கடிதங்கள்

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

ஜூலை 24, 2003



ஆசிரியருக்கு,

சென்ற திண்ணை இதழின் பக்கங்களில் என்னைப்பற்றி ஒரு புயலே அடித்ததுபோன்ற உணர்வு. ஒரே இடத்தில் உருவாக்கப்பட்ட புயல்.பெரும்பாலும் வெட்டிக் கூச்சல். அவர்களுடைய அம்பு திரும்பி தாக்கியதன் பதற்றமே தெரிகிறது. ஒவ்வொரு வரிக்கும் விரிவாக பதிலளிக்க ஆரம்பித்தால் அதற்கே நேரம் சரியாக இருக்கும்.

**

காலச்சுவட்டின் அவதூறுப்பணிகளை அதன் பக்கங்களுக்கு சென்றே சாதாரண வாசகன் மதிப்பிட முடியும். தேவதேவனைப் பற்றிய அவதூறு எப்படி காலச்சுவடால் வெளியிடப்பட்டது என்பதை மட்டும் சொல்கிறேன் – ஓர் உதாரணத்துக்காக. தன் நாடகநூல் ஒன்றில் அவர் ‘அவரைவிட நான் நன்றாக அந்நாடகத்தை எழுதிவிடமுடியும் ‘ என்று சொல்லியிருந்தார். அந்தவரியை எடுத்துக் கொடுத்து அதற்கு மேல் என் நண்பர் செந்தூரம் ஜெகதீஷ் ‘ஜெயமோகனை காக்காபிடித்து நல்ல மதிப்புரை பெற சிலர் முயல்கிறார்கள் ‘ என்று வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னவரியை எடுத்துக் கொடுத்திருந்தார்கள்.

தேவதேவனைப்பற்றி தமிழிலக்கியம் அறிந்தவர்கள் அறிவார்கள். தன் பித்துக்குளித்தனமான உலகில் வாழும் கனவுஜீவிக்கவிஞர் அவர். எந்த வம்பிலும் அவர் தலைகாட்டியது இல்லை அலுவலகத்தில் கடன் வாங்கி கவிதைநூல் வெளியிடும் தனியாள். அவர் சுந்தர ராமசாமியை அங்கீகரிதது இல்லை என்பதற்காக அவரைப்பற்றி ‘காக்கா பிடிக்கும் சில்லறை ஆசாமி ‘ என்ற சித்திரத்தை உருவாக்கிக் காட்டுவதனால் தமிழிலக்கியத்துக்கு ஏற்படும் இழப்பு என்ன என்று யார் யோசித்தார்கள் ? காலச்சுவடின் பெருவாரியான வாசகர்கள் தேவதேவனின் ஒரு கவிதையைக்கூட படித்திராதவர்கள் என்றநிலையில் இதன் தாக்கம் எப்படிப்பட்டது ? அவமானம் என்பதெல்லாம் சுந்தர ராமசாமிக்கு மட்டும்தானா ? இம்மாதிரி தந்திரமாக செய்யப்படும் அவதூறு வன்முறை அல்ல, உயர்தர இதழியல் இல்லையா ? இதுகுறித்து மிகுந்த மனக்கொதிப்புடன் நான் அப்போது மனுஷ்யபுத்திரனுக்கு கடிதமும் எழுதினேன் .

இவ்வகை ‘புத்திசாலித்தனமான அவதூறை ‘ செய்தபிறகு ‘எங்கே ஆதாரம் ? ‘என்று கேட்கலாம்தான் . நாம் ஆதாரமும் காட்டமுடியாது. உண்மையைத்தானே [வெட்டி எடுத்து] போட்டார்கள்.! ‘தற்செயலாக ‘ இன்னொரு உண்மை பக்கத்தில் வந்துவிட்டது .என்னசெய்யமுடியும் ?

