வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 3

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

PS நரேந்திரன்


பெங்களூர் ‘ஜிலு ஜிலு ‘வென்று குளிர்ச்சியாக, அழகாக இருக்கிறது.

இந்தியாவின் பல பாகங்களில் நான் வசித்திருந்தாலும், இதுவரை கர்நாடக மாநிலத்தின் எந்தவொரு பகுதிக்கும் போனதில்லை. ரயிலில் ஹைதராபாதிலிருந்து, மும்பை போகும் வழியில் பலமுறை குல்பர்காவைக் கடந்திருக்கிறேன். அவ்வளவுதான் நான் கர்நாடக மாநிலத்தில் கண்டது. குல்பர்கா ஒரு பாலைவனம். வெறும் கல்லும், மண்ணுமாகக் கடவுளால் சபிக்கப் பட்ட பகுதி போல இருக்கும். தென் கர்நாடகா அதற்கு நேர் மாறாக, பசுமையாக இருக்கிறது.

இந்த முறை விடக்கூடாது. எப்படியும் கர்நாடகாவிற்கு ஒரு விசிட் அடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் இருந்தேன். பெங்களூரில் கம்ப்யூட்டர் இண்டஸ்ட்ரியின் அபரித வளர்ச்சியைக் கண்டு வர வேண்டும் என்பது ஒரு காரணம். எனது மனைவி வழிச் சொந்தக்காரர்கள் நிறையப் பேர் பெங்களூரில் இருக்கிறார்கள் என்பதும், தங்குவதற்கும், சுற்றிப் பார்ப்பதற்கும் பிரச்சினை எதுவும் இல்லை என்பதும் கூடுதல் காரணங்கள். ஒரு சுப யோக சுப தினத்தில் குடும்பத்தினருடன் வாடகைக் காரில் எனது பெங்களூர்ப் பயணம் துவங்கியது.

இந்த இடத்தில் வாடகைக் கார்கள் பற்றி உங்களூக்குச் சொல்லியாக வேண்டும்.

இப்போதெல்லாம் தழிழ்நாட்டில் எந்த ஊருக்கும் போனாலும் வாடகைக் கார்கள் கிடைக்கின்றன. சிறிய ஊர்களில் கூட ஒன்றிரண்டு கார்கள் நின்று கொண்டிருக்கும். பெரும்பாலும் அதே அரதப் பழசு அம்பாஸடர்கள்தான். பெரிய ஊர்களில் மற்ற ரகக் கார்கள் கிடைக்கின்றன என்று கேள்விப் பட்டேன். அது கிடக்கட்டும் ஒரு பக்கம்…நான் சொல்ல வருவது இந்த வாடகைக் காரோட்டிகளைப் பற்றி. இவர்களிடம் சிக்கி நான் பட்ட அவஸ்தைகளை எழுத வேண்டும் என்றால் தனி அத்தியாயமே வேண்டும். Professionalismமும் நேரந்தவறாமையும்…அடடா…என்னென்று சொல்வேன் ? அதிலும் எனக்குக் கிடைத்த டிரைவர் இருக்கிறானே…

‘ரங்கநாதா, விடியக் காலையில ஒரு இடத்துக்குப் போகணும்…ரொம்ப முக்கியமான வேலை…ஒரு அஞ்சு மணிக்கு வந்துடு. என்னா ? ‘

‘சரி சார்…அஞ்சுமணிக்கு ‘டாண் ‘ணு வந்திடறேன் சார் ‘

குழந்தைகள் முதற்கொண்டு எல்லோரும் காலை நான்கு மணிக்கு எழுந்து தயாராக இருப்பார்கள். ஐந்து மணியாகும்…ஐந்து ஆறாகும்…ஆறு ஏழாகும்…ஏழு, எட்டு கூட ஆகி விடும். ரங்கனைக் காணமுடியாது. எங்கு போய் பள்ளி கொண்டானோ ? என எல்லோரும் சபித்துக் கொண்டிருப்பார்கள். கோவிலில் பெருமாள் கூட இந்நேரம் எழுந்திருச்சிருப்பாரு…இந்தப் படுபாவியக் காணலியே…சரி…இன்னைக்கு வெளியே போக வேண்டாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, ரங்கநாத தரிசனம் கிடைக்கும்.

