அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 12 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

மஞ்சுளா நவநீதன்


6. பிற்கால நாயக்க , மராட்டிய மன்னர்கள் காலத்தில் இசுலாமியக் கோயில்களைப் பராமரிப்பதற்கு உரிமை இருந்திருக்கிறது. பல இசுலாமியர் இந்து மன்னர்களின் படைத் தலைவர்களாகக்க் கூட இருந்திருக்கிறார்களே ? என்பது மார்க்ஸின் அடுத்த கேள்வி.

‘உண்மை தான் .நாம் முன்பே குறிப்பிட்ட படி இவை எல்லாமே அரசியல் நோக்கில் செய்யப் பட்டவை தான். ‘ என்பது மார்க்ஸின் பதில் . அதாவது மதச் சார்பெடுத்து இசுலாமிய அரசுகள் செயல்படவில்லை. அதனால் தான் இந்துக்களை இசுலாமியர் வேலைக்கு வைத்துக் கொண்டார்கள் என்பது இதன் கருத்து எனப் புரிந்து கொள்ளலாம். இந்தியா ஒரு சிக்கலான பெரிய நாடு. இந்தியாவின் வருணாசிரம தர்மத்தைச் சிதைத்து அதனை மாற்றியமைத்து சமதர்ம பூமியாய் இந்தியாவை ஆக்கிவிடவேண்டும் என்ற பெரிய எண்ணமெல்லாம் முஸ்லீம் அரசர்களுக்கு இல்லை. படையெடுத்து வந்த நாட்டில் எப்படி கொள்ளையடிப்பது என்ற ராஜரீக தர்மத்தை அவர்கள் நிறைவேற்றி வந்தார்கள். முழுமையாய் இந்தியாவிலும் ஒற்றை முஸ்லீம் அரசனின் ஆட்சியும் என்றும் இருந்ததில்லை என்பதால், இப்படிப் பட்ட ‘இந்துக்களை வேலைக்கு வைக்கும் பெரிய மனுஷத்தனம் ‘ நிகழ்ந்ததே ஒழிய இது இஸ்லாமிய அரசுகளின் மதச் சார்பின்மைக்கு உதாரணம் ஆகாது. உண்மையில் சாதிக்கு எதிரான கருத்தியலை கிறுஸ்துவர்கள் தோற்றுவித்த அளவில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட பொது தளத்தில் இ ?லாமியத் தலைமையோ, மதவாதிகளோ தோற்றுவிக்கவில்லை.

உண்மையில் வருணாசிரம தர்மம் கேள்விக்குட்பட்டது இந்து மகான்களும், சீர்திருத்தக்காரர்களாலும், பிறகு பிரிட்டிஷ் அரசாட்சியில் ஆங்கிலக் கல்வியின் விளைவாக ஏற்பட்ட ஜனநாயக உணர்வு பெற்ற இந்துத் தலைவர்களாலும் தானே ஒழிய இஸ்லாமிய ஆட்சி சமதர்மத்தை மலரச் செய்தது என்றெல்லாம் ஒன்றுமில்லை. அப்படி ஒரு நோக்கமும் இஸ்லாமிய அரசுக்கு இருந்ததில்லை.

ஹிட்லருக்குக் கீழும் யூதர்கள் பணி புரிந்ததுண்டு. அதனால் ஹிட்லரின் ஆட்சி யூதர்களுக்கு நியாயம் வழங்கும் ஆட்சி ஆகிவிடுமா ? பிரிட்டிஷாரின் கீழ் இந்தியர்கள் பணி புரிந்தனர். அதனால் பிரிட்டிஷாரின் அரசு நிர்வாகம் அடக்கு முறை இல்லாதது என்றோ, இந்தியருக்கு எதிராக பாரபட்சம் காட்டியதில்லை என்று சொல்லிவிடமுடியுமா ?

7. ‘பழைய சங்கதிகள் கிடக்கட்டும். சமீபத்திய வரலாறுக்கு வருவோம். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முசுலிம் லீக் கட்சி தானே காரணம். ? ‘ என்பது மார்க்ஸ் எழுப்பும் அடுத்த கேள்வி.

