கடிதங்கள்

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

பெப்ரவரி 16, 2003



திண்னையில் வெளிவரும் ஜெயமோகனின் புன்னகைக்கும் கதை சொல்லி

முத்துலிங்கத்தின் படைப்புலகம் பற்றிய கட்டுரை மிகவும் பயனுள்ளது. அதனை

மறுபிரசுரம் செய்வதற்க்காக திண்னைக்கு நன்றி.

வ.ஐ.ச.ஜெயபாலன்


திண்ணை ஆசிரியருக்கு,

கவிதைகள் நன்றாயில்லை என்று எல்லோரும் வசை பாடிக் கொண்டிருந்தது கேட்டு கவிஞர்களுக்கு ரோஷ்ம வந்து விட்டதா அல்லது , திண்ணையின் தேர்வுக்குழு ‘தவறு ‘ செய்துவிட்டதா என்று தெரியவில்லை. இந்த திண்ணை இதழில் எல்லாக் கவிதைகளிலுமே குறிப்பிட்டுச் சொல்லுமாறு ஓரிரு வரிகளாவது இருந்தன. ஓரிரு நல்ல வெளிப்பாடுகள் இருந்தன.

மத்தள ராயனின் வெண்பாவிற்கு முன்னுரை வெண்பாவை விட அருமையாய் இருந்தது. அவர் அந்த முன்னுரையையும் வெண்பாவாகவே அமைத்திருக்கலாம். அதுவும் சிறப்பாக இருந்திருக்கும்.

மண்ணாந்தையின் கவிதைகள் : முல் கவிதை கல்பனா சாவ்லா பற்றியது என்று நினைக்கிறேன். வானம்பாடிக் கவிதைகளை நினைவூட்டியது. ஆனால் அவர் உணர்வைப் புரிந்து கொள்ள வைத்தது. இரண்டாவது கவிதை படைப்போனைத் தேடும் மனிதனைக் குறிப்பதா ? இருப்பில்லா பூனை நுகரமுடியாத தொலைக் கனவின் குறியீடா ? ‘God does not play dixe with the world ‘ என்ற ஐன்ஸ்டினின் வாசகம் கவிதையின் கடைசி வரியில் நினைவிற்கு வந்தது. அது கடவுளின் பகடை ஆனாலும் மானிடத் தேடல் தொடரும் என்று அர்த்தப் படுத்திக் கொள்கிறேன்.படித்தபிறகு மீண்டும் படிக்கவும் யோசிக்கவும் வைக்கும் கவிதை.

திலகபாமாவின் கவிதை அவநம்பிக்கைகளுக்கு இடையே வாழ்க்கை என்னும் தொடர் நிகழ்வின் தீர்மானமின்மையே நவீனமும் நம்பிக்கையும் என்று கவித்துவத்துடன் சொல்கிறது.

சேவியரின் காதம் கவிதை இன்னொரு காதல் கவிதை என்று சொல்ல முடியாமல் சில சிறப்பான அழகிய வரிகளைக் கொண்டிருக்கிறது.

இசாக்கின் பால் கொடுக்கும் தாய் வெட்கம் வெட்கம் என்ற கவிதை ந்ன்றாய் இருந்தது.

பசுபதியின் பதில்க் கவிதைக்கு எதிர்பாட்டும் மத்தள ராயனிடமிருந்து வருமா ?

அப்பாஸ், நஞ்சுண்டன் கவிதைகள் சிறப்பானவை.

காகிதத்தில் வரையப்பட்ட நட்பின் தொடர்பு அறுவதைக் கூறும் வைதேகியின் கவிதையும் சிறப்பானதே.

அறிவியல் துளிகளைத் தொடர்ந்து வெளியிடுங்கள்.

ஆர் ரஃபீக்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

நண்பர் சின்னக்கருப்பன் சென்ற வாரக் கட்டுரையில், தோரியத்தை அணு எருவாகப் பயன்படுத்தி இந்தியா எதிர்காலத்தில் 300,000 மெகாவாட் மின்சக்தியை 300 ஆண்டுகள் உற்பத்தி செய்யலாம் என்று காட்டி இருப்பது வரவேற்கத் தக்க ஆலோசனையே! ஆனால் இயற்கையாகக் கிடைக்கும் தோரியம்232 உலோகத்தி லிருந்து நேராக அணுசக்தியைக் கறப்ப முடியாது! தோரியம்232 ஓர் செழுமை உலோகம் [Fertile Material]! பிளவு எரிபொருளான [Fissile Material] யுரேனியம்235, அல்லது புளுடோனியம்239 போல் நியூட்ரான் கணைகளால் தோரியம்232 மூலகத்தைப் பிளந்து அணுசக்தியை வெளியேற்ற முடியாது! இயங்கும் அணு உலைகளில் தோரியம்232 உலோகத்தைச் சுற்றி வைத்து, நியூட்ரான்கள் தாக்கும்படி செய்து யுரேனியம்233 ஆக மாற்ற வேண்டும். யுரேனியம்233 ஓர் பிளவு எரிபொருள் [Fissile Material]! பிறகு யுரேனியம்233 கலப்பு விளைவைக் கதிரியக்கக் கழிவுகளிலிருந்து பிரித்தெடுத்து, எரிக்கோலாய் [Fuel Rods] தயாரிக்கப் படவேண்டும்!

