தண்ணீர்

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

தொ. பரமசிவன்


தமிழ்நாடு நிலநடுக்கோட்டை ஒட்டிய வெப்பமண்டலப் பகுதியைச் சேர்ந்ததாகும். எனவே நீர் குறித்த நம்பிக்கைகளும் அவற்றின் வெளிப்பாடுகளும் தமிழ்ச் சமூகத்தில் நிறையவே காணப்படுகின்றன. இனிமை, எளிதில் புழங்கும் தன்மை என இரண்டு பண்புகள் நீருக்கு உண்டு. எனவே ‘தமிழ் ‘ என்னும் மொழிப் பெயருக்கு விளக்கம் தரவந்தவர்கள், ‘இனிமையும், நீர்மையும் தமிழ் எனல் ஆகும் ‘ எனக் குறிப்பிட்டனர். குளிர்ச்சியினை உடையது என்பதனால் நீரைத் ‘தண்ணீர் ‘ என்றே தமிழர்கள் வழங்கி வருகின்றனர். நீரினால் உடலைத் தூய்மை செய்வதனை குளிர்த்தல் (உடலைக் குளிர்ச்சி செய்தல்) என்றும் குறித்தனர். இது வெப்ப மண்டலத்து மக்களின் நீர் பற்றிய வெளிப்பாடு ஆகும்.

நீர் என்பது வானத்திலிருந்து வருவது என்பதனால் அதனை ‘அமிழ்தம் ‘ என்றே வள்ளுவர் குறிப்பிடுவார். நீர்நிலைகளுக்குத் தமிழர்கள் வழங்கிவந்த பெயர்கள் பல. சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை ‘குளம் ‘ என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை ‘ஊருணி ‘ எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை ‘ஏரி ‘ என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை ‘ஏந்தல் ‘ என்றும், கண்ணாறுகளை உடையது ‘கண்மாய் ‘ என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர்.

மலைக்காடுகளில் உள்ள சுனைகளில் ‘சூர்மகள் ‘ ‘அரமகள் ‘ என்றும் அணங்குகள் (மோகினிகள்) வாழ்கின்றனர் என்பது பழைய நம்பிக்கை. அதுபோலவே தெய்வங்களின் இடப்பெயர்ச்சிக்கும் நீர் ஓர் ஊடகமாக அமைகின்றது என்பதும் ஒரு நம்பிக்கையாகும். விழாக்காலங்களில் சாமியாடுபவர்களின் தலையில் ஏற்படும் நீர் கரகத்துக்குள் சாமியின் அருளாற்றல் கலந்திருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

நிலத்துக்கும் நீருக்கும் உள்ள உறவு பிரிக்கமுடியாது. நீரின் சுவை அது பிறக்கும் நிலத்தால் அமையும். நிலத்தால் திரிந்துபோன நீரின் சுவையை மேம்படுத்தத் தமிழர்கள் நெல்லியினை ஒரு மருந்தாகப் பயன்படுத்தினர். கிணற்று நீர் உவராக இருந்தால் அதனுள் நெல்லி மரத்தின் வேர்களைப் போட்டுவைப்பதும் ஊருணிக் கரைகளிலே நெல்லிமரங்களை நட்டுவைத்து அதற்கு ‘நெல்லிக்காய் ஊருணி என்று பெயரிடுவதும் தமிழ் மக்களின் வழக்கம். நெல்லிக்காய் தின்று தண்ணீர் குடித்தால் இனிப்புச்சுவை தெரியும். இச்செய்தி சங்க இலக்கியத்தில் ஓர் உவமையாகவும் எடுத்தாளப்பட்டுள்ளது.

நீரின் தூய்மையினைப் பேணுவதிலும் தமிழர்கள் கருத்துச் செலுத்தியுள்ளனர். நீருக்குள் மனிதக் கழிவு இடுதல் பெரும்பாவமாகக் கருதப்படுகிறது. ‘நீருக்குள் ஜலபானம் செய்த பாவத்தில் போகக்கடவாராகவும் ‘ என்று ஆவணங்கள் இதனைக் குறிக்கின்றன. சங்கரன்கோயிலுக்கு வடக்கே பனையூர் என்ற ஊரில் உள்ள சிவன் கோவில் இறைவனுக்கு அக்கோயிற் கல்வெட்டுக்களில் ‘நன்னீர்த்துறையுடைய நாயனார் ‘ என்ற பெயர் காணப்படுகிறது இயற்கையின் பேராற்றலில் ஆரியர் நெருப்பினை முதன்மைப்படுத் தியது போல திராவிடர் நீரினை முதன்மைப்படுத்தினர். தெய்வ வழிபாட்டுச் சடங்குகளைப் போலவே தமிழர்களின் வீட்டுச் சடங்கு களிலும் நீர் சிறப்பிடம் பெறுகின்றது. செம்பு நீரில் அல்லது குவளை நீரின் மேல் பூக்களைவியரு பூவிதழ்களைவியரு இட்டு வழிபடுவது எல்லாச் சாதியாரிடமும் காணப்படும் பழக்கம். நெடுஞ்சாலைகளில் கோடைக் காலத்தில் நீர்தூ பந்தல் அமைப்பது ஒரு அறச்செயலாகக் கருதப்பட்டது. சோழர் காலத்துக் கல்வெட்டொன்று தண்ணீர்ப் பந்தலில் தண்ணீர் இறைத்துத் தருபவனுக்கும், அதற்குக் கலமிடும் குயவனுக்கும், தண்ணீர் ஊற்றித் தருபவனுக்கும் மானியமளித்த செய்தியினைக் குறிப்பிடுகிறது.

இயற்கையல்லாத முறையில் நெருப்பில் சிக்கி இறந்தவர்கள் நீர் வேட்கையோடு இறப்பது இயல்பாகும். எனவே அவ்வாறு இறந்த வர்களின் நினைவாக நீர்ப் பந்தல் அமைப்பதும் தமிழர்களின் வழக்கம்.

மொகஞ்சொதராவில் அகழ்வாய்வில் காணப்பட்ட படிக்கட்டுக ளுடன் கூடிய குளம் நீர்ச்சடங்குகள் செய்வதற்குரிய இடமாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். நீராடுவதே ஒரு சடங்காகவும் தமிழர்களால் கருதப்பட்டதற்குப் பரிபாடல், திருப்பாவை போன்ற இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன.

நீரை மையமிட்ட பழமொழிகளும், மரபுத் தொடர்களும் தமிழர்களிடத்தே உண்டு. ‘நீரடித்து நீர் விலகாது ‘, ‘நீர்மேல் எழுத்து ‘ ‘தண்ணீருக்குள் தடம் பிடிப்பவன் ‘ என்பவை அவற்றுட்சில.

‘பண்பாட்டு அசைவுகள் ‘ நூலிலிருந்து சில கட்டுரைகள்

பண்பாட்டு அசைவுகள்

ஆசிரியர் : தொ. பரமசிவன்

பக்கம் : 200; விலை ரூ.80

காலச்சுவடு பதிப்பகம்

669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629 001

தமிழ்நாடு, இந்தியா

தொலைபேசி: 91-4652-222525, 223159

தொலைநகல் : 91-4652-231160

இ-மெயில்: kalachuvadu@vsnl.com

Series Navigation

author

பேராசிரியர் தொ.பரமசிவன்(தமிழ்த்துறை தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)

பேராசிரியர் தொ.பரமசிவன்(தமிழ்த்துறை தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)

Similar Posts