‘நாடு என்றால் என்ன. நாட்டுப் பற்று என்பதெல்லாம் எவ்வாறு மக்கள் மத்தியில் கட்டமைக்கப்படுகிறது. இந்தியா என்றொரு நாடு ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இருந்ததுண்டா, எந்த ஒரு பகுதி மக்களும் தாங்கள் பிரிந்து போய்ச் சுதந்திரமாக வாழவேண்டும் என விரும்பினால் அதனை நிறைவேற்றுவது தேனே நியாயம் என்பன போன்ற கேள்விகளிலிருந்து தொடங்கி மிகவும் விரிவாகப் பேசப்பட வேண்டிய விஷயம் இது. ‘ என்பது மார்க்ஸின் பதில்.

கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன புரட்டு இது. 1918-க்கு முன்னால் சோவியத் யூனியன் இருந்ததுண்டா ? ஐரோப்பா எப்போது ஐரோப்பா என்று அழைக்கப் பட்டது ? அமெரிக்கா 200 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி , எங்கே இருந்தது என்று கவைக்குதவாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம். அலுக்காமல் இந்தப் பிரசாரம் தொடர்ந்து செய்யப் பட்டு திரும்பத் திரும்பச் சொன்ன பொய்யை சொன்னவர்களே நம்பி விடுகிறார்கள். அதன் பின் இந்தப் பொய்க்கு புனிதமான ஒரு அந்தஸ்தும் வந்துவிடுகிறது. இதனுடன் சேர்ந்த இன்னொரு பொய் இந்து மதம் 200 வருட வரலாறு கொண்டது என்பது. தேசம் தேசியம் என்று இன்று நாம் அறியும் கருதுகோள்கள் காலனியம் தாண்டித் தான் நம்மிடையே உருக்கொண்டுள்ளன. ஆனால் இப்படி உருக்கொண்ட பின்பு அதன் அடையாளங்களும் எழும்புவதும் அவசியமாகிறது.

இதைத் தொடர்ந்து இந்து மகா சபை போன்ற அமைப்புகள் தான் முதன் முதலில் பிரிவினையைக் கோரியது என்கிறார் மார்க்ஸ். ‘சவர்க்கர், பாய் பரமானந்தர் போன்றவர்களால்தலைமை தாங்கப் பட்டு இயங்கிய இவ்வமைப்பு இந்துக்கள் மத்தியில் முக்கியமான கருத்தியல் சக்தியாக விளங்கியது. ‘ என்கிறார் மார்க்ஸ். இது சந்தேகத்திற்குரியது. இந்து மகாசபை அமைப்புகள் எப்போதுமே இந்துக்களிடத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்தியதில்லை. முதன்முதலில் இந்தக் கருத்தாக்கம் இந்து மகாசபையில் தோன்றியது என்பது உண்மை என்று வைத்துக்கொண்டாலும் கூட , இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லீம் லீக் கட்சி ‘யும் ஜின்னாவும் தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த இவருடைய வாதத்தில் உள்ள ஓட்டையை இவரே உணர்ந்து தானோ என்னவோ அடுத்த கேள்வியை எழுப்புகிறார்.

8 . மார்க்ஸின் அடுத்த கேள்வி இப்படி வருகிறது : ‘ தாங்கள் பெரும்பான்மையாய் உள்ள ஒரு நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று இந்துக்கள் சொன்னார்களா ? நம்ப முடியவில்லையே ? அவர்களுக்கு இதில் என்ன லாபம் ?

‘இந்துக்கள் சொன்னார்கள் என்று நான் சொல்லவில்லை. இந்துமகாசபைத் தலைவர்கள் சொன்னார்கள். சாதாரண மனிதனுக்கு தான் இந்து என்ற உணர்வே கிடையாது . அவனுக்கு ஏதாவது உணர்வு இருக்கிறதென்றால் சாதி உணர்வு வேண்டுமானால் இருக்கலாம். ‘ என்பது மார்க்ஸின் பதில்.

