கடிதங்கள்

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

மே மாதம் 18 ஆம் தேதி, 2003



ஆசிரியருக்கு,

கோ. ராஜாராம் தனது கட்டுரையில் சு.சமுத்திரம் `தாழ்த்தபட்ட மக்களின் ‘ குரலை பிரதிபலித்ததாக எழுதியிருக்கிறார். உண்மையில் சமுத்திரம் தாழ்த்தபட்டவர்களின் குரலுக்கு எதிராகவே எல்லா சமயங்களிலும் பேசி வந்திருக்கிறார். பிற்படுத்தபட்ட குரலையும், தலித் குரலையும் ராஜாராம் குழப்பிகொள்வதாய் தெரிகிறது. தலித் இலக்கியம் குறித்து பேசதொடங்கிய போதும் சரி, பின்பு இட ஒதுக்கீடு பற்றி கருத்து சொல்லும்போது சரி, சோ கூட சொல்ல தயங்கும் கருத்துகளை சமுத்திரம் சொல்லியிருக்கிறார். வேறு காரணங்களுக்காக சமுத்திரத்தை பாராட்டினால் பிரச்சனையில்லை. சமுத்திரத்திற்க்கு இல்லாத தகுதியை, இன்னும் அதற்க்கு நேர் எதிராக செயல்பட்ட பின் தருவது நியாயமல்ல.

தமிழ் இயக்குனர்களில் `அசலான கலைஞன் ‘ பாலுமகேந்திரா மிஸரி பற்றி கேள்வியேபட்டதில்லை என்று சொல்வது பற்றியும் எழுதியிருக்கலாம்.

ஸ்ரீநிவாஸன் வஸந்த்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

ரவி ஸ்ரீநிவாஸ் அவர்கள் எழுதிய பசுமையாகும் மார்க்ஸியம் கட்டுரையில் முக்கியமான ஒன்றை விட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.

இயற்கையை மேலைநாட்டு சிந்தனாவாதிகள் அணுகுவதற்கும் கீழைநாட்டு மக்கள் அணுகுவதற்கும் இருக்கும் அடிப்படை வேற்றுமையை அது உதாசீனம் செய்கிறது என்பதே அது. (கீழை நாட்டு மக்கள் என்று சொல்வதில் அமெரிக்கப் பழங்குடிகளையும் சேர்த்துக்கொள்கிறேன். ) உதாரணமாக இந்திய பாரம்பரியத்தின்படி மக்கள் தங்களை இயற்கையின் ஒரு பகுதியாக, அதன் பரிமாணத்தில் அதன் பரிணமிப்பில் ஒரு பகுதியாகக் காண்கிறார்கள். இயற்கை வழிபாட்டையும் கடவுள் வழிபாட்டையும் இணைக்கும் பாரம்பரியங்கள் பற்றிய இரண்டு கட்டுரைகளை திண்ணையில் படித்திருக்கிறேன். அத்தோடு இணைத்துப் பாருங்கள். ஆனால் மேலை நாட்டு, முக்கியமாக கிரிஸ்தவ யூத பாரம்பரியத்தில் பூமி மனிதனுக்கு கொடுக்கப்பட்ட வரமாக, அவன் உபயோகப்படுத்தக்கூடிய பொருளாக இருக்கிறது. அந்த அடிப்படை கருதுகோள் மீது எத்தனை மேல் கட்டிடங்கள் கட்டினாலும் அது மாறவில்லை. இதுவே பைபிளிலிருந்து தாஸ் காபிடல் வரை இருக்கிறது. இயற்கை வளத்தையும் செயற்கை வளத்தையும் எப்படி பகிர்ந்து கொள்வது என்பதில் தான் பிரச்னையே தவிர, மனிதன் இயற்கையின் ஒரு பகுதி என்ற உணர்வு வருவதேயில்லை. அதனாலேயே மேலை நாடுகளில் சுற்றுச்சூழல் சீரழிவும் நடந்திருக்கிறது. சுற்றுச்சூழல் மிக மோசமாகச் சீரழிந்தவுடன் அதனை அதன் மேற்கத்திய பாரம்பரியத்தின் வழியிலேயே காப்பாற்றவும் முனைகிறது.

