கடிதங்கள்

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

ஏப்ரல் 27, 2003நகைச்சுவையும் வித்தியாசமானவையும் பகுதியில் சிற்றிதழ்கள் பற்றிய கிண்டல் படித்தேன் . அது சரியானதுதான். ஆனால் அது சிற்றிதழ்கள் குறித்த புரிதல் இல்லாத வாசகர் மத்தியில் தவறான சித்திரத்தை உருவாக்கிவிடக்கூடும்.

திண்ணை இதழே தமிழின் ஆக்கபூர்வமான சிற்றிதழ் சூழலின் பிரதிபலிப்பையே அளிக்கிறது. சிற்றிதழ்களில் வரும் படைப்புகளே இதில் பெரும்பாலும் மறுபிரசுரமாகின்றன . அங்குள்ள விவாதங்களே இதிலும் தொடர்கின்றன. குமுதம் விகடனை திண்ணை பிரதிபலிக்கவில்லை . சிற்றிதழ்கள் இல்லாவிட்டால் இத்தகைய அரசியல் கலாச்சார விீவாதங்களுக்கே தமிழ்நாட்டில் இடமில்லை என்பதற்கு இதுவே ஆதாரம்

**

எந்த ஒரு சூழலிலும் எது மிக சூட்சுமமனானதோ அதில் தான் போலிகள் அதிகம் இருக்கும். காரணம் அங்குதான் போலிகளை கண்டுபிடிப்பது கஷ்டம். தேர்ச்சியுள்ள சிலரை தவிர பிறரை எளிதாக ஏமாற்றிவிடலாம். தமிழகத்தில் மரபிசையில் உள்ள அளவுக்கு போலிகள் எங்குமே இல்லை

இலக்கியம் அடுத்தபடியாக. இலக்கியங்களை படித்து சுயமான மதிப்பீடுகள் கொண்டிருப்பவர்கள் சிலரே . மீதிப்பேர் பொதுவான சில கருத்துக்கள், ஒரு மரியாதை ஆகியவற்றையே கொண்டிருப்பார்கள். இவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம்.

அதிலும் கடந்த பத்தாண்டுகளாக இலக்கியத்துக்கு ஒரு பொதுமதிப்பு ஏற்பட்டுவருவதனால் இந்த பாவலா மூலம் பிழைப்பையே நடத்திக் கொள்ளலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. இதற்கு இங்கேயுள்ள ‘கலக ‘ இலக்கியம் ஒரு நல்ல வழி அமைத்து தருகிறது. எழுதி எதையும் நிரூபிக்க தேவையில்லை , படித்து தெரிந்துகொள்ளவும் தேவை இல்லை , கலகச் செயல்பாடுகளே போதும் என்று இது சொல்கிறது. கலகம் என்பது எதற்காக எதற்கு எதிராக என்ற கேள்விகளெல்லாம் எழாத சூழலில் வெறுமே குடிப்பதும் , கவனத்தை கவர எதையாவது செய்வதும் , பிறரை எத்தி வாழ்வதுமே கலகம் என்று ஆகிவிட்டிருக்கிறது. இதற்கென சிலர் இங்குள்ளனர்.

இவர்களுக்கென சில இதழ்களும் மொழிநடையும் சில பெயர்களும் எல்லாம் உள்ளன. இதை சிற்றிதழ்ச் சூழலின் தீய பக்க விளைவு என்று கருதவேண்டுமே ஒழிய சிற்றிதழ்ச்சூழலே அதுதான் என்று காட்டுவது சரியல்ல. விகடன் குமுதம் போன்ற இதழ்கள்தான் அப்படி ஒரு சித்திரத்தை உருவாக்க திட்டமிட்டு முயன்று வருகின்றன.

கட்டுரையாளர் குறிப்பிடும் இதழ்கள் , எழுத்து முறை எல்லாமே இதை மட்டுமே நோக்கமாக கொண்ட போலித்தனங்கள் மட்டுமே. சம்பந்தப்பட்ட ஆசாமிகளின் இலக்கிய ஞானம் , மொழி பயிீற்சி என்ன என்பதற்கு கட்டுரையாளர் காட்டும் வரிகளே சான்றாகும் . சில குறிப்பிட்ட தோரணைகள்[ அழுக்கு உடை, பை, குடி ] , சில சொற்றொடர்கள் [ ‘ ‘அதில் இருக்கிற அதிகாரசெயல்பாடு என்னன்னா.. ‘ ‘ ] ஆகியவற்றுடன் சில்லறை வம்புகள் மூலம் செய்தியில் இருந்துகொண்டே இருத்தல் ஆகியவை இவர்களுடைய வழிமுறை. [ஆனால் இன்று வரை அமைப்பு சார்ந்து செயல்படும் எங்கும் இவர்கள் கலகம் செய்தது இல்லை. சிற்றிதழாளர் சிறிய அளவில் கூடும் இடங்களில் மட்டும்தான்]

