந்நூலை திரும்பப் பெறவில்லை என்று தெரிவிக்கபட்டது . அப்படியானால் அதை அப்படி ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கமேதுமில்லை.

நாகார்ச்சுனனின் பங்களிப்பைப் பற்றி குறைத்துச்சொல்ல விரும்பவில்லை. இலக்கியத்தின் கருத்தியல் உள்ளடக்கம் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்த விமரிசனச்சூழலை மாற்றியமைத்தவர் அவர். ஆனால் புது விஷயங்களை கொண்டுவருவதில் அவர் பொது விமரிசனத்தின் எல்லைகளை மீறி சென்றார் என்று மட்டுமே சொன்னேன்.

படித்தவர்கள் எல்லாருமே எழுதவேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழில் எழுதவே ஆளில்லை . தன் மெளனம் கலைந்து நாகார்ச்சுனன் வந்து நிறையவே எழுதவேண்டும்

எம்.வேதசகாயகுமார்


Series Navigation

author

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

Similar Posts