PS நரேந்திரன்
சென்ற மாதம் இந்தியா போய் வந்தேன். இதோ, உங்களுடன் பகிர்ந்து கொள்ளச் சில நினைவுகள்…
****
911க்குப் பிறகு U.S ஏர் போர்ட் செக்யூரிட்டி மிக மிகக் கடுமையாக்கப் பட்டிருக்கிறது.
ஷூ வைக் கழற்று, ஹாண்ட் பேக்கைத் திற, அதைக் காட்டு இதைக் காட்டு என்று இம்சித்து எடுக்கிறார்கள். எல்லாவற்றையும் திறந்து காட்டி, எக்ஸ்ரே மிஷினைத் தாண்டும் போது ‘பிய்ங் ‘ என்கிறது. மீண்டும் பெல்ட்டைக் கழட்டு, சில்லறைக் காசைக் கொட்டு என்று அடுத்த ரவுண்டு ஆரம்பிக்கிறார்கள்.
கொஞ்சம் சந்தேகம் வந்தாலும், ஓரமாக ஒதுக்கிக் கூப்பிட்டுப் போய், உடம்பில் ஒட்டுத் துணிகூட விடாமல் அவிழ்க்கச் சொல்லி நோண்டி எடுக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். பொதுவாக இந்தியர்களை, அதுவும் குடும்ப சகிதம் வருபவர்களை அதிகம் தொல்லை செய்வதில்லை. அந்த வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள். யாராவது கிறுக்குப் பிடித்த இந்தியன் அதைக் கெடுத்து வைக்கும் வரை…
சிகாகோ ‘ஓ-ஹாரே ‘ இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் நின்றிருந்த இந்தியர்கள் கூட்டத்தைப் பார்த்து ஏறக்குறைய எனக்கு மயக்கமே வந்து விட்டது. நெருக்கியடித்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு, பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டு…..ரெஸ்டாரண்ட்களில், காபி ஷாப்களில், நடை பாதைகளில் என நிற்க இடமில்லாமல், எங்கெங்கு நோக்கினும் இந்திய முகங்கள்….முக்கால்வாசிப் பேர் வழியனுப்ப வந்தவர்கள். எந்த உலகம் போனாலும் இந்தியன் இந்தியன்தான். மாறாதைய்யா மாறாது…மனமும் குணமும் மாறாது…
British Airways-ன் செக்யூரிட்டி மற்றும் டிக்கெட் செக்கிங் எல்லாம் முடிந்து, ‘அப்பாடா ‘ என்று விமான ஏறப் போனால், வாசலிலேயே நான்கைந்து கறுப்பு உடை போலிஸ்காரர்கள், துப்பாக்கிகளுடன் நின்று கொண்டிருந்தார்கள். U.S. Customs அதிகாரிகளாம். என்னைத் தனியாக அழைத்தார்கள். கொஞ்சம் உதறலுடன் போனேன்.
‘எத்தனை டாலர்கள் யு.எஸ்-ஐ விட்டு எடுத்துக் கொண்டு போகிறாய் ? ‘
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
‘ஒரு நானூறு டாலர் இருக்கும். ஏன் ? ‘
‘பத்தாயிரம் டாலர் இல்லையே ? ‘
எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.
‘ஆபிஸர்…என்னைப் பார்த்தால் பத்தாயிரம் டாலர் வைத்திருப்பவன் மாதிரியா இருக்கிறது ? ‘
அவரும் சிரித்துக் கொண்டே, ‘U.Sல் இந்தியர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள் தெரியுமோ ?…நீ போகலாம் ‘ என்று அடுத்த இந்தியனைத் தேடிப் போனார்.
எவனாவது சக இந்தியன் ஏதாவது ‘குல்மால் ‘ வேலை செய்து மாட்டி இருக்க வேண்டும். அதுதான் இப்படிச் செய்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன்.
நல்ல வேளையாக, லண்டன் ஹீத்ரூவில் விமானம் மாறிய போது அதிக தொல்லை எதுவும் இல்லை.