இந்தியா போன்று காலனிய அடிமைப்படுத்தப்பட்ட தேசங்களின் பாரம்பரிய சிந்தனை கேவலப்படுத்தப்பட்டு, கொச்சையான நவீனத்துவ சிந்தனையாக அன்றைய மேலைநாட்டு சிந்தனை தூக்கிப்பிடிக்கப்பட்டது. அதுவே பல ‘சிந்தனையாளர்கள் ‘ என்ற பெயரில் இன்னாட்டு இங்கர்சால்கள் இந்திய பாரம்பரியத்தை ரத்தக்கண்ணீர் பாணியில் கேவலப்படுத்தவும், அப்படி நிராகரிப்பதே பகுத்தறிவு என்று தூக்கிப்பிடிக்கவும் ஏதுவாயிற்று. இந்தியப் பாரம்பரியம் என்று பேசுபவன் எல்லோருக்கும் பிற்போக்கு வாதி என்ற முத்திரையும் குத்தலாயிற்று. இன்றைக்கு இறக்குமதி செய்யப்படும் பசுமை அரசியலும் இது போன்றதொன்றே. இதுவும் மேல்நாட்டு சூழ்நிலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இந்தியாவுக்கு நவீனச் சிந்தனையாக இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் பாரம்பரிய சுற்றுச்சூழல் சிந்தனைகளும் பல கெட்டபெயர்கள் சூட்டப்பட்டு தி இந்துவிலிருந்து என்ஜிவோ அறிவுஜீவிவரையில் பலராலும் கேவலப்படுத்தப்படுகின்றன. இது கிராமத்தவனைப் பார்த்து உனக்குத் தெரியாது எனக்குத்தான் தெரியும், நான் இத்தனை புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்று காட்டிக்கொள்ளவுமான உத்தியாகவும் ஆகிவிட்டது. எம் ஐ டி வெளியிடும் புத்தகத்தில் நம் ஊர் கூரைவீடு கட்டும் ஆள் எப்படி அனுபவங்களின் மூலமாக சிறப்பான தொழில் நுட்பத்தை எட்டியிருக்கிறான் என்று கட்டுரை வெளியிடும் வரையில் இவனைப் பற்றி நமக்குத் தெரிவதில்லை. வெளிநாட்டு மார்க்ஸிய சிந்தனையாளர் சொல்வதே சரியானது, இந்தியாவின் சிந்தனையாளர்கள் சொல்வது பிற்போக்கானது என்பதான ஒரு மனச்சாய்வும் அனைத்து அறிவுஜீவிகளிடமும் இன்று காணக்கிடக்கிறது. இந்திய அறிவுஜீவியும் மார்க்ஸியராக இல்லையென்றால், அவர் மிகவும் பிற்போக்கான, அல்லது இந்துத்வ, ஜாதிவெறி இன்ன பிற அடைமொழிகளால் வையப்படுகின்றார். முடிந்தால் என்றைக்காவது நேரமிருக்கும் பட்சத்தில் இது பற்றி எழுதிப்பார்க்கிறேன்.

இத்தனை வாதப்பிரதிவாத சித்தாந்த நிறுவுதலுடன் ஒப்பிடுகையில், தன்னுடைய தோட்டத்தில் ஒரு கறிவேப்பிலை மரத்தை வளர்க்க எத்தனை கஷ்டப் படவேண்டும் என்று அனுபவப்பூர்வமாகத் தெரிந்து வைத்திருக்கும் என் கிராமத்தான் எத்தனையோ மேல். சின்னக்கருப்பன்.

சின்னக்கருப்பன்.


