கடிதங்கள்

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

ஆகஸ்ட் 08, 2003வேதசகாயகுமாரின் கடிதத்திற்கு எதிர்வினை

‘அசட்டு ‘ வரியும் அசட்டுத் துணிச்சலும்

ஜெயகாந்தனின் சிறுகதைகள் பற்றிய என் கட்டுரை குறித்து வேதசகாயகுமார் எழுதிய கடிதத்தைப் படித்தேன். சிறிதும் கூச்சமோ தயக்கமோ அற்ற அவரது துணிச்சலும் உறுதிப்பாடும் அச்சமூட்டுகின்றன. என்னுடைய கட்டுரை ஜெயகாந்தன் – புதுமைப்பித்தன் குறித்து அவர் எழுதிய நூலை அடியொற்றியது என்று துளியும் சந்தேகமின்றி அவர் கூறிக்கொள்கிறார். அவரது நூலை நான் அடியொற்றினேனா, இல்லையா என்பது இருக்கட்டும். முதலில் அந்த நூலை நான் கண்டிப்பாகப் படித்திருப்பேன் என்று அவர் எப்படி முடிவுகட்டினார் என்று தெரியவில்லை. இலக்கிய அளவுகோல்களை வேசகு பிரயோகிக்கும் முறைமீதோ வள வளவென்று விரித்துக்கொண்டே போகும் அவரது வெளிப்பாட்டு முறைமீதோ பொதுவாக எனக்கு மரியாதை கிடையாது என்பதால் அவரது எழுத்துக்களைப் படிப்பதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். அவர் குரிப்பிடும் நூலை சத்தியமாக நான் படித்ததிலை. தன்னிகரில்லாத ஆய்வாளரான வேசகு, அந்தப் புத்தகத்திற்கும் எனக்கும் இடையே உள்ள உறவு (அல்லது உறவின்மை) பற்றி அறிந்துகொள்ள சிறிதும் முயற்சி செய்யாமல் அவரது நூலை அடியொற்றி நான் கட்டுரை எழுதுவதாகப் புலம்புவதைக் காணும்போது சிரிப்பு வருகிறது.

டால்ஸ்டாய் பற்றிய வரி ஜெயமோகனின் நாவல் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்றும் வேசகு குற்றம்சாட்டுகிறார். மேற்படி நூலை நான் குறைந்தது இரண்டு முறை படித்திருப்பேன். அந்நூலின் உருவாக்கத்திலும் சிறிய அளவு பங்காற்றியிருக்கிறேன். ஆனால் அந்நூலைப் படித்துப் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதை நான் மனப்பாடம் செய்துவைக்கவில்லை. துரதிருஷ்டவசமாக நூலும் இப்போது என் கையில் இல்லை. எனவே வேசகுவின் குற்றச்சாட்டின் பெறுமானத்தைப் பரிசோதிக்க இயலவில்லை. ஆனால் ஒழுக்கம் என்ற பிரச்சினை குறித்து ஜெயகாந்தன் பிரதியில் வெளிப்படும் அணுகுமுறையையும் டால்ஸ்டாய் பிரதியில் வெளிப்படும் அணுகுமுறையையும் ஒப்பிட்டு நான் எழுதியிருந்த கருத்தை ஜெயமோகன் முன்னமேயே சொல்லியிருக்கக்கூடும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். வாசிப்பின் மூலமாகவும் விவாதங்களின் மூலமாகவும் நமக்குள் வந்து சேரும் இலக்கியப் பார்வைகள் தீர்க்கமாக உள்வாங்கப்பட்டு வளர்சிதைமாற்றத்திற்கு ஆளாகி நம் பார்வையை பாதிப்பது மிக இயல்பான விஷயம். இப்படிப்பட்ட பாதிப்புகள் நமது அளவுகோள்களை உருமாற்றியபடி இருப்பதும் இயல்பானதே. எந்த விமர்சனக் கட்டுரையிலும் அந்த விமர்சகரின் முன்னோடிகள் விவாதித்த கருத்துக்களின் தாக்கம் உடன்பாட்டு வசையிலோ எதிர்மறையாகவோ இருக்கத்தான் செய்யும். ஜெயமோகனின் கருத்தைப் பிரதிபலிக்கும்படி என் கருத்து இருக்கிறது என்றால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அவரது கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை பிரக்ஞைபூர்வமாக நான் பயன்படுத்தியிருந்தால் அதை நான் மறக்காமப் குறிப்பிட்டிருப்பேன். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதால் ஜெயமோகனின் நோல் பற்றிக் குறிப்பிட வேண்டிய தேவை எழவில்லை.

ஜெயகாந்தன் பற்றிப் பிறர் கூறியுள்ள எதிர்மறையான கருத்துக்களை மேற்கோள் காட்டுவதை நான் தவிர்த்துவிட்டேன். ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு அவரை மறுவாசிப்பு செய்யும் எனக்கு அவர் எப்படிப்படுகிறார் என்பதை பதிவுசெய்ய விரும்பினேன். அவரைப் பற்றி எனக்குள் உருவான எனது எதிர்மறையான முடிவுகளை முன்வைக்கையில் யாரையும் துணைக்கழைக்கவோ யார் நிழலிலும் ஒன்டிக்கொள்ளவோ நான் விரும்பவில்லை. என் விமர்சனக் கருத்துகளுக்கான முழுப் பொறுப்பையும் அதன் விளைவுகளையும் ஏற்க நான் தயாராகவே இருக்கிறேன். எனவே ஜெயமோகன் உள்பட யாரையும் மேற்கோள் காட்ட நான் விரும்பவில்லை.