இத்தகைய அவதூறுக்கென எந்த அளவுக்கு கவனம் மிக்க உழைப்பு தேவை என யோசிக்கவேண்டும். இதற்கெனவே காலச்சுவடில் ஆள்வைத்து வேலைசெய்கிறார்கள்! இந்த மனநிலையை விட ஆபத்தான ஒன்று வேறு இல்லை. இவர்களே இப்போது நியாயம் பேசமுற்படுகிறார்கள், தாங்கள் பாதிக்கப்பட்டதாக உணரும்போது. இத்தனைக்கும் பிறகும் அந்த பாதையையே காலச்சுவடு பின்பற்றுகிறது, அதற்காக வாதிடுகிறது. நாங்கள் மன்னிப்புக்கோரியது எங்களுக்கு தெரியாமல்கூட எவரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்பதனால். அந்த திறந்த மனம் எப்போதுமே உள்ளது.

பிரேம் பேட்டிக்கு எதிராக சாரு நிவேதிதா எழுதிய கடிதத்தை அவருக்கு திருப்பிஅனுப்பி ‘விரிவாக எழுதி வாங்கி ‘ காலச்சுவடு பிரசுரித்தது .இதை நான் தனிப்பட்டமுறையில் உறுதியாக அறிவேன். திண்ணை இதையெல்லாம் தான் செய்திருக்கிறதா ?

*

தனக்கும் சுந்தர ராமசாமிக்கும் கண்ணனுக்கும் உள்ள உறவு குறித்து ராஜநாயகமே எழுதிய கடிதம் கைவசம் உள்ளது.

*

சுந்தர ராமசாமிக்கு இயல் விருது கிடைத்தபோது அதை வாழ்த்தி நாங்கள் ஒரு செய்தி போட்டோம். 1500 டாலர் என்பதை அமெரிக்க டாலர் மதிப்பில் போட்டுவிட்டோம் .அப்போது யாருமே சுட்டிக் காட்டவும் இல்லை. . ஒன்றரை வருடம் கழித்து அது மிகப்பெரிய அவதூறு என்றும், பொன்னீலனுக்கு வாழ்த்து தெரிவித்தபோது புகைப்படம் போட்டு தன் படத்தைபோடாமல் இருந்தது பெரிய அவமானம் என்றும் அவர் கடிதம் எழுதினார்.[நாங்கள் கோட்டோவியங்களையே போடமுடியும். புகைப்படங்கள்போட தொழில்நுட்பம் இல்லை. பொன்னீலன் படம் செய்தியுடனேயே இருந்தது] அக்கடிதத்தில் திருவனந்தபுரம் பல்கலைகழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர்களான நாச்சிமுத்து, நயினார் ஆகியோர்தொகுத்த நீலபத்மநாபன் விமரிசனத்தொகுப்பு நீலபத்மநாபனாலேயே தொகுக்கப்பட்டது பேராசிரியர்கள் ‘பினாமிகள் ‘ என்ற குற்றச்சாட்டு எந்த ஆதாரமும் இல்லாமல் தரப்பட்டிருந்தது. காலச்சுவடு பாணியில் அதைபிரசுரித்து நீலபத்மநாபனிடம் விளக்கம்கேட்டு அதையும் பிரசுரித்து பரபரப்பு ஊட்டியிருக்கலாம்.அதை நாங்கள் செய்யவில்லை. சுந்தரராமசாமி எங்கள் உழைப்பை கொச்சைப்படுத்தி எழுதியிருந்த அக்கடிதத்தைபிரசுரிக்கவும் விரும்பவில்லை.