‘ஹி..ஹி….கொஞ்சம் லேட்டாயிடிச்சி சார்… ‘ என்பான் இளித்துக் கொண்டே. மூக்கு வரை வந்து நிற்கும் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். ஏதாவது சொன்னால் அடுத்த நாள் பதினொரு மணிக்குதான் வருவான்.

காசு கொடுத்து வாங்கிய முடிவில்லாத இம்சை அது…அதை விடுங்கள்…பெங்களூர் போனதைப் பற்றி பார்க்கலாம்.

***

தருமபுரி தாண்டி, கிருஷ்ணகிரி நெருங்கும் போதே சீதோஷ்ண நிலையில் மாற்றம் தெரிய ஆரம்பித்து விடுகிறது. கிருஷ்ணகிரியில் மிகப் பிரம்மாண்டமான இரண்டு பாலங்கள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான்கு வழிச் சாலை போடும் பணி மிக மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

‘பாரதப் பிரதமர் வாஜ்பாயின் கனவான தங்க நாற்கரச் சாலைத் திட்டம் ‘ எனப் பளிச்சென்று போர்டுகள் வைத்திருக்கிறார்கள். ஏராளமான செலவில், சர்வதேசத் தரத்திற்கு இணையான சாலைகள் தயாராகி வருவது மிகவும் பாரட்ட வேண்டிய விஷயம். பெங்களூர் – கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை, சென்னைவரை இணைக்கப்படும் என்று தெரிகிறது. இவ் வேலைகள் முடிந்த பிறகு சென்னையிலிருந்து பெங்களூரை மிக விரைவில் சென்றடைந்துவிடலாம்.

இந்தச் சாலைப் பணிகளில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கன ரக வாகனங்கள் உபயோகப் படுத்தப்படுவது. முன்பெல்லாம் எங்கேனும் சாலைப் பணிகள் நடக்கும் போது, காலில் சாக்கு கட்டிய ஆண்களும், முக்காடிட்டுக் கூடை சுமக்கும் பெண்களும், நான்கைந்து ஓட்டை உடைசல் வண்டிகளும், சாலையோர மரத்தில் கட்டித் தொங்க விடப்பட்ட தூளிகளூம், அதிலுறங்கும் குழந்தைகளும்தான் கண்ணில் படுவார்கள். புதிதாய் நடக்கும் சாலைப் பணிகளில் பெண்களையும், குழந்தைகளையும் நான் பார்க்காதது மனதிற்கு நிம்மதியாக இருந்தது. சாலை போட்டு முடிக்குமுன் வேறொரு ஆட்சி வந்து, பணிகளை நிறுத்திவிடாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

***

மாநிலம் விட்டு மாநிலம் போகையில் காருக்கு ‘பர்மிட் ‘ வாங்க வேண்டுமாதலால், ஹோசூரில் R.T.O ஆபிசை தேடி கர்நாடக எல்லைக்கருகில் கண்டுபிடித்தோம். அது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தது, தமிழ்நாட்டில்தான் ‘பர்மிட் ‘ வாங்க வேண்டும் எனத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடலூரிலேயே வாங்கி இருந்திருக்கலாம். தமிழ்நாட்டுக்காரனுக்கே உரிய அசட்டுத் துணிச்சலில் ஹோசூரில் வாங்கிக் கொள்ளலாம் என்று வந்தாயிற்று. பட்டுத்தானே ஆக வேண்டும் ? அப்படியே U டர்ன் அடித்து, தமிழ்நாட்டு R.T.O ஆபிசைக் கண்டுபிடிப்பதற்குள் மண்டை காய்ந்து விட்டது.

