கடிதங்கள்

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

பெப்ருவரி, 9, 2003அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

மருதுக்குமார் மகாத்மா காந்தியின் மரணத்துக்கு முன்பும், பின்பும் நேர்ந்த நிகழ்ச்சிகளில் புதுமையைத் தேடுவது வியப்பாக இருக்கிறது! காந்தி 55 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழைய காலத்து மனிதர்! இந்தியாவின் அநேகப் பிரச்சனைகள் பழையவை! திரும்பத் திரும்ப நிகழ்பவை! பாரத அரசாங்கம் அவற்றைத் தீர்க்க முடியாமல், திணறி மூழ்கிக் கொண்டிருக்கிறது! இதுதான் கட்டுரையின் நோக்கம்! ஆனால் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு, காந்தி மீது மனதுக்குள் வெறுப்புக் கொண்டு கட்டுரையைப் படித்தால், அதன் உட்பொருள் கண்ணுக்குத் தெரியாது! பாரதத்தின் தீராத பழைய நோய்களுக்கு இல்லாத புதிய மருந்துகளை, மருதுக்குமார் எதிர்பார்ப்பதில் எதுவும் தவறில்லை! காந்தியின் மரணத்துக்கு முன்னும் பின்னும் பிறந்த, பல்கோடி உலகத் தமிழ் மக்களின் சார்பாக ஏகப் பிரதிநிதியாய் முன்வந்து, அவர்கள் அறிந்தவற்றை ‘உலகு அளந்தான் போல ‘ மருதுக்குமார் எடுத்துக் கூறி யிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!

சி. ஜெயபாரதன், கனடா.


திண்ணை ஆசிரியருக்கு

இந்தியாவில் 70000 கோடி உணவுப் பொருள் வீணாகிறது என்ற கட்டுரையைப் படித்து மனம் பதைத்தது. இதில் அலட்சியம், சரக்கு ரெயில்களின் பெட்டிகளே மறைந்து போகிற நடப்புகள் இடம் பெற வில்லை. இப்படிப் பட்ட திருட்டுகள் அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன் நடந்தேறுகின்றன என்றும் சொல்கிறார்கள்.

பொன் விஜயன் பற்றிய தேவகாந்தனின் அறிமுகம் பொன் விஜயன் பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. இது போன்ற சிறு பத்திரிகைக் காரர்களைப் பற்றி அவர்களை அறிந்த மற்றவர்கள் எழுதுவது எதிர்கால சந்ததியினருக்குப் பயன் அளிக்கும்.

கோவை சரளாவை எனக்கும் பிடிக்கும் தான். ஆனந்த விகடனின் ஒப்பீட்டுத் தொடர் எவ்வளவு மோசமானது என்று சொல்வதற்கு உங்கள் கிண்டல் பயன்படும் . ஆனால் எம் ஜி ஆர் , ரஜனி போன்றவர்களின் ஆளுமையினைக் கிண்டிக் கிளறி அதில் விற்பனையை ஏற்றத் துடிக்கும் விகடனுக்கு முன்னால் உங்கள் போன்றோரின் சொல் அம்பலம் ஏறுமா ?

பாரி பூபாலனின் நாடக அரங்கேற்றத்தை ஒரு சிறுவனின் பார்வையில் அளித்திருப்பது ஒரு நல்ல பார்வை.

ஆர் ரஃபீக்


ஞானியின் கட்டுரை படித்தேன்.

விகிதாசாரத் தேர்தல் பிரதிநிதித்துவ முறைக்காக இடது சாரிகள் பாடுபடவேண்டும் என்ற ஞானியின் கோரிக்கையை ஏற்று இடதுசாரிகள் மட்டுமல்ல எல்லா , எல்லா சிறு கட்சிகளும் போராட வேண்டும். ஆனால் இடது சாரிகள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையினை ஏற்றுக் கொண்டால் முதலில் பலவீனப் படுவது மேற்கு வங்கத்தில் உள்ள இடது சாரி ஆட்சியே. எனவே அவர்கள் இப்போதைக்கு இதில் ஈடுபாடு காண்பிப்பார்களா என்பது சந்தேகமே.

இது வரையில் இந்த முறையினை ஆதரித்து பெரிய அளவில் போராட்டங்களோ, கோரிக்கை முன்வைப்போ நிகழவில்லை. ஞாநி தமிழ் நாட்டில் தீம்தரிகிட சார்பில் இதற்கான ஒரு கூட்டம் கூட்டி , சிறு கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து இந்த முறை உள்ள ஜெர்மனியில் எந்த காரணங்களால் இந்த முறை உருவாக்கப் பட்டது என்பதையும் விளக்க வேண்டும். ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பிறகு, மீண்டும் ஒரு ஹிட்லர் உருவாகாமல் இருக்க, ஜனநாயகம் பாதுகாக்கப் பட இந்த முறை தான் சரியானது என்று அவர்கள் முடிவு செய்தார்கள். இந்தியாவில் வெகு வேகமாக அப்படியொரு பெரும்பான்மையை, இந்தியாவின் இருண்ட சக்திகள் கைப்பற்றும் முன்பாக இந்த விகிதாசார முறை அரசியல் சட்டத்தில் இடம் பெற வேண்டியது மிகவும் அவசியம். இந்தப் போராட்டத்தில் சிதம்பரம், வைகோ, திருமாவளவன், கிருஷ்ணசாமி, ராம்தாஸ் போன்றோரை ஈடுபடுத்த வேண்டும்.

ஏற்கனவே தமிழ் நாட்டில் கருணாநிதி ஆட்சி , ஜெயலலிதா ஆட்சி என்று ஒரு நபர் அராஜகம் ஜனநாயக ரீதியாக நிலைபெற்றுவிட வழி வகுத்த இந்த பெரும்பான்மை முறை ஒழிய வேண்டும்.

மஞ்சுளா நவநீதன்

***

Series Navigation

author

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

Similar Posts