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

நண்பர் கே. ரவி ஸ்ரீநிவாஸ் அணுத்தொழில் நுட்பத்தின் அபாய எதிர்பார்ப்புகளில் [Nuclear Power Risks] நம்பிக்கை யற்ற சமூக விஞ்ஞானிகள் சிலர் வேறு பரிமாணங்களைக் காட்டி யுள்ளதாகச் சென்ற வாரக் கடிதத்தில் எழுதி யிருந்தார்! மேலும் அணு மின்சக்தி மீது தனக்கும் நம்பிக்கை இல்லை என்று குறிப்பிடுகிறார்! அவருக்கு அணு உலையில் நம்பிக்கை இல்லை என்று யார் கவலைப் படுகிறார் ? சமூக விஞ்ஞானிகள் அணு உலைகளைப் பற்றிக் குறிப்பிட்டதை, அவர் எழுதி யிருக்கலாம்! அல்லது எங்கே உள்ளது என்றாவது காட்டி யிருக்கலாம்!

அணுயுகமும், அண்ட வெளியுகமும் உதயமாகி உலகெங்கும் விஞ்ஞானம் வளர்ச்சி பெறும் போது, டாக்டர் ஹோமி பாபா, டாக்டர் விக்ரம் சாராபாய் போன்ற மேதைகள் முன்வந்து அணுவியல் ஆராய்ச்சி, அண்டவெளி ஆய்வுகளில் பாரதத்தை முற்போக் கடையச் செய்தார்கள்! அணுவியல் துறையின் முன்னேற்றத்தையோ, விண்வெளி ஏவுகணை வீச்சுகளையோ பழைமை வாதிகள் யாரும் முட்டுக்கட்டை போட்டு நிறுத்த முடியாது! அவற்றில் சிறிதளவாவது பங்கெடுக்காமல் போனால், இந்தியா பின்தங்கிப் பிற்போக்கு நாடாகத் தாழ்ந்து விடும்! பாரத வல்லுநர் செழித்த மூளைக்கு வேலைகளும், நுணுக்கத் திறனுக்கு வாய்ப்புகளும் இல்லாமல் போனால், தொய்ந்த சடலங்களாக நடமாடுவார்கள்! அல்லது வாய்ப்புள்ள அன்னிய நாடுகளுக்கு அவர்கள் தாவிச் சென்று, இந்தியாவில் ‘மூளை இழப்புகள் ‘ [Brain Drains] அல்லது திறன் இழப்புகள் ஏற்படும்!

மனிதர் தயாரித்த எந்த யந்திர சாதனமும் அல்லது வாகனமும் மக்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கும் என்று எவரும் உறுதி மொழி தர முடியாது! அனுதினமும் மணிக்கு ஆயிரக் கணக்கான வாணிபத்துறை விமானங்கள் குறைந்தது 300-400 நபர்களைத் தூக்கிக் கொண்டு சுமார் ஐந்து மைல் உயரத்தில் பறக்கின்றன! அப்போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு 300,000 பேர் அந்தரத்தில் பயணம் செய்யும் போது, மனிதத் தவறாலோ, யந்திரப் பழுதாலோ அன்றிக் காலநிலை முறிவாலோ விமானம் விழுந்து மாந்தர் சிலர் உயிரிழக்கலாம்! ஆனால் அடுத்து விமானங்கள் பறக்காமல் போகின்றனவா ? இல்லை! அல்லது மாந்தரும் விமானத்தில் ஏறிப் பயணம் செய்ய அஞ்சுகிறார்களா ? இல்லவே இல்லை! விமானத்தை நம்பாதவர் கப்பலில் மெதுவாகப் பயணம் செய்யலாம்! கப்பலையும் நம்பாதவர் பயணம் செய்யாமல் வீட்டுக்குள்ளே பாதுகாப்பாய் முடங்கிக் கிடக்கலாம்!