ஹோசூர் தொழிற்சாலைகள் நிறைந்த நகரம். சரக்கு ஏற்ற வரும் ஏராளமான சரக்கு லாரிகளும், கன்டெய்னர் லாரிகளும் சாலை முழுக்க நிறைந்து, நின்று கொண்டிருந்தன. அதையெல்லாம் தாண்டி, புகுந்து, புறப்பட்டுதான் தமிழ்நாட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். கர்நாடக ஆபிஸ் பக்கா பில்டிங்கில், போர்டுடன் இருந்தால் எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது. தமிழ்நாட்டு R.T.O ஆபிஸ் இருந்தது ஒரு ஓலைக்கூரை வேய்ந்த இடத்தில், சரியான போர்டு கூட இல்லாமல். தினமும் நூற்றுக் கணக்கான லாரிகளும், கார்களும் இந்த இடத்தில் வந்து பர்மிட் வாங்கிக் கொண்டு போகின்றன. தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு எவ்வளவு வருமானம் வரும் ? ஒரு சரியான கட்டடம் கூடவா இவர்களால் கட்ட முடியாது ? கேவலம்.

பர்மிட் வாங்குமிடத்தில், பேப்பர்களை ஒப்படைத்துவிட்டு ‘இருநூறு ரூபாய் ஆபிசர் கிட்ட கொடுங்க சார் ‘ என்றான் டிரைவர். பர்மிட்டை வாங்கும் போது அதில் கட்டணம் ரூ. 150 என்று போட்டிருந்தது. மீதி 50 ரூபாய் கேட்கலாம் என்று வாயைத் திறப்பதற்குள் டிரைவர் முழங்கையால் லேசாக இடித்து என்னை வெளியே தள்ளிக் கொண்டு வந்துவிட்டான்.

50 ரூபாய் அவர்களுக்குக் கமிஷனாம். லஞ்சத்திற்கு புதிய பெயர். கமிஷன்!!!. அதுவும் வாயால் கேட்பதில்லை இப்போதெல்லாம். அவர்களாகவே எடுத்துக் கொள்கிறார்கள். அரசாங்கம் இவர்களுக்குச் சம்பளமே கொடுப்பதில்லை போலிருக்கிறது. இதுமாதிரி ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். அதுவும் உட்கார்ந்த இடத்திலேயே! …நாதாரிப் பயல்கள்….யாரை நொந்து கொள்வது ? தமிழ்நாட்டு நடைமுறைக்கு இதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது…யாரும் இதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

ஐம்பது ரூபாய் எனக்குப் பெரிய பணமில்லைதான். நியாயமான செலவுகளுக்கு நான் என்றும் கவலைப் படுவதில்லை. இது அநியாயம். வழிப் பறிக் கொள்ளை. அதைத்தான் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. செய்யும் வேலைக்கு இவர்களுக்கு சம்பளம் தராமலா இருக்கிறார்கள் ?…

தமிழ்நாட்டு எல்லை முடியும் இடத்தில் மூத்திர நாற்றமும், கர்நாடக எல்லை துவங்குமிடத்தில் மிக அழகான ஒரு ஆர்ச்சும் இருந்தது.

***

பெங்களூர் மிகச் சுத்தமாக இருக்கிறது. குப்பைக் கூளங்களோ, கட்சிக் கொடிகளோ, பேனர்களோ, ஆபாச போஸ்டர்களோ, அம்மா வாழ்க, அய்யா வாழ்கவெல்லாம் இல்லாமல் அழகாக…தமிழ்நாட்டிற்கு இத்தனை அருகில் இருந்தும் திராவிடப் புற்றுநோய் அவர்களை அண்டாமல் இருப்பது மிக ஆச்சரியம்தான். கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது. நமக்குக் கொடுப்பனை அவ்வளவுதான். என்ன செய்வது ?

நான் போயிருந்த நேரத்தில் மழைக்காலம்….திடார் திடாரென்று சாரல் தூவி விட்டுப் போகும். மெலிதான குளிர். பெங்களூர்வாசிகள் கொடுத்து வைத்தவர்கள். சென்னையைப் போல தண்ணீர்ப் பஞ்சம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எப்படி வரும் தண்ணீர்ப் பஞ்சம் ? காவிரித் தண்ணீரல்லவா குடிக்கிறார்கள்!

