கடிதங்கள்

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

ஆகஸ்ட் 15, 2003


**

அனைவருக்கும் சுதந்திரநாள் வாழ்த்துக்கள்

திண்ணைக்குழு

***

ஆசிரியருக்கு,

ராஜபாண்டியன் கடிதம். ஆக்ஸ்ட் 08 குறித்து

1,ஜெயமோகன் தவிர எல்லோருமே பொத்தாம் பொதுவாகத்தான் கி.ராவின் படைப்புகள் பற்றி எழுதியிருக்கிறார்களா ? கட்டுரையில் பிரேம் என்பவர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதே, அவர் என்னதான் எழுதியுள்ளார் என்பது கடிதம் எழுதியவருக்குத் தெரியுமா ?இல்லை அவரும் இந்த பொத்தாம் பொது விமர்சகர் பட்டியலில் இடம் பெறுகிறாரா ?

2,ராஜபாண்டியன் ஆசிரியரா/மாணவரா,எந்தக் கல்லூரி.

3,நான் மார்க்சிய அழகியல் குறித்து ஜெயமோகன் எழுதியிருந்ததை கேள்விக்குட்படுத்தியிருந்தேன்.அதைப் புரிந்துகொள்ளாமல் வேறு எதையோ அவர் எழுதியுள்ளார்.

4,கட்டுரையில் கூறப்பட்டிருந்த பிற கருத்துகள் அனைத்தும் உங்களுக்கு புரிந்துவிட்டதா ? உங்கள் கல்லூரியில் அதைப்படித்த அனைவரும் அக்கட்டுரையினை முழுமையாகப் புரிந்து கொண்டார்களா ? இவை நான் அவருக்கு விடுக்கும் கேள்விகள்.

5,நான் திண்ணையில் ஜெயமோகனின் ஒரு சில கட்டுரைகளைத்தான் விமர்சித்துள்ளேன்.அனைத்தையும் விமர்சிக்க எனக்கு நேரமில்லை. நான் எழுதியுள்ள சில கட்டுரைகளே போதும் ஜெயமோகன் எழுத்தில் உள்ள அபத்தங்களை காட்ட.மற்றப்படி அவரை விமர்சித்து எனக்கு எதையும் நிறுவத் தேவையில்லை.திண்ணையில் நான் வேறு கட்டுரைகளும் எழுதியுள்ளேன்.

6,இனக்குழு – ஜெயமோகன் எழுதிய கட்டுரை குறித்து எழுதும் கட்டுரையில் விரிவாகக் குறிப்பிடுவதால் இங்கு பதில் தருவதை தவிர்க்கிறேன்.

7. தமிழ் விமர்சனங்களில் தெளிவாகப் புரியும்படி அசலான சிந்தனைகளுடன் எழுதப்படும் விமர்சனம் ஜெயமோகனுடையது. இது ஒரு நல்ல நகைச்சுவை. ஏனெனில் என் கட்டுரையில் ஜெயமோகன் கி.ரா பற்றி இரண்டு கட்டுரைகளில் எழுதியிருந்தலில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டியிருந்தேன்.

8, ராஜபாண்டியன் -இது இயற்பெயரா ? நீங்கள் திண்ணையில் இதற்கு முன் வேறொரு பெயரில் எழுதியுள்ளீர்களா ? அப்படியாயின் எந்தப் பெயரில் ?

K.ரவி ஸ்ரீநிவாஸ்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

நண்பர் பாலா என்பவர் தனது வரதட்சணைப் பதில் கடிதத்தில், பொருளாதார முன்னேற்றம் மக்களின் வாழ்க்கை முறையில், எண்ணங்களில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதை வளர்ச்சி அடைந்த ஒரு நாட்டில் வசிக்கும் என்னைப் போன்றவர் அறியாதிருப்பது வியப்பளிக்கிறது என்று எள்ளி நகையாடி யிருக்கிறார்!

பொறியியல் பட்டப் படிப்புக்குப் பிறகு 22 ஆண்டுகள் பாரதத்திலும், 23 ஆண்டுகள் கனடா நாட்டிலும் அமெரிக்கர், கனேடியர், ஆங்கிலேயர், ஐரோப்பியர், சைனாக்காரர், ஜப்பானியர், இங்கு வசிக்கும் இந்தியர் ஆகியோருடன் ஆழ்ந்த நட்புடன் பழகி யிருக்கிறேன். இந்தியாவில் வட நாட்டில் 18 ஆண்டுகள் மகாராஷ்டிரர், வங்காளி, குஜராத்தி, பஞ்சாபி, ராஜஸ்தானி, உத்தர் பிரதேச இந்துக்கள், மலையாளம், தெலுங்கு, கன்னடம், தெலுங்கு, துளு பேசும் பலரோடு நன்கு பழகி யிருக்கிறேன். எனது இரண்டு புதல்வியரும், கனடிய நாட்டு வெள்ளையர்களைத் திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். இது என் உலக அனுபவம்.