மனிதருக்குப் பயன்படும் அல்லது ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் ஆகாய விமானம், அண்டவெளிக் கப்பல், அணுமின் உலைகள் யாவும் ‘பூஜியப் பழுதுகள் ‘ அல்லது ‘ஏற்கும் பழுதுகள் ‘ [Zero Defects or Acceptable Defects] என்னும் தரக் கட்டுப்பாடு நெறியில் [Quality Control & Assurance] தயாரிக்கப் பட்ட சாதனங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டவை! பிறகு அவை பயன்படுத்தபடும் போது ‘ஏற்கும் அபாய எதிர்ப்பார்ப்புகள் ‘ [Acceptable Risks] அல்லது ‘மதிப்பீடு அபாய எதிர்ப்பார்ப்புகள் ‘ [Calculated Risks] ஆகிய வற்றுக்கு உட்பட்டே உலகில் இயங்கி வருகின்றன! உலக வரலாற்றிலே முதலிடம் பெறும் மானிட விஞ்ஞான சாதனையான பல விண்வெளி யாத்திரைகளும், சந்திரனில் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் 1969 ஆண்டு முதலில் கால்தடம் வைத்ததும், ஏற்கும் அபாய எதிர்பார்ப்பில் நம்பிக்கை கொண்டு வெற்றி பெற்ற தீரச் செயல்களே!

எனது கட்டுரையின் ஒரே ஓர் அறிக்கை இதுதான்! பாதுகாப்புள்ள இந்திய அணுமின் உலைகளில் பணி செய்ய ஆடவரோ, பெண்டிரோ யாரும் அஞ்ச வேண்டிய தில்லை! எஞ்சினியரான என் புதல்வி கனடாவின் மிகப் பெரிய பிக்கரிங் அணு உலையில் பணி செய்கிறாள்! எஞ்சினியரான அவளது கணவரும் வேறொரு அணுமின் உலையில் பணி புரிகிறார்! எனது இரண்டு புதல்விகளுக்கோ, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கோ எனது கதிர்வீச்சால் எந்த வித நோயும் வர வில்லை! அவர்களுக்கோ, அவரது பிள்ளைகளுக்கோ, யாருக்கும் ஞாநி கூறுவது போல் ஆறாவது விரல் முளைக்க வில்லை! நான், என் மனைவி மற்றும் எனது மகளின் குடும்ப நபர்கள் மூவர் அணு உலைக்கு அருகில்தான் [4-8 மைல்கள்] வசித்து வருகிறோம்! கல்பாக்கத்தில் வாழ்ந்த போது 5 மைல் தூரத்தில் அணுசக்திக் குடிநகரில் எங்கள் இல்லமும் இருந்தது!

அணுத்தொழில் நுட்பத்தை ரவி ஸ்ரீநிவாஸ் ஆதரித்தாலும் சரி அல்லது புறக்கணித்தாலும் சரி, இந்தியா இன்னும் பல்லாண்டுகளுக்கு அணு மின்சக்தியை உற்பத்தி செய்யத்தான் போகிறது! அவரது வீட்டு விளக்குகளுக்கும் அணு மின்சக்திதான் ஒளி யூட்டப் போகின்றது! கல்பாக்கத்தில் தற்போது பல்லாயிரம் ஆடவர், பெண்டிர் பணி செய்து வருகிறார்கள்! அதற்கு அருகில் பல்லாயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள்! ஞாநி தனது ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில், அணு உலைகளில் பணி செய்யும் நபர்களில் கதிரடி வாங்குவோர், மற்றும் அவரது குடும்பத்தார் புற்று நோயில் தாக்கப் படுவதாகவும், அணு உலை அருகில் வாழ்வோர் ஆறு விரல்களோடு பிறப்பதாகவும் அபாய விளம்பரம் செய்து வருவது நாகரிகச் செயல் ஆகாது!