பெங்களூரைச் சுற்றி நிறைய முன்னேற்றப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தினமும் ஒரு Call Center புதிதாக திறந்து கொண்டிருக்கிறார்கள் என்றார் எனது நண்பர். நிறைய மல்ட்டி நேஷனல் கம்பெனிகள். வேலை வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. இந்தியர்களுக்கு பெங்களூர் ஒரு பெரிய கதவைத் திறந்து விட்டிருக்கிறது. நேற்றுவரை வெறும் டூரிஸ்ட்கள் மட்டுமே சென்று வரும் இடமாக இருந்த நகரம், இன்று ஏராளமான முதலீடுகளால் கொழித்துக் கொண்டிருக்கிறது. சரியான தலைவர்களூம், சரியான நோக்கமும் கொண்ட சமுதாயம் முன்னேறும் என்பதற்கு கர்நாடகா ஒரு உதாரணம்.

நண்பர் ஒருவரின் சிபாரிசின் பேரில் கர்நாடக சட்ட சபைக்கு (விதான சொளதா) உள்ளே சென்று வர சந்தர்ப்பம் கிடைத்தது. மேற் கூறிய நண்பருக்கு வேண்டியவர் அங்கு பணியாற்றுகிறார். மிக செல்வாக்கானவர் போலிருக்கிறது. எங்களை அசெம்பளி ஹால் உள்ளேயே கூட்டிப் போனார். கூட்டம் எதுவும் அந்த நேரத்தில் நடக்கவில்லை. சபா நாயகர் இருக்கைக்கு அருகில் வரை போக முடிந்தது.

‘இதுதான் சீஃப் மினிஸ்டர் எஸ்.எம். கிருஷ்ணா அமருமிடம் ‘ என்றார் ஒரு சீட்டைக் காட்டி.

‘ஐயா கிருஷ்ணா அவர்களே, கொஞ்சம் காவிரியில் தண்ணீர் திறந்து விடுங்களய்யா. தமிழக விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் ‘ என்று மனதிற்குள் கேட்டு வைத்தேன். ஏதோ என்னால் முடிந்தது!

விதான சொளதாவில் நான் கண்ட இன்னொரு ஆச்சரியம், கட்சிக் கரை போட்ட வேட்டி கட்டினவர்கள் யாரையும் பார்க்காதது! அரசியல்வாதிகள் என்பதற்கு அடையாளமுள்ளவர்களை நான் பார்க்கவே இல்லை. பெரும்பாலும் அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் மட்டும்தான். நான் தமிழக ‘சத்த சபை ‘க்கும் போயிருக்கிறேன். அங்கு நடக்கும் கூத்துகள் பற்றி உங்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. அதையெல்லாம் எழுதினால் உங்களுக்குக் கோபம் வரலாம். எனவே இத்தோடு விடுகிறேன். ஒன்று மட்டும் நாம் நினைத்துப் பெருமை கொள்ளலாம். கர்நாடக சட்ட சபையும், உயர்நீதி மன்றமும் ஒரு தமிழ்நாட்டு பொறியாளரால் வடிவமைக்கப் பட்டுக் கட்டப்பட்டது என்பதுதான் அது.

மற்றபடி பெங்களூரைச் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள். கப்பன் பார்க், லால் பார்க், ISKON ஹரே கிருஷ்ணா கோயில்… என்று முடிந்தவரை ஒரு ரவுண்ட் அடித்தேன். பிரிகேடியர் ரோட்டில் ஏராளமான கடைகளூம், மால்களும்…காசுள்ளவனுக்கு சொர்க்கம்.

கர்நாடக மக்களுக்குத் தமிழர்களின் மீது ஒரு விதமான வெறுப்புணர்வு இருப்பதை உணர முடிகிறது. ஏன்….எதற்கு என்று ஆராய எனக்கு விருப்பமில்லை. அது ஒரு பெரிய சப்ஜெக்ட். காவிரிப் பிரச்சினை கூட ஒரு காரணமாக இருக்கலாம்…அல்லது வேறு எதாவதா ?

