கடிதங்கள்

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

பெப்ரவரி 23 2003


***


அன்புள்ள ஆசிரியருக்கு,

சென்ற இதழில் வெளியான எனது கதை ‘முடிவின்மையின் விளிம்பில்.. ‘ என் தவறால் கட்டுரையாக வெளியாகிவிட்டது .னக்கதை முதலில் கனடாவிலிருந்து வரும் காலம் என்ற இதழில் வெளியானது. பிறகு என் தொகுப்பான ‘ கூந்தல் ‘ [கவிதாபதிப்பகம் ,14, மாசிலா மணி சாலை, தி நகர்,சென்னை17] தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது

அதை கட்டுரை என்றாலும் சரிதான். நான் சமீபமாக கதைக்கும் கட்டுரைக்கும் இடையே ஊடாடும் கதைகளை எழுதி வருகிறேன். உண்மை அனுபவங்களை கற்மனையால் விரித்தெடுக்கும் கதைகள். செய்திகளை கற்பனையால் தொகுக்கும் கதைகள் .இவை அலாதியான ஓர் உற்சாகத்தை அளிக்கின்றன. இலக்கியம் என்பது ஒரு வகை மாற்று வரலாறுஎன்ற எண்ணமும் எனக்கு உள்ளது.

அன்புடன்

ஜெயமோகன்

***


அன்புமிக்க ஆசிரியருக்கு,

வணக்கம்.

தங்கள் திண்ணை கண்டேன். நன்றாக இருக்கிறது- இது வரை படித்த அளவில்.

இப்படிக்கு,

இரவி ஸ்ரீகுமார்.

***


ஆசிரியர் அவர்களுக்கு,

தாங்கள் பிரசுரித்த ஜெயமோகன் அவர்களின் கதை கட்டுரை தலைப்பில் இருந்தது. கட்டுரையின் வடிவில் கதைகள் எழுதப்படுவது புதிய விஷயமல்ல.

சுந்தர ராமசாமியின் பேட்டியை தாமதமாக படித்தேன். சிறப்பான பேட்டி. நிதானமாகவும் அழ்ழமாகவும் பேசியிருந்தார்.அவரது முதல் கதை வாசிப்பனுபவ்ம் முதலியவை பழையவை.ஆனால் அறிவியல் புனைவுகளைப்பற்றி அவர்சொல்லியிருந்த விஷயங்கள் முக்கியமானவை. ஆவற்றை இதுநாள் வரை அவர் சொன்னதில்லிஅ என்பது ஒரு விஷயம் . செவ்வியல் இலக்கியம், இலக்கியத்தின் மாறுபட்ட பரிமாணக்கள் ஆகியவை குறித்த அவரது கருத்துக்கள் தலைக்கீழாக மாறியுள்ளன என்பது நல்ல விஷயமே. அதாவது அவர் நவீனத்துவத்தின் இறூக்கத்திலிருந்து விலகிவருகிறார் என்று பொருள்.

ஆனால் அவர் கமல ஹாசனை சென்று பார்த்தார் என்பது உறுத்துகிறது .[ ஞானி கட்டுரை] அவர் பார்க்கக் கூடாது என்றல்ல, கமலஹாசன் அவரை வந்து பார்த்திருக்கவேண்டும். திரைப்படத்துறையில் உழல்பவன் என்ற முறையில் எனக்கு கமல ஹாசனின் மனநிலைகள் நன்றாக தெரியும், நேரில் அறிமுகம் இல்லை என்றாலும். சிவாஜி கணேசனுக்கு நிகரான அகந்தையும் செருக்கும் கொண்ட மனிதர் அவர். சுந்தர ராமசாமியே வந்து பழிகிடக்கிறார் என்றுதான் இதை அவர் , அவரது விசுவாசிகள் எடுத்துக்கொள்வார்கள் .ஏற்கனவே அவர் ஞானக்கூத்தன், புவியரசு ஆகியோரை எப்படி நடத்தினார் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு தொலைக்காட்சிப்பேட்டியில் சொன்னார். அமரகாவியம் என்று ஒருபடம் எடுக்க திட்டமிட்டு அதற்கு இவர் கேட்க திரைக்கதைஎழுதத்தான் ஞானகூத்தன் வந்தார். திரைக்கதை எழுத வைத்தபின் அத்திட்டம் கைவிடப்பட்டது.அவர்கள் மருதநாயகம் படத்தில் தங்களை சேர்த்தால்போதும் என்று கோரினார்களாம்.இவர் ஏற்றுக் கொண்டார்களாம்.

சினிமாவில் பணமே அதிகாரம். இலக்கியம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. நல்ல திரைக்கதைகள் பலநூறு கேட்பாரின்றி சீரழிகின்றன. நான் ஒரு இலக்கியவாதி என்பது சில இடங்களில் இப்போது சற்று மரியாதையை இங்கே பெற்றுத்தருகிறது.இவர்கள் வந்து அதைகெடுத்துவிடுவார்கள்போலிருக்கிறது [கமலஹாசன் என்ன பேசியிருப்பார், என்ன சொல்லியிருப்பார் என நேரில் கேட்டது போல என்னால் சொல்ல முடியும் . மிதமிஞ்சிய புகழ்மொழிகள் . போலிப்பணிவு. நாசூக்காக சில புத்தகப்பெயர்கள்.உன்னைவிட நான் பெரிய ஆள் என்று வாழைப்பழ ஊசி. சில வாக்குறுதிகள் . சில வேலைகள் சொல்வார். அதை செய்து கொடுத்தால் இருவரும் சேர்ந்து வானத்தை வளைக்கலாம் என்பார். அப்படியே அள்ளிவிடுவார் . எல்லாம் புதுமருமகன் உபச்சாரம்தான் .கோழிக்குழம்பு கஞ்சியாக மாற அதிக நாள் ஆகாது .