இந்தியாவில் தோரியம் மிகுதியாக இருப்பது உண்மையே! பாரத அணுசக்தித் துறையகம் மேற் கூறியவாறு செய்யத் திறமும், நிதியும் பெற்று முன்னோடி முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும், தோரியம்233 மலிவான மின்சக்தியைச் சீக்கிரம் உற்பத்தி செய்யாது! பல கோடி செலவு செய்து பாரதம் அத்துறையில் இறங்கினாலும், டன் கணக்கில் தேவைப்படும் யுரேனியம்233 சேகரிக்க, முதலில் புதிய பூத எருப்பெருக்கி அணு உலைகள் [Breeder Reactors] தனித்து அமைக்கப் படவேண்டும்! அத்துடன் 20% எருப்பெருக்கும் அந்த அணு உலைகளை ஓட்ட, ஏராளமாக எரிபொருள் புளுடோனியம்239 தயாராக வேண்டும்! உதாரணமாக 250 மெகாவாட் எருப்பெருக்கி உலை ஈன்றும் தோரியம்233 உலோகத்தை, அடுத்த 250 மெகாவாட் அணு உலைக்குச் சேமிக்கப் பத்துப் பதினைந்து ஆண்டுகள் ஆகும்! தோரிய முறையைப் பின் தொடர்ந்தால், இந்தியா ஆமை வேகத்தில்தான் மின்சக்தியை உண்டாக்க முடியும்!

தற்போது இந்தியாவில் இயங்கும் பல அணு உலைகளில் தோரியம்232 உலோகத்தை யுரேனியம்233 ஆக மாற்ற முடியாது! கடந்த 50 ஆண்டுகளாகத் தோரிய முறை அணுசக்தி, பாரதம் உள்பட ஓரிரு நாடுகளில் இன்னும் சோதனைப் பருவத்திலே தான் தவழ்ந்து வருகிறது! அது பெருமளவில் ஓட ஆரம்பித்து வாணிப வடிவில், வாலிபமாகிப் பாரதத்தில் தொடர்ந்து மின்சக்தி பரிமாறப் போகிறதா என்பது உறுதி யில்லை! மற்ற உலக நாடுகளுக்கு அந்த நீண்ட பாதையில் ஊர்ந்து செல்ல நிதியும் இல்லை! பொறுமையும் இல்லை!

அதற்குள் மலிவாக நீரில் கிடைக்கும் ஹைடிரஜன் ஏகமூலங்களைக் கொண்டு [Hydrogen Isotopes: Deuterium, Tritium] ‘தொடர் அணுப்பிணைவு இயக்கத்தை ‘ [Sustained Nuclear Fusion Reaction] உண்டாக்கப் பல உலக நாடுகள் இராப்பகலாய் உழைத்து வருகின்றன! இன்னும் பத்து, இருபது ஆண்டுகளில் விஞ்ஞானப் பொறியியல் முற்போக்கு அடைந்து சுத்தமான, கதிரியக்கம் இல்லாத பிணைவு சக்தி [Fusion Energy] மின்சக்தி பரிமாற வரப் போகிறது! உலகின் எதிர்கால மின்விளக்குகளுக்கு ஒளியூட்டப் போவது, அணுப்பிணைவு சக்தி என்பது என் உறுதியான கருத்து!

சி. ஜெயபாரதன், கனடா.


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

நான் எழுதிய ‘கெலென் ஸீபோர்க் ‘ விஞ்ஞானக் கட்டுரையில் [பிப்ரவ்ரி 2] கீழ்க் கண்ட வாக்கியம் போல் நான்கு பத்திகளில் வருகிறது. அதிலுள்ள ‘நியூட்ரான் ‘ என்ற இடத்தில் ‘டியூட்ரான் ‘ [Deutrons] என்று திருத்தப் பட வேண்டும்.

[பெர்கெலி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் ‘சுழல் விரைவாக்கியில் ‘ (Cyclotron) யுரேனியம்238 மூலகத்தை நியூட்டிரான் கணைகளால் தாக்கிப் புதிய மூலகம் ஒன்றைப் படைத்தவர், ஸீபோர்க்!]

சி. ஜெயபாரதன், கனடா.


Series Navigation

author

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

Similar Posts