கடிதங்கள்

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

ஆகஸ்ட் 1, 2003



ஆசிரியருக்கு,

பி.கெ.சிவகுமாரின் கட்டுரை கண்டேன். அதில் அவர் என்னைப்பற்றி பூடகமாக எழுதியிருந்ததைப்பற்றி ஒரு சுய விளக்கம்.

சுந்தர ராமசாமி என்ற ஆளுமை மீது எனக்கு இக்கணமும் ஆழமான மதிப்பு உண்டு. அதை எப்போதுமே வெளிப்படுத்தியுமுள்ளேன். ஆனால் அவரது கலை குறித்தஆழமான ஐயங்களும் , அவரது விமரிசனங்கள்மீதான முரண்பாடும் எப்போதுமே என்னிடம் உண்டு. அவற்றை எப்போதுமே பதிவு செய்தும் வந்துள்ளேன், 1992ல் வெளிவந்த அவரது விமரிசனமலரில் என் கட்டுரை முதல் நாவல் நூல் வரை அதைக் காணமுடியும். வடிவ இறுக்கம் ,பூடகம் , கட்டுப்பாடான வெளிப்பாடு ஆகியவற்றை கலைக் கோட்பாடாக அவர் முன்வைப்பதை நான் முழுக்க ஏற்றுக் கொண்டது இல்லை. அவர் பொருட்படுத்தாத, புறக்கணித்த எழுத்தாளர்களான கல்கி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் முதல் தேவதேவன் ப சிங்காரம் கலாப்ரியா நீல பத்மநாபன் வரையிலான படைப்பாளிகளைப்பற்றி விரிவாக அவருக்கு நேர் எதிரான கோணத்தில் கடந்த 10 வருடங்களாகஆய்வும் விமரிசனமும் செய்துள்ளேன்.

இத்தனை நாள் சுந்தர ராமசாமியின் குரலை எதிரொலித்துவிட்டு திடாரென்று ஒரு கோபத்தில் அவரை மறுப்பதாக இப்போது காலச்சுவடு அவர்களது ஊதுகுழல்களான சிவசேகரம் முதலியோரைக் கொண்டு அவதூறு கிளப்புகிறது. அதை நம்புவதைவிட அச்சில் வந்த என் கட்டுரைகளை படித்துப்பார்ப்பதே சிறந்த விஷயம்.

ஜெயமோகன்


அன்புமிக்க ஆசிரியர் அவர்களுக்கு.

வணக்கம்.

‘திண்னை ‘யில் வெளியான ‘அரியும் சிவனும் ஒண்ணு ‘ எனும் என் குறுநாவல் தட்டெழுதப்பட்ட உடனேயே – திருப்பிப் படித்துப் பார்க்கப்படாமல் – நினைவுப் பிசகாக – அனுப்பப்பட்டுவிட்டது. அதில் உள்ள எழுத்துப் பிழைகளுக்காக மிகவும் வருந்துகிறேன். ‘திண்ணை ‘ வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

அன்புடன்,

ஜோதிர்லதா கிரிஜா

26.7.2003


மெளனியின் இலக்கியப்படைப்புகளின் அடிப்படைகளை சிறப்பாக எடுத்துச் சொல்வதாக ஜெயமோகனின் கட்டுரை இருந்தது. மெளனிக்கு அவரது உரிய இடம் அளிக்கப்பட்டிருந்தது . அவர் கவிதையை கதையுடன் சேர்ப்பதில் முன்னோடி. ஆனால் அவரது பலவீனமான மொழி ,மரபிலே பயிற்சி இல்லாத நிலை எல்லாம் அழமாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. தன் மனதை எழுத தமிழ் போதுமானதாக இருந்ததில்லை என்ற மெளனியின் பேச்சுக்கு அளிக்கப்பட்ட பதில் மிகவும் சிறப்பானது. இப்படி அழுத்தமாக சொல்லவேண்டிய அவசியம் உள்ளது.

சிவம் கந்தராஜா


நிஷா ஷர்மாவைப் பற்றி எழுதிய வரதட்சணைக் கட்டுரைக்கு எதிரொலிக் கடிதம்!

சி. ஜெயபாரதன், கனடா

சென்ற வாரம் [ஜுலை 24, 2003] திண்ணையில் பாலா என்பவர் நான் முந்தைய வாரத்தில் எழுதிய ‘வரதட்சணை மீது வழக்குப்போர் தொடுத்த புரட்சிப் பெண் நிஷா ஷர்மா ‘ என்னும் கட்டுரை மேல் வினா எழுப்புவது போல் ஒரு கடிதம் மூலம் தனது கருத்தை வெளியிட்டிருந்தார்! பெரிய திமிங்கலத்தைப் பிடிக்க வேண்டுமானால் வலை சிறிதாகவா இருக்கும் என்று கணித நுணுக்கமான ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்! அது நியாயமான கேள்வி! சிறிய வலையில் பெரிய மீனைப் பிடிக்க முடியாதென்று சிறு பிள்ளைக்குக் கூட நன்றாகத் தெரியும்! வரதட்சணை வழங்குவது நியாயம் என்று தொனிக்கும் தோரணையில் ஒரு கையில் பச்சைக் கொடியை வீசிக் கொண்டு, அதே சமயம் வரதட்சணை வாங்குவது சரி என்று வாதிடுவது தன் நோக்கமல்ல என்று மறுத்துச் சிவப்புக் கொடியை அடுத்த கையில் காட்டுகிறார்! யார் கட்சிக்காகப் பரிந்து பேசுகிறார் என்று ஊகிக்க முடியாமல் வாசகர்களைக் குழப்பி அடிக்கிறது, அவரது கடிதம்!

வரதட்சணைத் தவிர்ப்பு பற்றி வந்த என் கட்டுரையின் சாரம் இதுதான்:

1. ஆண்களைப் பெற்றவர் வரதட்சணைப் பணத்தை வற்புறுத்திப் பிடுங்குவதைத் தமது உரிமையாகக் கருதுவதும், பெண்ணைப் பெற்றவர் வரதட்சணை கொடுக்கக் கடமைப் பட்டவர் என்று மாப்பிள்ளை வீட்டார், அவரது கழுத்தை நெரிப்பதும் மனிதரின் கற்காலக் குணத்தைக் காட்டுபவை!

2. இரண்டு நபர்தான் வரதட்சணைக் கொடுமையை நிறுத்த முடியும்! வரதட்சணை வேண்டாம் என்று திருமணம் செய்ய முன்னிற்கும் அறிவுள்ள ஆண்மகன்! அடுத்து வரதட்சணை விழையாத ஆடவனைத்தான் மணப்பேன் என்னும் உறுதியாக இருக்கும் மணப்பெண்! அந்த அறநெறியைக் கற்றுப் பின்பற்றும் மனிதப் பிறவிகள் வீட்டுக்கு வீடு தோன்றாத வரை, திருமணச் சந்தையில் வரதட்சணையைப் பாரதத்தில் ஒழிக்கவே முடியாது!

வரதட்சணை வேண்டாம் என்று வேலையில்லாத ஓர் ஏழை வாலிபன் பெண் கேட்டால், எத்தனைப் பணக்காரப் பெற்றோர் சம்மதிப்பார் என்று கேட்கிறார்! அதுவும் நியாமான கேள்வி! அடுத்து ஏழைகளுக்குப் பெண் கொடுக்க மறுக்கும் பணக்காரப் பெற்றோருக்கு எதிராக ஏன் சட்டங்கள் எதுவும் இல்லை ? என்று கேட்கிறார்! அது அழுத்தமான கேள்வி!

‘வரதட்சணை வேண்டாம் என்று திருமணம் செய்து கொள்ள முன்னிற்கும் ‘அறிவுள்ள ‘ ஆண்மகன் ‘ என்று நான் குறிப்பிட்டது, பெண் வீட்டார் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை! பெண்ணுக்கும், பெற்றோருக்கும் பிடிக்காத கூன், குருடு, செவிடு, முடவன், மடையன், படிக்காதவன், பைத்தியகாரன், வேலையில்லாதவன், பரம ஏழை, அயோக்கியன் ஆகியோரைப் பற்றியா இங்கு விவாதம் ? ‘இல்லானை இல்லாளும் வேண்டாள்! ஈன்றெடுத்த தாய் வேண்டாள்! ‘ என்பது நாமெல்லோரும் அறிந்ததே! ஏழை மாமனாரும், அவரது ஏழை மணப் பெண்ணும் கூட, இல்லாதவனை மாப்பிள்ளையாக ஒப்புக் கொள்ளத் தயங்குவார்கள்.

ஏழைகளைச் செல்வந்தர் மாலை போட்டு மருமகனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் சட்டம் போட்டால் மட்டும் அது நடக்கப் போகிறதா என்ன ? அரசாங்கம் போட்டிருக்கும் தற்போதைய வரதட்சணைத் தவிர்ப்பு சட்டத்தை [Anti-Dowry Law] எத்தனை நடுத்தரப், பணக்காரப் பெற்றோர்கள் மதித்துக் கீழ்ப்படுகிறார் என்பதற்குப் புள்ளி விபரம் பாரதத்தில் எங்காவது கிடைக்குமா ?

‘வரதட்சணை வாய் ஒப்பந்தம் ‘ எழுத்து வடிவில் உயிர் பெற்று வராமல் பிசாசு போல் பல முறைகளில் நிலவி வருகிறது!

1. பெண்ணைப் பெற்றவர் அளிப்பதை ஏற்றுக் கொள்வது ஒரு வகை [கோடியில் ஒன்று].

2. பெண்ணைப் பெற்றவரின் தகுதிக்கு மீறி வரதட்சணை வாங்க முயன்று பலனடையாமல், திருமணத்தை நடக்க விடாமல் முறிப்பது!

3. பெண்ணைப் பெற்றவரிடம் தகுதிக்கு மீறி வரதட்சணை வாங்கி, திருமணத்துக்குப் பின்னும் பெண் வீட்டாரை மீண்டும், மீண்டும் வற்புறுத்துவது!

4. உயர்ந்த வரனுக்கு, பல பெற்றோர் இடும் வரதட்சணை ஏலப் போட்டியில், உச்சத் தொகை அளிப்போரின் பெண் நிச்சயமாகி பிறர் ஏமாற்றம் அடைதல்!

5. திருமண தினத்தன்று வரதட்சணை மிகுதியாகக் கேட்டுப் பெண்ணின் தந்தை கழுத்தை நெரிப்பது, அடுத்து கல்யாண மேடையில் அமர்ந்துள்ள மாப்பிள்ளையை இழுத்துக் கொண்டு வெளியேறுவது! [நிஷா ஷர்மா திருமண நாளன்று நடந்து போல்].

6. திருமணத்துக்கு வாங்கிய பின்னும் திருப்பி யடையாது, மீண்டும் மீண்டும் வன்முறையில் பொன்னும், பொருளும் வேண்டி, பெண்ணைத் துன்புறுத்துவது, விரட்டி விடுவது, கொன்று விடுவது, அல்லது தற்கொலை புரிந்து கொள்ள சூழ்நிலையை உண்டாக்குவது!

இந்த பயங்கர வரதட்சணை நாடகங்கள் எல்லாம் பாரத நாட்டில் பல்லாண்டுகள் நடந்தவை! மீண்டும் நடப்பவை! இந்த வழக்கத்தைப் பாலா மோன்ற பெண்டிரே ஆதரிக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது! பெண்ணுக்கு முதல் எதிரி ஒரு பெண்!

