அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 10 (இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

மஞ்சுளா நவநீதன்


பா ஜ க ஆர் எஸ் எஸ் இசுலாமியர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு பதில் சொல்கிற பாணியில் இந்த அத்தியாயம் எழுதப் பட்டிருக்கிறது. இது தனிப் பிரசுரமாகவும் வெளியாகி நன்றாக விற்பனையாகியிருக்கிறது. காரணம் இசுலாமியர் பற்றி ஒரு பாதுகாப்பு உணர்வுடன், அவர்களைப் பற்றிய விமர்சனங்களை நியாயப் படுத்தும் விதமாகவும், இசுலாமியரிடையே எல்லாம் சரியாய் இருக்கிறது என்ற ஆறுதல் அளிக்கும் வண்ணம் எழுதப் பட்டது ஒரு காரணமாய் இருக்கலாம்.

இந்த அத்தியாயத்தின் தலைப்பு வேறு விதமாக இருந்திருக்க வேண்டும். ‘இசுலாமியர் பற்றிய உண்மைகள்- துரதிர்ஷ்டவசமாக மற்ற மதத்தினர் பற்றியும் இவையே உண்மைகள் ‘ என்பதாய் இருக்கலாம்.

‘இசுலாமியர்கள் கோயில்களை இடித்தவர்கள், இந்தியத் துணைக் கண்டத்தைத் துண்டாடியவர்கள், பலதார மணம் புரிபவர்கள், நாட்டுப் பற்று இல்லாதவர்கள், பெரும்பணக்காரர்கள்.. என்றெல்லாம் பிம்பங்கள் உருவாக்குவதில் இந்துத்துவம் வெற்றி பெற்றுள்ளது.. இத்தகைய பிம்பங்கள் மதவெறியைப் பரப்புவதிலும், வன்முறைக்குத் தூண்டுவதிலும், நடந்துபோன வன்முறையை நியாயப் படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.. இசுலாமியருக்கு எதிராகப் பரப்பப் பட்டுள்ள கட்டுக் கதைகள் இப்பகுதியில் தொகுக்கப் பட்டு கட்டவிழ்க்கப் படுகின்றன. ‘

1.இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள் தானே இசுலாமியர்கள் வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவது உங்கள் நோக்கமா ?

இந்தக் கேள்வியை முன்னிறுத்தி மார்க்ஸ் சொல்லும் பதில் இது : ‘ வரலாற்று நூல்கள் உங்களுக்கு அப்படி போதித்துள்ளன. ஆனால் வரலாற்றை ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால் இன்று இசுலாமியரை அந்நியர் எனச் சொல்லுபவர்களும் வந்து குடியேறியவர்கள் தான் என்று விளங்கும். .. இந்த ஆரியர்கள் ‘ரிக் ‘ வேத க் காலத்தில் கால்நடை வளர்க்கும் மேய்ச்சல் இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களைப் போரிட்டு அடிமையாக்கிச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கினார்கள். ‘

அதாவது இசுலாமியர்கள் வந்தேறிகள் தான். ஆனால் அதைச் சொல்லுபவர்கள் – பிராமணர்கள் என்ற மார்க்ஸின் ஊகப்படி – கூட வந்தேறிகள் தான். இசுலாமியர்களை வந்தேறிகள் என்று சொல்வது பாசிசம், ஆனால் நிரூபிக்கப் படாத ஆரிய இனவாதத்தின் அடிப்படையில் ஓர் இயக்கமே இங்கு பிராமண எதிர்ப்பில் கொடிகட்டிப் பறந்தால் அது முற்போக்கு- புரட்சி. நான் ஆரிய வந்தேறிகளை – அவர்கள் வந்தேறிகள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் கூட – எதிர்க்கிறேன், இசுலாமிய வந்தேறிகளை ஆதரிக்கிறேன் என்பது தான் மார்க்ஸ் போன்றோரின் நிலைபாடு. இதில் உள்ள முரண்பாடு கூட இவர்களுக்குத் தெரிவதில்லை. பிராமண எதிர்ப்பில் உள்ள வந்தேறி வாதம் எப்படித் தவறோ அதே போன்ற தவறு தான் இசுலாமியர்களை வந்தேறிகள் என்று சொல்வதும்.

இந்த வந்தேறிகள் என்ற சொல்லே தவறு. வரலாற்றில் ஓர் இனக்குழுவின் அரசர்கள் படையெடுத்து வருவதும், ஆக்கிரமிப்பதும் எல்லாக் காலங்களிலும் நடந்து வந்திருக்கிறது. ஆனால் இசுலாமிய , கிறுஸ்தவ படையெடுப்புகள் வெறும் அரசு சார்ந்தவை மட்டுமல்ல, மக்களைச் சார்ந்து அவர்கள் கலாசாரத்தை ஆக்கிரமிப்பவையும் கூட. இந்தக் கலாசார ஆக்கிரமிப்பு சிறு அளவில் எல்லாப் படையெடுப்புகளிலும் நிகழ்ந்தாலும், இசுலாமியப் படையெடுப்புகளில் பாரதூரமான பாதிப்புடன் நிகழ்ந்தவை என்பது வரலாறு.

