பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 3

author
0 minutes, 6 seconds Read
This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


சூழலரசியல் (political ecology) என்ற ஆய்வுத்துறை சமூகம் இயற்கை/சூழல் உறவுகளை ஆய்கிறது, குறிப்பாக இயற்கை/சூழல் பயன்படுத்தபடுவதற்கும்,சமூகத்தின் பல பிரிவினர்,அமைப்புகளுக்கும் உள்ள உறவினை ஆராய்கிறது. பண்பாட்டு சூழலியல் என்ற ஆய்வுத்துறையில் சமூகங்கள்,இயற்கை,ஆற்றல் பயன்பாடு குறித்து ஆய்வுகள் மேற்கோள்ளப்பட்டன. ஆனால் இவை அரசியல் பரிமாணத்தினை, இங்கு அரசியல் என்பதை பரந்த பொருளில் பயன்படுத்துகிறோம், கணக்கில் கொள்ளவில்லை என்று கருதப்பட்டதால் சூழலரசியல் எனற பெயரில் சில ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை முன் வைத்தனர்.

1972ல் எரிக் ஓல்ப் எழுதிய Ownership and political ecology என்ற கட்டுரையில் சூழலரசியல் என்ற சொல் முதலில் பயன்படுத்தப்பட்டது. இதற்கு முன்னோடியாக பார்த் 1956ல் பாகிஸ்தானில் உள்ள மலைப்பகுதிகள், குறுகிய வெளிகளில் வசிக்கும் மூன்று இனக்குழுக்கள,சூழல்,சமூக உறவுகள் செய்த ஆய்வினைக் கூறலாம். அவர் நிலையான விவசாயம் செய்யும் பதான்கள்,விவசாயமும் கால்நடை மேய்ப்பும் செய்யும் கோஹிஸ்டானிகள், நாடோடிகளாக கால்நடை மேய்க்கும் குஜார்கள் ஆகிய மூன்று சமூகங்கள் எப்படி இயற்கையை பயன்படுத்துகின்றன என்பதை ஆய்ந்தார்.

1970 களில் மக்கள் தொகைப்பெருக்கம் ஒரு பூதாகரமான பிர்ச்சினையாக சித்திரக்கப்பட்டு , சூழல்சீர்கேட்டிற்கு முக்கியமான காரணம் என வாதிட்டப்ட்ட போது பல ஆயவாள்ர்கள் சூழலரசியல் அணுகுமுறை மூலம் அவற்றை எதிர் கொண்டனர்.பால் எஹ்ரில்ச்,ஹார்டின் போன்றோர் நவமால்துசிய கண்ணோட்டத்தில் மக்கள் தொகைப்பெருக்கம் காரணமாக எதிர்காலத்தில் மூல வளங்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும் வாதிட்டனர்.இதில் ஹார்டின் எழுதிய THE TRAGEDY OF THE COMMONS என்ற கட்டுரை பெரும் தாக்கதினை ஏற்படுத்தியது(1).சூழலரசியல் கண்ணோட்டத்தில் பிரச்சினைகளை ஆய்வு செய்தவர்கள் சூழ்ல் சீர்கேட்டின் அரசியல் பொருளாதார பரிமாணங்களை முன் வைத்தனர்.காடுகளின் அழிவு,மண் அரிப்பு/வளம் குன்றுதல் உட்பட பல பிரச்சினைகளை ஆய்ந்து பல நாடுகளில் மூலவளம் குறித்து அரசிற்கும், மக்களுக்கும் உள்ள முரண்பாடுகளின் காரணங்களை சுட்டிக்காட்டி மக்கள் தொகைப்பெருக்கம் என்பது மட்டுமே காரணம் அல்ல, என்றதுடன் மூலவளங்களை பயன்ப்டுத்துவதில் உள்ள சமச்சீரற்ற உறவுகளை புறக்கணிக்கமுடியாது என்றனர்.

உதாரணமாக காடுகள் அழியககாரணமாக தொழில்கொள்கைகள்/ஏற்றுமதிக்கான விதிகள் காரணமாக உள்ளன என்று நிறுவினர்.இவர்களில் பலர் மார்க்சிய கோட்பாடுகளைப் பயன்ப்டுத்தினாலும், அவை பிற அணுகுமுறைகள்/கோட்பாடுகளை நிராகரிக்கவில்லை.

1970 களில் பெரும் செல்வாக்குடன் விளங்கிய உற்பத்திமுறை கோட்பாடு, உலக-அமைப்பு கோட்பாடு,சார்நிலைக் கோட்பாடு ஆகியவையும் இவர்களால் பயன்படுத்த்ப்பட்டன.இவர்கள் உலக முதலாளித்துவம்,அரசு,மூல வளங்களின் பயன்பாடு குறித்து ஆய்நதனர்.ஆனால் இத்தகைய ஆய்வுகள் விரிவாக செய்யப்பட்டு,செழுமையான பார்வைகளை முன்வைத்தாலும் இவை கோட்பாட்டு ரீதியாக பல விமர்சங்களுக்கு உள்ளாயின. உதாரணமாக பல ஆய்வாளர்கள் அரசை மூலதன உரிமையாளர்களின் நலம் பேணும் அமைப்பு என்ற அனுமானத்தில் ஆய்ந்த போது அரசு குறித்த பிற பரிமாணங்கள் போதிய கவனம் பெறவில்லை.

அவ்வாறே இவர்கள் உள்ளூர் பரிமாணங்களுக்கு போதிய முக்கியத்துவம் தரவில்லை,எதிர்ப்பு/எதிர்வினைகளை அவற்றுக்குரிய முக்கியத்துவம் கொடுத்து ஆராயவில்லை என்ற விமர்சமும் எழுந்தது.இதன் விளைவாக1980களில் செய்யபட்ட ஆய்வுகள் இந்த குறைகளை களைய முற்பட்டனர்.நிர்ணயவாத நவமார்க்சிய அணுகுமுறைகளுக்கு மாற்றாக பிற அணுகுமுறைகள் கையாளப்ப்ட்டன.அன்றாட எதிர்ப்புகள், அரசின் தன்னாட்சி பண்பு,சமூக இயக்கங்களின் பங்கு போன்றவை ஆராய்ப்பட்டன.பின் அமைப்பியல்வாத கோட்பாடுகள், பெண்ணிய கோட்பாடுகள் போன்றவை பயன்படுத்தப்ட்டன.

அறிவு-அதிகாரம் இவற்றிகிடையான தொடர்பும், சூழல் கோட்பாடுகளை அனைத்து நாடுகளுக்கும் பொதுவானவை என்று பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகள் – இவையும் ஆராயப்ப்டடன.இவ்வாறு கடந்த 30 ஆண்டுகளில் சூழல் பிரச்சினைகள் குறித்த புரிதலில் ஒரு பெரும் மாற்றத்தினை சூழலரசியல் கொண்டுவந்துள்ளது.

(1) இது குறித்து விரிவாக பின்னர்.பொது மூலவளங்கள் குறித்து இன்று ஆய்பவர்கள் ஹார்டின் கட்டுரையின் பலவீனங்களை அறிவார்கள்.இது குறித்தும்,பொது மூலவளங்கள் குறித்த ஆய்வுகள் குறித்த ஒரு

புரிதலுக்கும் Privatizing Nature (Ed)Michael Goldman ஐ காண்க.

தொடரும்

ravisrinivas@rediffmail.com

Series Navigation

Similar Posts