இந்தியக் கூட்டுக் குடும்பத்தில், தகப்பனார் மகன் கல்லூரிப் படிப்புக்குப் பணம் அளிக்கிறார். அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு நாடுகளில் பெற்றோரை நாடாமல், மகனோ, மகளோ தானே சம்பாதித்து தமது மேல்கல்வியைத் தொடர்ந்து முடிக்கிறார்கள்! பாலா கூறுவது போல் பாரதத்தில் தொழில்கள் பெருகி, வேலை வாய்ப்புகள் மிகுந்து பெற்றோர் பிள்ளைகளையும், பெண்கள் கணவரையும் எதிர்ப்பார்க்கும் அவல நிலை மாறினால் வரதட்சணை நாட்டில் ஒழிந்து போகுமா என்பது சந்தேகமே! கைநிறையப், பைநிறைய, மடிநிறைய, இரும்புப் பெட்டி நிறையப் பணத்தை ஆண், பெண் இருவரும் வேலை செய்து சம்பாதித்தாலும், மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை மேற்கொண்டும் கேட்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ?

செல்வந்த வீடுகளில் பிறந்த மாப்பிள்ளையும், மணமகளும் வரதட்சணை ஒப்பந்தம் இல்லாமல் இதுவரை இந்தியாவில் எத்தனை திருமணங்கள் நடந்துள்ளன ? கோடியில் ஒன்றா ? ஆயிரத்தில் ஒன்றா ? நூறில் ஒன்றா ? அல்லது பத்தில் ஒன்றா ?


AnpuLLa Aaciriyarukku,

Kittaththatta 3 aaNdukaLaakath Thinnai vaaciththu varukireen. kadithangaLaikkooda vittuvaippathillai..avvaaRee karuththugalth thohuppukaLaiyum thodarnthu paarththu varukireen. Thanjai Saaminaathan, Venkkat Saaminaathan uLLitta palar karuththaadalgalum pala koonangaLil Thinnaip padaipapalargaLai alaci aaraivathai oruvagaik kukudhuppudan cuvaiththu varakiReen.

Sujaathavin KoLLaLLavu kuRiththa aayvu madhippeedum appadiyee en pallaandup paarvaiyodu oththuppoovathu kandu perum viyappadaintheen. KaaraNam enna theriyuma ? Thinnai oru KOOTPATTU ADIPPADAIYILAANA(Principle-Oriented) kalanththayvukkoodam..athanaalthaan! VaLarga UngaL Muyartchi.

Anbudan, A.Passoupathi,Pudhucheeri.8


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

மதிப்புக்குரிய விஞ்ஞான எழுத்தாள நண்பர் திரு இ. பரமசிவன் அவர்கள் எனது திண்ணை விஞ்ஞானக் கட்டுரைகளைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி. செம்மையான தமிழ் நடையில் திறம்பட அவர் திண்ணையில் எழுதிய சிக்கலான, தூய விஞ்ஞானக் கட்டுரைகளை நான் படித்து மகிழ்ந்திருக்கிறேன். அவரது அரிய அறிவியல் படைப்புக்களை நானும் திண்ணையில் எதிர்பார்க்கிறேன்.

‘ருத்ரா ‘ என்னும் புனை பெயரில் நகைச்சுவையுடன் அவர் திண்ணையில் எழுதி வரும் விஞ்ஞான சமூகக் கவிதைகளும் சுவையுள்ள துணிச்சலான படைப்புகள். அவை மனதை ஆடச் செய்யும் ருத்ர தாண்டவம்!

சி. ஜெயபாரதன்


I happened to read the story EnKK from thinnai website. It is written well and describes the feelings well.

Keep up the good job.

The feelings , so true and so real are captured well( rather than conjured up).

Thanks for a good story

Ramesh


Sir

I find your site is interesting and very efficient in updating regularly the articles. I know the editing members are all benevelants and one can ‘t be so demanding.

But may I suggest some useful tips that can be beneficial to irregular(occasional) readers. For instance, the controversial articles about sujata or jayaganthan and their follow-ups or replies by other authors can be followed by ‘links ‘ connected to these related articles to help the readers for better understanding. This initiative would n ‘t be time costing because there ‘s no technical problems behind this ( a hyper-text link to ‘munthaiya…article ‘). I know that even established mass media ‘s web pages don ‘t particulary bother about this problem.

Why not think about it ?

Thanking your for your effort to promote Tamil…

ravi


அரவிந்தன் எழுதிய ஜெயகாந்தன் விமரிசனத்துமேலான விவாதங்கள் என் கவனத்துக்கு வந்தன. அக்கட்டுரை என்னுடைய ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ என்ற நூலை அடியொற்றி எழுதப்பட்டது. ஆனால் என் பெயர் சொல்லப்படவில்லை. டால்ஸ்டாயைப்பற்றிய வரி ஜெயமோகனின் நாவல் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது அதுவும் பெயர்சுட்டப்படவில்லை .என் கருத்துக்கள் சற்று கொச்சைப்படுத்தப்பட்டுள்ளன. நான் ஜெயகாந்தனின் முக்கியத்துவத்தை மறுததவனல்ல. அவரது கருத்தியல் தாக்கத்தை ஏற்றுக் கொண்டவன் தான் தமிழின் சிகர சாதனையாளனாக நான் அக்ருதும் புதுமைப்பித்தனுடந்தான் ஜெயகாந்தனை ஒப்பிட்டிருக்கிறேன். ஜெயகாந்தனின் முக்கியமான படைப்புகளை ஒன்றுவிடாமல் சொல்லியிருக்கிறேன். விமரிசிக்கவே தகுதி இல்லாதவர் என்ற அசட்டுவரியெல்லாம் நான் எழுதவில்லை

எம் வேதசகாயகுமார்


இடதுசாரி மகா சன்னிதானத்துக்கு ஒரு ஹிந்துத்வ சூத்திரனின் பதில்

திரு.ஸ்ரீநிவாஸ்:நீலகண்டன் கட்டுரைக்கு விரிவான பதில் இப்போது எழுதப்போவதில்லை. அவர் தன் தொடரை( ?) முடித்த பின் எழுதுகிறேன். தேவைப்பட்டால் அவ்வப்போது சிறு கட்டுரை/குறிப்புகளை என் எதிர் வினையாக முன்வைக்கிறேன். இதற்கு முக்கியமான காரணம் நேரமின்மை.

விமர்சனம்: விரிவாக திண்ணையில் எழுதுவோரெல்லாம் வேலையத்தவர்கள் என்பதுதான் திரு.ஸ்ரீ நிவாஸின் இந்த ‘நேரமின்மை ‘ பல்லவியின் Subliminal message என எண்ணத் தோன்றுகிறது.

திரு.ஸ்ரீநிவாஸ்: அவர் ‘Historical roots of our Ecological Crisis ‘, Science (155(3767)): 1203- 1207, 1967 என்ற புகழ்பெற்ற கட்டுரையை சான்று காட்டியுள்ளார்.ஆனால் கட்டுரையின் கடைசிப் பகுதியில்(An Alternative Christian View) கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளதை, குறிப்பாக அஸிஸியைப் பற்றி எழுதியுள்ளதை குறிப்பிடவிலலை. லைன் வைட் அறிவியல் தொழில்நுட்பம் குறித்து எழுதியுள்ளதும் முக்கியமானது. இது குறித்து ஒரு வரி கூட ஏன் நீலகண்டன் எழுதவில்லை. இந்தக் கட்டுரை வாசகர்களுக்கு எளிதில் கிடைக்காது, ஆகவே யார் நம்மை கேள்வி கேட்கப்போகிறார்கள் என்ற எண்ணமா ?.

பதில்: உண்மையில் திரு.ஸ்ரீநிவாஸ்தான் இங்கு வாசகர்களின் அறியாதவர்கள் என்கிற எண்ணத்துடன் விளையாடுவதாக தோன்றுகிறது.ஏனெனில் அசிசியின் புனித பிரான்ஸிஸ் குறித்து குறிப்பிடுகையில் தொடக்கத்திலேயே லின் வைட் பிரான்ஸிஸ கோட்பாடான ‘விலங்கு ஆன்மா ‘ எனும் சித்தாந்தமே பாரதிய வேர் உடையதாக இருக்கலாம் என குறிப்பிடுகிறார், பிரான்ஸிஸ தத்துவம் நிறுவன கிறிஸ்தவத்தால் தோற்கடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். இதில் எனது மைய கருத்துடன் வேறுபட ஏதுமில்லை என்பதுடன் அதனை மிகவும் ஆதரிக்கும் போக்கு இருப்பதை காணலாம். இருந்தாலும் நான் திரித்து கூறிவிட்டேன் என்றோ அல்லது மொழிபெயர்ப்பில் வேண்டுமென்றே மாற்றிவிட்டேன் என்றோ கூறாதிருக்க நான் லின்வைட்டின் கட்டுரையில் அசிசியின் புனித பிரான்ஸிஸ் குறித்து கூறப்பட்டனவற்றை அப்படியே தருகிறேன். ‘What Sir Steven Ruciman calls ‘the Franciscan doctrine of the animal soul ‘ was quickly stamped out. Quite possibly it was in part inspired, consciously or unconsciously, by the belief in reincarnation held by the Cathar heretics who at that time teemed in Italy and southern France, and who presumably had got it originally from India. It is significant that at just the same moment, about 1200, traces of metempsychosis are found also in western Judaism, in the Provencal Cabbala. But Francis held neither to transmigration of souls nor to pantheism. His view of nature and of man rested on a unique sort of pan-psychism of all things animate and inaminate, designed for the glorification of their transcendent Creator, who, in the ultimate gesture of cosmic humility, assumed flesh, lay helpless in a manger, and hung dying on a scaffold. …The greatest spiritual revolutionary in Western history, Saint Francis, proposed what he thought was an alternative Christian view of nature and man ‘s relation to it; he tried to substitute the idea of the equality of all creatures, including man, for the idea of man ‘s limitless rule of creation. He failed. ‘

ஆனால் கிறிஸ்தவம் தன் இறையியலுடன் அறிவியலின் தரிசனங்களை இணைத்து பரிணமிக்க முடியும் என்பதை மறுக்கவில்லை என்பது மட்டுமல்ல அதற்கான சாத்திய கூறுகளை (தெயில் தி சார்டின் மற்றும் தொப்ஸான்ஸ்கி) ஆகிய மகத்துவமிக்க கிறிஸ்தவ மேதாவிகளையே நான் சான்று கூறியுள்ளேன். அதே சமயம் அத்தகைய இறையியல் கிறிஸ்தவத்தில் பரிணமிக்கையில் இன்று வளரும் நாடுகளில் திருச்சபை ஏற்படுத்தி வரும் ‘ஆசிய ஆத்ம அறுவடை ‘ போன்ற திருக்கூத்துகள் தன்னாலேயே அழிந்துவிடும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன். ஆனால் நான் ஏதோ ‘கிறிஸ்தவமே மோசம் ‘ என்று காட்ட லின் வைட்டின் அசிசி குறித்த பகுதியை இருட்டடிப்பு செய்ததாக கூறுவது ….(நான் கேப்டன் ஹாடக்காக இருந்தால் ‘Billions of blistering barnacles ‘ அல்லது ‘Ten thousand thundering typhoons ‘ என்று கூறியிருக்க வேண்டிய இடம்!) வாசகர்களுக்கு கிடைக்காத கட்டுரை அல்ல லின் வைட்டின் கட்டுரை. இணையத்தில் கூகிள் தேடலிலேயே 5க்கும் மேற்பட்ட இணைய தளங்கள் இக்கட்டுரையை முழுமையாக கொடுக்கின்றன. மேலும் இன்றைய இணைய உலகில் இணைய பத்திரிகையில் வாசகர்களுக்கு தகவல்கள் கிடைக்காது என்கிற நினைப்பு கடைந்தெடுத்த ஸ்டாலினிஸ்ட்டுக்கு தான் இருக்க கூடும். நாம் வாழ்வது 2003 இல் 1917 இல் அல்ல என்பதை மறக்க நான் ஒன்றும் பாலிட் பீரோ உறுப்பினரோ இடதுசாரி செமினார்வாலாவோ அல்லவே!