வெறும் பொருளாதாரம் மட்டும் பெரும் மாற்றங்களை மக்களிடையே கொண்டுவரும் என்று பாலா கனவு காண்கிறார்! கீழ் நாடுகள் யாவும் ஆன்மீக உணர்வில் [Spiritualism] எழுந்தவை! மேலை நாடுகள் எல்லாம் செல்வீகத் துறையில் [Materialism] உதயமானவை! சிறு வயதிலிருந்தே இங்குள்ள ஆணும் பெண்ணும் பொறி நுணுக்கத்தில் கைதேர்ந்தவராக இருக்கிறார்கள். சிறு வயது முதல் இங்குள்ள ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகுகிறார்கள். அப்படிப் பழகுவதை அவரது பெற்றோரும் விரும்புகிறார்!

தமிழ் நாட்டில் நமது மனைவியர், புதல்விகள், சகோதரிகள் அன்னிய ஆண்களுக்கு அருகில் அமர்வது கூடக் கிடையாது! ஒரு காலத்தில் நம் ஊர்களில் ஆடவர் பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைத்தார்கள்! இப்போது நமது பெண்டிரது வாய்களைக் கணவர், பெற்றோர் தைத்து வைத்திருக்கிறார்கள்! பாரதம் விடுதலை அடைந்தாலும், நாம் பெண்ணினத்தை இன்னும் இரண்டாம்தர வகுப்பினாராகத்தான் பின்னால் தள்ளி வைத்திருக்கிறோம்! நம் வீட்டில் பெண்டிருக்குப் பேச்சுச் சுதந்திரம் கிடையாது என்பதை நாம் யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்!

கனடாவில் பதினெட்டு வயதுக்குள் வாழும் ஆண் பெண் இருவருக்கும் உள்ள சுதந்திரம், பாரத நாட்டில் வாழும் பெரும்பான்மையான ஆண் பெண் இருவருக்கும் அறவே கிடையாது! திருமணமாகாத ஆண் பெண் இருவரும் பெற்றோருக்கு அடி பணியும் பிறவிகளாகத்தான் பாரதத்தில் வாழ்ந்து வருகிறார்கள்! மேலை நாடுகளில் உதாரணமாக பதினாறு வயதில் பள்ளியில் படிக்கும் ஆண் பெண் இருவர் உடலுறவு நேர்ந்து பெண் கர்ப்பவதியாகி விட்டால், கருச்சிதைவு செய்து பெண் வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறாள்! அல்லது சிசு பிறந்ததும், அதைத் தத்தெடுக்க அளித்து விட்டுப் பெண் வீட்டில் சேர்க்கப் படுகிறாள்! பிறகு அவளைத் திருமணம் செய்து கொள்ள, ஓர் ஆண் முன்வரவும் செய்கிறான்!

தமிழ் நாட்டில் பதினாறு வயதுப் பள்ளிப்பெண் கருத்தரித்தால் என்ன நேரும் என்று நான் சொல்ல வேண்டிய தில்லை. மேலை நாடுகளில் விதவைகளுக்கு மறுமணம் பிரச்சனை யில்லாமல் நடக்கிறது. நமது இந்திய நாகரீகத்தில் விதவைகள் மறுமணம் எத்தனை இதுவரை நடந்துள்ளன ? ஆங்கிலேயர் வந்த பின்பு நமது நாகரீகம் சிறிது உயர்ந்தாலும், நாமின்னும் பல வினைகளில் அநாகரீகமாகவே வாழ்ந்து வருகிறோம்.

பைநிறையப் பவுன் நாணயங்கள் குலுங்கினால் ஆண், பெண் இருவரிடமும் மாற்றங்கள் தானாக விளைந்து விடும் என்று மனப்பால் குடிப்பது அறிவீனம்! மாற்றங்களுக்குப் பொருளாதாரம் மட்டும் ஒருபோதும் போதாது. அத்துடன் கலாச்சார மலர்ச்சி, நாகரீகப் பண்பு, ஆண்-பெண் சம உணர்வு, செல்வீகத் துணிச்சல் ஆகியவை யாவும் இணையாக அத்துடன் சேர வேண்டும்!