இலக்கியவாதி என்பவன் புகழ் பணம் இல்லாமலும் முக்கியமானவனாக இருப்பவன். இலக்கியவாதிக்கு அவன் இங்கே மதிக்கப்படுவதில்லை என்பதனால் கண்டிப்பாக செருக்கு இருக்க வேண்டும். யானையை காட்டி பிச்சை எடுப்பதைப்போல இன்று வாரிசுகள் சுந்தர ராமசாமியை தொடர்புக்கு பயன்படுத்துகிறார்கள். மூப்பனாரையே தன் குடிசைக்கு வரச்சொன்ன ஜெயகாந்தனை மட்டுமே இன்று எழுத்தாளனின் தன்னம்பிக்கைக்கு சுயமரியாதைக்கும் உதாரணமாக சொல்ல முடியும்

சூர்யா

***


கமல் ஹாசனுக்கு ஞாநி எழுதிய கடிதம் கண்டேன். ஞாநியின் யோசனை பாராட்டத்தக்கது. எழுத்தாளர்களைத் தேடி கமல் ஹாசன் போன்றவர்கள் வந்து , சிறுகதை நாவல்களுக்கு நல்ல தொகை கொடுத்து வாங்கி சினிமாவாகவோ, தொலைக்காட்சித் தொடராகவோ எடுக்க முயன்றால், எழுத்தாளர்களின் வறுமையும் குறையும். தொடர்ந்து எழுத அவர்களுக்கு உற்சாகமும் வரும். அவ்ரகளுடைய தன்மானமும் காப்பாற்றப் படும்.

ஏற்கனவே பல முறை அவர்களுக்குத் தெரியாமல் கதையைத் திருடி உபயோகித்த அனுபவங்கள் தமிழ் எழுத்தாளர்களுக்கு உண்டு. பாரதி ராஜாவின் ஒரு படத்தில் கி ராஜநாராயணனின் கதையைப் பயன்படுத்தினார்கள். ஜெயகாந்தனின் ‘இல்லாதவர்கள் ‘ ரோஜா-கார்த்திக் இயக்கத்தில் திருகப் பட்டு வெளிவந்தது.

இதையொட்டி படக் கதாசிரியர்கள், இயக்குனர்களுடன் இலக்கியகர்த்தாக்கள் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்யுமாறு நடிகர் சங்கம் சார்பில் கூட்டம் ஏற்பாடு செய்யலாம்.

கோ ராஜாராம்

***


அன்புள்ள ஆசிரியருக்கு,

சென்றவாரத்தில் கடிதங்கள் பகுதியில் ஜெயபாரதன் தோரியத்தை உபயோகப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களைப்பற்றி எழுதியிருந்தார். உண்மைதான். அதனால், இந்திய அணுசக்தி தொழில்நுட்பம் ஆரம்பத்திலிருந்தே, தோரியத்தை உற்பத்தி செய்யும் அதிவேக ப்ரீடர் அணுஉலைகளிலேயே கவனம் செலுத்தி வந்திருக்கிறது. ஆனால், பலவேறு உலகளாவிய காரனங்களால், அது பல சமயங்களில் தேங்கி, நின்று, தட்டிக்கொடுக்கப்பட்டு, இப்போதுதான் சாதாரண வேகத்துக்கு வந்திருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் நலகொண்டா மாவட்டத்தில் 11 மில்லியன் டன் யுரேனியம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆந்திர மந்திரி தெரிவித்தார். அது இந்தியாவின் தோரியத்தை உபயோகிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்நுட்ப முனைப்பையே உதவாக்கறையாக்கி பழைய யுரேனிய தொழில்நுட்பத்துக்கு, மேலை நாடுகளால் துல்லியமாக்கப்பட்ட தொழில்நுட்பத்துக்கு இந்தியா அணு உலைகளை மாற்றும் வழி இருக்கிறது. இரண்டாவது, அணு இணைப்பு அணு உலைகள் வரும் என்பது கனவே. அதுவும் இந்தியாவில் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால்தான் சிறந்தது. அதன் வழி, அணு பிளவு அணு உலைகள் மூலம் வரும் வளமையாலேயே. ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் மேலை நாடுகளையே நம்பி இருக்கவேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல.

ஞாநியின் கடிதத்துக்கு என் பாராட்டுக்கள். நிச்சயம் சரியான யோசனை கமலஹாசன் அவர்களுக்கு. அமெரிக்காவில் ராபர்ட் ரெட் போர்டு போல தமிழ்நாட்டில் ஒரு ஸன் டான்ஸ் பிலிம் பெஸ்டிவல் போல ஒன்றை உருவாக்குவதற்கும், வணிகம் தாண்டிய சினிமாக்கலைக்கும் சிந்திக்க வேண்டும். நவீன டிஜிட்டல் காமெராக்கள் அதற்கான வழியைத் தரலாம். சமீபத்தில் ஐரோப்பிய குறும்பட விழாவை நடத்திய அஜீவன் போன்றவர்கள் அதற்கான வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

நட்புடன்

சின்னக்கருப்பன்

***

Series Navigation

author

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

Similar Posts