திரு.ஸ்ரீநிவாஸ்: க்யூபாவில் உள்ள நிலை என்ன ? இயற்கையோடு இணைந்த வேளாண்மையினைத்தான் அரசு ஊக்குவிக்கிறது.etc இதை எழுதியவர்,லெவின்ஸ் ஒரு விஞ்ஞானி, ஹார்வார்ட் பல்கலைகழக்த்தில் ஆய்வாளர் etc.

பதில்: சோஷலிச நாடுகளின் சூழல் மாசுபடுத்துதல் அனைத்திலுமே பல முக்கியமான பொது அம்சங்கள் (சோஷலிச மாசுபடுத்தல் என்போமா ?-ஆகா அடுத்த கட்டுரை தொடருக்கு தலைப்பு கிடைத்துவிட்டது!) கொண்டிருப்பது கடந்த 10 வருடங்களில் தெளிவாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. உள்ளே மாசு ஏற ஏற வெளியே மாசின்மை குறித்த பிரச்சாரம் படு அதிகமாக எகிறிப் பாயும் என்பது ஒரு சோஷலிச யதார்த்தம். ஜனநாயக நாடுகளில் உள்ள சில அறிவுஜீவிகள் இந்த பிரச்சாரத்தில் மயங்கிப் போவதும் இயல்பான ஒன்றுதான். போபர்ஸை துப்புதுலக்கிய படு புத்திசாலியான நம்மூர் அம்பி சீனாவின் திபெத் குறித்த மூன்றாம் தர பிரச்சாரத்தை துப்பு கெட்ட தனமாக அப்படியே ஏற்றெடுத்து தன் ‘பளபளா ‘ பத்திரிகையில் அப்படியே வாந்தியெடுத்திருப்பதை பார்க்கலாம். இத்தனைக்கும் அம்பி மற்றபடி நல்ல புத்திசாலி ‘ஜர்னலிஸ்ட்தான் ‘(!). இது ஒருவித மார்க்சிய மனோவியாதி! அமெரிக்காவை சார்ந்த சில முன்னணி பசுமைகள் (of course ‘வெகுஜன ‘ பசுமைகள்தான்) சோவியத்தில் மாசு என்ற ஒரு விஷயமே கிடையாது என்று கூறி சான்றிதழ் அளித்து பின்னர் வழிந்த கதையையும் நாம் அறிவோம். (இது குறித்தும் விலாவாரி விளக்கம் வேண்டுமா திரு.ஸ்ரீநிவாஸ் ?) இதே கதைதான் கியூபாவிலும். கியூபாவின் வேளாண்மை மையப்படுத்தப்பட்ட இயந்திர மற்றும் வேதிமயமாக்கலையே அதிகாரபூர்வமாக நடைமுறைபடுத்தியது. அரசு உடைமை பெரும் பண்ணைகள் ஆக்கப் பட்ட விவசாய நிலங்களில் அரசு நிர்ணயித்த கரும்பு உற்பத்தியை அசுரத்தனமாக எட்ட வேண்டிய கட்டாயம் வேளாண்மையை வேதி வேளாண்மையை சார்ந்திருக்க வைத்தது. (உதாரணமாக 1970 இல் உற்பத்தி இலக்கு 10 மில்லியன் டன் சர்க்கரை!) சூழல் அறிவியலின் அரிச்சுவடி அறிந்தவர்களும் (அவர்கள் கட்சியின் பாலிட் பீரோ உறுப்பினர்களாக அல்லது தங்கள் நிழல் எஜமானர்களை நன்கறிந்த செமினார்வாலாக்களாக இல்லாத பட்சத்தில்)இத்தகைய நடவடிக்கைகள் பெரும் சூழல் சீரழிவுக்கு வழி வகுக்கும் என்பதை அறிவார்கள். கியூபாவின் முக்கிய மாசு பிரச்சனைகளில் ஒன்றாக நைட்ரேட் உர உற்பத்தியின் விளைவுகள் கண்டறியப்பட்டுள்ளதே இதற்கு சான்றாகும். இன்னமும் பல அடுக்கலாம், அண்மையில் கியூபா பசுமை தன்னார்வ அமைப்புகளை தடை படுத்தியது வரை.

திரு.ஸ்ரீநிவாஸ்:அரவிந்தன் என் கட்டுரையை எதிர்கொள்ளவில்லை.காரணம் வெளிப்படை.

விமர்சனம்: ஆம். ஏனெனில் என்னை பொறுத்தவரை அவை கட்டுரைகளே அல்ல. ஒரு இடதுசாரிக்கான பசுமை இயக்கங்கள் குறித்த நூல்களின் பின்பக்க குறிப்புகளிலிருந்து பாதி செமித்த-செமிக்காத துணுக்கு தொகுப்புகளில் எதிர்கொள்ள என்ன இருக்கிறது ?

திரு.ஸ்ரீநிவாஸ்: இடது சாரிகள் நிலைப்பாடு ஒரு புறம் இருக்கட்டும். நர்மதை பள்ளதாக்குத் திட்டங்கள் போன்றவை குறித்து அவர் கருத்து என்ன ? நதி நீர் இணைப்பு திட்டம் குறித்து அவர் என்ன கருதுகிறார் ? பிரண்ட்லைன் அருந்ததி ராயை ஆதரிக்கலாம், சீன அரசையும் ஆதரிக்கலாம்.அரவிந்தன் நீலகண்டன் தன்னுடய நிலைப்பாட்டினை ஏன் எழுதவில்லை.இடதுசாரிகளை எதிர்ப்பது என்பது மட்டும்தானா அவரது நிலைப்பாடு ?

விமர்சனம்: கேரளத்தில் புலையர் குழந்தைகள் ‘உயர் சாதி ‘ குழந்தைகளுடன் படிப்பதை எதிர்த்த மார்க்சிய முற்போக்குகளின் சித்தாந்த வாரிசுகளின் குடும்ப பத்திரிகைகளில் ( ‘குஜராத் புளுகு பின் மன்னிப்பு ‘ புகழ் + வன பகுதி நில ஆக்ரமிப்பு மாளிகைவாசி)அருந்ததி ராயும் ஆதரிக்கப்படலாம்; பாரதத்தை வெட்கங்கெட்ட முறையில் துரோகமாக ஆக்ரமித்துள்ள, ஆக்ரமிக்க துடிக்கும் சீனத்தையும் ஆதரிக்கலாம்.ஆனால் பன்மை பேணுதல் குறித்த ஒரு கட்டுரை தொடரில் நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து எனது நிலைப்பாடு பற்றி கூறாததுதான் இடதுசாரி மகா சன்னிதானத்துக்கு பிரச்சனை ஆகிவிட்டது!

திரு.ஸ்ரீநிவாஸ்: இதில் கவனமாக தவிர்க்கப்பட்ட பெயர் மகாத்மா காந்தி….காந்தியின் பெயர் தவிர்க்கப்பட காரணம் என்ன……விவேகானந்தர் பெயர் ஏன் முன்னிறுத்தப்படுகிறது ? காந்தியம் ஹிந்துத்வாவிற்கு எதிரானது என்பதால்தான் அவர் காந்தியைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கிறார் என்பது வெளிப்படை….விவேகானந்தர் சூழல் பிரச்சினைகள் பற்றி ஏதேனும் எழுதியுள்ளரா என்பதையும் அவர் தெரிவிக்கட்டும்.

பதில்: மகாத்மாவை ஏன் தவிர்த்திருக்கிறேன் என்பது மிகவும் நியாயமான கேட்கப்பட வேண்டிய கேள்வி. அதேசமயம் ‘விவேகானந்தர் பெயர் ஏன் முன்னிறுத்தப்படுகிறது ? காந்தியம் ஹிந்துத்வாவிற்கு எதிரானது ‘ என்பதெல்லாம் காந்தியம் குறித்தோ ஹிந்துத்வா குறித்தோ முதல்நிலை தகவல் அற்றவர்கள் கூறும் கூற்று. காந்திய சுதேசியமும் சரி ஹிந்துத்வ சுதேசியமும் சரி மண் சார்ந்த மரபுகளின் முக்கியத்துவத்தை, அவற்றை ஆக்ரமிப்பு சித்தாந்தங்களிலிருந்து காப்பதில் மிகத் தீவிரமான முக்கியத்துவத்தை மகாத்மா முன்வைத்திருக்கிறார். ஸ்வாமி விவேகானந்தரும் அவ்வாறே. மகாத்மாவின் மீதான விவேகானந்த தாக்கமும் அவ்வாறே. ‘பாரத சமுதாயத்தை முழுமையாக ஒரு தெய்வ வடிவமாக தரிசித்தவர் ஸ்வாமி விவேகானந்தர். ‘நர சேவையே நாராயண சேவை ‘ எனும் அப்பெரும் முழக்கம் போல யுவ பாரதத்தை தலைமுறைகளுக்கு தாமஸ உறக்கத்திலிருந்து