****
போன தடவையைப் போலல்லாமல் இந்த முறை இந்தியாவில் அதிக நாட்கள் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு, ஒரு வழியாக என் மேனேஜரை சமாதானப்படுத்தி நாற்பது நாட்கள் லீவு வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது ( ‘மவனே, இந்த வருஷம் பூரா உனக்கு சிக் லீவு கூட கிடையாது ‘).
சென்னை விமான நிலையத்தை விட்டுக் காலை எட்டு மணிக்கு வெளியே வந்தவுடன், வியர்வை வழிய ஆரம்பித்துவிட்டது. அந்த நேரத்திலேயே அனல் தெரிந்தது. அது ஒரு ஆரம்பம்தான் என்று புரிய எனக்கு வெகு நேரம் ஆகவில்லை. Extended ‘கத்தரி ‘ வெயிலில் சிக்கித் தவிக்கப் போவதன் முன்னோட்டமாகவே அது தெரிந்தது.
உடனடியாக பாண்டிச்சேரி போய்விடுவது என்ற முடிவுடன் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தேன்.
சென்ற முறை பார்த்ததற்கும் இந்த முறை பார்த்தற்கும் இந்தியா கொஞ்சம் மாறி இருக்கிறது போலத்தான் தெரிந்தது. புதிதாக நான்கு வழிச்சாலைகள் போட்டுக் கொண்டிருந்தார்கள். இருக்கும் சாலைகளும், பரவாயில்லை என்ற ரகத்தில் இருந்தன. ஒருவழியாக இந்தியர்கள் நல்ல சாலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
****
சில சாமான்களை வாங்க வேண்டியிருந்ததால் சென்னைப் பக்கம் போயிருந்தேன். நீண்ட நாட்களூக்குப் பிறகு சென்னைக்குப் போனதால் ஆர்வத்துடன் கவனித்தேன். சென்னை நிறையவே மாறி இருந்தது. போஸ்டர்கள் எதுவும் கண்ணில் தென்படாதது பெரிய ஆச்சரியம். வாகனப் புகை மூச்சு முட்டியது. சினிமா ‘கட் அவுட் ‘கள் இன்னும் அப்படியே.
‘பிரிக்கவே முடியாதது ? ‘
‘தமிழனும். சினிமாவும். ‘
‘சேர்ந்தே இருப்பது ? ‘
‘சென்னையும். நாற்றமும் ‘
என அடுக்கிக் கொண்டே போகலாம்.
சென்னை ஒரு ‘நாற்ற நரகம் ‘. அன்றும். இன்றும். என்றும். மாறவே மாறாது. ‘கம கம ‘ என்று மணக்கும் கூவமும், அடையாறும்…. இன்னமும் அப்படியேதான் இருக்கிறது….எத்தனை ஆட்சி மாறினாலென்ன ? எத்தனை முதலமைச்சர்கள் வந்தாலென்ன ? சென்னையைப் பொருத்தவரை சில விஷயங்கள் என்றுமே மாறாது போலத்தான் இருக்கிறது….பேசாமல் கூவம்தான் தமிழ்நாட்டின் வற்றாத ஜீவ நதி என்று அறிவித்து விடலாம்….வெட்கம் கெட்டவர்கள் நமது ஆட்சியாளர்கள். அதைவிட சொரணை கெட்டவர்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்த சென்னைவாசிகள்…என்னத்தைச் சொல்ல ?
தி. நகர், ரங்கநாதன் தெருவில் கூட்டம் நெருக்கியது. பாண்டிச்சேரியிலேயே இந்தச் சாமான்களை வாங்கி இருக்கலாம். சென்னையில் வெரைட்டி அதிகம் இருக்கும் என்ற எண்ணத்தில் போயிருந்தேன். சரவணா ஸ்டோர், ரத்னா ஸ்டோர் போன்ற கடைகளில் உள்ளே நுழைவதற்கே போராட வேண்டியிருந்தது. அந்த அளவிற்கு ஜனங்கள் திரளாக முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். மற்றபடி எல்லாவிதமான சாமான்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கிறது. உள் நாட்டில் தயாராகும் பொருள்களின் தரமும், பாக்கிங் நேர்த்தியும் கொஞ்சம் கூடியிருக்கிறது. இன்னும் சர்வதேச தரத்தை எட்டவில்லை. எட்டி விடுவார்கள் என்றே நம்பத் தோன்றுகிறது.