இவை ஒரு புறம் இருக்க, டால்ஸ்டாய் பற்றிய வரி ஜெயமோகனின் நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்று மட்டையடியாகக் கூறம் முக்கால ஞானி வே.ச.குவின் அசட்டுத் துணிச்சலைக் கண்டு. சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

ஜெயகாந்தன் விமர்சனத்திற்கே தகுதியற்றவர் என்ற அசட்டுவரியையெல்லாம் நான் எழுதவில்லை என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார் வேசகு. ஜெ.காவின் சிறுகதையைப் பற்றி மதிப்புரைக் கட்டுரை ஒன்று எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது. அவர் கதைகளைப் படிக்க ஆரம்பிக்கிறேன். கதைகள் ஏமாற்றமளிக்கின்றன. இந்தக் கதைகளைப் பொருட்படுத்தி எதற்காக எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. பொருட்படுத்திப் பேசியாக வேண்டும் என்பதற்கான காரணங்களும் தெரிகின்றன. எனவே எழுதுகிறேன். எழுதும்போது இந்த அனுபவத்தையும் பதிவுசெய்கிறேன். சிவகுமாருக்கு நான் எழுதிய எதிர் வினையில் குறிப்பிட்டபடி, ‘ஜெயகாந்தனை இவ்வறை சீரியஸா எடுத்துக் கிட்டு எழுத வேண்டிய அவசியம் என்ன வந்தது ? ‘ என்று சமகாலப் படைப்பாளி ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்த ‘அசட்டு ‘ வரியின் வேறு வடிவம்தான் இந்த வாக்கியம். தீவிர இலக்கியப் பரப்பில் ஜெயகாந்தனுக்கு முக்கிய இடம் எழுவும் இடம் ஏதுவும் இருக்க முடியாது என்கிற என் முடிவைப் பிரதிபலிக்கும் வரிதான் இந்த ‘அசட்டு ‘ வரி. ஜெயகாந்தனி பற்றிய இந்த மதிப்பீடு வே.சகுவுக்கு அசட்டுத்தனமானதாகத் தெரிந்தால் சிறுகதைகள் சார்ந்து ஜெயகாந்தனைத் தீவிர இலக்கியப் பரப்பில் பொருட்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும். தீவிரமாக இயகங்கிவரும் பல படைப்பாளிகள் ‘ஜெயகாந்தனை இப்போது படிக்கவே முடியவில்லை ‘ என்று அதிருப்பதி கொள்வதற்கான காரணத்தையும் அவர் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நான் ஜெயகாந்தனோடு ஒப்பிட்டிருக்கும் எழுத்தாளர்களை இவர்களால் படிக்க முடிகிறது என்ற அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த ‘அசட்டு ‘ வரியை வே.ச.கு. எதிர்கொள்ளட்டும்.

ரவி ஸ்ரீநிவாஸுக்கு ஒரு வார்த்தை: ‘அந்த அரவிந்தனா இது ‘ என்ற ரீதியில் தன் கண்டுபிடிப்பை முன்வைத்து, என் ஆதர்ஸ எழுத்தாளரைக் கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்தையும் ர.ஸ்ரீ. வெளிப்படுத்தியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை ஆதர்ஸ எழுத்தாளர் என்று எந்த ஒரு குறிப்பிட்ட ஆளுமையையும் நான் கருதுவதில்லை. பல்வேறு இலக்கிய ஆளுமைகளின் பல்வேறு தன்மைகள் கொண்ட குழப்பமான ஒரு தொகுப்பின் அரூபமான ஓர் ஆகிருதிதான் என் மனத்தில் ஆதர்ஸமாக இருந்துவருகிறது. திறந்த மனத்துடன், தொடர்ச்சியான தேடலுடன் செயல்பட விரும்பும் யாருக்குமே இது இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

– அரவிந்தன்


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு ஓர் ஆலோசனை.

திண்ணையில் வாராவாரம் வரும் சில கடிதங்கள் வெகு நீளமாக எழுதப்பட்டு, ஆதி அந்தம் இல்லாமல் எங்கே தலை, எங்கே கால் என்று தெரியாது, எப்போது முடியும் என்ற வேட்கையைத் தூண்டுகின்றன! ஓரிரு பக்களுக்கு [8.5 ‘x11 ‘] மீறிக் கடிதம் நீண்டு போனால், படிப்போரது பொறுமையைச் சோதிப்பதுடன், சிந்தனைத் தொடர்பும் அற்று விடுகிறது! சில கடிதங்கள் சீராகத் தொகுக்கப் படாமல், அங்கும் இங்கும் அலை மோதுகின்றன! அதற்கு உதாரணம் எல்லையற்று நெடும் இரயில்பாதை போல் போகும் சென்ற வாரக் கடிதங்கள் [ஆகஸ்டு 1, 2003] சிலவற்றைக் கூறலாம்! ஓடும் இரயில் ஏதாவது ஒரு நிலையத்தில் நிற்க வேண்டாமா ?

கடிதங்கள் கட்டுரைகள் அல்ல! கருத்தை ஆராயும் கடிதம், உளவப்படும் கட்டுரையை விட மிக நீளமாக எழுதப் படுவது விந்தைதான்! சுருங்கச் சொல்லி சுவையாக இல்லாமல், கடிதங்கள் விரித்துச் சொல்லி வெறுப்பை உண்டாக்குகின்றன! கருத்துக்கள் ஓரிரு பக்கங்களைத் தாண்டினால், அவற்றை ஓர் ஆய்வுக் கட்டுரையாக மாற்றித் தெளிவாகத் தொகுத்து எழுதலாம். சென்று வாரத்தில் வரதட்சணைப் பற்றிய நீளமான கருத்தை, ஒரு மறுப்புக் கட்டுரையாக நான் எழுதி அனுப்பினேன். ஆனால் திண்ணை ஏனோ அதை நீண்ட கடிதமாகவே வெளியிட்டது! வாசகரது பொறுமையை என் நீண்ட கடிதம் சோதித்திருக்கலாம் என்பது எனது எண்ணம்.

கடிதங்களுக்குத் திண்ணை ஓரளவு பக்க வரையரை விதிக்க வேண்டு மென்பது என் ஆலோசனை. அல்லாவிட்டால் அவை காட்டாறு போல் விரிந்து முடிந்தும் முடியாமல், புரிந்தும் புரியாமல் எந்தக் கடலிலும் சங்கமம் ஆகாமல் ஓடிக் கொண்டே போகின்றன!