விழிப்படைய செய்யும் வேறெதுவும் உண்டா ? 1901 இல் மகாத்மா ஸ்வாமி விவேகானந்தரை காண பேலூர் வந்தார் என்றும் அப்போது உடல்நிலை காரணமாக ஸ்வாமிஜி பேலூரில் இல்லை எனவும் மகாத்மா குறிப்பிடுகிறார். ஸ்வாமிஜியின் பேச்சுகள் மற்றும் எழுத்துக்களால் தன் தேசப்பற்று பல்லாயிரம் மடங்கு அதிகரித்ததாகவும் கூறுகிறார். ரோமயின் ரோலந்தும் பிற்கால தேசிய காந்திய எழுச்சியின் வேர்கள் ஸ்வாமி விவேகானந்தரிடமிருந்தே பெறப்பட்டதை கூறுகிறார்.மகாத்மாவின் இஸ்லாமிய பரிவு சில ஹிந்து தேசிய வாதிகளிடம் அவருக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்தியதும் அது அவரது கொலையில் முடிந்ததும் ஹிந்துத்வத்தின் பரிணாமத்தில் மிகவும் சோகமான, வெட்ககரமான விஷயமே ஆகும். ஆனால் ஹிந்துத்வ சிந்தனையில் ஓர் ஜீவ நதியாகவே மகாத்மாவினை ஹிந்துத்வவாதிகளான நாங்கள் அறிகிறோம். வலிமையான, சாதி வேறுபாடுகளற்ற ஹிந்து சமுதாயம், மதமாற்றங்களற்ற சமுதாயத்தில் சிறுபான்மையினருடனான சகோதர உறவுகள், கலாச்சார தேசியத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை ஆகியன ஹிந்துத்வ இயக்கங்களையும் காந்தியத்தையும் இணைப்பவை. ‘இதில் கவனமாக தவிர்க்கப்பட்ட பெயர் மகாத்மா காந்தி ‘ என அவர் குறிப்பிடும்படியானதற்கு காரணம் ‘இறைவனையும் மனிதனையும் ‘ இணைத்து பார்த்து சேவையை வாழ்வின் ஆன்மிக சாதனையாக முதலில் குறிப்பிட்டவர் ஸ்வாமிஜியே ஆவார். நான் குறிப்பிட்ட அனைவருமே இந்த விவேகானந்த வாசகத்தை தம் வாழ்வில் ஏற்றவர்கள் ஆவர். பகுகுணா ஸ்ரீ கிருஷ்ணனையும் ஸ்ரீமத் பாகவதத்தையும் முன்னிறுத்தி தன் சூழலியல் இயக்கத்தை நடத்தியவர். அண்ணா கஸாரே அவர்களை விவேகானந்த கேந்திரத்தில் சந்திக்கும் பாக்கியமும் கேந்திரத்தின் முதுபெரும் ஊழியருடன் அவர் உரையாடுகையில் அருகில் இருக்கும் பாக்கியமும் எனக்கு கிட்டியுள்ளது. (மொழிப்பிரச்சினை காரணமாகவும், முதிர்ச்சியின்மை காரணமாகவும் நான் அவ்வுரையாடல்களில் பங்கு கொண்டதில்லை, வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்துள்ளேன்.) ஸ்வாமிஜியின் தீவிர பக்தர் அவர். அவரது வாழ்வை மாற்றியதே ஸ்வாமிஜியின் நூலை அவர் ஒருநாள் ரயில்வே பிளாட்பாரத்தில் படிக்க நேரிட்டது தான் என அவரது வாழ்க்கை வரலாறு கூறுகிறது. அரசியல்வாதிகளுடன் அவர் ஊழலுக்கு எதிராக போராடுவது இன்று நேற்றல்ல, மதச்சார்பற்ற சோஷலிஸ்ட்கள் காலத்திலும் நடந்தது, சிவசேனா-பாஜக காலத்திலும் நடந்தது, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் காலத்திலும் நடந்தது. பல ஸ்வயம் சேவக முழுநேர ஊழியர்களுக்கு ஹஸாரேயின் கிராம பணியே மாதிரியாக கற்பிக்கபடுவதுடன் அவர்கள் அக்கிராமத்திற்கே அழைத்து செல்லப்பட்டு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஸ்வாமி விவேகானந்தரின் பெயர் முன்னிறுத்தப்படுவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. இது நான் சார்ந்திருக்கும் இயக்கங்கள் பற்றியதன்று, மாறாக தனிப்பட்ட முறையிலானது. ஹிந்துத்வ இயக்கங்களும் சரி ஹிந்து சூழலியல் இயக்கங்களும் சரி மகாத்மாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதே உண்மை. ஆனால் தொழில்நுட்பமும் மானுட நலமும் இணைந்ததோர் இயக்கமாக சூழலியல் இயக்கங்கள் இருக்க வேண்டியது அவசியம். மானுட நலனுக்காக தன்னையே அழிக்கும் இதயமும், பிரபஞ்சத்தின் இரகசியங்களை அஞ்சாது எதிர்கொள்ளும் அறிவுத்திண்மையும் தேவை. அத்தகைய பண்புகளை நம் தேச மக்கள் முன் முதலில் வைத்தவர் ஸ்வாமிஜியே ஆவார். வங்காள அறிவியலாளரான சத்தியேந்திர நாத் போஸ் தெயில் தி சார்டினுக்கும் ஸ்வாமி விவேகானந்தரின் சிந்தனைகளுக்குமான ஒற்றுமைகளை சுட்டிக்காட்டியுள்ளார். மானுட பரிணாமம் சூழலியல் ஆகியவை குறித்து தெயில் தி சார்டினின் சிந்தனைகளின் முக்கியத்துவம் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்று என்ற போதிலும், இயற்கை, பரிணாமம் ஆகியவை குறித்த ஸ்வாமி விவேகானந்தரின் சிந்தனைகள் அந்த அளவு பிரபலமடையவில்லை. ஆனால் அறிவியல் வளர்ச்சியில் தாக்கம் என காண்போமேயானால் ஸ்வாமி விவேகானந்தர் போல ஒரு ஆன்மிகவாதி யென கருதப்பட்டவரால் பாரதத்தில் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்ட அளவு வேறு எங்காவது ஒரு ஆன்மிகவாதியால் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டிருக்குமாவென்பது சந்தேகமே. தொழில்நுட்பம், பன்மை பேணல், முடிவிலா தயை, வீரம், அறிவுத்திண்மை ஆகிய அனைத்திற்குமான ஒரு பாரத உருவாக்கமாக நான் ஸ்வாமி விவேகானந்தரை கருதவதாலும், அவரது ‘நரசேவையே நாராயண சேவை ‘ எனும் வார்த்தைகளின் தாக்கம் அனைத்து சூழலியல் களப்பணி வீரர்களின் வாழ்க்கை தத்துவமாக இருப்பதாலுமே ஸ்வாமி விவேகானந்தரை முன்னிறுத்தினேன். வேண்டுமென்றே மகாத்மாவின் பெயர் அவர் ஹிந்துத்துவத்திற்கு எதிரானவர் என்பதற்காக தவிர்க்கப்பட்டிருப்பதாக என் மீது குற்றம் சாட்டும் முன் திரு.ஸ்ரீநிவாஸ் எனது முந்தைய சாண எரிவாயு தொடர்பான கட்டுரைத்தொடரினையும் ஒப்பிட்டிருக்க வேண்டும். அதுவும் சூழலியல் தொடர்புடையதுதான். மகாத்மாவின் மாணாக்கரான ஜேம்ஸ் கர்னீலியஸ் குமரப்பா குறித்தும் குமரப்பாவின் குரு மகாத்மா என்பதும் தெள்ளத் தெளிவாக அக்கட்டுரை தொடரில் கூறப்பட்டுள்ளன. இருட்டடிப்பு செய்பவன் எல்லா இடத்திலும் செய்வது தானே. மேலும் இக்கட்டுரைத் தொடர் முடியவில்லை என்பதையும் திரு.ஸ்ரீநிவாஸ் நினைவில் கொண்டிருக்க வேண்டும். நான் சாண எரிவாயு குறித்த கட்டுரைத்தொடரில் ரெட்டியை ஒருமுறை குறிப்பிட்டதை ஞாபகமாக கூறும் ஸ்ரீநிவாஸ் அத்தொடரில் மகாத்மாவினால் உருவாக்கப்பட்டதாக குமரப்பா குறித்து கூறுவதையும், காந்திய சிந்தனையாளர் என்றே குமரப்பாவை மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதையும் ஏன் மறைக்கிறார் ?

திரு.ஸ்ரீநிவாஸ்:பாரம்பரிய அறிவு குறித்து இடதுசாரிகளுக்கும் தெரியும்.வைதிக,அவைதிக மரபுகள் குறித்து அவர்கள் எழுதியுள்ளார்கள்.

பதில்: ‘தட்சனுக்கு அறிவு ஏராளம் ஏராளம். ஆனால் அதைவிட ஆணவம் ஏராளம் ஏராளம் ‘ என்கிற திருவிளையாடல் வசனம் தான் நினைவிற்கு வருகிறது. (மன்னிக்கவும். சத்யஜித்ரே ரேஞ்சிலெல்லாம் எனக்கு ‘quote ‘ செய்ய தெரியாது. ஏதோ ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்று ஏபிஎன் பட வசனத்தை ‘quote ‘ செய்தேன்.) இந்த பாரம்பரிய அறிவுக்கான ஒரே ஒரு எடுத்துக்காட்டை தருகிறேன். ஒரு ஐரோப்பிய வரலாற்றாசிரியனை எடுத்துக்கொள்வோம். அவன் அனைவருக்குமாக ஒரு பொது வரலாற்று நூலை எழுதுகிறான் என்றும் வைத்துக்கொள்வோம், அத்தகைய நூலில் அவன் ஏசுவுக்கு ‘நியூரோஸிஸ் ‘ மற்றும் ஹிஸ்டாரியாதான் பின்னர் சமுதாய சூழல்களால் பெரிய இயக்கமாயிற்று என்று எழுதினால் என்ன நடக்கும் ? (ஒரு ஆய்வுத்தாளாக அல்லது ஒருகிறிஸ்தவ எதிர்ப்பு நூலாக இத்தகைய ஒரு கருத்து வந்தால் பிரச்சனை ஆகாது. ஆனால் ஒரு பொது நூலில் இத்தகைய ஒரு வாசகம் வந்தால் அது நியாயமாகவே பெரும் பரபரப்பையும் மதச்சார்பற்றவர்களிடையே கூட கண்டனத்தையும் உருவாக்கும்) ‘பொது மக்களுக்காக எழுதப்பட்டதாக ‘ அறிவிக்கப்படும் ரொமிலா தாப்பரின் ‘A History of India ‘ (பெங்குவின், 1966) கூறுகிறது, ‘சைதன்யர் என்கிற வங்காள பள்ளி ஆசிரியர் ஒருவித அதீத ஹிஸ்டாரியத்தன்மை கொண்ட அனுபவத்திற்கு பிறகு கிருஷ்ண பக்தரானார். ‘ இவ்வாறு வேறு ஏதாவது மதஸ்தாபகரை குறித்து எழுதப்பட்டால் ரொமிலா தாப்பர் இன்று பத்வாக்களுக்கு பயந்து ஆயிரம் முறை மன்னிப்பு கேட்க வேண்டி வந்திருக்கும். இதைப்போல மார்க்ஸிய ‘இந்தியவியலாளர்களின் ‘ எழுத்துகளில் பாரத ஞான மரபுகள் திரிக்கப்படுவதையும், கொச்சைப்படுத்தப்படுவதையும், ரோமிலா தப்பார் முதல் சுவீரா ஜெயஸ்ச்வால் வரை பல நூறு சான்றுகளுடன் விளக்கமுடியும். பாரம்பரிய அறிவு குறித்து இடதுசாரிகளுக்கும் தெரியுமாயிருக்கும் வைதிக,அவைதிக மரபுகள் குறித்து அவர்கள் எழுதியியும் இருப்பார்கள் (கிறிஸ்தவ மிசினரிகளும் காலனிய வாதிகளும்தான் எழுதியுள்ளார்களே அதைப்போல.) ஆனால் அம்மரபுகளின் நல் அம்சங்களை மதித்து, தம் வாழ்வுடன் இணைத்து தேசநலனை மேம்படுத்தும் தன்மையை இழந்தவர்கள் இடதுசாரிகள் என்பதுதான் உண்மை. தங்கள் இந்த குறை குறித்து அவர்கள் அறியவும் இயலா சித்தாந்த ஊனமுற்றவர்களாக இருப்பது பரிதாபகரமான மற்றொரு உண்மை.

திரு. ஸ்ரீநிவாஸ்: இந்த சந்தர்ப்பத்தில் நான் இன்னொரு அறிவியலாளர்-சிந்தனையாளர் பற்றியும் பேச வேண்டும். அமரர் அமுல்ய குமார் ரெட்டி (A.K.N Reddy)- மாற்று ஆற்றல் குறித்து ஆய்ந்தவர்,இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் இதை சாத்தியமாக்குவதற்காக பாடுபட்டவர்.நீலகண்டன் தன் கட்டுரைகளில் இவர் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.ஒரே ஒரிடத்தில் தவிர, அதுவும் ரெட்டி என்ற பெயரில், ஒரு கட்டுரையை குறிப்பிட்டு. ..அணுமின் ஆற்றல் குறித்து நீலகண்டன் எழுதியுள்ளது ரெட்டியின் கருத்துக்கு முரணாக உள்ளதால் ரெட்டியின் எழுத்துக்கள்,கருத்துக்கள் கவனத்துடன் தவிர்க்கப்பட்டுள்ளதாக நான் யூகிக்கிறேன்.அணுமின்சக்திக்கு, அணு ஆய்விற்கு ஒதுக்கப்படும் நிதியையும், மாற்று ஆற்றல் சக்திகளுக்கு ஒதுக்கப்படும் நிதியையும் ஒப்பிட்டால் அரசின் முன்னுரிமை எதற்கு என்பது புலனாகும்.அதுவும் தேவை, இதுவும் தேவை என்று எழுதுபவர்கள் மறைக்கும் அம்சங்களில் இதுவும் ஒன்று.