**

நான் அறிந்த மதித்த சுந்தர ராமசாமி என்ற மனிதர் வேறு. அவரது எழுத்துக்கள்மீது எப்போதுமே விமரிசனத்தையே முன்வைத்துள்ளேன். ஆனால் அந்த ஆழமும் கம்பீரமும் கொண்ட மனிதருடனான என் உறவின் நினைவுகள் இன்றும் என் அந்தரங்கமான செல்வமாக மனதில் உள்ளன. என் ஆளுமையின் உருவாக்கத்தில் அவரது பங்கு குறித்து எப்போதுமே பெருமிதம் உண்டு. அவரை என் ஆசிரியர் இடத்திலேயே இன்றும் வைத்திருக்கிறேன். அவரது எழுத்து குறித்து விரிவான விமரிசனத்தை முன்வைக்கும் திராணியும் எனக்கு உண்டு. காலம் செல்ல செல்ல அவரது எழுத்துக்கள்பற்றி நான் முன்வைத்துவந்த விமரிசனம் வலிமைபெற்றே வருகிறது. அதேசமயம் இலக்கிய ஆளுமையாக அவரது பங்களிப்பு குறித்த மதிப்பும் வளர்ந்து வருகிறது. எந்த தருணத்திலும் எந்த விஷயத்திலும் என் கருத்தை மறைத்தோ மழுப்பியோ பூடகமாகவோ மறைமுக உத்திமூலமோ நான் சொன்னதில்லை, சொல்லப்போவதுமில்லை. இந்த உணர்வுகளை இப்போது அவரைச்சுற்றி நின்று கூச்சலிடும் சோட்டாக்களிடம் நான் விவாதிக்கமுடியாது. அதற்கு இலக்கியரீதியான குறைந்தபட்ச தகுதியை அவர்கள் எழுதி உருவாக்கட்டும் .

சுந்தர ராமசாமி இன்று பாகனால் பிச்சை எடுக்கவைக்கப்படும் கோயில்யானைபோல இருக்கிறார். அது பற்றிய ஆழமான வருத்தம் எனக்கு உண்டு. கடந்த சில வருடங்களாகவே என் மனப்பிம்பம் நொறுங்குவதன் ஆழமான வலியை அடைந்தும் வருகிறேன். என்ன் காரணங்கள் என என்னைவிட கண்ணனுக்கு தெரியும். அதைவிடா நான் அதைப்பற்றி பொதுவாக விவாதிக்கமாட்ட்டேன் என்றும் அவருக்கு தெரியும்.

***

அய்யனார் மனுஷ்யபுத்திரனையும் ரவிக்குமாரையும் காலச்சுவடு எப்படி பயன்படுத்தியது, பயன்படுத்துகிறது என ஆதாரம் தருகிறார். நான் இந்துத்துவ இயக்கங்களுடன் இருந்தது 20 வருடம் முன்பு. உறவுகளை முறித்து ,வெளிப்படையான கடும் விமரிசனங்கள் செய்து 15 வருடங்கள் ஆகின்றன. அவர் 2001 ஆண்டுவரைகூட ஆர் எஸ் எஸில் பொறுப்பில் இருந்த காலச்சுவடு ஆசிரியர் அரவிந்தனிடம் இந்துத்துவா பற்றிப் பாடம்கேட்கலாம்

**

இப்படியே ஒவ்வொன்றாக இழுத்துப்போட்டு விவாதிக்கலாம். அதற்கு அவசியமில்லை. என் நூல்களுக்கான தலைபோகிற வேலையில் இருக்கிறேன். காலச்சுவடு தன் பணியை தொடரட்டும். அதனால் அதன் பெரும்பணத்துடன் , அமைப்புபலத்துடன் முடிந்தால் ஜெயமோகன் என்ற படைப்பாளியை இல்லாமலாக்கிப் பார்க்கட்டும். இது இப்படியே முடிவின்றி போகும். நான் நிறுத்திக் கொள்கிறேன்.

***

ரவிசீனிவாஸ் ‘புத்திசாலித்தனமாக ‘ பேசியிருப்பதை வியக்கிறேன். நான் மேற்கோள்காட்டியிருக்கிறேன். பிற சிந்தனைகளை அறிந்துகொள்வதுவேறு, சிரமேற்கொண்டு அவை மட்டுமே ‘உண்மைகள் ‘ என எண்ணுவதுவேறு. நான் புறக்கருத்துக்களை ஒட்டி அசலாக சிந்திக்கமுயன்றிருக்கிறேன். தளையசிங்கம் கட்டுரை அதற்கு சான்று . அசலான சிந்தனை அதற்கே உரிய தயக்கங்கள், இடைவெளிகள், சிக்கல்களுடன்தான் இருக்கும். ரவிசீனிவாஸ் இக்கட்டுரையிலேயே என் சுயமான் பார்வைக்கு ஆதாரம் தருகிறார். ஒன்றைஅமெரிக்காவிலோ வேறெங்கோ அறிவியல்கதை என கருதினால் அது எனக்கு ஏன் நிபந்தனையாக வேண்டும். அவர்களை மீறி சிந்திக்க எனக்கு லைசன்ஸ் தரவேண்டியவர் யார் ? கட்டுரையில் என் பார்வையை திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறேன்.. அதை நான் என் வாசிப்பால் அடைந்தேன்.