வந்தது வந்தோம், மைசூரையும் ஒரு நடை பார்த்து வரலாம் என்று புறப்பட்டுப் போனேன். வழியில், மண்டியாவில் ஒரு நாற்சந்திக்கருகில் காரை நிறுத்தி ஒரு கடையில் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சுற்றிலிருந்தவர்கள் எங்களையும், காரையும் ஒரு பார்வை பார்த்து ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன விஷயம் என்றேன் நண்பரிடம்.

‘ஒன்றுமில்லை. நமது கார் தமிழ்நாட்டில் ரிஜிஸ்டர் செய்யப் பட்டதல்லவா ? அதனால்தான் அப்படிப் பார்க்கிறார்கள் ‘ என்றார்.

‘அதனாலென்ன ? ‘ என்றேன்.

நண்பர் என்னைப் பார்த்து விஷமமாகச் சிரித்துக் கொண்டே ‘காவிரிப் பிரச்சினை உச்சத்தில் இருக்கும் போது இந்த இடத்தில்தான் தமிழ்நாட்டு ரிஜிஸ்ட்ரேசன் உள்ள வண்டிகளை அடித்து நொறுக்கினார்கள் ‘ என்றார் சாதாரணமாக.

‘தெரிந்து கொண்டேவா இந்த இடத்தில் நிறுத்தினீர்கள் ? குழந்தை குட்டிகளுடன் வந்திருக்கும் இந்த நேரத்தில் ஏதாவது கலாட்டா செய்து விடப்போகிறார்கள் ‘ என்று நண்பரைக் கடிந்து கொண்டே மண்டியாவைவிட்டுப் புறப்பட வேண்டியதாகி விட்டது.

***

மைசூர் போகும் வழியில், ஸ்ரீரெங்கப்பட்டணம் பார்க்க வேண்டிய இடம். திப்பு சுல்தான் தலைநகராகக் கொண்டு ஆண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். முன்பு சிறப்பாக இருந்ததற்கு அடையாளமாக, சிதைந்த கோட்டைகளும், கொத்தளங்களுமாகக் காட்சி அளிக்கிறது. திப்பு மற்றும் அவர் குடும்பத்தாரின் சமாதிகள் அங்குதான் இருக்கின்றன. ரெங்கநாதர் கோவில் மிகப் பிரசித்தம். மிகப் பழமையானது. பள்ளிகொண்ட நிலையில் இருக்கும் ரெங்கநாதரைப் பார்க்கவே ஒரு நடை ஸ்ரீரெங்கப்பட்ணம் போய் வரலாம்.

‘ரங்கநாதன் என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் படுத்துக் கொண்டே இருப்பார்கள் போலிருக்கிறது ‘ என்று எங்கள் டிரைவர் ரங்கநாதனை சதாய்த்துக் கொண்டிருந்தேன்.

திப்புவின் சமாதி இருக்கும் இடத்திற்கருகில், மூன்று நதிகள் (காவிரி, ஹேமாவதி, கபினி) சங்கமிக்கின்றன. மிக அழகான, ரம்மியமான இடம். காவிரி நீர் பளிங்கு போல இருக்கிறது. நாங்கள் போன நேரத்தில் விடாமல் மழை தூறிக் கொண்டிருந்ததால் அதிக நேரம் இருக்க முடியவில்லை.

மைசூரைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்குப் பிடித்து விட்டது. பச்சைப் பசேலென்ற ஊர். சாமுண்டி கோயிலும், அரண்மனையும், கண்ணம்பாடி அணையும் கண்ணை விட்டு அகலாதவை. ஒரே நாளில் பெங்களூர் திரும்பி விட்டதால் எதையும் சரிவரப் பார்க்க முடியவில்லை.

இன்னொரு முறை சாவகாசமாக கர்நாடகா சுற்றி வர வேண்டும்..

***

narendranps@yahoo.com

Series Navigation

author

நரேந்திரன்

நரேந்திரன்

Similar Posts