பதில்: அமுல்ய குமார் ரெட்டியை, ரெட்டி என்று குறிப்பிட்டதன் காரணம் அவர் பாரத அணுஆயுத சோதனைகளை எதிர்த்ததால் என்கிறார். இதே ரீதியில் அவர் காரணம் காட்டினால் திரு.ரவி.கே.ஸ்ரீநிவாஸை திரு. ஸ்ரீநிவாஸ் என நான் குறிப்பிடுவது கூட அவர் மார்க்ஸிஸ்ட் என்பதால் என்றுவிடுவார் போல. ‘அணுமின்சக்திக்கு, அணு ஆய்விற்கு ஒதுக்கப்படும் நிதியையும், மாற்று ஆற்றல் சக்திகளுக்கு ஒதுக்கப்படும் நிதியையும் ஒப்பிட்டால் அரசின் முன்னுரிமை எதற்கு என்பது புலனாகும்.அதுவும் தேவை, இதுவும் தேவை என்று எழுதுபவர்கள் மறைக்கும் அம்சங்களில் இதுவும் ஒன்று ‘ என்று திரு.ஸ்ரீநிவாஸ் குறிப்பிடுவது காஸ்ட்ரோவின் சின்ன சிவப்பு சுவர்க்கத் தீவு கியூபாவுக்குள் 3 பெரும் அணுசக்தி கேந்திரங்களில் 12 அணுமின் உலைகள் இருப்பதை குறித்ததாக இருக்க முடியாது அல்லது சீனா நடத்திய 75க்கும் (100 ?) மேற்பட்ட அணு ஆயுத சோதனைகள் குறித்ததாகவும் இருக்க முடியாது, அதெல்லாம் இந்தியாவுக்கு அதுவும் குறிப்பாக வாஜ்பாய் அரசின் கீழ் நடந்த 5 அணு சோதனைகளுக்கு மட்டும்தான் பொருந்தும். நான் மிகத் தெளிவாகவே கூறிவிடுகிறேன். ‘இந்திய சாண எரிவாயு அல்லது எந்த மீள் பயன்பாட்டு ஆற்றல் மூல தொழில்நுட்பங்களும் தோல்வி அடைந்ததற்கு காரணம் சோஷலிச அரசுத்தனமான பரவு முறைகள் மேற்கொள்ளப்பட்டதுதான். வலிமையான உள்நாட்டு சந்தைகளை உருவாக்கமால் இன்று பன்னாட்டு கம்பனிகளை திறந்து விடுவது சோஷலிசம் நம்மை குழியில் தள்ளியதால்தான். இன்று நம் நாடு பகை நாடுகளால், ஆக்ரமிப்பு சித்தாந்த நாடுகளால் சூழப்பட்டு உள்ளதால் நாம் அணு ஆயுத நாடாக நம்மை மாற்றுவதில் தவறில்லை. ‘

திரு. ஸ்ரீநிவாஸ்: அரவிந்தன் நீலகண்டன் தான் என்ன எழுதினாலும் படிப்பவர்கள் நம்பிவிடுவார்கள் என்று நினைக்கிறாரா ?.

விமர்சனம்: சே! அப்படி நினைக்க நான் என்ன திரு.ரவி ஸ்ரீநிவாஸா ?

திரு. ஸ்ரீநிவாஸ்: பசுமை இயக்கங்களுக்கும் , இடதுசாரிகளுக்கும் (ஒரு பரந்துபட்ட பொருளில்) உள்ள பல முரண்பாடுகள் நட்பு முரண்பாடுகள் . பிரிட்டிஷாரின் divide and rule தந்திரங்கள் இங்கு செல்லுபடியாகாது என்பதை அவருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். காவி இயக்கங்கள், ஹிந்த்துவ இயக்கங்களுக்கும், பசுமை இயக்கங்களுக்கும் உள்ள முரண் பகை முரண். இதுதான் கருத்தியல் ரீதியாகவும்,நடைமுறையிலும் உள்ள நிலை.

பதில்: என்ன ஒரு நட்பு! திபெத்தில் நடக்கும் சூழலியல் மற்றும் பண்பாட்டு அழிவுகளுக்கும் சூழலியலின் அடிப்படை கோட்பாடுகளுக்குமான உறவு போல நட்புக்கு இலக்கணத்தை துரியோதன-கர்ண சிநேகிதத்தில் கூட காண முடியாதே! 1960லில் தான் பசுமை இயக்கங்கள் உருவாக்க தன் நாட்டில் அனுமதி அளித்து 1980களில் தடைசெய்த காஸ்ட்ரோ அரசுக்கு பல்லாண்டு பாடும் திரு.ரவி ஸ்ரீநிவாஸுக்குதான் பசுமை இயக்கங்களுடன் என்ன ஒரு பாசம்! ஆனால் இன்றைக்கு பாரதத்தில் பண்பாட்டு பன்மை-பசுமையியல் பன்மை ஆகியவற்றில் முழுமைப்பார்வையுடன் களப்பணியாற்றும் ஒரு இயக்கமாக விளங்குவது செமினார்வாலாக்களல்ல. மாறாக பாரதிய மரபில் அதன் மதிப்பீடுகளில் நம்பிக்கை கொண்ட இடதுசாரிகளற்ற இயக்கங்கள்தாம்! அசோலா முதல் சாண எரி வாயு வரை தொழில்நுட்ப வளர்த்தெடுப்பிலும் சரி அதனை மக்களிடம் கொண்டு செல்வதிலும் சரி ஹிந்துத்வ வேர் கொண்ட பல இயக்கங்கள் மகத்தான சேவை புரிந்துள்ளன; புரிந்து வருகின்றன. மகாத்மா காந்தி, டாக்டர் ஜே.சி.குமரப்பா (வேண்டுமென்றே அவர் கிறிஸ்தவ பெயரை நான் மறைத்துள்ள சதியின் ‘motive ‘ குறித்து விரைவிலேயே நம் இடதுசாரி ஷெர்லக் ஹோம்ஸிடமிருந்து ‘திடுக்கிடும் பரபரப்பான ‘ தகவல்களை வாசகர்கள் எதிர்பார்க்கலாம்!) ஆகியோரது தொழில்நுட்ப, சமுதாய, சூழலியல் பசுமை சிந்தனைகள் நனவாகும் சேவை மையங்களை நாகபுரி ஆலின் விழுதுகளாக தேசமெங்கும் காட்டமுடியும்.

அரவிந்தன் நீலகண்டன்


அன்புள்ள ஆசிரியருக்கு,

ஜெயமோகனின் கடிதத்தில் குறிப்பிடப்படும் சில விஷயங்களைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். நண்பர்கள் என் முந்திய கடிதத்தை மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும். அதில் நான் எழுப்பி உள்ள பல கேள்விகளுக்கு, பெரிய நாவல் எழுதிய பிறகு இளைப்பாறுவதற்காக குட்டி நாவல் எழுதும், எழுத்தாளர் ஜெயமோகன் ஆயாசம் மேலிட்டு பதில் எழுத மறுக்கிறார். எழுதமுடியாது என்பதுதான் உண்மையான காரணம். அவருடைய குற்றச்சாட்டுகள் கற்பனையும் பொய்யும் கலந்தவை என்பதும் என்னுடைய கேள்விகளுக்குப் பின்னால் எழுத்துபூர்வமான ஆதரங்கள் உள்ளன என்பதும் அவருக்குத் தெரியும்.

கவிஞர் தேவதேவன் பற்றி ஜெயமோகன் குறிப்பிடும் விஷயத்தை ஆராய்வது ஒவ்வொரு விஷயத்திலும் அவர் எப்படி கற்பனையும் பொய்யும் கலந்து பேசுவார் என்பதற்கு நல்ல உதாரணமாக இருக்கும். ஜெயமோகன் எழுதுகிறார்:

‘தன் நாடக நூல் ஒன்றில் அவர் ‘அவரைவிட நான் நன்றாக அந்நாடகத்தை எழுதிவிடமுடியும் ‘ என்று சொல்லியிருந்தார். அந்த வரியை எடுத்துக் கொடுத்து அதற்கு மேல் என் நண்பர் செந்தூரம் ஜெகதீஷ் ‘ஜெயமோகனை காக்கா பிடித்து நல்ல மதிப்புரை பெற சிலர் முயல்கிறார்கள் ‘ என்று வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொன்ன வரியை எடுத்துக் கொடுத்திருந்தார்கள். ‘

இப்போது காலச்சுவடு இதழில் வெளியானது என்ன என்று பார்க்கலாம். காலச்சுவடு (இதழ் 28, 2000) ‘கண்டதும் கேட்டதும் ‘:

விமர்சனங்களை சகிப்புத்தன்மையுடன் வரவேற்கிறவர்கள் வளர்கிறார்கள். எதிர்மறையான விமர்சனம் வரும்போது, எதிரியின் குரலாக அடையாளம் காணப்படுகிறது. சொறிந்து விடுவது, பாராட்டுவது, கூடவே இருந்து குலைவதுதான் விமர்சனம் என்று நினைக்கிறவனை குமட்டிலேயே குத்த வேண்டும். அடியாட்களை வைத்து இலக்கியத்தில் சாதித்து விடலாம் என்று நினைக்கிறவர்களை எண்ணி பரிதாபப்படுகிறேன்.

செந்தூரம் கே. ஜெகதீஷ், வேட்கை, ஜூலை-செப். ’99

அவருக்கு (ஜெயமோகன்) நான் எழுதிய கடிதத்தில் உங்களால் இந் நாடகத்தை என்னைவிடத் திறமையாக எழுதியிருக்க முடியும் என்று கூறியது மனப்பூர்வமான ஒரு கூற்றுதான் . . .

அலிபாபாவும் மோர்ஜியானாவும் நாடக நூலின்

முன்னுரையில் தேவதேவன்

இதில் ஜெயமோகனின் கற்பனைக்கு மாறாக அவருடைய நண்பர் செந்தூரத்தின் மேற்கோளில் ‘ஜெயமோகன் ‘ என்ற பெயர் குறிப்பிடப்படவே இல்லை என்பதை கவனியுங்கள். மூலத்தில் இல்லாத பெயர் இவர் கற்பனையில் குடிபுகுந்திருப்பதன் பின்னணி என்ன ? குற்ற உணர்வா ? இது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் ஜெயமோகனை ஏன் இன்றும் சுட்டுக் கொண்டிருக்கிறது ?

தேவதேவன் காலச்சுவடுக்கு அன்னியமானவர் அல்ல. அவர் கவிதைகள் பலமுறை காலச்சுவடில் வெளிவந்துள்ளன. ஆனால் ஒரு படைப்பாளி தன் நாடக நூல் முன்னுரையில் தனக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி, தன்னைவிட இதை சிறப்பாக எழுதுவார் என பதிவு செய்வது அவருடைய சுயமரியாதைக்கு இழுக்கல்லவா ? உலக இலக்கிய வரலாற்றில் இதற்கு முன்மாதிரி இருக்காது என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒரு விமர்சன நூலை எழுதி, சுயமரியாதையுடன் வாழ்ந்து கொண்டிருந்த படைப்பாளியை இந்த நிலைக்கு சிரழிந்தது யார் ?