சி. ஜெயபாரதன், கனடா.


அன்புள்ள ஆசிரியருக்கு,

கி.ராஜநாராயணன் பற்றிய ஜெயமொகனின் கட்டுரை கி.ராஜநாராயணனை பொத்தாம்பொதுவாக கரிசல் எழுத்தாளர், நாட்டுப்புறக் கதைசொல்லி என்றும் சொல்லிவந்த கூற்றுக்களை தெளிவாக்க உதவியது. அவரது உள்ளடக்கம் மார்க்ஸியத்தாலும் அவரது இனக்குழுமனத்தாலும் , அவற்றுக்கு இடையேயான மோதல்வளர்ச்சியினாலும் உருவாக்கப்பட்டது என்பது சரியே. அவரது படைப்புலகத்தில் தலித்துக்கள் ாகண்ணுக்கு தெரியாத மக்களாகா பலசமயம் ஆகிவிடுகிறார்கள் என்பது மேலும் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கவேண்டும். தெளிவான அழுத்தமான கட்டுரை அது.

எங்கள் கல்லூரியில் அக்கட்டுரையை பிரதி செய்து வாசித்தோம். இதை எழுதக்காரணம் பிறிதொன்று. சென்ற இதழில் ரவி சீனிவாச் என்பவ எழுதியிருந்த கட்டுரைதான். தொடர்து ஜெயமோகன் என்ன எழுதினாலும் அபத்தம் மடத்தனம் என்றெல்லாம் இவர் பதில் பேச வந்துவிடுகிறார். ஆனால் பேசப்படும் விஷயம் சாதாரணமாக்க் கூட இவருக்கு புரிவதும் இல்லை. சொற்களை எடுத்து வைத்துக் கொண்டு ஒருவகை விதண்டாவாதம் செய்கிறார். இவருக்கு தெரியாததும் புரியாததும் எல்லாம் அபத்தம் என்று எண்ணுகிறார்போலும். தமிழ் விமரிசனங்களில் தெளிவாக புரியும்படி அசலான சிந்தனைகளுடன் எழுதப்ப்டும் விமரிசனம் ஜெயமோகனுடையது. அதன் முக்கியத்துவத்தைப்பற்றி மனுஷ்ய புத்திரன்கூட கல்கி கட்டுரை ஒன்றிலே சொல்லியிருக்கிறார். வெற்றுக் கோட்பாட்டுக்காரர்கள் அதை எதையாவது சொல்லி மடம்தட்ட முயன்று தங்களைதாங்களே மட்டம்தட்டிக் கொள்கிறார்கள் .

உதாரணமாக ஜெயமோஅன் கிராவில் செயல்படுவது மார்க்ஸிய நோக்கும் இனக்குழு நோக்கும் கொள்ளும் முரணியக்கம் என்கிறார். இன்னொரு இடத்தில் கிராஜநாரயணனின் கருத்தியல் மார்க்ஸியம் என்கிறார் . இது எப்படி முரபாடாகும் ? இதைக்கூட புரிந்துகொள்ளமுடியாதவர்களா இலக்கிய விமரிசனம் படிக்கிரார்கள் ?

‘ இனக்குழு ‘ என்ற சொல்லாட்சி பற்றி ரவி சீனிவாச் கேட்டிருக்கவேயில்லை என்றால் அது அவர்து பிரச்சினை. ஒரு எழுத்தாளார் அதை சொல்லும்போது அக்கறையுடன் தெரிந்துகொள்வது தகுதியுடையோர் செயல். அவருக்கு ஜெயமோகனை நான்கு வார்த்த வசைபாடினால் தானும் அறிவுஜீவி ஆகிவிடுவதாக எண்ணம் , ஒரு திருப்தி வருகிறது போலும்.

இனக்குழு என்ற சொல்லை சோவியத் நூல்கள் இந்தியசாதிகளைப்பற்றி குறிக்கும் கலைச்சொல்லாக பயன்படுத்த் ஆரம்பித்து இருபது வருடமாகிறது. அந்த சொல்லை பயன்படுத்தி ஏராளமான ஆய்வுகளும் வந்துவிட்டது. இலக்கியத்தில் பழமலையைப்பற்றிய ஆய்வேடு ஒன்றில்தான் இனக்குழு வரைவியல் என்று அவரது அழகியலை வரையறுத்திருந்தார்கள். இதப்பற்றி நிறைய விமரிசனங்களும் வந்துச் விட்ட்ன. தமிழ் கவிதைகளில் இனக்குழு கூறுகள் பறிய முனைவர் பட்ட ஆய்வேடுகள் வந்துள்ளன. அச்சொல் சமானமான சாதிகளின் ஒரு தொகையை குறிக்கிறது என்று தெரியாத எவரும் இல்லை. நமது நாட்டர் மரபு இனக்குழு கலாச்சாரம்தான் என்பதைப்பற்றி பல ஆய்வேடுகள் வந்துள்ளன. நாட்டாரியலே இனக்குழு வரிவியலாக மாறுஇவிட்டதுஎ ந்று புலம்பல் ஒருபக்கம் நடக்கிறது. திண்ணை ஆசிரியர் இம்மாதிரி கட்டுரைகளைப்பற்றி சற்று கவனமாக இருப்பது நல்லது . ஒரு கட்டுரை வெளிவந்ததுமே இம்மாதிரி ஒருவர் புரிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ள முயற்சியும் எடுக்காமல் , மட்டம்தட்ட புறப்பட்டி தன் விருப்பபடி குழப்பினால் அதற்கு இடம்தந்துதான் தீரவேண்டுமா ? இம்மாதிரி சொற்களைபயன்படுத்தினால் யார் இங்கே தீவிரமாக பேச முற்படுவார்கள் ? ரவி சீனிவாசுக்கு இலக்கியவிவாத்த்தின் அடிப்படைகள்கூட தெரியவில்லை என்னும்போது அவரது இந்த போச் ஒருவகை தாழ்வுணர்ச்சியின் விளைவு என்ரே சொல்லதோன்றுகிறது. அதன் சிக்கல்களை வாசகர்களாகிய நாங்கள் சுமக்கவேண்டுமா என்ன ?