இதன் பிறகு தண்டல் வசூல். பொதுஇடத்தில் நிறுத்தி ஆபாசமாக வசைபாடுவது , வீட்டுக்கு ஆட்டோவில் வந்திறங்கி வாந்தியெடுத்து நம் முற்றத்தில் விழுந்துகிடப்பது போன்ற செயல்களால் இவர்கள் சராசரி இலக்கியவாதிகள் மனதில் ஒரு பீதியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் .சனியன் ஒழியட்டும் என்று ஐம்பதோ நூறோ கொடுத்து அனுப்பி வைப்போம். இதுவே ஒரு பெருந்தொகை ஆகிவிடும். உதாரணமாக ஒருமுறை ஒருவருக்கு நான் ஐம்பது ரூபாய் கொடுத்து அதே ஆட்டோவில் திருப்பி அனுப்பி தப்பித்தேன். அவர் நேராக போனது வேதசகாயகுமார் வீட்டுக்கு. பிறகு அ கா பெருமாள் வீட்டுக்கு . அன்று மட்டுமே வசூல் 500 ரூபாய். இது இங்கு பலருடைய ஒருவார ஊதியம். அன்றுமாலை நாங்கள் சந்தித்தபோது இது தெரிய வந்தது. இனிமேல் இப்படி தணடப் பணம் தருவதில்லை, வருவதை சந்திப்பது என முடிவு எடுத்தேன்.

இதன் ஒரு வணிக உத்திதான் கட்டுரையாளர் சொல்லும் சில இதழ்கள் . இவை அதிகபட்சம் 100 பிரதிகள் அச்சிடப்படுகின்றன. அவற்றில் மிரட்டும் தலைப்புகள் மற்றும் கந்தல் மொழி ,குடி என்ற புனித கடமைபற்றிய பொன்மொழிகள். இவ்விதழ்கள் சம்பந்தப்பட்டவருக்கு ‘பாடி பரிசில் பெற ‘ முகாந்திரமாகின்றன. ஒன்றும் தெரியாத வணிகர்கள் ‘ஆசாமி ஏதோ செய்கிறான்போல. ஒழியட்டும் ‘ என்று எண்ணி பணம் அளிப்பார்கள் .ஆயிரம் ரூபாய் முதல் போட்டு ஆறுமாதம் தினம் 500 ரூபாய் பார்க்கலாம். இதழ் இல்லாவிடால் பலவித தலைப்புகளில் துண்டுப் பிரசுரங்கள் அடித்து பையில் வைத்துக் கொண்டு ஆளுக்கேற்றமாதிரி அளித்து பேசுவது . ஒருவகை பிழைப்புதான் இது .இதற்கும் இலக்கியத்துக்கும் எந்தவித உறவும் இல்லை .இவர்கள் எவரும் சொல்லும்படி ஒன்றும் எழுதியதும் இல்லை .

**

இன்றும் சிற்றிதழ்களிலேயே முக்கியமான கட்டுரைகள், கதைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. திண்ணைமூலம் அறிமுகமான கோகுலக்கண்ணன் , அலர்மேல் நங்கை போன்றவர்கள் கூட சிற்றிதழ் மூலமே தமிழிலக்கியத்தில் அடுத்த கட்ட வாசகர்களை தேட முடிகிறது. [ கோகுலக்கண்ணன் காலச்சுவடு [மார்ச் ஏப் 2003]இதழில் எழுதிய பசி என்ற சிறுகதை சமீபகாலமாக தமிழில் வந்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று ] இப்போது இங்கே கவனிக்கப்பட்ட அடுத்தகட்ட எழுத்தாளர்கள் அனைவருமே சிற்றிதழ்மூலம் வந்தவர்கள்தான்.

**

இராமுருகனின் அரசூர் வம்சம் ஆர்வமூட்டுவதாக உள்ளது

**

அ முத்துலிங்கம் அவர்களின் அக்கா தொகுதி குறித்து ஒரு வாசகர் கேட்டிருந்தார். இது அ முத்துலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மாணவராக இருந்தபோது கைலாசபதியின் முன்னுரையுடன் வெளிவந்தது. மறுபதிப்பு இல்லை. சிலரிடமே பிரதி உள்ளது.

அ முத்துலிங்கம்அவர்களின் அனைத்து சிறுகதைகளும் தமிழினி வெளியீடாக முழுத்திகுப்பு சில மாதங்களில் வெளிவரவுள்ளது

ஜெயமோகன்


மேற்கண்ட கடிதம் சில இடங்களில் திண்ணைக்குழுவால் மாற்றப்பட்டுள்ளது, ஜெயமோகன் அனுமதி இன்றியே.

-திண்ணைக்குழு


திண்ணை ஆசிரிய நண்பர்- திண்ணை நண்பர்களுக்கு,

வணக்கம்.