இந்தக் கேள்விகளை சூழலில் எழுப்புவதுதான் இதை வெளிவிட்டதன் நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறியுள்ளது என்பது ஜெயமோகன் இதை மீண்டும் மீண்டும் விவாதங்களில் குறிப்பிடுவதிலிருந்து தெரிகிறது.

இந்த மேற்கோள்களை தேர்வு செய்து வரிசைப்படுத்தியது நான்தான். இவை தம்மளவில் முழுமையானவை. வெட்டி ஒட்டப்பட்டவை அல்ல. இவற்றின் முன்பின் உள்ள வாக்கியங்களால் இவற்றின் அர்த்தம் மாறுபடுமெனின் ஜெயமோகன் அதை வெளிப்படுத்தட்டும். ஒரு எழுத்தாளனின் கூற்றை அவன் எதிர்கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்துவது அவமரியாதையா ? தன் ஒவ்வொரு சொல்லுக்கும் பொறுப்பேற்க வேண்டிய கடப்பாடு எழுத்தாளனுக்கு உண்டு.

ரமேஷ் பிரேம் பேட்டி தொடர்பாக பதில் எழுதும்படி சாருவிடம் கேட்டதாக ஜெயமோகன் கூறுவது பொய். தன் எந்தக் கூற்றுக்கும் எந்த ஆதாரத்தையும் அவர் வழங்குவது இல்லை. அவதூறு என்பது இதுதான்.

ஜெயமோகனுக்கும் ராஜநாயகத்திற்கும் தொடர்பு இருந்தது என்பதால் அவருடைய பல கடிதங்கள் ஜெயமோகனிடம் இருக்கும். எனக்கும் ராஜநாயகத்திற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் எந்த ஒரு விரிவும் அதில் இருக்காது. ஜெயமோகனால அதன் ஒளிநகலை திண்ணைக்கும் எனக்கும் அனுப்ப முடியுமா ? இது அவருக்கு நான் விடும் சவால்.

பலரையும் காலச்சுவடு ‘பயன்படுத்தி ‘யுள்ளது பற்றி ஜெயமோகன் குறிப்பிடுவது உண்மைதான். முதலில் அது ஜெயமோகனை ‘பயன்படுத்தி ‘யுள்ளது. மனுஷ்யபுத்திரனை ‘பயன்படுத்தி ‘யுள்ளது. இன்னும் பலரையும். இப்போது ரவிக்குமாரையும் அரவிந்தனையும் சிபிச்செல்வனையும் அய்யனாரையும் ‘பயன்படுத்தி ‘ வருகிறது. இதில் மறைக்க எதுவும் இல்லை. அதுபோல இவர்கள் எல்லோருக்கும் காலச்சுவடு ‘பயன்பட்டி ‘ருக்கிறது, ‘பயன்பட்டு ‘வருகிறது. ‘பயன்பட்டது ‘ அதிகமா ‘பயன்படுத்தி ‘யது அதிகமா என்பது அவரவர் மனநிலையையும் பார்வையையும் பொறுத்த விஷயம்.

ஜெயமோகனின் வளர்ச்சியில் காலச்சுவடுக்கு இருக்கும் இடம் மறுக்க முடியாதது. அவர் விலகிச் சென்ற பின்னர் ‘ஏறிச் சென்ற ஏணியை எட்டி உதைக்கிறாயா ? ‘ என்றெல்லாம் நாங்கள் ஒருபோதும் புலம்பியதில்லை. எந்த மானுட உறவும் நிரந்தரமானது அல்ல. எல்லா உறவுகளுக்கும் அடிப்படை பொருண்மை ரீதியாகவோ உணர்வு ரீதியாகவோ ‘பயன்படு ‘வதும் ‘பயன்படு ‘த்திக் கொள்வதும்தான். இதைத் தாண்டிய புனிதம் எதுவும் எந்த மானுட உறவிலும் இல்லை.

திண்ணை ஆசிரியர் குழு வெளியிட்ட குறிப்பு தொடர்பாக. நாஞ்சில் நாடன் திண்ணைக்கு எழுதிய கடிதத்தை ஜெயமோகன் திருத்தி வெளியிட்டது பற்றிய ஜெயமோகனின் ‘காதைப் பிளக்கும் மெளனம் ‘ நான் கூறுவது உண்மை என்பதற்கான சான்று. தமிழகத்தில் இன்று 10% எழுத்தாளர்களிடம்கூட இணைய வசதி கிடையாது. நாஞ்சில் நாடனுக்கும் இல்லை. எனவே அவர் திண்ணையில் எதுவும் கூறவில்லை என்பது இணையத்தின் ‘போலி ஜனநாயகம் ‘ தொடர்பான பிரச்சனை.

நாஞ்சில் நாடன் கடிதம் திருத்தப்பட்டது பற்றி நான் திண்ணைக்கு எழுதவில்லை. திண்ணை ஆசிரியருக்கு எழுதிய (ஆங்கில) மின்னஞ்சலில் இதை குறிப்பிட்டிருந்தேன். எனக்கு வாய் சுத்தம் எனவே நம்புங்கள் என அவரை நான் கேட்கவில்லை. நாஞ்சில் நாடன் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்து (அவருக்கு மின்னஞ்சல் முகவரி கிடையாது) கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளும்படி எழுதியிருந்தேன்.

ஒரு மூத்த எழுத்தாளரை நாயாக உருவகித்து எழுதப்பட்ட கதை தொடர்பாக நடந்து கொண்டிருக்கும் விவாதத்தில் இடையீடாக ‘நாஞ்சில் நாடன் போன்ற மதிப்புக்குரிய எழுத்தாளரின் கடிதத்தில் அவர் அனுமதியின்றி திருத்தங்களை எவரும் செய்யமாட்டார்கள் ‘ என்று திண்ணை ஆசிரியர் குழு கூறுவது ஒரு அபத்த நாடகத்தில் பேசப்படும் வசனம் போல உள்ளது.

கண்ணன், காலச்சுவடு ஆசிரியர்.


கடிதம்

ஜெயமோகனுக்கு சில வார்த்தைகள்

ஜெயமோகனின் கடிதத்தில் ஒரு தகவல் பிழை. நான் 2001 வரை ஆர்.எஸ்.எஸ்ஸில் பொறுப்பில் இல்லை. 2000, ஏப்ரலோடு ஆர்.எஸ்.எஸ்ஸில் என் பொறுப்பும் தொடர்பும் முடிவுக்குவந்தன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்த நான் ஆர்.எஸ்.எஸ். அதிகார பீடத்தில் ஏறிய சமயத்தில் வெளியே வந்தேன். பலர் உள்ளே நுழையவும் தொடர்புகளைப் புதுப்பித்துக்கொள்ளவும் தேர்ந்தெடுத்த தருணம் அது.

என்னைப் பொறுத்தவரை இயக்கத்திலிருந்து எப்போது வெளியே வந்தேன் என்பதைவிட எந்த அளவுக்கு வெளியே வந்திருக்கிறேன் என்பதே முக்கியம். இயக்க ரீதியான தொடர்புகளை முற்றாகத் துண்டித்துக்கொண்டு விலகியிருக்கிறேன். இயக்கப் பிரமுகர்கள் யாருடனும் கள்ள உறவு வைத்திருக்கவில்லை. இயக்கத்திலிருந்து விலகிய பிறகும் என்னை அன்போடு ‘கவனித்து ‘ வர இயக்கத்தில் எனக்கென்று godfather அல்லது godmother யாரும் இல்லை.

ஒரு இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த ஒருவர் அதிலிருந்து வெளியேறிய பின்னும் அவரது ஆளுமையின் மீதும் செயல்பாடுகள் மீதும் அந்த இயக்கம் சார்ந்த அடையாளத்தின் நிழல் ஒட்டியிருக்கும். அதைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் எதுவுமே செய்ய முடியாது. என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய மனசாட்சிதான் முக்கியம். நான் பதில் சொல்ல வேண்டியது அதற்குத்தான். இந்துத்துவப் பாடத்தைக் கேட்க முடியாமலும் மற்றவர்களுக்குச் சொல்ல முடியாமலும் போனதால்தான் நான் வெளியே வந்தேன். ஜெயமோகன் பரிந்துரைக்கிறார் என்பதற்காக அந்த முயற்சியில் இறங்க என்னால் முடியாது. ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் எனக்கும் இருந்த தொடர்பு பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுத உத்தேசித்திருப்பதால் இங்கே இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கும்போதே நான் காலச்சுவடு, சுபமங்களா, இந்தியா டுடே ஆகிய இதழ்களில் விமர்சனம்/மதிப்புரை எழுதியிருக்கிறேன். ஆனால் என் பார்வையை ஆர்.எஸ்.எஸ். பார்வை என்று யாரும் சொன்னது கிடையாது. ஜெயமோகன் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் விமர்சனம் எழுதத் தொடங்கியதும் வங்கிக் கட்டிக்கொண்ட வசை அவர் ஆர்.எஸ்.எஸ். பார்வையில் எழுதுகிறார் என்பதுதான். இது ஏன் நடந்தது என்பதை ஜெயமோகன் யோசிக்க வேண்டும்.

கண்ணன் எழுப்பியிருந்த பல கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத ஜெயமோகன் திடாரென்று விவாதங்கள் கண்டு சலிப்படையும் அவதாரம் எடுக்கிறார். சுந்தர ராமசாமியின் கடிதங்கள் பற்றி மட்டும் பெரிய மனது பண்ணி சில வார்த்தைகளை உதிர்க்கிறார். அதிலும் தவறான/பொய்யான தகவல்களை அளிக்கிறார். சு.ரா. சொல் புதிதுக்கு எழுதிய கடிதங்களை நானும் படித்திருக்கிறேன். டாலர் பற்றிய தகவலுக்குத் திருத்தம் போடும்படி கேட்டுக்கொண்ட சு.ரா., தன்னைப் பற்றிய செய்தியில் தன் புகைப்படத்தைப் போட்டிருக்கலாமே என்று மிக இலகுவான, இறுக்கமற்ற தொனியில் எழுதியிருந்தார். சொல் புதிதில் தொடர்ந்து அவரைப் பற்றி வந்துகொண்டிருக்கும் அவதூறுகள் பற்றித் தீவிரமாக எழுதியிருந்தார். அதையெல்லாம் விட்டுவிட்டு அவரது கடிதங்களைக் கேலிக்கூத்தாகச் சித்தரிக்கும் தந்திரத்திற்கு உதவியாக இந்த வரிகளை மட்டும் தன் போக்கில் மேற்கோள் காட்டுவது நியாயமல்ல. சொல்புதிதுக்கும் சுராவுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து முழுமையாகப் பதிவானால் உண்மை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.