ஒரு அசல் பார்வையை அதன் இடைவெளிகளைச் சுட்டி மட்டுமே மறுக்கமுடியும் ‘சரியான பார்வையை ‘ பொறுக்கி மேற்கோள்காட்டியல்ல என்பதை இவருக்குப் புரியவைக்க நான் இனி என்ன செய்யவேண்டும்!

சித்தரிப்பின் சுருக்கமான புறவயத்தன்மையில், வரிகளுக்கிடையே அர்த்தபூர்வ இடைவெளிவிடுவதில் சுஜாதாவின் நடையின்பாதிப்பை இன்றைய படைப்பாளிகளிடம் காணமுடியும் என்பது ஒரு அவதானிப்பு. எஸ் ராமகிருஷ்ணன், யூமா வாசுகி, அழகிய பெரியவன் என பட்டியலையும் தர முடியும். வரிகளை எடுத்துக்காட்டி உதாரணம் தர முடியும். அது தனி கட்டுரை. ஆனால் அதை விவாதிக்கவே முடியும். விதண்டாவாதம் செய்யமுடியாது. நான் பத்துபேர் பட்டியலை கொடுத்தால் எந்த போலீஸ்காரனும் வேறு பத்துபேர் பட்டியலை அளிக்க முடியும். அந்த விவாதத்துக்கு முடிவே இல்லை.

என் தேர்வில் உள்ளவர்கள்தான் என் எழுத்தாளர்கள், தமிழில் எழுதும் அத்தனைபேரையும் படித்து அவர்கள் அனைவரையும் பற்றிபேசமுடியாது.

***

மாலன் கதைகள் பற்றி.

மாலன்மீதான என் கவனம் விடுபட்டு பல வருடங்களாகின்றன. காரணம் அவர் பிரபல இதழ்களில் அவற்றின் தேவைக்கு ஏற்ப எழுதிய கதைகள். குறிப்பிட்ட அறிவியல் கதைகளை நான் படிக்கவில்லை. வருந்துகிறேன். நான் எழுதியது தமிழ் அறிவியல்கதைகளைப்பற்றிய முழுமையான அவதானிப்பு அல்ல. அப்படி முழுமையான ஆய்வில் கூட விடுபடுதல்கள் நிகழக்கூடிய சூழல்தான் இங்குள்ளது. அனைவரும் சேர்ந்துபேசும் பொதுத்தளமென இங்கு ஏதும் இல்லை. மாலன் கதைகளை சிலநாட்களுக்குள் படிப்பேன் என உறுதிச்சொல்கிறேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

**

இந்த தகர டப்பா சந்தடியில் மெளனி குறித்த என் கட்டுரை கவனம் பெறாது போனது குறித்து வருத்தமே.

ஜெயமோகன்


ஜூலை 21, 2003

கடிதங்கள் ஜுலை 17, 2003 என்ற தலைப்பில் திண்ணை வெளியிட்டுள்ள காலச்சுவடு ஆசிரியர் கண்ணனின் கடிதத்திற்கு திண்ணைக்குழு அளித்துள்ள குறிப்பில் இரண்டு எனும் எண் கொண்டப் பகுதியின் கடைசியில் கீழ்கண்ட வாக்கியங்கள் இருக்கின்றன:

‘(ஒரு ஆசிரியர்) இரண்டு ஏடுகளுக்கு கடிதங்களை அனுப்பும் போது சிறு மாறுதல்களைச் செய்யவோ செய்ய அனுமதிப்பதோ ஆசிரியரின் உரிமை. நாஞ்சில் நாடன் இது பற்றி கருத்து ஏதும் கூறவில்லை ‘.