ஆன்மீக உணர்வு முதிர்ந்த இந்தியரிடம் பொருளாதாரம் செழித்தாலும், நமது நாகரீகமும், கலாச்சாரமும் மாறிச் செல்வீக உணர்வு மிக்க ஈரோப்பியராகவோ, அமெரிக்கராகவோ ஆக ஐம்பது அல்லது நூறாண்டுகள் கூட ஆகலாம்! மேலை நாட்டு நாகரீகம், கலாச்சாரம் போல, இந்தியர் முன்னேற்றம் அடைய முடியாமலும் போகலாம்!

சி. ஜெயபாரதன், கனடா.


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

சென்ற வாரம் டாக்டர் இரா. விஜயராகவன் இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மியைப் பற்றி எழுதிய அறிவியல் கட்டுரையில் சில பிழைகள் இருப்பதைத் திண்ணை வாசகர் அறிய வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தை அனுப்புகிறேன்.

1. ‘இயற்பியலில் தொடர்வினைகளைப் [Chain Reactions] பற்றிக் கண்டுபிடித்ததால் அவர் [என்ரிகோ ஃபெர்மி] இவ்வாறு [இயற்பியலின் தந்தை] போற்றப் படுகிறார் ‘.

இது தவறு. என்ரிகோ ஃபெர்மி ‘முதல் அணுக்கருத் தொடரியக்கப் ‘ [Nuclear Chain Reaction] படைப்பாளி! தொடரியக்கம் ஒரு சோதனைப் படைப்பு [Experimental Invention]. அதை ஒரு கண்டுபிடிப்பு [Discovery] என்று கூறுவது தவறு! அவர் தொடரியக்கத்தைப் படைத்ததற்கு முன், அது எங்கும் ஒளிந்து கொண்டு, கண்டுபிடிப்போர் வருவாரென்று காத்திருக்க வில்லை!

2. ‘1933 ஆம் ஆண்டு நியூட்ரினோ [Neutrino] என்னும் அடிப்படைத் துகள் [Fundamental Particle] ஒன்று இவரால் கண்டுபிடிக்கப் பட்டது ‘. இது தவறு.

1930 ஆம் ஆண்டில் மின்னியல் அற்ற அத்துகளை [Neutral Particle] முதலில் கண்டு பிடித்தவர் உல்ஃப்காங் பாலி [Wolfgang Pauli]. அதற்கு 1933 இல் நியூட்ரினோ என்று பெயரிட்டவர்தான் என்ரிகோ ஃபெர்மி.

3. ‘ஒரு தனிமம் [Element] குறை வேக நியூட்ரான் மூலம் வெடிப்புக்கு [Bombardment] உட்பட்டால், அது கதிரிக்கம் [Radioactivity] உடையதாக மாறுவதோடு, கதிர்வீச்சு [Radiation] உமிழவும் செய்கிறது ‘.

– ‘நியூட்ரான் வெடிப்பினால் ஃபெர்மி சுமார் 80 புதிய செயற்கை அணுக்கருக்களை உருவாக்கினார் ‘.

– ‘நியூட்ரான்களை வெடிப்புறச் செய்து யுரேனியம் அணுக்கருக்களைப் பிளப்பதில் அவர் வெற்றி கண்டார் ‘.

இது தவறாக விளக்கும் அணுக்கருப் பெளதிகம் [Nuclear Physics]. நியூட்ரான்கள் வெடிப்பதில்லை! ‘Bombardment ‘ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு அர்த்தம் ‘வெடிப்பு ‘ என்று எழுதுவது தவறு. அதற்குச் சரியான தமிழ் ‘தாக்குதல் ‘ அல்லது ‘மோதல் ‘. மித வேக நியூட்ரான்கள் [Slow Neutrons] யுரேனிய அணுக்கருவைத் ‘தாக்கும் ‘ போது, அணுப்பிளவு நிகழ்கிறது. அதுபோல் மித வேக நியூட்ரான்கள் ஒரு மூலகத்தைத் ‘தாக்கும் ‘ போது, அது கதிர்வீச ஆரம்பிக்கிறது. நியூட்ரான்களைக் கொண்டு பல மூலகங்களைத் ‘தாக்கி ‘, 80 புதிய செயற்கைக் கதிர் ஏகமூலங்களை [Artificial Radioisotopes] உண்டாக்கினார்.

4. குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட்டு ஏராளமான பணத்தை ஒதுக்கி அணுகுண்டு தயாரிப்பில் உடனே ஈடுபடுமாறு ஃபெர்மியையும் அவரது அறிவியல் குழுவையும் கேட்டுக் கொண்டார்.