திண்ணை அருமையான பெயர், சுதந்நிரமாக அமர்ந்து, சுதந்திர காற்றை சுவாசித்து, பேசி நட்புணர்வுடன் இருப்பது என்ற உணர்வு தான் என்னுள் திண்ணையை படிக்கும் போது எழும்.

ஈராக் போர்-நான்ஜிங் படுகொலை பற்றி நானும் பேசினேன், அதற்கு போட்டோ நீங்கள் இனைத்து, உயிர் ஊட்டினீர்கள்.

கருத்துக்கள் வித்தியாசப் படுவது இயற்கை.இன்று சரியென்பது நாளை சரியில்லையென்று உணரலாம். இல்லை எப்போதுமே சரியாகப் படலாம்.ஆனால் நட்புக் காற்று இருப்பது ஆரோக்கியமே தவிர , நச்சுக் காற்று அல்ல.

எனவே சில திண்ணை நண்பர்கள்,மற்றவர்களின் எழுத்துக்களை நட்புணர்வுடன் கொஞ்சம் விமர்சித்து விட்டு, உங்கள் எண்ணங்களை அதிகமாக எழுத சக்தியை உபயோகியுங்கள்.சக்தியை வீணாக்காதீர்கள்.

உங்கள் திண்ணை நண்பர்களுக்காக இதைச் செய்யக் கூடாதா ?

உலகம் என்பது தனி நபர்களோ, அவரது சிந்தனைகள் மாத்திரம் அல்ல. அதை யாராலும் அளக்க முடியாது.இயற்கையை உணர்ந்து,

திண்ணை, உலகத் திண்ணையாக திகழட்டும்.

முதல் முத்தத்தை திண்ணையில் பதிக்க இடம் தந்தற்கு நன்றி.

SRIDHA.


அன்புள்ள ஆசிரியருக்கு,

சென்ற இதழில் வாசிக்க நேர்ந்த பதுமை என்ற நாடகம் சிறப்பான ஆக்கமாக இருந்தது. ஒரு நாடகம் என்ற அளவிலே எப்படி சிறப்பானது என்று தெரியவில்லை.ஆனால் அதன் இலக்கியத்தன்மை மிக மிக நுட்பமானது. ஒவ்வொரு வரியிலும் உருவாகிவரக்குடியதான சிறந்த உள்லர்த்தங்களும் திருப்பங்களும் அனைத்தையும் விட முடிவும் உக்கிரம்மானவையாக உள்ளன.

சுபாஷ் சந்திரன்


I read thinnai articles recently .I came to know this site from Sol pudidu .

The articles on war and Islam are profound and interestingVery important website

vivek, chennai


Sir

Only recently I began to read this site. Useful and creative.

The drama by Jayamohan is a masterpiece in every level. In small lines and subtle references it gives detailed individual character to every Puranic personality. Highly readable, evocative and in a way brave also.

A note by one Ravi irritated me. He pretends as a scholar. No real scholar in any field will ignore or insult an opinion of a creative person in other field. Jayamohan is putting forth his opinions on philosophy or science or politics as a creative writer and I believe he is one of the important creative writers of our times. He needs not to be an expert or scholar in science or philosophy or other fields .It is not possible also. Actually he is talking about his impressions on ideas, not about ideas. A serious intellectual or technician never ignores the expressions of a fiction writer or painter or even a musician.

As an architect I know the ideas about construction in Vishnupuram is not practical. Some of them are technical and historical errors also. But I consider that novel one of the major texts about our traditional construction methods because it gives us the metaphoric meaning and psychological impressions of the constructions. . It gives us an eye to look in to the relation between philosophy and building construction. Sorry I am not used to express these things .Any way I want to record this here.

Sivaram K M

Madurai 3


திரு.ஜெயமோகன் போன்ற சிந்தனையாளரும் படைப்பாளியுமான ஒருவர் கூட ஒரு முன்முடிவோடு ‘இவன் இப்படித்தான் எழுதியிருப்பான் ‘ என கருதி எழுதியிருந்த கடிதம் சிறிதே மனச்சோர்வையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது.

எனது கட்டுரைத்தொடர் மண்சார்ந்த தொழில்நுட்பம் குறிப்பாக குவிமுனைத்தன்மையற்ற ஆற்றல் உற்பத்தி தொழில்நுட்பம் ஒன்றின் உருவாக்கம், அறிமுகம், பயன்பாடு மற்றும் அதன் சமூக ஏற்பு

ஆகியவை, அவை சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதே அன்றி சங்க அமைப்புகளின் சூழல் பாதுகாப்பு பங்களிப்பு குறித்ததன்று.