இந்த இரண்டு வாக்கியங்கள் கூறும் கருத்துக்களையும் நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் இவற்றை அடுத்து வரும் மூன்றாவது வாக்கியம், ‘நாஞ்சில் நாடன் போன்ற மதிப்பிற்குரிய எழுத்தாளரின் கடிதத்தில் அவர் அனுமதியின்றி திருத்தங்களை எவரும் செய்ய மாட்டார்கள் ‘ என்பது. இக்கருத்துக்களை நான் முற்றாக மறுக்கிறேன்.

‘மதிப்பிற்குரிய ‘ எழுத்தாளர்களிடம் பிற எழுத்தாளர்கள் கொண்டிருக்கும் மதிப்பால் அவர்களுக்கு எதிராக தவறு எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற திண்ணையின் முடிவு தமிழ்ச்சூழலுடன் அவர்கள் கொண்டிருக்கும்

இடைவெளியையும், ஒரு நெருக்கடியான நேரத்தில் யதார்த்தத்தின் கிடப்புத் தெரியாமல் சம்பிரதாயமான கற்பனைகளைத் தெரிவிப்பதுமாக இருக்கிறது.

மதிப்புக்கொண்ட எழுத்தாளர்கள், பிற எழுத்தாளர்களிடமிருந்து எந்த அடிப்படை மரியாதையையும் நம்பி எதிர்பார்க்க முடியாது என்பதுதான் இன்றையத் தமிழ்ச்சூழல். எனது இந்த மதிப்பீட்டை நாஞ்சில் நாடன் முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்வார் என்பதுதான் என் திடமான நம்பிக்கை.

நாஞ்சில் நாடன் தன் எழுத்து அனுமதியுடன் திருத்தப்பட்டதா அல்லது அனுமதியின்றித் திருத்தப்பட்டதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

திண்ணை போல் தமிழ்ச்சூழல் சார்ந்து கற்பனையான மிதப்புக் கொண்டிருப்பவர்கள் இன்றைய நிலையை அறிய வேண்டும்.

சுந்தர ராமசாமி

சான்டா குரூஸ், கலிபோஃர்னியா.


‘எனக்கு வரதட்சணையே வேண்டாம். உங்கள் பெண்ணை மட்டும் கொடுங்கள்’ என்று வேலையில்லாத ஓர் ஏழை வாலிபன் கேட்டால், எத்தனைப் பணக்காரப் பெற்றோர் தம் பெண்ணை அவனுக்குக் கொடுக்க முன் வருவார்கள் ? வரதட்சணையை எதிர்க்கும் பெண்களில் எத்தனைப்பேர் இப்படிப்பட்ட ஓர் ணைத் திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பார்கள் ?

ஏழைகளுக்குப் பெண் கொடுக்க மறுக்கும் பணக்காரப் பெற்றோர்களுக்கு எதிராக ஏன் சட்டங்கள் எதுவும் இல்லை ?

பெண்கள் நல்ல இடத்தில் வாழ்க்கைப் படவும் வேண்டும், அதே நேரத்தில் அதற்குக் கொடுக்கும் விலையும் குறைவாக இருக்க வேண்டும் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் ? (வரதட்சணை வாங்குவது சரி என்று வாதிடுவது என் நோக்கமல்ல)

தொழில்கள் பெருகி, எல்லோருக்கும் வேலை வாய்ப்புகள் நிறைந்து, பெற்றோர்கள் பிள்ளைகளையும், பெண்கள் கணவர்களையும் எதிர்பார்த்து வாழும் அவல நிலை மாறினாலொழிய வரதட்சணைப் பிரச்சினை

தீரப்போவதில்லை.

பாலா


வரவர திண்ணை குஸ்தி மைதானம் ஆகிவருகிறது. சண்டைகள் மேல் வருகிற ஆரம்ப ஈர்ப்பும் வேடிக்கை பார்க்கிற சுவாரசியமும்போய் அலுப்பு வருகிறது. அவரவர் பத்திரிகை அல்லது கோர்ட் மூலமாக தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்களுக்கு இடம் கொடுத்து திண்ணை இன்னொரு வம்பு பத்திரிகை ஆகிவிடப்போகிறது. தமிழ் இதழ்களின் வம்பையும் கிசுகிசுவையும் கண்டு ஒதுங்கி அமெரிக்க திண்ணை பக்கம் வந்தால் இங்கேயும் அதுதானா. குஸ்திகளுக்குத் தருகிற இடத்தில் இலக்கியத்தையும் வம்புகளில் அக்கறை இல்லாத வாசகர்களையும் இழந்துவிடாமல் இருங்கள்.