இது முற்றிலும் பிழையானது. அணுகுண்டு தயாரிக்க ஃபெர்மியை, ரூஸ்வெல்ட்டு ஆணையிட்டதாக வரலாறு இல்லை! அவரது ஆக்கமான முதல் அணுக்கருத் தொடரியக்கம், அணுகுண்டு தயாரிக்க வழி வகுத்தது! அவரை முதலில் ‘கட்டுப்படும் தொடரியக்கம் ‘ ஆக்கும்படி ஆணையிட்டவர், அணுகுண்டின் பிதா எனப்படும் ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer]. இராணுவ தளபதி லெஸ்லி குரூஸுக்கு [Leslie Grooves] அணு ஆயுதம் ஆக்க ஆணையிட்டவர், ரூஸ்வெல்ட்டு! ஃபெர்மியை ரூஸ்வெல்ட் ஆணை யிடவில்லை! வெறும் ‘அறிவியல் குழு ‘ மட்டும் அணுகுண்டைத் தயாரிக்க வில்லை! ஃபெர்மி ஒரு பெளதிக விஞ்ஞானி மட்டுமே. ஃபெர்மியைத் தவிர நூற்றுக் கணக்கான நுணுக்கத் துறைவாளர் பலர் பங்கெடுத்து உருவானவை, முதல் அணுகுண்டுகள்!

கதிரிக்க மூலகங்கள் [Radioactive Elements] யாவும் கதிர்வீச்சை [Radiation] உமிழும்!

சி. ஜெயபாரதன், கனடா

*************


The article by jeyamokan on jeyakanthan is a detailed study with deep insight and power of language. It shows JK in new light and gives him his place in Indian Literary scenario.

But I am writing to inform another important matter. I don ‘t know whether this is my limitation of knowledge. I tried to take printout of this article and wasted lot of paper because of your layout .One of my friend told me over phone to paste it on MSWORD and take printout .But I have no fonts. And when I select the whole page the image on the MS WORD pad is only a dark shade with some blue lines. I could not select the text only .Finally I asked one of my friends to give me a print out. I wish you to take care about this.

pattabi, chennai


Dear Pattapiraaman,

I will try to put an explicit warning in thinnai page.

DO NOT PRINT THE THINNAI PAGES.

1) THE PAGES ARE NOT FORMATTED FOR PRINTING.

2) THINNAI DOES NOT SUPPORT CUTTING TREES.

Thanks and regards

Ram (Web Master)


To the editor

The jeyakanthan article is interesting and useful.

I want to mention one thing The word Inakuzhu is now used for referring big castes with ethnic identity by academics . now literary critics are also using it My teacher Na.Dharmarajan while translating Russian books originally coins the word Ina varaiviyal is also coined by him

S.sivakumar

Cochin Port Trust


ஆசிரியர் அவர்களுக்கு,

ஜெயகாந்தன் மீதான ஜெயமோகன் திறனாய்வு காலத்தால் தேவை மிக்கது என்பதில் ஐயமில்லை. பரவலாக உருவாக்கப்ப்ட்ட்தும் பிழைபட்டதுமான பொதுக்கருத்தினை முறியடித்து மாற்றுக்கூறுகளை சுட்டவும் முழுமைச்சூழலின் அடிப்படையில் நின்று ஜெயகாந்தனின் முக்கியத்துவத்தினை சுட்டிக் காட்டவும் அவரால் இயன்றுள்ளது. இந்த கட்டுரை பலருக்கும் ஒரு விழ்ிதிறப்பாக அமையுமென்று எண்ணுகின்றேன். அக்கினிப்பிரவெசம் கதைகுறித்த திறனாய்வினை மிக்க வியப்புடன் கவ்னித்தேன். திறனாய்வாளன் எப்ப்டி இருக்கவெண்டும் , அவனது பெரும்பொறுப்ப் என்ன என்பதை சுட்டும் கட்டுரை இது என்று துணிந்து சொல்லலாம். ஜெயமொகன் சொல்ல் தயங்குகின்ற ஒன்றினையும் ஈங்கு சுட்டிய்ய ஆகவெண்டும். சுவைக்குன்றல் நிகழினும்கூட . தமிழில் திறனாய்வாளர்கள் என சிற்றிதழ்மட்டத்தில் புகபெற்ற அனைவருமே பரமணர்களே . [பிராமணர்கள்] இவர்கள் அவர்களை சேர்ந்த எழுத்தாளர்களுக்கு ஆழ்ந்த கவனத்தை வாசகர் மட்டத்தில் உருவாக்கி அளித்தார்கள். ஆகவே அவர்கள் ஆக்கங்களின் நுட்பங்கள் வெளிவந்தன . அவர்கள் நன்கு அறியப்பட இது வழிவகை செய்தது . ஆனால் ப.சிங்காரம், ஜெயகாந்தன், விந்தன் போனற பல படைப்பாளிகள் புறக்கணிக்கப் பட்டனர். எம்.வேத சகாயகுமார் புதுமைப்பித்தனை தூக்கும்பொது ‘கட்டளைக்கு ஏற்ப ‘ ஜெயகாந்தனை கீழிறக்கியது வருந்ததக்கதே . இப்பிழைக்ல் ந்ாளாடைவில் இங்கே களையப்படுமென எண்ணுகிறென். காலம் எவ்ர் பக்கமும் ந்ின்றுவிடுவதில்லை