‘ஒரே மாடல் வெட் கிரைண்டர், ரத்னாவைவிட சரவணாவில் ரூ. 500 குறைவு ‘ என்றாள் என் மனைவி. அது எப்படி சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய வேலை பணம் கொடுப்பதுடன் முடிந்து விடுகிறது. விலையைப் பற்றியெல்லாம் நான் அதிகம் கவலைப் படுவதில்லை. இருப்பினும் 120V உபயோகப் பொருட்கள், 220V பொருட்களை விட இரண்டு மடங்கு விலை சொல்கிறார்கள். வாங்கித்தான் ஆக வேண்டும். வேறு வழி ?
சிறு வயதில், 70 களின் ஆரம்பத்தில் கொஞ்ச நாள் மாம்பலம் கணபதி செட்டித் தெருவில் குடியிருந்த போது, மாலை நேரங்களில் அம்மாவுடன் ரங்கநாதன் தெருவிற்குப் போனது மங்கலாக நினைவிருக்கிறது. அந்த நாட்களில் இவ்வளவு கூட்டமெல்லாம் கிடையாது. இவ்வளவு கடைகளும் இல்லை. பொதுவாக காய், கறிகள்தான் விற்றுக் கொண்டிருப்பார்கள். அதுபோலத்தான் சென்னைக் கடற்கரையும். காலார நடந்து, ரசித்து வரலாம். இன்று அதெல்லாம் பழங்கனவாகப் போய்விட்டது. நினைத்துப் பார்க்கும் போது பெருமூச்சுதான் மிஞ்சுகிறது. 80களில்தான் ஜனங்கள் சென்னையை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தார்கள் என நினைக்கிறேன். இன்னும் நிற்கவில்லை அந்தப் படையெடுப்பு.
அப்போதெல்லாம் மாம்பலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வீடுகள் தென்படும். பெரும்பாலும் பிராமண சமூகத்தவர்கள்தான் பெரிய வீடுகளில் இருந்தார்கள். நிறைய புதர்களும், செடிகளூம் இருக்கும். இளவயது நண்பர்களூடன் சேர்ந்து கொண்டு ஓணான் பிடிக்கப் போனது நினைவிருக்கிறது. அட, தேன் சிட்டுக்கள் கூட இருந்தன மாம்பலம் பகுதியில் என்றால் நம்புவது கொஞ்சம் கடினம்தான்.
தேன் சிட்டு என்றதும் ஒன்று நினைவிற்கு வருகிறது. சமீபத்திய ‘இந்தியா டுடே ‘ பத்திரிகையில் நகர்ப்புறங்களில் சிட்டுக் குருவிகள் அருகி வருவது பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. உண்மைதான். பாண்டிச்சேரியில் இருந்த ஒரு மாதத்தில் ஒரு சிட்டுக் குருவிகூட என் கண்ணில் தென்படவில்லை. இந்தியாவில் நான் இருந்தவரை பார்த்த மொத்த சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை வெறும் 13 மட்டுமே. அதுவும் நெல்லிக்குப்பம் போன்ற சிறு நகர்ப் பகுதிகளில். மிகவும் வருந்தத் தக்க விஷயம் அது. முன்பெல்லாம் வீட்டு முற்றத்தில் நெல்லோ, அரிசியோ காயப் போடும்போது வந்து மொய்க்கும் குருவிகளை விரட்டுவதே பெரிய வேலையாக இருக்கும். பாட்டிகளுக்கான வேலை வாய்ப்பு அது. இப்போது சிட்டுக் குருவிகளோடு சேர்ந்து பாட்டிகளும் அரிதாகி வருகிறார்கள்.