– சேகரன்


திரு. ஜெயபாரதன் அவர்களுடைய தமிழ் அறிவியல் இலக்கியப்பணியை பாராட்டி அவர்களுக்கு ‘திண்ணை ‘ மூலமாக ஒரு பாராட்டுக்கடிதம்.

இ.பரமசிவன்.

அன்புள்ள ஜெயபாரதன் அவர்களுக்கு

திண்ணைஇதழில் தாங்கள் எழுதியிருந்த ‘கலீலியொ ‘பற்றிய அறிவியல் கட்டுரை மிகவும் விஷயம் செறிந்ததாகவும் அற்புதமாயும் இருந்தது.உங்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுகள். ‘ E pur se move ‘ என்று அவர் வாய் முணு முணுத்துக் கொண்டேயிருந்ததாக கல்லூரியில் ஆங்கிலப்பாடத்தில் நான் படித்தது (book : ‘ideas that moved the world ‘ by Horace Pluncket) இப்போதும் நினைவுக்கு வருகிறது.அடக்குமுறையாளர்களின் துன்புறுத்துதலுக்காக

பூமியை சூரியன் சுற்றுவதாக ஒப்புக்கொண்டபோதும் ‘இல்லை அது (பூமி) தான் சுற்றுகிறது ‘ என்று முணு முணுத்துக்கொள்வதாக அந்த கட்டுரைஆசிரியர் முடிப்பார்.நீங்களும் அதைப்பற்றி குறிப்பிட்டிருந்தது எனக்கு மிகவும் ரசனை மிக்கதாக இருந்தது.திண்ணை இதழில் ‘ஒரு பட்டாம்பூச்சியிலிருந்து பிரபஞ்சங்கள் வரை.. ‘ (butter-fly effects and cosmological quantum chaos) என்ற எனது அறிவியல் கட்டுரையில் ஹெய்சன் பர்க்கின் ‘நிச்சயமற்ற தன்மை ‘ கோட்பாடு எப்படி ஒரு ‘குளறுபடியியல் விஞ்ஞானத்துக்கு ‘ (science of chaos) வித்தூன்றியிருக்கிறது என்பதை தொட்டுக்காட்டியுள்ளேன். ‘ஸ்டாஃபன் ஹாக்கிங் ‘ பற்றி நீங்கள் எழுதியிருந்த மிக அற்புதமான இன்னொரு கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்த வெப்ப இயக்கவியல் ஒழுங்கீனம் (thermo dynamic entropy) குளறுபடியியலின் இன்னொரு பக்கம் என்று சொல்லலாம்.டாக்டர் பென்ரோஸ் பிரபஞ்சத்தில் கருந்துளையை ‘பிரபஞ்சத்தின் மூடு மந்திரம் ‘ (cosmic censorship) என்று தனது ‘தனிமைப்பட்டுப்போன ஒற்றையக்கோட்பாடு ‘ (theory of singularity) மூலம் நிறுவமுயன்றார்.ஆனால் ஹாக்கிங் தனது ‘ஹாக்கிங் விளைவுகள் ‘ (hawking effects) கோட்பாட்டின் மூலம் கருந்துளையின் ‘கதிர் வீச்சின் அளவைப்பாடு ‘(quantum emision of black hole) பற்றி சமன்பாடுகள் நிறுவியிருக்கிறார்.

உங்கள் கட்டுரைகள் வாரந்தோறும் விஞ்ஞான சிந்தனயாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.இந்த உங்கள் பணி தொடர்ந்து கொண்டேயிருக்க எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

உங்கள் கட்டுரைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

வாழ்த்துக்களுடன்

இப்படிக்கு

இ.பரமசிவன்


Series Navigation

author

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

Similar Posts