நான் பார்த்த ராமசாமி வேறு; இப்போதிருக்கும் ராமசாமி வேறு என்பதெல்லாம் அரசியல்வாதியின் பேச்சு. தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு அமைப்பை/கொள்கையை/ ஆளுமையை விட்டு விலகிய பிறகு உதிர்க்கப்படும் கிளிப்பேச்சு. ஜெயமோகன் மட்டுமல்ல; காலச்சுவடுடன் (கண்ணனுடன் என்று வாசிக்கவும்) விலகல் ஏற்பட்ட பலரும் இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் காலச்சுவடின் மறுவருகைக்கு முன்னும் பின்னும் சு.ராவோடு மாற்றமில்லாத உறவைக் கொண்டுள்ள முக்கியமான ஆளுமைகளும் இருக்கிறார்கள். அவர்கள் கண்ணுக்கு இவர் வேறு ராமசாமியாகத் தெரியவில்லை. ஜெயமோகன் போன்ற சிலரது ஞானக்கண்களுக்கு மட்டுமே தெரியும் இந்த மாற்றத்தை யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும். சு.ராவுக்கும் ஜெயமோகனுக்கும் இருந்த உறவு பற்றியும் விலகல் பற்றியும் நன்கு அறிந்தவர்களில் ஒருவன் என்ற முறையில் அந்த ஞானக்கண் தரிசனத்தை நானும் என் அனுபவத்தின் அடிப்படையில் பரிசீலித்துப் பார்க்க முடியும். எதிர்வினையாற்றவும் முடியும்.

உறவு என்பதும் விலகல் என்பதும் வாழ்வின் இயல்பான மாற்றங்கள். இதற்காகப் புலம்புவதைக் காட்டிலும் அதன் காரணங்களை முன்வைத்து நேர்மையாக விவாதிப்பதும் அந்த விவாதத்தின் வெளிச்சத்தில் நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்துகொள்வதுமே முக்கியம். சு.ராவுடன் தனக்கு ஏற்பட்ட பல நெருடல்களை ஜெயமோகன் என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். கருத்து வேற்றுமைகளையும் விமர்சனங்களையும் முன்வைக்கும் விதம், கருத்துவேற்றுமைகளுக்கும் உறவுகளுக்கும் இருக்க வேண்டிய தொடர்பு ஆகியவற்றைப் பற்றியெல்லாம் நான் அவரோடு விவாதித்திருக்கிறேன். உறவுகளில் சுயவிமர்சனமற்ற அணுகுமுறையே ஜெயமோகனின் பிரச்சினை. நண்பர்கள் கூறும் யோசனைகளை அறிவு தளத்தில் ஏற்றாலும் அனுபவதளத்தில் நடைமுறைப்படுத்த முடியாத தனது பலவீனம் தனது மிகப்பெரிய பிரச்சினை என்பதை அவரே பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். மூத்த ஆளுமைகளுக்கும் அவருக்கும் ஏற்படும் உறவுச் சிக்கல்கள் இதுபோன்ற பல பலவீனங்களின் பின்னணியில் விளங்கிக்கொள்ள வேண்டியவை. மாறாக, நேற்றைய ராமசாமி, இன்றைய ராமசாமி என்று ஒற்றைபடைத் தன்மையிலான வகைப்படுத்தல்கள் எந்தப் புரிதலுக்கும் நம்மை இட்டுச் செல்லாது.

மன்னிப்புக் கேட்க வேண்டிய அளவுக்கு விபரீதமான ஆபாசப் பிரதி ஒன்றை ‘கவனக்குறைவாகப் ‘ பிரசுரித்துவிட்டு அதன் பின்விளைவுகளை எதிர்கொள்ளாமல் ‘தலை போகிற வேலை ‘ இருப்பதாகச் சொல்லி ஒதுங்குவது எந்த அறத்தில் சேர்த்தி ? நாச்சார் மட விவகாரங்கள் என்ற அருவருப்பூட்டும் பிரதி பிரசுரிக்கப்பட்டிராவிட்டால் இந்தப் பிரச்சினையே இருந்திருக்காதே. வேலைவெட்டி இல்லாமல் அதை எழுதியதும் பிரசுரித்ததும் யார் ? இந்த ரத்தத்தில் எனக்குப் பங்கில்லை, இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என்று ஒதுங்குபவர்கள்தானே ?

என்றாலும், ஜெயமோகனும் சதக்கத்துல்லாவும் மன்னிப்புக் கேட்டுவிட்டதாலும், நான் எழுப்பிய கேள்விகளையும் இலக்கியப்பிரதி – நிஜ மனிதர்கள் தொடர்பான வாதங்களையும் எதிர்கொள்ளாமல் வே.ச.கு. ஒதுங்கிவிட்டதாலும், ஜெயமோகனின் கடிதத்தில் வெளிப்படையாகத் தெரியும் இயலாமையினாலும், பிழைப்பு மற்றும் படைப்பு சார்ந்து எனக்கும் பல வேலைகள் இருப்பதாலும் நானும் இத்தோடு இந்த விவாதத்தை முடித்துக்கொள்கிறேன்.

அரவிந்தன்


சிவகுமாரின் கட்டுரைக்கான எதிர்வினை

மறு பரிசீலனைக்கு முட்டுக்கட்டையாகும் ஆராதனை

அரவிந்தன்

திண்ணை இதழில் திரு. சிவகுமார் அவர்கள் எனக்கு எழுதிய அன்பான மடல் கண்டேன். அது பற்றிய எதிர்வினைகளைப் பதிவுசெய்வதற்கு முன் ஒரு விஷயத்தைக் கூறிவிட விரும்புகிறேன். நக்கல், நையாண்டி கலந்த சிவகுமாரின் சரளமான எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது. பல இடங்களில் அவரது நகைச்சுவை ததும்பும் வரிகளை மிகவும் ரசித்துப் படித்தேன். ஆனால் இத்தனை திறமையும் விழலுக்கு இறைத்த நீராய்ப் போனது கண்டு வருத்தம் அடைந்தேன்.

ஜெயகாந்தனைப் பற்றி எழுத முனையும்போதே அவரது தீவிர வாசகர்களிடம் நான் வசமாக வாங்கிக்கட்டிக்கொள்வேன் என்பதை எதிர்பார்த்தேன். சென்ற இதழில் குத்தலும் கேலியுமாக மத்தளராயன். இந்த இதழில் நக்கலும் நையாண்டியுமாக சிவகுமார். இது தவிர காலச்சுவடுக்கும் ஜெ.கா. அபிமானிகள் பலரிடமிருந்து கடிதங்கள். இதற்கு மறுபுறம் பனிரெண்டாம் வகுப்பைத் தாண்டி வந்தவர்கள் – மன்னிக்கவும், ஜெயகாந்தனைத் தாண்டி வந்தவர்கள் – பலரிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்புக்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இவர்களில் 99 விழுக்காட்டினர் சமகால தீவிர இலக்கியப் பரப்பில் முக்கியமான எழுத்தாளர்களாகக் கருதப்படுபவர்கள். இவர்கள் என் கட்டுரையை வெகுவாகப் பாராட்டினார்கள். ஆனால் இவர்கள் இதையொட்டி கடிதமோ கட்டுரையோ எழுதவில்லை. இவர்களைப் பொறுததவரை ஜெயகாந்தனின் படைப்பு என்பது – தீவிர இலக்கிய அரங்கில் – ஒரு செத்த பாம்பு. ஜெயகாந்தனை ஏன் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொண்டு எழுதியிருக்கிறீர்கள் என்றுகூட சமகால படைப்பாளி ஒருவர் கேட்டார்.

சிவகுமார் ரொம்பவே சிரமப்பட்டு ஜெயகாந்தனைத் தூக்கி நிறுத்த முயல்கிறார். புதுமைப்பித்தனின் பலவீனங்கள், சுந்தர ராமசாமியின் மேற்கோள்கள் ஆகியவற்றையெல்லாம் அதற்குத் துணையாக சேர்த்துக்கொண்டிருக்கிறார். எத்தனை கதைகள் தேறும் என்பதை வைத்து ஒரு படைப்பாளியை எடைபோட முடியாது; ‘தேறாத ‘ கதைகள் கூட முக்கியமான கதைகளாக இருக்க முடியும் என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். எனவே பு.பியின் கதைகளில் எவ்வளவு தேறும் என்பதைப் பொறுக்கி எடுத்து (இதற்கு சு.ராவின் மதிப்பீட்டையும் துணைக்கழைத்து) ‘பு.பி. கிட்டேயே இவ்வளவு தா(ன்)ய்யா தேறும். ரொம்ப அலட்டிக்காத ‘ என்று சொல்லி ஜெயகாந்தனைக் காப்பாற்ற சிவக்குமார் முயல்கிறார். பு.பியின் எழுத்தில் காணப்படும் பக்குவம், படைப்புத்திறன், செறிவு, மொழி ஆளுமை, கூரிய நகைச்சுவை ஆகிய அம்சங்கள்தான் அவரை ஜெ.கா. போன்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. பு.பியின் தோல்வி பெற்ற கதைகளில்கூட இந்த அம்சங்களை உணர முடியும் என்பதே என் வாதம். பொன்னகரம் போன்ற அவரது ‘பிரச்சாரக் ‘ கதைகள் உள்பட பல கதைகளை வைத்துக்கொண்டு விரிவாக இதை விவாதிக்க முடியும்.

தவிர, பு.பியின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டி, சு.ராவின் வார்த்தைகளின் பின்புலத்தைப் புறக்கணித்து மேற்கோள் காட்டி, ஜெ.கா. கதைகளை நியாயப்படுத்திவிட முடியாது. பு.பியின் எழுத்துக்கள் பல குறைகளைக் கொண்டவைதாம். ஆனால் அவ்வளவையும் மீறி அவை ஜெ.கா. எழுத்தைவிட மேலானவை என்பதே என் கருத்து. தமிழ்ப் படைப்புலகம் பல விதங்களிலும் பு.பியை அர்த்தபூர்வமாகத் தாண்டி வந்துவிட்டது. ஆனால் அதை சாத்தியப்படுத்தியவர்களின் பட்டியலில் ஜெ.காவுக்கு இடமில்லை என்பதே என் முடிவு. ஜெ.காவை நான் பு.பியோடு மட்டும் ஒப்பிடவில்லை. லேவ் தல்ஸ்தோய் முதல் ஆதவன்வரை பல எழுத்தாளர்களோடு குறிப்பான உதாரணங்களுடன் உரிய காரணங்களுடன் ஒப்பிட்டிருக்கிறேன். இந்த ஒப்பீடுகளை விரிவாகப் பரிசீலிப்பதன் மூலம் என் பார்வையை சரியாக விளங்கிக்கொள்ள முடிவும் என்றே கருதுகிறேன்.

எளிய சூத்திரங்களின் மகிமை பற்றி சிவகுமார் எனக்குப் பாடம் எடுக்கிறார். ணி = விசி2 என்பது அவ்வளவு எளிய சூத்திரமல்ல என்பதை மட்டும் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். சிக்கல்கள் மிகுந்த வாழ்க்கையை எளிய சூத்திரங்களுக்குள் அடக்குவதன் மூலம் வாழ்வு பற்றிய புரிதலை நீர்த்துப்போகச் செய்கிறார் என்பதே ஜெ.கா. மீது நான் வைக்கும் விமர்சனம். எளிய சூத்திரங்கள், புளித்துப்போன வகை மாதிரி பாத்திரங்கள், நீதி போதனை, சத்தம் – இவற்றின் மூலம் செறிவான இலக்கியப் பிரதியை உருவாக்க முடியாது என்பதே என் பார்வை. ஜெ.காவிடத்தில் இந்த அம்சங்கள் காணப்படுவதால் தீவிர வாசகனுக்கு அவர் ஏமாற்றமளிக்கிறார் என்கிறேன் நான். ஜெயகாந்தனைத் தீவிரமாக மறுவாசிப்பு செய்பவர்களால் இதை உணர முடியும் என்று கருதுகிறேன்.

