இந்த வாரம் இப்படி – ஜனவரி 12 2002 (லாட்டிரி ஒழிப்பு, வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு)

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

மஞ்சுளா நவநீதன்


லாட்டரிகள் ஒழிப்பு – ஜெயலலிதாவிற்கு நன்றி

ஒரு வழியாக லாட்டரிகள் ஒழிக்கப் பட்டுவிட்டன. ஜெயலலிதாவிற்கு நனறி சொல்ல வேண்டும். ஜெயலலிதாவிற்கு ஆலோசனை சொன்னவர்களுக்கும் நன்றி கூற வேண்டும். நல்லவேளையாக உயர் நீதி மன்றம் இடைக்காலத் தடையை வழங்கவில்லை. நிச்சயம் வழக்குகள் நடக்கும். நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புவோம்.

லாட்டரி தமிழ்நாட்டின் ஏழைகளின் சிறு வரும்படியையும் கபளீகரம் செய்கிற சமூக லாபங்கள் ஏதுமற்ற ஒரு சுரண்டல். இதில் பலருக்கு வேலை கிடைக்கிறது என்ற நொண்டிச்சாக்கைச் சொல்லித் தான் பண முதலைகள் ஏழைமக்களையும் சுரண்டி வருகின்றன. தமிழ்மக்கள் பாடுபட்டுச் சம்பாதித்த பணம் எந்தப் பயனும் இன்றி , தமிழ் நாட்டை விட்டு வெளியேறுகிற ஒரு அவல் நிலையை லாட்டரி உருவாக்கியிருக்கிறது. இதனால் பணம் குவித்த பணக்காரர்களைப் பற்றிக் கவலைப் படாமல் இந்தத் திட்டம் நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும். ஓரிரு மாதங்களுக்கு சூதாட்டத்தில் மனம் இழந்த மக்களின் பிரசினைகள் வேறு உருவம் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் பிறகு மக்கள் இதனை மறந்து விடுவார்கள்.

ஆனால் அரசின் கடமை லாட்டரியைத் தடை செய்வதோடு முடிந்துவிடக் கூடாது. இதனை நம்பி பெருமளவில் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகள் மற்றும் சிறு தொழில் முனைப்புக்கான உதவிகள் தரும் திட்டம் உடனே செயல்படுத்தப் படாவிட்டால் பெரும் பிரசினைக்கு இது இட்டுச் செல்லும்.

*********

பயனுள்ள மாநாடு : பயனற்ற இரட்டைக் குடியுரிமை

வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு தில்லியில் நடந்திருப்பது பாராட்டத்தக்க விஷயம். இதுவரையில் வெளி நாடு வாழ் இந்தியர்கள் தமக்கான பிரசினைகளை இந்தியா எடுத்துப் பேசும் என்று நம்பி, எதிர்பார்த்துப் பல விதங்களில் ஏமாற்றம் பெற்றுள்ளனர்.

இந்திய வம்சாவளியினரும், மேலும் குடியுரிமை இல்லாமல் வெறும் வேலை தேடிப் போயிருக்கும் மக்களும் உள்ளனர். கனடாவில் எட்டரை லட்சம் பேர், அமெரிக்காவில் 17 லடசம் பேர், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் 11 லட்சம் பேர், தென் ஆப்பிரிக்காவில் 11 லட்சம் பேர், இங்கிலாந்தில் 15 லட்சம் பேர், வட ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடாப் பகுதிகளிம் 30 லட்சம் பேர், கிழக்கு ஆப்பிரிக்காவில் 2 லட்சம் பேர், மாரிஷியஸ் தீவுகள் அருகாமையில் 2 லட்சம் பேர், தென் கிழக்கு ஆசியாவில் 55 லட்சம் பேர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பசிஃபிக் பகுதிகளில் ஆறு லட்சம் பேர் என்று உலகம் முழுதும் கணிசமான மக்கள் வாழ்கின்றனர்.

இரட்டைக் குடியுரிமையை இந்தியாவிலிருந்து குடியேற்றம் பெற்று, சில குறிப்பிட்ட வளர்ந்த நாடுகளின் குடிமக்களாகிவிட்டவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூ ஜிலந்து, கனடா, ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்று வசிப்பவர்கள் தான் இந்தச் சலுகைக்கு உரிமை பெறுபவர்கள். இந்திய வம்சாவளியினர் அட்டை என்ற ஓர் அடையாளச் சீட்டு, அனுமதிச் சீட்டுக்கு பதிலாக ஏற்கனவே புழக்கத்தில் இருக்கிறது. ஆகவே, இரட்டைக் குடியுரிமையின் பயன் ஏதும் இந்தியாவிற்கு விளையுமா என்பது சந்தேகமே. இந்தக் குடியுரிமை இல்லாமலே, இந்தியாவுடன் இவர்கள் உறவு பூண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு, வெளிநாட்டு வாழ் இந்தியர் தினம் மூலமாக், கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் வரவேற்கத் தக்கதே.

ஆனால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளோ, பொருளாதாரக் கொள்கைகளோ வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் வழிகாட்டுதலில் செயல்பட முடியாது. வளர்ந்த நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளை அப்படியே எடுத்து இந்தியாவில் நடுவதாகத் தான் இவர்களின் ஆலோசனைகள் அமையும். இது விரும்பத்தக்கதல்ல.

இந்த மாநாட்டில் இரண்டு கருத்துகளை நைபால் தெரிவித்திருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் காந்தி எந்த மாற்றத்தையும் உண்டாக்க வில்லை என்பது ஒன்று. இது முன்னமே அவருடை நூல் ஒன்றில் காந்தி பற்றிய விமர்சனக் கட்டுரையில் குறித்த ஒரு கருத்தின் விரிவு. இன்னொன்று இந்தியாவின் இன்றைய எல்லாக் கோளாறுகளுக்கும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தைக் குறை சொல்வதை இந்தியர்கள் நிறுத்த வேண்டும் என்பது இன்னொன்று. இரு கருத்துகளும் விவாதத்திற்கு உரியவை.

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

author

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

Similar Posts