என்னடா இவன் இதையெல்லாம் எழுதுகிறானே என்று நீங்கள் நினைக்கலாம். எந்தச் சூழலிலும் வாழும் சிட்டுக் குருவிகள் அழிந்து வருவது சுற்றுப் புற சூழல் மிகவும் மாசடைந்து வருகிறது என்பதைத்தான் காட்டுகிறது. பறவைகளைப் பாதிக்கும் மாசு, மனிதர்களைப் பாதிக்க எவ்வளவு நேரமாகும் ? யாரும் சிந்திப்பது மாதிரி தெரியவில்லை.
***
சென்னைத் தமிழைக் கேட்பது ஒரு சுகானுபவம்.
‘செவியிருந்தும் செவிடானோர், சென்னைத் தமிழ் கேளாதோர் ‘ என்பது புது மொழி.
சென்னைத் தமிழில் எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை எது என்று கேட்டால், கொஞ்சமும் யோசிக்காமல் ‘குன்ஸா ‘ என்று சொல்லுவேன். ‘குன்ஸா ‘ ஏறக்குறைய ‘நைசா ‘ என்பதற்கு சமமான வார்த்தையெனினும், ‘குன்ஸா ‘ குன்ஸாதான். அடித்துக் கொள்ளவே முடியாது.
உதாரணமாக, ‘நைசா அடிச்சிகினு போனான் ‘ என்பதை விட, ‘குன்ஸா அயுத்திகினு பூட்டான் ‘ தருகிற கிக்கே தனிதான். சொல்லும் போதே ‘ஒரு தின்சா ‘ இருக்கும் என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.
***
கேபிள் டி.வி.யின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பதாக நான் நினைக்கிறேன். 24 மணி நேரமும் கால் காசு பெறாத புரோகிராம்கள். நான் பார்த்தவரை 90 சதவிகிதம் சினிமா சம்பந்தப் பட்ட நிகழ்ச்சிகள்தான். பெரும்பாலான தமிழர்கள் டி.வி.யை முறைத்துக் கொண்டே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்தச் சேனலைத் திருப்பினாலும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள்தான். ஒன்று ‘டிங்கிரி டிங்கிரி ‘ என்று ஏதாவது கூட்டம் ஆடிக் கொண்டிருக்கும். இல்லாவிட்டால் ஏதாவது அரதப் பழசான சினிமாப் படம். அதையும் விட்டால் இருக்கவே இருக்கிறது ‘மெகா சீரியல் ‘. சகிக்கவே முடியாதவை இந்த மெகா சீரியல்கள். காலை முதல் இரவு தூங்கும் வரை தொடர்ச்சியாக ஒரே புலம்பல். படு மட்டமான, அமெச்சூர்த்தனமான கதையமைப்பு. நடிப்பு என்ற பெயரில் ஊளையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சகித்துக் கொள்ள மிகவும் பொறுமை வேண்டும்.
எங்காவது அலைந்து திரிந்து களைத்து, இரவு பத்து மணி போல பசியுடன் வீட்டுக்கு வந்தால், வீட்டுப் பெண்கள் அனைவரும் ஏதாவது ஒரு ‘மெகா அறுவை ‘யை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்கள். சீரியல் முடியும் வரை சோறு கிடைக்காது. பொறுக்க முடியாமல் ஒருநாள் ‘நர்த்தனம் ‘ ஆடி வைத்தேன்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு எல்லாம் ஒழுங்காக நடந்தது. பிறகு மீண்டும் ‘பழைய குருடி கதவத் தெறடி ‘ கதைதான். இதற்கு மேல் ஏதாவது சொன்னால் ‘போடாங்க பேமானி…ஒம் மூஞ்சிலே எம் பீச்சாங் கைய வெக்கோ… ‘ ரேஞ்சுக்கு ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் வாயைத் திறக்கவில்லை.
