அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 18 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

மஞ்சுளா நவநீதன்


கேள்வி 40 : நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் பெரும்பான்மையோரின் கருத்துகளை ஏற்றுக் கொள்வது தானே ஜனநாயகம் ?

இந்தக் கேள்விக்கு மார்க்ஸ் சொல்லும் பதிலில் பிரசினையில்லை. ‘சனநாயகம் என்றால் சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கட்டுப் படுவது மட்டுமல்ல; சிறுபான்மையோருக்குப் பாதுகாப்பளிப்பதும், தங்களது கருத்துகளை அவர்கள் சிரச்சாரம் செய்து பெரும்பான்மைக் கருத்தாக மாற்ற உரிமையளிப்பதும் சேர்த்துத் தான் சனநாயகம். ‘

ஜனநாயகம் என்பது பெரும்பான்மைவாதம் அல்ல என்று முன்னமே சொன்னோம். இதை மார்க்சும் ஒப்புக் கொள்கிறார். ஆனால் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை , முஸ்லிம் பெரும்பான்மையாய் இருக்கும் பகுதிகள் பாகிஸ்தானாய் உருவானது பற்றிய எதிர்ப்புணர்வு எதுவும் மார்க்ஸிடம் வெளிப்படக் காணோம். இதனால் இவருடைய சிறுபான்மையாளர்கள் மீதான அக்கறை போலித்தனம் ஆகிறது. சிறுபான்மையினர் மீதான அக்கறை அவர்கள் முஸ்லீம்களாக இருக்கும் போது மட்டும் தான் வெளிப்படவேண்டும் என்று எழுதா விதி ஒன்றை இவர் ஏற்படுத்திக் கொண்டிருப்பார் போலிருக்கிறது.

கேள்வி 41: பாபர் மசூதி தான் இடிக்கப் பட்டுவிட்டதே போனால போகட்டும் என இஸ்லாமியர் இதனை ஏற்றுக் கொண்டால் இனி பிரசினை இல்லை தானே ?

கேள்வி 42 : இஸ்லாமியரின் மனநிலை எப்படி இருக்கிறது ?

கேள்வி 43 : இஸ்லாமியத் தீவிரவாதத்தை நாம் கண்டிக்க வேண்டாமா ?

கேள்வி 44: நீங்கள் சொல்வதெல்லாம் சரியாகவும் நியாயமாகவும் தான் தோன்றுகின்றன. எல்லாவற்றையும் யோசித்துப் பார்க்கிறேன். இந்து வகுப்புவாதம் என்பது நம்மை உடனடியாக எதிர்கொண்டுள்ள ஆபத்தான சூழல் என்பது விளங்குகிறது. இந்நிலையில் நம்முடைய பங்கு என்ன ?

இப்படிப் பட்ட கேள்விகளை எழுப்பி பதில் சொல்லும் மார்க்ஸ் அடிப்படைப் பிரசினையைப் புரிந்து கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்து தீவிரவாதம் எதிர்க்கப் படவேண்டியது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் தான். பிரசினை இருக்கிறது. இந்து மதம் என்று ஒன்றுமே இல்லை, இந்துக்கள் எல்லாருமே அரக்கர்கள், இந்துமதம் என்பதே பிரிட்டிஷாரின் கண்டுபிடிப்பு, சாதியம் ஒன்று தான் இந்து மதத்தின் அடையாளம், பார்ப்பனியம் ஒன்று தான் இந்து மதத்தின் அடையாளம், இஸ்லாம் சமத்துவத்தைப் போதிக்கும் மதம், இந்துமதத்தை விட்டு , இஸ்லாத்திற்கு மாறுவது தான் ஒரே தீர்வு என்றெல்லாம் அபத்தங்களையும், பொய்களையும், அவதூறுகளையும் பேசி மார்க்ஸ் போன்றவர்கள் இந்த நோக்கத்தைச் சாதிக்க முடியாது. இந்த வழிகள், இந்து தீவிரவாதத்தைத் தனிமைப் படுத்துவதற்குப் பதிலாக தம்முடைய இந்து அடையாளங்களைத் தக்க வைத்துக் கொண்டு மதச்சார்பின்மைக்கும் , மத நல்லிணக்கத்துக்கும் சார்பாக செயல்படமுடியாது என்ற ஒரு தவறான எண்ணத்தைத் தான் பெரும்பாலான இந்துக்கள் மனதில் தோற்றுவிக்கும் அப்படி ஒரு பிம்பம் உருவானால் அவர்கள் தேர்வு செய்வது தம்முடைய இந்து அடையாளங்களாகத்தான் இருக்கும். அந்த இந்து அடையாளங்கள் மார்க்ஸ் போன்ற இடதுசாரிகளால அவதூறு செய்யப் பட்டு இழிவு செய்யப் பட்டால் , இந்துக்கள் போய் அடைக்கலமாகும் இடம் இந்து தீவிரவாத இயக்கங்களாய்த்தான் இருக்கும் இந்த அடிப்படை புரியாமல் மார்க்ஸ் போன்றவர்கள் தொடர்ந்து உளறிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

இந்து மதத்தின் முற்போக்கு அம்சங்களை, பாரம்பரியங்களை முழுக்க மறுத்து விட்டு, இந்து மதத்தின் கூறுகள் மீது வெறுப்பை மட்டும் கக்குவது இந்துத் தீவிரவாதத்தை வலுப்படுத்துமே தவிர , அதை பலவீனப் படுத்தாது.

*********

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

author

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

Similar Posts