கடிதங்கள்

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

ஜனவரி 25, 2003அன்புள்ள ஆசிரியருக்கு ,

இந்த வாரம் திண்ணையில் கோ ஜோதியின் கட்டுரை நன்றாய் இருந்தது. ‘தண்ணீர் நெருக்கடி ‘ பற்றி என்ன எழுதினாலும், தண்ணீர் சேமிப்பு, நீர் நிலை பாதுகாப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தாவிட்டால் பயனில்லை.

அம்பேத்கரின் கருத்துகளுக்கும் , விவேகானந்தரின் கருத்து ஒப்பீடு சரியானதாக இல்லை. விவேகானந்தர் அடிப்படையில் மதத்தை முன்னிறுத்தியவர். அம்பேத்கர் தன்னுடைய மக்களின் சமூக முன்னேற்றத்தை முன்னிறுத்தியவர். ஒரு சில கருத்துகள் ஒத்துவரலாம் என்பதால் இருவரையும் ஒரே தராசில வைப்பது சரியல்ல. அம்பேத்கர் செய்த காரியங்களை விவேகானந்தர் செய்யவில்லை, செய்ய் முயலவும் இல்லை என்பது தானே உணமை.

பாம்பின் நெளிவை நினைவுபடுத்தும் கவிதை கலாப்ரியாவினுடையது. கலாப்ரியாவின் வழக்கமான யதார்த்தப் போக்கும், அதீதப் போக்கும் இணைவது கவிதையில் புதிய தன்மையைக் கொண்டு வந்திருக்கிறது. பிற கவிதைகளில் வைதேகியின் கவிதை நன்றாய் இருந்தது.

சிறுகதைகள் இரண்டுமே வித்தியாசமானவை. ராஜா எழுதிய கதையின் நாயகனின் பாடு தான் ஊர் விட்டு ஊர் வந்து மனைவி, மகனைப் பிரிந்து வாழும் அனைவரின் சோகக் கதை.

ஆர் ரஃபீக்


குமுதம் வலையில் முற்றம் என்ற பெயரைப் பார்த்ததுமே முதலில் தோன்றியது, திண்ணையைப் பார்த்து செய்திருக்கிறார்கள் என்பது தான். கடந்த மூன்று வருடங்களாக திண்ணை முன்வைத்த அமைப்பும், விவாதங்களும் வேறு பரந்த தளத்தில் பணபலம் கொண்டவர்களால் செய்யப் படப் போகிறது என்பது மகிழ்ச்சி தரக் கூடியது. திண்ணையில் அறிமுகம் பெற்ற எழுத்தாளர்கள் , குமுதம் தரும் வசதியைப் பெற்று இன்னமும் விரிந்த அளவில் அறிமுகம் பெறுவதற்காகவே ‘குமுதம் இண்டர்நேஷனலெடிஷன் ‘ (அதை அகில உலகப் பதிப்பு என்று தமிழில் எழுதினால் அப்புறம் அது குமுதமாய் இருக்க முடியாதே) தொடங்கப் பட்டது போல் தோன்றுகிறது.

திராவிட இயக்கம் பற்றியும், பெரியார் பற்றியும், மு த பற்றியும், கலாசாரம் பற்றியும் பல விவாதங்களை எழுப்பி களம் அமைத்துத் தந்தது திண்ணை தான். இன்னும் சொல்லப்போனால், அறிவியலில், அறிவியல் செய்திகள் தாண்டி, ஒரு விவாதக்களத்தை அமைத்ததும் திண்ணையே. ஏராளமான பெண்களுக்கு, அவர்களுக்கு தமிழ்ப்பத்திரிக்கைகள் ஒதுக்கிய தளங்கள் தாண்டி, பல தளங்களில் எழுத வாய்ப்பளித்ததும் திண்ணையே. தீரா நதியே முதலில் திண்னையை அடியொற்றித் தான் வலைஇதழாக வந்தது. அதற்குக் கிடைத்த வரவேற்பும், மற்றும் தமிழ் இனி மாநாடு, காலச்சுவடுக்குக் கிடைத்த வரவேற்பு இதையெல்லாம் கண்டு தான் தீராநதி அச்சில் வெளிவர குமுதம் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். (இப்படி திண்ணையில் வெளி வந்த விவாதங்களில் ராஜநாயகம் கட்டுரை பிரசுரிக்கப் பட்டது தான் ஒரு சறுக்கல்.)