சண்முகம் shanmukam1951


அன்புள்ள ஆசிரியருக்கு,

சமிப காலமாக நான் தின்னையில் இலைப்பாருகிறேன்.

தின்னயை வாராவாரம் பராமரிக்கும் தங்கள் தமிழ் பனி செவ்வனெ தொடர

யமது வாழ்த்துக்கள்.

நன்றி, வணக்கம்.

அமுதன், கலிபோர்னியா.


அரவிந்தன் எழுதியவை:

அ.) ‘ஜெயகாந்தன் பற்றிப் பிறர் கூறியுள்ள எதிர்மறையான கருத்துக்களை மேற்கோள் காட்டுவதை நான் தவிர்த்துவிட்டேன். ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு அவரை மறுவாசிப்பு செய்யும் எனக்கு அவர் எப்படிப்படுகிறார் என்பதை பதிவுசெய்ய விரும்பினேன். அவரைப் பற்றி எனக்குள் உருவான எனது எதிர்மறையான முடிவுகளை முன்வைக்கையில் யாரையும் துணைக்கழைக்கவோ யார் நிழலிலும் ஒன்டிக்கொள்ளவோ நான் விரும்பவில்லை. என் விமர்சனக் கருத்துகளுக்கான முழுப் பொறுப்பையும் அதன் விளைவுகளையும் ஏற்க நான் தயாராகவே இருக்கிறேன். எனவே ஜெயமோகன் உள்பட யாரையும் மேற்கோள் காட்ட நான் விரும்பவில்லை. ‘

ஆ.) ‘இது தவிர காலச்சுவடுக்கும் ஜெ.கா. அபிமானிகள் பலரிடமிருந்து கடிதங்கள். இதற்கு மறுபுறம் பனிரெண்டாம் வகுப்பைத் தாண்டி வந்தவர்கள் – மன்னிக்கவும், ஜெயகாந்தனைத் தாண்டி வந்தவர்கள் – பலரிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்புக்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இவர்களில் 99 விழுக்காட்டினர் சமகால தீவிர இலக்கியப் பரப்பில் முக்கியமான எழுத்தாளர்களாகக் கருதப்படுபவர்கள். இவர்கள் என் கட்டுரையை வெகுவாகப் பாராட்டினார்கள். ஆனால் இவர்கள் இதையொட்டி கடிதமோ கட்டுரையோ எழுதவில்லை. இவர்களைப் பொறுததவரை ஜெயகாந்தனின் படைப்பு என்பது – தீவிர இலக்கிய அரங்கில் – ஒரு செத்த பாம்பு. ஜெயகாந்தனை ஏன் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொண்டு எழுதியிருக்கிறீர்கள் என்றுகூட சமகால படைப்பாளி ஒருவர் கேட்டார். ‘

1.) அ)க்கும் ஆ)க்கும் எவ்வளவு முரண்பாடு. யாரையும் துணைக்கழைக்கவோ யார் நிழலிலும் ஒண்டிக்கொள்ளவோ விரும்பாதவர் பலரிடமிருந்து வந்தவண்ணம் இருக்கும் தொலைபேசி அழைப்புகளையும் தீவிர இலக்கியப் பரப்பில் முக்கியமான எழுத்தாளர்களாகக் கருதப்படுபவர்களையும் மேற்கோள் காட்ட விரும்புகிற விசித்திரம்.

2.) சில காலம் முன்பு திண்ணையில் ஒருவரைப் பற்றி இன்னொருவர் இப்படிச் சொன்னார் என்று மூன்றாமவர் எழுதியது பிரசுரிக்கப்பட்டது. அடுத்த வாரமே, எழுத்தில் சொல்லப்படுவதே கணக்கில் கொள்ளப்பட வேண்டியது வாய்வழி வார்த்தைகளை நம்பி எழுதுவதை பிரசுரித்த தவறு தெரியாமல் நிகழ்ந்துவிட்டது என்ற ரீதியில் திண்ணை விளக்கம் சொன்னது. தொலைபேசி அழைப்பில் சொன்னதை ஆனால் சொன்னவர்கள் எழுத்து வடிவில் தராத தனிப்பட்ட உரையாடலை அரவிந்தன் எழுதியிருக்கிறார். திண்ணை அதைப் பிரசுரித்திருக்கிறது. திண்ணை தன் நிலையை மாற்றிக் கொண்டதா இல்லை இதுவும் தெரியாமல் நிகழ்ந்துவிட்ட தவறா. திண்ணை விளக்க வேண்டும்.