ராஜபாண்டியன்

மதுரை


அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்.

தமிழ்மணவாளன் அவர்களின் ‘ முற்றுமென்றொரு ஆசை ‘ கவிதை வாசிக்கும் போது சிரிப்பை வரவழைத்தாலும், வாசித்த பிறகு இன்றைய இலக்கிய சூழல் குறித்த வருத்தம் ஏற்படுவதை தவிர்க்கவியலவில்லை.

கவிதையில் அவர் கூறும் ஆசை அவரது மட்டுமல்ல;பலரது அசையும் கூடத்தான்.

சொர்ணபாரதி


அன்புமிக்க திண்னை ஆசிரியர் அவர்களுக்கு.

வணக்கம்.

அரியும் சிவனும் ஒண்ணு எனும் எனது குறுநாவல் பற்றிய அன்பர் ஆர். ரஃபீக் அவர்களின் கடிதம் கண்டேன். தற்கொலை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகாது. அதை ஊக்கப்படுத்தும் (to encourage) வண்ணம் எழுதுவதும் அறிவுடைமையாகாதுதான். இத்தக் கதையில் அவ்வாறு சொல்லப்படவில்லை. சொர்னம் என்பவரின் பாத்திரப்படைப்புக்கு ஏற்ற முடிவு அதுவாகத்தான் இருக்க இயலும். வேறு எந்த முடிவும் அவரது இயல்புக்கு முரணானதாகவே இருக்கும்.

‘அரியும் சிவனும் ஒண்ணு; அதை அறியாதவன் வாயிலே மண்ணு ‘ என்று மிகப் பரந்த மனப்பான்மையுள்ளவரைப் போல் தன் மாணவர்களுக்குப் பாடம் சொல்லும் வடமொழிப் பேராசிரியர் அதைத் தம் மகளுடைய காதலை அங்கீகரிப்பதன் மூலம் காட்டியிருந்தால், அந்தச் சமையல் காரர் மனச்சாட்சியின் உறுத்தல் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டிருந்திருக்க மாட்டார். இதுவே இக்கதை வெளியிடும் செய்தி (message). இது போன்ற தற்கொலைகளுக்குக் காரனர்களாகிறவர்களின் மனச்சாட்சியை விழிக்கச் செய்வதே இக்கதை முடிவின் நோக்கமாகும். வேறு எந்த முடிவும் நன்றி மிக்க – சாதுவான – பணியாளாகிய அந்தப் பாசம் மிகுந்த சமையல் காரரின் பாத்திரப் படைப்புடன் ஒத்துப்போகாது. மிக, மிக, மிக யோசித்த பின்னரே இந்த முடிவு இக்கதைக்குக் கொடுக்கப்பட்டது. வேறு விதமாய்க் கதையை எழுதியிருக்கலாமே என்பது விமரிசனம் ஆகாது. (பாத்திரப்படைப்பில் முரண்பாடுகள் இருப்பினும், வாசகர்களும் விமரிசகர்களும் ஒப்புக்கொள்ளுவதில்லை.)

தற்கொலை செய்துகொள்ளல் வீரம் என்றோ, தியாகம் என்றோ, ஒரு பிரச்சினைக்குத் தீர்வு என்றோ தனிப்பட்ட முறையில் நான் கருதவில்லை என்பதை நண்பருக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஆனால், தற்கொலை சங்கடப் படுத்தும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

அன்புடன்.

ஜோதிர்லதா கிரிஜா


பாலா

வரதட்சணையைப் பற்றிய என் கடிதம் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். தெளிவுக்காகச் சில வார்த்தைகள்.

பெண்களை அழவைப்பதற்கென்றே எடுக்கப்படும் சில தமிழ்ச்சினிமாக்களைப் போலவும் சின்னத்திரையின் மெகா சீரியல்களைப் போலவும் உணர்ச்சிப் பிழம்பாக இருந்ததால் திரு. ஜெயபாரதன் அவர்களை நிஷா ஷர்மா பற்றிய கட்டுரையை நான் முழுதும் படிக்கவில்லை. எனவே என் கடிதம் அக்கட்டுரைக்குப் பதிலாக எழுதப்பட்டதல்ல. (என் கடிதத்தில் அப்படி நான் எதையும் குறிப்பிடவும் இல்லை)

வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் கூடாது; தவறு என்பதான் என் கொள்கை. வரதட்சணை (ஏழ்மை, கொடுங்கோன்மை, வேலயின்மை போன்ற இன்னும் பலவும்) இல்லாத ஒரு இலட்சிய உலகம்தான் என் கனவிலும் இருக்கிறது. அதே நேரத்தில் வரதட்சணையக் கொடுக்கும், வரதட்சணையால் பாதிக்கப்படும் அத்தனைப் பேரும் அப்பாவிகளோ, ஏமாளிகளோ அல்லர் என்றும் நான் கருகிறேன்.

கடைக்குப் பொருள் வாங்கப் போனால் நாம் விரும்பும் எந்தப் பொருளையும் வாங்கிவிட முடியாது. நம் கையிலுள்ள பணத்துக்கு ஏற்ற பொருளைத்தான் வாங்க முடியும். திருமணச் சந்தையிலும் (நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்) வியாபாரம் இப்படித்தான் நடந்து வருகிறது. ஆனால் ஒரு வேறுபாடு. ‘என் கையில் உள்ள பணத்க்கு நான் விரும்பும் பொருளைக் கொடு’ என்று கேட்கும் வாடிக்கயாளர் மீது யாரும் இரக்கம் கொள்வதில்லை. திருமணச் சந்தையில் மட்டும் இப்படிப்பட்ட பெண்வீட்டார் இரக்கத்தைப் பெறுவது சரியா என்பதுதான் எனக்கேற்பட்டுள்ள ஐயம். (உரிய விலைக்குப் பொருள விற்ற பிறகு மேலும் பணம் கேட்கும் கடைக்கார ரெளடிகளைப் போன்ற ஆண் வீட்டாருக்கு நான் பரிந்து பேசவில்லை)

தாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் எஞ்சினியர், டாக்டர், எம்.பி.ஏ போன்ற ‘அறிவுள்ள’ மாப்பிள்ளைகளுக்கேற்ற வரதட்சணையக் கொடுக்க முடியவில்லையே என்று பெண்வீட்டார் புலம்பினால் அங்கே வரதட்சணை மட்டுமே பிரச்சனை அல்ல. தங்கள் வீட்டுப் பெண் நல்ல இடத்தில் வாழ்க்கப் பட வேண்டும் என்ற அவர்கள சுயநலமும் (இது தவறு என்று நான் கூறவில்லை) உள்ளது என்பதுதான் என் கூற்று. வரதட்சணை மட்டுமே பிரச்சினை என்றால் பெண்ணை, குறைந்த வருவாய் ஈட்டுகிற, குறைந்த வரதட்சணை கேட்கிற சாதாரண ஏழைக்குடும்பத்ப் பையனுக்குக் கட்டிக் கொடுக்க வேண்டியதுதானே! (திரு. ஜெயபாரதனுக்கு இவர்களெல்லாம் மனிதர்களாகவே படவில்லையென்றால் நான் பேசுவதற்கு ஒன்றுமில்லை)

இந்தியாவில் சட்டங்களுக்கும் அவை நடைமுறப்படுத்தப்படுவதற்கும் உள்ள இடைவெளி எவ்வளவு நீளமானது என்பது எல்லாருக்கும் போலவே எனக்கும் தெரிந்ததுதான். ஏழைகளுக்குப் பெண் கொடுக்க மறுக்கும் பெண்வீட்டாருக்கு எதிராகச் சட்டம் ஏன் இல்லை என்று நான் கேட்டது, அப்படி ஒரு சட்டம் வேண்டும் என்பதற்காக அல்ல. ஒரு புதிய கோணத்தில் சிந்தித்துப் பார்க்கலாமே என்பதற்காக.

வரதட்சணை ஒழிவதற்கு திரு. ஜெயபாரதன் ஒரு வழியைக் காட்டுகிறார் (மனமாற்றம்). என் அறிவுக்கு எட்டிய வரையில் நான் ஒரு வழியைக் காட்டுகிறேன் (பொருளாதார முன்னேற்றம்). இவை தவிர வேறு வழிகளும் இருக்கலாம். ஏதோ ஒரு வகையில் வரதட்சணை ஒழிந்தால் அவரைப் போலவே நானும் மகிழ்வேன்.

பொருளாதார முன்னேற்றம் மக்களின் வாழ்க்கை முறைகளில் எண்ணங்களில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதை வளர்ச்சியடையந்த ஒரு நாட்டில் வசிக்கும் திரு.ஜெயபாரதன் போன்றவர் அறியாதிருப்பது வியப்பளிக்கிறது. அங்கெல்லாம் பெண்ணின் திருமணத்திற்குப் பெற்றோர் நகை நட்டு சேர்ப்பதில்லை (படிக்கவப்பதற்குக்கூட …. என்று இவரே எழுகிறார்) திருமணம் செய்துகொண்டு குழந்தகளைப் பெற்றெடுத்தால்தான் பெண்களின் வாழ்க்க முழுமை பெறும் என்னும் பிதற்றல்கள் இல்லை. சீவிச் சிங்காரித்க் கொண்டு முகம் தெரியாத ஒரு கணவனை எதிர்பார்த்துப் பெண்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பதுவும் இல்லை. பெண்களை அடிமைப் படுத்தும், கேவலப்படுத்தும் இன்னும் எத்தனையோ இந்தியத்தனங்கள் இல்லை. பெண்களுக்குச் சுதந்திரமும் பாதுகாப்பும் உண்டு. முக்கியமாக, சட்டங்களுக்கும் அவை நடமுறப்படுத்தப்படுவதற்கும் இடையே உள்ள இடைவெளி மிகக் குறைவு.

எனவே பொருளாதார முன்னேற்றத்தால்தான் மனமாற்றம் ஏற்படுமேயொழிய எதிர்மறையாக அல்ல என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இந்தப் பொருளாதார முன்னேற்றத்தால் வரதட்சணை முற்றிலும் ஒழிந்துபோகும் என்பதற்கு உத்தரவாதம் உண்டா என்று வினாவெழுப்புகிறார். ‘அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு நாடுகளில் பெற்றோரை நாடாமல், மகனோ, மகளோ தானே சம்பாதித்து தாமே மேல்கல்வியைத் தொடர்ந்து முடிக்கிறார்கள்!’ என்னும் தன கூற்று கலப்படமற்ற 100% நடைமுற உண்மை என்பதற்கு திரு.ஜெயபாரதன் உத்தரவாதம் அளித்தால் அளிப்பேன்.

________

பாலா என்பது பெண் பெயரா ? (பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்னும் குற்றச்சாட்டு வேறு!) அட ஞொப்புரானே என் கதையை யாரிடம் சொல்லி அழுவது ? (நேரமிருந்தால் பிறகு முழுமையாகச் சொல்லி அழுகிறேன்). புனைபெயரைப் பயன்படுத்துவது எனக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால் என் இயற்பெயரைப் பயன்படுத்தும்போது கட்டாயமாக அடைப்புக் குறிக்குள் ஆண் என்று எழுதி வரும் வழக்கத்திலிருந்து விடுபடலாமே என்று ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்தேன் (இணையம் தரும் பாதுகாப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை). இப்போதும் நான் ஆண் என்று விளக்கவேண்டிய கட்டாயம். ஐயோ எனக்கு விமோசனமே கிடையாதா!