சி. ஜெயபாரதன், கனடா


‘எதிர்காலத்தில் ஒரு நாள் ‘ பிரச்சாரத்தொனியாலும், அறிவியல்-மதம் குறித்த எளிமையான, ஆனால் தவறான புரிதல் காரணமாகவும் சிறந்த கதையாக உருப்பெறவில்லை.ஒரு முயற்சி என்ற அளவில் நின்றுவிடுகிறது. சுயம்கடந்த உளவியல்(TRANSPERSONAL PSYCHOLOGY) குறித்து தமிழில் எழுதப்பட்டுள்ளாதா ? ‘இரண்டுதலைகள் கொண்ட மனிதனுடனுடன் ‘ பேட்டி சுவாரசியமாக இருந்தது. விவசாய மான்யங்கள் குறித்த கட்டுரை வரவேற்கத்க்கது. அய்ரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மான்யங்கள் இல்லையெனில் விவசாயம் செய்வது சாத்தியமே இல்லை எனலாம். அம்பேத்கார் எழுதிய தம்மபத பொழிப்புரையும்,மூலமும் தமிழில் பெரியார்தாசன் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளதாக அறிகிறேன். மேல்விபரம் தெரிந்தவர்கள் அது குறித்து தெரிவிக்கலாம்.அந்நூல் குறித்து திண்ணையில் மதிப்புரை வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன்.

K.ரவி ஸ்ரீநிவாஸ்


அன்புள்ள திண்ணை இணைய ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

கடந்த திண்ணையில் இதழில் ஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரைக்கு சி. ஜெயபாரதன். கனடா பதிலளித்திருந்தார்கள்.

அவர் சொன்ன விளக்கங்களில் சில குறைபாடுகள் தெரிகின்றன. அவை கீழே வருமாறு:

1. செர்நேபிள் அணுஉலை விபத்துக்குக் காரணம் மனிதத் தவறுதான் என்று சொல்லியிருக்கிறார் (முதல் விளக்கம்). அப்படிப்பட்ட மனிதத் தவறு கல்பாக்கத்திலும் கூடங்குளத்திலும் நிகழ்ந்தால் அதேபோல மரணங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாக நான் கருதுவது தவறாகுமா ?

2. சேர்நேபிள் அணுஉலையின் கட்டுமான வடிவமைப்பைப் போலவே தான் கூடங்குளத்தில் கட்டப்படும் அணுஉலையின் கட்டுமான வடிவமைப்பு என்று சொல்லப்படுகிறது. உண்மையா ?

3. கூடங்குளத்தில் அணுஉலை கட்ட அப்பகுதி மக்கள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தபோது, மக்களின் போராட்டத் தன்மையைத் தணிக்க ‘இங்கு அணுஉலை கட்டப்படுமானால் உங்களுக்கு (அந்தப் பகுதி மக்களுக்கு) வேலைவாய்ப்புகள் கிடைக்கும் ‘ என்று அரசு அறிவித்து (ஒரு உத்தியைக் கையாண்டு) போராட்டத்தைத் தணித்ததாக ஒரு கருத்து பரவலாக இருக்கிறது. அணுஉலையால் பாதிப்பில்லையெனில் இப்படிப்பட்ட உத்தியை அரசு ஏன் பயன்படுத்தவேண்டும் ?

4. உணுஉலையில் பயன்படுத்தப்படும் கதிரியக்கப்பொருட்களின் கழிவுகள் எங்கே போடப்படுகிறது அல்லது சேமிக்கப்படுகிறது என்ற கேள்விகளுக்கு அரசுகளிடமிருந்து பதில் கிடைப்பதேயில்லை.

5. நமது அரசுகள் விபத்து நடந்த பிறகு வெளியிடும் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்ற விவரங்கள் பட்டியலலில் நமக்கு எப்போதுமே நம்பத்தன்மை கிடையாது.

அன்புடன்

தி.முரளி, சென்னை 26


திண்ணைக்கு கடிதம், கட்டுரை, கதைகள், கவிதைகள் அனுப்புபவர்கள் தயவு செய்து TSCII அல்லது TAB தர எழுத்துக்களில் எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திண்ணைக்குழு


Series Navigation

author

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

Similar Posts