‘இந்துக்கள் மத்தியில் முக்கியமான கருத்தியல் சக்தியாக ‘ இந்து மகாசபை விளங்கியது என்று முதல் பத்தியில் உளறுவார் மார்க்ஸ். அடுத்த பத்தியிலேயே இந்துக்களுக்கு இந்து என்ற உணர்வே கிடையாது என்பார். என்றால், இந்து மகாசபை வெற்றிடத்திலே கருத்தியல் சக்தியாக விளங்கியதா ? அபப்டியென்றால் இந்துமகாசபை வெற்றிடத்தில் விதைத்த கருத்தியல் தான் வளர்ந்து இந்து மகா சபையாய் வளர்ந்ததா ? என்ன பிதற்றல் இது ? ‘உயர்சாதி இந்து ஆதிக்கச் சக்திகள் வெள்ளையரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பறித்து தாங்கள் வைத்துக் கொள்ள விரும்பியபோது சாதிகளாய்ப் பிளவுண்டிருந்த மக்களை ‘இந்துக்கள் ‘ என்ற பெயரில் ஒன்றிணைக்க வேண்டியிருந்தது. ‘ என்பது மார்க்ஸின் இன்னொரு புரிதல். அதாவது சாதிஎதிர்ப்பில் சமூக ரீதியாய் எழுந்த எல்லா இயக்கங்களையும் ஒன்றே போல் நிராகரித்துவிட்டு , ‘உயர்சாதி இந்துக்களின் அரசியல் சதி ‘ என்பதான புரிதல் மார்க்ஸினுடையது . முதலாவதாக, காங்கிரஸ் இந்து அமைப்பு அல்ல. கடைசிவரையில் இந்து-முஸ்லீம் இணக்கத்தில் ஈடுபாடு காட்டி வந்தது இந்த இயக்கம். அதனால் தான் சுதந்திரம் அடைந்தும் கூட , பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடாய் அறிவிக்கப் பட்ட போதும் இந்தியா , காங்கிரஸின் கீழ் தன்னுடைய மதச்சார்பின்மைத் தனித்துவத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரொலியாய் இந்தியா அமைக்கப் பட்டிருந்தால், எப்போதோ மனிதப் பரிமாற்றமும் நிகழ்ந்து, இந்தியா இந்து ராஷ்டிரமாகவும் ஆகியிருக்கும். பாகிஸ்தான் போன்ற பிற்போக்கு , பெரும்பான்மைவாதக் கருத்தியலுக்கு ‘தேசம் ‘ என்ற அந்த ?தை அளிக்க முன்வரும் மார்க் ?, இந்தியா என்று ஒரு நாடு இருந்ததுண்டா என்று கேட்பார். என்ன விசித்திரம் ?

பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லீம் லீக் காரணமல்ல என்று சொல்பவரின் வரலாற்று ஆய்வைப் பற்றி என்னவென்று சொல்வது ?

9. ‘அப்படியானால் நாட்டுப் பிரிவினைக்கு இசுலாமியருக்குப் பங்கே இல்லை என்கிறீர்களா ? ‘ மார்க்ஸின் அடுத்த கேள்வி.

‘கூட்டுத் தேசியத்துக்கு இசுலாம் எதிரானதல்ல ‘, என்பது மார்க்ஸின் பதில் . ‘ஜின்னா போன்ற அரசியலை முதன்மையாய்க் கொண்ட சக்திகள் காங்கிரசுக்கு மாற்றாக இருந்து பிரிவினையை ஆதரிப்பது என்பதும், மெளலானா அபுல் கலாம் ஆசாத் போன்ற மதப் பற்றாளர்கள் தொடர்ந்து காங்கிரசில் இருந்து அதனை ஆதரிப்பதும் தொடர்ந்தது. ‘ என்பது மார்க்ஸின் கூற்று.

கூட்டுத் தேசியத்துக்கு இசுலாம் எதிரானதல்ல என்பது உண்மை தான் : எப்போது ? இசுலாமியர்கள் சிறுபான்மையாய் இருக்கும் போது. இசுலாமியர்கள் பெரும்பான்மையாய் ஆகிவிட்டால் , கூட்டுத் தேசியம் ‘இசுலாமியக் குடியரசு ‘ ஆகிவிடும். மதச் சார்பின்மை காற்றில் பறந்து விடும். பாகிஸ்தான், பங்களா தேஷ் தொடங்கி சவூதி அரேபியா வரையில் இது தான் உண்மை.

10. ‘ சர் சையத் போன்ற மேல்தட்டினர் காங்கிரசுக்கு எதிராக வெள்ளையருக்கு ஆதரவளித்தனர் என்று சொன்னீர்கள். இது இழிவில்லையா ? ‘ என்பது மார்க்ஸின் அடுத்த கேள்வி.

‘இந்து மத ஆதிக்கச் சக்திகளுக்கெதிரான பல்வேறு குழுவினர் தங்களின் உரிமைகளைப் பெற வேண்டி காங்கிரசை எதிர்த்துள்ளனர். நமது நீதிக்கட்சி, பெரியார், அம்பேத்கர் போன்றோரும் இன்னிலை எடுக்க நேர்ந்ததை நாம் மறந்து விடக்கூடாது. ‘ என்பது மார்க்ஸின் பதில்.