பரிமளம் (நான் பெண்ணல்ல, ஆண்)


Dear Sir,

Thinnai magazine is very interesting and useful to read. Thinnai is one of the very few useful magazines in Tamil. I never see such a

‘scientific-research article ‘ in any other tamil magazines. I appreciate Mr. Jayabharathan ‘s good effort to write such a type of articles in

Understandable manner.

‘Kettugitae irunga ‘ articles reflects the true colour of Tamilians

Please keep this good job.

Regards,

D.Varthamanan

Singapore


வணக்கதிற்குரிய அரவிந்தன் அவர்களுக்கு,

இக்கடிதத்தையொரு எளிய மடலாக, இன்றைய இலக்கியவாதிகளுக்கு எழுதப்படுகின்ற பொதுமடலாகவேக் கொள்ளலாம்.

எந்தப் படைப்பையும் எவரும் ஒட்டியும் வெட்டியும் விமர்சிக்கலாம் அதற்கு மாற்று கருத்துக்கிடமில்லை. விமர்சனம் செய்வதின் நோக்கமே ‘குழிபறிக்க ‘ வென்றால் எங்களைப் போன்றவர்களுக்குப் படபடக்கிறது. பொதுவாக இதுபோன்ற விமர்சனங்களுக்கென்று ஒரு உத்தியுண்டு. அந்த உத்தி பூசாரி கடா வெட்டுவதற்குச் சமம். அந்த உத்தித் தங்கள் கட்டுரையிலுமிருந்தது. JK கதைகள் பற்றி, தீவிர இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் இதழொன்றில் விமர்சனம் எழுதவேண்டிய அவசியம் எதுவும் கிடையாது ‘ என்ற முகாந்திரத்தோடு ஆரம்பிக்கும் தங்கள் கட்டுரையில் வேறென்ன எதிர்பார்க்க முடியும். கத்தியின்றி இரத்தமின்றி JK எழுத்துக்கள் பலி வாங்கப் படுகின்றன.

எந்த ஓர் எழுத்தாளனும் அல்லது இலக்கியவாதியும் தான் படைப்பதெல்லாம் இலக்கியமென சத்தியம் செய்ய முடியாது (ஆனால் துரதிஷ்ட்டவசமாக தீவிர இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் அப்படித்தான் தங்களை கற்பனை செய்து கொள்கின்றார்கள்) அது எமது JKவுக்கும் பொருந்தும். எழுத்தாளனுக்குப் பாதுகாப்பில்லாத இந்தியச் சூழலில் (நான் பொருளாதாரத்தைக் சொல்கின்றேன்) சில விஷயங்களில் சமரசம் செய்துகொண்டு எழுத நேரிடுகிறது. அப்படி எழுதப்படுபவை இலக்கிய அந்தஸ்து பெறவும் செய்யலாம், பெறாமலும் போகலாம். நல்ல சிறுகதைகள், கவிதைகள் இலக்கியவாதிகள் கொச்சைபடுத்துகின்ற வணிக இதழ்களிலும், சினிமாக்களிலும் இல்லாமல் இல்லை. அவ்வாறே மோசமான சிறுகதைகளும், கவிதைகளும் இலக்கிய லேபிலோடு சிற்றிதழ்களிலும் வரத்தான் செய்கின்றன. ஆகவே ‘அவர் அங்கே எழுதியவர் ‘ அதனால் இலக்கியவாதியல்ல என்ற நினைப்போடு கட்டுரை எழுதுகின்ற இலக்கிய பெருமக்களைப் பற்றிப் பேச எங்களுக்குப் போதாது. ஒருவரை இலக்கியவாதி என்றறிய ஒரு படைப்பு போதும் என்பதே என்னைப் போன்றவர்களின் தாழ்மையான அபிப்ராயம்.

தங்கள் காலச்சுவடு கட்டுரைக்குப் பதிலளிக்கும் களமாகத் ‘திண்ணையை ‘க் கொண்டு செல்ல விருப்பமில்லை. அது முைறையும் ஆகாது. தவிர JK யின் விசுவாசியாக இருந்துகொண்டு அவர் படைப்புகைளைப் பற்றி விமர்சிப்பது இயலாது. சிலாகிக்கவே முடியும். பொதுவாகவே அவரது படைப்புக்கள் பெரும்பாலும் சமூகத்தில் கவனத்திற் கொள்ளப்படாத நகர்புற சேரிகளின் வாழ்வியல் சார்ந்தது. இம்மாந்தர்களின் வயிற்று வாழ்வோடு தொடர்புகொண்ட அழுகையையும் ஆனந்தத்தையும், ஏக்கத்தையும் எக்காளத்தையும், பகையையும் பந்தத்தையும், இவர்களைப் பற்றிய பிரக்ஞையற்று வாழ்ந்த நம்மிடம் மன்னிக்கவும் எங்களிடம் கொண்டுவந்தபோது அதிர்ச்சியாகத்தானிருந்தது. அருபதுகளில் உச்சத்திலிருந்த ஜெயகாந்தன் இன்றைக்கும் பேசப்படுகிறார், எழுதப்படுகிறார் என்ன பொருள் ? உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

பொதுவாக ஒரு படைப்பினை மீள்வாசிப்புக்கு உள்ளாக்கும்போது சமகாலவாசிப்பாக கொள்ளலாகாது. மீள்வாசிப்பில் படைப்பாளி சொல்ல வருவதை அவரவர் அறிவு சார்ந்து வாங்கிக் கொள்கின்ற திறனானது, ‘இறந்த காலத்துக்குச் சற்று கூடுதலாக வேண்டியிருக்கிறது. இங்கே படைப்பின் மூல சொற்களை மட்டுமே ஆதாராமாகக் கொண்டு விமர்சினம் செய்வது கூடாது என்பது எனது தாழ்மையான அபிப்ராயம். படைப்பின் காலம், படைபாளியின் உணர்வு மற்றும் அறிவு, படைப்பு காலத்து சமூகம், படைப்பின் சூழல் என்பன, ஒரு படைப்பை வாசிக்க நேரும்போது கவனத்திற் கொள்ளவேண்டியவை. இன்றைய நுட்பங்களை நேற்றோடு ஒப்பிட்டு உடனே நேற்றாகபட்டது குப்பை என்ற்று சொல்லிவிடமுடியாது. கூடாது.