– முத்துராஜா


அன்புள்ள ஆசிரியருக்கு,

ஜெயமோகனிடம், நேற்று அப்படி சுந்தர ராமசாமியை பாராட்டிவிட்டு இன்று விமர்சிக்கிறாயே என்று கேட்கும் அரவிந்தன், ஜெயகாந்தனை பாராட்டுபவர்கள் ‘பனிரண்டாம் வகுப்பை ‘ தாண்டாதவர்கள் என்று கூறுகிறார். முரண்பாடு அவருக்கே தெரிந்தால் சரிதான்

நரேஷ்


அன்புள்ள ஆசிரியருக்கு,

அரவிந்தன் நீலகண்டனின் ‘சாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2 ‘ கட்டுரையின் இறுதி இரண்டு பத்திகளுக்கான எதிர்வினையும் சில யோசனைகளும்.

அரவிந்தன் நீலகண்டன் கட்டுரைகளை யாரேனும் தமிழில் மொழிபெயர்த்து எழுதினால் சற்றே புரிந்துகொள்ள ஏதுவாயிருக்கும். ஒருவேளை, மொழிப் பன்மையக் காக்கும் தொண்டர்களின் தமிழ் இப்படித்தான் இருக்குமோ என்னவோ! மணிப்பிரவாள நடையை உருவாக்கித் தமிழ்த் தொண்டாற்றியவர்களின் வாரிசான அரவிந்தன் நீலகண்டனுக்கு ஆயிரங்கோடி நன்றி.

இந்து, இந்தி என தமிழ்முறைப்படி எழுதாமல் ஹிந்து, ஹிந்தி என்று எழுவதற்கும் மொழிப்பன்மையக் காக்கும் இதே தொண்டுள்ளம்தான் காரணமோ ? அல்லது இந்தி தமிழர்களின் மொழி அல்ல என்பதுபோல் தமிழர்கள் இந்துக்களும் அல்லர் என்று உறுதிப்படுத்துவது காரணமோ ?

வரலாற்றைத் திரிப்பவர்கள் என்று அடுத்தவர்களைக் குற்றம் சொல்லும் இவருடைய திரிபுகளையும் பொய்களையும் கொஞ்சம் பார்ப்போம்.

{அ.நீ: சமஸ்கிருதம் நம் தேசம் முழுவதும் ஒரு பாரத ஒருமை மொழியாக விளங்கிய போதிலும் அதன் விளைவாக எந்த மொழியும் அழியவில்லை.}

பழங்காலத்தில் பாரத தேசம் என்ற ஒரு தேசம் எங்கிருந்தது ? அதன் எல்லைகள் எவை ? மைய அரசு எங்கிருந்தது ? மக்கள் அனைவரும் அதை ஏற்றுக் கொண்டார்களா ? இந்தப்பாரத தேசம் இருந்ததற்கான சான்றுகள் எவற்றையேனும் தமிழிலக்கியத்திலிருந்தோ கல்வெட்டுகளிலிருந்தோ காட்டவியலுமா ?

இந்தியாவை இயக்கிக் கொண்டிருக்கும் நாடாளுமன்றம், நீதித்துறை, காவல் போன்ற அமைப்புகளைப் போலவே இந்தியா என்ற நாடும் ஆங்கிலேயர்களால்தான் உருவாக்கப்பட்டது. தமிழ் பேசும் நிலப்பரப்பை வரையறுத்த தமிழர்கள் கூட இந்தத் தமிழ் நிலப்பரப்பு முழுவம் ஒரு நாட்டுக்குரிய என்று கருதியதில்லை. தமிழகம் எத்தனையோ நாடுகளாகப் பிளவுண்டிருந்தது. தமிழகத்தையே ஒரு நாடாகக் கருதியிருக்காத தமிழர்கள் பாரத தேசம் என்ற ஒரு நாட்டைப் பற்றி எண்ணியிருப்பார்கள் என்று எவ்வாறு கூற இயலும் ? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு நீண்ட வரலாற்றை உடைய தமிழுக்கென்று ஒரு அரசியல் அமைப்பு உருவானதே மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட்டபோதுதான்.