சும்மா இருக்க மாட்டாமல் நான் ஏதாவது சொல்லி, அப்புறம் ‘உள்ளதும் போச்சிடா நொள்ளக் கண்ணா ‘ என்று ஆகிப் போனால் என்ன செய்வது என்ற பயம்தான். மனிதன் எது எதற்கெல்லாம் பயப்பட வேண்டியிருக்கிறது பாருங்கள் ?
‘மெகா சீரியல்கள் ஒழிக! ‘
‘ஆண்களை பட்டினி போட வைக்கும் மெகா சீரியல்கள் ஒழிக! ‘
***
சினிமா மோகம் கொஞ்சம் மட்டுப் பட்டிருப்பது போல எனக்குப் பட்டது. தியேட்டர்களில் கூட்டம் இல்லை. இருந்தாலும் தனி மனித துதிபாடல் இன்னும் ஒழியவில்லை. சினிமா நடிகர்களின் ரசிகர் மன்றங்களும், கொடிகளும் தோரணங்களும் கண்ணில் தட்டுப் படத்தான் செய்கின்றன. அவையெல்லாம் ஒழியும் வரை தமிழர்களுக்கு விமோசனம் இல்லை.
புது தமிழ் சினிமாப் பாட்டுக்களை ரசிக்கவே முடிவதில்லை. இசை என்கிற பெயரில் கர்ண கடூரமாக ‘நொட்டு நொட்டு ‘ என்று தட்டுகிறார்கள். ஜனங்களும் அதை ரசிக்கிறார்கள் போலத்தான் தெரிகிறது. என்ன ரசனையோ போங்கள்… பாடல் வரிகளில் அதிகமான ஆங்கிலக் கலப்பு. கேட்கவே எரிச்சலாக இருக்கிறது. அதை விடக் கொடுமை இப்படிப் பட்ட பாடல்களைப் பாடும் பாடகர்கள். பெரும்பாலான புதிய பாடகர்களுக்கு சரியான தமிழ் உச்சரிப்பு வருவதில்லை. ஒரு சிலர் வடக்கத்திக்காரர்கள். சொல்லவே வேண்டியதில்லை. தமிழ் சினிமாப் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தூவப் பட்டிருக்கும் தமிழ்ச் சொற்களைக் கடித்து, மென்று, காறித் துப்புகிறார்கள். நாராசமாக இருக்கிறது.
இந்த மாதிரியான பாடகர்களுக்கு வருடா வருடம் ‘சிறந்த தமிழ்க் கொலைஞன் ‘ பட்டம் தரலாமென்று இருக்கிறேன். பரிசா ? கொடுக்க வேண்டியதுதான். நன்கு பழுக்கக் காய்ச்சிய சூட்டுக் கோலால் நாக்கில் ‘இப்படியொரு இழுப்பு, அப்படியொரு இழுப்பு ‘. அப்புறம் எல்லாம் சரியாகப் போய்விடும்.
இந்த வருட ‘சிறந்த தமிழ்க் கொலைஞனாக ‘ நான் தேர்ந்தெடுத்திருப்பது உதித் நாரயணனை. எப்படியய்யா இந்த மாதிரியான ஆசாமிகளை தமிழில் பாட வைக்கிறீர்கள் ? தமிழ்நாட்டில் நல்ல குரல் வளமுடைய தமிழ்ப் பாடகர்களே இல்லையா ? எங்கோ டில்லியிலிருந்து வந்துதானா தமிழ் தலையில் மண்ணை அள்ளிப் போட வேண்டும் ?
இவர்களை எல்லாம் தமிழில் பாடவிடாமல் தடுப்பதற்கு எனக்குத் தெரிந்த ஒரே வழி, கொல்லங்குடி கருப்பாயியை இந்தியில் பாட வைப்பதுதான். ‘காரே பூரே, கக்கரே பிக்கரே ‘ என்று கருப்பாயி இந்தியில் போட்டுத் தாக்கினால் எல்லாப் பயல்களூம் வடக்குப் பக்கம் ஓடிப் போவார்கள். இந்தியைக் காப்பாற்ற. தமிழ் பிழைத்துக் கொள்ளும்.