ஜெயகாந்தனின் கூச்சலும், ஊதாரித்தனமான வார்த்தையும், இலக்கிய உபதேசமும் நிறைய வாசகர்களை எழுதப்பட்ட காலத்தில் யோசிக்க வைத்திருக்கிறது. தூக்கமில்லாமல் தவிக்கவைத்திருக்கிறது. அறிந்த சமுகத்தை வேறு கோணத்தில் சொல்லியிருக்கிறது.

‘இன்னாதது அம்ம இவ்வுலகம், இனியது காண்கிதன் இயல்புணர்ந்தோரே! ‘ என்பது வாழ்வியலுக்கு மட்டுமல்ல இலக்கியத்துக்கும் பொருந்தும்.

ஜெயகாந்தனின் ‘இனிப்பும் கரிப்பும் ‘ சிறுகதையில் கணவனிடம் மனைவி பிரஸ்தாபிக்கிறாள், ‘ராவும் பகலுமா யாரையோ தொலைக்கிறதப்பத்திதான் பேசிக்கிட்டிருக்கீங்களே ஒழிய நாம் பொழைக்கிறதைப்பத்தி யோசிக்க மாட்டாங்களா ? ‘ நாங்களும் அதைத்தான் கேட்கிறோம். மற்றவர்களை இலக்கியவாதிகள் இல்லையென என்று சொல்லிகொண்டிருப்பதைக் காட்டிலும் தங்கள் எழுத்தில் கவனமிருக்கட்டும். கூச்சலும் குழப்பமுமாகவிருக்கும் தமிழிலக்கிய குரல்கள், இப்போதெல்லாம் தில்லிக்குச் சரியாக விளங்குவதில்லையாம்.

அன்புடன்

நாகரத்தினம் கிருஷ்ணா


ஞானிக்குப் பதில்.

சென்ற திண்ணை இதழில், ‘தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ? ‘ என்ற தலைப்பில் திரு ஞானி அவர்கள் எழுதியுள்ள கட்டுரையைப் படித்தேன். அக்கட்டுரையில் பெரியார் பற்றிய என் கருத்துக்களை ஜெயமோகனின் கருத்துக்களோடு இணைத்து நாங்கள் இருவருமே பெரியார் பற்றி ஒரே பார்வையில் இருப்பதாகவும், ஒத்த கருத்தினராக நாங்கள் சந்திக்கும் இப்புள்ளியே தனது கவனத்தில் முக்கியமானது என்றும் ஞானி கூறியிருக்கிறார்.

பெரியார் சம்பந்தமாக அவ்வப்போது நான் எழுதியுள்ள மொத்த வரிகள் மிகக் குறைவானவை. அவற்றை எல்லாம் முழுமையாக அறிந்த நிலையிலேயே அவர் என் மீதான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் என்றால் அவரது முடிவுகளை நான் ஏற்கவில்லை.

பெரியாரைப் பற்றிய ஞானியின் பார்வைக்கு மாறுபட்டு என் அபிப்பிராயங்கள் நிற்குமெனில் அவற்றை விமர்சிக்க அவருக்கு முழு உரிமையுண்டு. எனது அபிப்பிராயங்களுடன் ஞானிக்குக் கூர்மையான வேறுபாடுகள் இருக்குமெனில் அவரது விமர்சனம் இன்னும் கடுமையாகக் கூட இருக்கலாம். இதிலொன்றும் பிரச்னையில்லை. பெரியாரைப் பற்றிய என் பார்வைக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத ஒருவரின் கருத்துக்களுடன் என்னைப் பிணைத்து இருவரையும் ஜோடி சேர்த்துப் பேசுவது எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. பெரியாரைப் பற்றி இருவர் கூறியிருப்பதையும் முழுமையாக ஞானி படித்திருந்தால் இது போன்ற முடிவுக்கு வருவது சாத்திமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. இருந்தாலும் ஞானி முன் வைக்கும் கருத்துக்கள் எனது பார்வையிலிருந்து அவர் மாறுபடுவதால் தோன்றியதே அன்றி, தனி நபர் விரோதம் சார்ந்தது அல்ல என்ற எண்ணம் எனக்கு இருப்பதால் நான் இதுகாறும் பெரியார் பற்றிக் கூறியிருப்பதை அவரது கவனத்திற்குக் கொண்டு வந்து என் வாதங்களை முன் வைக்க விரும்புகிறேன். என்றாலும் அவற்றை என் நினைவில் புதுப்பித்துக்கொள்ளவோ, அவசியமெனில் மேற்கோள் காட்டவோ பயன்படும் ஆதாரங்கள், நான் இப்போது வெளி நாட்டில் இருப்பதால் என் கைவசம் இல்லாமல் ஆகிவிட்டது. நான் ஊர் திரும்பியதும் என் தரப்பை எழுதி ஞானியின் பார்வைக்குக் கொண்டு வருவது சாத்தியமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இருப்பினும் சில விஷயங்களை இப்போதே நான் ஞானியுடனும் வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. தமிழன் அறிவை பெரியார் தடுத்தார் என்று நான் கருதவில்லை. அவ்வாறு நான் சொன்னதும் இல்லை. பள்ளிப் படிப்போ அல்லது புத்தகப் படிப்போ இல்லாதவர்களும் நாட்டுக்கு நிறைவான தொண்டு ஆற்ற முடியும் என்பதுதான் என் எண்ணம். காமராஜர் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரை இது சம்பந்தமான என் பார்வையைத் தெளிவு படுத்தும்.

2. பெரியாரின் அடிப்படையான எல்லா குறிக்கோள்களும், லட்சியமும், அவற்றை நிறைவேற்ற அவசியமான உழைப்பும், எதிர்ப்புக்குப் பயப்படாமல் போராடும் உறுதியும், வெளிப்படையான பேச்சும், சில சமூக ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்பதில் கொண்டிருந்த பிடிவாதமும் சிறு வயதிலிருந்தே என்னைக் கவர்ந்திருக்கின்றன.