ஆனால் அது வரலாறு தான். இன்றைய ஜனநாயக இந்தியாவில் இந்தச் சொல்லாடலுக்கு இடமில்லை. ஆனால் பா ஜ க வின் ஆர் எஸ் எஸ்ஸின் அரசியல் செயல்பாடுகளுக்கு இது ஒரு பக்கத்துணையான பொய்ப்பிரசாரம்- திராவிட இயக்கங்களின் பொய்ப் பிரசாரம் போன்றதே இது.

2. இசுலாமியர் படை எடுத்து வந்து இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறதே. ?

இந்தக் கேள்விக்கு மார்க்ஸின் பதில்: ‘பண்டைய மன்னர்கள் நடத்திய போர்கள் என்பன பெரும்பாலும் கொள்ளையடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டவை தான். .. எந்த இசுலாமிய மன்னனும் தன்னுடைய எல்லைக்குள் இருந்த இந்துக் கோயில்களையோ தனது பாதுகாப்பிலிருந்த இந்து மன்னர்களின் கோயில்களையோ இடித்ததில்லை. ‘ என்ற பச்சைப் பொய்.

ஒளரங்கசீப்புக்குக் கூட மார்க்ஸ் சான்றிதழ் அளிக்கிறார். ‘ அவனுக்கு எதிராகச் சதி செய்தவர்களின் கோட்டைகளும் கோயில்களும் தான் இடிக்கப் பட்டன. மற்றபடி முழுமையான மதச் சுதந்திரம் இருந்தது. ‘

முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாமிய மதத்திற்கு முதன்மையான கடப்பாடுடையவர்களாய் இருந்தார்கள். மதச் சட்டங்கள் அவர்கள் ஆட்சி முறையில் முதன்மையான இடம் பெற்றன. அவர்கள் கோயில்களை இடிப்பதை ஒரு மதக் கடமையாய் எண்ணிச் செய்தார்கள் . அது வெறும் பொருளாதாரச் செயல் மட்டுமல்ல. மற்ற மன்னர்களுக்கு கோயில் இடிப்பு, போர் முறையுடன் சேர்ந்த ஒன்றாய் இருக்கலாம், ஆனால் விக்கிரக ஆராதனையை ஒழிப்பதை தம் புனிதக் கடமையாய்த் தான் இஸ்லாமிய மன்னர்கள் கருதினார்கள். 20-ம் நூற்றாண்டின் இறுதியில் தாலிபன் புத்தர் சிலையைத் தகர்த்ததையும் இந்த மதக் கடமையின் கண்ணியாக வைத்துத் தான் பார்க்க வேண்டும். பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னால் திட்டமிட்டு நடந்த பாகிஸ்தானிய, பங்களாதேஷ் வன்முறையில் இந்து வழிபாட்டுத் தலங்கள் உடைக்கப் பட்டதையும் இத்துடன் வைத்துப் பார்க்க வேண்டும்.

ஒரு செயலுக்கு காரணங்கள் என்ன என்று பார்த்து அதன் பின்னணியைக் காண வேண்டும். வெறும் கோயில் உடைப்பை மட்டும் பார்த்தோமானால், இந்து மன்னர்களின் செயலும், இஸ்லாமிய மன்னர்களின் செயலும் வேறு வேறு தளத்தில் உள்ளன என்பது புரியும். இந்து மன்னர்கள் தாம் இந்துவாய் இருப்பதால் கோயில் உடைப்பை மேற்கொள்ளவில்லை. இந்து மதம் தமக்கிட்ட புனிதக் கடமை என்றும் அதைக் காணவில்லை. ஆனால் இசுலாமிய மன்னர்கள் அப்படியல்ல. இது தான் மிக முக்கியமான வேறுபாடு. இந்த வேறுபாட்டைக் காணாமல், எல்லா உடைப்புகளும் ஒன்று போல் தான் என்று மதவாத பாசிசத்துக்கு நியாயம் கற்பிப்பது தவறு.

ஆனால் கடந்த கால மன்னர்களின் செயலுக்கு , இன்றுள்ள இஸ்லாமிய மக்களைக் காரணமாக்கிப் பகைமையினை உருவாக்கும் பாஜக- ஆர் எஸ் எஸ்-ஐத் தாக்க மார்க்சுக்கு எந்த உரிமையும் இல்லை. ஏனென்றால் எப்போதோ யாரோ எழுதிவைத்த மனுதர்மத்தை முன்வைத்து இன்றுள்ள பிராமணர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் மாமனிதர் இவர்.

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

author

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

Similar Posts