பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5

author
0 minutes, 6 seconds Read
This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


1970- களில்தான் சூழல்வரலாறு ஒரு தனித்துறையாக உருவானது.இயற்கைக்கும், மனிதசமூகதிற்கும் இடையே நிலவிய உறவை வரலாற்று ரீதியாக ஆயும் இத்துறையில் இந்திய சமூக அறிவியலாளர்கள் குறிப்பிட்த்தகுந்த பல ஆய்வுகளை செய்துள்ளனர். 1970 களில் அமெரிக்காவில் டொனால்ட் ஒர்ஸ்டர் dust bowl பற்றிய ஆய்வு,காலனியாதிக்கம் உலக அளவில் கொண்டுவந்த மாற்றங்கள் பல புதிய கோணங்களில் இயற்கையின் வரலாறும்,மானுடகுலத்தின் வரலாறும் பிணைந்துள்ளதை விளக்கின.உதாரணமாக தொழிற்புரட்சிக்கு முன்னர் வணிகம் என்ற பெயரில் தென் அமெரிக்காவில் காடுகள் அழிக்கப்பட்டு வணிக பயிர்களான புகையிலை,கரும்பு,பருத்தி போன்றவை பெருமளவில் அறிமுகப்ப்டுத்தப்பட்டன. இதற்கான உழைப்பிற்காக அடிமைகள் வணிகமும் நடைபெற்றது. காலனியாதிக்கம் அறிமுகம் செய்த பயிர்கள்,விலங்குகளும் பல்கி பெருகின. இவற்றின் விளைவாக உலகாளவிய அளவில் இயற்கை மாறுதலுக்குட்படுத்தப்பட்டது. காலனியாதிக்கம் என்பது இயற்கை மீதான ஆதிக்கமாகவும் இருந்தது.

இந்தியாவில் சூழல்வரலாறு குறித்து பலர் ஆய்ந்துள்ளனர். 1980களில் ராமச்சந்திர குஹா இப்போது உத்ரான்சல் மாநிலம் என்றழைக்கப்படும் பகுதியில் காடுகள்-காலனி ஆட்சி-மக்கள் உறவினை சூழல்வரலாறு கண்ணோட்டத்தில் ஆய்ந்தார். காலனி ஆட்சி காடுகள் குறித்து பல விதிகளை விதித்து, காடுகள் அரசின் உடமை என்ற வகையில் சட்டமியற்றியது. ரயில்வே பாதைகள் அமைக்க போன்ற பல காரணங்களுக்காக பெருமளவில் காடுகள் அழிக்கப்ட்டன, காலனியாதிக்கதிற்கத்தின் தேவைகளுக்காக காடுகள் மாற்றியமைக்கபட்டன. இது தவிர காடுகள் குறித்த நிர்வாகம் மக்கள் காடுகளை பயன்படுத்துவதை பல விதங்களில் கட்டுப்படுத்தியது. குஹா தன் ஆய்வுகளை முன் வைத்த போது காடுகள் குறித்த சட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல இயக்கங்களால் முன்வைக்கப்பட்டது. சிப்கோ இயக்கத்தின் புகழ் சர்வதேச அளவில் பரவியது. அரசின் சட்டங்கள், காலனியாதிக்கம் மக்கள்-காடுகள் குறித்த காலனியாதிக்க பார்வையின் அடிப்படையில் 1947க்கு பின்னரும் இருப்பதையும், வனவிலங்கு காப்பகங்கள் என்ற பெயரில் மக்கள் காடுகளில் வசிப்பது தடை செய்யப்படுவது,சில பகுதிகளில் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது போன்றவை குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்தன. SUBALTERN STUDIES வரலாற்று ஆய்வில் புதிய வாசல்களை திறந்து விட்டது. இத்தகைய பல காரணங்களால் சூழல்வரலாறுபுதிய கவனம் பெற்றது. மாதவ் காட்கில்,குஹா எழுதிய THIS FISSURED LAND என்ற நூல் இந்தியாவின் சூழல்வரலாறு குறித்த சமூகம்-வளர்ச்சி-சூழல்வரலாறு குறித்து ஒரு விவாததிற்கு அடிகோலியது. ஜாதிய அமைப்பினை சூழல்ரீதியாக இது நியாப்படுத்துகிறது என்ற விமர்சனம் எழுந்தது.அடுத்த பதிப்பில் தங்கள் பார்வையினை இவர்கள் தெளிவுபடுத்தினர்.

மகேஷ் ரங்கராஜன்,ரவி ராஜன்,சத்தியஜித் சிங், நந்தினி சுந்தர், அமிதா பவிஸ்கார், சிவராம கிருஷ்ணன், ஹரிப்பிரியா ரங்கன்,அகிலேஷ்வர் பதக் என்று ஒரு நீண்ட பட்டியல் தரக்கூடியளவிற்கு 20 ஆண்டுகளில் பல ஆய்வாளர்கள் இத்துறையில் முக்கியமான ஆய்வுகளை செய்துள்ளனர்.அமிதா நர்மதை திட்டம் குறித்த எதிர்ப்பியக்கத்தையும், சத்தியஜித் சிங் பெரும் அணைக்கட்டுக்கள் குறித்தும் ஆய்ந்தனர். பல ஆய்வுகள் காடுகள்-பழங்குடிகள் குறித்து செய்யப்பட்டன. இவை பல பகுதிகளில் காலனியாதிக்கம்-அரசு இயற்கை-சமூகம் குறித்த உறவுகளில் எற்படுத்திய பாதிப்புகளை ஆய்ந்தன. அப்பகுதி வரலாறுகளையும் புரிந்து கொள்ள இவை உதவுவதுடன், ஒட்டுமொத்தமாக காலனியாதிக்கம் குறித்த ஆய்வுகள் காணத்தவறிய குறிப்பான அம்சங்களை விளக்கின.

இதன் விளைவாக இயற்கைக்கும், மனிதசமூகதிற்கும் நிலவிய/நிலவும் உறவு குறித்த புரிதல் வளப்பட்டதுடன், காடுகள் குறித்த அரசின் கண்ணோட்டதிலும் மாறுதல் ஏறப்ட்டது. உதாரணமாக சிறு வனப்பொருட்களை பழங்குடிகள் பயன்படுத்துவது பல பகுதிகளில் அனுமதிக்கப்பட்டது. காட்டுப்பகுதிகள் மக்கள் ஒத்துழைப்புடன் மட்டுமே சிறப்பாக நிர்வகிக்பட முடியும் என்பது ஒரளவேனும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

சூழல்வரலாறு,சூழல்அரசியல் இரண்டும் தொடர்புடையவை.ஒன்றின் ஆய்வுகள் இன்னொன்றை வளப்படுத்தும் என்ற அளவில் உள்ளன. அதே சமயம் சூழல்வரலாற்று ஆய்வாளர்களிடயே உள்ள பார்வை வேறுபாடுகளையும் நாம் கவனிக்க வேண்டும். உதாரணமாக ஹரிப்பிரியா ரங்கன் குஹாவின் விளக்கங்களிலிருந்து மாறுபடும் பார்வைகளை முன்வைத்துள்ளார்.

krsriniv@indiana.edu

Series Navigation

Similar Posts