இயற்கையின் இயற்கை குறித்த காந்திய நிலைபாடு எனக்கு ஏற்புடையதன்று. சங்கம் அது குறித்து கறாரான எந்த நிலைபாடும் கொண்டிருக்கவில்லை. எனது நிலைபாடு டார்வினியம் சார்ந்தது. ஆனால் சாண எரிவாயு தொழில்நுட்பத்தில் காந்திய பங்களிப்பை இக்கட்டுரைத்தொடர் தெளிவாக கூறிவந்துள்ளது. அவ்வாறே ஓஸ்மானிய பல்கலைக்கழக பங்களிப்பையும். இவ்விஷயத்தில் நான் எங்கும் சங்கம் குறித்து கூறவில்லை. ஏன் சுதேசி பிரிவுகளை பற்றிக்கூட கூறவில்லை.

நமது மரபு சார்ந்த அறிவு குறித்த மார்க்சிய பார்வை மார்க்சியம் சார்ந்தே அமைய முடியும் என்பதாலேயே அது மடத்தனமான கொச்சைப் படுத்துதலாகவே அமைய முடியும். இன்று பாரத மார்க்சியத்தின் மண்சார்ந்த மிகச்சிறந்த சிந்தனையாக தமிழகத்தில் முன்னிறுத்தப்படும் ஞானியின் பாரதமரபு குறித்த மார்க்சிய அணுகுமுறை எவ்வாறு உள்ளது ? சமூக பொருளாதார அமைப்பு சார்ந்த காரணிகளால் ஏற்படும் தனிமைப்படுத்தலின் விளைவாக சமய இலக்கியங்களை காணுதல் அல்லது ஆரிய இனவாத அடிப்படையில் சமுதாய பிரிவினை ஏற்படுத்த வனவாசிமரபுகளை அந்த புரிதல் சட்டகத்திற்குள்ளாகவே முன்வைத்தல் ஆகியவற்றை மீறி ஞானியின் கருத்துலகால் செல்லமுடியவில்லை, முடியாது. அவ்வாறு செல்கையில் அது மார்க்சிய அறிதலாக இருக்காது மாறாக பாரதிய அறிதலாக அது மாறிவிடும்.

ஒரு சில மார்க்சிய அறிவுஜீவிகள் முன்வைக்கும் பாரதிய தோல் போர்த்திய மார்க்சியம் அடிப்படையில் ‘இந்திய மய படுத்தப்பட்ட ‘ கோக் விளம்பரங்களுக்கு எவ்விதம் மாறுபடுகிறது ?மார்க்சியம் சுற்றுப்புற சூழல் இயக்கங்களுடன் கொள்ளும் உறவு குறித்து நான் அறிவேன் என்றே நினைக்கிறேன். அது சுற்றுப்புற சூழல் மாசேற்படுத்துதலை முதலாளித்துவத்தின் ஓர் இன்றியமையாத்தன்மையாக (அதாவது ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறை அது உருவாக் கும் சமுதாய அமைப்பு மற்றும் அது உருவாக்கும் மதிப்பீடுகள் ஆகியவற்றின் விளைவே சூழ்நிலை மாசுநிகழ்வுகள்) காட்டும் எதிர்ப்பியக்கத் தன்மையுடன் நின்றுவிடக் கூடியது.

மேலும் சுற்றுப்புற சூழல் மாசு நிகழ்வுகளுக்கு தொழில்நுட்ப தீர்வுகளை ஒரு லூடைட் வெறியுடன் எதிர்க்கும் தன்மையது. (மார்க்சிய விளிம்பு நிலையில் இது மிகத் தெளிவாக பிரதிபலிக்கும். உதாரணமாக, யுனா பாம்பர்) ஏனெனில் மார்க்சிய கண்ணோட்டத்தில் சுற்றுப்புற சூழல் மாசு ஒருவிதத்தில் முதலாளித்துவ எதிர்ப்பினை உருவாக்குவது. இதற்கு அரசியல் சமுதாய தீர்வுகள் உண்டே தவிர அந்த முதலாளித்துவ அமைப்பிலிருந்தே வரும் தொழில்நுட்பம் எப்படி தீர்வாக முடியும் ? 1980களின் இறுதியில் வெளியான மார்க்சிய பார்வையில் சுற்றுப்புற சூழல் குறித்த சர்வதேச கருத்தரங்கு ஒன்றின் தொகுப்புக்கட்டுரையில் படித்த சில வரிகள் மனதில் நிற்கின்றன (பெயர் வெளியீடு எல்லாம் மறந்துவிட்டது), ‘வளங்குன்றா வளர்ச்சி முதலாளித்துவ சமுதாயத்தில் சாத்தியமானதாக இருக்கலாம், ஆனால் விரும்பத்தக்கதல்ல. ‘ அன்று யூதன். இன்று பூர்ஷ்வா. இங்கு பிராமணன் அல்லது பனியா . வெறுப்புக்கு இலக்கின்றி வாழ வழியில்லாத கருத்தியல்களின் தொழில்யுக அவதாரம் மார்க்சியம்.அது மண்ணின் மரபின் அரிதாரம் பூசி வந்தாலும் உள்ளுக்குள் இயங்குவதும் இயக்குவதும் ‘பதுமை ‘யின் விகார இளிப்பின் பின் நிற்கும் தத்துவம்தான்.

