இந்த வாரம் இப்படி – பிப்ரவரி 9 2003. (பங்களாதேஷ், சாத்தான்குளம், தூதரக சர்க்கஸ்)

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

மஞ்சுளா நவநீதன்


பங்களாதேஷ் மக்கள் – பங்களா தேஷ் ஏற்றுக் கொண்டது.

நல்ல வேளையாக பங்களாதேஷ் மக்களை பங்களா தேஷ் திரும்பப் பெற்றதினால் இந்தப் பிரசினை முடிவுக்கு வந்திருக்கிறது. இது இந்த அளவிற்கு வளர விடாமல் பங்களா தேஷ் அரசாங்கம் பிரசினையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

இந்தப் பிரசினையை இந்தியா கையாண்ட விதமும் பாராட்டத் தக்கது. உறுதியாக அவர்களைத் திரும்ப அனுப்பியதன் மூலம் இது போன்ற நிகழ்ச்சிகள் பின்னால் தவிர்க்கப் படலாம்.

இது பற்றிக் கருத்துத் தெரிவித்த அறிவு ஜீவிகள் இந்தியா இன்னும் தாராளவாத மனப்பான்மையுடன் நடந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள் எப்படி என்று விவரமாய்ச் சொல்வதில்லை. ஒரு நாடு மற்ற நாட்டுக் குடிமக்களை இஷ்டத்திற்குத் தன் எல்லைக்குள் வரவும் குடியேறவும் அனுமதிக்க முடியாது. அதில்லாமல் பங்களா தேஷ் ‘ வாழும் இடம் ‘ என்ற ஒரு ஹிட்லரின் கோட்பாட்டை முன்னிறுத்தி பங்களா தேஷ் மக்கள் இந்தியாவிற்குள் ஊடுருவுவதை நியாயப் படுத்தி வருகிறது. பங்களா தேஷ் மக்களை இந்தியாவை நோக்கித் துரத்துவதிலும் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானுடன் பங்களா தேஷ் கொண்டுள்ள புதிய உறவையும், இந்தியா எதிர்ப்பாளர்கள் பங்களா தேஷில் ஆட்சியில் இருப்பதையும் முன்வைத்துப் பார்க்கையில் இது தற்செயலான ஊடுருவல் என்று தோன்றவில்லை.

பங்களாதேஷ், பர்மா, ஸ்ரீலங்கா முதலிய நாட்டிலிருந்து வந்த அகதிகளை இந்தியா நல்ல முறையில் தான் நடத்தி வந்திருக்கிறது. பங்களா தேஷ் , ஸ்ரீலங்கா போன்ற நாடுகள் பொறுப்பின்றி நடந்த போது கூட அவர்களை இந்தியா ஏற்றுக் கொண்டு , பராமரித்துத் தான் உள்ளது.

********

சாத்தான் குளம் சர்க்கஸ்

சாத்தான் குளம் சர்கக்ஸ் ஆரம்பமாகிவிட்டது. தினத்தந்தி , தினமலர் போன்ற Pulp விற்க இந்த தேர்தல் உதவும் என்பது தவிர வேறு எந்த நிஜமான பயனும் இந்தத் தேர்தலில் விளையப் போவதில்லை. விடுதலைச் சிறுத்தைகள் தனித்து போட்டியிட, தி மு க தேர்தலைப் புறக்கணிக்க, அமைச்சர்கள் தொகுதியில் முகாம் இட்டு வளைத்துப் போட முயற்சிக்க, அவசர அவசரமாய் ஆங்காங்கே ஒப்புக்கு சில வேலைகள் நடக்க, நீண்ட காலப் பயன் எதுவுமில்லாத ஆடு புலி ஆட்டம். இப்படி இடைத் தேர்தலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் ? இந்த தேர்தலில் தோற்றால் அ தி மு க என்ன பதவி விலகப் போகிறதா ? அல்லது காங்கிரஸ் ஜெயித்தால் பிறகு வரும் தேர்தலில் ஜெயிக்கும் என்று ஏதும் உத்தரவாதம் இருக்கிறதா ? ஏன் இப்படி எல்லோரும் அடித்துக் கொள்கிறார்கள் ?

*********

பாகிஸ்தான்-இந்தியா தூதுவரக சர்க்கஸ்.

பாகிஸ்தான் ஆரம்பித்து வைத்த இந்த விளையாட்டு கன ஜோராக, தூதுவரக டென்னிஸ் ஆகிவிட்டது. நான் உன் தூதுவர் பின்னால் நிழல் போல் துரத்தி அவமானப் படுத்துவேன் என்றால், நீ உன் பங்குக்கு எங்களைத் துரத்துவாய். நான் வெளியேற்றினால் நீ வெளியேற்றுவாய். நான் குற்றம் சாட்டினால், நீ குற்றம் சாட்டுவாய், என்று தொடர்ந்து சிக்கல்கள், பின்னல்கள். பாவம் தூதுவரக அதிகாரிகள். அமெரிக்கா, ஜெர்மனி , ஃபிரான்ஸ் போகலாம் என்று ஐ எஃப் எஸ் படித்தவர்கள் தண்ணியில்லாக் காட்டுக்குக் ஒப்பான பாகிஸ்தான் தூதுவரக வேலைக்குப் போக நேர்ந்தால் எப்படி நொந்து கொள்வார்கள் என்பது வெளிப்படை.

பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள தூதுவரகம் மட்டுமல்லாமல், நேபாளம் போன்ற நாடுகளில் உள்ள தூதுவரகத்தையும் தன்னுடைய இந்திய எதிர்ப்பைப் பரப்ப ஓர் ஆயுதமாய்ப் பயன் படுத்தி வருகிறது. இந்தியாவை எதிர்த்துக் கலவரங்களைத் தூண்டிவிடுவதும், இந்தியா ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது வரையில் தூதுவரகங்கள் செய்து வருகின்றன என்று செய்திகள் வருகின்றன. காஷ்மீர் தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் தூதுவரகம் வெளிப்படையாகவே உறவு பூண்டு வருகிறது. இருந்தும் இந்தியா ஒன்றும் செய்வதிற்கில்லை.

*****

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

author

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

Similar Posts