தல்ஸ்தோய், காம்யு, மார்க்வஸ் ஆகியோரைப் படித்த பிறகும் அசோகமித்திரனையும் மெளனியையும் புதுமைப்பித்தனையும் என்னால் படிக்க முடிகிறது. ஜெயகாந்தனைப் படிக்க முடியவில்லை. இது ஏன் என்று யோசிக்கிறேன். எனக்குத் தெரியவரும் காரணங்களை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதுகிறேன். ஜெயகாந்தனின் அபிமானிகள் இந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாற்றுவதற்கு முன்பு இக்கட்டுரையில் முன்வைக்கப்பட்ட பார்வையின் அடிப்படையில் ஜெயகாந்தனை மறுவாசிப்பு செய்துபார்க்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஊதாரித்தனமான வார்த்தைப் பிரயோகம் பற்றிக் கூறினால் ஒருபொருட்பன்மொழி என்கிறார் சிவகுமார். செவ்வியல் இலக்கியம் மற்றும் நீதிநெறி இலக்கியத்திற்கான அளவுகோல்களை நவீன உரைநடைக்கும் பொருத்திப்பார்க்கிறார். பண்டைய இலக்கியத்தில் ஒரு பொருளைச் சுட்டப் பல்வேறு வார்த்தைகளைக் கையாளும்போதும் ஒவ்வொரு வார்த்தையும் வெவ்வேறு அதிர்வுகளை எழுப்புகின்றன. சிவகுமார் உதாரணம் கொடுத்திருக்கும் வரிகளையே இதற்கும் உதாரணமாகச் சொல்லலாம். ஒருபொருட்பன்மொழி காலத்திலேயே ‘எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டனர் ‘ என்று எழுதிய கம்பனையும் பார்க்கிறோம். ‘புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை உள்ளிச் சென்றோர் பழியலர் ‘ (ஈயென இழித்தல் – புறநானூறு) என்று மிகச் சிக்கனமான சொற்களில் விஷயத்தைச் சொன்ன கவிஞர்களையும் பார்க்கிறோம். ஜெயகாந்தன் கொட்டும் வார்த்தைகள் என் வாசக உணர்வைத் துன்புறுத்துகின்றன. சொற்செட்டு என்பது நவீனத்துவ, பின்நவீனத்துவச் சூழலில் மிக முக்கியமான ஒரு அம்சமாகவே கருதப்படுகிறது.

ஜெயகாந்தனின் முதல் கதையிலிருந்து ஓரு வாக்கியத்தை எடுத்து விமர்சித்திருப்பதையும் சிவகுமார் கிண்டலடிக்கிறார். முதல் கதையில் மட்டுமல்ல, தொடர்ந்து அவர் அப்படித்தான் எழுதிவந்திருக்கிறார் என்றும் சொல்லியிருக்கிறேன். சிவகுமார் விரும்பினால் ஆயிரக்கணக்கான வரிகளைத் தொகுத்து அவருக்கு அனுப்புகிறேன் (ஒளி நகலுக்கான பெரும் செலவை அவர் ஏற்பார் என்று நம்புகிறேன்).

சு.ராவின் கூற்றை மேற்கோள் காட்டி ஜெ.காவின் மொழியை சிவகுமார் நியாயப்படுத்துகிறார். சு.ரா. சொல்லாவிட்டாலும் தமிழைத் தன் விருப்பம் போலப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமை ஜெயகாந்தனுக்கு இருக்கிறது. அந்தத் தமிழை விமர்சிக்கும் உரிமையும் எனக்கு இருக்கிறது.

ஜெ.கா. படைப்புகளின் மொத்தப் பார்வையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று (மீண்டும் சு.ராவை மேற்கோள் காட்டி) சிவகுமார் கூறுகிறார். நான் அவரது படைப்புகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டிருப்பது என் கட்டுரையை கவனமாகப் படித்தால் தெரியும். ஆனால் சிவகுமார் செய்வதுபோல ‘கலை மக்களுக்காகவே ‘ என்ற தட்டையான சூத்திரமாக ஜெயகாந்தனின் படைப்புப் பார்வையைச் சுருக்குவது அவரது படைப்புகளுக்கு நியாயம் செய்வதாகாது என்றே கருதுகிறேன். ஜெயகாந்தனை இப்படிச் சிறுமைப்படுத்தும் விருப்பம் சிவகுமாருக்கு இருக்கலாம். எனக்கு இல்லை.

படைப்பு பற்றிய மதிப்பீட்டை ‘காலத்தின் கையிலும் வாசகர் கையிலும் ‘ விட்டுவிடும்படி சிவகுமார் அறிவுரை வழங்குகிறார். அப்படியானால் யாரும் எதைப் பற்றியும் விமர்சனம்/மதிப்புரை எழுத வேண்டிய அவசியமே இல்லையே.

பிற்காலத்தில் நான் ‘திருந்தி ‘ ஜெ.காவின் மாண்புகளை ஏற்றுக்கொள்வேன் என்று நம்ப சிவகுமார் ஆசைப்படுகிறார். ஆனால் ஜெயகாந்தனின் அதி தீவிர தொண்டரடிப்பொடியாழ்வார்கள் ‘திருந்துவார்கள் ‘ என்ற நம்பிக்கை எனக்கு இப்போது இல்லை. மறுபரிசீலனை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்களிடம் விவாதிப்பது சாத்தியமல்ல. ஜெயகாந்தனை ஆராதிப்பவன் என்று சொன்னால் பெருமைப்படுபவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அபிமானிகளிடம் மறுபரிசீலனையை எப்படி எதிர்பார்க்க முடியும் ? அறிவார்த்தமான விவாதத்திற்கோ பரிசீலனைக்கோ ஆராதனையைவிடச் சிறந்த முட்டுக்கட்டை எதுவும் இருக்க முடியாது. காலச்சுவடில் என் கட்டுரையைப் படித்துவிட்டு இளம் வாசகர் ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அவர் தீவிரமான ஜெ.கா வாசகர். என் கட்டுரை அவரை மிகவும் யோசிக்கவைத்ததாகவும் ஜெ.கா. தொடர்பான தனது பிம்பங்களை உடைத்துவிட்டதாகவும் அவர் கூறினார். திறந்த மனத்துடன் படிக்கும், பரிசீலனைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளும் இதுபோன்ற வாசகர்களை முன்வைத்துதான் மதிப்புரைகளும் விமர்சனங்களும் எழுதப்படுகின்றன. ஆராதனை செய்பவர்களை முன்வைத்து அல்ல.

என்னை சு.ராவின் சிஷ்யனாகச் சித்தரிக்க சிவகுமார் மேற்கொள்ளும் முயற்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன. சு.ரா. என் மதிப்பிற்குரிய நண்பர் என்பதும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் பட்டியலில் இருப்பவர் என்பதும் உண்மைதான். ஆனால் இந்தப் பட்டியல் மாறாத ஒன்றல்ல. அதில் எந்த இலக்கிய ஆசிரியருக்கும் நிரந்தர இடம் எதுவும் கிடையாது. காரணம், நான் என் பார்வைகளையும் அளவுகோல்களையும் என் வாசிப்பு, விவாதம், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து மறுபரிசீலனைக்குட்படுத்திக்கொண்டே இருப்பவன். எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்ற விஷயத்தில் சிவகுமாரைப்போல 99 வருஷத்துக்குக் குத்தகை எதுவும் எடுத்துவைக்கவில்லை.

என் கட்டுரையில் உள்ள ஊதாரித்தனமான சில வரிகளை சிவகுமார் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த விஷயத்தில் அவரோடு முற்றிலும் உடன்படுகிறேன். ஜெயகாந்தன் வாசகர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதும்போது இது போன்ற விபத்துகள் நேர்ந்துவிடுகின்றன.

ஜெயகாந்தன் கதைகளில் தட்டையான தன்மை, மிகை, ஓயாத பேச்சு, நீதிபோதனை, வெகுஜன தமிழ் சினிமாவின் அடையாளங்கள், ஆழமின்மை என்று பல குறைபாடுகளை உரிய காரணங்கள், உதாரணங்களுடன் என் கட்டுரையில் நான் விளக்கியிருக்கிறேன். ஜெயகாந்தன் அபிமானிகள் அவற்றை உரிய முறையில் பரிசீலித்துவிட்டு எதிர்வினையாற்ற முன்வந்தால் விவாதம் உருப்படியாக மேலெழும்பிச் செல்லும். இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும்.

அரவிந்தன்


அன்புள்ள ஆசிரியருக்கு,

ஜோதிர்லதா கிரிஜாவின் கதையைப் படித்தேன். மதிப்புக்குரிய கதாசிரியை, தற்கொலையை ஒரு தீர்வாக, அல்லது மற்றவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வரும் உபாயமாக உபயோகித்திருப்பது வருத்தம் தருகிறது. தமிழ் சினிமாவில் தான் பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு முட்டுக்கட்டை போட தற்கொலை மிரட்டல் விடுவது வழக்கம். காதலர்கள் காதம் நிறைவேறாவிடில் தற்கொலை செய்வதும் சினிமாவிலும் , டிவியிலும் தினசரி பார்க்கிறோம். தற்கொலையை ப்படி கவனமில்லாமல், வீர்மாக, தியாகமாக, காதல் தோல்விக்குத் தீர்வாக என்றெல்லாம் உபயோகிப்பது பற்றி ஒரு தீவிரமான விவாதம் நடைபெற வேண்டும். னி தொலைக்காட்சி தொடர்களில் ஏ வி எம் நிறுவனம் தற்கொலையைத் தவிர்க்கும் என்று செய்தியை வாசித்தேன்.

ஆர் ரஃபீக்


ஆசிரியருக்கு,

சின்னக்கருப்பன் இடுக்கி அணை கோவில் பிரச்சினையையும், நர்மதைத் திட்டத்தினையும் குறித்து எழுதும் முன் இரண்டும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை யோசித்திருக்க வேண்டும். நர்மதை திட்டம் என்பது பெரிய அணைகள்,மத்திய அளவு அணைகள்,சிறு அணைகள், நீர்த்தேக்கங்கள் என பலவற்றைக் கொண்டது.இதனால் எத்தனைபேர் பாதிப்படைவர், அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசும்,மாநில அரசும் முறையான கணக்கெடுப்பினைச் செய்யவில்லை. ஒப்புக்கொண்ட படி நிவாரணத் தொகை, மாற்று நிலம் ஆகியவையும் பாதிப்புற்றவர் அனைவருக்கும் தரப்படவில்லை. இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள சஞ்சய் சங்கவி, அமிதா பவிஸ்கார் எழுதிய நூல்கள் உட்பட பல வற்றை நான் பரிந்துரைக்கமுடியும். www.narmda.org என்ற இணையத்தளம் மூலம் அவர் இது குறித்து அறிந்து கொள்ளலாம் இடுக்கியில் கோயில் பெயரால் ஒரு அரசியல் நடத்துபவர்கள் பல கோயில்கள் மூழ்க காரணமாகும் நர்மதை நதித்திட்டம் குறித்து போராட்டம் நடத்தவில்லை.

ஜெயகாந்தன் குறித்த விமர்சனக் கட்டுரையை நான் படிக்கவில்லை.முருகன், சிவக்குமார் கட்டுரை மூலம் பலவற்றை யூகிக்க முடிந்தது. அரவிந்தன் என்ற பெயரில் வேத சகாய குமார எழுதிய கதை குறித்து கடிதங்கள் எழுதிய அரவிந்தன் எழுதிய கட்டுரையா அது.அப்படியானால் அவரது ‘ஆதர்ச எழுத்தாளர் ‘ யார் என்பதை என்னால் இப்போது ஒரளவிற்கு யூகிக்க முடிகிறது.

K.ரவி ஸ்ரீநிவாஸ்


Series Navigation

author

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

Similar Posts