எனவே ஞானியை ஒரு சுற்றுப்புற சூழல் முன்னோடியாக நான் கருதவில்லை. மேலும் அவர் எனது கட்டுரைக்கு எவ்விதத்திலும் தொடர்புடையவரும் அல்ல. சுருக்கமாக: என் கட்டுரைத்தொடரில் முன்னோடிகள் தவிர்க்கப்படவில்லை; சுற்றுப்புற சூழல் பாதுகாப்பில் சங்க பங்களிப்பு குறித்து நான் பேசவில்லை. (ஆயினும் அதில் சங்க பங்களிப்பு குறித்த திரு.ஜெயமோகனின் நேர்மையான கருத்துக்களுக்கு நன்றி.) ஞானியின் சுற்றுப்புற சூழல் போர்வை போர்த்திய மார்க்சிய கருத்தியலை நான் நிராகரிப்பது நானறிந்த வரையில் அது குறித்த அறியாமையால் அல்ல.

நன்றி.

அரவிந்தன் நீலகண்டன்


ஞானி அரவிந்தன் நீலகண்டன் போர் வாசிக்க சுகமாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் தகவல்களை தெளிவாக சொல்லி சண்டைபோட்டால் நல்லது.

தமிழ்நாட்டுகோயில்களின் ஸ்தலவிருட்சங்களைப் பற்றி நல்ல பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன.

சூர்ய ராஜ முருகையா


ஆசிரியர் குழுவினருக்கு

வணக்கம். திண்ணை பலரால் விரும்பிப் படிக்கப்பட காரணம் அதில் வெளியாகும் கவிதை, சிறு கதை, அறிவியல்,இலக்கிய,அரசியல் மற்றும் மொழிபெயர்ப்பு கட்டுரைகள்தான்.ஒவ்வொரு வாரமும் திண்ணை இப்படி

வாசகர்களுக்கு தொடர்ந்து பலதரப்பட்ட கருத்துக்களையும், படைப்புகளையும் அளித்து வருகிறது.

இதுதான் திண்ணையின் சிறப்பு. திண்ணையில் வெளியான கட்டுரையில் திரு. அரவிந்தன் நீலகண்டன்

….ஓ…மறந்துவிட்டேன், ‘கட்டுரைகள் என்ற பெயரில் எழுதியுள்ள அரை,முக்கால்,முழுப் பொய்களுக்கு பதில் சொல்லுவது ‘ ‘அவாள் ‘ வேலை அல்ல என்பதால், நேரமின்மை காரணமாக இந்த ஒரு வரி ஐந்து வார்த்தை பொய்க்கு மட்டும் பதில் சொல்லியிருக்கிறார் போல…

என்று எழுதியுள்ளார். ‘அவாள் ‘ என்பது இவ்விடத்தில் எத்தகைய பொருளில் பயன்படுத்தபடுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இப்படி ஒருவரை ஜாதியைக் குறிப்பிட்டு இகழ்வதை எப்படி பிரசுரம் செய்தீர்கள். இப்படி எழுதுவது அவரது ‘பரந்த ‘ மனப்பான்மையக் காட்டுகிறது.ஆசிரியர் குழுவின் கவனக்குறைவுதான். இது வெளியாகக் காரணம் என்று கருதுகிறேன்.இதற்காக அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்று எழுத மாட்டேன்.ஏனெனில் குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாதவர்களிடம் அதை எதிர்பார்ப்பது வீண். ஒரு குடம் பாலில் துளி விஷம் சேர்க்கப்பட்டாலும் போதும்.அது போல் திண்ணையில் இததகைய கருத்துக்கள் இடம் பெறுவது திண்ணையின் கெளரவத்திற்கு இழுக்கு.

திண்ணையில் பலர் எழுதினாலும் இவரது கட்டுரைகள் மட்டும் ஏன் இப்படி கடும் விமர்னத்திற்கு உள்ளாகின்றன என்பது ஆசிரியர் குழுவிற்கும் தெரியும். மார்க்சியம்,மற்றும் கிறித்துவம்,இஸ்லாம் ஆகியவை மீது வெறுப்பை உமிழ்வது, கட்டுரைகளில் வேண்டுமென்றெ ஆதாரமின்றி தனி நபர்கள், மற்றும் மார்க்சியம், கிறித்துவம்,இஸ்லாம் குறித்து எதிர்மறையான பார்வைகளை மட்டுமே முன் வைப்பது போன்றவற்றை தொடர்ந்து அவர் செய்து வருகிறார்.இது ஆரோக்கியமான போக்கு அல்ல.அதற்கு திண்ணை இடம் கொடுப்பது சரியல்ல.அவரது கட்டுரைகளை எடிட் செய்து வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.அதற்கு அவர் ஒப்புதல் தரவில்லையெனில் அவரது கட்டுரைகளை வெளியிடுவதை தவிர்க்கவும். ஒருவர் கட்டுரையை வெளியிட்டுத்தான் தன்னை நிலைநாட்டி கொள்ள வேண்டிய தேவை திண்ணைக்கு இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

V.நீரஜா


Chennai

27.4.2003

Dear Friend,

I am glad to inform you that ‘Oozhi ‘ is going to start its journey as a bi-monthly magazine with the courageness of Little magazine.