3. நான் முதல் முதலாவதாக சேலத்தில் எனது 17 ஆவது அல்லது 18 ஆவது வயதில் பெரியாரின் பேச்சையும், அவர் முன்னிலையில் ராமாயணத்தை முன் வைத்து நிகழ்த்தப்பட்ட ஒரு சில காட்சிகளையும் பார்த்தேன். எனது வயது காரணமாகவும், மத்தியதரப் பின்னணி சார்ந்தும், எனது பெற்றோரிடமிருந்து எனது மூளையில் இறங்கியிருந்த மதிப்பீடுகள் சார்ந்தும் அன்று பெரும் அதிர்ச்சிக்கு நான் ஆளானேன். அன்று அவர் பேசிய பேச்சளவுக்கு அருவருக்குத் தகுந்த பேச்சை நான் அறிந்த வரையில் உலகத்தில் எந்தத் தலைவரும் எந்த மக்கள் கூட்டத்திற்கு முன்னாலும் பேசியிருப்பார் என்று நான் கருதவில்லை. ராமாயணத்தை முன் வைத்து நடத்தப் பட்ட காட்சிகள் மிக மிக ஆபாசமானவை. இவற்றைக் கண்டிக்க ஒருவன் பிராமணர்களைத் துக்கிப் பிடிப்பவனாகவோ, அல்லது ராமாணத்தில் பக்தி தளும்புகிறவனாகவோ இருக்க வேண்டியதில்லை. பகுத்ததறிவுவாதியாக இருந்தால் மட்டுமே போதுமானது. இந்த அனுபவம் அவரது பிரச்சாரத்தளம் மிகக் கீழானது என்ற எண்ணத்தை அன்று என் மனத்தில் ஆழமாக ஏற்படுத்திற்று.

4. பொதுவுடைமை இயக்க ஆதரவாளர்களான என் நண்பர்களுடன் பின்னால் பெரியார் பேசிய பத்துக்கு மேற்பட்ட கூட்டங்களை எங்கள் ஊரான

நாகர்கோவிலிலேயே நான் கேட்டிருக்கிறேன். அவை அந்தக் காலங்களுக்குரிய பிரச்னைகளுக்கேற்ப சில உயர்வாகவும், சில தாழ்வாகவும் இருந்திருக்கின்றன.

5.பெரியாரின் கொள்கை பற்றியும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்தும், பொது வாழ்க்கை சார்ந்தும் பல செய்திகளைப் போற்றியும், விமர்சித்தும் நான் பெருமதிப்பு வைத்துப் பழகிய ஜ ‘வா,சாத்தான்குளம் ராகவன், சாமி சிதம்பரனார் ஆகியோர் விரிவாக என்னிடம் கூறியிருக்கிறார்கள். இவர்கள் கருத்து வேற்றுமை காரணமாக பெரியாரை விட்டுப் பிரிந்து வந்தவர்கள் என்றாலும், அவர் மீது மதிப்பும் கொண்டவர்கள்.

6. பெரியாரின் பேச்சுக்களும் அவரைப் பற்றிய அவரது நண்பர்களின் விமர்சனங்களும் எனக்குத் தெரிய வந்து ஏகதேசமாக அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. அவரது கொள்கை சார்ந்த விமர்சனங்கள் முன்னிலைப்பட வேண்டிய இக்காலகட்டத்தில் அவரது பிரச்சாரத்தளம் சார்ந்த வழிமுறைகளைச் சிறிதும் ஏற்காத நான், சரியோ தவறோ, அவரது கொள்கைகளைப் பற்றி மட்டுமே ஒரு சில கருத்துக்கள் எழுதியிருக்கிறேன். அதாவது, வரலாற்றில் அவருக்கு இருக்கும் பங்கை ஏற்று அவருக்கு உரிய மதிப்பளித்தே எழுத முற்பட்டிருக்கிறேன்.

7.வரலாற்றில் தோன்றியுள்ள சகல ஆளுமைகளையும் காலமாற்றத்திற்கு ஏற்ப மறுபரிசீலனை செய்ய எழுத்தாளர்களுக்கு உரிமையுண்டு என்பது இளம் வயதிலிருந்தே என் நம்பிக்கையாக இருக்கிறது.

8 ஒரே இயக்கத்தில் நீண்ட காலம் இணைந்து நிற்பவர்கள்கூட, அவர்கள் மக்களுக்குத் தரும் தோற்றம் எப்படி இருப்பினும் சரி, ஒரே புள்ளியில் கரைந்து நின்றவர்களாக இல்லை என்பது வரலாறு நமக்கு கற்றுத் தரும் பாடங்களில் ஒன்று. காந்தியும் பட்டேலுமோ, ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தருமோ, லெனினும் டிராட்ஸ்கியுமோ ஒரே புள்ளியில் சங்கமித்தவர்கள் அல்லர். அரசியல் வாதிகள் தங்கள் குறுகிய அதிகார நோக்கத்திற்குப் பயன் படும் விதத்தில் யாரையும் யாருடனும் மொட்டையாக இணைத்துப் பேசுவார்கள். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் வேற்றுமையற்றவர்களாக வெளிக்குக் காட்சியளிப்பவர்களின் இடைவெளிகளையும் முரண்பாடுகளையும் கண்டுபிடித்து அவற்றை வெளிப்படுத்தி சரித்திரத்திற்கு ஆழமும் சூட்சுமமும் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள்.

9.இன்று வரையிலும் பெரியாரின் இயக்கத்தையும் அதன் பின் வந்த திராவிடக் கட்சிகளையும் பிரித்துப் பார்க்காமல் அவர் மீது நான் எந்த விமர்சனத்தையும் முன் வைத்ததில்லை.

இக்குறிப்பைச் சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கூறுவதில் சிறிது வெற்றி அடைந்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

சுந்தர ராமசாமி.

Series Navigation

author

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

Similar Posts