அம்பேத்கர் சரி , நீதிக்கட்சி இந்து மத ஆதிக்கச் சக்திக்கு எதிராக எங்கே போராடியது ? ஆதிக்கச் சக்தி என்று மார்க்ஸ் சொல்வது பிராமணர்கள் என்ற பொருளிலா ? பொருளாதார அந்தஸ்து படைத்தவர்கள் என்ற பொருளிலா ? பிராமணர்கள் என்றால் மார்க்ஸ் சொல்வது சரி. ஆனால் நீதிக்கட்சி யாருடைய பொருளாதார நலன்களை முன்னிறுத்திப் போராடியது. அம்பேத்கர், பெரியார் பிரிட்டிஷாரை ஆதரித்ததும், மேல் தட்டு முஸ்லீம்கள் ஆதரித்ததும் ஒன்றாகிவிடுமா ? இந்துக்களிடையே போலவே, முஸ்லீம்களிடையேயும், ராவ் பக்தூர்களும், சர்களும் உண்டு. அம்பேத்கர் பிரிட்டிஷாரை ஆதரித்தது, தம்முடைய சகோதர தாழ்த்தப் பட்டவர்களின் நலனுக்காக. பிரிக்கப் படாத இந்தியாவில், முஸ்லீம்களுக்குப் பெருத்த அதிகார வளையமும், பெருமுதலாளிகளும் உண்டு. பாகிஸ்தான் பிரிவினையே அப்படிப்பட்ட மேல்தட்டினரின் போராட்டத்தினால் தான் நடந்தது. நிலப் பிரபுத்துவ நலன்களைக் காக்க வேண்டி, நேருவின் சோஷலிசச் சார்பான கருத்துகளினாலும், மதச்சார்பின்மையில் அவர் கொண்டிருந்த அசையாத நம்பிக்கையும் கண்டு அதன் கீழ் தம்முடைய மதவாத ஃப்யூடலிசம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்ற அச்சத்தில் ஏற்பட்டது தான் பாகிஸ்தான் பிரிவினைக் கோஷம் எழுந்தது. அதற்கு தனி மதம் தனி தேசியம் என்ற குரலை இக்பால் எழுப்ப, ஜின்னா துணை போனார். இந்த மதவாத தேசியம் பற்றி மார்க்ஸ் எங்குமே பேசவில்லை. இப்பொழுதும் கூட , பாகிஸ்தானின் பொருளாதார விதியை நிர்ணயிப்பவர்கள் பஞ்சாபி நிலப் பிரபுக்களான முஸ்லீம்களே. பாகிஸ்தானின் ராணுவத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் இந்த பஞ்சாபி முஸ்லீம்களே. சாதாரண முஸ்லீம்களுக்கு இந்தியாவில் ஏற்பட்ட அளவு கூட பொருளாதார வாய்ப்புகள் பாகி ?தானில் இல்லை. மேல் தட்டினர் பிரிட்டிஷாருடன் துணை போவதற்கும் , தாழ்த்தப் பட்ட மக்கள் பிரிட்டி ?ாருடன் இணைந்து கொள்வதற்கும் இடையே உள்ள பாரதூரமான வித்தியாசம் கூட மார்க்சுக்குப் புரியவில்லை என்பது ஆச்சரியம்.

‘இசுலாமியர் அனைவரும் ஒற்றைக் கருத்துடையவர்கள் ஒரே மாதிரிக் கருத்துடையவர்கள், ஒரே மாதிரி வாக்களிப்பவர்கள் என்பதெல்லாம் அவர்கள் பற்றிச் சொல்லக் கூடிய கட்டுக் கதைகளில் ஒன்று தான். இசுலாமியர்களுக்குள்ளும் பல்வேறு போக்குகள் இருந்தன. ‘ என்று மார்க்ஸ் சொல்வது உண்மைதான் .

ஆனால் இந்துக்களைப் பற்றிச் சொல்லும்போது ‘சாதாரண மனிதனுக்கு தான் இந்து என்ற உணர்வே கிடையாது. அவனுக்கு ஏதாவது உணர்வு இருக்கிறதென்றால் சாதி உணர்வு வேண்டுமானால் இருக்கலாம் ‘ என்பது மார்க்ஸ் சொல்படி, கட்டுக்கதையல்ல, பேருண்மை.

**************

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

author

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

Similar Posts