Oozhi give valuable articles of creatives, Social values, Criticism of events, Philoshopy, Art, Cinema and etc.

I request all the Tamil creatives to participate in the growth of ‘Oozhi ‘.

Also I have planned to publish some thing about the religious activities in India and around the world. hence I request you to (about the above subject) send me the same.

‘Oozhi ‘ welcomes your sugesstions and ideals to strengthen its growth. you can send the articles through E-mail thillaimurali@yahoo.co.in in any kind of Tamil Fonts.

Brief:

Subscription

Single copy Rs.20

Annual Rs.120

NRI Rs.500

Magazine Size 21×29 cm (A4 size)

App. Pages 80

Address

T. Murali

New No.12, Kumaran Colony 5th street

Vadapalani

Chennai 600 026

India.

E-Mail: thillaimurali@yahoo.co.in

Anbudan

T. Murali

Editor


அன்புள்ள திண்ணை ஆசிரியர் குழுவுக்கு

மறுபடியும் அரவிந்தன் நீலகண்டனின் அவதூறுக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறீர்கள். ஆனால் அவருடைய முதல் அவதூறுக்கு நான் எழுதிய பதிலை இரண்டு முறை மாற்றியமைத்து தரும்படி திருப்பி அனுப்பியிருக்கிறீர்கள். இதே மாதிரி என்னைப் பற்றி அரவிந்தன் அவதூராக எழுதி அனுப்பியதை ஏன் நீங்கள் மாற்றித்தரும்படி அவரிடம் கேட்கவில்லை என்று எனக்குத் தெரிய வேண்டும். உங்கள் செயல் எந்தப் பத்திரிகை தர்மத்துக்கும் உட்பட்டதல்ல. என்றாலும் நான் பொறுமையுடன் மாற்றியமைத்து அனுப்புகிறேன். இதையும் நீங்கள் வெளியிட மறுத்தால் நான் திண்ணையில் பங்கு பெறுவதை நிறுத்திக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை.

நாங்கள் professional journalistகள் அல்ல என்ற திண்ணை ஆசிரியர் குழுவின் வாதம் சொத்தையானது. பஸ் ஓட்ட வந்துவிட்டால் டிரைவிங் செய்பவர் நான் professional அல்ல என்று சொல்லி பயணிகளை விபத்துக்குள்ளாக்க எந்த நியாயமும் கிடையாது. professionalக்கும் amateurக்கும் இருக்கக்கூடிய ஒரே வித்யாசம், ஒருவர் அதை தன் ஜீவிதத்துக்கான தொழிலாகக் கொண்டிருப்பதால் சம்பளம் பெறுகிறார் என்பது மட்டும்தான். முழு நேரக் கவிஞர் தரத்தில் டெலிபோன் ஊழியர் கவிதை இருக்கத் தேவையில்லை என்று சொல்வது அபத்தம். இணைய இதழ் நடத்த வந்து விட்ட பிறகு professional ஜர்னலிசத்தின் நெறிகளை, உத்திகளை, தர்மங்களை முறையாகத் தெரிந்து கொண்டுதான் ஆக வேண்டும். முடியாது என்றால் மூடி விட்டுப் போக வேண்டும்.

ஒரு இதழ் ஆசிரியரின் வேலை தனக்கு வரும் கட்டுரை, கதை, கவிதை, கடிதம் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு தபால்காரர் வேலைசெய்வது அல்ல. கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை மதிக்கும் அதே தருணத்தில், அந்தக் கருத்துக்களுக்கு ஆதாரம் உண்டா இல்லையா என்று கவனிப்பதும் ஆசிரியர் வேலைதான்.