பழங்காலத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அப்படிக் கல்வியறிவு பெற்றவர்கள் அனைவருமே வடமொழி கற்றிருந்தார்கள் என்றும் கூற முடியாது. எனவே வடமொழி கற்பனையான ஒரு பாரத நாட்டின் ஒருமை மொழியாக எவ்வாறு இருந்திருக்கக் கூடும் ? (ஒரு பேச்சுக்காக வட மொழி இந்தியத் துணைக்கண்டத்திலிருந்த அனைத்து நாடுகளிலும் பரவியிருந்ததாக வைத்துக் கொண்டாலும்கூட அதனால் இந்த நாடுகள் அனைத்தும் பாரத நாட்டின் பகுதிகள் என்றாகிவிடுமா ? ஆகுமென்றால் இக்காலத்தில் ஆங்கிலம் வழக்கிலிருக்கும் நாடுகள் அனைத்தும் ஆங்கிலநாட்டின் பகுதிகள் என்று அ.நீ கூறுவாரா ?) இந்தியத் துணைக்கண்டத்தை ஒன்றிணைக்கும் அளவுக்குச் மக்கள் அனைவராலும் பேசப்பட்ட அந்த வடமொழி ஏன் இன்று பேச்சுவழக்கில் இல்லை ?

வடமொழிக் கலப்பால் தமிழ் முற்றாக அழியாமல் இருந்ததென்னவோ உண்மைதான் ஆனால் தமிழ் ஆயிரக் கணக்கான தன் அழகிய பலச் சொற்களை இழந்தது. இக்காலத்தில் கல்வி பரவலாக்கப்பட்டிருப்பது போல அக்காலத்திலேயே பரவலாக்கப்பட்டிருந்தால், வடமொழியை உயர்ந்தவர்கள் மொழி என்று தனிமைப்படுத்தி வைக்காதிருந்தால், ‘தமிழை அழிக்கும் மொழி ‘ என்னும் பெருமை ஆங்கிலத்துக்குப் பதிலாக வடமொழிக்கே சென்று சேர்ந்திருக்கும்.

இந்தியைக் கட்டாயமாகப் புகுத்துவதற்கு இப்போது உதவும் மையப்படுத்தப்பட்ட அரசமைப்பும் அதிகாரமும் பண்டைக்காலத்தில் இல்லை என்பதும் தமிழ் அழியாதிருந்ததற்குக் காரணமே தவிர பன்மைய வளர்க்கும் கருணை உள்ளம் அல்ல.

ஓரினத்து மக்களின் மொழி அவ்வளவு எளிதில் அழிந்து போகாது என்னும் இயற்கை நியதியும் தமிழ் வாழ்வுக்குக் காரணமாக இருக்கலாம்.

{அ.நீ : நம் மொழிகள் அனைத்துமே ஈஸ்வர ஸ்வருபம் எனும் சிந்தனை நம் மரபுகளில் உள்ளது. ‘வானவன் காண் வடமொழியும் தெந்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் ‘ என்ப திருநாவுக்கரசர் திருமொழி.}

இது உண்மையானால் தமிழ்வழிபாட்டுக்குப் போராட வேண்டிய தேவையே இன்று இல்லயே! தமிழ் நீச மொழி (பாஷை) என்றும் வடமொழி மட்டுமே கடவுளின் மொழி என்றும் தமிழ்ப்பகைவர்கள் கூறிவந்ததால் (வடமொழிப்பற்றாளர்கள் இன்று வரை இப்படித்தான் கூறிவருகின்றனர்), அதை மறுத்துத் தமிழ் அன்பர்கள் தமிழும் கடவுள் மொழிதான். வடமொழி போல தமிழும் ஈசனின் உடுக்கையிலிருந்தான் பிறந்தது என்று கூறவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். இதான் இன்றுவரை தொடரும் வரலாற்றுண்மை. ‘தமிழும் கடவுள் மொழி ‘ என்னும் கூற்று ஒரு போர்க்குரல். (இன்று வரை இது போர்க்குரலாகவே இருக்கிறது) அ.நீ எழுதுவதுபோல ‘மொழிகளினூடேயான சாராம்ச ஒருமையை காணும் ‘ நோக்கு அல்ல.