ஒரு விஷயத்தை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். தமிழ் சினிமாவின் பிரபல பின்னனிப் பாடகர்களெல்லாம் வேற்று மொழிக்காரர்கள்தான். TM சொளந்திரராஜனிலிருந்து, SP பாலசுப்பிரமணியம், KJ யேசுதாஸ், P சுசீலா, S ஜானகி மற்றும் நேற்றைய சித்ரா, ஹரிஹரன் வரை வேற்று மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். எனினும் இந்தப் பாடகர்களின் தமிழ் உச்சரிப்பை நாம் குறை கூற முடியாது. காரணம் அவர்களிடம் சரியாக உச்சரிக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தது. அதற்காகச் சிரத்தை எடுத்துக் கொண்டு உழைத்தார்கள். நம்மால் ரசிக்க முடிந்தது. இன்றைய பாடகர்களிடம் அது இல்லை. ரசிக்க முடியவில்லை.
உதித் நாரயணும் நல்ல பாடகர்தான். இந்தியில் மிக அருமையாகப் பாடுவார். எனக்கு மிகவும் பிடித்த இந்திப் பாடகர்கள் வரிசையில் உ.நாராயணும் இருக்கிறார். இந்தியோடு நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தமிழில் பாடுகிறேன் பேர்வழி என்று இப்படி குதப்பித் தள்ளுகிறாரே என்றுதான்….
‘குல்வாலிலே முட்ம் மலர்ந்தல்லோ ‘ என்பதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் சிண்டைப் பிய்த்துக் கொண்டு அலைந்தது எனக்குத்தானே தெரியும் ?
***
வீட்டில் எல்லோரும் ‘கங்கை கொண்ட சோழபுரம் ‘ பார்க்க வேண்டும் என்றதால், ஒருநாள் நல்ல வெயில் நேரத்தில் புறப்பட்டுப் போனோம். போகும் வழியில், நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே….மறக்கவே முடியாது. ஈரேழு ஜென்மத்திற்கும் மறக்க முடியாத அவஸ்தைய்யா அது…
அதுபற்றி அடுத்த வாரம் சொல்கிறேனே…
***
psnarendran@hotmail.com
- கூடு விட்டு கூடு…
- கலையும் படைப்பு மனமும்
- விமரிசன விபரீதங்கள்
- தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘
- தமிழாக்கம் 1
- தவிக்கிறாள் தமிழ் அன்னை !
- அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
- அறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)
- வாழ்க்கையும் கனவுகளும்
- கஷ்டமான பத்து கட்டளைகள்.
- உணர்வும் உப்பும்
- குறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்
- கம்பனும் கட்டுத்தறியும்
- ஹைக்கூ
- அந்த(காந்தி) -நாளும் வந்திடாதோ.. ?
- மொய்
- உழவன்
- ஒரு தலைப்பு இரு கவிதை
- நெஞ்சினிலே….
- குப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி!
- விசுவரூப தரிசனம்.
- ஒற்றுப்பிழை
- வாரபலன் – ஜூலை 26, 2003, (ஸ்ட்ரீக்கர், தமிழுருது, மகாத்மா விவரணப்படம்)
- புலிச்சவத்தில் கால்பதிக்கும் வேட்டைக்காரர்கள்
- கடிதங்கள்
- கேட்டுக்கிட்டே இருங்க!
- கோயில் விளையாட்டு
- விடியும்! நாவல் – (7)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினேழு
- 39.1டிகிரி செல்ஸியஸ்
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்
- இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும்-3
- பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘
- சந்தோஷமான முட்டாளாய்…
- முற்றுமென்றொரு ஆசை
- மனமா ? மத்தளமா ?
- வாழ்க்கை
- ஊனம்
- அன்னை
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 11
- கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?
- நேற்று இல்லாத மாற்றம்….