நான் மீசை வைத்திருக்கிறேன், கண்ணாடி போடுகிறேன், ஜிப்பா அணிகிறேன் என்று என்னைப் பற்றி ஒருவர் எழுதினால் அது தகவல். அதை சரி பார்க்க முடியலாம். நான் இந்திய பாரம்பரிய அறிவை மதிப்பதில்லை என்று ஒரு கருத்து எழுதினால், அதற்கு ஆதாரமாக, எங்கே எப்போது எந்தக் கட்டுரையில் எந்த பாரம்பரிய அறிவை நான் நிராகரித்தேன் என்று சுட்டிக் காட்ட வேண்டும். அதை அரவிந்த நீலகண்டன் செய்யாமல் கருத்தை மட்டும் சொல்லும்போது அது என்னைப் பற்றிய ஒரு கருத்தை வாசகர் மனதில் ஆதாரமின்றி ஏற்படுத்தி என்னை அவதூறு செய்வதாகவே ஆகிறது.அரவிந்தன் நீலகண்டன் சங்கப்பரிவார சிந்தனை உள்ளவர் என்று நான் கருத்து தெரிவிக்கும்போது அதற்கு ஆதாரமாக அவருடைய திண்ணை கட்டுரைகளை என்னால் காட்ட முடியும். அதே சமயம் அவர் மனைவியை அடிப்பவர் , பெண்களிடம் மரியாதை அற்றவர் என்று நான் ஆதாரமின்றி எழுதினால், அதையும் திண்னை ஆசிரியர் குழு தர்மப்படி வெளியிட்டு விட முடியுமா ? ஆனால் நீங்கள் அப்படிப்பட்ட சலுகையை அரவிந்தனுக்கு அளித்து வருகிறீர்கள்.

பாரதத்தின் பாரம்பரிய அறிவு மரபை நான் மதிப்பவனல்ல என்று நிரூபிப்பதற்காக மறுபடியும் அரவிந்தன் எடுத்துள்ள சொல்வாந்தி மேலும் அவதூறுகளைச் செய்கிறது. அகழ்வாராய்ச்சியைத்தொடர்ந்து செய்துகொண்டே போனால் இடத்தின் முதல் சொந்தக்காரர்கள் ஆதிவாசிகளாகவும் அதற்கும் முன்பு குரங்குகளாகவும்தான் இருப்பார்கள் என்று நான் எழுதியது ஆதிவாசிகளை இழிவுபடுத்துவது என்று திரிப்பதிலிருந்தே அரவிந்தனின் விஷமங்கள் தொடங்குகின்றன.குரங்குகள்தான் எனக்கும் அரவிந்தனுக்கும் ஆதிவாசிகளுக்கும் மூதாதையர்கள் என்று சொல்லுவது ஒரு வரலாற்று உண்மை. அது இழிவல்ல. அரவிந்தனின் மூதாதையர் குரங்குகள் என்று சொல்லுவது ஒரு வேளை குரங்குகலை இழிவுபடுத்துவதாக குரங்குகளால் கருதப்படுமானால், அதற்காக நான் குரங்குகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அரவிந்தன் சோவியத் யூனியனில் ஸ்டாலின் ஆட்சியின் அராஜகங்கள், சீனாவில் டியனமன் சதுக்கப் படுகொலைகள் இவற்றையெல்லாம் சொல்லிவிட்டு நான் அவற்றை ஆதரித்தவன் என்று எழுதுகிறார். எப்போது ஆதரித்தேன் ? என்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலது மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி உறுப்பினன் என்று அவராகவே கற்பனை செய்துகொண்டு தாக்குகிறார். நான் ஒரு இடதுசாரி சிந்தனை ஆதரவாளன் என்று சொல்லுகிறபோது கட்சி ஆதரவாளன் அல்ல. அவராகவே என்னைக் கட்சியில் சேர்த்துவிட்டு தாக்குவது என்பது சாமர்த்தியமான அவதூறு. எந்த இசத்தின் பெயராலும் மக்கள் ஒடுக்கப்படுவதை நான் எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறேன்.

பாரதத்தின் பாரம்பரிய அறிவு மரபை நான் மதிக்காததற்கு உதாரணமாக அவர் என் கட்டுரையில் இருந்து எடுத்துக் காட்டுவது ஒன்றே ஒன்றுதான். அதாவது அப்துல் கலாமை நான் முக்கால் இந்து கால் முஸ்லீம் என்று எழுதியது. இங்குதான் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கே உரிய திரிபு வேலை நடத்தப்படுகிறது. அப்துல் கலாம் பின்பற்றுவது பாரதத்தின் பொது மரபு என்று சாமர்த்தியமாக திரிக்கப்படுகிறது.அதாவது இந்துத்துவ வழிமுறைகள், இந்து மரபுகள்தான் பாரதத்தின் பொது அறிவு மரபு என்று இந்துத்துவத்தையும் இந்தியாவையும் ஒன்றாக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ். விஷமத்தனம். அதையே அரவிந்தன் செய்வதில் ஆச்சரியமில்லை.

