தமிழ்

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

தொ. பரமசிவன்


தமிழ் என்ற சொல் தமிழர்க்கு இனிமையானது. ‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் ‘ என்று பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது. தமிழ் என்ற சொல்லை இனிமை, பண்பாடு, அகப்பொருள் என்ற பொருள்களிலும் வழங்கியுள்ளனர்.

முரசு கட்டிலில் உறங்கிய மோசிகீரனார் என்ற புலவர்க்கு வேந்தன் ஒருவன் கவரி வீசிய செய்தியினைப் புறநானூற்றுப் பாடலால் அறிகிறோம். கண் விழித்த புலவர் ‘அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல் ‘ என்கிறார். தமிழ் எனும் சொல் இங்கு மொழி, கவிதை என்பனவற்றையும் தாண்டி, பலகலைப் புலமை என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. ‘தமிழ் கெழு கூடல் ‘ (புறம்) என்றவிடத்திலும் ‘கலைப்புலமை ‘ என்ற பொருளில் இது ஆளப் பட்டுள்ளது. கம்பன் ‘தமிழ் தழீஇய சாயலவர் ‘ என்னும் இடத்து, தமிழ் என்பதற்கு அழகும் மென்மையும் பொருளாகின்றன.

தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில் தமிழ் ‘பாட்டு ‘ என்னும் பொருளில் ஆளப்படுகிறது. ‘ஞான சம்பந்தன் சொன்ன தமிழ் இவை பத்துமே ‘, ‘மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ் ‘ என்பன எடுத்துக்காட்டுக்களாகும். முப்பது பாட்டுக்களாலான திருப்பாவையை ஆண்டாள் ‘தமிழ் மாலை ‘ என்றே குறிப்பது இங்கு எண்ணத்தகும். சிவநெறி தமிழ்நாட்டில் பிறந்தது எனக் குறிக்க வந்த சேக்கிழார், ‘அசைவில் செழும் தமிழ் வழக்கு ‘ எனச் சைவத் தையும், ‘அயல் வழக்கு ‘ எனச் சமணத்தையும் குறிப்பிடுகிறார். சமணமும் சைவமும் தமிழ் மொழியினைத் தெய்விக நிலை சார்ந்தன வாகக் கருதின.

ஆயும் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன் கேட்(டு)

ஏயும் புவனிக்கு இயம்பிய அருந்தமிழ்

என்பது யாப்பருங்கலம். பாணினிக்கு வடமொழியையும், அதற் கிணையான தமிழ் மொழியைக் குறுமுனியான அகத்தியர்க்கும் சிவபெருமான் அளித்தார் என்றும் சைவ இலக்கியங்கள் கூறும். ‘தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் ‘ என்று கம்பரும் இக்கருத்தினை ஏற்றுப் பேசுகிறார்.

வடமொழி ஆதிக்கமும் தெலுங்கு மொழி ஆதிக்கமும் அரசியல் அறிந்த தமிழர்களால் உணரப்பட்ட இடைக்காலத்தில் தமிழ் தெய்வத் தன்மை உடையதாகவும் தாயாகவும் கருதப்பட்டது. 15ஆம் நூற் றாண்டில் வில்லிபாரதத்திற்கு வரந்தருவார் தந்த பாயிரமும் 17ஆம் நூற்றாண்டில் எழுந்த தமிழ்விடுதூதும் இதை உணர்த்தும். அதே காலத்தில் ‘தலைப் பாவலர் தீஞ்சுவைக் கனியும் தண் தேன் நறையும் வடித்தெடுத்த சாரம் கனிந்தூற்றிருந்த பசுந்தமிழ் ‘ முருகக் கடவுளின் திருவாயில் மணக்கிறது என்பர் குமரகுருபரர். 19ஆம் நூற்றாண்டில் மனோன்மணியம் சுந்தரனார் காலந்தொட்டுத் ‘தமிழ் ‘ அரசியல், சமூக, பண்பாட்டு அளவில் ஒரு மந்திரச் சொல் லாகவே தொழிற்படுகிறது.

‘தெளிளமுதின் மேலான முத்திக் கனியே என் முத்தமிழே ‘ என்று தமிழை முத்தி தரும் பொருளாகவும் தமிழ்விடுதூது குறிப்பிடுவது இங்கு உணரத்தகும். இந்த உணர்வினை உள்வாங்கிக்கொண்டு, சமூக நீதிக்குப் போராடிய பாரதிதாசன் தமிழைத் தாயாகவும், தெய்வமாகவும், போராட்டக் கருவியாகவும் கொண்டது தமிழ் நாடு அறிந்த செய்தி.

நாட்டார் வழக்காறுகளில் தமிழ் எனும் சொல், செம்மையாகப் பேசப்படும் மொழியினை உணர்த்துகிறது. மன்றங்களிலும் வழக்காடும் இடங்களிலும் பேசப்படும் மொழியினை அச்சொல் குறித்திருக்கிறது.

தங்கத் தமிழ் பேச உங்க

தாய் மாமன் வருவாங்க

என்பது தாலாட்டு.

தங்கத் தமிழ் அடியாம்

தாசில்தார் கச்சேரியாம்

என்பது ஒப்பாரிப் பாடல் வரி.

குழாயடி, கிணற்றடி என்பது போலத் தமிழடி என்பது ஊர் மன்றத்தைக் குறிக்கும்.

தமிழ், தமிழன் ஆகிய சொற்களை ஊர்ப் பெயராகவும், மக்கட் பெயராகவும் ஏராளமாக இட்டு வழங்கியிருக்கிறார்கள். நெல்லை மாவட்டம் ஆலங்குளத்துக்கருகில் ‘தமிழூர் ‘ என்ற ஊரும், நாங்கு நேரிக்கு அருகில் ‘தமிழாக்குறிச்சி ‘ என்ற ஊரும் அமைந்துள்ளன. அருப்புக்கோட்டைக்கருகில் ‘தமிழ்ப்பாடி ‘ என்ற ஊரும் உள்ளது. கல்வெட்டுக்களில் ‘தமிழன் ‘, ‘தமிழதரையன் ‘ ஆகிய பெயர்களைப் பல இடங்களில் காண்கிறோம்.

முதலாம் ஆதித்த சோழன் தனது வெற்றிக்குதவிய படைத் தலைவன் ஒருவனுக்குச் ‘செம்பியன் தமிழவேள் ‘ என்ற பட்டங் கொடுத்தான். சில அதிகாரிகளும் தங்கள் பெயர்களில் தமிழை இணைத்துக் கொண்டனர். எடுத்துக்காட்டாக ‘இருஞ்சோணாட்டு தமிழவேள் தென்னவன் திருச்சாத்தன் ‘, ‘அருந்தமிழ் கேசரிச் சோழப் பெரியான் ‘, ‘சாணாட்டு வேளான் தமிழப் பெற்றான் ‘ ஆகியனவற்றைக் குறிப்பிடலாம் (கோயிலாங்குளம் சமணக் கோயில் கல்வெட்டு).

***

ஆசிரியர் : தொ. பரமசிவன்

பக்கம் : 200; விலை ரூ.80

காலச்சுவடு பதிப்பகம்

669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629 001

தமிழ்நாடு, இந்தியா

தொலைபேசி: 91-4652-222525, 223159

தொலைநகல் : 91-4652-231160

இ-மெயில்: kalachuvadu@vsnl.com

Series Navigation

author

பேராசிரியர் தொ.பரமசிவன்(தமிழ்த்துறை தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)

பேராசிரியர் தொ.பரமசிவன்(தமிழ்த்துறை தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)

Similar Posts