வலை இதழில் ‘அம்பலம் ‘ போன்ற இதழ்கள் வெளிவந்தாலும் , அவை குமுதத்தின் காப்பியாகத் தான் இருந்தன. ஆறாம் திணை கொஞ்சம் திண்ணை காட்டிய வழியில் வருகிறது. ஆனால் அது கட்டணத் தளமாய் இருக்கிறது. மூன்று வருடங்களில் திண்ணை செய்திருக்கும் காரியங்கள் நிச்சயம் வழிகாட்டியாக அமைந்துள்ளன.இணைய உலகில் திண்ணையின் பணி ஒரு முன்மாதிரியாய் அமைந்தது என்றால் அதில் மிகை இல்லை.

ஆனாலும் திண்ணைக்கு போதுமான அளவு பாராட்டுதல்கள அங்கீகாரங்கள் கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

திண்ணைக்கும் திண்ணைக்குழுவுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்

இளமுருகு


கலைஞருக்கு ஞாநி எழுதிய கடிதம் கண்டேன். கலைஞர் பெரியார் ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டிருக்கிறார். முன்னால் திண்ணை பக்கங்களில் பெரியார் கலைஞர் ஆகியிருக்க வேண்டும். , அதாவது அரசாங்கத்தின் பதவிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். இரண்டுமே Pipe Dreams என்று சொல்லத் தக்கவை. பாவம் கலைஞர் , இரண்டாவது நிலைத் தலைமையையே உருவாக்காதவர். கோபால்சாமி தி மு கவிலிருந்து துரத்தப்பட காரணமாய்ப் இருந்தவர். யாரும் பின்பற்றாத அன்பழகனை இரண்டாவது நிலையில் உட்கார வைத்துக்கொண்டு சர்வாதிகாரம் செய்கிறவர். அவரா பதவிச் சுகத்தை விட்டுவிட்டு பெரியார் ஆகப் போகிறார் ? சரி பெரியார் ஆகி இன்றைய தமிழ் நாட்டில் அவர் எந்த திராவிடர் கழகத்தில் சேர முடியும் ?

மஞ்சுளா நவநீதன்


சென்ற வாரக் கட்டுரைகளில் மஞ்சுளா நவநீதன், ஜெயமோகனுக்கு மறுப்பு போல தன் கட்டுரையை அமைத்திருந்தார். முக்கியமாக காந்தி பற்றிய பார்வை. மேல்தட்டு மக்களிடம் தங்களது கக்கூஸை தாங்களே சுத்தம் செய்வது ஒரு நல்ல பழக்கம் என்றும், அதுவரை இல்லாதிருந்த சிந்தனையை முன்னுக்குக் கொண்டுவந்ததும், அதனைப் பரப்பியதும், அந்த தொழில் செய்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த தொழிலிருந்து விலக வேண்டும் என்ற சிந்தனையை கொண்டுவந்ததும் காந்தியின் சாதனைகள்தாம். அவற்றை அங்கீகரிப்பதுதான் முறை.

கோபால் ராஜாராம் எழுதிய சிறுபத்திரிக்கைகள் பற்றிய திறனாய்வு, பல கேள்விகளை எழுப்புகிறது. அது பற்றி விவாதத்தினை பலர் ஏற்கெனவே தனிப்பட்ட முறையில் செய்துவருவதாக அறிகிறேன். பாவண்ணனின் திறனாய்வு, அவர் ஒரு சிறந்த திறனாய்வாளரும் கூட என்று நிரூபிக்கிறது.

நரேஷ்


Series Navigation

author

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

Similar Posts