அப்துல் கலாம் ஆரம்ப காலத்திலிருந்தே ஏன் எப்போதும் காஞ்சி மடாதிபதிகளுடன் போஸ் கொடுக்கிறார். ஏன் ஒருபோதும் இஸ்லாமிய மெளல்விகளுடன் போஸ் கொடுப்பதில்லை ? ஏன் கைலி கட்டிய தோற்றத்தில் அவருடைய படம் எதுவும் வெளியானதில்லை என்றெல்லாம் என் கட்டுரையில் தொடர்ந்து கூறப்பட்டிருப்பதிலிருந்து பிரித்து ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் மேற்கோள் காட்டும் திரிபு வேலையும் அரவிந்தனால் செய்யப்படுகிறது.அப்துல் கலாம் பார்ப்பனராக இருக்க ஆசைப்படும் மனதுடையவர், பார்ப்பன வாழ்க்கைமுறையை விழுமியங்களை தனதாக்கிக் கொண்டவர், எல்லா முஸ்லிம்களுக்கும் அவர்தான் ரோல் மாடலாக இருக்க வேண்டும் என்பதுதான் சங்கப்பரிவாரங்களின் விருப்பம். இதைத்தான் நான் அம்பலப்படுத்துகிறேன். இது எப்படிபாரத மரபு அறிவை அவமதித்ததாகும் ?

இந்திராதான் இந்தியா; இந்தியாதான் இந்திரா என்ற பாசிஸ்ட் முழக்கம் நெருக்கடி நிலையில் எழுந்தது போலவே இந்துத்துவாதான் இந்தியா இந்தியாதான் இந்துத்துவா என்ற பாசிஸ்ட் முழக்கத்தை அரவிந்தன்கள் முன்வைக்கிறார்கள். இதை சாமர்த்தியமாகச் செய்யும் அறிவு இவர்களுக்கு இருப்பதுதான் அதிக ஆபத்தாக இருக்கிறது.இதை அம்பலப்படுத்தக்கூடிய மத சார்பற்ற ( செக்குலர்) அறிவுஜீவிகளைத் தாக்குவதுதான் இப்போது நாடு முழுவதும் சங்கப்பரிவாரம் மேற்கொண்டிருக்கும் செயல்திட்டம்.

ரஃபீக் பதிலுக்கான என் எதிர்வினையும் அவர் கூறுவது போல அழுத்தந்திருத்தமாகச் சொல்லப்பட்டதே தவிர வேறொன்றும் அல்ல. அதுபுரிந்துகொள்ளப்படவில்லை என்பது வருத்தமே.

திண்ணை ஆசிரியர் குழுவுக்கு : இந்தக்கடிதத்தையும் நீங்கள் வெளியிட மறுத்தால் திண்ணை இணைய இதழில் இனி பங்கேற்பதில்லை என்ற முடிவையே நான் எடுக்க வேண்டி வரும். ஒரு வேளை அதுதான் சங்கப்பரிவாரங்களின் பிரசாரகர்களின் உண்மை நோக்கமாக இருக்கலாம். என் போன்ற செக்குலர்களுக்கு எங்கும் இடம் இல்லாமல் துரத்தியடிப்பது என்பதே இன்று அவர்களின் செயல்திட்டமாக இருக்கிறது. இதற்கான உத்தியாக அவர்கள் முதலில் எங்கள் கட்டுரைகளைத் திரித்து விமர்சிக்கிறார்கள். பதில் சொன்னால், மேலும் திரிபு. மேலும் அவதூறு. நாங்கள் மற்றபடி செய்யும் வேலைகளிலிருந்து எங்கள் நேரத்தையும் சக்தியையும் திசைதிருப்பி வீணாக்குவதே அவர்கள் நோக்கம்.எங்களுடைய நேரத்தையும் சக்தியையும் வீணாக்க இயலாமல், நாங்கள் விலகினாலும் அவர்களுக்கு மகிழ்ச்சியே. இந்த மோசமான சூழலில்தான் நாங்கள் வேலை செய்தாக வேண்டியிருக்கிறது.

ஞாநி


நண்பர் ரவி ஸ்ரீநிவாஸ் அவர்களின் ஆலோசனை படி கீழ்க்கண்ட டிஸ்கிளைமர் (வடிகட்டின சுத்தமான பொறுப்பற்றத்தனம்) வெளியிடப்படுகிறது.

திண்ணையில் வெளிவரும் கதை, கட்டுரை, கவிதை, கடிதங்கள் ஆகிய எல்லாவற்றிலும் இடம் பெறும் நபர்கள், நிகழ்ச்சிகள், சம்பவங்கள், மரங்கள், செடிகொடிகள், பூக்கள் , இந்தக் கதை, கட்டுரை, கவிதைகளை எழுதுபவர்கள், படிப்பவர்கள், கருத்துச் சொல்பவர்கள், கேள்விப்பட்டவர்கள் ஆகிய எல்லோரும் எல்லாமும் கற்பனையே. இறந்த, இருக்கின்ற, அல்லது இருக்கப்போகும் நபர்கள், விலங்குகள், தாவரங்கள் அல்லது உயிரினங்கள் யாரையும் குறிப்பன அல்ல.

– திண்ணைக்குழு.


Series Navigation

author

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

Similar Posts