{அ.நீ : மேட்டுக்குடி மொழியாக சமஸ்கிருதம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் மொழியாகும் போக்கு இன்றியமையாது எழுந்துள்ள போதெல்லாம் அத்தகைய போக்குகளை களந்து அதே நேரத்தில் சமஸ்கிருதத்தையும் தாய் மொழியையும் வளப்படுத்தும் போக்கே பாரதத்தின் அனைத்து மொழி மரபுகளிலும் உள்ளது.}

இன்னும் ஒரு நூறாண்டுகள் கடந்தபின் காலனிய எதிர்ப்புப் போர்களைப் பற்றிக் கூறும் ஒரு வரலாற்றாசிரியர், ‘ஆங்கிலேயர்கள் மொழிப்பன்மையயும் உயிரி வளப் பன்மையையும் வளர்ப்பதற்காகத்தான் பலநாடுகளுக்கும் சென்றனர். சில வேளைகளில் சுரண்டிக் கொள்ளையடிப்பது வெள்ளை இனத்தாருக்கே நன்மையாக முடியும் போக்கு இன்றியமையாது எழுந்துள்ள போதெல்லாம் அத்தகைய போக்குகளைக் களந்து இங்கிலாந்தையும் தங்களது தாய்நாட்டையும் வளப்படுத்தும் போக்கே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அனத்து நாடுகளிலும் காணப்படுகிறது ‘ என்று கூறினால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறிருக்கிறது அ.நீ தமிழர்களின் வடமொழி (இந்தி) எதிர்ப்புப் போராட்டங்களப் பற்றிக் கூறுவதும். இரண்டுமே ஏகாதிபத்தியக் குரல்கள்.

மரணம் கொடியதுதான். அதற்காக அரவிந்தன் நீலகண்டன் ஐயாயிரம் ஆண்டுப் பழமையான பிணங்களைக் கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருப்பது வெட்டிவேலையாகத் தோன்றுகிறது. இரண்டாயிரம் ஆண்டுப் பழமையான தமிழ்ப் பிணங்களக் காட்டி அழுதவர்களின் ஓலம் ஓய்வதற்குள் இந்தப் புது ஓலம். போதுமடா சாமி.

__________

பழங்காலம் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். எதிர்காலத்துக்கு என்ன செய்வதென்று

பார்ப்போம்.

தனித்தமிழுக்கோ, தனித்தமிழ் நாட்டுக்கோ, ஏன் தமிழுக்கோ கூட தமிழர்களின் ஆதரவு இல்லை. இவற்றைப் பெரும்பாலான தமிழர்கள் விரும்பவுமில்லை. தமிழால் தமிழர்களுக்கு உய்வு கிடைக்கப்போவதும் இல்லை. சுருங்கி வரும் உலகத்திற்கும், பெருகிவரும் தொழில் துறைகளுக்கும் சிறப்பாகச் சேவை செய்யும் நாடும் தனிமனிதர்களும் மட்டுமே வறுமையிலிருந்து கரையேற இயலும். இதற்கு ஆங்கிலம் மிகவும் அவசியம். கிடக்கும் ஒரு சில வாய்ப்புகளும் நகரவாசிகளுக்கு மட்டுமே செல்வதைத் தடுக்க கிராமங்களுக்கு நல்ல ஆங்கிலத்தைக் கொண்டு செல்ல வேண்டியது இன்னும் அவசியம்.

தமிழும் தெரியாத ஆங்கிலமும் தெரியாத இளைஞர்களை உருவாக்கும் தற்போதய கல்வி முறைக்குப் பதிலாக, ஆங்கிலத்தை வசக்கிவக்கும் (கி.ராவுக்கு நன்றி) திறமையுள்ள மாணவர்கள உருவாக்கும் ஒரு மாற்றுக் கல்வித்திட்டத்தப் பற்றி சிந்திக்கவேண்டியது தமிழர்களின் (இந்தியர்களின்) உடனடிக் கடமையாகும்.

இந்து, இந்தி, வடமொழி என்று பாரதக் கனவில் மிதப்பவர்களும் ஆங்கிலத்தின் அவசியத்தை உணர்ந்து ஆங்கிலம் மட்டுமே இந்தியாவின் இணைப்பு மொழியாகக் கல்வி மொழியாக இருக்கவேண்டும் என்னும் நிலைபாட்டை மேற்கொள்ளவேண்டும்.

கோயில்களிலும் ஆங்கிலம் ஒலிக்கும் எதிர்காலம் வரட்டும்.

மக்களின் நல்வாழ்வு அல்ல – மதம், இனம், சாதி, மொழி, நாட்டெல்லைகளே முக்கியமானவை என்று கரும் மனிதர்களும் அமைப்புகளும் ஆட்சிக் கட்டிலில் ஏறும் நிலை தொடருமானால் இந்தியா வறுமையிலிருந்து ஒருக்காலும் மீளப்போவதில்லை.

(ஆங்கிலம் மட்டுமே வறுமையை விரட்டிவிடாது என்பதையும் கவனத்தில் கொள்கிறேன்)

பரிமளம்

Series Navigation

author

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

Similar Posts